பலா பட்டறை: 04/01/2012 - 05/01/2012

நெஞ்சுக்கு நீதி - சிறுகதை..


.


கோதண்டராமன்

வளைகுடா நாடுகளில் வேலை செய்திருக்கிறீர்களா? எனில் அங்கிருந்து ஊருக்கு விடுமுறையில் திரும்பும் சந்தோஷம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை. அப்படி ஒரு 50 நாள் விடுமுறையில் ஊருக்குத் திரும்புவதற்கான ஆயத்த நிலையில் என்னென்ன வாங்கிவரட்டும் என்று வீட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கணேசன் மாமாவைப் பார்த்தேன். ஒரே ஊர், சொந்தக்காரர்கள். மாமா எனக்கு முன்னாடியே இங்கே வேலைக்குவந்து சம்பாதித்துக்கொண்டிருப்பவர்.

”மாமா எப்படி இருக்கீங்க.”

”நல்லா இருக்கேம்ப்பா நீ எப்படி இருக்க?”

”நல்லா இருக்கேன் மாமா நைட் ஊருக்குப் போறேன் அதான் வீட்டுல பேசிக்கிட்டிருந்தேன். உங்களுக்கு எதுனா குடுத்தனுப்பனும்னா சொல்லுங்க, 50நாள் லீவுன்னு பெரிசா லக்கேஜ் எதுவும் எடுத்துட்டுப் போகல,”

”அதெல்லாம் எதுவும் வேணாம்ப்பா நல்லபடியா ஊருக்குப் போயிட்டுவா.”

”அட என்ன மாமா, பொருளா வேணாம் காசு இருந்தாக் குடுங்க, குடுத்துடறேன், கமிஷன் செலவாச்சும் மிஞ்சும்ல, எப்படியும் வீட்டுக்கு அனுப்புவீங்கள்ள, நாளைக்கு காலைல போய் சேர்ந்துடுமில்ல.”


கணேசன் மாமா

அட இது நல்ல ஐடியாவா இருக்கே, பயபுள்ள தாம் தூம்னு செலவு பண்றவன்னு கேள்விப்பட்டிருக்கேன், பொறுப்பான பயதான் போல.

”என்ன மாமா யோசிக்கிறீங்க?”

”ஒண்ணுமில்ல கோதண்டம் நீ சொல்றதும் சரிதான் ஒரு இருபத்தய்யாயிரம் வர்ற மாதிரி கைல இருக்கு, இந்தா கொண்டு வீட்ல குடுத்துடு.”

”ஆஹா, கண்டிப்பா நாளைக்குக் காலைலயே குடுத்துடறேன்.”


கோதண்டராமன்

ம்ம் நம்ம ஊரு நம்ம ஊருதான். ”ஏம்மா கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்.”

”ஏம்ப்பா, வந்ததும் வராததுமா கிளம்பிட்ட, கொஞ்சம் தூங்கலாமில்ல.?”

”இல்லம்மா, கணேசன் மாமா வீட்டுக்கு குடுக்கச்சொல்லி கொஞ்சம் காசு குடுத்திருக்காரு அவங்க வீடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு குடுத்துட்டு வந்துடறேன்.”

”சாப்பாட்டுக்கு வந்துடுப்பா.”

”சரிம்மா வந்துடறேன்.”

கையில் ஐம்பதாயிரம் கூட எடுத்துக்கொண்டேன். ஒரு வண்டி இல்லாமல் ஐம்பது நாட்கள் பொழுது போக்க முடியாது. பஸ்ஸைப்பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. வெளிநாட்டுக்குப் போய்விட்டு பஸ்ஸில் போனாலே எவனாவது கேவலமாகப் பேசக்கூடும். மார்கெட் கொஞ்சம் மாறி இருந்தது,. புதியதாக டூவீலர் கடை ஒன்று திறந்திருந்தது. 

கழுத்தில் செயினும், ஜீன்ஸும், டி ஷர்ட்டும் பார்த்த உடனே அவர் நான் பாலைவனத்தில் காசு சேர்க்கும் ஆசாமி என்று புரிந்து கொண்டிருக்கக்கூடும். 

”வாங்க சார்.”

”வண்டி ஒண்ணு எடுக்கனும்.”

”எடுங்க, சுப்பையாத் தெரு ஆறுமுகம் ஐய்யாவோட...”

”ஆமாங்க. ”

”தெரியும்.. தெரியும். வெளிநாட்லேர்ந்து எப்ப வந்தீங்க.?”

”காலைலதான்.”

”டீலர்கிட்டேர்ந்து செக் பண்ணி செலக்ட் பண்ணித்தான் நம்ம கிட்ட வண்டி வரும். எது வேணுமோ எடுத்துக்குங்க.”

சிகப்பு நிற ஹீரோ ஹோண்டாவை எடுத்தேன். மாமா காசை எடுத்து விட்டு, முழு தொகையும் பணமாகக் குடுத்துவிட்டு வண்டிக்கு புல் டேங்க் பெட்ரோல் நிரப்பினேன், பெட்ரோல் கடையில் அதிசயப் பார்வை பார்த்தார்கள். கடை திறந்ததிலேர்ந்து எவனும் முழு டேங்க் அடித்திருக்கமாட்டார்கள் போல. இதெல்லாம் ஒரு கெத்து. வெளிநாட்டில் வேலை செய்வதென்பதின் திமிர், இதையெல்லாம் இங்கேயே குண்டு சட்டியில் எறுமை ஒட்டுபவர்களுக்கு காமிக்கவேண்டும். செயினை நன்றாக வெளியில் எடுத்து விட்டுக்கொண்டேன். ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது, மாமாவீட்டுக்கு இன்னும் ஐந்து கிலோ மீட்டர் இருக்கிறது.

ஆங் வெத்தலை. அட எப்படி மறந்தேன்? வெத்தலை போட்டு எவ்வளவு நாளாச்சு? எதிர் வந்த ஒரு பெட்டிக்கடையில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு, வெற்றிலை வாங்கி சுண்னாம்பு தடவி, பாக்கு சேர்த்து வாயில் அதக்கிக்கொண்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்தேன். ஆஹா சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போலவருமா பாட்டு எங்கோ ஒலித்தது, 

”அட, கோதண்டம்”

குரல் வந்த திசையைப் பார்த்தால் கதிரேசன்.

”அட, கதிரு, எப்படி இருக்க?”

”நல்லா இருக்கேன். எப்ப ஊர்லேர்ந்து வந்த? ஆளே சும்மா ஜம்னு மாறிட்டயேப்பா?”

”காலைலதான் வந்தேன்.”


குழந்தை ராஜ் ஸ்ரீதர்.

”அய்யா, அவனேதான், யார்கிட்டயோ பேசிட்டு இருக்கான்.” 

”போய், பதமா கூட்டிட்டு வாய்யா.”

”சார், வணக்கம்.”

”வணக்கம். யார் சார் நீங்க”

”அதிருக்கட்டும் சார், நீங்க கண்டக்டர் தானே?”

”ஆமாங்க, நீங்க”

”அதெல்லாம் சொல்றேன், அய்யா அங்க உக்கார்ந்திருக்காங்க கொஞ்சம் வர்றீங்களா? சாவி குடுங்க வண்டிய நானே தள்ளிட்டு வர்றேன்,”

”சார் நான் எதுவும் பண்ணல சார், இவரு எங்க சொந்தக்காரர் பேசிகிட்டிருந்தேன், அவ்ளோதான்.”

”அவரும்தான் கூட வரனும், அமைதியா வந்தீங்கன்னா அமைதியா திரும்பிடலாம்.”

காவல் நிலையம்

சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்

யார்ரா இவன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம சிகரெட் புடிச்சிகிட்டே உள்ள வர்றான்.

”சார்..”

”சொல்லுங்க ஏட்டு.”

”இவர்தான் சார், கண்டக்டர் கதிர்.”

”ஊதிகிட்டு இருக்காரே இவரு?”

”அவருக்கு உதவி பண்றவரு.”

”சார் என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல, நான் என் மாமாவீட்டுக்கு அவசர வேலையாப் போகனும் ப்ளீஸ்.”

”சாருக்கு என்னா விஷயம் என்னா அர்ஜண்ட்?”

”சார் நான் அபுதாபில வேலை செய்யறேன். இன்னிக்கு காலைலதான் 50நாள் லீவுல ஊருக்கு வந்திருக்கேன், அவரு கொஞ்சம் பணம் வீட்டுக்குகுடுக்கச் சொல்லி குடுத்தனுப்பி இருக்காரு அதான் அவசரமா போகனும்.”

”ஏட்டு”

”அய்யா?” 

“எஃப் ஐ ஆர் எழுதுய்யா.”

”சரிங்கய்யா.”

”டெஸ்மா சட்டத்தில் தேடப்படும் குற்றவாளியான அரசு பேரூந்து நடத்துனர் கதிர், டெஸ்மா சட்டத்தை எதிர்த்து அரசு பேரூந்துகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதோடு பயணிகளின் உடமைக்கும் உயிருக்கும் சேதாரம் விளைவிக்க முற்பட்டதோடு..”

