பலா பட்டறை: 03/01/2011 - 04/01/2011

ஒளியும் ஒலியும்!


.



ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கியபிறகுதான் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரமுடிந்தது. தண்டவாளங்களைக் கடப்பதற்காகப் போட்டிருந்த மேம்பாலத்தின் அடியில் கடப்பாக் கல்லாலான நீள இருக்கை இருந்தது. ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரருகில் நானும் அமர்ந்தேன். இடது பக்கத்தில் ரயிலின் கால அட்டவணை ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்தார்கள். வெறும் எண்களாலான அதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் கடுப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று. பூஜ்ஜியம் ஒன்றுலிருந்து இருபத்து நான்குவரை நடுவில் எழுதி இரு பக்கமும் ஆல்பா நீயூமரிக்கலில் எழுதப் பட்டிருந்த அந்த பட்டியலை என்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? 

நான் மீண்டும் ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எதிர் ப்ளாட்பாரத்தில் அழகாக கிளை விரித்துப் பரவிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த பயணிகள் மிகச் சிறியவர்களாக காணப் பட்டார்கள். மரத்தின் பிரம்மாண்டம் மனதில் எதையெதையோ எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னினும் சிறிய மனிதனால் தான் எப்பொழுதுவேண்டுமானாலும் கூறுகளாக்கப் படுவோமென்று அந்த மரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா? அதனாலேயே அமைதியாய் நிழல் தந்து நிற்கிறதா? அல்லது அழிவென்பது மாயை அது வேறொன்று பிறப்பதற்கான ஒரு சலனம் என்று உணர்ந்திருக்குமா? நான் மரத்திற்கு மேலேயும் பார்த்தேன். இவ்வளவு நீலமாக, மேகங்களற்ற வானம் தொடர்ச்சியாக இப்பொழுது காணக்கிடைக்கிறது. சென்னையில் இது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிசயம். இன்றைக்கு வெயில் அதிகம்தான் இல்லையென்றால் இப்படியெல்லாம் நான் யோசிக்க வாய்ப்பில்லை.

உடல் பெருத்த பார்வையற்ற ஒரு வயதான பெண்மணி தனக்கு வழி காட்டும் ஒரு குச்சி கொண்டு ஒரே ரீதியில் எழுப்பிய சத்தத்தால் நான் அவரைப் பார்க்கத் தொடங்கினேன். இவருக்கு ஆலமரமோ, அதன் உணர்வுகளோ, நீல வானமோ, மேகங்களோ ஒரு பொருட்டே அல்ல. சப்தங்களாலும், தொடுகைகாளாலும் ஆன உலகு. அவர் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையைத் தாண்டிச் சென்று நின்றுவிட்டார். களைப்பான ஒரு உஸ்ஸ்ஸென்ற வெயிலின் மீதான சாபம் அவர் வாயிலிருந்து வந்தது. மீண்டும் அவர் வந்தவழி திரும்பினார் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நாங்கள் அமர்ந்திருந்த அந்த இருக்கையை தன் குச்சியால் தொட்டார். அருகிலிருந்த பெரியவர் ”யாருமில்ல உக்காரும்மா” என்றார். ”தாண்டிப் போயிட்டேன்” என்றபோது எனக்குப் புரிந்தது அவர் இந்த இருக்கையை நோக்கித்தான் உட்காருவதற்காக வந்திருக்கிறார். இந்த இடம்தான் ரயிலின் கடைசி பெட்டி நிற்கும் இடம் இங்கிருந்துதான் அவர் முதல் பெட்டிவரை தன் யாசகத்தைத் தொடரவேண்டும். 

ரயில் பெட்டியிலும் இவர்கள் பிரயாணம் செய்யும்போதும் தடுமாறுவதே இல்லை. சரியாக வாசல் எது? எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எங்கே திரும்பவேண்டும், எது 10 ரூவாய்த்தாள்? எது 5 ரூபாய் நாணயம் என்பது முதல் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்கள் கையில் கொண்டுவரும் 20 வகை ஐட்டங்களின் கேட்பதை சரியாக எடுத்துக்கொடுப்பதும் சுலபமாகவே நடக்கிறது. 

“வெயில் கொஞ்சம் தாழ்ந்திருச்சி போல இருக்கே” என்றபொழுது மீண்டும் மேலே பார்த்தேன் இப்பொழுது வானம் மூட்டத்தோடு இருந்தது. சற்று முன்புவரை நீலமாக தெளிவாக இருந்த வானம் இப்பொழுது மூட்டமாக இருக்கிறது. தெளிவாக இருந்ததைப் பற்றி இப்பொழுதுதானே சிலாகித்தேன்? வெறும் உணர்சிகளால் தன்னைச் சுற்றி நிகழ்வதை தொடர்ச்சியாக கவனிக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்து எனக்கு வெட்கம் வந்தது.

பார்வை இருந்தும் குருடராய்? எங்கோ எதற்காகவே படித்த இந்த வாக்கியம் எனக்கு நினைவுக்கு வந்தது. பார்வையுள்ளவன் பயன்படுத்தாத காட்சிப் பொருட்கள் அவனைச் சுற்றி நிறைய இருக்கிறது. வெறும் சாட்சியாக, செய்தியாக, எச்சரிக்கைகளாக, கிளர்ச்சியாக வெறுமே பார்த்துக் கடப்பவைகளில் பார்க்கவேண்டியவைகளும் கடந்து போவதே பார்வைக் குருட்டு. பார்வை இருந்தும் பார்க்கத் தவறிய, சோம்பலுற்ற தருணங்கள் ஒரு நாளில்தான் எத்தனை கடக்கின்றன? நான் மீண்டும் அந்த ரயில் அட்டவணையைப் பார்த்தேன். 

