பலா பட்டறை: 02/01/2014 - 03/01/2014

ஒரு பரதேசியின் பயணம் - 7 மஹா கும்பமேளா, காசி (பாகம் - 2)

                                                                 திருச்சிற்றம்பலம்.

முதல் பாகம்.

கங்கையும், யமுனையும் தனித்தனியே வந்து Y போல சங்கமிக்கும் இடமே திரிவேணி சங்கமம், மூன்றாவது நதியாக சரஸ்வதி ஆழத்தில் பாய்வதாக நம்பிக்கை. அது போலவே இருவேறு நிறங்களுடன் வந்து சங்கமிக்கும் இடத்தில் முன்று வெவ்வேறு நீர் ஓட்டங்களை உணர முடியும்.







ஒரு சிறிய படகில் நாங்கள் மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றோம். அங்கே மற்றொரு பெரிய படகு நிலை பெற்றிருந்தது, அதில் தலைமைப் பூஜாரி ( இவரை பாண்டா என்று அழைக்கிறார்கள்) அமர்ந்திருந்தார். நாம் வந்த படகிலிருந்து, இவர் படகினூடாக ஏறி, அடுத்தப் பக்கம் இறங்கி குளிக்க வேண்டும் என்பது ஒரு வருமான ஆன்மிக செட்டப். சில சாமந்திப் பூக்களும் , தேங்காயும், வாழைப்பழமும், தையல் இலையில் வைத்து ஆளுக்குத் தக்க ரேட் வைத்து பாண்டா கூடவே தட்சணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தார். நாங்கள் கண்டுகொள்ளாமல் குளித்துவிட்டு வந்தோம். அந்த இடத்தில் முழங்கால் அளவே ஆழம் என்பதால் தைரியமாகக் குளிக்க முடிந்தது. குளிர் நகர்ந்து, சூரியனின் சூடு உடலில் உணரத்துவங்கிய நேரத்தில் குளிர்ந்த நீரில் முங்கிக் குளித்த அனுபவம் ஒரு பக்கம் என்றால், பல சரித்திரங்களை விழுங்கி அயராது ஓடிக்கொண்டிருக்கும் இந்த மகா நதியில் இன்று நான் உடல் நனைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதே உடலையும், மனதையும் பூரிக்க வைத்தது. எல்லாவற்றையும் மறந்து சிறிது நேரம் குழந்தை போல முங்கி எழுந்து, கைகளால் தழுவி, சூரியனைப் பார்த்து கை கூப்பித் தொழுது என்று கலவையான நிலையில் இருந்தேன். பின் படகிற்குத் திரும்பி, வாசுவும் சென்று குளித்து வந்தவுடன், கரைக்குத் திரும்பினோம்.  கரையில் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகி இருந்தது.

நாங்கள் வந்த வழியே ஸ்வாமி ஓம்கார் அவர்களின் குடிலை அடைந்தோம். பாஸ்மதி அரிசி சோறு, பயறு இனிப்புக் கூட்டு, காய்கறிக் குழம்பு என்று அட்டகாசமான சமையல் ஸ்வாமிஜியின் நளபாகத்தில் தயாராகி இருந்தது. அழகான சிறிய ப்ராத்தனைக்குப் பிறகு அனைவரும் உண்ணத்தொடங்கினோம்.

நேற்று இரவின் குளிருக்கு சமமாக வெளியே வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. வெயில் தாழக் கிளம்புங்கள் என்று ஓம்கார் அன்பாகக் கேட்டுக்கொண்டதன் பேரில் குடிலிலேயே தங்கி, ஸ்வாமிஜியின் கும்பமேளா அனுபவங்களைக் கேட்டு மகிழ்ந்தோம். மாலை அங்கிருந்து விடை பெற்று மீண்டும் மக்கள் கடலில் மூழ்கி கடைகளையும், கும்பமேளாவிற்கு வந்துகொண்டே இருக்கும் மக்களையும் வேடிக்கப் பார்த்தவாரே நாங்கல் தங்கி இருந்த நகரத்தார் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆன்மா குதூகலிக்க, உடல் ஓய்வெடுக்கச் சொல்லி ஒற்றைக்காலில் தவமிருந்தது. ஒரு கையேந்தி பவனில் கச்சோரி சாப்பிட்டுவிட்டு உறங்கப் போனோம்.

