பலா பட்டறை: அஞ்சாதே!

அஞ்சாதே!

.

எட்டிப்பார்த்தபோது வெறும் புகை மூட்டமாகத்தான் இருந்தது. 

கையிலிருந்த ஒரு கேரட்டை சுவைத்துக்கொண்டிருந்தபோது சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டேன், துப்பியபோது சக்கையாய் விழுந்த கேரட்டிலும் உதட்டில் வழிந்த எச்சிலிலும் ரத்தம். எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் கேரட்டைக் கடித்து வாய் நிறைய அடக்கிக்கொண்டேன். உடலில் காயத்தால் ஏற்படும் வலியைக் காட்டிலும் நாக்கில் ஏற்பட்ட வலி வித்தியாசமாய் இருந்தது. 

மீண்டும் எட்டிப்பார்த்தேன். அதே வெண் பஞ்சு போர்த்திய சூசைட் பாயிண்ட். அதென்ன சூசைட் பாயிண்ட்? சூசைட் என்றால் என்ன? மரணிப்பதா? இல்லை இல்லை. மரணத்தை நிர்ணயம் செய்வது. பிறப்பிலில்லாத சுதந்திரம். உயிரோடிருப்பதிலிருந்து உண்மையான சுய விடுதலை. 

இயற்கையான மரணம் என்பது யாரோ கழுத்தைப் பிடித்து தள்ளுவதைப்போல எப்படி உயிரின் முதல் காற்று சுவாசிக்க வெளியே கால் பிடித்து இழுத்தார்களோ, அதே போல் யாரோ ’போதும் வாழ்ந்தது போய்த் தொலை’ என்று தள்ளுவதைப்போல. ஆனால் இந்த தற்கொலை, அதென்ன தற்கொலை ?எவன் வைத்தான் இந்தப் பெயர்? சுயவிடுதலை என்றால் நன்றாக இருந்திருக்குமோ? 

எங்கே இருந்தது சுயம்? ஆணும் பெண்ணும் சேர்த்து பிரதியாக்கிய ஒரு பிண்டம், கூடலின் சாட்சி, தான் மலடி இல்லை என்றும் ஆண்மகன் என்றும் நிரூபித்த இருவரின் வம்ச சாப்பா. போகட்டும் நானே என்னை மாய்த்துக்கொள்வதிலாவது சுயமானது இருக்கட்டும்.

காரட்டின் கடைசி துண்டையும் வாயில் போட்டுக்கொண்டேன். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டேன். எதற்கும் நன்றாக வெயில் வந்தவுடன் மேகமூட்டமில்லாதபோது ஒரு முறை பார்த்துவிட்டு குதித்துவிடலாமா? என்று தோன்றியது. போதும் வாழ்ந்தது. அடுத்த நொடி என்று எதுவும் என் கையிலில்லாதபோது என்னவென்று வாழ்வது? எதற்காக வாழ்வது? போதும் விட்டு விடுதலையாகிவிடலாம். 

தற்கொலை கோழையாம். விழாத வீரர்கள் சொல்லிவிட்டார்கள். எட்டிப்பார்க்கத் திராணியற்ற எலிக்கூட்டம். எனக்கு சிரிப்பு வந்தது. அதுதான் மறு பிறப்பொன்று இருக்கிறதே பிறகென்ன? இதிலென்ன கோழைத்தனமிருக்கிறது? என் உயிர் என் கையால் போவதென்பது எவ்வளவு சுகமானது. எல்லா வேலைகளையும் சரியாக முடித்து,. எல்லாக் கடன்களையும் அடைத்து. எனக்கென இருக்கும் பொறுப்புகள் முடித்து இதோ இங்கே முடிக்கலாமென்று வந்திருக்கிறேன். இதிலென்ன கோழைத்தனம் இருக்கிறது.  இன்னும் வாழ்வோமென்று சேர்த்துச் சேர்த்து திடீரென எவரோ அனுபவிக்கச் சாவதல்லவா கோழைத்தனம். 

திடீரென்று வந்தோம் குதித்தோமென்று இருப்பவர்களை கோழையெனச்சொல்கிறார்களோ?ஹும்ம் பைத்தியங்கள். இயற்கையாய் இறப்பவனும் இன்ன தேதிக்கு இறப்பேனென்றா சொல்லிவிட்டு இறக்கிறான். கூடலின்போதே கூடவந்த உயிரணுக்களை சாகடித்துத்தானே கருப்பையில் நுழைந்தேன். இதன் பிறகென்ன புண்ணியமும்? பாவமும்? கோழையும் வீரமும்.

வாடாத மலரென்று கொத்துக் கொத்தாய் சில பூக்கள் கொஞ்சம் தள்ளி விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமே இருந்த அந்த சூசைட் பாயிண்ட்டில் ஒருவர் ஒரு பெண் குழந்தையோடு வந்தார். அந்தக் குழந்தையின் கைகளில் அழகான மலர் கொத்து.

