பலா பட்டறை: ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!

ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!


ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!


ஊரிலிருந்து வந்திருந்த உறவுமுறை அண்ணன் ஆடித்தள்ளுபடியில் உடை வாங்க தி நகர் செல்லலாம் என்று அழைத்தான். அதெல்லாம் வேஸ்ட். அதற்கு நல்ல கடையில் நாமே நமக்குப் பிடித்ததை நமக்கு சரிப்படும் விலையில் எடுத்துக்கொள்ளலாம் என்றேன், ம்ஹூம் கேக்கவே இல்லை, தினத்தந்தியில் ஒன்று வாங்கினால் மூன்று  இலவசம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று ரங்கநாதன் தெருவில் முக்கால்வாசியை வளைத்துப் போட்டிருக்கும் பிரபல கடைகளின் விளம்பரங்களைக் காட்டி இதெல்லாம் பொய்யாடா? என்று எதிர்கேள்வி கேட்டான். 

போதாதக் குறைக்கு டிவியில் வேறு விதவிதமான பாடல்களுடன் டி நகரையே 120% டிஸ்கவுண்டில் தரப்போவதாகவே நம்பவைக்கும் பல லட்சக்கணக்கான செலவுள்ள விளம்பரப் படங்கள். இந்த ஆடி விட்டா உனக்கு டிஸ்கவுன்ட்டே கிடைக்காது என்பதுபோல என்னையே கொஞ்சம் தடுமாற வைத்தது. சரி என்று தகத்தகாய டிஸ்கவுன்ட் என்றால் என்னன்னு தெரியுமா ?என்று கேட்டேன். தெரியாது. என்றான், வா டி நகர் போலாம் என்று கூட்டிப் போனேன். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து முதலில் ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் என்ற அந்த கடைக்குள் மும்பை புறநகர் ரயிலில் பீக் அவரில்  ஏறும் லெவலில் இருந்த கூட்ட நெரிசலில்  திக்கித் தெணறி உள்ளே நுழைந்தோம், எனக்கு ஏனோ பாய்ஸ் படத்தில் சுஜாதா எழுதிய வசனம் நினைவுக்கு வந்தது. 

மருந்தளவுக்குக்கூட  ஏசி வேலை செய்யவில்லை. 20 சதுர அடியில்  25 பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.

”என்ன வேனும் சார்?”

”ஏங்க அந்த ஒண்ணு வாங்கினால் மூணு..”

ஏளனமாக ஒரு பார்வை பார்த்து, ”அது மொத மாடி”

சரி என்று திருப்பதி க்யூவை விட பயங்கரமான இருந்த அந்த க்யூவில் ஒரு மீட்டருக்கும் குறைவாக இருக்கும்போல் தெரிந்த மாடிப்படிகளில் இறங்குபவர்களும் ஏறுபவர்களும் தோளோடு தோள் உரச ஒரு வழியாக ஏறி முதல் மாடி அடைந்தோம். எங்கு நோக்கினும் ஜனத்திரள், சூப்பரான ப்ராண்டு பேண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டமே இல்லை. டேய் இங்கியே முடிச்சடலாம்டா கூட்டமே இல்லை என்றான் அண்ணன். எனக்கு டவுட் அதிகமாகியது. ஆனால் அந்தக் கவுண்டருக்கு மேலே மானாவாரியாகத் தொங்கிக்கொண்டிருந்த 1க்கு3 அட்டைகள் குழப்பியது.

என்னுடைய அண்ணன் என்னைப் பார்த்தான், பார்த்தியாடே கூட்டத்தைப் பார்த்திருந்தா இந்த மாதிரி ப்ராண்டேட் பேண்ட்டு 600 ரூவாய்க்கு மூணு கிடைச்சிருக்குமாடே என்ற கேள்வி அவன் பார்வையில்ருந்து என்னைத் துளைத்தது. சரி சரி ஆவட்டும் பேண்ட்ட வாங்கு என்று சைகை காட்டி அவன் அருகில் சென்றேன். 

அவனுடைய சைஸைக் கேட்டு அவர் மள மளவென்று பேண்ட்டுகளை எடுத்து காண்பித்தார். எல்லாம் 1000 ரூவாய்க்கு மேல் இருந்ததால் அந்த விற்பனையாளர் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த 1க்கு 3 விளம்பரத்தைக் காண்பித்து இதுல ஆயிரம் ரூபா பேண்ட்டே இல்லையே என்றேன்.

