பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!!

உண்மைத்தமிழனின் உளறல்கள்!!


.

FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா? செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆவணப்படுத்தி இருப்பார்கள். அபரிமிதமாக விளையும் மக்காச்சோளம், அதைக்கொண்டு உருவாக்கிய பை ப்ரொடக்ட்ஸ், மீதியை பண்ணைக் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும், மாட்டிற்கும் தின்னக் கொடுத்து வெஜ்ஜிலும், நான்வெஜ்ஜிலும் சோளத்தை மறைமுகமாகப் புகுத்தி மரபுக்கோளாறை மக்களின் சொந்த செலவில் பாஸ்ட்புட் என்று மக்களுக்கு சூனியம் வைத்து காசடிப்பதை சொல்லி இருப்பார்கள்.

போக அந்த சோள விதைக்கும் ஒரு கம்பெனி காப்பிரைட் வாங்கி வைத்து அங்குள்ள விவசாயிகளை கூலிகளாக்கி வைத்திருப்பார்கள். சம்மதிக்காதவர்களை கேஸ் போட்டு படியவைப்பார்கள். அதாவது அவர்கள் கொடுப்பதுதான் விதை, அவர்கள் தருவதுதான் கூலி, அவர்கள் தருவதுதான் உரம், அவர்கள் உற்பத்தி செய்து தருவதைத்தான் நாம் உண்ணவேண்டும் அது கோழியாக இருந்தாலும் சரி சாஸாக இருந்தாலும் சரி. 

நம்மூரில் பசுமைப் புரட்சி என்ற அற்புதமான ஒரு முட்டாள்தனம் மெத்தப் படித்தவர்களால் விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அதாவது உரம் போட்டு விவசாயம் செய்வது, ஆயிரம் மூட்டை இயற்கையாய் விளைந்த இடத்தில் ஆயிரத்து முன்னூறு மூட்டை விளையும் ஆனால் அதற்கு கொடிய விஷமான ரசாயன உரங்கள் போடவேண்டும். அவர்கள் சொல்லாமல் விட்டது அந்த விஷங்கள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும் அந்த விஷத்திற்கு கொடுக்கப்படும் பணமோ அந்த அதிகமாய் விளைந்த முன்னூறு மூட்டைகளை விட அதிகம். உரத்தைக் கொட்டிக் கொட்டி விவசாயிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டதோடு விளை நிலங்களையும் அறியாமலேயே கொலை செய்தார்கள்.

பாரம்பரியத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வீட்டு தேவைக்குப் போக வெளியில் விற்றார்கள், அதில் அடுத்த விளைச்சலுக்கான விதையும் உண்டு. இவனே விதைச்சு இவனே வெளச்சா அது நியாயமா என்று கார்பரேட்டுகள் கவலைப்பட்டதின் விளைவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள். அதாவது விளையும் ஆனால் அதில் மறுபடி விதைக்க முளைக்காது. அந்த மலட்டு விதையும் நன்றாக விளைச்சல் தர பல்வேறு ரசாயணங்கள் தூவவேண்டும் எனவே எல்லாவற்றிற்கும் விவசாயி தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம் அதற்குப் பெயர் பசுமைப் புரட்ட்சி. இப்படி மரபணு மாற்றிய விதைகளால் விவசாயி பிச்சைக்காரனாக்கப்பட்டான். விதை என்பது இயற்கையின் கொடை அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அரசாங்கமே டீலில் விட்டுவிட்டதுதான் உச்சகட்ட கொடுமை.

ஜகீராபாத் என்ற ஆந்திராவின் மிகப் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவற்றை தாங்களாகவே பயிரிட்டு அதன் மூலம் விளைந்ததை காலங்காலமாக உண்டு சுபிட்சமாக வாழ்ந்துவந்ததை இலவசம் என்ற சொம்பைக்கொண்டு கழுவ வந்தது அரசாங்கம். 