”மிலி த்ரோ த ஃப்ளவர்ஸ்”

மிலி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை சொன்ன தன் தந்தையைப் பார்த்தது. சிறிய மையிடப்பட்ட அழகிய கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் கன்னத்தில் கோடு வழித்து புஸு புஸுவென்ற ஸ்கர்ட்டில் விழுந்து வட்டமாய் பரவியது. பூக்களைத் தூக்கி எறிந்தது அப்பாவின் பக்கம் திரும்பி அவரின் கால்களுக்குள் புதைந்து அழுதது. 

நான் அந்தத் தந்தையைப் பார்க்கவில்லை. சிரித்துவிடுவேனோ என்று உள்ளுணர்வு சொல்லியது. அந்தக்குழந்தைக்காகவாவது நான் சிரிக்காமலிருக்கவேண்டும். இவராவது முற்றுமறிந்த முட்டாள். இந்தக் குழந்தை இனிமேல்தான் கற்றறிந்து முட்டாளாகவேண்டும். நானதைத் தடுப்பானேன் என்று மீண்டும் வெண்பஞ்சு மேகங்கள் பக்கம் திரும்பிக்கொண்டேன். 

தடுப்புக்கம்பி சில்லென்று இருந்தது பிடித்தவாறே கீழே பார்க்கத்துவங்கினேன். எந்தப் பக்கம் குதிக்க வாகாயிருக்கும் மனது கணக்குப் போடத்துவங்கியது. அது மிகச் சிறிய இடமென்றாலும் தடுப்புக் கம்பி தாண்டி இரண்டு இரண்டரை அடிகள் மேடாயிருந்தது. ஒரு மரம் அடியிலிருந்து கிளை பரப்பி மேலே வந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை வெறும் பனிப்போர்வைதான். மேல் கம்பியிலிருந்து ஒரே எம்பு எம்பி விடவேண்டியதுதான். 

மிலியும் அவள் அப்பாவும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். ச்சே இதுதான் இந்த வாழ்வின் பிரச்சனை எங்கே பார்த்தாலும் மனிதர்கள் தனிமை என்பதே இல்லாத சபிக்கப்பட்ட ஓர் உலகம். சூசைட்பாயிண்ட் என்று போர்ட் வைத்த புத்திசாலிகள் இங்கே கூட்டத்தைக்கூட்டி பூ விற்கிறார்கள், காரெட் விற்கிறார்கள், கூட்டமும் வந்து வேடிக்கைப் பார்க்கிறது. அடுத்தவன் சாவது உயிரோடிருப்பவர்களுக்கு வேடிக்கையாகிப்போன கேவலம். 

இந்த இடம் தனிமையிலல்லவா நிறைந்திருக்கவேண்டும். தன்னிஷ்டமாய் தைர்யமாய் உயிர் துறக்க முடிவெடுப்பவர்கள் வருமிடத்திற்கு தனிமையும் அமைதியும் எவ்வளவு முக்கியம்?  

”மிலி கோ கெட் சம் மோர் ஃப்ளவர்ஸ்..”

மிலி அவள் அப்பாவின் கையிலிருந்து ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு சில அடி தூரங்கள் தாண்டி பூ விற்றுக்கொண்டிருப்பவர்களை நோக்கி நடந்து சென்றாள். மீண்டும் இங்கே பூக்களை எறியப்போகிறார்கள். யார் இறந்தது? இந்தக் குழந்தையின் அம்மாவா? அல்லது வேறு யாராவதா? இன்று என்ன நினைவு நாளா? உயிரோடிருக்கும்போது என்றைக்காவது அந்தப்பெண்ணிற்கு பூக்கள் கொடுத்திருப்பார்களா? அல்லது இறந்து போனவருக்கு பூக்கள் பிரியமா?இங்கே எறிந்தால் மட்டும் இந்தப் பூக்கள் அவரை அடையுமா? இந்தப்பூக்களை ஏன் வீணாக்குகிறார்கள்? அது சரி இல்லையென்றால் மட்டும் இந்தப் பூக்களென்ன ஜீவித்தா இருக்கப்போகிறது. அட! ஆமாம். சில வருடங்களுக்கு இவை அப்படியே இருக்குமென்றல்லவா சொல்லி விற்கிறார்கள்.

நானும் மிலியைப் பின் தொடர்ந்து சென்றேன் வேறு கடையில் அழகான நிறங்களாய் தேர்ந்தெடுத்து ஒரு கொத்து பூக்கள் வாங்கினேன். சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். பூ விற்றவன் என்னைப் பார்த்து சிரித்தான். 

“என்ன சார் சூசைட் பண்ணிக்கப்போறீங்களா?” எனக்கு திடுக்கென்றது. 

