பலா பட்டறை: பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!

பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


.


பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.

பூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ஐந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.

 கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.

இதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.

ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா! அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி!

ஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.

இரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.

அங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம்!!??? கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா? என்பது போல் இருக்கிறது :))

வெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது!.

மலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை

சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்

அந்த நால்வர்!

முதலில் வரும் சிமெண்ட் பாதை

பின்னர் வரும் கற் பாதை

காட்டினூடே செல்லும் பாதை

கடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை
இறங்கும் வழியில்

முதலில் இறங்கவேண்டிய மலைப்பாதை

சூலம்!

ஓம் நமச் சிவாய :))

இன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து

உதயத்திற்கு முன்பான ட்ரைய்லர்!

வெண் பஞ்சு மேகங்கள்

விளிம்பு நிலை மோட்ச தியானம் :))

கோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..


கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே! மறக்க முடியாத ஒரு அனுபவம்! 

மிக்க நன்றி!

:))

33 comments: