பலா பட்டறை: 04/01/2011 - 05/01/2011

பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


.


பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.

பூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ஐந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.

 கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.

இதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.

ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா! அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி!

ஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.

இரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.

அங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம்!!??? கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா? என்பது போல் இருக்கிறது :))

வெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது!.

மலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை

சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்

அந்த நால்வர்!

முதலில் வரும் சிமெண்ட் பாதை

பின்னர் வரும் கற் பாதை

காட்டினூடே செல்லும் பாதை

கடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை
இறங்கும் வழியில்

முதலில் இறங்கவேண்டிய மலைப்பாதை

சூலம்!

ஓம் நமச் சிவாய :))

இன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து

உதயத்திற்கு முன்பான ட்ரைய்லர்!

வெண் பஞ்சு மேகங்கள்

விளிம்பு நிலை மோட்ச தியானம் :))

கோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..


கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே! மறக்க முடியாத ஒரு அனுபவம்! 

மிக்க நன்றி!

:))

வெய்யக் கால பயணங்களில்..!

                                                               மெரீனா ஒரு மாலை

           வீட்டுத் தோட்டத்தில் அரளி இலை கபளீகரம் செய்யும் கேட்டர்பில்லர்

பெசன்ட் நகர் பீச் அறுபடை முருகன் கோவில் பின்புறம்
                                 வெட்டப்பட்ட மரம் - வண்டலூர் உயிரியல் பூங்கா
  பூக்குமா பூக்காதா என்று பல மாதம் காக்க வைத்த லில்லி - வீட்டுத் தோட்டம்

வண்டலூர் சுற்றுலா சித்திரைத் திரு நாள் அன்று மயில்ராவணன், சாறு சங்கருடன்


                                                              கலர் புலி

                                                               வெள்ளைப் புலி
                                                                 சாறு சங்கர்
                                                                    மயில்





மண்டை காயும் வெயில் அடித்தாலும், உள்ளே மரங்களூடே நடந்ததில் சுகமாகத்தான் இருந்தது. முதலைகள் மற்றும் நீர் யானைகள் மேலெல்லாம் தண்ணீர் பாட்டில்களை மக்கள் வீசி எறிந்திருந்தார்கள் :(((

தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல மிருகங்கள் இந்த வெப்பத்தையே சமாளிக்க இயலாது சோர்ந்து போயிருந்தது.

இன்னும் சிறப்பாக எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம், சிறப்பான உயிரியல் சுற்றுலா இடமாக மாற்றலாம். மாற்றம் வருமென்று நம்புவோம். ஹும்ம்!



.

உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 3.


.

ஆர்கானிக் லிவிங் ஆர்கானிக் பார்மிங் எது சரி??

இயற்கை வழி வேளாண்மை என்பது தற்பொழுது சிறிய அளவிலேயே நடந்து வருகிறது. காரணம் பெரும்பாலான விவசாயிகள் மரபு வழிக்கு இன்னும் மாறாமல் இரசாயண வழி விவசாயத்தையே பிரதானமாக செய்துகொண்டிருக்கிறார்கள். 

மேலும் அரசாங்கத்தில் எல்லா வசதிகளும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது (அவை சொற்பமாக இருந்தாலும்) என்ன விஷத்தைப் போடுகிறார்? எவ்வளவு? என்றெல்லாம் எந்தக் கணக்குவழக்கும் இல்லாமல் அவர்களால் அதிக விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சுலமாக செயல்பட முடியும், சந்தைப் படுத்த முடியும்.

ஆனால் இயற்கைவழியில் அவ்வாறல்ல! அதற்கேற்ற நடைமுறைகள் பலவற்றைக் கடைபிடிக்கவேண்டும். குறைந்தது 3லிருந்து 5ஆண்டுகள் ரசாயணம் ஏதும் தூவப்படாமல் ஒரு நிலம் தயார் செய்யப்படவேண்டும். அந்த நிலத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீர்முதற்கொண்டு பரிசோதனைகள் அடிப்படையில் எந்த நஞ்சும் கலக்காது என்ற திறனாய்வு செய்யப்படவேண்டும். மேலும் அக்கம் பக்கத்தில் ரசாயண விவசாயம் செய்யப்படுமானால் அவர்களின் நீர் அல்லது ரசாயணத் தெளிப்பு இந்த வயலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் நிலத்தில் சில முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

நிலத்தை உழுவது, மேம்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, விதைகள் எங்கிருந்து பெறப்பட்டது, என்னவிதமான எருக்கள் பயன்படுத்தப்பட்டது, என்று பலவிஷயங்களை ஆவணப் படுத்தவேண்டும். இவ்வளவு ஏன்? நீங்கள் பயன் படுத்தும் ஏர் கலப்பை முதல் மண்வெட்டி வரை ரசாயண நிலத்தில் உபயோகப் படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது!!

