பலா பட்டறை: 2010

சில பகிர்வுகள்..!

வணக்கம் நண்பர்களே, நலமா?

பல நிகழ்வுகளால் எதையுமே படிக்க இயலவில்லை, மிக முக்கிய காரணமாக, என் 87 வயது பாட்டியின் மறைவு. என் வீட்டிலேயே இருந்து ஐந்தாம் தலைமுறையைக் காண இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அமைதியாய் ஒரு அதிகாலையில் அவர் உயிர் பிரிந்ததும் அதன் மறு நாள் காலையில் ஒரு குவியல் சாம்பலாய்க் கண்டதும் சோகம் தாண்டி நிறைய விஷயங்களைப் புரியவைத்தது.

என் தாத்தாவிற்கு சிறு வயதில் இரண்டாம்தரமாய் வாழ்க்கைப்பட்டு  ஐந்து பெண்களைப் பெற்று  இளம் வயதிலேயே விதவையாகி எல்லா குடும்பக் கஷ்டங்களையும் அனுபவித்து எந்தெந்த ஊரிலோ சுற்றிச் சுழன்று வாழ்ந்து தற்பொழுது நான் இருக்கும் கிராமத்தில் என் வீட்டில் இறந்து இயற்கை சூழலுடனான சுத்தமான ஒரு மயானத்தில் எரிந்து உதிர்ந்து போனாள். 

எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன்.  

--







சென்ற மாதத்தில் ஒரே ஒரு நாள் இணைப்பிலிருந்தபொழுது தமிழ் மணத்தில் வாக்களிக்க வேண்டிய இடுகைகளுக்கு வாக்களித்ததோடு அதை மறந்துவிட்டேன். என்னுடைய நான் எடுத்த சில புகைப் படங்கள் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து வந்த பின்னூட்டம் கண்டதும் மகிழ்ச்சி. வெற்றி பெறுவது இரண்டாம் பட்சம். அதிகம் இணையத்தில் இல்லாத நிலையிலும் என்னையும் மதித்து வாக்களித்த நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.:)) மேலே உள்ளது என் வீட்டுத்தோட்டத்தில் நான் எடுத்தது.


--



உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். சமீபகாலத்தில் ஒரே இடத்தில் அதிக பதிவர்களைக் கண்டதும், பேசியதும் மகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்து புத்தகக் கண்காட்சியில் இது தொடரும் என்று நினைக்கிறேன். நண்பர்களின் புத்தகங்கள் இது போன்று சிறப்பாய் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.



--

பா.ராஜாராம் அண்ணன் சவூதிக்கு திரும்பிச் செல்ல சென்னை வந்திருந்தபொழுது சந்தித்தேன். பல விஷயங்கள் பேசினோம். கூடப் பிறக்கவில்லை என்பது தவிர்த்து அன்பின் ஆளுமை அவர். வலைப்பூக்களின் முதல் மற்றும் சிறந்த பயன் இது போன்ற நட்புகள் மட்டுமே. :)) 

பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார் “ எழுத்தில் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் நிஜத்தில் உடையும்பொழுது அதுவும் அழகாகத்தானிருக்கிறது.”

நான் சொன்னேன்... ”அந்த நிஜ பிம்பமும் உடையும் பொழுதுதான் மனசு வலிக்குதுண்ணே”


--

வேறென்ன? புத்தாண்டு வரப்போகிறது. இரண்டாயிரத்துப் பதினொன்று அனைவருக்கும் நல்லதாய் அமைய ப்ரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.




இரு உள்ளங்கைகள் போதுமென்றாலும்
பற்றவியலாத 
புயல்கால மேகங்களாய் 
வட்டச் சுழன்று
கொட்டமடிக்கிறது
காமம்.




.

பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு - பாம்பு பண்ணை

பாம்பு என்றால் - பொது புத்தி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் பற்றிய எனது பார்வையை இந்த இடுகையில் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்ட படியே என் வீட்டுத் தோட்டத்திலும் சுற்றி உள்ள இடங்களிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் அப்படி கண்ணில் தென்பட்ட ஒரு பாம்பு குட்டியை ( நல்லா படிங்க குட்டி பாம்பு) பிடித்து ஒரு 2 லிட்டர் கோக் பாட்டிலில் அடைத்து மூடியில் துளையிட்டு கிண்டி ஸ்னேக் பார்க்கிற்கு எடுத்துச்சென்றேன். அது என்ன வகை என்று அறிந்து கொள்ள எனக்கு ஆசை இருந்தது.

அங்கே நான் திரு. சிவகுமார் (Environmental Education Officer) அவர்களை சந்தித்தேன்.  நான் கொண்டு சென்றிருந்த அந்த பாம்பு குட்டியினை குழந்தையை கையாள்வதைப்போன்று மெதுவாய் வெளியே எடுத்து அது பற்றி விளக்கினார். மேலும் பல விஷயங்களைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் சொன்னார்.

அவற்றில் சில: 

பாம்புகாளால் கடி பட்டவர்கள் அதிகமாக இறப்பது மாரடைப்பினால். காரணம் பயம். விஷம் அடுத்த கட்டம்தான். விஷமில்லாத பாம்பு கடித்தாலும் பயத்தினால் மாரடைப்பு வந்து இறப்பவர்களும் அதிகம்.

விஷ பாம்பு கடித்தால் கடிபட்டவரை அதிகம் அலட்டாமல் வைத்திருப்பது விஷம் இரத்தத்தில் கலப்பதை தாமதமாக்கும். உடனடியாக விஷ முறிவு மருந்து கொடுத்து அவரை மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றால் காப்பாற்ற முடியும்.

இராயப்பேட்டை மருத்துவமனையில் பாம்பு கடிக்கான சிறப்பு சிகிச்சை வசதிகள் இருக்கிறது.     

இதை அவர் கூறும்பொழுது நான் தற்பொழுது இருக்கும் கிராமத்திற்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் சுமார் 40 கிலோமீட்டர்கள் இருக்கும் நிலையில் கடிபட்ட ஒருவரை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றால் கூட 1 மணி நேரம் ஆகும் நிலையில் ஏன் பாம்புகள் அதிகம் இருக்கும் கிராமப் புறங்களில் இது போன்ற வசதிகள் செய்யாது நகரின் மையத்தில் விஷப்பாம்புகள் அறவே அற்ற இடத்தில் அரசாங்கம் சிகிச்சை மையத்தை வைத்திருக்கிறது என்று கேட்டேன்.

அதை ஆமோதித்த அவர். பெரும்பாலான தனியார் மருத்துவ மனைகளில் பாம்புகடிக்கான விஷமுறிவு மருந்து கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென்பது அரசாங்க உத்தரவென்று கூறினார். 

ஒரு விஷ முறிவு மருந்து (வயல்) கிட்டத்தட்ட 500/- ரூபாய் மதிப்புள்ளது. விஷம் உடலில் சென்ற அளவு பொறுத்து எவ்வளவு வயல்கள் உடலில் செலுத்தப்படும் என்பது தீர்மானிக்கப் படுகிறது. எனவே கடிபட்டவருக்கு உடனே விஷ முறிவு மருந்து அளித்து மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும்போது அவரைக் காப்பாற்ற முடியுமென்றார்.  மேலும் கிராமப்புறங்களில் குளிர்சாதனப் பெட்டி வைத்துள்ளவர்கள் இந்த மருந்தினை வைத்திருந்தால் கடிபட்டவர்களுக்கு ஊசி போடத்தெரிந்தவர்கள் மூலமாக அதைச் செலுத்தி முதலுதவி செய்து உடனே மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று காப்பாற்ற முடியுமென்றும் கூறினார். 

மேலும் நமது நாட்டில் நான்கு வகையான விஷப் பாம்புகளுக்கும் சேர்த்து ஒரே விதமான விஷ முறிவு மருந்தே இருப்பதால் இதில் குழப்பமடைய வாய்ப்பில்லை. 

சாதாரண தண்ணீர்ப்பாம்பையே கிராமப்புரங்களில் அடித்து துவைத்து காயப்போட்டு எரிக்குமளவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கிறதே இதற்கு பாம்புப் பண்ணையின் பங்கு என்ன என்று கேட்டதற்கு பல பள்ளிக்கூடங்களை தொடர்புகொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாம்புகளைப்பற்றிய அதன் வாழ்வுமுறைகள்/ விளக்கங்கள் அளித்துக்கொண்டு இருப்பதாகக் கூறினார். 

பாம்புகள் வராமல் இருக்க வளர்க்கப் படும் செடி இன்ன பிற முறைகள் பற்றி கேட்டதற்கு அவைகள் இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே இருப்பதாகவும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சில இரசாயணங்கள் உபயோகப் படுத்தப்படுவதாகவும் ஆனால் அவை நம் நாட்டு பாம்பு இனங்களுக்கு சரி வராது என்றும் தற்பொழுதைக்கு பாம்புகளைப் பற்றி புரிந்து கொள்ளுதலே சிறப்பான வழி என்றும் விளக்கினார்.

தற்பொழுது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பொதுமக்களுக்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழே அந்த மின்னஞ்சலை அப்படியே கொடுத்துள்ளேன். அதன் படி தொடர்பு கொண்டு நண்பர்கள் பயனடையவும், தெரிந்தவர்களுக்கும் சொல்லவும்.



Dear Sir,

Greetings from Chennai Snake Park.

Nice that you visited snake park with a young Striped Keelback snake. I am really happy to know your interest in this charismatic animal group and your passion towards going with nature in general.

We have a snake awareness programme for general public in snake park premises. I am happy to share this news and expect like-minded people from your end to attend this programme. Please find the attached file for the detail. Please share with more people interested in such programme.

Thanking you,

Regards
S. Sivakumar
Chennai-600022.
Tamil Nadu.
--------------------------------------------------------------------------------------------------------------------------

FOR THE INFORMATION OF THE PUBLIC 
      It is proposed to conduct awareness programmes on snakes for the members of the public at the Chennai Snake Park on the 1st Saturday of every month from 11.00 a.m. to 1.00 p.m. 
  • The programme will be as follows:
      11.00 a.m. to 11.20 a.m.   - Demonstration of live snakes
      11.20 a.m. to 11.45 a.m.   - Visit to the snake enclosures and other
                    reptile enclosures 
      11.45 a.m. to 12.30 p.m.   - Power Point Presentation on snakes  
      12.30 p.m. to 1.00 p.m.  - Question and answer session 
  • Admissions to the Snake Park and the Programme will be free. 

  • Light refreshments will be served.

  • The maximum number of participants will be restricted to 40 for each programme.  The applicants will be selected on a first-come-first-served basis.  Intimations will be sent to the selected applicants by post.  Selected applicants should bring the intimation with them for identification.
  • Applications with contact address / email to be handed over to Mr.S.Sivakumar, Environmental Education Officer, Chennai Snake Park, Rajbhavan Post, Chennai 600 022. Ph.: 2235 3623 email : cspt1972@gmail.com

நன்றி நண்பர்களே! :))

நந்தலாலா - ない問題

.


நடிப்பு என்பதென்ன கன்னக்கதுப்புகள் ஆடவேண்டுமா? கண்கள் பேசவேண்டுமா? இரண்டு கைகளையும் எங்கே என்ன மாதிரி வைத்துக்கொள்வதென்று ஹோம் வொர்க் செய்வதா? புருவங்கள்? உதடுகள், குரல்? சிரிப்பின் அளவு, ப்ச்.. உடல்மொழி என்ற ஒன்று போதும் என்று நிரூபிக்கிறது படம். க்ளோசப்பில் நம்மைக் கொன்று குவித்த திரைப்படங்களில் கால்களில் முகம் காட்டும் ஃப்ரேம்கள் ஒரு குழந்தைக்கும் குழந்தையாய் இருப்பவனுக்கும் என்ன அளவில் உலகம் தெரியுமோ அதே அளவில் நகர்கிறது காட்சிகள்.

தாய்ப்பாசத்தை வைத்து பிழியப் பிழிய பொன்மனச்செம்மல் முதல் துவைத்துக்காயப்போட்டவர்கள் அதிகம். அவர்கள் எல்லாமே இலக்கணம் மீறாத அம்மாக்கள். குந்திதேவி மார்பிலடித்து அழும் கர்ணன் வதை காட்சி முதல் பாசத்தினாலும் சோகத்தினாலும் காதைக்கிழியவைத்து கண்களை பதம் பார்க்க வைத்த அதே வெள்ளைத்திரையில் முதுகு மட்டும் காண்பித்து பித்துப்பிடிக்க வைக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் கடைசியில் எந்த சூப்பர் தாய்களையும் காட்டாமலேயே!   

