பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 3.

உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 3.


.

ஆர்கானிக் லிவிங் ஆர்கானிக் பார்மிங் எது சரி??

இயற்கை வழி வேளாண்மை என்பது தற்பொழுது சிறிய அளவிலேயே நடந்து வருகிறது. காரணம் பெரும்பாலான விவசாயிகள் மரபு வழிக்கு இன்னும் மாறாமல் இரசாயண வழி விவசாயத்தையே பிரதானமாக செய்துகொண்டிருக்கிறார்கள். 

மேலும் அரசாங்கத்தில் எல்லா வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது (அவை சொற்பமாக இருந்தாலும்) என்ன விஷத்தைப் போடுகிறார்? எவ்வளவு? என்றெல்லாம் எந்தக் கணக்குவழக்கும் இல்லாமல் அவர்களால் அதிக விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சுலமாக செயல்பட முடியும், சந்தைப் படுத்த முடியும்.

ஆனால் இயற்கைவழியில் அவ்வாறல்ல! அதற்கேற்ற நடைமுறைகள் பலவற்றைக் கடைபிடிக்கவேண்டும். குறைந்தது 3லிருந்து 5ஆண்டுகள் ரசாயணம் ஏதும் தூவப்படாமல் ஒரு நிலம் தயார் செய்யப்படவேண்டும். அந்த நிலத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீர்முதற்கொண்டு பரிசோதனைகள் அடிப்படையில் எந்த நஞ்சும் கலக்காது என்ற திறனாய்வு செய்யப்படவேண்டும். மேலும் அக்கம் பக்கத்தில் ரசாயண விவசாயம் செய்யப்படுமானால் அவர்களின் நீர் அல்லது ரசாயணத் தெளிப்பு இந்த வயலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் நிலத்தில் சில முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

நிலத்தை உழுவது, மேம்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, விதைகள் எங்கிருந்து பெறப்பட்டது, என்னவிதமான எருக்கள் பயன்படுத்தப்பட்டது, என்று பலவிஷயங்களை ஆவணப் படுத்தவேண்டும். இவ்வளவு ஏன்? நீங்கள் பயன் படுத்தும் ஏர் கலப்பை முதல் மண்வெட்டி வரை ரசாயண நிலத்தில் உபயோகப் படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது!!

மேலும் ரசாயணங்கள் கொட்டப்படும்போது உடனடியாகவும் ஒரே பயிரையும் தொடர்ந்து விளைவிக்கலாம். ஆனால் இயற்கை முறையில் ஒரு முறை பயிர் செய்து நிலத்திற்கு சிறிது ஓய்வளித்து வேறொரு பயிரை விளைவித்தால் மட்டுமே மண் வளம் அதிகரிக்கும்.

நீங்கள் செய்வது பரிபூரண இயற்கை விவசாயம் என்பதை அப்பொழுதுதான் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் அங்கீகாரம் செய்யும். அப்பொழுதுதான் நீங்கள் ஆர்கானிக் என்று லேபிள் கொண்டு மக்களிடையே அவற்றை விற்க முடியும். ஒரு வகையில் இம்மாதிரியாக கட்டுப்பாடுகளே மக்களுக்கு சரியான தரமான இயற்கை பொருட்களை கொண்டு சேர்கிறது என்றாலும், இவ்வளவு சுமையை நஞ்சைக் கலக்காது விவசாயம் செய்பவன் தலையில் ஏற்றப்பட்டிருப்பதால் அவன் இழப்புகளை சரிகட்ட அதிக விலைக்கு விற்க நேரிடுகிறது. 

இதில் மற்றொரு விஷயமும் கவனிக்கவேண்டும். விதைகளையே உரிமை கொண்டாடும் அளவிற்கு யோசித்த அதி புத்தி சாலிகள் இதையும் விட்டு வைப்பார்களா? அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ? என்ற அச்சமே இந்த தலைப்பிற்குக் காரணம்.

ஆர்கானிக் பார்மிங் என்பதில் வியாபார நோக்கும் அதனால் எழும் சிக்கல்களும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. காசு எங்கே ப்ரதானமாக இருக்கிறதோ அங்கே நப்பாசைகளும், துரோகமும் சுலபமாய் எஜமானனாகிவிடுகிறது. வருமானம் முக்கியமாகும்போது சமரசங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. இதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதாரண டீத்தூள் முதல் 50 பைசா சாக்லேட் வரையில் இன்றைக்கு போலிகள் சர்வ சாதாரணமாக நம்மிடையேஊடுருவி விட்டன. 