மேலும் ரசாயணங்கள் கொட்டப்படும்போது உடனடியாகவும் ஒரே பயிரையும் தொடர்ந்து விளைவிக்கலாம். ஆனால் இயற்கை முறையில் ஒரு முறை பயிர் செய்து நிலத்திற்கு சிறிது ஓய்வளித்து வேறொரு பயிரை விளைவித்தால் மட்டுமே மண் வளம் அதிகரிக்கும்.

நீங்கள் செய்வது பரிபூரண இயற்கை விவசாயம் என்பதை அப்பொழுதுதான் அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் அங்கீகாரம் செய்யும். அப்பொழுதுதான் நீங்கள் ஆர்கானிக் என்று லேபிள் கொண்டு மக்களிடையே அவற்றை விற்க முடியும். ஒரு வகையில் இம்மாதிரியாக கட்டுப்பாடுகளே மக்களுக்கு சரியான தரமான இயற்கை பொருட்களை கொண்டு சேர்கிறது என்றாலும், இவ்வளவு சுமையை நஞ்சைக் கலக்காது விவசாயம் செய்பவன் தலையில் ஏற்றப்பட்டிருப்பதால் அவன் இழப்புகளை சரிகட்ட அதிக விலைக்கு விற்க நேரிடுகிறது. 

இதில் மற்றொரு விஷயமும் கவனிக்கவேண்டும். விதைகளையே உரிமை கொண்டாடும் அளவிற்கு யோசித்த அதி புத்தி சாலிகள் இதையும் விட்டு வைப்பார்களா? அதிக அளவு மக்களின் ஆர்வம் இதில் திரும்பும்போது காசு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட்டுகள், விதிகளை அவர்களே எழுதி விவசாயிகளை கையேந்த விடுவார்களோ? என்ற அச்சமே இந்த தலைப்பிற்குக் காரணம்.

ஆர்கானிக் பார்மிங் என்பதில் வியாபார நோக்கும் அதனால் எழும் சிக்கல்களும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை. காசு எங்கே ப்ரதானமாக இருக்கிறதோ அங்கே நப்பாசைகளும், துரோகமும் சுலபமாய் எஜமானனாகிவிடுகிறது. வருமானம் முக்கியமாகும்போது சமரசங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. இதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதாரண டீத்தூள் முதல் 50 பைசா சாக்லேட் வரையில் இன்றைக்கு போலிகள் சர்வ சாதாரணமாக நம்மிடையேஊடுருவி விட்டன. 

என்ன தீர்வு? என்று பார்த்தால் இயற்கைவழி வாழ்வுமுறை ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும். சொல்வது சுலபம் ஆனால் நடைமுறையில் எல்லோரும் விவசாயம் செய்ய முடியுமா? என்றால் அது கடினம்தான். ஆனால் நான் இருக்கும் இடத்தில் எனக்கு எல்லாம் கிடைக்கவேண்டும், அதுவும் நஞ்சில்லாமல் கிடைக்கவேண்டும், ஆனால் சகாயமாகக் கிடைக்கவேண்டும் என்று கூழுக்கும் மீசைக்கும் அந்தக் கூழ் இருக்கும் சொம்புக்கும் அதைக்கொண்டுவரும் நபரின்மேலும் ஆசை கூடிக்கொண்டே போவதால் அடுத்தவரை குறை சொல்ல அருகதையற்றவர்களாக ஆகிறோம். விவசாயம் என்பது ஏதோ ஆயிரம் மலைதாண்டி ஆழ்கடலில் நடைபெறுவதல்ல. பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் பயணப்படும்,  காத்திருக்கும் நாம் இதுபோன்று விவசாயம் செய்பவர்களை நேரடியாக சந்தித்து பொருட்கள்வாங்கி ஊக்குவித்தாலே நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வழி செய்தவர்களாகிறோம். இதற்கான அதிக தேவைகள் உருவாகும்போது அதற்கான சந்தைகள் நிச்சயம் நமக்கு அருகிலேயே உருவாகும் உதாரணம் -செல்போன். தினமும் பழமோ, பூவோ வழங்கும் ஒருவர் உங்களுக்கு ஒருபோதும் கெட்டுப்போனதை விற்கமாட்டார் என்ற சின்ன புரிதலே இதற்குப் போதும். 

வெறும் உணவுதாண்டி வாழ்வுமுறைகளிலும் கவனம் வைக்கவேண்டிய அவசியமும் வந்துவிட்டது சிறிது சிறிதாய் நாம் சேற்கும் மக்காத குப்பைகளின் மலைகளை புறநகர் பகுதிகளில் பெரும்புகையோடு பார்த்திருக்கிறீர்களா? இதுதான் நம்மின் வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் சேர்த்த சொத்து. இருக்கும் நிலத்தில் நஞ்சுபுகுந்து நாசமானதுபோக, மிச்ச நிலத்தில் ப்ளாஸ்டிக் அடைத்துக்கொண்டிருந்தால் என்னதான் தீர்வு? இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பொதுக் குழாயில் உங்களால் பைப்பைத்திறந்து அந்தத் தண்ணீரை அப்படியே குடித்திருக்க முடியும். ஆனால் இன்று? இருபதே ஆண்டுகளில் எங்கிருந்து தண்ணீரில் சேர்ந்தன அத்தனை விஷங்கள்? 20 ரூபாய்க்கு ஒரு இளநீர் வாங்க விலை அதிகம் என்று யோசிக்க வைத்து 30 பைசா ஒன்றுக்கும் உதவாத கோலாவை 20 ரூபாய்க்கும், இலவசமாய் கிடைத்துக்கொண்டிருந்த குடி நீரை 15ரூபாய்க்கும் விற்கும் அவர்களின் சாமர்த்தியம் என்றைக்கு நமக்குப் புரியும்? அடுத்து ஆக்ஸிஜனை பாட்டிலில் அடைத்து விற்பார்களோ என்னமோ?

மழை நீர் சேகரிப்பையே ஏனோதானோவென்று கட்சி முலாம் பூசி செலவாகிறதே என்று கவலைப்படுபவர்களில் பலர், பத்துகுப் பத்து இடம் கூட மண்ணைக் காட்டாது சிமெண்ட் போட்டு மூடி அதில் கட்டிடம் கட்டி கடன் வாங்கியாவது காரையோ, எல்ஈடி டீவியோ வாங்கத் தயங்குவதில்லை, ஒரு சாதாரணச் சட்டையை அதன் கம்பெனி லோகோவிற்காக 4000 ரூபாய் கொடுத்து வாங்கத் தயங்குவதில்லை. அருகாமையிலிருக்கும் கடைக்கு நடப்பதுமுதல், ஒரே ஒரு சிறிய செடியேனும் வளர்ப்பது முதல், ப்ளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்க்க முயல்வது முதல் அதற்காக நம் பிள்ளைகளைத் தயார் படுத்துவது முதல் ஒவ்வொருவரும் சிறிய அளவில் முயற்சிகளை ஆரம்பித்தாலே போதும். பன்றிக் காய்ச்சலைவிட வேகமாகப் பரவவேண்டிய விஷயங்கள் இவைதான்.

படியுங்கள்..


இவர்களின் அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. காய்கறித்தோட்டம் முதல் இயற்கை வழி வேளாண்மைக்காக பல விஷயங்களை புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் விற்பனை செய்கின்றனர். மேலே இருப்பது அவர்களின் வலைத்தள முகவரி. விதைகளும் சில ஆர்கானிக் பொருட்களும் இவர்களிடத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நஞ்சில்லா விவசாயத்திற்கான ஒரு அமைப்பு. நேரம் கிடைப்பவர்கள் ஒருமுறை சென்று வரவும், புத்தகங்களையும் வாங்கிப் படிக்கவும். வெண்டை, கத்தரி, மிளகாய் போன்றவற்றிற்காக சிறப்பு தனி புத்தகங்களையே போட்டிருக்கிறார்கள். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் விவசாய அறிவை , பயிர்களைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவாவது இந்தப் புத்தகங்கள் வாங்கிப் பயனுறவேண்டும்.

இயற்கை சம்பந்தமான பல கட்டுறைகள் உங்களுக்குப் பயனளிக்கும்.

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!



ஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் - 560.


அடுத்து காணி நிலம் என்றாரே பாரதி? அது என்ன? 


.

உண்மைத்தமிழனின் உளறல்கள்!! - பாகம் - 2.


.


பொது மக்களின் ஒரு சாராரை சாலை ஓரம் காக்கவைத்து ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி இவர்களுக்காகத்தான் வழங்கப் படுகிறது என்று பீற்றிக்கொள்ளுவதற்கு முன்பாக, அவர்கள் ஏன் ஒரு ரூபாய் அரிசிக்காக இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலத்தில் அப்படித் தவம் கிடக்கிறார்கள் என்ற கோணத்தில் சிந்தித்தால் நமக்கான உணவு உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கிறதா அல்லது பற்றாக் குறையில் வேறெங்காவதிலிருந்து இறக்குமதி செய்கிறோமா என்ற கேள்வியில் அது முடியும்.

முன்னர் எழுதிய பசுமைப் புரட்சி என்பது என்ன? மாடுகளை சொந்தமாக வைத்து ஏர்பூட்டி அதன் சாணத்தை எருவாக்கி நிம்மதியாய் இயற்கை முறையில் கிடைப்பதைக்கொண்டே யாரையும் எதிர்பார்க்காமல் சிறப்பான விவசாயம் செய்துகொண்டிருந்த விவசாயிகளை நகரத்தில் தொழிற்சாலை வைத்துள்ளவர்கள் மாற்றினார்கள். 

உழவுக்கு ட்ராக்டர் சிறப்பானது என்று லோன் மற்றும் மானியம் மூலம் மூளைச் சலவை செய்ததில் முதலில் காணாமல் போனது மாடுகள் 40 வருடங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான மாடுகளுக்குச் சொந்தக்காரர்களாயிருந்த துபாய் ராஜாவின் வீட்டில் இன்றைக்கு பாக்கெட் பால் வந்தால்தான் காப்பியே! 

மாடுகளை வைத்து நிலத்தை உழும்போது மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள் இறப்பதில்லை, ட்ராக்டர் எனும் வஸ்து தேவையில்லாத அள்வுக்கு நிலத்தை புரட்டுவதோடு அதில் இடப்படும் நஞ்சுகளான ராசாயணங்களையும் நிலத்தடி நீர் வரை கொண்டு செல்கிறது. சரி ட்ராக்டரோடு ஆயிற்றா ட்ராக்டர் என்ன சாணியா போடும்? அதை வைத்து உரம் தயார் செய்ய? எனவே உரக்கம்பெனிகள் புகுத்தப் பட்டது, எரு என்ற இயற்கை விஷயத்தை இரசாயண விஷங்கள் மாற்றின. 

இரசாயண உரங்கள் தயாரிக்க தொழிற்சாலைகள் ஆரம்பம். அது இன்னும் தன் பங்கிற்கு சுற்றுச் சூழலை மாசு படுத்துகிறது, ட்ராக்டர் உற்பத்தி செய்ய கம்பெனிகள், ட்ராக்டருக்கு டீசல், அந்த டீசலை நாம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாகவேண்டும், அந்த உரத்துக்கும் டீசலுக்கும் மானியம். அந்நிய செலாவணி இழப்பு எல்லாவற்றிற்கும் அடுத்தவனைக் கையேந்தும் நிலை. சரி இருப்பதைக் கொண்டு விளைத்துக்கொள்ளலாமென்றால் விதையை மரபணு மாற்றம் என்ற ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த விதையைத்தான் வாங்கவேண்டுமென்று விவசாயி போதிக்க அல்லது நிர்பந்திக்கப் படுகிறான். ஆயிரக்கணக்கான நெல் வகைகள் இருந்தவனிடம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பலவித குட்டை நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப் பட்டன. 

ஏன்? குட்டை ரகத்தில் வைக்கோல் கம்மியாக இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்டு மாடுகளுக்கும் தீவனம் இல்லாமல் போனால்தானே ஹைப்ரிட் சீமை வகைகளை விற்க முடியும்? அதுவும் அவை வாழும் சூழ்நிலை வேறு இங்கே சர்வ சாதாரணமாக அடிக்கும் வெயிலுக்கு அவை தாங்காது, தனியே கொட்டில் வேண்டும். அவற்றிற்கு 27 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு தயாரிக்க,  வழங்க கம்பெனிகள் இருக்கின்றன. அவன் கொடுத்தால்தான் இவன் மாடு வளர்க்க முடியும். வெறும் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து சர்வ சாதாரணமாக எந்த நோய் நொடியுமில்லாமல் முக்கியமாய் ”செலவில்லாமல்’ பெருகிய நம் பாரம்பரிய இனம் எப்படி கவனமாக அழிக்கப் பட்டு வருகிறது என்று கவனியுங்கள். 