”அடுத்த வண்டி அரக்கோணமா?” அந்தப் பெரியவர் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு நான் அந்த ரயில் கால அட்டவணையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காரணமாயிருந்திருக்கலாம். நான் ”தெரியலைங்க” என்று சொல்வதற்குள் அந்த பார்வையற்ற பெண்மணி ”அடுத்தது மெட்ராஸ் திருவள்ளூர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடும்” என்றார். 

”எல்லாமே மெட்ராஸ்லேர்ந்து வரதுதானேம்மா?”

”இல்லைங்க சார். பீச்லேர்ந்தும் வரும், அம்பத்தூர்லேர்ந்தும் வரும். எங்கேர்ந்து கிளம்பி எங்கே போகுதுன்னு சேர்த்து டைம் டேபிள்ள எழுதி இருக்கறத வெச்சி சொல்றதும் அப்படியே வந்திடுது. ”

சொல்லிவிட்டு அந்த பெண்மணி கடக்கும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் தான் கையில் வைத்திருந்த அந்த எவர் சில்வர் தம்ளரில் ஒரே ஒரு காயனைப் போட்டுக் குலுக்கிக் கொண்டிருந்தார்.  கடந்து போனவர்களில் சிலர் மட்டும் அந்தப் பெண்மணியின் தம்ளரில் சில்லறைகளைப் போட்டுவிட்டு சென்றார்கள்.

கண்ணிருந்தும் குருடராய், எல்லா அறிவிப்புகளும், விளம்பரங்களும், எச்சரிக்கைப் பலகைகளும், விதிகளும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடுமோ என்னமோ?. 

சம நிலையிலிருந்து வழுக்கி சுய நலமாய் தன் வசதிக்கு இந்த உலகை மாற்றும் மனிதனிடமிருந்து இயற்கை லாவகமாய் தப்பித்துக்கொண்டிருப்பதைப் போல பார்வையுள்ளவர்களால் பார்வையுள்ளவர்களுக்காக கட்டி எழுப்பப்பட்ட வசதிகளை பார்வையில்லாத இந்தப் பெண்மணி எள்ளுவதைப் போல எனக்குத் தெரிந்தது.

நான் மீண்டும் அந்த அட்டவணையை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தேன். 

.

வெண்ணை (0.16 தே(ரா)ர்தல் - சவண்டி ராஜா)


.


*அருமையான மனுஷன்*
என்னா ஒரு நாலஞ்சு கொலை பண்ணி இருக்காரு அவ்ளோதான்

*பெண்ணினத்தையே பெருமைப் படுத்தியவர்*
ஒண்ணு ரெண்டுபேர கற்பழிச்சிருக்கலாம் இதெல்லாம் ஒரு விஷயமா?

*கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காரர்*
அட எவ்ளோவேணா அடிச்சிருக்கட்டும் உன் பாக்கெட்லேர்ந்தா துட்டு எடுத்தாரு?

*அரசு நிலத்தைக் கொள்ளை அடித்தார்*
உன் பத்திரம், பத்திரம்.

*ஏங்க நீங்களாவது நல்லாட்சி தருவீங்களா?*
அவங்க கொடுத்தாங்களா? அவங்கள நீ கேட்டியா?

அரிசி ஒரு ரூவாய்க்கு இந்த உலகத்துல

ஏங்க அரிசி மட்டும் வெச்சிக்கிட்டு என்னா செய்யறது பருப்பு, எண்ணெய் அட கீரை கட்டு என்னா விலெ விக்குது?

இதெல்லாம் எப்ப? எனக்குத் தெரியாதே? ஏன் நீங்க போராட்டம் நடத்தல?

???

அரசாங்க ஊழியர்களுக்கு எவ்ளோ நன்மை செஞ்சிருக்கோம் தெரியுமா?

ஏங்க அங்க லஞ்சம் கொடுக்காம காரியம் ஆவுற துறைங்க கம்மி அவங்களுக்குப் போய்

என்னது லஞ்சமா? நீங்க ஏன்யா கொடுத்தீங்க? லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கறதுதானே?

எதுக்கு?? மின்சார சுடுகாட்டுல லஞ்சம் கொடுக்கவா?

எத்துனை லச்சம் மக்கள் இலவச டிவியால் பொது அறிவு வளர்கிறார்கள்  தெரியுமா?

எங்களுக்கு இன்னும் டிவியே தரலைங்க.

போய் போராட்டம் நடத்துங்கப்பா! இங்க ஏன் வந்து கேக்கறீங்க.


அர்ஜண்ட்டுக்கு ஒண்ணுக்கு வந்தா போறதுக்கு அண்ணா சாலை தலைமைச் செயலகத்துல ஆரம்பிச்சி கத்திப்பாரா வரைக்கும் எத்தனை பொதுக் கழிப்பிடம் இருக்குங்க எஜமான்??

எத்தினி டாஸ்மாக்குன்னு கேளுய்யா? அட இந்த தேர்தல்ல இன்னும் எவ்ளோ இலவசம் தரப்போறோம் தெரியுமா? ஒண்ணுக்குப்போறதெல்லாம் ஒரு விஷயமாய்யா?


கிட்டத்தட்ட இப்படியெல்லாம்தான் வரப்போகின்ற தேர்தலைப் பற்றி நியாயம் கற்பிக்கப் படுகிறது! எங்கே செல்கிறோம்/செலுத்தப் படுகிறோம் என்று புரிகிறதா என்று தெரியவில்லை. 