பிடிஎஸ் முறைப் படி குறைந்த விலையில் அரிசி உணவிற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது. கழுவி எடுத்து உலையில் போட்டால் சாதம் ரெடி கொஞ்சம் உப்பைப்போட்டால் கஞ்சி. ஆஹா வேலை மிச்சம் தானியங்களை அரைத்து மாவாக்கி பிசைந்து ரொட்டி சுடுவதை விட சாதம் உடனடியாக தயாரானது. மக்கள் தானியங்கள் விவசாயத்திலிருந்து முற்றிலும் விலகி அரசாங்கம் தரும் அரிசியை உண்டு காலங்காலமாக அவர்களுக்கு பலத்தைத்தந்த உணவுகளைப் புறக்கணித்ததின் பலனாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற பல உடல்ரீதியான குறைபாடுகளுக்கு ஆளானதோடு தங்களின் விளை நிலங்களையும் தரிசாக்கினார்கள். ஏழைகளுக்கான அரசு பிச்சைக்காரர்களை அல்லவா வளர்க்கும் அப்பொழுதுதானே சாதனைகளைப் பீற்றிக்கொள்ள முடியும். போக தானியங்களை அறவே அழித்தால்தானே ஓட்ஸை விற்க முடியும்.

இந்த நேரத்தில் இவர்களுக்கு வந்து கை கொடுத்ததுதான் டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி. இவர்கள் அந்த கிராமத்தின் தலித் பெண்களிடம் பொறுப்பை ஓப்படைத்தார்கள். ஆண்களை அவர்கள் நம்பவில்லை, கவர்மெண்ட் அந்த ஆண்கள் சம்பாதிக்கும் சொச்ச காசிற்கும் சாராயம் காய்ச்சி தயாராக வைத்திருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.

 முதலில் நிலத்தை மேம்படுத்துங்கள், விதைகள் தருகிறோம் உங்கள் பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுங்கள் விளைந்தபிறகு மேற்கொண்டு பேசுவோம். ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் பலவருட பிச்சைக்கார வாழ்விற்குப் பிறகு முதன் முதலாக அவர்களின் நிலத்தில் உழவு மேற்கொள்ளப் பட்டது. அறுவடை அபரிமிதமாக இருந்தது. அவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு. மீண்டும் அவர்கள் முன்னே ஒரு கேள்வி வைக்கப் பட்டது நிலத்தின் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அல்லது வயது காரணிகளால் ஏற்படும் விவசாய பிரச்சனைகள் ப்ரதானமாய் அலசப்பட்டது. யாரும் அறிவுறைகளை அவர்களுக்குத் தரவில்லை அவர்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. 


யோசித்துப்பாருங்கள் அவர்களின் வறுமையிலும் அவர்கள் தரம் பிரித்துக்கொண்டார்கள் அதற்கேற்ப விளைந்த தானியங்களை பங்கிட்டுக்கொண்டார்கள். இப்பொழுது உணவுக்காக அவர்கள் யாரையும் கையேந்தும் நிலையில் இல்லை. 

உணவுக்குப் போக அவர்களுக்குள்ளாகவே விதை வங்கி ஒன்றையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். யார்வேண்டுமானாலும் விதை வாங்கிக்கொள்ளலாம், விளைந்தபின் இரு மடங்காக விதைகளாகவே கொடுத்தால் போதும். ஏதாவது பிரச்சனை என்றால் நான்கு மடங்காக விதைகளை அடுத்த விளைச்சலில் கொடுக்கவேண்டும். சரி விளைச்சலில் ஏதோ ப்ரச்சனை முழு கிராமமே மாட்டிக்கொண்டால் ம்ம்ம் அதற்கும் விடை கண்டார்கள் அதாவது அடுத்த கிராமம் அவர்களின் விதைக்கும் உணவுக்கும் உதவி செய்யும். ஆம் கிட்டத்தட்ட 75 கிராமங்கள் இவ்வாறு தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி தன்னிறைவு அடைந்துள்ளன. சுய வேலை வாய்ப்பு உணவில் தன்னிறைவு, விவசாயம் மூலமே கால்நடைகளுக்குத்தீனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யாரையும் உணவுக்காக சார்ந்திருக்கவேண்டிய நிலைமை இல்லாமை, விதை பாதுகாப்பு, தலைமுறைகளுக்கான சுபிட்சமான வழிகாட்டுதல்.