-@-

மறு நாள் சங்கமத்தின் வழிகள் ஓரளவு பழகி விட்டிருந்தன. இன்றைக்கு இன்னும் அதிக மக்கள் வருகை எதிர்பார்க்கப்பட்டதால், சங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவுட்டரிலேயே தடுக்கப்பட்டு மக்கள் நடந்தே சங்கத்தை அடைய வேண்டிய நிலையில் இருந்தனர். காலை நாங்கள் மீண்டும் ஸ்வாமிஜியை சென்று பார்த்துவிட்டு, கங்கையில் குளித்துவிட்டு, மதியம் காசிக்குக் கிளம்ப ஆயத்தமானோம். ஏற்கனவே வெளியூர்களுக்குச் செல்ல வண்டி முன்பதிவு செய்தவர்கள் எல்லாம் வண்டி ஊருக்குள் வராது என்பதால் நடந்து அல்லது குதிரை வண்டியில் 7கிலோ மீட்டராவது பயணம் செய்ய வேண்டிய அவஸ்தையில் இருந்தனர். குருட்டாம்போக்கில் எங்களுக்கு சத்திரம் அருகிலேயே வண்டி கிடைத்தது. உள்ளூர்வாசி என்பதால் கார் ஓட்டுனர் சாதுர்யமாக சந்து பொந்தெல்லாம் ஓட்டி ஒருவழியாக மெயின் ரோட்டிற்கு வந்து காசிக்குப் பயணப்படலானோம். அலகாபாத்தின் வெளியே 15 கிலோ மீட்டர் அளவிலும் வண்டிகள் தடுக்கப்பட்டு மக்கள் சாரி, சாரியாக சங்கத்யை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வண்டி வாரனாசி எனப்படும் காசி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

ஹைவேசிலிருந்து வாரனாசி ஊருக்குப் பிரியும் இடத்திலேயே வாகனத்தைத் தடுத்து வேறு வழியாகச் செல்ல போலீசார் எச்சரித்தனர். கும்பமேளா முடித்து மக்கள் கூட்டம் காசியை அடுத்துக் காண வந்ததால் காசி திணறிக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். மீண்டும் எங்கள் மகிழ்வுந்துச் சாரதியின் மதி கூர்மையால் குறுக்கு வழி சகாயத்தில் காசி நகருக்குள்ளே நுழைந்தோம்.

மொத்தமே பத்து அடி அகலமுள்ள சாலையில் வந்த ஒரு ஐந்து முக்கில் எல்லா பக்கமும், ரிட்ஷாக்களும், காரும், ஸ்கூட்டரும், சைக்கிளும், காளை மாடும், நடப்பவர்களுமாக ஒரு மிகப்பெரிய ட்றாபிக் ஜாம் ஏற்பட்டு, பின்னர் அதுவாகவே சரியாகி எங்கள் வண்டி நகரத் துவங்கியபோது இந்தக் குறுகிய வழிகள்தான் காசியின் ஒரு சிறப்பு அடையாளம் என்று புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் எங்கள் வண்டிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, நாங்கள் ரிக்‌ஷாவில் ஏறி காசி நகரத்தார் சத்திரத்தை நோக்கிப் பயணித்தோம். இங்கே சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அதிகம், 10 ரூபாயில் சந்து பொந்தெல்லாம் அனாயசமாக ஓட்டி நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்த்து விடுவார்கள். அதிக பட்சம் 25 ரூபாய்க்கு மேல் கேட்பதில்லை. அதிக மக்கள், தொடர் வருமானம் இருந்தும் பேராசையின்றி கட்டணம் வாங்கும் அந்த எளிய மக்களை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