வெறும் சம்பவக் கோர்வைகள்தான். ஒரு பயணத்தில், தின வாழ்வில், தினமும் நாம் காணும் ஆனால் நெகிழத்தவறவிடும் தருணங்கள் ஒவ்வொரு நொடியின் கட்டங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. 

படிமானம் குறியீடு என்றெல்லாம் ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் சாமானியனுக்குத் தேவையா? புரியுமா? ஒரு கைப்பிடிச் சோறின் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்துதான் உண்பேன் என்றால் வயிறு நிறையுமா? அதெல்லாம் விவாதிப்பவர்களுக்கும், திரைப்படத்தை டெக்னிக்கலாக அணுகுபவர்களுக்கும் தேவையானவை. நமக்கு படத்தில் தூரத்தே தெரியும் மதில் ஏறி குதித்த ஒருவன் உடை மாற்றும் நிர்வாணக் காட்சி ஊர் ஒதுக்கிவிட்டதென்று தனியனாய் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை செய்யும் பெண்டாக்டரும் தன்னைப்போன்றவர் என்று தெரியும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தினால் போதாதா? பெற்ற தாயால் புரிந்துகொள்ளாத குழந்தைகளை முகமறியாதவர்கள் அன்பு செய்கிறார்கள். 

ஒரு படத்தில் இசை என்பதின் எல்லை என்ன என்பதை இசைஞானி சரியாகச் செய்திருக்கிறார். மெளனத்தைப் போன்றதொரு சிறந்த இசை இல்லை என்பதை அவர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.  காமிராவின் கோணங்களும், நிறங்களும் அபரிமிதமான உணர்வுகளைத் தருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் என்னை அறியாமல் அழுத படம் இது. தன் முத்தத்தை யாருக்கும் தராமல் சேர்த்து வைத்த அந்த சிறுவன் முதல் முறை முகம் முழுக்க முத்தம் தந்தபோது நான் ஏன் அழுதேன்? சிறுக்கி முண்டை என்று தன் தாயை எட்டி உதைக்க வந்தவன் எங்கம்மா எங்கம்மா என்று அழுதபோது நானும் ஏன் அழுதேன்? எது அழுகையை வரவைத்தது? இசையா? காட்சி அமைப்பா? காமெராவா? முக பாவனையா? எது அழுகையைத் தூண்டியது? தமிழ் படத்தில் பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா? எது அழத் தூண்டியது? 

எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று ரசித்துப் பார்க்கவேண்டிய மன்னிக்க உணர வேண்டிய படம் இது. காட்சிகள் தீர்மானிக்கும் கதையில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று உட்கார்ந்தபடியே ஒன்றிப்போய் படத்தினூடே ஒரு பயணம்.


குறிப்பு: இந்தப்படம் கிகுஜிரோவின் அட்டக்காப்பி அல்லது தழுவல் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் ஒரு ரஜினி படம்போலவோ, கமல் படம் போலவோ அல்லது மற்ற மாஸ் ஹீரோ படங்கள் போலவோ வசூலை அள்ளிக்குவிக்கும் என்று நினைத்து அதற்கான முகாந்திரமாக  எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே? இருப்பினும் ஒரு உன்னதமான படத்தை இப்படி எடுப்பதற்கும் அதில் தானே நடிப்பதற்கும், மெனக்கெடலுக்கும் ஒரு தைரியம் வேண்டும். கரண்ட் ட்ரெண்டில் ஒரு படத்தை எடுத்து காசை அள்ளி இருந்திருக்கலாம். (நான் தியேட்டரில் கண்ட பல இளைஞசர்கள் அந்த எதிர்பார்ப்பிலேயே வந்து என்னய்யா கடுப்பா இருக்கு என கமென்ட் அடித்ததையும் கண்டேன்) அந்த விஷயத்தில் மிஷ்கின் பாராட்டப்படவேண்டியவர். மற்றதெல்லாம் அவரவர் மனசாட்சியின் வேதங்கள்தான் கற்பிக்கவேண்டும். 

ஏனய்யா நூறுகோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் ஒரே ஒரு முகம் கூடவா காந்திபோலில்லை? அட்டன்பரோவைக் கேட்ட கேள்வி ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறது!


நன்றி!


.

அஞ்சாதே!

.

எட்டிப்பார்த்தபோது வெறும் புகை மூட்டமாகத்தான் இருந்தது. 

கையிலிருந்த ஒரு கேரட்டை சுவைத்துக்கொண்டிருந்தபோது சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டேன், துப்பியபோது சக்கையாய் விழுந்த கேரட்டிலும் உதட்டில் வழிந்த எச்சிலிலும் ரத்தம். எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் கேரட்டைக் கடித்து வாய் நிறைய அடக்கிக்கொண்டேன். உடலில் காயத்தால் ஏற்படும் வலியைக் காட்டிலும் நாக்கில் ஏற்பட்ட வலி வித்தியாசமாய் இருந்தது. 

மீண்டும் எட்டிப்பார்த்தேன். அதே வெண் பஞ்சு போர்த்திய சூசைட் பாயிண்ட். அதென்ன சூசைட் பாயிண்ட்? சூசைட் என்றால் என்ன? மரணிப்பதா? இல்லை இல்லை. மரணத்தை நிர்ணயம் செய்வது. பிறப்பிலில்லாத சுதந்திரம். உயிரோடிருப்பதிலிருந்து உண்மையான சுய விடுதலை. 

இயற்கையான மரணம் என்பது யாரோ கழுத்தைப் பிடித்து தள்ளுவதைப்போல எப்படி உயிரின் முதல் காற்று சுவாசிக்க வெளியே கால் பிடித்து இழுத்தார்களோ, அதே போல் யாரோ ’போதும் வாழ்ந்தது போய்த் தொலை’ என்று தள்ளுவதைப்போல. ஆனால் இந்த தற்கொலை, அதென்ன தற்கொலை ?எவன் வைத்தான் இந்தப் பெயர்? சுயவிடுதலை என்றால் நன்றாக இருந்திருக்குமோ? 

எங்கே இருந்தது சுயம்? ஆணும் பெண்ணும் சேர்த்து பிரதியாக்கிய ஒரு பிண்டம், கூடலின் சாட்சி, தான் மலடி இல்லை என்றும் ஆண்மகன் என்றும் நிரூபித்த இருவரின் வம்ச சாப்பா. போகட்டும் நானே என்னை மாய்த்துக்கொள்வதிலாவது சுயமானது இருக்கட்டும்.

காரட்டின் கடைசி துண்டையும் வாயில் போட்டுக்கொண்டேன். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டேன். எதற்கும் நன்றாக வெயில் வந்தவுடன் மேகமூட்டமில்லாதபோது ஒரு முறை பார்த்துவிட்டு குதித்துவிடலாமா? என்று தோன்றியது. போதும் வாழ்ந்தது. அடுத்த நொடி என்று எதுவும் என் கையிலில்லாதபோது என்னவென்று வாழ்வது? எதற்காக வாழ்வது? போதும் விட்டு விடுதலையாகிவிடலாம். 

தற்கொலை கோழையாம். விழாத வீரர்கள் சொல்லிவிட்டார்கள். எட்டிப்பார்க்கத் திராணியற்ற எலிக்கூட்டம். எனக்கு சிரிப்பு வந்தது. அதுதான் மறு பிறப்பொன்று இருக்கிறதே பிறகென்ன? இதிலென்ன கோழைத்தனமிருக்கிறது? என் உயிர் என் கையால் போவதென்பது எவ்வளவு சுகமானது. எல்லா வேலைகளையும் சரியாக முடித்து,. எல்லாக் கடன்களையும் அடைத்து. எனக்கென இருக்கும் பொறுப்புகள் முடித்து இதோ இங்கே முடிக்கலாமென்று வந்திருக்கிறேன். இதிலென்ன கோழைத்தனம் இருக்கிறது.  இன்னும் வாழ்வோமென்று சேர்த்துச் சேர்த்து திடீரென எவரோ அனுபவிக்கச் சாவதல்லவா கோழைத்தனம். 

திடீரென்று வந்தோம் குதித்தோமென்று இருப்பவர்களை கோழையெனச்சொல்கிறார்களோ?ஹும்ம் பைத்தியங்கள். இயற்கையாய் இறப்பவனும் இன்ன தேதிக்கு இறப்பேனென்றா சொல்லிவிட்டு இறக்கிறான். கூடலின்போதே கூடவந்த உயிரணுக்களை சாகடித்துத்தானே கருப்பையில் நுழைந்தேன். இதன் பிறகென்ன புண்ணியமும்? பாவமும்? கோழையும் வீரமும்.

வாடாத மலரென்று கொத்துக் கொத்தாய் சில பூக்கள் கொஞ்சம் தள்ளி விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமே இருந்த அந்த சூசைட் பாயிண்ட்டில் ஒருவர் ஒரு பெண் குழந்தையோடு வந்தார். அந்தக் குழந்தையின் கைகளில் அழகான மலர் கொத்து.

”மிலி த்ரோ த ஃப்ளவர்ஸ்”

மிலி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை சொன்ன தன் தந்தையைப் பார்த்தது. சிறிய மையிடப்பட்ட அழகிய கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் கன்னத்தில் கோடு வழித்து புஸு புஸுவென்ற ஸ்கர்ட்டில் விழுந்து வட்டமாய் பரவியது. பூக்களைத் தூக்கி எறிந்தது அப்பாவின் பக்கம் திரும்பி அவரின் கால்களுக்குள் புதைந்து அழுதது. 

நான் அந்தத் தந்தையைப் பார்க்கவில்லை. சிரித்துவிடுவேனோ என்று உள்ளுணர்வு சொல்லியது. அந்தக்குழந்தைக்காகவாவது நான் சிரிக்காமலிருக்கவேண்டும். இவராவது முற்றுமறிந்த முட்டாள். இந்தக் குழந்தை இனிமேல்தான் கற்றறிந்து முட்டாளாகவேண்டும். நானதைத் தடுப்பானேன் என்று மீண்டும் வெண்பஞ்சு மேகங்கள் பக்கம் திரும்பிக்கொண்டேன். 

தடுப்புக்கம்பி சில்லென்று இருந்தது பிடித்தவாறே கீழே பார்க்கத்துவங்கினேன். எந்தப் பக்கம் குதிக்க வாகாயிருக்கும் மனது கணக்குப் போடத்துவங்கியது. அது மிகச் சிறிய இடமென்றாலும் தடுப்புக் கம்பி தாண்டி இரண்டு இரண்டரை அடிகள் மேடாயிருந்தது. ஒரு மரம் அடியிலிருந்து கிளை பரப்பி மேலே வந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை வெறும் பனிப்போர்வைதான். மேல் கம்பியிலிருந்து ஒரே எம்பு எம்பி விடவேண்டியதுதான். 

மிலியும் அவள் அப்பாவும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். ச்சே இதுதான் இந்த வாழ்வின் பிரச்சனை எங்கே பார்த்தாலும் மனிதர்கள் தனிமை என்பதே இல்லாத சபிக்கப்பட்ட ஓர் உலகம். சூசைட்பாயிண்ட் என்று போர்ட் வைத்த புத்திசாலிகள் இங்கே கூட்டத்தைக்கூட்டி பூ விற்கிறார்கள், காரெட் விற்கிறார்கள், கூட்டமும் வந்து வேடிக்கைப் பார்க்கிறது. அடுத்தவன் சாவது உயிரோடிருப்பவர்களுக்கு வேடிக்கையாகிப்போன கேவலம். 

இந்த இடம் தனிமையிலல்லவா நிறைந்திருக்கவேண்டும். தன்னிஷ்டமாய் தைர்யமாய் உயிர் துறக்க முடிவெடுப்பவர்கள் வருமிடத்திற்கு தனிமையும் அமைதியும் எவ்வளவு முக்கியம்?  

”மிலி கோ கெட் சம் மோர் ஃப்ளவர்ஸ்..”