முதலில் எல்லோருக்கும் உணவு என்று அந்த சூழலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அரிசியை பொது வினியோகத்திட்டம் மூலம் சிபாரிசு செய்த அதிகாரி அந்த கிராமங்களுக்கு வந்து பார்த்தார். பேச்சு மூச்சில்லாமல் இதுதான் உண்மையான Public Distribution System என்று பாராட்டிச் சென்றார். படிப்பறிவில்லாத உழைப்பாளிகளான அந்த தலித் மக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் கேள்விகள் என்ன?


நாம் உண்ணும் உணவு என்பது எங்கேயிருந்து வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமா?

விதை என்பதை ஒரு கம்பெனியோ அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியுமா?

உண்மையில் நாம் காசு கொடுத்து வாங்கச்செல்லும் மார்கெட் அல்லது சந்தை என்பதில் அதிகம் பயன் பெறுபவர் யார்? 

மலட்டுத்தன்மை அல்லது மரபணு மாற்றம் செய்யப் படும் காய்கறிகள், உணவுகளை ருசிக்காக அல்லது அறியாமையால் நாம் உண்ணுவது என்பது சரியா? நமக்காகவே இவை மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

நஞ்சால் நனைக்கப்படும், ரசாயணங்கள் தூவப்படும், ஆபத்தான முறையில் பயிரிடப்படும் ப்ரெஷ் காய்கறிகள் நமக்கு நன்மையே செய்யும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?  

விளைச்சல் செய்ய முடியாதவருக்காக விவசாயம் செய்து உணவு கொடுக்கும் விவசாயிக்கு உண்மையில் அதன் பயன் போகிறதா? 

விவசாயத்தை விவசாயி கைவிட்டுவிட்டால் இலவசத்திற்கோ பொது வினியோகத்திட்டத்திலோ உணவுப் பொருட்களை யார் வழங்குவார்கள்? 

ஒருங்கிணைந்து உணவிற்காக யாரிடமும் இலவசத்திற்கோ அல்லது பிச்சையோ எடுக்காமல் தன்னிறைவடைந்த அந்த கிராம மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எது சரி? மீன் கொடுப்பதா? மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா? அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா? 


முடிந்தால் மீண்டும் இது குறித்து வேறு சில தகவல்கள் பகிர்கிறேன்..படியுங்கள்::
மண் மரம் மழை மனிதன்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


நன்றி! டிஸ்கி: நானும் உண்மையான தமிழன்தான்!! :)))
.

30 comments:

அன்னு said...

ha ha haa...vedikkaiyaa thalaippumdiskiyum vaccaalum nermaiya, sariyaana pointai solli irukkeengannaa.... inge local farming - organic produce rendukkumemathippum makkalum jaasthi. ithe nilai indiaavilum vanthaal kandippa indiavin nilai maarum. aanaa appadi maara viduvaangalaa politicians enbathuthan kelvi...!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

தல இது உளறல் இல்லை சத்தியம் நிரம்பிய வார்த்தைகள்,..

வானம்பாடிகள் said...

நேத்து பஸ்ல ப்ரியா ஜீரோ பட்ஜட் ஃபார்மிங்னு ஒரு விடியோ ஷேர் பண்ணியிருக்காங்க. அதை படிச்சதும் தாங்க முடியாத வருத்தம். கோயம்பத்தூருக்கு அந்தப்பக்கம் இருக்கிற பாலக்காட்டில் ஒரு டெக்ஸ்டைல் எஞ்சினீயர், இயற்கை உரம் பயன் படுத்தி அருமையா பயன் அடைஞ்சதைப் பத்திய ஒரு டாகு. கோயம்பத்தூரில் இந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டதாகவும் உதவத் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருப்பார். இந்தப்பக்கம் திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸால் நிலம் பாழ் என்று ஒரு தொழிலையே முடக்கும் நிலை. ஒரு தனிமனிதன் உதவத் தயார் என்னும் போது கோவையின் பல்கலைக் கழகம் இதற்கு வலிந்து உதவ முடியாதா என்ன? பகிர்ந்தமைக்கு நன்றி உ.த.

