பலா பட்டறை: 02/01/2011 - 03/01/2011

அல்வா!!


.

சிங்கம் பட்டி கல்லிடையிலிருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ள அழகிய ஊர். 

ஜமீன் அரண்மனையைச் சுற்றி ஊர் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் ஒரு பெரிய தர்பார், 
                                                                         நடை பாதை
அதைத்தாண்டி ஒரு அழகிய நடை பாதை வழியே நேராகச் சென்றால் ஒரு நந்தவனம் இடது பக்கத்தில் விருந்தினருடன் களிக்க ஒரு க்ளப், நேரே செல்லாமல் வலது பக்கம் சென்றால் உள்ளடங்கிய அந்தப் புரம். 

அந்தப் புரத்தின் மெயின் நுழைவாயில் கதவு அழகான வேலைப் பாடுகளுடன் மிகவும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு யானைகளை வைத்து மோதினாலும் அசைந்து கொடுக்காது போல!. 
                                                               அந்தப்புரக் கதவு
                         
பெரும்பாலான பழைய காலத்து வீடுகளில் இம்மாதிரி மிக கனமான கதவுகள், உத்திரங்கள் பார்த்திருக்கிறேன். இன்றளவும் அவை கட்டிடங்களைத் தாங்கி நிற்கின்றன. இன்றைக்குக் கட்டப்படும் வீடுகளில் ஆறு மாதத்தில் 

“இது என்னங்க செவுத்துல க்ராக் விடுது?”

“அது ஒன்னுமில்ல சார் ஏர் க்ராக், பூசினா சரியாயிடும்”

வீடுகட்டுபவன் தான்தான் க்ராக் என்று நாம் விளங்கிக்கொள்வதற்குள் பூசிவிடுவார்கள்! technology so much iproved! எனக்கு வீட்டு மாடியில் மஞ்சம்புல் வேய்ந்த ஒரு கூரை போட ஆசை என்ன வெயில் அடித்தாலும் மிகவும் குளிர்ச்சியாக வைக்கும். நான் வசிக்குமிடத்தில் கேட்டபோது அப்படி என்றால் என்னவென்றே தெரியவில்லை. குடிசைன்னா தென்ன ஓலைதான் அதென்ன மஞ்சம்பில்லு என்றார்கள். இப்பொழுது ஓடு பதிப்பது கூட ஃபேஷனாகிவிட்டது. கிராமங்களில் வீடென்றால் கான்க்ரீட் அல்லது தென்னம் ஓலைதான் :( 

சரி விஷயத்திற்கு வருவோம். சிங்கம் பட்டி ஜமீந்தார் இன்னும் அந்த அரண்மனையில்தான் வாசம். 

                               தற்பொழுதைய ஜமீன்தாரின் இளமைக்காலப் படம்   

நாங்கள் சென்றபொழுது கம்பீரமாக அவர் அமர்ந்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். டிஸ்டர்ப் செய்யாது சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். சிங்கம்பட்டி செல்லும் வழியெங்கும் பசுமை, பசுமை மேலும் பசுமை, வாய்க்காலிலெல்லாம் கேட்பாரற்று விளைந்துகிடக்கிறது சேம்பு. ஆயிரக்கணக்கான மாடுகளுடன் வசித்த அந்த சிங்கம்பட்டி மக்களுக்கு அன்றைக்கு பெரும் மேய்ச்சல் நிலமாக இருந்தது மணிமுத்தாறு டாம் உள்ள புலிகளின் சரணாலயமான வனப் பகுதிதான். 

                                                ராஜ ராஜன் ஒற்றை நாற்று நடவு
மிகவும் செழிப்பான அந்த மலைப் பகுதி தவிர்த்து மற்ற அனைத்தும் விளை நிலங்களாக உள்ளதால் மக்களுக்கு அந்த மலை சார்ந்த காடே மாடுகளுக்கான இயற்கைத் தீவனம். பல்லுயிர் பெருக்கத்திற்கும், புலிகளுக்கு உணவாகவும் அந்த மாடுகள் இருந்திருக்கின்றன. வனத்துறை, அணை கட்டியதால் உண்டான பாதுகாப்பு போன்றவைகளால் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப் படாது தற்பொழுது பல்லாயிரமாகப் பெருகி இருக்கவேண்டிய நமது நாட்டு மாடுகள் காலி! பன்றியின் குணங்களையுடைய சீமைப் பசுவின் ஏழரைப் பால் குடித்து ஜூப்பர் என்று கூவிக்கொண்டிருக்கிறோம். அதன் சாணியும், கோமியமும் நில வாழ் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளுக்கு லாயக்கற்றது. நமது பாரம்பரிய திமில் கொண்ட கரவை இனங்கள் வெளி நாட்டில் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டுவருகிறது. வெறும் மேய்ச்சலின் மூலம் அதிக பால் தரக்கூடிய பாரம்பரிய ரகங்கள் அழித்து அதிக தீவனம், நோய் தாக்குதலுக்கு ஆளாகும் மருந்து தேவைப்படும் சீமை ரகங்கள் இன்று நம்மை ஆள்கிறது. ராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும் அது வெளிப்பட்டது. மாடுகள் அதிகம் இருந்ததால் வெண்ணையும், மோரும், தயிருமாக விற்றுச் செழித்திருக்கின்றது ஊர். 
                                    துபாய் ராஜாவின் பூர்வீக வீடு மாடியிலிருந்து

சிங்கம்பட்டியில் அழகான ஒரு முருகன் கோவில், பின்புறம் தாமிரபரணி ஆறு என்று அமர்க்களமான லொக்கேஷனுக்குக் கூட்டிச் சென்றார் ராஜா. வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தால் இங்கேதான் கூட்டிவந்து பேசிக்கொண்டு இருப்போம் நேரம்போவதே தெரியாதென்று அவர் சொல்லியபோது. வெறும் ஆற்றின் சலசலப்பும், பறவைகளின் ஒலியும் மட்டுமே சூழலாயிருந்த அந்த இடம் ஏறக்குறைய சொர்க்கம்!

                                                             ஜமீன் லச்சினை

கோவிலின் வாயிலில் ஒரு கைகூப்பிய சிலை. அவர்பெயர் தூக்குதுரை என்றார் ராஜா. அவரும் சிங்கம்பட்டி ஜமீன்தான் ஆங்கிலேயரை எதிர்த்தவர், பல மொழிகள் சரளமாய் பேசக்கூடியவர், ஆங்கிலேயரிடம் பிடிபட்ட தனது சகாவை மீட்கச் சென்று கைகலப்பில் ஒரு ஆங்கிலேயரைக் கொலை செய்தபோது ஆற்றில் தொலைத்த தனது கத்தியைத் தவறவிட்டுஅதன் மூலம் அவர்களால் பிடிபட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டு என்ன நடந்தது என்பதைச் சொல்லியதை அப்படியே கேளுங்கள்! 

“உங்களுக்கு சாவதற்குமுன் எதாவது கடைசி ஆசை இருக்கிறதா?”

“ஆம்”

“என்னவென்று சொல் நிறைவேற்றுகிறேன்”

“உன் பொண்டாட்டி கூட ஒர் இரவு”

அது வேலைக்காவாது என்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்!!

(ஊர்வலம் தொடரும்..)

டிஸ்கி : ஆனது ஆகிப்போச்சு அடுத்த இடுகைல அல்வா கொடுக்கறேன்!! :))


.

ஒரு பரதேசியின் பயணம் - பார்ட் 2


 சமீபத்தில் பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபாலின் குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். போன வருடமும் இதே தை மாதத்தில் அங்கு சென்றதால் இந்த முறை சில புதிய இடங்களைப் பார்த்துவிட முடிவு செய்திருந்தேன். எறும்பு குழந்தையின் பிறந்த நாளுக்காக பிஸியாகிவிட்டதால் சுற்றிக்காட்டும் முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர் நம்ம துபாய் ராஜா.

 பாசக்கார மனுஷன் அவருடைய பிறந்த நாள் அன்றைக்குக்கூட இந்த ஏழை எழுத்தாளனை வைத்துக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றிக் காண்பித்தார். 

முதல் நாள் அம்பை சென்று இறங்கியவுடன் ராஜகோபால் பிறந்தநாள் முதல் அவருக்கு பதனி சப்ளை செய்யும் பதனிக் கடை ஓனர் ஸ்பெஷலாக இள நுங்கு வெட்டிப்போட்டு பனை இலையில் பதனி ஊற்றித்தந்தார் பல வருடங்களுக்குப் பிறகு ஜில்லென்று ஒரு பானம் அடித்த கையோடு ஆற்றுக்குச் சென்றோம். 

“ராஜகோபால் இந்த ஆத்துல எதுனா விசேஷம் இருக்கா?”

“இருக்குங்க”

”என்னது?”

“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.” 

(நல்ல எண்ணம்யா) நல்லவன் வாழ்வான்னு நினைத்துக்கொண்டே ஆற்றங்கரைக்குச் சென்றோம். நான் நினைவு தெரிந்து தமிழக ஆற்றில் கண்ட மலமணக் காட்சிகள் நாசி துளைக்க கரைக்குச் சென்றபோது கொல்லம்/செங்கோட்டை பாசஞ்சர் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக மேம்பாலம் கட்டிக்கொண்டிருந்தனர். அதாவது ஆங்கிலேயர் சற்றொப்ப 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய தூண்களை இடிக்க முடியாது அதன்மேலேயே ஒரு மேக்கப் போட்டு சுமார் 3 வருடங்கள் நெருங்கப்போகும் 'துரித' கதியில் வேலைகள் செம்மையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
                                   தாமிரபரணியின் மேலே அந்த மேக்கப் பாலம்

ஆற்றங்கரையில் நான் மனங்குளிரக் கண்ட ஒன்று மருத மரங்கள். ஓங்கி உலகளந்த உத்தம இயற்கையின் ரோமக் கால்களைப்போல சுமார் 30 அடி சுற்றளவும் 180 அடி உயரமும் வளரக்கூடிய நம் நாட்டின் பாரம்பரிய மரங்கள் வரிசையாய் பல நூற்றாண்டு வளர்ச்சியுடன் கம்பீரமாய் நிற்கிறது. மருத மரங்கள் கோவில் தேர் செய்யப் பயன்படுத்தப்படும் மரங்களில் ஒன்று, மேலும் ஆயுர்வேத மருத்துவங்களிலும், விருட்சாயுர்வேதத்திலும் இதன் பயன்பாடுகள் அதிகம் சொல்லப் பட்டிருக்கிறது. விஞ்ஞானப் பெயர் Terminalia arjuna (Combretaceae) எல்லாப் பருவ நிலைகளிலும் வளரும் இதைக் கன்றாகக் கொடுத்து வளர்த்தால் மழை வளம் பெருகும். ஆனால் அரசாங்கம் வளர்ப்பது ஒன்றுக்கும் உதவாத டில்லி மரங்களை :(( 

சுழல், புதைகுழி இருக்கும் பகுதி என்ற போர்டைக் கடந்து 5 அடி ஆழமுள்ள இடத்தில் மீன்கள் கடிக்க ஒரு குளிர் குளியலோடு வீடு வந்தால் துபாய் ராஜா ”வாங்க போலாம்” என்று வண்டியில் என்னை அழைத்துச் சென்ற இடம் மணிமுத்தாறு டாம். காய்ந்து கிடந்த கம்பீரமான டாமை புலிகளின் சரணாலயமான அடர்ந்த காட்டு வழிப் பாதையில் சென்று அடைந்தோம், காட்டு வழிப்பாதையிலேயே இதமான குளிரும் வன வாசமும் மனசை லேசாக்கியது. மணிமுத்தாறு அருவிக்குச் சென்றால் சென்ற வருடத்தில் பாபனாசம் அகஸ்தியர் அருவியில் அடைந்த அதே இன்பம். யாருமற்ற அருவிக் குளியல்! உயரம் அதிகமில்லை என்றாலும் நீரின் வேகத்தை உடல் தாங்க முடியாமல் தள்ளாடியது. அருவியின் எதிரிலேயே ஒர் அழகான அமைதியான எண்பதடி ஆழமான தடாகம் டைவ் அடித்து சொர்க்கத்திற்கு சென்றவர்கள் அதிகமாம். 

ச’னாவும் வராது, ப’னாவும் வராது ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி. என்று சொல்லிவிட்டு தேங்காய் சீனிவாசன் முறைப்பது போல அந்தத் தடாகம் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. டைவ் அடிப்போமா என்றார் ராஜா.

எனக்கு கடப்பாறை நீச்சல்தான் தெரியும் என்பதை அவருக்குச் சொல்ல வாய் வந்தும் 

‘சாரி ராஜா பளக்கமில்ல எதுக்கு ரிஸ்கு?” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன். 

பராமரிப்பின்றி கிடக்கும் அணையின் பூங்காவைச் சுற்றிப்பார்த்தோம். அணையின் அருகிலிருந்த விவசாய நிலங்கள் செழிப்பாக இருந்தது. குறிப்பாக நேந்திரம் மற்றூம் ரோபஸ்ட்டா அதிகம் பயிராகி இருந்த வாழைத் தோப்புகள்.. அவ்வளவு பச்சை.

மணிமுத்தாறு அணை பற்றி சில குறிப்புகள்: நீரியல் திட்டம் 1 - உலகவங்கி நிதியுதவியுடன் 1958 ல் கட்டப்பட்டது. 
மொத்த நீளம்- 9605 அடி
முழு நீர் மட்ட உயரம் - 118 அடி
நீர்ப்பரவல் பரப்பு - 62.481 சதுர மைல்
முழுக்கொள்ளளவு - 5511 மி.க.அடி
மதகுகளின் எண்ணிக்கை - 3
உபரி நீர் போக்கி - 7
மொத்த பாசனப் பரப்பு - 25438 ஏக்கர்.