மிலி அவள் அப்பாவின் கையிலிருந்து ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு சில அடி தூரங்கள் தாண்டி பூ விற்றுக்கொண்டிருப்பவர்களை நோக்கி நடந்து சென்றாள். மீண்டும் இங்கே பூக்களை எறியப்போகிறார்கள். யார் இறந்தது? இந்தக் குழந்தையின் அம்மாவா? அல்லது வேறு யாராவதா? இன்று என்ன நினைவு நாளா? உயிரோடிருக்கும்போது என்றைக்காவது அந்தப்பெண்ணிற்கு பூக்கள் கொடுத்திருப்பார்களா? அல்லது இறந்து போனவருக்கு பூக்கள் பிரியமா?இங்கே எறிந்தால் மட்டும் இந்தப் பூக்கள் அவரை அடையுமா? இந்தப்பூக்களை ஏன் வீணாக்குகிறார்கள்? அது சரி இல்லையென்றால் மட்டும் இந்தப் பூக்களென்ன ஜீவித்தா இருக்கப்போகிறது. அட! ஆமாம். சில வருடங்களுக்கு இவை அப்படியே இருக்குமென்றல்லவா சொல்லி விற்கிறார்கள்.

நானும் மிலியைப் பின் தொடர்ந்து சென்றேன் வேறு கடையில் அழகான நிறங்களாய் தேர்ந்தெடுத்து ஒரு கொத்து பூக்கள் வாங்கினேன். சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். பூ விற்றவன் என்னைப் பார்த்து சிரித்தான். 

“என்ன சார் சூசைட் பண்ணிக்கப்போறீங்களா?” எனக்கு திடுக்கென்றது. 

“எப்படி? ஐ மீன் ஏன் கேக்கறீங்க? ”

”எத்தினிப்பேரப் பார்த்திருப்போம். எல்லாம் ஒரு கெஸ்தான். ”

நான் மீண்டும் சூசைட் பாயிண்டைப்பார்த்தேன். மிலியின் அப்பாவும் மிலியும் மீண்டும் பூக்களை விசிறி எறிந்துவிட்டு மெல்ல திரும்பிக்கொண்டிருந்தனர். 

இல்லீங்க. சூட்டிங். லொக்கேஷன் பாக்க வந்தேன் அப்படியே வசனம் டெவலப் பண்ணலாம்னுதான். ஆனா கரெக்ட்டா மொகத்தப் படிக்கிறீங்க.” சிரித்துவிட்டு காசைக்கொடுத்துவிட்டு லாட்ஜை நோக்கி நடந்தேன். இது இந்த இடம் தற்கொலைக்கு லாயக்கே இல்லாத இடமென்று எனக்குத்தோன்றியது. ஒருவன் இறக்கப்போவதை கெஸ் செய்யுமளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இடம் நான் விடுதலையாக ஏற்ற இடமல்ல. 

ஒரு சிகரெட் பற்றவைக்க நின்றபோது எதிரில் போன கூட்டத்தில் ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டு போனான்

”மதிகெட்டான் சோலைன்னு ஒன்னு இருக்குங்க தொப்பிதூக்கு பள்ளத்துக்கு போற வழில பார்க்கலாம். அடர்ந்த காடு உள்ளார போனா அவ்ளோதான். போனவங்க யாரும் திரும்பி வந்ததே இல்லை. அவ்ளோ டேஞ்சர்...”

ஸ்ஸ்ஸ்ஸ் சிகரெட்டின் முதல் புகையை ஆழ உள்ளிழுத்தேன். 

மீண்டும் வேறொருவன் குரல் கேட்டது ”அவ்ளோ டேஞ்சரா உங்களுக்கெப்படிங்க தெரியும் ?”

”போர்டே வெச்சிருக்கான் சார் கவர்ன்மெண்ட்டு. இதோ இதுமாதிரியே”

நின்று திரும்பி சூசைட் பாயிண்ட் என்று எழுதப்பட்ட பெயின்ட் உதிர்ந்துபோன அந்தப் பலகையை நான் வெறுப்பாய் பார்த்தேன். இதென்ன அறிவிப்பா? அழைப்பா? 

எங்கோ அந்தப் பாடல் கேட்டது

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

த்தூ.. சிகெரெட்டைக் கீழே போட்டு மிதித்துவிட்டு, நடக்கத்துவங்கினேன்.



.

மந்திரப் புன்னகை - இது விமர்சனமா??

.

என்ன பலா நைட்டே படத்தப் பத்தி ரிவ்யூ எழுதிடுவீங்கதானே? கேட்ட பிரபல பதிவரைப் பார்த்து திரும்ப சொன்னேன் ஏன் படம் பார்த்தா ரிவ்யூ எழுதனுமா?

இல்ல அண்ணன் உண்மைத்தமிழன் கஷ்டப்பட்டு எல்லாரையும் கூப்பிட்டு முக்கியமா பதிவுலக நண்பர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ அரேஞ் பண்ணி இருக்காரு, குடும்பத்தோட வரலாம்னு ரொம்ப முயற்சி எடுத்திருக்கார் அதனால..

ஹலோ நானா அவர கஷ்டப்படச்சொன்னேன்? ஸ்பெஷல் ஷோ போடச்சொன்னேன்? கஷ்டப்பட்டு படம் பார்க்க வந்திருக்கனே நான் பாவமில்லையா?? சரி அத விடுங்க ஏதோ டிசம்பர் 15ம் தேதி நீங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கப்போறீங்களாமே? 

ஏங்க சத்தமா பேசறீங்க?

ஏம்ப்பா கல்யாணம்தானே பண்ணிக்கப்போற லிவிங்டுகெதர் இல்லையே? அப்படியே இருந்தாலும் சத்தமா கேக்கறதுல என்ன தப்பு? மெதுவா கேட்டாலும் சத்தம் வராதா என்ன? 

இங்கிதமே தெரியல பலா உங்களுக்கு! 

இங்கிதம்னா என்னங்க? கல்யாணம் செஞ்சிக்கப்போறத ரகசியமா செய்யறதா? அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுக்காவது தெரியுமா? 

ஏய்ய்ய்ய்ய்ய்ய் என்று அந்தப் பிரபலப் பதிவர் அருவா தூக்குவதற்கு முன்பாக கட்.

இந்தப் படம் இது போன்ற ஒரு கேரக்டரைச் சுற்றித்தான் ஆரம்பிக்கிறது. உள்ளதை உள்ளபடியே பேசும், பேச விரும்பும் நாயகன். முகமூடிகள் தேவைப்படாத, அதை மாட்டி யோக்கியன் என்று காண்பித்துக்கொள்பவரைக் கேள்விகேட்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். முதல் பாதி முழுவதும் முகமூடிகளுடன் படம் பார்ப்பவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துகொண்டே வரும் வசனங்கள். கூடவே வழக்கம் போல சந்தானம் :))

இது போன்ற மனிதர்களைக் காண்பது அரிது. ஒருவேளை பைத்தியம் என்று சொல்லி எங்காவது சங்கிலி போட்டு கட்டிவைத்திருகிறார்களோ என்னமோ? ஆனாலும் பாருங்கள் இது எல்லோருக்குள்ளும் நிகழும் ஒன்றுதான். நீயா நானாவில் ஒரு ஷோவில் பார்த்திருக்கிறேன் அழகான பெண்கள், ஆண்கள் பெண்களைப் பார்த்து கேள்வி வரும் நீங்கள் ஏன் அழகாக உடை உடுத்துகிறீர்கள்?. பதில் பசங்கள அட்ராக்ட் பண்ணத்தான். 99% இது உண்மையாக இருக்கலாம் ஆனால் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உத்துப் பார்த்தால் போச்சு! ஆணின் ஜெண்டில்மேனை பெண் உடைப்பாள், பெண்ணின் கேரக்டரை ஆண் உடைப்பான். அழகாய் நிற்கும் பெண்ணின் அல்லது ஆணின் உடையை ஹேர் ஸ்டைலை சூப்பரா இருக்குங்க, யூ லுக் பியூட்டிஃபுல் என்று சொல்ல முடியவே முடியாது. ஆனால் மனசு சொல்லிவிடும். மனசு சொல்வதை வாயாலும் சொல்கிறார் ஹீரோ. அதிலும் வழக்கமான க்ளிஷேக்கள் உடைக்கப்பட்டு படம் பைபாஸில் பயணித்து மேம்பாலம் ஏறி நகர நெரிசலில் சிக்கப்போகும் முதல் சிக்னலில் இடைவேளை.

இரண்டாம் பாதியில் அந்த கேரக்டரை காம்ப்ரமைஸ் செய்து வழக்கமான சினிமா க்ளிஷேக்களை நிரப்பி ஜஸ்டிஃபிகேஷன் செய்திருக்கிறார்கள்.   


படத்தில் (என்னை) கவர்ந்த அம்சங்கள்:

பலரின் முகங்களைக் காட்டும் டைட்டில்

வசனம்

சந்தானம். 

அல்ட்ரா ஸ்லோமோஷன் பேக்கிரவுண்டில் அந்தப் பாடல்.

கரு. பழனியப்பன் நடிப்பு - எறும்பு ராஜகோபால் கூட கேட்டார் ரொம்ப ஃப்ளாட்டா நடிச்சிருக்காரே. ஆனால் இந்தப் படத்தில் அந்த கேரக்டருக்கு வேறு யாரைப் பொருத்திப்பார்ப்பது? எல்லா பிரபல நடிகர்களின் க்ளிஷேக்களும் நமக்கு மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில் அவர் நடித்திருப்பது சரிதான். விக்ரம் என்றார் மணிஜீ (ராவண வதமே போதும்) இதற்கு படத்தில் சந்தானம் சொல்லும் ஒரு வசனம் பொருந்தும். பில்டிங் டிசைன் பற்றிய ஒரு கூட்டத்தில் டிசைன் டிஃப்ரெண்ட்டா இருக்கனும் என்று சொல்லும்போது சந்தானம் சொல்வார் சார் எல்லாரும் இப்ப டிஃப்ரண்ட்டாதான் கட்டறாங்க நாம சாதாரணமாவே கட்டுவோம் அதுவே டிஃப்ரெண்ட்டா தெரியும். 

முதல் பாதி கேரக்டரை ஏன் டெவலப் செய்து படம் முழுதும் காட்டமுடியவில்லை? எதற்கு வழமையான ஒரு காம்ப்ரமைஸ் என்று யோசிக்கும்போது சினிமாவின் ஃபார்முலாக்களும் வியாபார குண்டு சட்டிகளும் நினைவுக்கு வருகிறது. அரைத்த மாவை அரைக்கும் மொக்கைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் பதிவர்களாலேயே நிரம்பியிருந்த அந்தத் திரை அரங்கம் சிரிப்பால் பல முறை அதிர்ந்தது அதற்கு சாட்சி.

ஜெட்லி கார்னர்”

ரெஜிஸ்டர் மேரேஜ் பதிவர் ஹீரோயினை திரையில் பார்த்துவிட்டு என் காதில் கேட்டார், இதுதான் தேவதையா? நான் சொன்னேன் எல்லா வதைகளும் தே என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது.

நெருடல் : அவ்ளோ பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டில் ஒரு பீகாரியைக் கூட காணமுடியவில்லை.!!

அண்ணன் உண்மைத் தமிழன் தயாரிப்பாளர் கெட்டப்பில் கெத்தாக வந்திருந்தார். பதிவர்கள் குடும்பத்தோடு வரவில்லையே என்று குறைபட்டுக்கொண்டிருந்தார்.

வழக்கம்போல பதிவர் சந்திப்பும் நடந்தது. :))


அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் பதிவர்களை மதித்து, அழைத்து திரையிட்ட கரு.பழனியப்பன் அவர்களின் அன்பிற்கும், நன்றிகள்! :))


.

வெண்ணை (0.14 Blood Culture)

.


மீடியம்

எள்ளுப்பாட்டி எழுந்துவந்தாள்..

”என்னடா பேராண்டி சவுக்கியமா?” என்றாள்..

”சவுக்கியம் பாட்டி” என்றேன்.

“குழந்தைகள் எல்லாம் சவுக்கியமா?” என்றாள்.

“குழந்தைகளா, குழந்தை ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு” என்றேன்..

”என்னடா கருமாந்திரம் இது? பத்து குழந்தைகள் பெத்துக்கக்கூடாதா? ஒரே குழந்தைய பெத்துக்கிட்டு இதுக்குப்பேரு குடும்பமாடா? ”

”சரி விடு பாட்டி. வீட்டுக்குள்ள வா”

”இருடா கொல்லைல போய் கால் கழுவிட்டு போகலாம்..”

”கொல்லையா? இது அடுக்கு வீடு பாட்டி. ஆறாவது மாடில வீடு.”

”அப்ப மலஜலம் கழிக்கறதுக்கு ஆறுமாடி ஏறி இறங்கனுமாடா?”

”இல்ல பாட்டி வீட்லயே அட்டாச்டா பாத்ரூமும், டாய்லெட்டும் இருக்கு..”