”சார் நான் எதுவுமே அப்படி பண்ணல சார், இவரு பாவம் சார் இன்னிக்குத்தான் வெளிநாட்லேர்ந்து வந்துருக்காரு அவர விட்டுடுங்கசார்,”

”ஆமா சார் எனக்கு நீங்க என்ன பேசறீங்கன்னே புரியல, காசு குடுக்கனும், அவசரம் கொஞ்சம் விட்டீங்கன்னா போதும்.”

”ஓஹ் உங்க மாமா என்ன காசு குடுத்தாரு ரூபாயா ?”

”இல்ல சார் அந்த நாட்டுப் பணம்”

”நீங்க என்ன குடுக்கப்போறீங்க? அந்த நாட்டுப் பணமா?”

”இல்ல சார் நம்ம நாட்டுப் பணம்தான்”

”ஆங்.. அப்ப ஹவாலா.. ஏட்டு முதல் குற்றவாளி கதிருக்கு ஹவாலா பண உதவி செய்து அரசு பேரூந்துகளை நாசப்படுத்தியதோடு, கையில் தீப்பந்தத்துடன் பேரூந்தைக் கொளுத்தவும் முடிவு செய்திருந்த சதித்திட்டத்தை..”

”சார் தீப்பந்தமா?இது சிகரெட்டுசார்.”

”ஆமா, யார் இல்லைன்னு சொன்னா? ஆனா இதுல வெச்சாலும் எரியும்ல? போலீஸ் ஸ்டேஷன்லயே சிகரெட் புடிச்சிகிட்டு தெனாவெட்டா?”

கோதண்டராமன் வண்டியிலிருந்த மொத்த பெட்ரோலும் ஒரு கேனில் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தது.


”அரேபியாக்காரர்னா சும்மாவா ஏட்டு பார்த்தியா வண்டில எம்புட்டுப் பெட்ரோலு, நம்மூர்ல கார்காரன் கூட இம்புட்டுப் பெட்ரோலு ஊத்தமாட்டான்.”

--

49 வது நாள்


கணேசன் மாமா.


அய்யோ கோதண்டமா இவன்? 

மாமா என்று கேவி அழமுடியாமல் குலுங்கியவனைப் பற்றி அணைத்தவாறே வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். கோவிலுக்கு நேர்ந்துவிட்டவன் போல வெட்டப்படாத தலை முடியும் மீசை தாடியுமாய் அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ”நைட் 11.30 க்கு ப்ளைட்டுப்பா.”

”தெரியும் மாமா.” வீட்டுக்குப் போய் குளித்தான் வரும்போது கொண்டு வந்திருந்த லக்கேஜ் பிரிக்ககூட இல்லை, அப்படியே எடுத்துக்கொண்டு வாடகைக் காரில் கிளம்பிவிட்டான். 

”எல்லாம் என்னாலத்தான் மாமா” என்றான் கதிர். ஒரு புது வண்டி வாங்கி அத ஓட்டக்கூட இல்லை.

”என்னாது புது வண்டியா?”

”ஆமாம் மாமா. அன்னிக்குத்தான் வாங்கினாரு. ஏன் அது வீட்டுக்கு வரலியா?”

போலீஸ் ஸ்டேஷனில் காச நோயாளியைப் போல பல பாகங்கள் இழந்து சாய்ந்து இருந்த அந்த ஹீரோ ஹோண்டாவை சர்வீஸ் செண்டருக்கு ஒரு மீன்பாடி வண்டியில் எடுத்துச் சென்றேன், 

”அடடா பர்ஸ்ட் சர்வீஸ் முடிஞ்சிடுச்சே? சரியான நேரத்துக்கு வர்றதில்லையா சார்?”

”பரவாயில்லைங்க.”

”ம்ம்ம்.. செகண்ட் சர்வீஸ்தான் எடுப்போம், ஆமா வண்டி எத்தினி கிலோமீட்டர் ஓடி இருக்கு?”

”அஞ்சு கிலோமீட்டர்.”

”அடடா புது வண்டிய ஓட்டாம வெச்சிருந்தாலும் தப்புத்தான் சார். சரி வண்டி எங்க இருக்கு?”
  
”இதோ..”

ஒரு மீன்பாடி வண்டியில் படுக்கவைக்கப்பட்டு, புதியதாக டெலிவரி செய்யப்பட்டு, ரெஜிஸ்ட்ரேஷன் கூட இல்லாமல், 50 நாட்களே ஆன முதல் சர்வீஸுக்கு வரும் ஒரு வண்டியை ஹீரோ ஹோண்டா ஓனர் கூட தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார் என்ற உண்மை அந்த சிப்பந்திக்குப் புரிய நெடு நேரமானது.


--