என்ன தீர்வு? என்று பார்த்தால் இயற்கைவழி வாழ்வுமுறை ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். சொல்வது சுலபம் ஆனால் நடைமுறையில் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா? என்றால் அது கடினம்தான். ஆனால் நான் இருக்கும் இடத்தில் எனக்கு எல்லாம் கிடைக்கவேண்டும், அதுவும் நஞ்சில்லாமல் கிடைக்கவேண்டும், ஆனால் சகாயமாகக் கிடைக்கவேண்டும் என்று கூழுக்கும் மீசைக்கும் அந்தக் கூழ் இருக்கும் சொம்புக்கும் அதைக்கொண்டுவரும் நபரின்மேலும் ஆசை கூடிக்கொண்டே போவதால் அடுத்தவரை குறை சொல்ல அருகதையற்றவர்களாக ஆகிறோம். விவசாயம் என்பது ஏதோ ஆயிரம் மலைதாண்டி ஆழ்கடலில் நடைபெறுவதல்ல. பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் பயணப்படும்,  காத்திருக்கும் நாம் இதுபோன்று விவசாயம் செய்பவர்களை நேரடியாக சந்தித்து பொருட்கள்வாங்கி ஊக்குவித்தாலே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வழி செய்தவர்களாகிறோம். இதற்கான அதிக தேவைகள் உருவாகும்போது அதற்கான சந்தைகள் நிச்சயம் நமக்கு அருகிலேயே உருவாகும் உதாரணம் -செல்போன். தினமும் பழமோ, பூவோ வழங்கும் ஒருவர் உங்களுக்கு ஒருபோதும் கெட்டுப்போனதை விற்கமாட்டார் என்ற சின்ன புரிதலே இதற்குப் போதும். 

வெறும் உணவுதாண்டி வாழ்வுமுறைகளிலும் கவனம் வைக்கவேண்டிய அவசியமும் வந்துவிட்டது சிறிது சிறிதாய் நாம் சேற்கும் மக்காத குப்பைகளின் மலைகளை புறநகர் பகுதிகளில் பெரும்புகையோடு பார்த்திருக்கிறீர்களா? இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தில் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு? இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று? இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள்? 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும்? அடுத்து ஆக்ஸிஜனை பாட்டிலில் அடைத்து விற்பார்களோ என்னமோ?

மழை நீர் சேகரிப்பையே ஏனோதானோவென்று கட்சி முலாம் பூசி செலவாகிறதே என்று கவலைப்படுபவர்களில் பலர், பத்துகுப் பத்து இடம் கூட மண்ணைக் காட்டாது சிமெண்ட் போட்டு மூடி அதில் கட்டிடம் கட்டி கடன் வாங்கியாவது காரையோ, எல்ஈடி டீவியோ வாங்கத் தயங்குவதில்லை, ஒரு சாதாரணச் சட்டையை அதன் கம்பெனி லோகோவிற்காக 4000 ரூபாய் கொடுத்து வாங்கத் தயங்குவதில்லை. அருகாமையிலிருக்கும் கடைக்கு நடப்பதுமுதல், ஒரே ஒரு சிறிய செடியேனும் வளர்ப்பது முதல், ப்ளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்க்க முயல்வது முதல் அதற்காக நம் பிள்ளைகளைத் தயார் படுத்துவது முதல் ஒவ்வொருவரும் சிறிய அளவில் முயற்சிகளை ஆரம்பித்தாலே போதும். பன்றிக் காய்ச்சலைவிட வேகமாகப் பரவவேண்டிய விஷயங்கள் இவைதான்.

படியுங்கள்..


இவர்களின் அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. காய்கறித்தோட்டம் முதல் இயற்கை வழி வேளாண்மைக்காக பல விஷயங்களை புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் விற்பனை செய்கின்றனர். மேலே இருப்பது அவர்களின் வலைத்தள முகவரி. விதைகளும் சில ஆர்கானிக் பொருட்களும் இவர்களிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நஞ்சில்லா விவசாயத்திற்கான ஒரு அமைப்பு. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை சென்று வரவும், புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். வெண்டை, கத்தரி, மிளகாய் போன்றவற்றிற்காக சிறப்பு தனி புத்தகங்களையே போட்டிருக்கிறார்கள். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் விவசாய அறிவை , பயிர்களைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவாவது இந்தப் புத்தகங்கள் வாங்கிப் பயனுறவேண்டும்.

இயற்கை சம்பந்தமான பல கட்டுறைகள் உங்களுக்குப் பயனளிக்கும்.

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!ஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் - 560.


அடுத்து காணி நிலம் என்றாரே பாரதி? அது என்ன? 


.

5 comments: