பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.

ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.



ஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. 


மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிருந்தே ஆசிர்வதிக்க) கொல்லிமலை செல்லலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பியபொழுது இது மற்றுமொரு சாதாரணப் பிரயாணம் என்றே நினைத்திருந்தோம். 

சென்னையிலிருந்து கிளம்பி பைபாஸில் சென்று கொண்டிருந்தபோது சிறிது சிரமப் பரிகாரத்திற்காக ஓரிடத்தில் கார் நிறுத்தவேண்டி இருந்தது, செல்வது கொல்லிமலை என்பதால் காணும் வித்தியாச மனிதர்களை கூர்ந்து நோக்கும் மனோபாவம் ஏனோ உள்ளே நுழைந்துவிட்ட தருணத்தில் அந்த மனிதரைப் பார்த்தோம். இன்னும் அழுக்கேறமுடியாத அளவிற்கான உடை, உடல், பரட்டைத் தலை முடி, தாடியுடன் ஒருவர் எங்களைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். சரி ஏதேனும் காசு தருவோம் என்று பணத்தை எடுத்து அவருக்குத் தந்தேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் என்னை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோலப் பார்த்து நகர்ந்து சென்றுவிட்டார். அவர் பார்த்த பார்வையின் உக்கிரத்திலிருந்து வெளிவரும் முன்பாகவே..

இதில் யார் பிச்சைக்காரன் நீயா? அவனா? என்று மணிஜி கேட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. ஆமாம், அவருக்கென்று எந்தக் கவலையுமில்லை, காசும் காகிதமும் அவருக்கு ஒன்றுதான். நாம்தான் பிச்சை எடுக்க அனுதினமும் அலைந்துகொண்டிருக்கிறோம். உனக்கு என்ன பிச்சை வேணும்னு எனக்கு காசு பிச்சை தர்றன்னு அவன் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ? என்று சிரித்தபடியே கேட்டார் மணிஜி. உண்மைதான். அப்படித்தரும் காசுக்குப் பின்னே மனிதநேயம் தொடங்கி, தான தர்மம் என்று நீண்டு தலைகாக்கும் கவசமாகி நிற்கின்ற அந்த பிச்சைப் பணம், உண்மையில் நான் எங்கோ யாரிடமோ வேலை என்று செய்து எடுத்த சம்பாத்தியப் பிச்சைதானே? 

மீளமுடியாத இந்த மாய யாசகத்திலிருந்து அவர் சுலபமாக வெளியேறிவிட்டதாகவே தோன்றியது. பிச்சையினின்றும் விலகிய ஒருவருக்கு பிச்சை எடுப்பவன் எங்கிருந்து பிச்சை போடுவது? அவர் மீண்டும் எங்கள் கார் அருகில் வந்தார், ஏதும் சட்டை செய்யாது அங்கிருந்து நகர்ந்து சென்றுகொண்டே இருந்தார். 

நார்மலான மனிதர்களை அப்நார்மலாகப் பார்க்கும் மனோபாவம், அப்நார்மலான நம்மைப் போன்றவர்களுக்கு சுலபத்தில் வந்துவிடுவதோடு, இவரைப் போல சுதந்திரம் இல்லாத கூட்டுப் பறவை ஆனேனே என்ற வெஞ்சினத்தில் இப்படி இருப்பவர்களைப் பைத்தியக்காரன் என்று பெயரிட்டழைத்து சமாதானம் செய்துகொள்கிறது மனது, என்று எண்ணியபடியே பயணத்தைத் தொடர்ந்தோம்.

--

ஆத்தூர் தாண்டி நாமகிரிப்பேட்டையில் திரும்பிச் சென்று  மலை அடிவாரத்திலிருந்து சுமார் 76 வளைவுகளைக் கடந்து கொல்லிமலை உச்சியை மாலை அடைந்தபோது அருமையான உபத்திரவம் செய்யாத குளிர் எங்களைச் சூழ்ந்துகொண்டது. இந்த வளைவுகள் எப்படி இருக்கும் என்று காண விரும்பினால் கூகிள் மேப்ஸில் கொல்லி ஹில்ஸ் என்று தட்டச்சி்ப்பாருங்கள், முதன் முதலில் பேனா எடுக்கும் குழந்தை வெள்ளைத்தாளில் கிறுக்கிய சித்திரத்தை ஒத்து இருக்கும். சாலைகள், தடுப்புச் சுவர்களைக் காட்டும் ரிப்ளெக்டர்கள் போன்றவைகள் சிறப்பாக இருப்பதால், பிரயாணம் ஏதும் பிரச்சனை இன்றி இருந்தது. 

அடியேனும், தோழர் கும்க்கியும், அகநாழிகை வாசுவும்


இரவில் மின்விசிறி தேவையே இல்லாத அளவிற்கு கம்பளியில் நுழைந்து தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சி தந்தது கொல்லிமலை. உயர்ந்து வளர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அதன் அடியூடே பின்னிப் பிணைந்த மிளகு கொடிகளும், பல்வேறு மரங்களுமாய் கேரளாவைப் போன்றே காட்சி அளித்தது. 

சீக்குப் பாறை வ்யூ பாயிண்ட்



இதமான வெயில் வருட நாங்கள் முதலில் சென்றது சீக்குப் பாறை என்றழைக்கப்படும் ஒரு அழகான வ்யூ பாயிண்ட். மிகப் பெரிய பசுமைப் பள்ளத்தாக்கு, இடதுபுறம் அழகான பாறைகளையுடைய மலை சூழ, அந்த இடத்தில் எங்கள் நால்வரைத் தவிர்த்து யாருமே இல்லை. பேரமைதியுடன் பசுமையை ரசித்து கொஞ்சநேரம் பொழுதை அங்கே கழித்தோம். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்தினிடையே இது போன்ற இடங்களைக் கண்டுவிட்டு தனிமையில் காணும்பொழுது கிடைக்கும் பரவசம் வித்தியாசமான அனுபவம்.

மாசிலா அருவியில் அகநாழிகை வாசு

மாசிலா அருவிக்குச் செல்லும் பாதை


அடுத்து அங்கிருந்து நாங்கள் சென்றது மாசிலா அருவி. புதியதாக பாதை போட்டு சிறப்பாக அமைந்திருந்தது அருவிக்குச் செல்லும் வழி, இங்கும் கூட்டமில்லை, மிகப்பெரிய உயரத்திலிருந்து சமதளத்தில் விழுந்து பிறகு மீண்டும் ஒரு சிறிய குன்றைக் கடந்து நம் மீது விழும் இந்த இயற்கையின் அற்புத அருவியில் திகட்டத் திகட்டக் குளித்தோம்.( ஜட்டி போட்டுக்கொண்டு (!) குளிக்கக்கூடாது என்ற விளம்பரங்கள், மூலிகை எண்ணெய் மசாஜ், மிளகாய் பஜ்ஜி, சோப்பு, எண்ணெய் வழுக்கல் என்ற) எந்த இடையூறும் இல்லாது அருமையான ஒரு இயற்கைக் குளியல் போட்டு வெளியே வந்து அங்கே விளைந்த கொய்யாப்பழத்தைக் கொறிக்க வாங்கிக்கொண்டு நாங்கள் சென்ற இடம் அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் அதன் அருகிலிருந்த ஆகாய கங்கை அருவி.

--

ஆகாய கங்கைக்குச் செல்லும் படிக்கட்டுகள்


அறப்பளீஸ்வரர் கோவில் அருகில மதிய உணவை முடித்துக்கொண்டு, எதிரே உள்ள அருவிக்கான நுழைவாயிலில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பெயர், முகவரி, அலைபேசி எண் போன்ற தகவல்களை அங்கிருந்த புத்தகத்தில் எழுதிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கத் துவங்கினோம், சுமார் 1100 படிக்கட்டுகள் கீழிறங்க வேண்டும். வழியிலேயே ஒரு வ்யூ பாயிண்ட்டும், பல குகைகளும் வருகிறது. எதிரில் குளித்துவிட்டு வந்த ஓரிருவர் தவிர்த்து அங்கே இயற்கையும் நாங்களும் மட்டுமே இருந்தோம். இவ்வளவு படிக்கட்டுகள் இறங்கி குளித்துவிட்டு மீண்டும் ஏறி வரவேண்டுமா? என்ற தயக்கம் இருந்தது. மேலும் சற்றுமுன்னர்தான் மாசிலா அருவியில் ஆனந்தக் குளியல் போட்டிருந்ததால் உடனே இன்னொரு அருவிக்கான் ஆர்வம் வரவில்லை. ஆனாலும் மெதுவே இறங்கிச் செல்லலானோம். பாதி இறங்கும்போதே ’ஹோ’ வென்று அருவி விழும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததே தவிர்த்து அருவி கண்ணுக்கே தெரியவில்லை. முழுவதும் கீழிறங்கிய உடன் படிக்கட்டுகள் முடிந்து பாறைகள் தென்பட்ட இடுக்கு வழியே நாங்கள் கண்ட காட்சி மெய்சிலிர்க்கவைத்தது. 

அதோ ஆகாய கங்கை அருவி..

பரிசுத்தமான இயற்கை.

காற்றும், சாரலும் விசிறி அடித்த இடம்.


யோசித்துப்பாருங்கள், யாருமற்ற வனாந்திரம். மிகப்பெரிய உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் அருவி, அங்கே குளிக்க அமைக்கப்பட்டிருந்த கம்பிகளைத் தாண்டி விழுந்துகொண்டிருந்தது. விழுந்த வேகத்தில் பலமான காற்றோடு சாரலைக் கொண்டுவந்து உடல் மீது பொழிந்தது. நாங்கள் அருவிக்குச் சமீபம் செல்வதைப் பற்றி யோசிக்கவே இல்லை, அருவிக்கு சுமார் 50 அடி தொலைவிலேயே நின்றுவிட்டோம். அதுவே, நிற்க முடியாத அளவிற்கு எங்களைத் தாக்கி பின்னே தள்ளிக்கொண்டிருந்தது. எந்த யோசனையுமற்று அதனையே பார்த்துக்கொண்டு என்னென்னவோ கத்திக் கூப்பாடு போட்டோம். அப்படி ஒரு அனுபவித்திராத பரவச நிலையை அந்த அருவியின் வேகத்தில் அடித்த சாரலும் காற்றும் எங்களுக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. 

தாண்டவம் :)


நின்றோம், முதுகு காட்டினோம், படுத்தோம், கத்தினோம், கையைக் காலை நீட்டி நடனமாடினோம். அங்கே எங்களையும் அந்த மலைகளையும் காடையும் தவிர்த்து யாருமே இல்லை. எப்படி யாருமே இல்லாத இந்த இடத்தில் எந்த உதவியும் கிடைக்காத ஓரிடத்தில் இப்படி ஒரு பயமுமில்லாமல் இருக்கிறோம் என்று எதுவும் நினைக்கமுடியாத அளவிற்கு அருவி முழுவதும் எங்களை ஆட்கொண்டது. மாலை 3.30 மணி சுமாருக்கு இருட்டத்துவங்கிவிடும் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை பிரிய மனமில்லாது மெதுவாக மேலேறி வந்தோம். எதிரில் உள்ள கடையில் மூலிகை சூப் குடித்ததும் உடல் அசதி எல்லாம் சட்டென்று மறைந்தது மனப்பிரமையா, மனப் பிராந்தியா என்று தெரியவில்லை. 

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்த அனுபவத்தை முடிந்தால் நீங்களும் ஒருமுறை கொல்லிமலை சென்று ஆகாச கங்கையைப் பார்த்துவிடுங்கள். ஆயிரத்திச் சொச்ச படிக்கட்டுகளில் இயற்கை ஒரு பெரிய பொக்கிஷத்தை வருடம் முழுவதும் நமக்காக அங்கே ஜீவனுடன் வைத்திருக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்கு ஆகாச கங்கை எனும் கொல்லிமலை அருவி உங்களுக்கு வழங்கிடும்.