சடக்கென்று ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த அவர், ”சார்.. அதெல்லாம் பத்தாம் நம்பர் கவுண்டர்லதான் இதுல எதுவும் டிஸ்கவுண்ட் கிடையாது என்றார்.” அப்பொழுதுதான் கவனித்தேன் ஏன் நாங்கள் இருந்த இடத்தில் கூட்டமில்லாமல் எதிர்புரத்தில் மக்கள் மொய்த்திருக்கிறார்கள் என்று. ஒன்றும் புரியாமல் பத்தாம் நம்பர் கவுண்டர் சென்றபிறகுதான் தெரிந்தது குப்பை மலைபோல அழுக்கடைந்த, தையல் பிரிந்த பேண்டுகள் குமித்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் கொடுமை அதில் எல்லா சைஸுகளும் இருந்ததுதான். நமக்கு வேண்டியதை அந்த குவியலில் இருந்து உறுவி எடுக்கவே திறமை வேண்டும். நான் மீண்டும் கடையின் சீலிங்கைப் பார்த்தேன். இரண்டடிக்கு இரண்டடி ப்ராண்டட் பேண்டுகள் 1க்கு மூன்று என்று அட்டைகள் தொங்கியது. போதாதகுறைக்கு எல்லா கண்ணாடியிலும் ப்ரிண்டவுட் எடுத்து ஒட்டி வைத்திருந்தனர். சரிய்யா எங்க ப்ராண்டட் என்றால் வாய்க்கு வந்த பெயரில் ’ஹிமேன்’ ’ஓமேன்’ ’எஸ்மேன்’ ’நோமேன்’ என்று ஒரு பெயர் வைத்து அட்டகாசமான லேபிளை இடுப்பருகே தைத்து வைத்து ப்ராண்டேட் என்று ஏமாற்றும் சூத்திரம் புரிந்தது. 

நான் அண்ணைப் பார்த்தேன். ”இந்தக் கடை வேணாம்டா அந்தக் கடைக்குப் போலாம் முருகன் வேல் நம்மைக் கைவிடாது” என்று எதிர் வரிசையில் இருக்கும் இன்னொரு பிரபலக்கடைக்குச் சென்றோம். அங்கேயும் சீலிங் முழுக்க ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று  (ரெம்ப நியாமானவயங்க பாஸ்)  ஒரு அடிக்கு ஒன்றாக அட்டைகள் கலர் கலராகத் தொங்கிக்கொண்டிருந்தது. சிண்டிகேட் போட்டுகிட்டுத்தான் ஏமாத்தறாங்கபோல என்று நினைத்துக்கொண்டேன். ஒன்றுக்கு மூன்று போய் ஒன்றுக்கு ஒன்று என்று அண்ணன் அரை மணி நேரத்திலேயே மனதைத் தயார்படுத்திவிட்டது வியப்பளித்தது. குழந்தைகளுக்கான உடைகள் பிரிவில் சென்று முதலிலேயே அவன் கேட்டான், ”ஒன்னு வாங்கினா ஒன்னு ப்ரீ...?? அது அந்த மொத வரிசைல இருக்கு பாருங்க அதுமட்டும்தான்.” மொத்தமே முப்பது உடைகள், அதுவும் பல அளவுகளில்,, தரமற்றதாக... மற்ற உடைகள் எல்லாமே 400 ரூவாய்க்கு மேற்பட்டவை. 

அண்ணன் நொந்துவிட்டான். நான் மற்ற மக்களைப் பார்த்தேன். இவ்வளவு கும்பலும் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக குடும்பத்தோடு இங்கே வருவது இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்துதான் என்பது புரிந்தது. வந்தது வந்தாச்சு வெறுமனே செல்லமுடியாது, ஏதாச்சும் வாங்கிட்டுப்போவோம் என்று அவர்கள் மற்ற நாட்களில் சாகவாசமாக தேடி வாங்கும் உடைகளை இந்த கும்பலில் மிதிபட்டு கசங்கி நசுங்கி என்ன ஏதென்றே சரி பார்க்காமல் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் அவஸ்தை புரிந்தது. மிகப்பெரிய கடைகள் அனைத்தும் இந்த ஏமாற்று வேலையில் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் சில ஆயிரம் ரூவாய் யாரும் விரும்பாத சரக்கை தள்ளுபடியில் ஒரு மூலையில் காண்பித்துவிட்டு கடையில் இருக்கும் அனைத்துமே தள்ளுபடி என்ற மாயையை விளம்பரம் மூலம் ஏற்படுத்தி மக்களை பெரும்திரளாக வரவழைத்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். 

இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் அதிகம் அறியப்பட்ட கடைகள்தான், விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை நியாயமான டிஸ்கவுண்ட்டாக அளித்தாலே பரம்பரை பரம்பரையாக விசுவாசமாக மக்கள் வாங்க முன்வருவார்கள். ஆனாலும் ஒரு ஆட்டு மந்தையை விதவிதமாக டிஸ்கவுண்ட் கொம்பு கொண்டு வளைப்பதிலும் ஒரு குரூரம் இருக்கிறது போல.

01. முதலில் ரயில்நிலையம் அருகில் இருக்கும் கடையில் படிக்கட்டுகள் மிகவும் குறுகியவை. ஏதேனும் தீ விபத்து அசம்பாவிதம் என்றால் கடை வாசலில் பைகளை செக் பண்ணும் இருவர் தவிர்த்து மற்றவர்கள் உடல் கருகி இறக்கும் அளவிற்கு கட்டுமான டிசைன் இருக்கிறது. இந்த மகா இலவச ட்ரென்டையே விளம்பரங்களில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள்தான், அடுத்த வருஷம் 1 வாங்கினால் 100 இலவசம் என்று விளம்பரம் வந்தாலும் வரும். சேப்டி முக்கியம் என்று நினைப்பவர்கள் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருப்பது உத்தமம். இல்லையென்றால் இன்சூரன்ஸ் கம்பெனிகூட நீங்கள் சூசைட் பாயிண்டிற்குச் சென்றீர்கள் என்று க்ளெயிம் மறுக்கக்கூடும். 

02. இரண்டாவதாகச் சென்ற அந்த பிரபல கடை ரெம்ப யோக்கியம் ஒன்றுக்கு ஒன்றுதான் ப்ரீ. முதல் கடைக்குச் சென்று வெறுத்துப்போய் வருபவர்களுக்கு, நாங்க அவங்க அளவுக்கு கேடி இல்லைங்க மூணெல்லாம் தரமாட்டோம் ஒரு ப்ரீதான் என்று உள்ளே இழுக்கும் தகத்தகாய டெக்னாலஜி. வருபவனை கருவேப்பிலையாவது விற்று காசை புடுங்கிக்கொள்ள வாசலிலேயே காய்கறி விற்கிறார்கள்.

03. ப்ளாஸ்டிக் பைகள் உலகிலேயே இங்கேதான் மிக அதிக அளவில் புழங்கும் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் பிக் ஷாப்பர் போன்ற ஒரு கட்டைப் பைகள் தருவார்கள் ஆனால் கூட்டத்தில் அதற்கெல்லாம் அவர்களுக்கோ, மக்களுக்கோ நேரமில்லை போல ப்ளாஸ்டிக் பைகளில் அழுத்தி அனுப்பிவிடுகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் குறைந்தது இரண்டு பைகளாவது இருக்கிறது.