ஒரு வழியாக சத்திரத்தை அடைந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றோம். சத்திரத்தின் அருகிலேயே கோவில், ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 8மணிக்கே கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தரிசன வரிசை நீண்டிருந்தது. சரி என்று நாங்களும் ஜோதியில் ஐக்கியமாகி வரிசையில் நடக்க ஆரம்பித்தோம். மெயின் ரோடிலிருந்து வலது ஓரமாக கட்டைகள் கட்டி, வரிசை முன்னேறிக் கொண்டிருந்தது. கையில் மணி பர்ஸ் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வழி நெடுக இரண்டுக்கு இரண்டு கடையில் சிறிய லாக்கர் வைத்து, சிறிய தொகை வாங்கி அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்கும் வசதி செய்து தருகிறார்கள். மெதுவாக நகரும் வரிசையில் வழியில் பல்வேறு பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை விற்கிறார்கள். இப்படி ஒரு சுவையை பச்ல் பொருட்களில் வாழ்நாளில் சுவைத்திருக்க முடியாது. அப்படி ஒரு சுவை, பெயரெல்லாம் நினைவிலில்லை, பாலின் நுரையில் செய்த ஒரு இனிப்பை உண்டு இதுதான் பெஸ்ட் என்று நினைப்பதற்குள், பால் ஏடில் செய்யப்பட்ட அடுத்த இனிப்பு மயக்கத்தைத் தருமளவிற்கான சுவையுடன் இருக்கிறது. போதாதகுறைக்கு கேக்கைப் போல இருக்கும் தயிர். பால் பொருட்களில் செய்யப்பட்ட தின்பண்டங்களில் காசிக்கு ஒரு தனி இடமுண்டு என்று நினைக்கிறேன். கும்பமேளாவிலும் சரி, இங்கும் சரி எவ்வளவு சாதாரண ப்ளாட்பாரக் கடையில் தின்றாலும் வயிற்றுக்கு ஒரு கேடும் செய்யவில்லை. சைக்கிளில் உணவு விற்பவரும் சுவையான, சுகாதாரமான உணவுகளையே விற்கின்றனர்.

ஒரு வழியாக கோவிலுக்கான நுழைவாயில் சந்தில் நுழைந்தோம். மிகக் குறுகலான ஒரு சந்து அது. சுமார் மூன்றடி அகலம் கூட இருக்காது. மிக அதிகமான பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள், எங்கு பார்த்தாலும் காவலர்களும், மிலிட்டரி கமாண்டோக்களும் பாதுகாப்புக்கு இருந்தனர். வழியின் இரண்டுபக்கமும் இரண்டுக்கு இரண்டு அளவிலான கடைகள், ஜகஜ்ஜோதியாக மின் விளக்குகளில் ஜொலித்துக்கொண்டிருந்தது. சிறிது சிறிதாக மக்களை அந்த சந்துக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். பல திருப்பங்கள் கடந்து சிறிய வீடுபோல ஒரு வாசலில் நுழைந்தால் அதுதான் காசி விஸ்வநாதர் கோவில். ஆம், மிகச் சிறிய கோவில், காசி பற்றி மிகப்பெரிய அளவில் நீங்கள் கற்பனை செய்து வந்து பார்க்கும்போது இது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தரும். வரலாற்று ரீதியான படையெடுப்புகளும், பாதுகாப்புக் காரணங்களே இந்தக் கட்டமைப்புக்குக் காரணம். உள்ளூர்க்காரர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்தக் கோவிலைச் சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான சந்து பொந்துகள், கொடைக்கானல் மதிகெட்டான் சோலையில் தனியே சென்று மாட்டிக்கொண்டதை ஒப்ப தரிசனத்தைத் தரவல்லது.

கோவில் அடைக்கப்படும் நேரத்தில் நாங்கள் உள்ளே சென்று கூட்ட நெரிசல், காவலர் கெடுபிடிக்கு இடையில் கிடைத்த கேப்பில் தரிசனத்தைப் பார்த்துவிட்டு ஏதோ ஒரு சந்தில் புகுந்து ஒர் வழியாக மெயின் ரோடு வந்து சேர்ந்தோம். மீண்டும் பொருட்கள் வைத்திருந்த கடைக்குச் சென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கோவில் நுழைவாயில் அருகில் பிரிந்த சந்து வழியே மணிகர்ணிகா காட்டிற்குப் (Ghat) பயணப்பட்டோம்.