இருப்பதைக்கொண்டே விவசாயம் செய்த விவசாயி எல்லாவற்றிற்கும் வெளி இடுபொருள் சார்ந்தே இருக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டான். எல்லாமே நகர உற்பத்தியில். கிராமத்தில் விவசாயம் கையேந்தி நிற்கிறது. நகரத்தில் உரம், டீசல், ட்ராக்டர், இப்பொழுது விதையும் அவர்களே மரபணு மாற்றமாக்கி சப்ளை செய்யப் போகிறார்கள். இதற்குப் பெயர் பசுமைப் புரட்ச்சி.

பசுமைப் புரட்சியை ஊக்குவித்த மகான்கள் நமக்கு அளித்த அன்பளிப்பைப் பாருங்கள்:

கிட்டத்தட்ட இந்தியாவில் 17கோடி ஏக்கர் அதிகப்படியான இரசாயனங்கள் தூவி உவர் நிலங்களாகி விளைச்சல் அதளபாதாளத்திற்குத் தள்ளப் பட்டுவிட்டது.

இந்திய மக்கள் உண்ணும் உணவு அனைத்திலும் தக்காளி முதல் தாய்ப்பால் வரை பூச்சிக்கொல்லி தன் தடயத்தைப் பதித்துள்ளது.

மருத்தும் வணிகமாகி நோய்கள் மலிந்து உழவில் பயன் படுத்தப் படும் நஞ்சுகளால் புற்று நோய் முதல் நரம்பியல் கோளாறுகள், ஆண்மைக் குறைபாடு போன்றவை பெருகி உள்ளன.

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் இப்பொழுது பன்னாட்டு கம்பெனி வசம்.

குடி நீர் மாசடைந்துள்ளது. தொழிற்சாலைகளும் நிலதடி நீரை மாசடைய வைக்கின்றன. நீர் ஆதாரங்களிலிருந்து ஆழ்குழாய்மூலம் நீர் உறிஞ்சப் பட்டு லாரிகளில் நகரங்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனால் நீர் ஆதாரங்களில் நிலத்தடி நீர் குறைந்து சுவையும் மாறி வருகிறது. 

பசுமைப் புரட்சியை ஆதரித்தவர்களே அரசாங்கத்திற்கு கொடுத்த அறிக்கையைப் இது!:

65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை.

(இதுதான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காசு பார்க்க ஒரு வாய்ப்பானது)

இந்த உழவர்கள் வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. செலவுகளும் எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்னம் உள்ளது.

(ஏன் எல்லாவற்றிற்கும் இடுபொருள் வெளியிலிருந்து வாங்க வேண்டும், சுயமாய் அவனால் எதுவும் செய்ய இயலாது விதைமுதல் அறுவடை வரை கார்பொரேட் கம்பெனிகளுக்கு காசு கொடுத்தாலே விவசாயம். அதனால் ஏற்படும் திடீர் செலவுகள் வருவாய்க்கும் மேல் போகிறது.)

கடனைத் திருப்பிக்கட்ட முடியாத உழவர்கள் தற்கொலை செய்வது அதிகரிப்பு.

(எல்லா இடுபொருட்களுக்கும் காசு வேண்டும். கடன் வாங்கி காசைக் கம்பெனிகளிக்கு கொடுத்து விளைச்சலில்லாததால் கடனடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறான் விவசாயி # மானஸ்தன் ஆச்சே!)

உழவை நம்பி உள்ளவர்களில் நாலில் ஒருவருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது.

(கந்து வட்டி மீட்டர் வட்டி கொடுமைகள் நகரத்தவர்களுக்கே நரகமெனுபொழுது கிராமத்தான்??)

பூச்சிகளைக் கொன்று பயிர்களைக்காக்ப்போமென்று நல்ல உயிரினங்களையும் அழித்தார்கள், தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிகின்றன, மேய்ச்சல் நிலங்கள் கட்டிடங்கள் கட்டப்பட்டு கால் நடைகள் இறைச்சியாகின்றது. கால்நடைகளின் எரு இல்லாமல் விளை நிலங்கள் வளம் இழக்கின்றது.