எந்த அரசியல்/கட்சி வியாதிகளுக்கும் நான் சப்போர்ட் இல்லை. தொலை நோக்குப் பார்வை இல்லாத, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத, இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் அடிமைப் படுத்தி மக்களை திட்டமிட்டு கூட்டுக் களவாணியாக்கும் இந்த வன்செயல் அரசியல் மொழி விளையாட்டு, ஊதிய உயர்வு, ஜாதி போற்றுதல், பொய்யுரைகள் என்று எக்குத்தப்பாக மக்களை முட்டாள்களாக்குகிறது:(( 

யார் வந்தாலும் மக்களுக்கு நல்ல குடி தண்ணீர், சாலை வசதி, கல்வி, சுகாதாரம், வீடு, விவசாய மேம்பாடு, பாதுகாப்பு, மின்சாரம், தொழில் செய்ய ஊக்குவிக்கும் போக்கு, வனப் பாதுகாப்பு, இயற்கை மேம்பாடு, மாசுக் கட்டுப்பாடு, கலப்படப் பொருட்கள் தடை, குழந்தைகள் பாதுகாப்பு, முதியோருக்கான மரியாதை/பாதுகாப்பு. மழை நீர் சேமிப்பின் அவசியம், மரம் வளர்ப்பு, ஏரி, குளம், ஆறு நீர் நிலைகளைக் காத்தல், கழிவு நீர் அகற்றம்/சுத்திகரிப்பு, லஞ்சத்தை அடியோடு வேரறுத்தல், கேணத்தனமாக மக்களை முட்டாள்களாக்கும் சீரியல்கள் தடை, நுகர்வோர் பாதுகாப்பு, அவரவர் மத நம்பிக்கைகளுக்கான் மரியாதை, தரமான ரேஷன் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, சிறப்பான போக்குவரத்து வசதிகள், புற நகர் விரிவாக்கம், கிராமப்புர மேம்பாடு, அனைத்து தர மக்களுக்கும் அடிப்படை வசதிகள் போன்றவைகளைத் தர முன் வரப்போவதில்லை. ஏன்? 

இத்துனை வருடங்களாக இதைக்கூடச் செய்ய முடியாதவரெல்லாம் ஒரு தலைவரா? 

இதெல்லாம் கொடுப்பதற்கு செவ்வாய் கிரகத்தை விற்று ஒன்றும் பணம் புரட்டத் தேவையில்லை. இவையெல்லாம் மக்களுக்குக் கிடைப்பின் அவர்கள் ஆர அமர யோசித்து சிறப்பானவர்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற ஒரே பயம்தான். இதற்கு ஒரே வழி ஓடவிடுவது தண்ணீருக்காக லாரியின் பின்னே ஓடுவதிலிருந்து, ரேஷன் அட்டை மாற்றுவதுமுதல் ஓடிக்கொண்டே இருக்கிறான் தமிழன். அதுவும் லஞ்சத்தால் போடப்பட்ட குண்டும் குழியுமான சாலைகளில் முதுகெலும்பு ஒடிந்து! அவனுக்குக் கிடைக்கும் கொஞ்ச நேர அவகாசத்திலும் தலைவிரிகோல சீரியல்களும் ,டாஸ்மாக்கும், தடைபட்ட மின்சாரமும், தேனொழுகும் இலவச அறிவிப்புகள் என மரத்துப்போகும் ஊசிகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

இலவசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களே..

இங்கே யாரும் இலவசத்துக்காக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கவில்லை! எந்த மானியமும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்துதான் பாருங்களேன். அப்பொழுதுதானே தெரியும் உங்கள் நல்லாட்சியின் லட்சணங்கள்! 

எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கும் இந்த ஒழுங்கீன அரசியல் விளையாட்டுகளால் தமிழகத்தை அரித்துக்கொண்டிருக்கும் புற்று நோய் இன்னும் என்னென்ன காவுகளைத் தர காத்துக்கொண்டிருக்கிறதோ????


டிஸ்கி: 

01)இன்றைக்கு இந்தியா - ஆஸ்திரேலியா குவாட்டர் பைனல் மதியம் 2.30  
      மணிக்கு, காணத்தவறாதீர்கள். 

02) நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

.

மஞ்சு!! - (201- ஆவது இடுகை!)






”பாண்டியானு” என்றாள் மஞ்சு.

இரு கன்னங்கள் அவ்வளவு ரோஸ் நிறத்தில் எந்த சாயமுமில்லாமல் எப்படி அவ்வளவு அழகாயிருக்கிறாள் என்று அவளைக் கண்டமுதல் யோசித்துக்கொண்டே இருந்தேன். இருபுறமும் பஃப் வைத்த அழகான மஞ்சள் நிறச் சட்டை, நிறைய ஃப்ரில்களுடன் பாவாடை, அவளின் உயரத்தில் பாதிதாண்டிய கரு கரு கூந்தல், நுனியில் கூந்தலை முடிச்சு போட்டு அதில் வடியும் ஈரம் சொட்டிச் சொட்டி அது அவள் சட்டையை நனைத்துக்கொண்டு வட்டம் போட்டு இருந்தது.

”எப்படி இவ்வளவு ரோஸ் கலர்ல இருக்கே மஞ்சு” என்றேன், ”திவசம் சவனப்ப்ராஸம் கழிக்கு ஈ கலர் கிட்டும்” என்றாள்.

வேறொரு நாள் அவள் வீட்டின் பரம்பில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு செடியிலிருந்து ஏதோ பறித்தாள், அவளின் அசைவுகளையே ரசித்துக்கொண்டிருந்தேன். 