இது கங்கையின் ஒரு படித்துறை. வருடம் முழுவதும் பிணங்கள் எரியூட்டப்படும் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. ஒரு சடலத்தை எரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் கடைகள் வழியெங்கும் இருக்கின்றன. மெல்லப் படியிறங்கி ஆற்றின் கரையிலுள்ள மணிகர்ணிகா படித்துறையை அடைந்தபோது, சுமார் 10 சடலங்கள் எரிந்துகொண்டிருந்தன. நல்ல குளிரில் அந்த வெப்பத்திலேயே குளிர் விரட்டி மெல்ல எரியும் சடலங்களைக் கவனிக்கலானோம். நேரம் நள்ளிரவு பன்னிரெண்டைத் தாண்டியும் அந்த இடத்தில் எரிபவரின் உறவினர்கள் பலர் அமைதியாக சடலம் எரிவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். டமால், டமால் என்று கபாலங்கள் வெடித்து தீப்பொறி கிளம்பிக் காற்றில் பறந்தது. மனம் மிக அமைதியாகிவிட்டிருந்தது. எதெல்லாம் தீட்டு, புனிதமில்லை, பயம் என்று வெளியே ஒதுக்கப்பட்டிருந்ததோ அதெல்லாம் இங்கே புனிதம். சர்வமும் சாம்பலாகும் இந்தக் கங்கைக் கரை ஒரு மிகப்பெரிய விடுதலை தரிசனம். இத்தனைப் பிணங்கள் எரிந்தும் எந்த வடையும் இல்லை. விறகு எரியும் புகை வாசமே உடலுள்ளும், உடை மேலும் சுற்றிச் சூழந்துகொண்டது. சரியாக ஒரு வருடம் கழித்து இன்றைக்கும் நினைவிலிருந்து அகலவில்லை.







வெறுமனே சிதைகள் எரிவதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். பெற்றோர், மனைவி, மக்கள், சம்பாத்தியம், அன்பு, குரோதம், காதல், காமம், ஆசை, விருப்பு, வெறுப்பு, அகங்காரம், செல்வம், கல்வி, அறிவு, கடவுள், பயம், துணிவு எல்லாவற்றையும் ஒருபக்கமாய் மனம் ஒதுக்கி ஒரு மிகப்பெரிய ஆழ்ந்த மவுனத்தில் அது உட்கார்ந்துகொண்டது. இங்கு வந்து தனது ஓயாத ஆட்டங்களிலிருந்து விலகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே அது இத்தனை நாளும் என்னை பல வித்தைகள் காட்டி என்னை இங்கே வரவழைத்திருக்கிறது என்று நானும் என்னுள்ளிலிருந்து விலகியே இருந்தேன். சுமார் ஒரு மணி வரைக்கும் நானும் வாசுவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம், இருவர் கண்ணிலிருந்தும் எங்களை அறியாமல், ஏனென்று அறியாமல் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. மரணம் பற்றிய ஏதோ ஒரு விடுதலை உள்ளே கிடைத்தது. மெதுவாக அங்கிருந்து கிளம்பி நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து சேர்ந்தோம். முகத்தின் தோல் அந்த மயானக் கரையின் வெப்பத்தையும், உடை முழுவதும் அந்தப் புகையின் வாசமுமாக இருந்தது, அப்படியே படுத்து உறங்கிப் போனோம்.

(தொடரும்)





ஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காசி.

 திருச்சிற்றம்பலம்.



சற்றொப்ப ஒரு வருடம் நிறைவடையப் போகிற நாளில் மஹா கும்பமேளாவுக்காக சென்று வந்ததை எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. இதுவும் முழுமையாக இருக்குமா என்று தெரியாது. இது போன்ற பயணங்கள் பற்றி உணர்ச்சி மேலிட, ஆன்மிக உன்னதமாக பலர் எழுதி இருக்கிறார்கள், என்னுடையது ஒரு பயணப் பகிர்வாகத்தான் இருக்கும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஓரிடத்திற்குச் சென்று வந்ததுமே அதைப்பற்றி எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இந்த கும்பமேளா, காசி பயணம் முடிந்து வந்ததும் உள்ளே தோன்றவில்லை. ஏனென்று தெரியவில்லை. சரி என்று உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து அப்படியே விட்டுவிட்டேன். இன்றைக்கு ஃபேஸ்புக்கில் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் சமீபத்தில் காசி பயணம் சென்று வந்து உடன் அழைத்துச் சென்றவர்களிடம் ஏன் ஒருவரும் பயணம் பற்றி எழுதவில்லை என்று கேட்டிருந்ததைப் படித்ததும், உள்ளே சரி, எழுதிடுப்பா என்று ஒரு குரல் சொல்ல, இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தக் கும்பமேளா பயணத்திற்கும் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் ஒரு மிக முக்கிய காரணம் என்பதும் இங்கே கூடுதல் தகவல்.