”அட கிரகம் பிடிச்சவனே வீட்டுக்குள்ளயே வெளிக்குப் போகனுமா? ஏண்டா புத்திகித்தி கெட்டுப்போச்சா? நாறாது? வியாதி வராது? ”

”அய்யோ நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் பாட்டி? அதெல்லாம் பைப் வழியா காவாய்ல விட்டுடுவோம்”

”சரி வா ஆத்துக்குப் போய் குளிச்சிட்டு துவைச்சிட்டு தண்ணி எடுத்துக்கிட்டு வரலாம்..”

”அதெல்லாம் வேணாம் பாட்டி இங்க ஆத்துல தண்ணி இருக்காது, அப்படியே இருந்தா அது கழிவு நீர் ஓடும் ஜீவனில்லாத நதியா இருக்கும்.”

”ஓ நீங்க வீட்டுக்குள்ள கழிக்கறத, ஆத்துக்கு அனுப்பறீங்களா? நாசமாப் போச்சு, அப்ப குடிக்கற தண்ணி?

 ”அது பைப்ல வரும். இதோ இந்த மெசின்ல போய் சுத்தப் படுத்தி அப்புறம் குடிக்கவேண்டியதுதான். துவைக்க இந்த மெசின்ல போட்டா போதும் துவைச்சி காய வெச்சிக்கொடுத்துடும்.”

”அப்ப சாப்பாடு..”

”இதோ இந்த ஐஸ் பெட்டில இருக்கு, அத இந்த பெட்டில வெச்சா சூடாக்கி சாப்ட்டுடலாம். எல்லாம் கரண்ட்டு”

”அப்ப அது போனா விறகா?”

”அதெல்லாம் எதுக்குப் பாட்டி, இதோ கேஸ் இப்படி திருகினா எரியும். சமைச்சிக்கிலாம்.”

”தலை சுத்துதுடா பேராண்டி, நாங்கல்லாம் எப்படி வாழ்ந்தோம். இப்படி சீரழிஞ்சு கெடக்கறீங்களே? ”

”சரி அப்ப வீட்ல என்னதான் பண்றீங்க? ”

”இதோ இந்தப் பெட்டில சீரியல் பார்ப்போம் பாட்டி..”

”சீரியல்னா? ”

”அதான் குடும்ப கதைங்க..”

”ஓஹ் அடுத்தவீட்டு வம்ப திண்ணைல உக்காந்து நாங்க பேசின பேச்சு மாதிரி இப்ப இந்தப் பெட்டில வந்துடுதா?”

”ஆமாம் பாட்டி. ”

”சரி எங்க உம் பொண்டாட்டி.”

”வேலைக்குப் போயிருக்கா பாட்டி.”

”என்னடா இது. பொம்பள வேலைக்குப் போறதா? அதுவும் தனியாவா?”

”இல்ல பாட்டி அவங்க ஆபீஸ்ல வேன் வரும் கூட வேலை செய்றவங்க எல்லாரும் அதுலயே போய் வந்துடுவாங்க. ”

”இருட்டிடுச்சே, இன்னுமா வரல.”

”இல்ல பாட்டி இப்பத்தான் போயிருக்கா. காலைலதான் வருவா?”

”என்னது ராத்திரி வேலைக்குப் போறாளா? அதும் ஆம்பளைங்க கூடவா? நீ புத்தி தெளிஞ்சிதான் பேசறியா?”

”இதுல என்ன தப்பு பாட்டி. உங்க காலம் வேற ”

”என்னடா எழவு எங்க காலம் வேற? நாங்க வாழ்ந்ததுக்கும் இப்ப நீங்க வாழறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா? ”

”சரி வா பாட்டி ஒரு நட கோவிலுக்குப் போய் வரலாம்.”

”எனக்கு தல சுத்துதுடா? இப்ப என்னால நடக்க முடியாது.”

”அட நடக்க வேண்டாம் பாட்டி. வண்டிலயே போய் வந்துடலாம்.”

”எவ்ளோ தூரம்ப்பா?”

”நடக்கற தூரம்தான்”

”காசி ராமேஸ்வரத்துக்கே நடந்துதானே போய் வந்துண்டிருந்தோம். இப்ப நடக்கறதூரத்துக்கே வண்டியா?சரி உன் புள்ள எங்க?”

”புள்ள இல்ல பாட்டி பெண் குழந்த”

”அடப்பாவி பெத்தது ஒண்ணு அதும் பெண்ணா? என்ன வயசாகறது எங்க போயிருக்கா?”

”அதுல என்ன பாட்டி? 10 வயசாகுது. படு சுட்டி. குட் டச் பேட் டச் க்ளாஸுக்கு போயிருக்கா?”

”அப்படின்னா ?”

”அதாவது பெண் குழந்தைகிட்ட யாராவது தப்பா தொட்டு வம்பு பண்ணாம இருக்க, எங்க தொட்டா தப்பு, சரின்னு சொல்லிக்கொடுக்கற க்ளாஸ். அப்பதானே தனியா வெளில போகும்போது பாதுகாப்பா இருக்க முடியும்.”

”ஹும்ம் தலையெழுத்து! அந்தக் காலத்துல நாங்க வேத்து ஆம்பளைங்க முகத்தக்கூடப் பாக்க மாட்டோம்.. போகட்டும் வயசு பத்தாயிடுச்சே? நல்லது அப்ப சீக்கிரம் கல்யாணத்தப் பண்ணவேண்டியதுதானே?”

”பாட்டி? என்ன பேச்சு இது 10 வயசு கொழந்தைக்கு கல்யாணமா?”

”என்னடா அதிர்ச்சியாகற? எனக்கெல்லாம் 8 வயசுலயே நடந்து போச்சு இதுவே ரெண்டு வருஷம் தாமசம் தெரியுமில்ல.”

”போகட்டும் எங்க உங்கம்மா, அப்பா?”

”ரெண்டுபேரும் ஊர்ல இருக்காங்க? ”

”ஏண்டா நீ இங்க வெச்சிக்க வேண்டியதுதானே? அதான் வீடு பெரிசா இருக்கே?”

”என் பொண்டாட்டிக்கு தனிக்குடித்தனம்தான் பிடிக்கும் பாட்டி.”

”ஓஹோ அப்ப கூட்டுக் குடும்பத்தையும் சாகடிச்சாச்சா? சரி அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் நம்ம ஜாதி ஜனங்கதானே?”

”பாட்டி என்ன இது ஜாதி எல்லாம் இப்ப ஒரு விஷயமே இல்ல, அதெல்லாம் அந்தக்காலம். இங்க எல்லாரும் சமமாத்தான் இருக்கோம்.”

”என்ன எழவுடா இது? பெத்த அம்மா அப்பாவ ஊர்ல குடிவெச்சிட்டு வேத்து மனுஷங்க கூட தனித்தனியா கதவு வெச்சிக்கிட்டு கூட்டுக்குடித்தனமா? நாசமாப் போச்சு..”

”ஆமா அப்பவே கேக்கணும்னு நெனெச்சேன் இதென்ன உடுப்பு? வேட்டி கட்டறதில்லையா?”

”பேண்ட் டீசர்ட் பாட்டி.. இதான் இப்ப எல்லாரும் போடறோம்.”

”என்னடா நீ தாட்டியா இருக்க கொடில மெல்லீசா தொங்குது. ”

”அது பொண்டாட்டியோடது பாட்டி ..”

”என்னது அவ பொடவை கட்டறதில்லையா? அவளும் உன்னமாதிரியே உடம்ப பிடிக்கறமாதிரியா ட்ரெஸ் போட்டுண்டு ராத்திரில ஆம்பளைங்க கூட வேலைக்குப் போறாளா? விளங்குமாடா?”

”அய்யோ கலி முத்திப்போச்சுடா கலி முத்திப்போச்சு. ஸ்ஸ் முடியலையே ஆண்டவா. இதென்னடா தண்ணி கலங்கி இருக்கு எனக்கு ஒரே தாகம் கொஞ்சம் குடிக்கட்டுமா? ”

”அய்யோ பாட்டி அது விஸ்கி அது வேண்டாம் நான் உனக்கு மினரல் வாட்டர் தரேன்.”

”விஸ்கியா அப்படின்னா.. ம்ஹ்ஹ் அய்யோ இதென்னடா சாராயம் மாதிரி இருக்கு?”

”அது வந்து சாராயம் இல்ல பாட்டி விஸ்கி சோசியல் ட்ரிங்க். அதாவது சளி பிடிக்கும்போது குடிக்கறதுக்காக..”

”அய்யோ அய்யோ அய்யோ ஆமா அதென்னடா எழவு சத்தம். ”

”மூணாவது அப்பார்ட்மெண்ட்ல ஒரு ஆளு இறந்துட்டார் பாட்டி.”.

”ரொம்ப வயசானவனோ?”

”இல்ல பாட்டி சின்ன வயசுதான். மூணு மாசம் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு.”

”பாவம் அவம் பொண்டாட்டி உடங்கட்ட ஏறுவாதானே ?”

”என்ன பேச்சு இது பாட்டி? அவங்க அடுத்த கல்யாணம் பண்ணிப்பாங்க. ”

”போச்சு போச்சு எல்லாம் போச்சு எப்படியெல்லாம் கட்டிக்காத்த கலாச்சாரம் நாசமாப் போச்சு..”

”அப்படியெல்லாம் இல்ல பாட்டி நாங்களும் கலாச்சாரத்தக் கட்டிக் காக்கறோம்.”

”அப்படி என்னடா காக்கறீங்க?”

”லிவிங் டு கெதர்னு ஒரு வியாதி பாட்டி.”

”அதென்ன வியாதி?”

”அதாவது ஆணும் பெண்ணும் கல்யாணமே செஞ்சிக்காம ஒரே வீட்ல ஒண்ணா சேர்ந்து வாழறது. அது தப்புன்னு ஒரு பெரிய போரட்டம்”

நல்லகாலம் ஆம்பளையும், ஆம்பளையும், பொம்பளையும், பொம்பளையுமா கல்யாணம் பண்ணிக்கறாங்கன்னு சொல்லாம இருந்தியே”

”அதெல்லாம் எப்பவோ சகஜமா இருக்கு பாட்டி. ”

”அட நாசமாப் போனவனே, ஓஹோ இப்ப புரியிது அதாவது என்னால முடியாதது உன்னால முடிஞ்சிதப் பார்த்த கோபம் எனக்கு வந்தமாதிரி, உன்னால முடியாதத, வேறொருத்தன் செய்யிறப்ப உனக்கு கோவம் வருதா? இப்ப புரியிதா ஏன் பொண்ணுக்கு 10 வயசில கல்யாணம் பண்ணச்சொல்றேன்னு? அப்படிப் பண்ணிவெச்சா ஏண்டா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழப்போறாங்க? இதுக்குப் பேரு குடும்பமாடா? கலாச்சாரமாடா? எப்படி இருந்த குடும்ப வழிமுறை நம்மளோடது சோரம் போயிட்டியேடா பேராண்டி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல நீங்க அழிச்ச கலாச்சாரத்த இப்பவாவது மீட்டிடுங்க”

"ஏய் கிழவி கலாச்சாரம்னா என்னான்னு தெரியுமா? என்று ஒரே போடாக அருகிலிருந்த கம்பியால் வாயில் அடித்தேன். "

”என்னையாடா அடிக்கிற நாசமாப் போறவனே!, நீயும் கொள்ளுத்தாத்தாவா வருவடா? அலைவடா? அன்னிக்குத்தெரியும்டா என் கலாச்சார வேதனை”

கதவருகே நின்று பார்த்துக்கொண்டிருந்த மனைவி "ஹனி இப்ப நான் செஞ்சது சரிதானே இதுக்குத்தான் இந்த கெழங்கட்டைகளை எல்லாம் ஹோம்லயோ ஆஸ்ரமத்லயோ சேர்த்துடனும். ப்ளடி ஹெல். செத்துப்போயும் வம்பு பண்ணுதுங்க" என்றாள்.

”சரி விடும்மா. மீடியம் மூலமா வந்த வினை”

கையைப் பிடித்துக்கொண்டிருந்த பெண் குழந்தை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. என்னிடம் ஓடி வந்து ”ப்ளீஸ் டாடி அவர் கல்சர் பத்தி ஒரு எஸ்ஸே எழுதி தாங்க டாடி நாளைக்கு க்ளாஸ்க்கு எடுத்துக்கிட்டுப் போகணும்.”