”வேணோ” என்றாள். 

அவள் கையில் ரோஸ் நிறத்தில் ஒரு காயுமில்லாத பழமுமில்லாத ஒரு வஸ்து இருந்தது.

 ”என்னதிது மஞ்சு?”

 ”சாம்பக்கா” நான் திரும்பிப் பார்த்து யாருடைய அக்கா என்று கேட்டபோதுதான் அவள் ”பாண்டியானு” என்றாள், இரு கன்னத்திலும் குழிகள் விழ சிரித்தாள். 

என் பாட்டியுடன் 10ஆம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் கேரளாவின் கோட்டயம் வந்ததிலிருந்து எனக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பித்திருந்தது. தமிழ் நாட்டிலுருந்து யார் வந்தாலும் இவர்கள் அழைப்பது ”பாண்டி:” போக கையில் கண்டிப்பாக காய சஞ்சி வைத்திருப்பார்கள் என்று பெட் கட்டுகிறார்கள் (மஞ்சள் துணிப் பை). ’இல்லை’ என்று சொல்வதற்கு இரண்டு கண் இமைகளையும் சிமிட்டுகிறார்கள். ’ஓ’ என்ற ஒற்றை வார்த்தையில் பத்து பேராவுக்கான விஷயங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். பாவாடை சட்டை அல்லது தாவணியில் அழகாய் மனதில் தீ மூட்டுகிறார்கள். பாட்டி அவளின் உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்றபோதுதான் முதலில் மஞ்சுவைப் பார்த்தேன். 

”இட்ஸ் எ ஃப்ரூட் கழிக்கு” என்றாள். 

அடிப்பாவி கையில் வைத்திருந்த இந்த வஸ்துவோட பேர்தான் ”சாம்பக்காயா?” கிட்டத்தட்ட பேரிக்காய் மாதிரி இருந்தது. 

அவள் என்னை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். அழகான ஒரு ஆற்றங்கரையில் ஒரு புதரின் அந்தப் பக்கம் அவளும் இந்தப் பக்கம் நானும் குளித்தோம், நடு ஆறு வரை நீச்சல் அடித்து கரையில் இருந்தவாரே உள்ளங்கைகளால் நான் நீரெடுத்துக் குளிப்பதைக் கண்டு ”அய்யே” என்று அவள் சிரித்தபோது எனக்கு நீச்சல் தெரியாததற்குக் காரணமான காய்ந்து வெண் மணலாராய்ப் போயிருந்த பாலாற்றை சபித்தேன். 

அங்கே ரப்பர் செறுப்பை சுத்தமாய் கழுவி வெள்ளையாய் ஆக்கிக்கொண்டிருந்த ஒரு ஆளும் கேட்டான் ”பாண்டியானோ?”

”அம்பலத்தி போகாம் வா” என்று அவள் கோவிலுக்குக் கூட்டிச் சென்று என் மேல் சட்டையைக் கழற்றச்சொன்னதும் ஏன் இங்கே கோவிலை அம்பலம் என்று சொல்கிறார்கள் என்று புரியவந்தது.

 கூச்சத்துடன் எல்லோருடைய கண்களும் என்னையே பார்ப்பதுபோல என் வெண்டக்காய் உடலை மறைக்க என்னென்னமோ செய்வதை ஓரக்கண்ணால் பார்த்த மஞ்சு ”தே முண்டு சூழ்ச்சிக்கணும் கேட்டோ” என்ற பொழுது அவள் கண்கள் சென்ற திசையை வைத்துக் கணித்ததில் என் வேட்டி முடிச்சு அபாயகரமான நிலையில் இருப்பது கண்டு அப்படியே அதை கையால் பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என கோவிலை விட்டு வெளியே வந்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் கோட்டயம் செல்வது வாடிக்கையாய்ப் போனது, பல மளையாள வார்த்தைகள் புரிய ஆரம்பித்திருந்தது. காலேஜின் இரண்டாம் ஆண்டில் மஞ்சு புடவை அணியத் துவங்கி இருந்தாள். கோட்டயம் போட் ஜெட்டியிலிருந்து ஆலப் புழை வரை போட்டில் ப்ரயாணம் செய்தோம். தோள்களால் உரசிக்கொண்டோம், அவள் சாப்பிட்ட உணவை எனக்கு ஊட்டிவிட்டாள், என் தோளில் சாய்ந்து தூங்கினாள், அவளின் இரு கைகளாலும் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு ஆலப் புழையின் சாலைகளில் நடந்தோம். 

எனக்கு ஏற்பட்ட உணர்சிகளை நான் பல முறை என் நண்பர்களின் காதல் கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். மஞ்சு ஒரு நாளும் என்னைக் காதலிப்பதாகவோ, அல்லது குறைந்த பட்சம் காதல் பற்றியோ பேசியதில்லை. ஏதோ ஒரு மாயையைப் போன்ற ப்ரேமை எங்களைச் சுற்றி அல்லது என்னைச் சுற்றி கூடு கட்டி இருந்தது. எக்காரணத்திற்காகவும், எக்காலத்திலும் அதை நானாக உடைக்கப் போவதில்லை என்று எனக்குள் சபதம் செய்திருந்தேன்.  

ஒரு முறை கோட்டயத்தின் பெரிய கோவிலின் வரிசையாய் சென்ற படிகளில் அமர்ந்து கொண்டிருந்தபோது மஞ்சு கேட்டாள் ’ நிங்கள் ஆரெங்கிலும் ப்ரேமிக்குன்னோ ஏட்டா?”