உலகத்து இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சிப் பாதையில் இயங்குகின்றன, அதில் ஒரு இணைப்பு உடைக்கப்பட்டாலும் அது தன்னைச் சார்ந்து இருக்கும் உயிரினங்களுக்கு பேரழிவை உண்டாக்குகிறது. நாமும் ஒரு உயிரினம்தான் அழியக்கூடிய பட்டியலில் கூடிய சீக்கிறம் மனித இனத்தின் பெயரும் வரும். அனேகமாக அந்த அழிவு நாளே இந்த இயற்கைக்கு மனித இனம் செய்த முதல் நல்ல நிகழ்வாக இருக்கலாம்.

இன்றைய கேள்விகள்:-

மாட்டுக்கு ஊசிபோட்டு பால் கறக்கும் வித்தையை எந்த சங்க காலப் பாடல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 

23 அத்தியாவசிய ஊட்டப் பொருட்கள் உங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் இல்லை மாறாக அது ஒரு டப்பாவில் பவுடராக விற்கப் படுகிறது அதைக் குடித்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் உயரமே அடைய முடியும் சரிதானே?

ஒரு ஏக்கர் நிலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் காலத்தில் 4.2 டன் நெல் விளைந்தது என்று பொறுநர் ஆற்றுப் படையில் வரும் இந்தப் பாடல் சொல்வது பொய்யா?

”சாலி நெல்லின் நிறை கொள்வேலி ஆயிரம் விளை உண்டாக்க காவிரி புறக்கும் நாடு கிழவோனே”

இந்தப் பசுமைப் புரட்சியால் விலை குறைந்து விளைச்சல் அதிகரித்து நாமெல்லாம் சுபிட்சமாக அல்லவா இருந்திருக்கவேண்டும் இருக்கிறோமா?

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உன்னழிக்கல் ஆகா அரண் - குறள் : 421

குறளின் எண்ணையும் கருத்தையும் பாருங்கள்

கருவிகளில் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களிலிருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளிலிருந்து காத்து நிற்கும் கோட்டை மதில் சுவர் போன்றது.

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்! - குறள் : 466.

செய்யக்கூடாததைச் செய்தாலும் கேடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கேடு வரும்.


படியுங்கள்..



தாய்மண் புத்தகம் .
இயற்கை வேளாண்மைப் பாடநூல்

வெளியீடு வானகம் கல்விக் குழு, 60/3 எல்பி ரோடு, திருவான்மியூர், சென்னை-41. vaanagamoffice@gmail.com


அடுத்து..  

ஆர்கானிக் பார்மிங் அல்லது ஆர்கானிக் லிவிங் எது சரி?


மீண்டும் பேசுவோம்...


நன்றி!

.

உண்மைத்தமிழனின் உளறல்கள்!!


.

FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா? செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆவணப்படுத்தி இருப்பார்கள். அபரிமிதமாக விளையும் மக்காச்சோளம், அதைக்கொண்டு உருவாக்கிய பை ப்ரொடக்ட்ஸ், மீதியை பண்ணைக் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும், மாட்டிற்கும் தின்னக் கொடுத்து வெஜ்ஜிலும், நான்வெஜ்ஜிலும் சோளத்தை மறைமுகமாகப் புகுத்தி மரபுக்கோளாறை மக்களின் சொந்த செலவில் பாஸ்ட்புட் என்று மக்களுக்கு சூனியம் வைத்து காசடிப்பதை சொல்லி இருப்பார்கள்.

போக அந்த சோள விதைக்கும் ஒரு கம்பெனி காப்பிரைட் வாங்கி வைத்து அங்குள்ள விவசாயிகளை கூலிகளாக்கி வைத்திருப்பார்கள். சம்மதிக்காதவர்களை கேஸ் போட்டு படியவைப்பார்கள். அதாவது அவர்கள் கொடுப்பதுதான் விதை, அவர்கள் தருவதுதான் கூலி, அவர்கள் தருவதுதான் உரம், அவர்கள் உற்பத்தி செய்து தருவதைத்தான் நாம் உண்ணவேண்டும் அது கோழியாக இருந்தாலும் சரி சாஸாக இருந்தாலும் சரி. 

நம்மூரில் பசுமைப் புரட்சி என்ற அற்புதமான ஒரு முட்டாள்தனம் மெத்தப் படித்தவர்களால் விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அதாவது உரம் போட்டு விவசாயம் செய்வது, ஆயிரம் மூட்டை இயற்கையாய் விளைந்த இடத்தில் ஆயிரத்து முன்னூறு மூட்டை விளையும் ஆனால் அதற்கு கொடிய விஷமான ரசாயன உரங்கள் போடவேண்டும். அவர்கள் சொல்லாமல் விட்டது அந்த விஷங்கள் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும் அந்த விஷத்திற்கு கொடுக்கப்படும் பணமோ அந்த அதிகமாய் விளைந்த முன்னூறு மூட்டைகளை விட அதிகம். உரத்தைக் கொட்டிக் கொட்டி விவசாயிகளில் பலர் தற்கொலை செய்து கொண்டதோடு விளை நிலங்களையும் அறியாமலேயே கொலை செய்தார்கள்.