விவசாய மலைவாழ் இளைஞர்களுடன் மணிஜியும், வாசுவும்


பெரிய அளவில் சுற்றுலா பகுதிகள் எதையும் வைத்திருக்காததாலேயே கொல்லிமலை ஊட்டி கொடைக்கானல் அளவிற்கு கும்பலை ஈர்க்கவில்லை என்று தெரிகிறது. அங்கே சுற்றிய வழி எங்கும் வாழையும், மிளகும் அமோகமாகப் பயிரிட்டிருக்கிறார்கள். வழியில் ஒரு தோட்டத்தில் அப்படி வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்களிடம் பேசிவிட்டு 5 வாழைக்கன்றுகளும் வாங்கி வந்தோம். இன்னும் பார்க்கவேண்டிய சில இடங்களை நேரமின்மை கருதி செல்லமுடியவில்லை. 

மலை உச்சியில் அதிரம்பள்ளி அருவி ஒரு தரிசனமென்றால், அதனை ஒத்த அடிவாரப் பிரம்மாண்டம் இந்த ஆகாச கங்கை. 

இன்னும் இந்த இடுகையை சிறப்பாக எழுதி இருந்திருக்க முடியும். ஆனாலும் அனுபவித்த அந்த அருவியின் தாக்கத்திலிருந்து மீள வழியின்றி கிடைத்த வார்த்தைகளைக் கோர்த்து கொல்லிமலைப் பிரயாணத்தை இங்கே பதிவு செய்கிறேன். 

கொல்லிமலைப் பற்றி மேலும் சில தகவல்கள் :  விக்கி




நன்றி! :)   

12 comments:

ஓலை said...

Ramyamaaga irukku.

vasu balaji said...

காவி கட்னதால தத்துவம் தோணிச்சா, தத்துவத்துக்கு மேட்சா காவியா:))

/ஆத்தூர் தாண்டி நாமகிரிப்பேட்டையில் திரும்பிச்/

தாண்டி திரும்பறதுக்கு நடுவில நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலையே

பட்டிகாட்டான் Jey said...

கொல்லை மலை விசிட் அடிச்சதுல... பாதி சித்தர் ஆயிட்டா மாதிரி தெரியு அண்ணேன், எழுத்திலும், போட்டோஸ்ல இருக்கிற காவி+ போஸ்....:-))))

CS. Mohan Kumar said...

உம்ம கிட்ட இருக்க கெட்ட பழக்கமே இதான் டிராவல் பதிவை, பெரிசா எழுதிப்புட்டு புசுக்கு புசுக்குன்னு பதிவை முடிச்சு புடுறது

இப்னு அப்துல் ரஜாக் said...

Nice

ஜோதிஜி said...

நாம் பார்க்கும் ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் யோசிக்க வைக்கும் (நமக்கு) நடமாடும் த்த்துவம்.

திவாண்ணா said...

நல்ல அனுபவம் போல இருக்கு!
சூழ்நிலை, இடம் மாறும்போது வாழை அதே மாதிரி விளையுமா?

ஸ்வாமி ஓம்கார் said...

பரதேசியின் என ஒருமையில் எழுதி இருக்கிறீர்கள். கட்டுரை படங்கள் வேறு காட்டுகிறதே ;) ? #டவுட்

நாடோடி இலக்கியன் said...

// முதன் முதலில் பேனா எடுக்கும் குழந்தை வெள்ளைத்தாளில் கிறுக்கிய சித்திரத்தை ஒத்து இருக்கும்.//
அருமை பபஷா.

திவாண்ணா said...

இந்த வளைவுகள் எப்படி இருக்கும் என்று காண விரும்பினால் கூகிள் மேப்ஸில் கொல்லி ஹில்ஸ் என்று தட்டச்சி்ப்பாருங்கள்,///
http://goo.gl/maps/Pw6ff

துபாய் ராஜா said...

இந்த தடவை எறும்புச் சித்தர் கூட வரலையா...

rajasundararajan said...

சங்க இலக்கியங்கள் நெடுகப் பேசப்படும் 'கொல்லிப்பாவை' என்னாயிற்று?