நான் உள்ளுக்குள் செறுமிக்கொண்டு பேச ஆரம்பிப்பதற்குள் ”எனிக்கு ஒரு தமிழாள இஷ்டமானு” என்றாள்.

ஏற்கவே உயரத்திலிருந்த அந்த பெரிய கோவிலைவிட என் மனம் இன்னும் உயரத்தில் பறக்கத்துவங்கி இருந்தது.

”தமிழ் ஆளா யார் அது மஞ்சு?” என்றேன்.

அவள் ஆரம்பித்து சொன்ன பெயர் என்னுடையது இல்லை என்று புரியவே எனக்கு கொஞ்ச நேரம் கழித்தது. உணர்ச்சிகளால் பின்னப்பட்டிருந்த என் மனக் கூட்டில் நான் காதல் தூசியை அழித்து சினேகத்தை விட்டு வைத்திருந்தேன். எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அவர் இங்கேதான் இருக்காரா? என்றேன். 

”ஏய், இல்லா. பட்ஷே கோன்டாக்ட் நம்பருண்டு எப்போ வேணெங்கிலும் விளிக்காம். ஞான் சர்ப்ரைஸாயிட்டு விளிச்சுப் பறையாம் போகுன்னு. புள்ளி சென்னையிலானு தாமஸம். ஞான் அவிட வரும்போள் ஏட்டன் சகாயிக்கனும். இதானு டீட்டெயில்”

அவள் கொடுத்த காகிதத்தில் இப்படி எழுதி இருந்தது..




ஷங்கர் Shankar.
palaapattarai.blogspot.com



முதன் முறையாக மஞ்சுவைப் பார்த்து மலையாளத்தில் சொன்னேன் ”நினக்கு வட்டானு”




( சற்றொப்ப 200 இடுகைகளில் மொக்கை போட்டதைத் தாங்கிய உங்களுக்கு நன்றி சொல்ல இதை விட்டால் வேறு எந்த வழியும் தெரியாததால், ஆதரவளிக்கும் அன்பு வலையுலக நண்பர்களே எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி! ) :))))


.

பச்சைக் கலரு ஜிங்குச்சா!!



ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அமெரிக்கன் கான்ஸுலேட் உள்ளே போகும்போதெல்லாம் அதிசயப்பட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடுப்புச் சுவர் தாண்டி புகையும் பரபரப்புமான வாகனப் பேரிரைச்சலில் அமைதியான பசுமையான ஒரு சூழ் நிலை அங்கே நிலவும். அமெரிக்கா காரன் மூளையே மூளைதான் என்று நினைத்ததுண்டு. 

எதிரிலேயே ட்ரைவ் இன் ஹோட்டல் இருந்தாலும் பல்வேறு மார்கெட்டிங் மக்களின் சலசலப்பான் நிறைந்து வழியும் அந்த இடம் பெரிய மரங்களுடன் நிறைய நிழல்களுடன் சூழ் நிலை ரசிக்க இயலாது உண்வு ருசிக்காகவும் ஒரு சந்திப்பின் இடமாகவே நின்றுவிட்டது. உட்லண்ஸ் மூடப்பட்டு அங்கே பூங்கா ஒன்று வரப்போகிறது என்று கேள்விப்பட்டதும் வேலை நிமித்தம் உட்லன்ஸில் பல சந்திப்புகளை நிகழ்த்திய என்னைப் போன்றவர்களுக்கு அது பேரதிர்ச்சிதான். குறிப்பாக நிறைய மார்கெட்டிங் மக்களுக்கு அது மிக முக்கியமான மீட்டிங் பாயிண்ட். உட்லண்ஸ் பூட்டியபிறகு அந்த இடத்தையே நான் பார்க்காமல் கடந்துவிடுவேன். ஜனவரியில் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோதுதான் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்து செம்மொழிப் பூங்காவென ஆகியிருப்பது கண்டு சரி உள்ளே போய் பார்த்துவிடலாமென்று சென்றால் ஒரு பெரிய ஆச்சர்யம். மிக அற்புதமான அழகான இடமாக அது மாறி இருந்ததுதான். இம்மாதிரியான ஒரு இடத்தில் இப்படி ஒரு பூங்கா என்பது பெரிய விஷயம். மெதுவாய் ஒரு நடை செல்லலாம். அமைதியாய் ஒரு புத்தகம் படிக்கலாம், வெறுமனே மனிதர்களையோ செடிகளையோ பார்த்துக்கொண்டிருக்கலாம் அவ்வளவு அழகான ஒரு சூழ் நிலை.





 ஆனாலும் பெரிய குறைகள் இருக்கத்தான் செய்கிறது, எல்லா செடி, மர வகைகளுக்கு பெயர் பலகைகள் எழுதப் படவில்லை. கள்ளிச் செடிகளில் ஐ லவ் யூ என்று எழுதுபவர்களுக்கு 6 மாத கடும் காவல் தண்டனையே தரலாம், வாசனைச் செடிகளைக் கொண்ட ஒரு தோட்டத்தில் என்ன என்ன செடிகள் இருக்கின்றது என்பதே தெரியவில்லை. வெளி நாட்டு அழகு செடிகளோடு நமது பாரம்பர்ய மூலிகைச் செடிகளும் வளர்க்கலாம், குறைந்த பட்சம் அரசாங்கமே அங்கே ஒரு நர்சரி வைத்து செடிகளை விற்பனை செய்யலாம். மக்களுக்கு இயற்கை மேலும் மரங்களின் மேலும் ஒரு ப்ரேமை உண்டாகும். நல்லதொரு மழை நாளில் அங்கே இருக்க ஆவல்:)) நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக சென்று வாருங்கள். மேலதிக புகைப் படங்கள் நண்பர் சுகுமார் சுவாமி நாதனின் வலை மனையில்.