பாரம்பரியத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வீட்டு தேவைக்குப் போக வெளியில் விற்றார்கள், அதில் அடுத்த விளைச்சலுக்கான விதையும் உண்டு. இவனே விதைச்சு இவனே வெளச்சா அது நியாயமா என்று கார்பரேட்டுகள் கவலைப்பட்டதின் விளைவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகள். அதாவது விளையும் ஆனால் அதில் மறுபடி விதைக்க முளைக்காது. அந்த மலட்டு விதையும் நன்றாக விளைச்சல் தர பல்வேறு ரசாயணங்கள் தூவவேண்டும் எனவே எல்லாவற்றிற்கும் விவசாயி தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம் அதற்குப் பெயர் பசுமைப் புரட்ட்சி. இப்படி மரபணு மாற்றிய விதைகளால் விவசாயி பிச்சைக்காரனாக்கப்பட்டான். விதை என்பது இயற்கையின் கொடை அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அரசாங்கமே டீலில் விட்டுவிட்டதுதான் உச்சகட்ட கொடுமை.

ஜகீராபாத் என்ற ஆந்திராவின் மிகப் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் தலித் மக்கள் சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்றவற்றை தாங்களாகவே பயிரிட்டு அதன் மூலம் விளைந்ததை காலங்காலமாக உண்டு சுபிட்சமாக வாழ்ந்துவந்ததை இலவசம் என்ற சொம்பைக்கொண்டு கழுவ வந்தது அரசாங்கம். 

பிடிஎஸ் முறைப் படி குறைந்த விலையில் அரிசி உணவிற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது. கழுவி எடுத்து உலையில் போட்டால் சாதம் ரெடி கொஞ்சம் உப்பைப்போட்டால் கஞ்சி. ஆஹா வேலை மிச்சம் தானியங்களை அரைத்து மாவாக்கி பிசைந்து ரொட்டி சுடுவதை விட சாதம் உடனடியாக தயாரானது. மக்கள் தானியங்கள் விவசாயத்திலிருந்து முற்றிலும் விலகி அரசாங்கம் தரும் அரிசியை உண்டு காலங்காலமாக அவர்களுக்கு பலத்தைத்தந்த உணவுகளைப் புறக்கணித்ததின் பலனாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற பல உடல்ரீதியான குறைபாடுகளுக்கு ஆளானதோடு தங்களின் விளை நிலங்களையும் தரிசாக்கினார்கள். ஏழைகளுக்கான அரசு பிச்சைக்காரர்களை அல்லவா வளர்க்கும் அப்பொழுதுதானே சாதனைகளைப் பீற்றிக்கொள்ள முடியும். போக தானியங்களை அறவே அழித்தால்தானே ஓட்ஸை விற்க முடியும்.

இந்த நேரத்தில் இவர்களுக்கு வந்து கை கொடுத்ததுதான் டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி. இவர்கள் அந்த கிராமத்தின் தலித் பெண்களிடம் பொறுப்பை ஓப்படைத்தார்கள். ஆண்களை அவர்கள் நம்பவில்லை, கவர்மெண்ட் அந்த ஆண்கள் சம்பாதிக்கும் சொச்ச காசிற்கும் சாராயம் காய்ச்சி தயாராக வைத்திருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.

 முதலில் நிலத்தை மேம்படுத்துங்கள், விதைகள் தருகிறோம் உங்கள் பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுங்கள் விளைந்தபிறகு மேற்கொண்டு பேசுவோம். ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் பலவருட பிச்சைக்கார வாழ்விற்குப் பிறகு முதன் முதலாக அவர்களின் நிலத்தில் உழவு மேற்கொள்ளப் பட்டது. அறுவடை அபரிமிதமாக இருந்தது. அவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு. மீண்டும் அவர்கள் முன்னே ஒரு கேள்வி வைக்கப் பட்டது நிலத்தின் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அல்லது வயது காரணிகளால் ஏற்படும் விவசாய பிரச்சனைகள் ப்ரதானமாய் அலசப்பட்டது. யாரும் அறிவுறைகளை அவர்களுக்குத் தரவில்லை அவர்களாகவே முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. 


