பலா பட்டறை: காடு - ஜெயமோகன்!

காடு - ஜெயமோகன்!




முதலில் ரோமியோ தருவதாகச் சொல்லி அவரை சந்திக்க முடியாமல் சாறு சங்கர் அன்பளிப்பாகத் தந்தவுடன் சமீபத்தில் கோவை சென்றபோது நிதானமாகப் படித்த ஜெயமோகனின் 3வது நாவல். விஷ்ணுபுரம் 200 பக்கங்கள் நகர்த்தி அப்படியே நிற்கிறது.

சரி காடு பற்றி

ஏழாம் உலகத்திற்குப் பிறகு நான் விரைவாகப் படித்த ஒரு நாவல். பொருளீட்டுதலின் முதல் படி வெளியில் சென்று உலகை அறிந்துகொள்வது. நமக்கு எல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த மிரட்சியான பயமில்லாது நடித்த நாட்களை இன்று அசை போடவைத்தது இந்த நாவல். கதைக்கு எடுத்துக்கொண்ட களம் காடு. 


16 வயதில் நான் முதன் முதலில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றபோது வெறும் பார்வையாளனாகவே இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. யார்வந்தால் எழுந்து நிற்கவேண்டும்? யாருடன் சிரித்துப் பேசலாம், யாருடன் தோளில் கை போட்டுப் பேசலாம் என்று நிறைய விஷயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லித்தரப் பட்டது. எதைக் கண்டாலும் ஒரு ஆச்சர்யம். மெல்ல மெல்ல வித்தைகள் புரியும்போது ஒரு ஆளுமை வந்துவிடும். கிடைத்த சுதந்திரத்தை அழகாய் காப்பாற்றி முன்னுக்கும் வரலாம், அழிந்தும் போகலாம். 

வாழ்க்கையில் ஓர் ஆண்மகன் தன் சுய சம்பாத்தியத்திற்காக வெளியில் சென்று சேர்ந்த இடம் ஒரு காடு. முன் பின் அறியாத ஆச்சர்யங்கள் நிறைந்த இடம். ஆச்சர்யங்களை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் சூழ இருக்கும்பொழுது அவன் காணப் போகின்ற கண்டவைகளை மிகைப் படுத்தி கேலி பேசி விவரிக்கும் பார்வையில் காடு அவனுக்கு பிரமிப்புகலந்த ஆச்சர்யமாகவே இருக்கிறது, அது அங்கே ஒரு பெண்ணைக் காணும் வரையில்.

தனிமை நிறைய விஷயங்களை கண்களுக்குக் காண்பிக்கும். கதையின் கதா நாயகனுக்கும் அப்படியே! சொல்லத் தவறிய காதல் விருப்பமில்லாத திருமணம், தோல்வியடைந்த வியாபாரம், மதிக்காத மனைவி, ஏமாற்றிய நண்பர்கள், விரும்பியவளின் பிரிவு. கண்ணெதிரே மாறிய அறிந்தவர்களின் வாழ்க்கை என்று வெறுமனே பார்வையாளனாகவே ஒருவனின் வாழ்வு நகர்வதென்பது காட்டில் ஆரம்பித்து அங்கேயே முடிகிறது. 

தான் பெற்ற மகனிடம் கூட தன் அனுபவத்தைப் பகிர முடியாத நிலையில் கதையின் நாயகன் மனதினுள்ளே குமுறுவதே இங்கே பெரும்பாலான தகப்பனின் தலைவிதியாக இருக்கிறது.     