--

சமீபத்தில் கோவை சென்ற போது ஈஷா யோக மையம்/தியான லிங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான சூழலில் அமைந்த இந்த இடத்தில் லிங்க பைரவி என்ற அம்மனையும், 20 அடி ஆழத்திற்கு மேல் உள்ள சதுர வடிவ கிணறு போன்ற அமைப்பில் ஒரு பாதரச லிங்கத்தையும், தூண்கள் இல்லாத மிகப் பெரிய கூரையின் நடுவில் தியான லிங்கத்தையும் அமைத்திருக்கிறார்கள். மிக அமைதியான சூழ் நிலை, முக்கியமாக தியான லிங்க அமைப்பிற்குள் எவ்வளவு சிறிய சப்தமும் மிகப் பெரிய ஒலி அதிர்வைத் தருகிறது. அந்த கட்டிட அமைப்பு மிக அற்புதம். 




மிகப் பெரிய காளையின் சிலை ஒன்றும் வைத்திருக்கிறார்கள். பாரம்பரியக் கோவில்கள் அமைப்பு ஒரு வகை என்றால் இது போன்ற கார்பொரேட் கோவில்களின் அமைப்பு வேறு விதம். கண்களின் காட்சியே கற்பனையின் உணவென்பதால் எல்லாம் மாயை உள்ளே சென்று ஆக்கிரமித்து பிரமிப்பைத் தந்த மாயையே உன்னதமென்கிறது மனது. அந்த வகையில் இந்த இடம் மீண்டும் வரத்தூண்டும் ஒரு இடம் :)) குறிப்பிட்ட மதமில்லாது யார் வேண்டுமானாலும் வரலாம் உணரலாம் என்று இங்கே அறிவித்திருப்பதால் கோவை செல்லும்போது ஒரு முறை அந்த சூழலை அனுபவித்து விட்டு வாருங்கள். 

--

கோவை சென்றபோது வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும் சென்று சில செடிகள் விதைகள் வாங்கி வந்தேன். மிகப் பெரிய பல ஏக்கர் பரந்த இடத்தில் சிறப்பான பராமரிப்புடன் இருக்கிறது. திசு வளர்ப்பிலான வாழைக் கன்றுகள் விற்பனை செய்கிறார்கள். வாழைத் தோட்டங்களில் மிகச் சிறப்பாக விளையும் வாழையின் கன்றிலிருந்து திசு வளர்ப்பு மூலம் நூற்றுக்கணக்கான கன்றுகள் டூப்ளிகேட் செய்யப் படுகின்றன இத்தனை சீப்பு கேரண்டி என்று சொல்லி விற்கப் படுகிறது. தென்னை போன்ற சில மர வகைகள் தவிர்த்து பிறவற்றை இது போன்று காப்பி செய்ய இயலும் என்று ஒரு தனியார் திசு ஆராய்ச்சி கழக உரிமையாளரிடம் பேசியபோது தெரிந்துகொண்டேன். அவர்களின் கன்றுகளை வாங்கி பெரிய குலைகள் தள்ளிய மரங்களுடன் விவசாயிகள் நிற்கும் புகைப்படங்களைக் காண்பித்தார். எல்லாம் இயற்கை விவசாயமா என்றேன், நோ நோ பூச்சி மருந்துதான் என்றார் :((

--

வால்பையன் அருண் நடத்தும் ஹோட்டலிலுக்குச் சென்று அவரையும் பிலாலையும் சந்தித்தேன். திருப்பூரில் ஜோதிஜி அவர்களைச் சந்திக்க முயன்றும் என்னுடைய மகனின் உடல் நிலை காரணம் சந்திக்க இயலாது போய்விட்டது, குடும்ப பாரங்கள் இல்லாது கோவை, திருப்பூர், ஈரோடு ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும். :))

--

வீட்டில் காய்கறித்தோட்டம் போடுவதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆறு பேர் குடும்பத்திற்கு 4 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ அவரைக்காய், 2 கிலோ பாவக்காய், 6 கிலோ சேப்பங்கிழங்கு, 1 கிலோ முள்ளங்கி, முள்ளு கத்தரிக்காய், எண்ணெய் கத்தரிக்காய், சிகப்பு தண்டு கீரை, அரைக் கீரை  கிடைத்தால் என்ன செய்வது? :)) 
                                                          முதல் அறுவடை!

பரீட்சார்த்த முறையில் பீட்ரூட்டும் முட்டைக் கோஸும் ( செம்மொழிப் பூங்காவிலேயே விளையிதுங்க!!) போட்டிருக்கிறேன். பார்க்கலாம்.:))


காடு - ஜெயமோகன்!




முதலில் ரோமியோ தருவதாகச் சொல்லி அவரை சந்திக்க முடியாமல் சாறு சங்கர் அன்பளிப்பாகத் தந்தவுடன் சமீபத்தில் கோவை சென்றபோது நிதானமாகப் படித்த ஜெயமோகனின் 3வது நாவல். விஷ்ணுபுரம் 200 பக்கங்கள் நகர்த்தி அப்படியே நிற்கிறது.

சரி காடு பற்றி

ஏழாம் உலகத்திற்குப் பிறகு நான் விரைவாகப் படித்த ஒரு நாவல். பொருளீட்டுதலின் முதல் படி வெளியில் சென்று உலகை அறிந்துகொள்வது. நமக்கு எல்லோருக்கும் வாய்த்திருக்கும். அந்த மிரட்சியான பயமில்லாது நடித்த நாட்களை இன்று அசை போடவைத்தது இந்த நாவல். கதைக்கு எடுத்துக்கொண்ட களம் காடு. 