”அதுக்கென்னம்மா” என்று கூகிளில் தேடத்துவங்கினேன்...!



.

சிவோஹம்..

மேலே போர்த்திய காவித்துணி படபடத்துக்கொண்டு இருந்தது. 

காசி. 

கங்கையின் படித்துறை. 

பிணங்கள் எரியாத ஓரிடத்தில் அமைதியாய் நீரின் ஆக்ரோஷத்தைப் பார்த்தபடியே அமர்ந்துகொண்டிருந்தேன். நன்கு வளர்ந்த என் தாடியும், கேசமும் எதிர்க்கமுடியாது காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நீரின் வேகத்தில் சுழல்களையும் அலைகளையும் கிளப்பியவாறு செல்லும் கங்கையை பார்த்துக்கொண்டே இருந்தேன். தூரத்தில் ஒரு பெரிய மீன் மூழ்கி எழுந்து விளையாடிக்கொண்டிருந்தது. குளிர் பழகிவிட்டிருந்த உடல். நடுங்கா விரல்களால் மெல்ல என்னுடைய பையைப் பிரித்தேன். ஐந்து ஐந்தாகக் கட்டப்பட்ட சுள்ளிகள் கிட்டத்தட்ட ஆறு அங்குல நீளம். ஏதோ ஒரு யாகத்திற்கு போயிருக்கவேண்டிய சமித்துகள் அவை. ஒவ்வொரு கட்டையும் எடுத்து ஒன்றோடு ஒன்றாக இணைத்து கட்டினேன். வயிற்றில் வைத்துப் பார்த்தேன். சரியாகப் பத்து கட்டுகள். ஒவ்வொன்றிலும் ஒரு சங்கேதக் குறியீடு இருந்தது. அது ஒவ்வொன்றும் ஒரு வாக்குறுதியின் வேறு வடிவம். 

கணக்கிட நான் யார்? என்ற கேள்வியில் மெதுவாய் சுள்ளிக்கட்டுகளை உள்ளே வைத்தேன். இடுப்புத் துணி களைந்து, மேல்துணி மட்டும் உடுத்தி கங்கையில் இறங்கினேன். உடலுள்ளே உஷ்ணமும் வெளியே மரக்கும் குளிருமாய் தலை நனைத்து மூழ்கி, மூழ்கி எழுந்தேன். குளிர் நீங்கி ஒரு ஏகாந்த வெப்பம் உடல் முழுவதும் பரவி இருந்தது. ஏதோ ஒன்று அருகில் மிதந்து சென்று கொண்டிருந்தது. நீரின் வேகம் நீயும் வாயேன் என்றழைப்பதுபோல் இழுக்கத்துவங்கிய நேரம், நீரை விட்டு மெல்ல எழுந்தேன். பையை எடுத்துக்கொண்டு துணியைப் போர்த்திக்கொண்டு மெல்ல காசியின் குறுகிய தெருக்களில் நடக்கத்துவங்கினேன். 

நாட்டின் பல இடங்களிலிருந்து வந்தவர்களால் பலவிதமான மொழிகள் பேசப்பட்டு இறைச்சலாய் இருந்த இடத்தினை விட்டு வேகமாய் நகர்ந்துவிடவேண்டி நடையைத் துரிதப்படுத்தினேன். போகவேண்டிய இடத்திற்கான வழி தெளிவாய் என்னால் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தது. உள்வாங்கப்பட்டிருந்தது. இறக்கும்தருவாயிலும் என்னால் எழுத்து பிசகாமல் சொல்ல இயலும். ஏனெனில் சூரியனின் முதல் ஒளி விழும் நேரம் நான் அங்கிருக்கவேண்டும். நாள் கணக்கு முக்கியமல்ல ஆனால் நேரம் முக்கியம். மீண்டும் சமித்துகள் எனப்படும் அந்தக் குச்சிகளை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். நடையைத் துரிதமாக்கினேன். வெகுதூரப் பிரயாணத்திற்கு மனம் மெல்லத்தயாராகியது.

”நில்லுங்கள்” என்ற குரல் வந்த திசையை நோக்கினேன். 

”ஆனந்த பவனத்திலிருந்தா வருகிறீர்கள்?” 

”இல்லை. வாரனாசி” என்றேன். 

சிரித்தவாறே ”நானும் அதைத்தான் கேட்டேன்.” என்றவரை உற்றுப் பார்த்தேன். நான் தமிழென்பது இவருக்கெப்படித்தெரியும் என்ற ஆச்சர்யத்தை அவர் கவனித்திருக்கக்கூடும். 

”உங்கள் நிறமும் உடல்வாகும் நீங்கள் தமிழ் பேசுபவர் என்பதாக எனக்குப் பட்டது” என்றார். நான் வெறுமனே தலையாட்டிவிட்டு விடைபெறும் தோரனையில் நடக்க முற்படும்போது, 

”என்ன அவ்வளவு அவசரம்? ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? பார்த்தால் பசியுடன் இருப்பவரைப் போல் தோன்றுகிறது.” 

நான் பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து ஓடும் கங்கையை வெறித்துப் பார்த்தேன். 

”அஹ்ஹஹ் அது நீர். ஒரே பூதம். நானும் நீயும் பஞ்ச பூதம். சலனத்துடன் மூன்று பூதங்களும், சலனமில்லா இரண்டு பூதங்களுமாய் எங்கே கட்டற்று காட்டாறைப் போல செல்வது? தடைகள் வரும். தடுப்போர் வருவர். கேள்விகள் வரும். நாவே நெருப்பின் அங்கம். ஜ்வாலையைப் போலவே அதன் தோற்றம். வெறும் நீராய் காட்டாறாய் அடங்கமாட்டாமல், கட்டுப்பாடுகளற்று ஆர்பரித்து எங்கே செல்லமுடியும்? கடலுக்குத்தானே? ”

மீண்டும் அவர் சிரித்தார்.

புரியாத குழப்பத்திலும் நான் கங்கையைப் போலே இருந்திருந்தால் ஒரு தடையுமின்றி என் வழியில் சென்றிருக்கலாமே என்ற என் உள் மன எண்ணம் இவருக்கெப்படித் தெரிந்தது என்ற வியப்பினாலும் மெல்ல அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.

”வா. சற்று ஓய்வெடுப்போம். உணவு எடுத்துக்கொண்டு பிறகு பேசலாம். ”

அவர் பையிலிருந்து உணவெடுப்பார் என்று பார்த்தால் சில இலைகளை எடுத்தார். ”ம் சாப்பிடுங்கள், எல்லாம் மூலிகைகள். பசி எடுக்காது. களைப்பு தெரியாது. குளிர் தெரியாது.”

ஏதும் சொல்லாது அவர் தந்ததை உண்டேன். அவர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு ”வாருங்கள் போகலாம்” என்று எழுந்தார். என்னுடைய தயக்கத்தைப் பார்த்து ”எனக்குத் தெரியும் நானும் அங்கேதான் செல்கிறேன். முதல் சூரிய ஒளி தரிசனம்தானே இலக்கு?” நான் ஆச்சரியத்துடன் பார்த்த பார்வையில் அவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. 

”அது ஒன்றும் ரகசியமில்லையப்பா. அதுவே பிரதானம். பலமுறைகண்டாலும் திகட்டாத பேரானந்தம். வா போகலாம்.”

பல நாட்கள் ஒன்றும் பேசாமலேயே நடந்தோம். பெருங்குரலெடுத்து அவர் பாடும்போது மட்டும் என்னை அறியாமல் கண்ணீர் பெருகும். மற்றபடிக்கு பெரும் சலனங்கள் ஏதுமின்றி அவரைப் பின் தொடர்ந்தேன்.

பொழுதுபுலரப்போகும் ஒரு நாளின் நடைப் பயணத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஒரு குறிப்பிட்ட திசையில் அவரின் கண்கள் நிலைத்தது. என்னைப் பார்த்தார். ”தரிசனத்திற்குத் தாயாராகு” என்றார். என் உடல் நடுங்கத்துவங்கியது. 

அவர் என் அருகில் வந்தார். 

“கேட்கவே மறந்தேன். உன் பெயர் என்ன?” என்றார். 

“காசியிலேயே விட்டுவிட்டேன் எனவே பெயரேதும் இல்லை” என்றேன். விசித்திரமாக என்னைப் பார்த்தவர் சட்டென்று நினைவுவந்தவராக ”இதோ முதல் ஒளி விழும் நேரம், கவனத்துடன் நில், பிசகினால் ஒன்றும் மிஞ்சாது. ம்ம் நேரே பார்” என்றார். சூரியனின் பொன்னாலான ஒளியில் அது தகதகத்தது. என்ன இதுதானா? ஹர ஹர மஹாதேவ என்று அவரின் குரலில் கைலாயதரிசனம் வெண் பனி போர்த்திய மலையில் தங்கம் வேய்த்ததுபோல அதன் ஒளிச் சிதறலில் நெஞ்சு பீறிட்டுக்கொண்டு ஒரு கேவல் வந்தது. 

“அது அப்படித்தான் முதல் முறை பார்க்கும்போது மூச்சடைக்கும். வேறெதுவும் நினைக்காதே. தலைக்குமேல் கைகள் கூப்பி சிவனைத் தொழு” என்றார். சற்று நேரத்தில் நிலைக்கு வந்தேன். ”சரி உன் பெயரைத்தான் காசியில் விட்டாய் உன் தந்தையார் பெயரையாவது சொல்?” 

”மூன்றாம் இராசேந்திர ”


”இராசேந்திர என்னப்பா சொல்கிறாய்.”


”சோழம் சோழம் சோழம்” என்றேன். மெதுவாய் விளிம்பில் கை கூப்பியபடியே பள்ளத்தாக்கில் சரிந்தேன். 


சிவோஹம்!


.

இவரே பதிவுலக பிரம்மா!!


.


டிஸ்கி : 1 - இது சூர மொக்கை எனவே தைரியமானவர்கள் மட்டும் தொடரவும், இளகிய மனது உள்ளவர்கள், உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல இயலாதவர்கள், அதி பயங்கர எதிர்பார்ப்பு உள்ளவர்கள், எல்லாமே நாந்தான் என்ற எண்ணம் உள்ளவர்கள்.....


ஒன் ஸ்டெப் பேக் & அபவுட் டர்ன் இது உங்களுக்கானது அல்ல. 



ஃபாலோ மீ>>>>>>>>>>>>>>>>>>>>> நாம பிரம்மாவ மீட் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள் புரிந்துகொள்ளலாம்.



முதல்ல நான் எழுதின பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வரும் வார்த்தைகளுக்கான அர்த்தம் மொத்த பதிவுலகும் என்பதே.. அது எழுதினதக்கப்புறம் எனக்கு வந்த ஒரு கனவு. அதில் ஒரு ஒளி வெள்ளம், அந்த ஒளியின் ஒலி கேட்ட கேள்வி பதில்கள்தான் கீழே இருப்பது... 


பதிவுலகில் நீ யார்?

நான் ஒரு சாதாரண பதிவர்ங்க.

அப்ப பிரபல பதிவர் இல்லையா?

சத்தியமா இல்லைங்க.

அப்படியா? சரி பிரபலம் என்றால் என்ன?

ப்ராப்ளம் பண்ணாம இருக்கறது, ப்ராபளத்திலேயே இருக்கறது, ப்ராப்ளமாவே இருக்கறது, ப்ராப்ளத்தப் பத்தி எழுதறது, ப்ராப்ளம்....

போதும். போதும். இத்தினி ப்ராப்ளம் இருக்கும்போது ப்ரம்மாக்கு ஏன் கடிதம் எழுதின? 

இல்லைங்க பதிவுலகத்துல ப்ராப்ளம் அதிகமாயிட்டே போகுது. எது சொன்னாலும் ப்ராப்ளமக்கிடறாங்க. ப்ரம்மா யார்னு தெரிஞ்சா எனக்கு ஒரு  சப்போர்ட்டு, போக பஞ்சாயத்து பேச வசதியா இருக்குமேன்னுதான் ஒரு நன்றிய சொல்லிட்டு ப்ராப்ளத்த பின்னாடி சொல்லலாம்னு..

உங்களுக்குன்னு சங்கம் ஏதும் இல்லையா?

அந்தப் ப்ராப்ளத்த ஏன் கேக்கறீங்க?

சரி மொத்தம் எவ்ளோ ப்ராப்ளம் இருக்கு? எத்தினி பஞ்சாயத்து நடந்திருக்கு? 

அய்யோ அதுக்கெல்லாம் ஏதுங்க கணக்கு வழக்கு? பொழுது போய் பொழுது வந்தா பாலிடால்தான்..