04. அந்தப் பிரபல கடையின் வாசலில் சாக்கோ பார் விற்றுக்கொண்டிருந்தார்கள், சரி தாகத்துக்கு தண்ணீர் எடுத்துவரவில்லை இதாவது இரண்டு சாப்பிடலாம் என்று அண்ணன் வாங்கினான், சில பெண்கள் குழந்தைகளுடன், அந்தக் கடையிலேயே பொருட்கள் வாங்கிய பைகளை அந்தக் கடை வாசலில் வைத்துவிட்டு குழந்தைகளுக்கும் அவர்களுக்குமாக சாக்கோ பார் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். திடீரென்று அந்த ஐஸ் விற்ற கடைப் பெண் அங்கே மரப்படியில் உட்கார்ந்திருந்தவர்களை இங்கே உட்காரக்கூடாது எழுந்திருங்கள் என்று விரட்டினார். பாதி ஐஸ் தின்ற கையோடு குழந்தையும் அந்தப் பெண்களும் முழித்தனர். அந்தக் கடையில் வாங்கிவந்த பைகளை எடுத்ததுதான் தாமதம் அந்தக் கடைப் பெண் ஒரு குடம் தண்ணீரை எடுத்து அந்த மரப்படியில் ஊற்றினார். எனக்கு கோபம் வந்தது. ஏம்மா தண்ணி ஊத்தின? இப்ப அவங்க பை எல்லாம் எங்க வைப்பாங்க உங்க கடையில வாங்கிய கஸ்டமருங்கதானே? என்று கேட்டேன். கடை வாசல்ல உக்காரக்கூடாதுங்க, அப்புறம் எப்படி கஸ்டமர் வருவாங்க என்று தெனாவட்டாக பதில் சொன்னது. அந்தப் பெண்களுக்கும் கோபம் வந்தது, உன்கிட்டதானே வாங்கினோம் சாப்ட்டுமுடிக்கறதுக்குள்ள ஏன் தண்ணி ஊத்தின என்று குரல் உயர்த்தவும், நான் அந்தப் பெண்ணிடம் உங்க மேனேஞரையோ ஓனரையோ கூப்பிடு என்றேன், என்னாத்துக்கு என்று கேட்ட பெண்ணிடம் இது உங்க கடை இடமா நீ ரோட்ல மரப்படி போட்டு வியாபாரம் பண்ணிட்டு எங்க கிட்ட சட்டம் பேசறியா? இதுவரைக்கும் மக்கள் நடக்கற இடம்னுதானே கோர்ட்டு இடிச்சி வெச்சிருக்கு, நீ ஏன் நாங்க நடக்கற எடத்துல படிக்கட்டு வெச்ச? யாரக் கேட்டு அங்க தண்ணி ஊத்தின? கூப்டு உன் இன்சார்ஜை என்று சவுண்ட் விட்டதை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை. உடனே உள்ளே இருந்து யாரோ வந்து சாரி சார் என்றார். கோர்ட் உங்க கடையெல்லாம் இழுத்து மூடி சீல்வெச்சாக்கூட தப்பே இல்லய்யா என்று சொல்லிவிட்டு, அந்த எழுப்பப்பட்ட பெண்களிடம் சாப்பிட்ட ஐஸ் குச்சி பேப்பரையெல்லாம் அந்தப் படியிலேயே வீசி போடச்சொன்னேன், கையில் வேறு குப்பைகள் இருந்தாலும் அங்கேயே போடுங்கள் என்றேன். திருப்தியோடு பொதுமக்கள் சேவைசெய்து அங்கே இருந்து நகர்ந்தோம்.

05. இந்த மாதிரி நேரங்களில் முக்கியமாக நான் ஒரு விஷயம் செய்வேன். சரி ஆனது ஆச்சு வந்தது வந்துட்டோம் வேற எதையாச்சும் வாங்குவோம் என்பது கிடையாது. நேர்மையான, உண்மையான வர்த்தகம் தவிர்த்து இதை ஊக்குவிப்பதே இல்லை. யோசித்துப்பாருங்கள்.. இந்த டிஸ்கவுண்டிற்காகவே வருபவர்கள் முதலில் அதைத்தான் கேட்கவேண்டும் அது இல்லை அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தால் முழுக்க புறக்கணித்துவிட்டுச் செல்வதே மீண்டும் அவர்கள் இந்த ஏமாற்று வேலை செய்யாமலிருக்க உதவும். ஆனால் கும்பலைப் பார்த்தால் நீங்க சொம்மா கடைக்கு வந்தாலே நாங்கள் ஆயிரம் ரூபாய் புடுங்கிப்போம் என்று சொன்னாலும் வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

06. விபத்துகள் பல நடந்தும் நெரிசல் நேரங்களை மக்கள் தவிர்க்கவிரும்புவதும் இல்லை. நெரிசலில் கைக்குழந்தைகளை கூட்டிவருபவர்களை என்ன சொல்ல? :(( 

07. ரங்கநாதன் தெருவில் கோர்ட் ஆர்டர்கள் எல்லாம் இப்பொழுதே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது, மீண்டும் மூன்றடி சாலையாக தீபாவளிக்குள் ஆகிவிடும். மீண்டும் ஏதாவது ஒரு விபத்து நடந்தாலொழிய இதற்கு தற்கால விடிவு வராது. அந்த விபத்தும் ஏதாவது ஒரு விவிஐபி குடும்பத்திற்கு வந்தால் கொஞ்சம் பலமான விடிவு பிறக்கலாம். பணம் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இந்தத் தெரு உலகிற்கே ஒரு உதாரணம்.

08. இந்தப் பெரிய கடை உள்ளே சென்று ஏமாறுவதற்கு ப்ளாட்பாரத்தில் பேரம் பேசி ஒன்றுக்கு மூன்று பொருள் வாங்கலாம், நிச்சயம் கடையில் வாங்குவதை விட சிறிது அதிகமாகவே உழைக்கும்.