16 வயதில் நான் முதன் முதலில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்றபோது வெறும் பார்வையாளனாகவே இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. யார்வந்தால் எழுந்து நிற்கவேண்டும்? யாருடன் சிரித்துப் பேசலாம், யாருடன் தோளில் கை போட்டுப் பேசலாம் என்று நிறைய விஷயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லித்தரப் பட்டது. எதைக் கண்டாலும் ஒரு ஆச்சர்யம். மெல்ல மெல்ல வித்தைகள் புரியும்போது ஒரு ஆளுமை வந்துவிடும். கிடைத்த சுதந்திரத்தை அழகாய் காப்பாற்றி முன்னுக்கும் வரலாம், அழிந்தும் போகலாம். 

வாழ்க்கையில் ஓர் ஆண்மகன் தன் சுய சம்பாத்தியத்திற்காக வெளியில் சென்று சேர்ந்த இடம் ஒரு காடு. முன் பின் அறியாத ஆச்சர்யங்கள் நிறைந்த இடம். ஆச்சர்யங்களை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் சூழ இருக்கும்பொழுது அவன் காணப் போகின்ற கண்டவைகளை மிகைப் படுத்தி கேலி பேசி விவரிக்கும் பார்வையில் காடு அவனுக்கு பிரமிப்புகலந்த ஆச்சர்யமாகவே இருக்கிறது, அது அங்கே ஒரு பெண்ணைக் காணும் வரையில்.

தனிமை நிறைய விஷயங்களை கண்களுக்குக் காண்பிக்கும். கதையின் கதா நாயகனுக்கும் அப்படியே! சொல்லத் தவறிய காதல் விருப்பமில்லாத திருமணம், தோல்வியடைந்த வியாபாரம், மதிக்காத மனைவி, ஏமாற்றிய நண்பர்கள், விரும்பியவளின் பிரிவு. கண்ணெதிரே மாறிய அறிந்தவர்களின் வாழ்க்கை என்று வெறுமனே பார்வையாளனாகவே ஒருவனின் வாழ்வு நகர்வதென்பது காட்டில் ஆரம்பித்து அங்கேயே முடிகிறது. 

தான் பெற்ற மகனிடம் கூட தன் அனுபவத்தைப் பகிர முடியாத நிலையில் கதையின் நாயகன் மனதினுள்ளே குமுறுவதே இங்கே பெரும்பாலான தகப்பனின் தலைவிதியாக இருக்கிறது.     

கதையின் ஊடாக பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. இயற்கையை அழிக்கும் மனித வக்கிரம், ஒரு மிளாவின் கால் தடத்தின் மூலம் மனிதன் வகுக்கும் எல்லைகள் கேலிக்குள்ளாக்கப் படுவது, ஒரு தேவாங்கு ஒருவருக்கு உணவாகவும், மற்றொருவருக்கு குழந்தையாகவும் மாறும் விந்தை, தனிமை சூழ்ந்த அந்தக் காட்டின் மையப் பகுதியில் மேலாடையில்லாத நாகரீகமற்ற காட்டுவாசிப் பெண்ணின் வரம்பு மீறாத காதல், அதே தனிமையை கணவன் இல்லாத நேரத்தில் தன்ன்னுடைய பெருங்காமப் பசிக்கு வருபவரை இரையாகத் துடிக்கும் நாகரீகமான இஞ்சினியர் மனைவி. பயமகற்றி சூழலை விரைவாகக் கற்றுக்கொடுக்கும் காதல், உபத்திரம் செய்யாத கீறக்காதன் யானை,  என நீண்டுகொண்டே போகிறது.

மலையாள ஜாதிகளை, மதம் மாறிய கிறிஸ்தவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் வரிகள், காட்டில் வேலைக்கு வரும் பெண்கள் யாரோடும் படுக்கத் தயாராக இருப்பது போன்ற விஷயங்கள் ஏற்கனவே இந்தக் கதையின் விமர்சனங்களில் விவாதிக்கப் பட்டவைதான். குறிப்பாக நண்பர் கருந்தேள் ராஜேஷும், கார்த்திகேயனும் ஒவ்வொரு முறையும் இதனை மையப் படுத்தி தங்களுடைய கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்து உள்ளார்கள். கதையும் அப்படியேதான் நகர்கிறது. ஆனால் பெரும்பாலான மலையாளிகளின் கேலிகள் இவ்வாறே இருக்கும். குத்தலான நகைச்சுவை என்பது அங்கே சர்வ சாதாரணம். இதே கதை அந்த வட்டார மொழி வழக்கிலில்லாது சாதாரணமாக எழுதப் பட்டிருப்பின் இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என்பது நிச்சயம். அதே சமயம் காட்டிலே மருத்துவ தொண்டு செய்யும் ஃபாதர், கிறிஸ்துவத்தை கேலிபேசுபவரே காண்ட்ராக்டர்களால் சீரழிக்கப் பட்ட பெண்ணை மிஷனரி பாதரிடம் சேர்த்து பிழைக்க வைப்பது. ராவணன் சீதையை புஷ்பகவிமானத்தில் கொண்டு சென்ற காலத்தில் பேப்பர் மட்டும் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி? காட்டைப் பற்றிய அசாதாரணமான கதைகள்.. 