நானும். நண்பர் அகநாழிகை.பொன்.வாசுதேவனும் சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து அலகாபாத்திற்கு கும்பமேளாவில் கலந்துகொள்ள ரயிலில் சென்று இறங்கியபோது நள்ளிரவாகிவிட்டிருந்தது, ரயில் நிலையமெங்கும் மக்கள் கூட்டமாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள், ரயிலிலிருந்து இறங்கிய அளவிற்கு மீண்டும் ரயில் உள்ளே மக்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மிகப்பெரிய அளவிலான ஒரு காளைமாடு சாவகாசமாக ரயில் நிலையத்தினுள் வந்துகொண்டிருந்தது அவ்வளவு ஜனமும் அதற்கு ஒதுங்கி வழிவிட்டார்கள். நல்ல குளிர் கூடவே ஓரளவு உடல் நனையும் மழை. எங்கே தங்கப்போகிறோம் என்று தெரியாது. நல்ல பசி, மொழி தெரியாது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ரயில் நிலையத்தின் எதிரே உள்ள கடையில் முதலில் சாப்பிட்டுவிடுவோம், பிறகு கடை மூடிவிட்டால் எதுவும் கிடைக்காது எனவே ’அகம் பசியாஸ்மி’ என்று சாப்பிட உட்கார்ந்தோம்.


எதிரே உள்ள ரயில் நிலையத்தில்தான் சில நாட்களுக்கு முன்பாக ப்ளாட்பாரம் மாற்றி ரயில் வந்ததால் முண்டியடித்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருந்தனர். ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி கும்பமேளாவிற்கு வந்தாயிற்று, இனி, இது முடித்து காசி வேறு செல்லவேண்டும், கங்கையில் குளிக்க வேண்டும் அந்த நதி நல்ல நாளிலேயே பிணங்கள் மிதக்குமாம், இப்பொழுது கும்பமேளா நேரம் வேறு இப்பொழுது வந்தது பிழையா? பிணக்குவியலினூடேதான் கங்கையில் குளித்துப் பாவம் கரைக்கப் போகிறேனா? உண்மையில் எதற்குத்தான் இங்கே வந்தேன்? கும்பமேளாவும், காசியும் எனக்கு என்ன தரப் போகிறது? 



சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தோம். ’சங்கம்’ என்று சொல்லப்படும் இடத்திற்குத்தான் அனைத்து வண்டிகளும் மக்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல், ஒவ்வொரு குரு, ஏகப்பட்ட பாவங்கள், ஒரே நோக்கம் திரிவேணி சங்கமம். அங்கே குளிப்பது, பாவத்தைத் தொலைப்பது. அந்த இரவிலும் எங்களுக்கு ஒரு ஷேர் ஆட்டோ கிடைத்தது. ஸ்வாமி ஓம்காரின் அலைபேசியை அழைத்துப் பார்த்தோம் கிடைக்கவில்லை. மற்றொரு இடம் ப்ளான் 'பி' நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். அந்தப்பெயர் சொன்னாலே மிகப் பிரபலம் வண்டிக்காரர்களே கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்ததால், கெத்தாகப் போய் ஆட்டோவாலாவிடம் சொன்னோம், அவர் மேலும் கீழும் பார்த்து 'மாலும் நஹி' 'சங்கம்' சங்கம் என்றார். தெரியாத சாலையில், தெரியாத இடத்தில் பெருவாரியான மக்கள் செல்லும் இடமே மிகப்பெரும்பாலும் நம்முடைய பாதையாக இருக்கும் என்றதனடிப்படையில், வருத்தப்படாத வாலிபர்களாக சங்கத்திற்குச் செல்வோம் என்று முடிவெடுத்தோம்.