கதையின் ஊடாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. இயற்கையை அழிக்கும் மனித வக்கிரம், ஒரு மிளாவின் கால் தடத்தின் மூலம் மனிதன் வகுக்கும் எல்லைகள் கேலிக்குள்ளாக்கப் படுவது, ஒரு தேவாங்கு ஒருவருக்கு உணவாகவும், மற்றொருவருக்கு குழந்தையாகவும் மாறும் விந்தை, தனிமை சூழ்ந்த அந்தக் காட்டின் மையப் பகுதியில் மேலாடையில்லாத நாகரீகமற்ற காட்டுவாசிப் பெண்ணின் வரம்பு மீறாத காதல், அதே தனிமையை கணவன் இல்லாத நேரத்தில் தன்ன்னுடைய பெருங்காமப் பசிக்கு வருபவரை இரையாகத் துடிக்கும் நாகரீகமான இஞ்சினியர் மனைவி. பயமகற்றி சூழலை விரைவாகக் கற்றுக்கொடுக்கும் காதல், உபத்திரம் செய்யாத கீறக்காதன் யானை,  என நீண்டுகொண்டே போகிறது.

மலையாள ஜாதிகளை, மதம் மாறிய கிறிஸ்தவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் வரிகள், காட்டில் வேலைக்கு வரும் பெண்கள் யாரோடும் படுக்கத் தயாராக இருப்பது போன்ற விஷயங்கள் ஏற்கனவே இந்தக் கதையின் விமர்சனங்களில் விவாதிக்கப் பட்டவைதான். குறிப்பாக நண்பர் கருந்தேள் ராஜேஷும், கார்த்திகேயனும் ஒவ்வொரு முறையும் இதனை மையப் படுத்தி தங்களுடைய கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்து உள்ளார்கள். கதையும் அப்படியேதான் நகர்கிறது. ஆனால் பெரும்பாலான மலையாளிகளின் கேலிகள் இவ்வாறே இருக்கும். குத்தலான நகைச்சுவை என்பது அங்கே சர்வ சாதாரணம். இதே கதை அந்த வட்டார மொழி வழக்கிலில்லாது சாதாரணமாக எழுதப் பட்டிருப்பின் இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என்பது நிச்சயம். அதே சமயம் காட்டிலே மருத்துவ தொண்டு செய்யும் ஃபாதர், கிறிஸ்துவத்தை கேலிபேசுபவரே காண்ட்ராக்டர்களால் சீரழிக்கப் பட்ட பெண்ணை மிஷனரி பாதரிடம் சேர்த்து பிழைக்க வைப்பது. ராவணன் சீதையை புஷ்பகவிமானத்தில் கொண்டு சென்ற காலத்தில் பேப்பர் மட்டும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி? காட்டைப் பற்றிய அசாதாரணமான கதைகள்.. 

மீண்டும்,

என்னுடைய சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும் இந்தக் கதையின் நாயகனோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. களம்தான் வேறு. மனித மிருகம் தன் இனத்தைக் காப்பாற்ற தனக்கென ஏற்படுத்திய காடு என்பது பல ஒழுங்கான வடிவங்களைக் கொண்டது ஒழுங்கு என்பது இயற்கையின் விதியல்ல அதனாலேயே காட்டை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

தனி மரம் தோப்பாவதில்லைதான், ஆனால் தோப்பிலுள்ள ஒவ்வொரு மரமும் தனிமரம்தான். காடு அதைப்பற்றிச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.

காடு - வாசிக்கவேண்டிய புத்தகம்.    

18 comments:

ஷர்புதீன் said...

yes, should read shortly

சுரேகா.. said...

காடு என்ற தலைப்பே பல்வேறு குறியீடுகளை உள்ளடக்கியதாக படிக்கும்போதும், படித்தபிறகும் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

நல்ல பார்வை!

'பரிவை' சே.குமார் said...

நல்ல பார்வை.

மணிஜி said...

எனக்கு சிவராமன் காடு நூலை கொடுத்தார் . இன்னும் அதற்குள் இருந்து வெளியில் வரவில்லை. அவருக்கு என் நன்றிகள்

உணவு உலகம் said...

நல்ல பகிர்வு.

vasu balaji said...

கையில இரவு இருக்கு. முடிச்சிட்டு காட்டுக்குள்ள போறேன்.

Athisha said...