விந்தைமனிதன் said...

தல, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சைப் பகுதியில் இன்று விவசாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது. 'வரப்புயர' என்றாள் அவ்வை. நீர்ச்சேமிப்பு, முறையான நீர்த்தேக்கத் திட்டங்கள் இல்லாமலும் ரசாயனங்களாலும் அந்தப்பகுதியே அழிந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறிய விதையை ஊன்றலாமா?

செ.சரவணக்குமார் said...

மிக முக்கியமான பகிர்வு ஷங்கர். மேலதிக தகவல்களையும் பகிருங்கள். நன்றி.

Anonymous said...

உண்மை தமிழன் அங்கிளோட கிரிக்கட் பதிவுக்கு எதிர்ப் பதிவுன்னு நினைச்சேன். நல்லாத் தான் வைக்கிறீங்க தலைப்பு. இந்த டொக்யூமென்ரி பார்த்ததோட நிறையப் பேர் வெஜிட்டேரியாகிட்டாங்க. ஆனால் பாருங்க, வரும் வெஜிட்டேரியன் உணவிலும் அது இதுன்னு கலப்படம். அதனால தான் லேக்கல் விவசாயிகளிடம் நேரம் மினக்கெட்டுப் போய் வாங்கறோம்.

தஞ்சாவூரான் said...

மிக அருமையான, அவசியமான பதிவு. பழைய சோறு, வெங்காயத்தில் இல்லாத சுவையும் சத்துமா ஓட்ஸில் இருக்கிறது. வெளிக்கவர்ச்சிக்கு மயங்கி சுயத்தைத் தொலைக்கும் மட மக்கள் :(

சந்தோஷ் = Santhosh said...

அருமையான கட்டுரை..

VISA said...

ஸ்வரஸ்யமாக சொல்லப்பட்ட கட்டுரை. அருமை.

ஷர்புதீன் said...

அருமை.

FOOD said...

நல்ல விழிப்புண்ர்வு பகிர்வு.
இன்னைக்கு,நீங்க உணவு பக்கம் வந்ததால, நான் தேர்தல் செய்தி போட்டுட்டேன்.

ராஜ நடராஜன் said...

கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவுன்னு நிறைய பேர் வருவாங்க...

அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ம்... இங்கே (அபுதாபியில்) சிறிய அளவில் விளைவிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சில காய்கறி விதைகள் வாங்கிவரச் செய்தேன். எல்லா பாக்கெட்டுகளிலும், “Warning: Seeds treated with poison. Not fit for food, fodder or making oil" என்று எழுதப்பட்டிருக்கு!! ரசாயன விஷத்தில் தோய்த்த விதையாம்!! அரசு நிறுவனத்தில் வாங்கப்பட்டவைதான் அவை.

நீங்கள் செய்யும் விவசாய முறைகளை விவரமாக எழுதுங்களேன்.

முஹம்மத் ஆஷிக் said...

நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

கை கொடுங்க... சகோ.ஷங்கர்.
நம் நாட்டின் மீதும், நம் நாட்டு மக்கள் மீதும், நம் எதிர்கால சந்ததி மீதும் பற்றுகொண்ட மிகவும் அருமையான கட்டுரை சகோ.ஷங்கர். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்..!

அதேநேரம், இதற்கு எதிரான... பணத்தின் மீது மட்டுமே பற்று கொண்ட நம்மை ஆள்பர்களை நாம் என்ன செய்வது..?

