பலா பட்டறை: 07/01/2014 - 08/01/2014

சதுரங்க வேட்டை - விமர்சனம் மாதிரி.



சதுரங்கவேட்டை.


தியேட்டரில் சென்று காசு கொடுத்துப் பார்க்கும் படங்கள் எல்லாம் வரிசையாக பல்ப் கொடுத்தப் பிறகு, தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ஆவலே போய்விட்ட நிலையில்தான் சதுரங்கவேட்டை படத்தைப் பற்றி பாசிடிவ் ரிவியூக்கள் சமூக வலைப்பக்கங்களில் சரமாரியாக வரத் தொடங்கியது.

ஆன்லைனில் பார்த்தால் பெரும்பாலும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல். திங்கட்கிழமையான இன்று வாரத்தின் முதல் நாள் கூட்டம் இருக்காது என்று பார்த்தால் மேட்னி ஷோவும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் என்றே ஆன்லைன் டிக்கெட் நிலவரம் சொல்லியது. அம்பத்தூர் ராக்கியில் 3 மணி காட்சிக்கு டிக்கெட் இருக்கவே, வேலை முடித்து 3 மணி ஷோவுக்கு டிக்கெட் கிடைத்தால் போகலாம் என்று சென்றேன். டிக்கெட் கிடைத்தது. அரங்கு நிறைந்த காட்சியாக மக்கள் படத்தை ரசித்துப் பார்த்தனர். நானும்தான்..இத்தனைக்கும் ஏதோ டெக்னிக்கல் கோளாறு காரணமாக படம் 15 நிமிடங்கள் தாமதமாகத்தான் போட்டார்கள்.

--

1980 இறுதிகளில் நாங்கள் வேலூரில் இருந்தபோது 'அகமது & கோ' என்று ஒரு பெயர் போட்ட நோட்டீஸ்கள் ஒரே ஒரு நாள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது. நாங்கள் இருந்த ஏரியாவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிந்தால் சோப்பு முதல் கட்டில் பீரோ வரை அதன் ஒரிஜினல் விலையில் வெறும் 30 % பணம் கட்டினாலே போதும் கொடுத்துவிடுவார்கள். உடனே அல்ல 15 நாட்கள் கழித்து. மக்கள் முதலில் 3 ரூபாய் சோப்பை வைத்துப் பரிசோதித்தார்கள், பரிசோதனை சக்ஸஸ். அதன் பிறகு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கினார்கள், எவர் சில்வர் பாத்திரங்கள் வாங்கினார்கள், பின்னர் துணிந்து பீரோ வாங்கினார்கள். எல்லாமே அடக்கத்திலிருந்து வெறும் 30% விலையில் கிடைத்தது. ஆஹா என்ன ஒரு நேர்மை, சோப்பையும், ஹார்லிக்ஸையும் விற்றவர்களிடம் மக்களே போய்க் கேட்டார்கள்

" என்னா சார், இப்படி வியாபாரம் பண்ணினா எப்ப நீங்க பெரிய கடை தொறக்கறது? எப்ப டிவிஎஸ் 50? மாருதி கார் எல்லாம் விப்பீங்க? ,

"வித்துட்டாப் போச்சுங்க, நீங்க எல்லாம் ஆதரவு தரும்போது இதக் கூட செய்ய மாட்டமா?"

அன்றைக்கு சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் மாருதி காருக்கும், ஹீரோ ஹோண்டாவுக்கும், டிவிஎஸ் 50க்குமாக பணம் கட்டினார்கள். வண்டி கொடுக்க வேண்டிய 14ம் நாள் காலை 'அஹமது & கோ' கதவு அம்போவென திறந்து கிடந்தது. கணவனுக்குத் தெரியாமல் மனைவி, மனைவிக்குத் தெரியாமல் கணவன் என்று கட்டிய பணத்துடன் கம்பி நீட்டியது அறிந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மக்கள் மண் தூற்றி சாபம் இட்டார்கள். அவர்கள் மிச்சம் வைத்த பொருட்கள் சூறையாடப்பட்டன, கார்பன் காப்பி பில் புக்கைக் கூட மிச்சம் வைக்காமல் மக்கள் 'கொடுத்த காசுக்கு' தூக்கிச் சென்றனர்.