நல்ல அறிமுகம் தல. இன்னும் படிக்கவில்லை படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.

rajasundararajan said...

இதுவரை ஜெயமோகனால் எழுதப்பட்ட நாவல்களில் 'காடு'தான் சிறந்தது என்பது என் கருத்து. கொண்ட கொள்கைக்காகத் தார்ப்பாச்சை கட்டுதல் அதில்தான் குறைவு.

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல சுவாரஸ்யமா அருமையா இருக்கு....

பாலா said...

எலேய்... இந்த ஏரியா பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே.. இப்பவாவது எதுனா புரியறமாறி எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா......

வெளங்குனாப்புல தெர்ல (ரெண்டு அர்த்தத்திலும்).

நல்லாயிருக்கீயளா.....?? ;)

shortfilmindia.com said...

நல்லாருக்கு.. எதிர்ப்பார்க்கிறேன்.:)

Unknown said...

ஜெமோ-வின் க்ளாசிக் படைப்பு..

வினோத் கெளதம் said...

நான் படித்த முதல் ஜெமோவின் நாவல்..
படிக்க ஆரம்பித்தவுடனே காடு என்னை உள்ளிழுத்து கொண்டது.
என் அப்பாவுக்கு நான் பரிந்துரைத்து அவரும் ஆவலாக படிக்க ஆரம்பித்து ஜெமோவின் ரசிகனாக மாறியே விட்டார்.

வினோத் கெளதம் said...
This comment has been removed by the author.
செ.சரவணக்குமார் said...

மிக நல்ல விமர்சனம் ஷங்கர். நான்கு முறை வாசித்திருக்கிறேன். காடு அலுக்கவேயில்லை. இன்னும் இன்னும் என்று உள்ளிழுத்துச் செல்கிறது.

ஜோதிஜி said...

சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும்

வலையுலகில் பீற்றிக்கொள்ளும் ஜெயமோகன் சாரு இவர்களின் எழுத்துக்களை இது வரையிலும் படித்தது இல்லை. வாய்ப்பு இல்லை என்பதை விட மேலே சொன்னது தான் இப்போது புத்தகமாக இருக்கிறது.

கருந்தேள் கண்ணாயிரம் said...

// சுண்டெலி said...
எலேய்... இந்த ஏரியா பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே.. இப்பவாவது எதுனா புரியறமாறி எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா......

வெளங்குனாப்புல தெர்ல (ரெண்டு அர்த்தத்திலும்).

நல்லாயிருக்கீயளா.....?? ;)

//

சுண்டெலியின் கருத்தை ஆமோதிக்கிறேன் :-) .. (ச்சும்மா ஒரு தமாசுக்கு) :-) .. நபநப :-)

Paleo God said...

@ஷர்புதீன் : படிங்க :))
@சுரேகா: ஆமாங்க. நன்றி! :))
@சே.குமார் : நன்றிங்க குமார் :))
@மணிஜீ: எனக்கு சாறு சங்கர் கொடுத்தார் :))
@FOOD : நன்றிங்க :))
@வானம்பாடிகள்; கண்டிப்பா படிங்க சார் :))
@அதிஷா: படிச்சிட்டு உங்க ஸ்டைல்ல எழுதுங்க அதிஷா :))
@rajasundararajan: நன்றிங்க சார் :))
@ நாஞ்சில் மனோ : நன்றிங்க:)
@ சுண்டெலி: நல்லா இருக்கேன் தல:)) விளங்காது தல ( ரெண்டு அர்த்தத்திலயும்::)
@ கேபிள்ஜி: நன்றி தல (செஞ்சிடுவோம்!) :))
@ கேஆர்பி: ஆமாங்க செந்தில் :))
@ வினோத் கவுதம்: நன்றிங்க வினோத் :)
@ செ.ச: நன்றி சரவணன் :))
@ ஜோ: படிக்கலாம் தல! :))
@ கருந்தேள்: ரைட்டு! நன்றி ராஜேஷ்:))