09. ப்ராண்டெட்தான் வேண்டுமென்று அடம்பிடிப்பவர்கள் அதற்கென இருக்கும் கடைகளில் வாயைக் கட்டி வகுத்தைக் கட்டி ஒரு பேண்ட் 6000 ரூவாய், ஒரு பெல்ட் 2500 ரூவாய் ஒரு ஜட்டி 1000 ரூவாய் என்று வாங்கிக்கொள்வது இன்னும் உத்தமம், சரியான பில் கிடைக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் பொறுமையாக பதில் சொல்வார்கள். தரமும் சிறப்பாக இருக்கும். 

10. இங்கிருக்கும் பெரும்பாலான கடைகள் ஒரே இடத்திலிருந்துதான் பொருட்களை வாங்குகின்றன, விதவிதமான விலைகளில் அவர்கள் விற்கிறார்கள். இங்கே சூப்பர் அங்கே சுமார் என்பதெல்லாம் மனப் பிராந்தி.

11. அதெல்லாம் முடியாதுங்க பரம்பர பரம்பரையா நாங்க தள்ளுபடியில்தான் பொருட்கள் வாங்கறது என்பது உங்கள் ஜீனில் ஊறிக்கிடந்தால் ஒன்றும் பாதகமில்லை. குடும்பத்தோடு செல்வதற்கு முன்பாக நீங்கள் மட்டும் தனியாகச் சென்று விளம்பரப்படுத்தியதற்கும் விற்பனைக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா என்று பரிசோதித்துவிட்டு, ஏமாந்தே தீருவோம் என்றால் பிறகு குடும்பத்தோடு செல்லுங்கள்.

12. இதற்காகவெல்லாம் எந்தக் கட்சியும் தலைவர்களும், புலனாய்வுப் பத்திரிக்கைகளும் மாநாடோ கவர் ஸ்டோரியோ போராட்டமோ நடத்த மாட்டார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் விளம்பர, டொனேஷன் தர்மம். ஆனால் நமக்குத் தேவை பகுத்தறிவு. அதற்காகத்தான் இந்த இடுகை.

ஆடி ஸ்பெசல் டிஸ்கி:

இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு மூன்று ஓட்டு இலவசம்.

.         

10 comments:

நாடோடி இலக்கியன் said...

உஸ்மான் ரோட்டு கடைகளும் சளைத்தவை அல்ல.ரெண்டு வருஷ எக்ஸ்பீரியன்சில் இப்போ எங்க வீட்டில் உஷார் ஆகிட்டாங்க.

S Athiappan said...

இதெல்லாம் நம்ம சொன்னா எவன் கேட்கிறான்? ஆனா நான் சொன்னா பொறாமையில் சொல்கிறேன் என்கிறார்கள் ஏன்னா நான் ஜவுளிகடை வைத்திருக்கிறேன்

வவ்வால் said...

ஷங்கர்,

செம பதிவு, நான் பொதுவா அங்கேலாம் போறது இல்லை, ஆனால் சில விருந்தினர்கள் டி.நகர் கூட்டிப்போன்னு என்னை கைட் ஆக்கிடுறாங்க :-))

சிலக்கடைகளில் வெளியில் பிளாஸ்டிக் சேர்ரில் உட்கார்ந்து பாப் கார்ன் சாப்பிடும் அப்பிராணிக்கூட்டத்தில் அடியேனும் ஐக்கியம் ஆகிவிடுவேன் வேற வழி :-))

அந்த வசதி கூட ரெங்க நாதனில் இல்லை .

சந்திர ஜெயன் கடையும் ,ஆறுமுகப்பெருமாள் கடையும் அடிக்கும் கொட்டம் தாங்கலைனா ,இப்போ சோத்தீஸ்னு ஒருத்தன் அடிக்கிற அழும்பு வேற டைப் 99% தள்ளுப்படின்னு சொல்லாத குறை தான் :-))

நல்ல பிராண்டட் சோடியாக் ஷர்ட்ல 30% தள்ளுப்படிக்கொடுத்தான் , அட நமக்காக என்னமா லாபத்தை விட்டுக்கொடுத்து விக்குறானேனு டப்பாவில் இருக்க விலைப்பட்டியலை ஒருக்கா பார்த்தேன், இவனே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருக்கான், மேலும் தயாரிப்பு தேதி 2010 னு போட்டு இருந்துச்சு, பழைய துணியை தள்ளுப்படியில் கொடுக்கும் கொடை வள்ளல் :-))