என் வாழ்வில் பதிமூன்று வயதில் நான் கண்ணால் கண்ட முதல் வேட்டை இது. தவறு யார் பக்கம்?

பாலகுமாரன் கதையில் வரும் ஒரு நகை வியாபாரியிடம் அவர் மகன் கேட்பார்.

"அப்பா இந்தக் கல்லு எவ்ளோ விலை?"

"ஆசைக்கு ஏதுடா கண்ணு விலை?"

--

அபொழுதெல்லாம் முப்பது அடிக்கு அலுமினிய ஆண்டெனா போட்டு திருப்பித் திருப்பிப் பார்த்தால் தூர்தர்ஷன் தெரியும், ஞாயிற்றுக் கிழமை அவர்கள் போடும் பாடாவதி படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் கண்டு பூத்துப் போயிருந்த கண்களுக்கு கேபிள் டிவி வந்தது. சாட்டிலைட் சானல்கள் வந்தன.

கந்து வட்டியில் கூட வசூல் பண்ணமுடியாத வட்டியை மக்களின் டெப்பாசிட்டுக்குக் குடுத்தனர். 50% வட்டி, 35%ஊக்கத் தொகை. முண்டியடித்து மக்கள் கொடுத்த ஆதரவின் முடிவில் அவர்களுக்கு ஏக்கத் தொகை கூட மிஞ்சவில்லை. அதன் பிறகும் ஆசை அடங்காத மக்களை பெல்டுக்குக் கீழே அடித்தார்கள், தேக்கு மரம், பாக்கு மரம், காந்தப் படுக்கை, மேக்னட் சாக்ஸ், மணி லிங்க், ஒருவரைச் சேர்த்தால் இவ்வளவு, அவர் மூன்று பேரைச் சேர்த்தால், மூன்று பேர் ஒன்பது பேரைச் சேர்த்தால், ஒன்பது பேர் ஒவ்வொருவரும் மூன்று மூன்று என்று வித விதமாக அடித்தார்கள், ம்ஹும்.. மக்கள் அசரவே இல்லை, விட்டில் பூச்சிகளாக விழுந்தார்கள்.

ஆயிரங்களில் சம்பாதிப்பவனுக்கு ஒரு பார்முலா என்றால் லட்சங்களில் சம்பாதிப்பவனை கோட் சூட் போட்டுக்கொண்டு க்ளப்களுக்கு அழைத்து அல்வா கொடுத்தார்கள்.

ஜகஜ்ஜாலக் கில்லாடி என் ஆர் ஐகளையே வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஐந்து நட்சத்திர ஓட்டலில் வைத்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி டாலர்களில் உருவினார்கள்.

பிரசவ வைராக்கியம் போலத்தான் இந்த மக்களின் உசார்த்தனம் என்பது ஏமாற்றுபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நம்பிக்கையின் ஒரு கதவை அடைக்க, மக்கள் அவர்களாகவே மற்றொரு கதவை திறந்து வைக்கிறார்கள் என்று புரிந்ததும் அந்த அட்சய பாத்திரமே நீங்கதான் சார் என்று வித விதமாக மக்களின் ஆசைக்கு வலை வைக்கிறார்கள். மக்களும் அதில் விழுகிறார்கள், ஆசைக்கு விலை ஏது?

--

சதுரங்கவேட்டை படம் முழுக்க இதைப் பற்றித்தான் பேசுகிறது. லேட்டஸ்ட்டாக மக்கள் முட்டாளான உண்மை சம்பவங்களின் அடிப்படையில், போக, க்ளைமாக்ஸில் சினிமாவில் நாம் எதிர்பார்க்கும் ஒரு முடிவும் உண்டு.

தியேட்டரில் செலவு செய்த பணத்திற்கு ஏமாறாமல், ஏமாந்த கதையை, ஏமாற்றாமல் கொடுத்த இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து. அதற்காகவே தயவு செய்து இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள். மனித இனம் இருக்கும் வரை இந்தப் படத்தை எத்தனை பாகங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.


ஆசையே துன்பத்திற்குக் காரணம். :)


இன்னும் சிறப்பான அடுத்த படம் தருவார்கள் என்ற நம்பிக்கையில், சதுரங்க வேட்டை படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

நன்றி!