என்னது பாலிடாலா?

ச்சே பஞ்சாயத்துதான்னு சொல்லவந்தேன்..

இன்னிக்கு வரைக்கும் பஞ்சாயத்துக்கு ப்ரம்மா வந்திருக்காரா?

இல்லீங்க. அதுக்குத்தான் ஒரு முயற்சி பண்ணலாமேன்னு..

முயற்சியில் பிரம்மா வந்தாரா?

இல்லீங்க திருப்பியும் ப்ராப்ளம்தான்..

என்னா ப்ராப்ளம்?

நாந்தானேய்யா அந்த ப்ரம்மான்னு என்கிட்ட சிலர் கேட்டாங்க.

ம்ம்..

இவரா? இல்லை அவரா? அப்படின்னு பல பேர் கேட்டாங்க..

ம்ம்..

யோவ் நீயே ப்ரம்மான்னு சொல்லிக்கறதுக்கு வெக்கமா இல்லை? ன்னு வம்பிக்கிழுத்தாங்க சிலர்.

அட! ஆமாம்னு ஒத்துக்கிட்டுருக்க வேண்டியதுதானே? 

இல்லீங்க அது ரிஸ்கு!

அதென்ன ரிஸ்கு. பெருமைதானேய்யா?

இல்லீங்க பகுத்தறிவு கோலோச்சும் இடத்துல பிரம்மாவா இருக்கறது நெம்ப கஷ்டம்.. கேள்வி மேல கேள்வி வரும். எனக்கு கேள்வியே கேக்கத் தெரியாது இதுல எங்கேர்ந்து பதில் சொல்றது???

உதாரணமா?

மிச்ச மூணு தல எங்க தல?ன்னு மொத வெட்டு வெட்டுவாங்க? இருக்கற ஒரு தலையும் காணமப் போயிடும்.


என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒளிவெள்ளத்திலிருந்து ஒரு உருவம் காதில் ரத்தத்துடன் ஸ்டைலாக கலர் கலரான ட்ரெஸ்ஸில் நிறுத்துங்க போதும் போதும்னு அலறியபடியே ஓடி வந்தது..

நாந்தான்யா ப்ரம்மா ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.


என்னாதுங்....????!!!!!!!!!!





































 



Google.



(பின்ன எத்தினி பிரச்சனைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்த ஆலமரம் அது.? எவ்வளவு சுதந்திரம்? பைசா செலவில்லாமல் எவ்வளவு வசதி? அவரில்லைன்னா ஏது பதிவுலகம்? ஏது பஞ்சாயத்து? ஏது பாலிடால்?   என்னிக்காவது ஒரு கேள்வி? ம்ஹும். )



ஆகவே நண்பர்களே பதிவுலகின் நிரந்தர ப்ரம்மா கூகிளே என்று சொல்லி இந்தப் ப்ராப்ளத்தை சால்வ் செய்கிறேன். நன்றி வணக்கம்!!!


பின் டிஸ்கி: பதிவுலக பிரம்மாவை அறிமுகப் படுத்தியதால் அவர் எனக்குத் தந்த ஒரு டிப்ஸ் - ஹிட்ஸை ரெட்டிப்பாக்குவது எப்படி? அது இந்த லிங்க்ல இருக்கு விருப்பமிருப்பவர்கள் க்ளிக்கி பயன் பெறுங்கள். ::))

தீபாவளி வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி! :))


வ்வர்ட்டா.!!!!!!!!!!!!!!!!!!!!


.

கான் பனேகா பதிவுலக பிரம்மா??!! (தொடரும் பதிவு)

என் இனிய வலையுலக மக்களே ( இருங்கப்பா அவரில்லை! ) கீழ இருக்கற படத்தப் பாருங்க அதுல ரெண்டு பேர் லிஃப்ட் கேக்கறாங்க அதுல அந்தப் பையன் யாரோட பையன் தெரியுமா? 






ரைட்டு இப்ப மேட்டர் என்னன்னா அவங்க லிஃப்ட் கேக்கறதுக்குக் காரணம் கீழ.








இப்ப மேட்டர்,

எனக்கு ரொம்ப கில்ட்டியாப் போச்சு என்னடா இது பிரம்மாவுக்கே லெட்டர் போட்டாச்சு ஆனாலும் பதிவுலகத்துல யாரும் பெரிசா கண்டுக்கிட்டா மாதிரி தெரியலையே? ஒருவேளை தீபாவளி காரணமா? பர்ச்சேஸ் டயர்ட்ல இருப்பாங்களா? நினெக்கும்போதே முத ப்ரம்மா நாந்தான்னு வந்தார் ஜமால் அடுத்து ஜாக்கி 

பெரிசா ஜா பெரிசா? அவரையே இவர் ரிப்பீட்டடிச்சிருக்காரேன்னு நினெக்கேன்



சவூதிலேர்ந்து ஒரு மெயில் 



ஓப்பன் பண்ணினா ஒரு புகைப்படம் பின்னாடி திருப்பினா 


புரிஞ்சிதா? 


அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை எழுதி இருக்கு. 


அந்தப் படத்தப் பார்த்ததுமே ஒண்ணும் புரியல ஆனா அவரோட பெயர் நினைவுக்கு வந்ததும்தான் எனக்கு திகிலாகிப் போச்சு, அடங்கொன்னியா நானெங்கே அவரெங்கேன்னு நினெக்கும்போதே போன் (லோக்கல்தாங்க) 

”ஹலோ”

”மச்சி நான் ***** பேசறண்டான்னு..” 

சரி, நாங்க பேசின லோக்கல் கால் உங்களுக்கெதுக்கு?? ஆனா அந்தக் கால் முடிக்கும்போது இப்படி முடிஞ்சிது..


”ஆமா மச்சி நீ சொல்றதப் பார்த்தா என் பேர பிரம்மான்னு நீ சொல்லப் போறதில்லன்னு கன்பர்ம் ஆயிடிச்சி. அப்ப வேற யாரு??”

”கொஞ்சம் வெயிட் பண்ணேன், பதிவாவே போட்டுடறேன்”

“இல்ல கேஷ், செக் எதாவது” 

“அதெல்லாம் எதுக்கு ****”

“ரோதனப்பா உன்னோட, சரி போகட்டும் ஏதோ போட்டோ வந்திச்சின்னயே எங்கேர்ந்து?” 


”துபாயா?”



”இல்ல”



”அபுதாபியா?”



”இல்ல”



”பக்ரைனா?”



”இல்ல ******”



”அப்ப வேற எங்கேர்ந்துய்யா வந்திச்சி??”



”சவூதிலேர்ந்து..”




”சவூஊஊதியா?? என்னா ப்படம்?”














“ஜெய் சங்கர் “


ஹலோ மச்சி சிக்னல் வீக்காயிரிச்சுடா? 


ஹலோ ஹல் ளோ


டொக்....!!






டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்றேன், போன் பண்ணியோ, அமவுண்ட் கொடுத்தோ, ஆள் செட் பண்ணியோ அந்தப் பட்டத்த நீங்க வெலைக்கு வாங்க முடியாது. வேணும்னா இந்த ஆட்டம் முடிஞ்சதும் தனித்தனியா நானே விதவிதமாக் கொடுக்கறேன் (பர்மிஷன் வாங்கிட்டுத்தான்). அதுவரை ஆதரவு ப்ளீஸ்..


பிரம்மா அஷ்ஷூரன்ஸ்:-


நோ நோ யார் மனசும் வேகாது, வெம்பாது, நோகாது, நோண்டாது - நான் கேரண்டி!! :))



”Stay tuned for kaun banega பதிவுலக பிரம்மா”

.

பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்!!

பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்..!!


அன்புள்ள பதிவுலகின் பிரம்மாவே நலமா? நான் நலம். இந்தப் பதிவுலகில் நான் நுழைந்து சற்றொப்ப ஒரு வருடம் ஆகப் போகும் நிலையில் இப்பொழுதுதான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. என்ன செய்ய நன்றி மறந்தவனாகிவிட்டேன். மன்னிக்க..

பல இடங்களில் பல பேர் உங்களைப் பயன்படுத்தி பல கோடி ஹிட்ஸ்களை வாரிக்குவித்தும், வசை மாறி பொழிந்தபோதும் நீங்கள் வாளாவிருந்தது எனக்கு எப்பொழுதும் வியப்பே தந்திருக்கிறது. இவ்வளவு பொறுமையா என்று.

உங்களின் அனுமதியே இல்லாமல் எத்துனை முறை உங்களைப் பயன் படுத்தி உங்கள் பெயரைப் படுத்தி நான் ஹிட்ஸ்களையும் பாலோவர்களையும் குவித்திருக்கிறேன்? நினைக்கும்போதே உடலெல்லாம் கூசுகிறது ஒரு நன்றி சொல்ல நா வரவில்லையே என்று..

ஒரு வார்த்தை நீங்கள் கேட்டதில்லை நானும் அதையே காரணமாக எடுத்துக்கொண்டாலும் உங்களின் பெருந்தன்மை யாருக்கு வரும்.

என்ன செய்ய நானும் ஒரு சாதாரணன் என்ற நிலையே ஒரு வருடத்தில் தங்களால் பிரபலம் என்று ஆக்கப்பட்டதன் பின்விளைவும் அதனால் வந்த புகழ் போதையும், இப்பொழுதாவது என் அறிவுக் கண்ணைத் திறந்தமைக்கு நன்றி..

இந்த தீப ஒளித் திரு நாளையே உங்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்பளிக்க எடுத்துக்கொண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

அப்படியே உங்கள் அனுமதியுடன் இந்த வார்த்தைகளையும் பயன் படுத்திக்கொள்கிறேன்

என்னைக் கடந்துபோகும் நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், பெரியவர்களுக்கும் தீபாவளி (அ) விடுமுறை தின வாழ்த்துகள். 

:))


டிஸ்கி:- பிரம்மா யார் என்பது அடுத்த இடுகையில் விளக்கப்படும் stay tuned!!

போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்



நீங்கள் ஏறும் அரசு பஸ் தரமானதுதான் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா? 

ஏகப்பட்ட வரி கொடுத்து வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் தரமானதா?

புயலெனப் பாய்வதாய் சொல்லப்படும் வாகனங்களின் தரம் அதன் கண்டிஷன் அப்ளையில்தானே பல்லிளிக்கிறது?

நீங்களும் நானும் பயணிக்கும் சாலை சாவின் வலை என்பதை மறுக்க முடியுமா?

காசு கொடுத்தால் சுத்தமான? குடிநீர்.

காசுகொடுத்தும் ஏறி இறங்கும் மின்சாரம்.

செத்தும் கொடுத்தாலே சாம்பலாக்கித்தரும் மின்சார இடுகாடுகள்.

தூயது, தரமானது என்றே நம்பி வாங்கப்படும் 916 (கேடி) எம் நகைகள் 

அணுகமுடியா பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு கருவறைக்குள் நுழைய போராட்டம் அறிவிப்பவர்கள்

தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி, மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே வாழும் ஆட்சி

உலகின் கடைசி மனிதனைப் போல் எச்சில் துப்பி வண்டியில் சீறும் இந்தியாவின் எதிர்காலங்கள்

உயிரிருக்கும் வரை உப்பைச் சரிபார்க்காமல் சோறு போட்டு செத்ததும் படையல் வைத்து பல காரம் வைக்கும் திவசங்கள்..

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, குடி குடியைக் கெடுக்கும். 

பசியால் மயங்கி விழுந்தவனுக்கு அட்லீஸ்ட் ஒரு வாட்டர் பாக்கெட்??

காதைப்பிளக்கும் ஓசையுடன் செல்லும் ஆட்டோக்களை, புகை கக்கும் வாகனங்களை, நடக்க முடியாமல் ஆக்கிரமிக்கும் கடைகளைத் தாண்டி ஆலகால விலைகளுடன் துணிமணிகள் அதை வாங்கவும் ஒரு கடனட்டை, அதைத் திருடியும் ஒரு நூதன மோசடி.. ஹேப்பி தீபாவளி

சாக்லேட்டில் புழு, கோலாவில் பூச்சி மருந்து, தாய் தரும் பாலிலே 20.20 0.15..

என் பாட்டி குடித்த காம்ப்ளானுக்கு அவள் 6000 அடிகள் வளர்ந்திருக்க வேண்டும். நல்லவேளை அவள் விளம்பரங்களில் நடிப்பதில்லை.