நல்ல பனி விழுந்து புகை மூட்டம்போல மெர்க்குரி விளக்கு ஒளி உமிழ்ந்த ஒரு மிகப்பெரிய இடம் எங்களின் வலப்பக்கம் தடுப்புகளுக்கு உள்ளே தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. வரிசையாக டெண்டுகள், இதுதான் சங்கம் என்றார்கள். அதாவது கங்கை நதி தனது அகலத்தைக் குறைத்துக்கொண்ட கரையின் இருபக்கமும் கூடாரங்கள் அடித்து மின் விளக்குகள் பொருத்தி, அதிலேயே சாலைகள் அமைத்து, கங்கையைக் கடக்க மிதவைப் பாலங்கள் அமைத்து, அதைப் பல செக்டார்களாகப் பிரித்து, அதற்கு ஆல்பாந்யூமரிக்கல் அடிப்படையில் அடையாளம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான காவலர்கள், ராணுவ வீரர்கள் துணையுடன் காவல் காத்து அங்கே பல லட்சம் மக்களையும், சாதுக்களையும் தங்க வைத்து கும்பமேளாவிற்கு அவர்களின் பூஜைகளையும், நேர்த்திக் கடன்களையும் தீர்க்க ஒரு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடத்திற்குப் பெயர்தான் 'சங்கம்'.



இந்த ஆளரவமற்ற இரவு நேரத்தில், பல்லாயிரக்கணக்கான டெண்டுகளில் எங்கே ஸ்வாமி ஓம்காரைத் தேடுவது? நள்ளிரவு தாண்டிய 2 மணிக்கு எங்கள் முன் இருக்கும் ஒரே வழி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்தான், அந்த சத்திரத்தின் விலாசத்தைச் சொன்னால் ஆட்டோக்காரர் முதற்கொண்டு, அந்நேரத்திலும் காவல் காத்த போலீஸ் வரை யாருக்கும் தெரியவில்லை, அநேகமாக அவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும். கனத்த பைகளுடன் ஒருமாதிரி நாங்கள் சொன்ன இடத்தில் ஆட்டோ ஓட்டுனர் எங்களை இறக்கிவிட்டபிறகு சுற்றித் திரிந்தோம். பல அலைச்சலுக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகை எழுதப்பட்ட அந்தச் சத்திரம் எங்களுக்குப் புலப்பட்டது. பலமுறை கதவு தட்டி இனி கதவு திறக்காது, இந்தக் குளிரில், மழையில் ஒதுங்க இடமில்லாமல் தூக்கத்தைத் தொலைத்து, சபிக்கப்பட்ட இரவாகப்போகிறது என்று துவண்ட நேரத்தில் சத்திர மேலாளர் கதவைத் திறந்தார். ஏற்கனவே அவரிடம் தொலை பேசி இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் அவர் தங்கி இருந்த அறையிலேயே எங்களையும் படுத்து உறங்கச் சொன்னார். நன்றி கூறிப் படுத்ததுதான் தெரியும். காலை 6 மணிக்கு முழிப்பு வரும் வரையில் கனவு கூட வராத ஆழ்ந்த உறக்கம்.





காலையில் ஸ்வாமி ஓம்கார் அவர்களைத் தொடர்புகொள்ள முடிந்ததால், அவர் வழிகாட்டுதல் படி அவர் சங்கத்தில் தங்கி இருந்த செக்டாருக்கு நடந்து செல்ல ஆரம்பித்தோம். இரவில் ஆளரவமற்று அமைதியாக இருந்த ஊர் அதனளவிற்கு பல்லாயிரம் மடங்கு மக்களை எங்கே பதுக்கி வைத்திருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. 