ஆனால், இதுபோன்ற நல்ல விஷயங்கள் சொல்லக்கூட 'கமர்ஷியல் விளம்பர கலாச்சார வழிமுறைகள்' அவசியம் என்ற நமது கையறுநிலை மிகவும் வருத்தமளிக்கிறது.

Jey said...

அருமையான கட்டுரை. நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

மிக முக்கியமான செய்திகள். நம் ஊரில் இருக்கும் வேளாண் பல் கலைகழகங்களின் கண்களில்
இது போன்ற கட்டுரைகள் தென்படுவதுண்டா? அந்தந்த மாநில அரசுகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
இணையம் என்பது வெறும் சினிமா, கிரிகெட் ,நக்கல்,நையாண்டி பொழுது போக்கிற்கு மட்டும் அதிகம் பயன்படுத்த படுவது கொடுமை.
இது போன்ற ஆக்கங்கள் நிறைய மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

அற்புதமான பதிவு, பகிர்வு ஷங்கர்!

பெருங்காயம் said...

இங்கு இயற்கை விஞ்ஞானியை விட செயற்கை விஞ்ஞானிக்கே மதிப்பு அதிகம். அதனால்தான் அவர் இந்தியாவின் பசுமை தந்தையாக ஜெhலிக்கிறhர்.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

//எது சரி? மீன் கொடுப்பதா? மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா? அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா? //
மிகச்ச்சரி நண்பரே!! கிட்டத்தட்ட இதுகுறித்த கருத்து இந்த பதிவிலும் உள்ளது ... கொஞ்சம் வந்து பாருங்களேன்!!!
http://sagamanithan.blogspot.com/

வின்சென்ட். said...

தலைப்பை பார்த்தவுடன் எதிர் பதிவாக இருக்குமென்று எண்ணினேன். சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். நமக்கு நாமே என்று இருந்தால்தான் கம்பெனி தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலும். எனது பதிவுகளுக்கு தொடுப்பு தந்ததிற்கு மிக்க நன்றி.

raja said...

இந்த மாத பூவுலகு கிடைத்தால் படித்து பாருங்கள்.. அதில் தியோடர் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரை....பல பேரின் காதுகளில் சங்கு போல பெருத்த ஒலியுடன் ஓத வேண்டிய கருத்துகள்.
www.poovulagu.com

இராமசாமி said...

நல்ல பகிர்வு குருஜீ :)

பட்டாபட்டி.... said...

Good post. . Rocking

ஜோதிஜி said...

கோக்குமாக்கான தலைப்பு. ரொம்ப ஆச்சரியம். நண்பர் சஞ்சய் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது இது குறித்து மேலோட்டமாக பேசினேன்.குறிப்பாக பிடி பருத்தி பற்றி பேசும் போது மரபு மாற்றம் செய்யப்பட்டது தவறில்லை. நல்ல மகசூல் அதிலும் விதைகள் முளைக்கின்றது. நல்ல லாபம் என்று சொன்னார். மொத்தத்தில் அவர் வேறு விதமாக சொன்னார். இப்போது களத்தில் இருக்கக்கூடும். அவர் பதில் தருவார் என்று அவஸ்யம் எதிர்பார்க்கின்றேன்.

Thekkikattan|தெகா said...

good post-

தொடர்பான இரண்டு கட்டுரைகள். சில ஆண்டுகளுக்கு முன்பாக உளறி வைச்சது...

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம் - http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post.html

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா? -
http://thekkikattan.blogspot.com/2007/08/blog-post_07.html

Rex said...

This is one of the best post which I read in recent times. Thanks.

R.Gopi said...

ஷங்கர் ஜி...

ஆஹா... அற்புதம் என்று சொல்ல வைத்த பதிவு...

இதே ரேஞ்சுல போனா, எதை தான் சாப்பிடுவது!!?

சசிகுமார் said...

விழிப்புணர்வு மூட்டும் பதிவு சார் அருமை

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

அருமை..!

நட்புடன் ஜமால் said...

very informative :)

but why this title and disci :(