அடுத்து அவர் கூட்டிச் சென்றது சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. அதைப் பற்றி வேறு ஒரு இடுகையில் பார்ப்போம். (பின்ன எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?)

--

மறு நாள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து குற்றாலம் போலாம் வாங்க என்று ராஜா அழைக்க ஒரு ட்ரிப் அடித்தோம். வழியில் பிரபல பதிவர்களின் ஊர்களைக் கடந்து குற்றாலம் சென்றபோது பழைய குற்றாலத்தில் மட்டும் உடல் நனையும்படிக்கு நீர் விழுந்து கொண்டிருந்தது.

 மற்ற தேனருவி, மெயின் அருவி, ஐந்தருவி எல்லாம் காய்ந்து கிடந்தது. அன்று தை அமாவாசை என்பதால் அதிக கூட்டம். ஷவரை விட சிறியதாக விழுந்த அந்தத்தண்ணீரிலும் தண்ணிபோட்டு  எண்ணெய் தேய்த்து குளிக்க நின்றிருந்த கும்பல் கண்டு நான் ராஜாவைப் பார்த்தேன். குளிக்கலாமா என்றார். பார்த்ததே பரம திருப்தி என்று சொல்லிவிட்டு கும்பலாய் சுற்றிஅலையும் குரங்குக் கூட்டங்களைப் பார்த்து பரவசமடைத்தோம்.

 (எப்பேர்ப்பட்ட வனத்துல மேஞ்சாலும் கடைசில இனத்துலதான் வந்து சேரனும்.:)


கல்லிடைக் குறிச்சியில் அப்பளங்கள் வாங்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரின் தந்தையோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கம்பட்டியில் அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்றதையும் அங்கு மாடியிலிருந்து கண்ட வயல்வெளிக் காட்சிகளையும் பற்றி பேச்சு வந்தபோது ஆயிரம் மாடுகளுக்கு மேல் சொந்தக்காரகளாக இருந்து அந்த மணிமுத்தாறு மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பிய நாட்களை நினைவு படுத்திப் பேசினார். சர்வசாதரணமாக சிங்கம் பட்டியிலிருந்து அம்பைக்கு நடந்தே வந்து பள்ளியில் படித்தது, ஜமீன், புலிவேட்டை, புலியின் மாடு வேட்டை, டேம் கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமம். என்று பேச்சு டைம் மிஷினில் ஏறிச்சென்றது.

அன்றே அம்பையின் அருகில் இருக்கும் பிரம்மதேசம் சென்றோம். சென்ற முறையே அங்கு சென்றுவந்ததைப் பற்றி சொன்னேன். ஒரு கோவில் இருக்கு கண்டிப்பா பார்க்கணும் என்றார் ராஜா.

“சிவன் கோவில்தானே?”

“இல்லைங்க:

”:ஒரு கிருஷ்ணன் கோவில் இருக்கே அதா?”

”இல்லைங்க”

“அந்த நாலாயிரத்தம்மன்?” இல்லையென்று தலையாட்டியவரைப் பார்த்து வேற என்னங்க கோவில் இருக்கு பிரம்மதேசத்தில என்று கேட்டேன். நானும் இப்படித்தாங்க இருந்தேன், ஆனா கவிஞர் விக்கிரமாதித்தியன் சார்தான் எனக்கே இந்தக் கோவிலை அறிமுகப் படுத்தினார் என்று அவர் அழைத்துச் சென்ற கோவில் 

வாலீசுவரர் கோவில் - திருவாலீஸ்வரம் - தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவில் தஞ்சை பெரியகோவிலுக்கும் பழைமையானது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த படத்தைப் பாருங்கள். 
                                கோவிலின் வாசலில் உள்ள அறிவிப்பு பலகை
                                                                             துபாய் ராஜா




மிக அழகான கோவில். தொல்லியல்துறை வசம் இருப்பதால் மாதத்தில் முக்கிய நாட்கள் நீங்க வேறு தினப்படி பூஜைகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற நேரத்தில் பராமரிக்கும் அதிகாரி அங்கே இருந்ததால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். 

                                                         ராக்கெட் ராஜா!


திருநெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விறுவிறுப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களில்.....


டிஸ்கி:-

(இந்த இடுகைய தமிழ்மணம் டாப் டென்ல கொண்டு வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வேலையே இல்லாத நேரத்தில் மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே பதிவிடுகிறேன் நண்பர்களே!) :))