திரும்ப வாங்கிப்பீங்களா என்றால் முடியாது என்று தலையாட்டும் தூய தங்கம் விற்கும் வங்கிகள்

100 சதம் கிருமிகளை அறவே கொல்லும். ஆனா ரெண்டு புழு நெளியிதே. ஆமா மச்சி அது மனுஷனும் மனுஷியும்.. 

ஆமாம் மழை நீர் சேகரிப்பு வீட்டில் சரியாக இருக்கிறதா? 

நரகாசுரனை புராணத்திலா தேடுகிறீர்கள்? என்ன தேய்த்தும் போகவில்லை,  நல்ல எண்ணெய் தேய்த்தும் போகவில்லை ஏய் உன் முதுகில் அழுக்கப்பா....

இவனெல்லாம் ஒரு பதிவர் ( நாந்தான் ) இதெல்லாம் ஒரு இடுகை (இதுவும்!) :)))

.

ஈசல்..

இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தேன். பார்வை விதவிதமான கோடுகளால் நட்சத்திரங்களை வைத்துக் கோலம் போட முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. யார் யாரெல்லாம் இதைக் கண்டிருப்பார்கள்? எத்துனை கோடி வருடங்களாய் இவை சிமிட்டிக் கொண்டிருக்கின்றன? எவ்வளவு வருடங்களாயிற்று நட்சத்திரங்களைப் பார்த்து? தேடிச் சோறு நிதம் தின்று பல பாழாய்ப் போன கதைகளை யாரோ டிவியில் பேசிக்கொண்டிருக்க , வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு மின்சாரம் தொலைந்த இரவென்பது எவ்வளவு பாக்கியம். இந்த உலகில் நானும் ஒரு அங்கம் என்பதை உணர வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்றாய் எனக்குத் தோன்றியது. 

இதற்கு முன்பாக இதேமாதிரியான ஒரு ஏகாந்த சூழலை வால்பாறையிலுள்ள கரடி பங்களாவில் அனுபவித்திருக்கிறேன்.  மின்சாரமும் தகவல் தொடர்புமற்ற ஒரு ஏகாந்த மரங்கள் சூழ்ந்த இயற்கை வீடு அது. கும்மிருட்டில் மிருகங்கள், பூச்சிகளின் சப்தங்களில் கற்பிக்கப் பட்டவைகளும், கற்பிதங்களும் கரைந்து, சில்வண்டின் ரீங்காரத்திலேயே கரைவது உணர முடியும். மனிதக் குரல்களும் அதைச்சார்ந்த ஒலிகளுமாய் சூழப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு செயற்கை நரகம் என்பது விளக்கப்படும் கலவையான ரீங்காரத்தில் பிரபஞ்சத்தின் அங்கமென உணரும் தருணம். வெளிச்சமின்மையும், இருளில் கேட்க்கும் சப்தங்களும் பயமென்று உணர்த்தப் பட்டது ஏனெனப் புரியவில்லை. பேய்களும், பூதங்களும் இன்னபிறவும் மனித இனம் சார்ந்தே பெரும்பாலும் முன்னிருத்தப் படுவது சிரிப்பைத் தந்தது. சமையலறையில் ஒரு கோழியின் ஆவி சுத்திக்கொண்டிருக்கிறது என்று பயமுறுத்துவார் யாருமில்லை. கிணற்றில் குழந்தையுடன் தாயும், ஆலமரத்தில் இளம் பெண்ணின் ஆவியும், வெள்ளைப் புடவையும் மல்லிகையுமாய் எல்லாம் மனிதம் சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் தற்கொலைகளும் விபத்தும் நடந்த தண்டவாளங்களில், இரயிலில் எந்த பயமுமில்லாமல் எல்லோரும் உறங்கியபடியே செல்கிறார்கள். 

மீண்டும் நட்சத்திரக் கோலங்களை ஆரம்பிக்கிறேன். ஒழுங்கான புள்ளிகள் என்ற விஷயம் சிதறிக்கிடக்கும் விண்மீன்களை சேர்க்க முடியாமல் திணறுகிறது. பேரண்டத்தின் விளிம்பு என்பது இல்லை என்பதை , எல்லையில்லா ஒன்றை சிந்திக்க முடியவில்லை. ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இரண்டு புள்ளிகள் தேவைப்படுகிறது. எந்த அளவுகோலுமின்றி காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அல்லது நகருவதாய் எனக்கு சொல்லப் பட்டிருக்கிறது. 

ஏதோ ஒரு ஒளி பிரகாசமாய் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது., இதென்ன? ஏதேனும் பிரபஞ்ச சக்தி நம்மை நோக்கி வருகிறதா? 

”என்னங்க இங்கயா இருக்கீங்க இருட்ல பனில என்ன பண்றீங்க? சீக்கிறம் கீழ வாங்க பாட்டிக்கு முடியல..”

இது வழக்கமானதுதான். பாட்டி எப்பொழுதுமே இப்படித்தான். தன்னை யாருமே கவனிக்கவில்லை என்றால் ஏதாவது செய்தே தன்மேல் மொத்த கவனத்தையும் வாங்கிக்கொள்வாள். நான் மெதுவாய் படிகளில் இறங்கி பாட்டி இருக்கும் அறைக்கு வந்தேன். ”காசித்தண்ணி தரலாமாடா?” என்ற அம்மாவைப் பார்த்து சிரித்தேன். ஐந்து சிறிய காசித் தண்ணீர் சொம்புகள் சாமி அறையில் ஏற்கனவே காலியாய் கிடக்கிறது. 

அருகில் சென்று பார்த்த போது பாட்டியின் நெஞ்சு குழியின் அசைவு மட்டுமே தெரிந்தது. என்ன இது மரணத்தின் பிறப்பா? இவளின் தொடர்பு முடியப்போகிறதா? மெதுவாய் அவளின் கைகளைப் பற்றினேன். பஞ்சுபோல வெளிறிக்கிடந்த அந்த உள்ளங்கைகள் மெதுவாய் திருப்பி வருடிக்கொடுக்கும்போது நரம்புகள் புடைத்த மேடுகளில் ஏதோ ஒரு துடிப்பு உணரமுடிந்தது. நட்சத்திரங்களை வைத்து நிறைய கதைகள் சொன்ன பாட்டிக்கு இப்பொழுது கண் பார்வை முற்றிலும் போயிருந்தது. தான் முன்னர்கண்ட நட்சத்திரங்களை வைத்து அவள் ஏதேனும் கோடுகள் போட்டுக்கொண்டிருக்கலாம். 

சட்டென்று பாட்டியின் கை தளர்வாய் விழுந்தது. ஒரு முழு சுற்று வாழ்க்கை என் மனதில் வந்துபோனது. இனி என்ன? எல்லோரும் வருவார்கள். மார்பிலடித்து அழுவார்கள். மாலைகள் விழும். குளிப்பாட்டி, தூக்குவதற்கான அலங்காரங்கள் செய்து, மின்சாரத்தில் சாம்பலாக்கி, ஒரு டப்பாவில் அடைத்து , கடலில் கரைத்து, மந்திரங்கள் சொல்லி,. எல்லோரும் சாப்பிட்டு, அவளின் கதைகள் சொல்லி, வீடுகழுவி நினைக்கும்போதே எனக்கு அயற்சியாக இருந்தது. 

பெரியம்மா, சித்தி, பாட்டியின் தம்பி என்று எல்லாரும் வரத்தொடங்கி இருந்தார்கள். அழுவதற்குத் தயாராகும் பிரயத்தனங்கள் தெரிந்தது. மூச்சு நிற்க வேண்டியதுதான் பாக்கி. 

எப்பொழுதும் தன் அருகே வைத்திருக்கும் பையில் தடவித் தடவியே சரியான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பாட்டி அன்றைக்கு முழுதாய் 10 தூக்க மாத்திரைகளை விழுங்கியிருப்பதாகப் பட்டது எனக்கு. அந்த மாத்திரைகளை நான் நேற்றுதான் வாங்கித் தந்திருந்தேன். கிழிந்த அந்த மாத்திரைக் கவரைக் கண்டதும் எனக்குத் தூக்கிவாறிப் போட்டது. இதென்ன 89 வயதில் தற்கொலையா? பாட்டியின் அருகே எல்லாரும் விசும்பல்களோடு அவள் மேல் பாசம் பொழிந்துகொண்டிருந்தார்கள். இதை நான் யாரிடம் சொல்வது? எனக்குப் பாட்டியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. பீயும், மூத்திரமுமாய் படுத்த படுக்கையிலிருந்து 15 வருடங்களாய் அள்ளிக்கொட்டிய என் அம்மாவைப் பரிதாபமாய்ப் பார்த்தேன். தற்கொலைதான் விருப்பமென்றால் எப்பொழுதோ செய்திருக்கலாமே? இவ்வளவு நாள் எல்லாரையும் ஏன் படுத்தவேண்டும். 

மெதுவாய் மேலேறி இறங்கிய நெஞ்சுக்குழி சுத்தமாய் அடங்கி இருந்தது. வாய் பிளந்து, கண்ணோரம் ஈரக்கசிவுடன் இருந்த பாட்டியின் கண்களை மெதுவாய் மூடினேன். நான் பிடித்திருந்த இடது கையை எடுத்து அவளின் மார்மேல் வைத்துவிட்டு, வலது கையைத் தூக்கும்போது கவனித்தேன் உள்ளங்கை மூடி இருந்தது. ஒவ்வொரு விரல்களாய் பிரிக்கும்பொழுது உள்ளே அந்த பத்து மாத்திரைகளும் நட்சத்திரங்களைப் போல வெளீரென்று கும்பலாய் பத்திரமாய் இருந்தது.     


.

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்..!!

ஹும்ம் - 1

சென்ற வாரக்கடைசியில் பெங்களூரு சென்றிருந்தேன். பெண்களைவிட அழகாக நிறைய மரங்கள், புத்துக்குலுங்கும் செடிகள் ஊரெங்கும், வீடெங்கும் காணக்கிடைக்கிறது. ஏன் பெங்களூரு நல்ல இதமான குளிர்ச்சியும் மழையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பது புரிகிறது.

ஹும்ம் - 2

அபரிமிதமான சாஃப்ட்வேர் கம்பெனிகள் வளர்ச்சிக்குத் தக்க சாலை வசதிகள் ஏதும் சிறப்பாக இல்லை, முக்கி முனகி மெட்ரோ தயாராகிக் கொண்டிருக்கிறது . ஒரு சிக்னலிலிருந்து முதல் கியர் மாற்றி அடுத்த கியர் போடுவதற்குள் அடுத்த சிக்னல் வந்துவிடுகிறது. சரியாக சிக்னல் இருக்கும் இடத்திலேயே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் (எதுக்குங்க?!) பின்னாடியே சுனாமி துரத்துவதுபோல் சிக்னலை மதிக்காமல் நாலா பக்கமும் முந்தத் துடிக்கும் வாகனங்கள். 

ஹும்ம் - 3

ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆனால் சாலையைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. சரி என்று சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல!.

ஹும்ம் - 4

கேரளாவில் தனிவீடுகள் சிறப்பாகவும் அழகாகவும் கட்டப்படுகிறதென்றால், பெங்களூருவில் அடுக்ககங்கள் அழகாக இருக்கிறது. ரசித்து டிஸைன் செய்திருக்கிறார்கள் (நான் கண்டவரையில்) என்னங்க இப்படிக்குளிருதே என்றால் இன்றைக்கு வெயில் கொஞ்சம் ஜாஸ்தி என்று பதில் வருகிறது (ஹும்ம்!).

ஹும்ம் - 5

ஒரு உயர்ரக நாயை வளர்ப்பதைவிட சிரத்தையாக வளர்த்தால் மட்டுமே போனால் போகட்டும் என்று இங்கே சென்னையில் பூக்கும் ரோஜாக்கள் பெங்களூரில் வஞ்சமில்லாமல் பூக்கின்றது. அடுக்ககங்களில்கூட குறைந்தபட்சம் இரண்டு தொட்டிகளிலாவது செடிகள் வளர்க்கிறார்கள். 

ஹும்ம் - 6

மேலும் தினசரியில் படித்த இரண்டு விஷயங்கள், கழுதைப் பால் வியாபாரம் நன்றாக நடக்கிறதாம். குழந்தைகளுக்கு தருவதற்காக காரில் வந்து வாங்கிக் கொண்டு போகிறார்களாம். 

பன்னேர்கட்டா Zooவில் சிங்கமும், சிறுத்தையும் நோயால் இறந்து போயிருக்கின்றன. 

