பலா பட்டறை: கடல் - விமர்சனம்.

கடல் - விமர்சனம்.

அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும்.

அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.

என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்???

அதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா? ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன்? கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ?

ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா :(

-0-

குழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும்.

அய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.

முழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.

ரீ ரெக்கார்டிங் - அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்யூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்?

-0-

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது.


மீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும்,  மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

-0-

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )

கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! 


.

12 comments:

நிகழ்காலத்தில்... said...

இதயத்தை திருடாதே..பலதடவை பார்த்த படம்தான்...


சுமாரா 40 ரூபாய்க்கு கூட கடல் ஒர்த் இல்லையா :)

வவ்வால் said...

படைப்புலகில் இருப்பவர்களுக்கு கற்பனாத்திறன் என்பது சிறிது காலம் மட்டுமே உச்சத்தில் இருக்கும், பின்னர் சரிய ஆரம்பித்து ஒன்றுமில்லா நிலையை அடைவார்கள்.

பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,மகேந்திரன்,பாலுமகேந்திரா என பல படைப்பாளிகளை சொல்லலாம், அதே நிலையை இப்போ மணிரத்னமும் அடைந்துவிட்டார், இனிமேல் அவரது படைப்பில் கிரியேட்டிவிட்டி எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

இனிமே இயக்கத்திற்கு வி.ஆர்.எஸ் வாங்கிட்டு தயாரிப்பில் மணிரத்னம் கவனம் செலுத்தலாம்.

முரளிகண்ணன் said...

உண்மையிலேயே படம் முடிந்து வரும் போது எனக்கு ஆத்திரம் வந்தது.

SIVAKUMAR said...

படம் பார்த்தபிறகு எனக்குள்ளே....
”தியேட்டரில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; ஆப்ரேட்டர் பின்னால் இருக்கிறார்; நீ சீட்டில் இருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக
( அதிகபிரசங்கி 6:9) ” :D

geethappriyan said...

இதத்தான நாங்க அப்போதுலேந்தே சொல்றோம்,சோ சேட் நண்பரே

vasu balaji said...

:)))) sema

ராம்ஜி_யாஹூ said...

nice review

Azhagan said...

"நல்ல மியூஸிக் டைரக்டர்"...........ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல

ILA (a) இளா said...

ஏன் ஏன் ஏன்?

King Viswa said...

கொடுமையான அந்த (தி டார்க் நைட் பட தொங்கும் ஜோக்கர்) கிளைமேக்ஸ் சீனில் தியேட்டரில் பாதிபேர் எழுந்து சென்று விட்டனர். இத்தனைக்கும் நான் பார்த்தது இன்றைய மாலைக்காட்சி. திங்கட்கிழமையில் இருந்து தியேட்டர்களில் காற்றுதான்.

King Viswa said...

//கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! //

அட்டகாஷ்.

கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து கமெண்ட் எழுதிவிட்டேன், என்னையும் சேர்த்து மன்னியும்!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

"இந்த படத்துல சுமாரா எத்தனை சீன இருக்கும்...?"
"அட நீங்க வேற.......எல்லா சீனுமெ சுமாரா தான் இருக்கு....."