தள்ளுபடியில் தருவது எல்லாம் ஓல்ட் ஸ்டாக் , அதை எல்லாம் அந்த தயாரிப்பு நிறுவனங்களில் கிலோ கணக்கில் வாங்கி வருவதாம் , என்ன கொடுமை சார் இது :-))

சரி தள்ளுப்படியில் வேண்டாம்னு எக்ஸ்குளுசிவ் ஷோ ரூம் போய் 3000 க்கு ஒரு ஷர்ட் ,பேண்ட் கேட்டேன் என்னை புழுவைப்போல பார்க்கிறான் :-))

சென்னையில வாழும் மக்கள் எல்லாம் 2ஜீ ல பணம் சம்பாதிச்சங்களா? 3000 ஆயிரத்துக்கு ஒரு சட்டையும், பேண்டும் வாங்க முடியலை கடசியில தேடிக்கீடி 3900க்கு கிடைச்சது, அதுவும் நான் விரும்பின கலர் கிடைக்கலை, அந்த கலர் எடுங்கன்னு சொன்னால் அதுலாம் உங்க பட்ஜெட்டில வராதுன்னு மூக்கை உடைக்கிறானுங்க :-))

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவு.

sultangulam@blogspot.com said...

//டிஸ்கவுண்டிற்காகவே வருபவர்கள் முதலில் அதைத்தான் கேட்கவேண்டும் அது இல்லை அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தால் முழுக்க புறக்கணித்துவிட்டுச் செல்வதே மீண்டும் அவர்கள் இந்த ஏமாற்று வேலை செய்யாமலிருக்க உதவும்.//
இவ்வளவு தூரம் வந்து விட்டு சும்மா போக மாட்டார்களென்று தெரிந்தே செய்கிற தந்நதிரம்தான். மக்கள் மாறனும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.

Unknown said...

ந ல க ரை.

பி.கு: ஆடித்தள்ளுபடியில போட்ட கமெண்ட்.

manjoorraja said...

எங்க வீட்டுக்காரம்மா தினமும் ஆடி தள்ளுபடி போய் வாங்கலாம்னு நச்சரிச்சிகிட்டே இருக்காங்க.... நான் தான் ஆடி முடியட்டும்னு தள்ளுபடி கூட்டம் குறையட்டும்னு சொல்லிகிட்டிருக்கேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான அலசல்...
ஆடியைத் தவிர மற்ற மாதங்களில், வாங்குவது தான் உத்தமம்... நன்றி…(T.M.2)

ஸ்ரீராம். said...

எல்லோரது குமுறல்களையும் பதிவாக்கியிருக்கிறீர்கள். இங்கெல்லாம் பொருட்கள் வாங்குவது கூட எளிதாகி விடலாம். ஆனால் அதற்கு அப்புறம் பில் போட்டு பணம் கட்டும் வைபவம் இருக்கிறதே, ஐயோ.... பொறுமையே கிடையாது. மக்கள் வெள்ளம் அதிகமாகக் கூடுவதாலேயே மற்ற மக்களுக்கும் அங்கேயே போகத் தோன்றுகிறது போலும்! யாரும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கும் செல்வதில்லை. அபபடி நு.நீ.ம.களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் ஒன்றிரண்டு பேர் கேஸ் போட்டுப் புண்ணியமில்லை. நூறு நூறு பேராகப் போட வேண்டும்!!!

SNR.தேவதாஸ் said...

சுமார் 25 வருடங்களுக்கு முன் திருச்சி சாரதாஸில் ஆடித் தள்ளுபடிக்குச் சென்று துணிகள் வாங்கினேன்.மற்ற நாட்களில் விற்பனை செய்யும் விலையை விட குறைவான விலைக்கே விற்பனை செய்தார்கள்.அப்போது ஆடித் தள்ளுபடியில் வாங்கினால் கௌரவக் குறைச்சல் என மக்கள் நினைத்திருந்த காலம்.ஒவ்வொரு வருடமும் சென்று ஒரு வருடத்திற்கான துணிகளை வாங்கிக்கொள்வேன்.ஆனால் வருடம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக தாங்கள் சொன்னதுதான் நடந்தது.இப்போது நான் அந்த விளையாட்டுக்குப் போவது இல்லை.
வாழ்க வளமுடன்
snr.DeVaDaSs