யோசித்துப்பாருங்கள் அவர்களின் வறுமையிலும் அவர்கள் தரம் பிரித்துக்கொண்டார்கள் அதற்கேற்ப விளைந்த தானியங்களை பங்கிட்டுக்கொண்டார்கள். இப்பொழுது உணவுக்காக அவர்கள் யாரையும் கையேந்தும் நிலையில் இல்லை. 

உணவுக்குப் போக அவர்களுக்குள்ளாகவே விதை வங்கி ஒன்றையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். யார்வேண்டுமானாலும் விதை வாங்கிக்கொள்ளலாம், விளைந்தபின் இரு மடங்காக விதைகளாகவே கொடுத்தால் போதும். ஏதாவது பிரச்சனை என்றால் நான்கு மடங்காக விதைகளை அடுத்த விளைச்சலில் கொடுக்கவேண்டும். சரி விளைச்சலில் ஏதோ ப்ரச்சனை முழு கிராமமே மாட்டிக்கொண்டால் ம்ம்ம் அதற்கும் விடை கண்டார்கள் அதாவது அடுத்த கிராமம் அவர்களின் விதைக்கும் உணவுக்கும் உதவி செய்யும். ஆம் கிட்டத்தட்ட 75 கிராமங்கள் இவ்வாறு தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி தன்னிறைவு அடைந்துள்ளன. சுய வேலை வாய்ப்பு உணவில் தன்னிறைவு, விவசாயம் மூலமே கால்நடைகளுக்குத்தீனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, யாரையும் உணவுக்காக சார்ந்திருக்கவேண்டிய நிலைமை இல்லாமை, விதை பாதுகாப்பு, தலைமுறைகளுக்கான சுபிட்சமான வழிகாட்டுதல்.

முதலில் எல்லோருக்கும் உணவு என்று அந்த சூழலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அரிசியை பொது வினியோகத்திட்டம் மூலம் சிபாரிசு செய்த அதிகாரி அந்த கிராமங்களுக்கு வந்து பார்த்தார். பேச்சு மூச்சில்லாமல் இதுதான் உண்மையான Public Distribution System என்று பாராட்டிச் சென்றார். படிப்பறிவில்லாத உழைப்பாளிகளான அந்த தலித் மக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் கேள்விகள் என்ன?


நாம் உண்ணும் உணவு என்பது எங்கேயிருந்து வருகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமா?

விதை என்பதை ஒரு கம்பெனியோ அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியுமா?

உண்மையில் நாம் காசு கொடுத்து வாங்கச்செல்லும் மார்கெட் அல்லது சந்தை என்பதில் அதிகம் பயன் பெறுபவர் யார்? 

மலட்டுத்தன்மை அல்லது மரபணு மாற்றம் செய்யப் படும் காய்கறிகள், உணவுகளை ருசிக்காக அல்லது அறியாமையால் நாம் உண்ணுவது என்பது சரியா? நமக்காகவே இவை மரபணு மாற்றம் செய்யப் படுகின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

நஞ்சால் நனைக்கப்படும், ரசாயணங்கள் தூவப்படும், ஆபத்தான முறையில் பயிரிடப்படும் ப்ரெஷ் காய்கறிகள் நமக்கு நன்மையே செய்யும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?  

விளைச்சல் செய்ய முடியாதவருக்காக விவசாயம் செய்து உணவு கொடுக்கும் விவசாயிக்கு உண்மையில் அதன் பயன் போகிறதா? 

விவசாயத்தை விவசாயி கைவிட்டுவிட்டால் இலவசத்திற்கோ பொது வினியோகத்திட்டத்திலோ உணவுப் பொருட்களை யார் வழங்குவார்கள்? 

ஒருங்கிணைந்து உணவிற்காக யாரிடமும் இலவசத்திற்கோ அல்லது பிச்சையோ எடுக்காமல் தன்னிறைவடைந்த அந்த கிராம மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எது சரி? மீன் கொடுப்பதா? மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா? அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா? 


முடிந்தால் மீண்டும் இது குறித்து வேறு சில தகவல்கள் பகிர்கிறேன்..



படியுங்கள்::




மண் மரம் மழை மனிதன்





துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


நன்றி! 







டிஸ்கி: நானும் உண்மையான தமிழன்தான்!! :)))




.