ஹும்ம் - 7

பெங்களூரு எக்ஸ்ப்ரஸில் சென்றபோது வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 10/-
பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் வந்தபோது (அப்பாடி தலைப்புக்கு வந்துட்டேன்) வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 14/- 40 % விலை அதிகமாக விற்கிறார்கள். விசாரித்தால் மாமூலாக வருபவர்களுக்குத் தெரியும் சார் என்று பதில் வந்தது. டெய்லி 4 ரூவா அதிகம் கொடுத்து மாமூலா பஜ்ஜி தின்றாங்களா என்று கேட்டேன். "சூடா பஜ்ஜி என்று நகர்ந்துவிட்டார்" மசால் தோசையும் இதே கொள்ளைதான். ஆனால் காபியும் டீயும் அதே ரூபாய் 5/- ஏன் 7 ரூபாய்க்கு விற்கவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

ஹும்ம் - 8

வரும்போது தம்பியிடமிருந்து பல டாக்குமெண்டரிகளை காப்பி செய்து வந்தேன். பிபிசி மற்றும் நேஷனல் ஜியாக்ரபியில் காண்பிக்கப் பட்டவைதான் என்றாலும், Inside the Human Body, Bermuda Triangle மற்றும் பனாமா கால்வாயில் கப்பல்கள் செல்வது போன்றவைகள் எந்தவித விளம்பர் இடையூறும் இல்லாமல் பார்க்கும்பொழுது பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஹாங்காங்கில் கடலில் கட்டப்பட்ட விமான நிலையம் அங்கிருந்து நகருக்கு வரும் சாலைகள், கடலுக்கு அடியில் வரும் சுரங்க சாலைகள், மிக உறுதியான (டைபூன் எனப்படும் புயல்களை தாங்கக்கூடிய) தொங்கு பாலங்கள், மிகக் குறுகிய காலத்தில் (பிரிட்டிஷ், சீனாவிற்கு ஒப்படைப்பதற்குள்) கட்டி முடித்த விதம் என்று மிகவும் சிறப்பான ரசித்த டாக்குமெண்ட்ரியும் ஒன்று மேலதிக விவரங்கள். என்னது காமன் வெல்த்தும் கல்மாடியுமா? லூஸ்ல விடுங்க பாஸ் அதெல்லாம் மெகா சீரியல் கேட்டகிரி டாக்குமெண்ட்ரியில் வராது!

--

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் நடத்திய மாடியில் தோட்டம் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குப் போயிருந்தேன். மிக பயனுள்ள தகவல்கள் கிடைத்தது.  நஞ்சில்லா காய்கறிகள், மலர்கள் மற்றும் அழகுச்செடிகள் வளர்ப்பு பற்றிய விளக்கங்கள் அறியக் கிடைத்தது. மாடியில் வெயிலை வெறுமனே அறுவடை செய்வதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப அழகான சிறிய தோட்டம் அமைக்கலாம். பாலிதீன் பைகள், மரச்சட்டங்களாலான அமைப்பில் கீரைகள் வளர்ப்பு, அழகுச்செடிகள் போன்றவை வளர்த்து சுவையான காய்கறிகளோடு, மனதிற்கும் உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் இதமான ஒரு சூழ்நிலை அமைக்க முடியும் - மனமிருந்தால் மார்கபந்து!! 

இதுமட்டுமில்லாமல் மூலிகைப் பயிர் வளர்ப்பு, மசாலா பொருட்கள், காளான் வளர்ப்பு, பால் பொருட்கள் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, உடனடி உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போன்சாய் செடி வளர்ப்பு என்று 23 தலைப்புகளும் அதற்கு மேலுமாய் பல பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்.

மேலதிக விவரங்கள் வேண்டுவோர்:

பேராசிரியர் மற்றும் தலைவர்.
நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்,
புதிய எண்-44, 6-வது அவென்யூ, அண்ணா நகர்,
சென்னை - 600 040. தொ,பே - 26263484, 42170506. 

பல்கலைக் கழக இணைய தளம் : www.tnau.ac.in

 
--

மீண்டும் சந்திப்போம். நன்றி. :)

வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)


ஏங்க இதுக்குப் பேரு கொலு, ஆயுத பூஜைன்னெல்லாம் சொல்வாங்களே என்று கேட்டபோது, இல்லைங்க என்று சொன்னவர் விடுமுறை தின சிறப்பு பொம்மைகள் அடுக்குதல் மற்றும் அலங்காரம், அப்புறம் வாகனம் மற்றும் டூல்ஸ் பராமரிப்பு, மஞ்சள் கலர் பொடி, சிவப்பு பொடி மற்றும் பொரி தின்னுதல் அப்படின்னு பொழுது போக்கறோம் என்றார்.

எல்லா விடுமுறையிலுமா என்று கேட்டதற்கு 

இல்லீங்க வருஷத்துக்கு ஒரு முறை சிறப்பு விடுமுறைன்னு வரும் அப்ப மட்டும்.

அப்ப அடுத்த விடுமுறைக்கு என்றேன், 

வெடி மருந்தெல்லாம் பேப்பர்ல அடைச்சி பத்த வெப்போம் என்றார்.

‘அடங்கொன்னியா’ என்று நினைக்கும்போதே விடுமுறை தினச் சிறப்புத் திரைப்படங்கள் டிவியில் வரிசையாய் அணிவகுத்துக்கொண்டிருந்தது. 

மீசையைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தேன்.

--

மாட்டோட ’சுச்சா’வை (அதாங்க கோமியம்) செடிகளுக்கு விடுவதற்காக கலந்துகொண்டிருக்கும்போது சின்னவன் அருகேவந்து என்னப்பா இது என்று கேட்டான். பதில் சொன்னேன். நான் அன்னிக்கு வெண்டைச் செடிக்கு முன்னாடி ’மூச்சா’ போக போனதுக்கு திட்டினியே என்ற கேள்விக்கு ஞே என்று முழித்தேன். 

வேறொரு நாள் அவனே ஏதோ அண்ணனிடம் வில்லங்கம் செய்து என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டான். நேரே சாமி படத்திற்கு முன் நிற்க வைத்து சாமி இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கொடு என்ற என் அம்மாவை தடுத்தவன், ஏன் பாட்டி உனக்கு அறிவிருக்கா என்னிக்காவது இவங்க உன் கூட பேசி இருக்காங்களா இப்ப எதுக்கு அவங்களக் கூப்பிடற என்றவனை என்னிடம் கூட்டிவந்து கம்ப்ளெயிண்ட் செய்த என் அம்மாவிடம் சொன்னேன் “சத்தியமா அவன் ப்ளாக் எல்லாம் படிக்கறதில்லம்மா என்னை நம்பு”

திடீர் திடீர் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே பதில் இல்லாத என்னிடம் போய்.....??.! (சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)

--

ஹாலிவுட் பாலான்னு ஒரு மானஸ்தர் இருந்தார் திடீர்னு சொல்லாம கொள்ளாம அப்பீட் ஆயிட்டார். நானூத்தி சொச்ச ஃபாலோவர்ஸுக்கு ’நாமத்தையும், கல்லையும்’ போட்டதால செம காண்டுல இருக்கோம். ஒரு பெரிய ஆலமரம் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் ‘பஞ்சாயத்துதான்’.:)

--

ஆஃப் தி ரெக்கார்டா வலையுலகம் பற்றி எதுனா சொல்றீங்களா என்று பி.ப நண்பர் ஒருவர் கேட்டார். ரெக்கார்ட ஆஃப் பண்ணிடுங்க என்றேன். 

--

போன வாரம் காலை என் அம்மா படுக்கையிலிருந்து எழுந்து கிச்சனுக்கு நுழையும்போது ஒரு பாம்பு கிச்சனை நோக்கி சென்றிருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல் நான் தற்பொழுது இருக்கும் இடம் பாம்புகள் கண்ணில் தென்படும் ஏரியா என்பதால், எப்பொழுது வீட்டின் எல்லைக்குள் அதைப் பார்த்தாலும் சத்தம் போட்டு கூப்பிடுங்கள் ஆனால் அது எங்கே போகிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அதிர்வுகள் தவிர அதற்கு காது கேக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால் பதட்டப் படாமல் அது எங்கே செல்கிறது என்பது தெரிந்தால்தான் அதைப் பிடிக்க முடியும் என்று ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களைத் தயார் படுத்தி இருந்ததால், என் அம்மா சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டதோடு சரியாக அது சென்ற இடத்தையும் சொன்னபடியால் மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். சாரைப் பாம்பு குட்டி அது விஷமில்லாத வகை. பயந்துபோன அதன் இதய துடிப்பினை அதன் வாலைப் பிடிக்கும்போது நன்றாக உணர்ந்தேன். what a beautiful animal. விஷப் பாம்பை என்னால் இப்படிக் கையாள முடியாது அதற்காக அடிக்கவும் முடியாது. அதனைப் பிடிக்கும் அந்த ஸ்டிக் சென்னையில் பல இடங்களில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. :(

சரி இது என்னுடைய வீரசாகசத்திற்காக அல்ல. கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் பேசியபோது சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார் (அதை இனிமேதான் டெஸ்ட் பண்ணனும்). பாம்பு கடித்து வருபவர்களுக்கு நீங்க சிகிச்சை அளிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றவர் அதற்கான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது (40 கிலோமீட்டர்) அல்லது பக்கத்தில் 10 கிலோமீட்டரில் பச்சிலை மருந்து கொடுக்கிறார்கள் பெரும்பாலும் மக்கள் அங்கேதான் செல்கிறார்கள் என்றார். குணமாகிறார்களா என்று கேட்டேன் சிலர் குணமாகிறார்கள் பலர் இறக்கிறார்கள் என்றார் (அந்தச் சிலர் விஷமற்ற பாம்பு கடித்து மீண்டவர்களாக இருக்கலாம் - விஷமுள்ள பாம்புகளுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மாற்று இல்லை - நான் படித்தவரை) இதில் என்னைப் பாதித்தது இது போன்ற கிராமப் புரங்களில் பாம்பு கடிப்பது என்பது மிகச் சாதாரணமாக நடக்கிறது அதற்கான விழிப்புணர்வோ, முதலுதவி சிகிச்சை மையங்களோ 5 அல்லது 10 கிலோமீட்டருக்கு ஒன்று என்று அமைத்தால் மட்டுமே கடிபட்டவர்களைக் காக்க முடியும். அல்லது கிராமப் புரங்களில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கலாம். மருந்துகள் வழங்கலாம். ஆனாலும் நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக். 

அடுத்த அதிர்ச்சி தகவல் நிறைய வயதான பெண்கள் வாயில் வரும் புற்று நோயால் இறக்கிறார்கள் (வெற்றிலை, புகையிலை) :(

மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) 

--

நான் பல ஆண்டுகளாகவே மைக்ரேன் (ஆமாங்க ஆமாம் அந்த பாழாப் போன ஒத்தத் தலவலிதான்) கிளப் ஆயுட்கால உறுப்பினர். இப்பொழுது பேக் பெயின் மற்றும் மணிக்கட்டு வலி (நம்புங்கப்பா வயசு 38தான்) க்ளப் மெம்பர்ஷிப்புக்கு ரெகுலராக அழைப்பு வரவே அதே கிராமத்து டாக்டர் அக்குபங்சர் ட்ரை பண்ரீங்களா? என்றார். சரி என்று மைக்ரேனுடன் விடிந்த ஒரு நாளில் அக்குபங்சரை சோதிக்கக் கிளம்பினேன். சிறிய தலைமுடியை விட மெல்லிய அளவிலான ஊசிகள் கொண்டு அக்கு பாயிண்ட்ஸ் எனப்படும் அவர்கள் கற்றறிந்த இடங்களில் கை கால் தலை குத்தி ஒரு அரை மணி நேரம் அமர வைத்தார். ரைட் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அவர் சொல்லும்போதே மைக்ரேன் நின்று விட்டிருந்தது. ஆச்சர்யம். மணிக்கட்டு வலி மற்றும் கழுத்து வலியெல்லாம் போயே போச்ச்..  4000 வருட சிகிச்சை முறையாம் பெயின் கில்லருக்கு பதில் ட்ரை பண்ணிப் பாருங்க நண்பர்களே முக்கியமா மைக்ரேன் மெம்பர்ஸ்.   

--

என்னுடைய காமினி தொடர்கதைகளுக்கும், போன இடுகைக்கும் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 

நன்றி 

நன்றி

நன்றி. :))  
  
.