“எப்படி? ஐ மீன் ஏன் கேக்கறீங்க? ”

”எத்தினிப்பேரப் பார்த்திருப்போம். எல்லாம் ஒரு கெஸ்தான். ”

நான் மீண்டும் சூசைட் பாயிண்டைப்பார்த்தேன். மிலியின் அப்பாவும் மிலியும் மீண்டும் பூக்களை விசிறி எறிந்துவிட்டு மெல்ல திரும்பிக்கொண்டிருந்தனர். 

இல்லீங்க. சூட்டிங். லொக்கேஷன் பாக்க வந்தேன் அப்படியே வசனம் டெவலப் பண்ணலாம்னுதான். ஆனா கரெக்ட்டா மொகத்தப் படிக்கிறீங்க.” சிரித்துவிட்டு காசைக்கொடுத்துவிட்டு லாட்ஜை நோக்கி நடந்தேன். இது இந்த இடம் தற்கொலைக்கு லாயக்கே இல்லாத இடமென்று எனக்குத்தோன்றியது. ஒருவன் இறக்கப்போவதை கெஸ் செய்யுமளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இடம் நான் விடுதலையாக ஏற்ற இடமல்ல. 

ஒரு சிகரெட் பற்றவைக்க நின்றபோது எதிரில் போன கூட்டத்தில் ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டு போனான்

”மதிகெட்டான் சோலைன்னு ஒன்னு இருக்குங்க தொப்பிதூக்கு பள்ளத்துக்கு போற வழில பார்க்கலாம். அடர்ந்த காடு உள்ளார போனா அவ்ளோதான். போனவங்க யாரும் திரும்பி வந்ததே இல்லை. அவ்ளோ டேஞ்சர்...”

ஸ்ஸ்ஸ்ஸ் சிகரெட்டின் முதல் புகையை ஆழ உள்ளிழுத்தேன். 

மீண்டும் வேறொருவன் குரல் கேட்டது ”அவ்ளோ டேஞ்சரா உங்களுக்கெப்படிங்க தெரியும் ?”

”போர்டே வெச்சிருக்கான் சார் கவர்ன்மெண்ட்டு. இதோ இதுமாதிரியே”

நின்று திரும்பி சூசைட் பாயிண்ட் என்று எழுதப்பட்ட பெயின்ட் உதிர்ந்துபோன அந்தப் பலகையை நான் வெறுப்பாய் பார்த்தேன். இதென்ன அறிவிப்பா? அழைப்பா? 

எங்கோ அந்தப் பாடல் கேட்டது

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

த்தூ.. சிகெரெட்டைக் கீழே போட்டு மிதித்துவிட்டு, நடக்கத்துவங்கினேன்.



.

17 comments:

vasu balaji said...

too tempting shankar. mm

மணிஜி said...

நிஜமாவே அடுத்த தளத்துக்கு போயிட்டிருக்க ஷங்கர்

Cable சங்கர் said...

rightu...

Unknown said...

அஞ்சல....

ஸ்வாமி ஓம்கார் said...

நல்லா இருக்கு. அடுத்து நந்தலாலா-வா?

வெடிகுண்டு வெங்கட் said...

மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
வெடிகுண்டு வெங்கட் விமர்சனம்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்

புதுகை.அப்துல்லா said...

// மணிஜீ...... said...
நிஜமாவே அடுத்த தளத்துக்கு போயிட்டிருக்க ஷங்கர்

//

லிப்ட்லயா?படிலயா??

:))

மங்குனி அமைச்சர் said...

good sir

எல் கே said...

good one thala

யுவா said...

நல்லாவே இருக்கு...

எஸ்.கே said...

super sir!

sakthi said...

சங்கர் அசத்திட்டீங்க !!!!

கலகலப்ரியா said...

||குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!||

:)..

மணிஜி சொன்னத ரிப்பீட்டிக்கறேன்..

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு.

Unknown said...

உங்க feeling எனக்கு புரியுது.

இருந்தாலும் "shoot' Em up" ஹீரோ போல ஆயிட்டீங்க(கேரட் மேனரிசத்த சொன்னேனுங்க) வாழ்த்துக்கள்.

Youngcrap said...

//கூடலின்போதே கூடவந்த உயிரணுக்களை சாகடித்துத்தானே கருப்பையில் நுழைந்தேன். இதன் பிறகென்ன புண்ணியமும்? பாவமும்? கோழையும் வீரமும்.///

I like this lines. Good writing...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?


த்தூ.. //

ஏன் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு
'த்தூ' என்கிறீர்கள்? நன்றாகத்தானே
இருக்கிறது?

சரி, இப்போ நான் சொல்கிறேன்.
கதையில் உரையாடல்களைவிட
சுய சிந்தனைகள்தாம் பரவியிருந்தன.
இருப்பினும் கதை... த்தூ,,,,,,
அல்ல, அல்ல, த்தூள்ள்ள்ள்...