எங்கெங்கு நோக்கினும் மக்கள். சாரி, சாரியாக, சாரியிலும் ,வேட்டியிலும் ,பைஜாமாவிலும் ,பேண்ட் சர்ட்டிலும், அதுகூட இல்லாமலும் சங்கத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கங்கையைக் காண ஆவலுடன் கங்கையின் கரையிலேயே நடந்துகொண்டிருந்தோம், நாங்கள் நடந்துகொண்டிருந்ததே கங்கை ஓடும் பாதைதான், இது கரையல்ல என்று அப்பொழுது தெரியாது. வெள்ள காலத்தில் நாங்கள் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஆக்ரோஷமாக இந்த நதி பொங்கிப் பாயும் என்று பின்னர் அறிந்துகொண்டோம். நாங்கள் செல்ல வேண்டிய செக்டர் 12ற்கான மிதவைப் பாலத்தில் முதன் முறையாக கங்கையைக் கடக்கிறோம். அடேங்கப்பா, நதியின் அகண்ட அந்தப் பிரம்மாண்டம் கண்களில் நிறைகிறது. சலனமில்லாமல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்கிறது. பளிங்கு போல நீர், கிட்டத்தட்ட முப்பது நாட்களாக கும்பமேளா நடந்துகொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் குளித்து முடித்துச் சென்ற இடம், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் குளிக்கப்போகிறார்கள், கரையின் இரண்டு பக்கமும் கூடாரம் அமைத்து தங்கி இருக்கிறார்கள். காலைக்கடன் முதல், துணி அலசி, சாப்பாட்டுப் பாத்திரங்கள் கழுவுவது வரை அங்கே கோடிக்கணக்கான முறை நடக்கிறது. ஆனாலும் நீர் பளிங்கு போல சுத்தமாக இருக்கிறது. கரைகளில் நீத்தார் கடனுக்காக அவர்கள் விட்ட சாமந்திப் பூக்கள் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. எல்லாவற்றையும் இந்தப் பிரம்மாண்ட மகாநதி தன்னுள்ளே விழுங்கி தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்வதாகவே பட்டது. மனிதன் தன்னை அசுத்தப்படுத்துவது நதிக்குப் புதியதா என்ன? 


மீண்டும் ஒரு தேடுதல் படலம் ஆரம்பமகியது, ஓம்கார் அவர்களின் குடிலைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். தற்காலிகமாகப் போடப்பட்டிருந்தாலும், சாலைகள், குடில்கள் எல்லாம் ஒரே போல இருந்ததாலும் அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டு ஒரே இடத்தை வித விதமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்ததும் ஒரு காரணம். எங்கெங்கு காணினும் முகங்கள், முகங்கள், சலிக்காமல் எதிரே வந்துகொண்டே இருந்த மக்கள் வெள்ளம். இரவில் இருந்த குளிர் இப்பொது இல்லை, நல்ல சுட்டெரிக்கும் வெயில், இதென்ன இங்கே பருவ நிலை இப்படி இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டே ஒருவழியாக ஓம்கார் அவர்களின் குடிலின் அருகாமையில் வந்ததும் அலைபேசினோம், அவரே வந்து எங்களை அழைத்துச் சென்றார். 



அழகான தற்காலிக டெண்ட் அடித்து, அருமையான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிஷ்யர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆகா, கும்பமேளாவிற்கு வந்துவிட்டோம், ஜனத்திரளையும் பார்த்தாயிற்று, இனி திரிவேணி சங்கமத்தில் குளித்துவிட்டால் சாதனை முடிந்தது என்ற இறுமாப்பில் ஸ்வாமிஜியிடம் "என்னா ஜனம் சாமி, எவ்ளோ பெரிய நதி? கும்பமேளா ஆஸம், பட் வெதர்தான் நேத்து நைட்டுக்கு இப்ப தலைகீழா இருக்கு என்று சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டே, நாங்க இங்க வந்து ஒரு மாசம் ஆகுது, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி தட்பவெப்பம் மாறுது என்றார். ஒரு வாரத்திற்கு முன் பெரு மழைபெய்து தற்பொழுது டெண்ட் இருக்கும் இடத்தில் பாதி அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கால்வாசி மக்கள் உயிர்பயத்தில் கிளம்பி விட்டார்கள் என்றும் தற்பொழுது நாங்கள் காண்பது 25 சதவீத மக்கள்தான் என்றபொழுது நடு மண்டையில் நச்சென்று குட்டியதுபோல இருந்தது. ஆக, சாவகசமாக எல்லா வசதிகளோடு இருக்கும் நிலையில்தான் எங்களுக்கு இங்கே வரும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. சரி குளித்துவிட்டு வாருங்கள், சாப்பிடுவோம் என்று ஸ்வாமிஜி அவரின் மாணவர்கள் இருவரோடு எங்களை அனுப்பி வைத்தார். 








பல தலைமுறைகளாக இங்கேயே வசிப்பதைப் போலவே மக்கள் சாவகாசமாக டெண்டுகளில் வசிக்கத் துவங்கி இருந்த பல சிறிய டெம்பரவரி தெருக்களின் வழியாக திரிவேணி எனப்படும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு நானும், வாசுவும் குளிக்கச் சென்றோம்.



(தொடரும்..)