மீண்டும்,

என்னுடைய சம்பாத்திய வேட்டைக்காக நான் களத்திற்கு வந்தபோது நான் கண்ணால் கண்ட கேலிகளும், புறங்கூறுதலும், துரோகமும், கற்றுக் கொடுக்கப்பட்டவைகளும், கற்றுக்கொண்டு நான் செய்த கேலிகளும், துரோகமும், கற்றுக் கொடுத்தவைகளும், கற்றுக் கொண்டவைகளும் இந்தக் கதையின் நாயகனோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. களம்தான் வேறு. மனித மிருகம் தன் இனத்தைக் காப்பாற்ற தனக்கென ஏற்படுத்திய காடு என்பது பல ஒழுங்கான வடிவங்களைக் கொண்டது ஒழுங்கு என்பது இயற்கையின் விதியல்ல அதனாலேயே காட்டை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

தனி மரம் தோப்பாவதில்லைதான், ஆனால் தோப்பிலுள்ள ஒவ்வொரு மரமும் தனிமரம்தான். காடு அதைப்பற்றிச் சொல்வதாகவே எனக்குப் படுகிறது.

காடு - வாசிக்கவேண்டிய புத்தகம்.    

அல்வாவோட ராவுகள்!


.

திரு நெல்வேலியில் பதிவர் உணவு உலகம் திரு.சங்கர லிங்கம் அவர்களை சந்தித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். நெல்லையில் உணவு சுகாதாரத்திற்காக சிறப்பான பல முயற்சிகள், அதிரடி ரெய்டுகள் போன்றவற்றால் முடிந்த அளவு சுகாதாரமான உணவு பொதுமக்களுக்குக் கிடைக்க ஆவன செய்துகொண்டு இருக்கும் அதிகாரியான அவர் உணவு கலப்படம் பற்றி விளக்கிய பல செய்திகள் பகீர் ரகம். 

சாதாரண கரும்புச்சாற்றில் கூட சாக்ரீன் கலப்பு, உபயோகித்த டீத்தூளை மறுசுழற்சி செய்து (இதுதான் சைனா டீ போல!)மக்களுக்கு கொடுப்பது. பழங்கள் பழுக்க வைக்க கார்பைட் கற்கள், அழுகிய காய்கறிகள் சல்லிசாக வாங்கி ஓட்டல்களில் பதார்த்தமாக்குவது, அதேபோன்று கெட்டுப்போன பழங்களை வாங்கி ஜீஸ் போட்டுக் கொடுப்பது, முக்கியமாக சுகாதாரமின்றித் தயாரிக்கப்படும் திடீர் இட்லி, தோசை மாவு இன்னும் வியாபாரிகளின் பணத்தாசைக்காக மக்களை நோயாளிகளாக்கும் கொடூரங்கள் கேள்விப்படும்போது என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்ற சலிப்பே மிஞ்சியது. சென்னையிலும் இது போன்ற அதிகாரிகளும் இருக்கிறார்கள் ஆனா பரவலாக ஏதும் செய்திகளைக் காணோம். ஹும்ம் என்ன செய்ய 15000 கோடி டர்ன் ஓவர் கும்பெனி டாஸ்மாக்கிலேயே சுகாதாரம் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் என்னத்தைச் சொல்ல?

சமீபத்தில் தமிழக அரசு நடத்திய சென்னை சுற்றுலாப் பொருட்காட்சியில் ஒரு லிட்டர் மினரல் தண்ணீர் பாட்டில் விலை ரூ.22/- யார் கேட்பது? மக்கள் நாமம் வாழ்க!

சரி அல்வா விஷயத்திற்கு வருவோம்!

திரு நெல்வேலியில் நாங்கள்தான் ஒரிஜினல் என்று அக்மார்க் டூப்ளிகேட் அல்வாக்கள் நிறையக் கிடைக்கின்றது. இரண்டு கடைகள் தவிர்த்து சில வித்தியாசங்களுடன் அதே பெயரில் விற்கப்படும் போலி அல்வாக்கள் அதிகம். சரி ஒரிஜினல் அல்வா என்னவிதமாகத் தயாரிக்கப் படுகிறது?
                                                      அல்வா கிண்டப் படும் காட்சி!                        

சம்பாகோதுமை, தாமிரபரணித் தண்ணீர், கைப் பக்குவம் இதுதான் ஃபார்முலா. சம்பாகோதுமையில் பாலெடுத்து, புளிக்கவைத்து, சர்க்கரை தண்ணீர் கலந்து, சற்றேறக்குறைய 23 மணி நேரங்கள் ஊறவைத்து, 1 மணி நேரம் அடுப்பில் கிண்டி கடைசியில் முந்திரி தூவி இறக்கி மறு நாள் விற்பனை செய்கிறார்கள். 
                                             தயாரானவுடன் அல்வா சுடச்சுட ரெடி
                                                           




கைகளால் கிண்டாமல் மிஷின் வைத்து செய்வது ஒரு முறை, பாரம்பரிய முறைப்படி கைகளாலும் விறகடுப்பாலும் செய்வது மற்றொறு முறை. சம்பா கோதுமை விலை அதிகம் என்பதால் சாதா கோதுமையில் கலர் எஸென்ஸ் சேர்த்து ஒரிஜினல் போல பாவ்லாவில் விற்பது பரவாலான முறை. க்ரைண்டர் போல ஒன்றில் கீழே பர்னர்கள் வைத்து மிதமான தீயில் கிண்டிக்கொண்டே இருப்பது போன்ற வடிவமைப்பில் மிஷினில் கைப் பக்குவ ரேஞ்சிற்கு டெக்னாலஜி தூள் பறக்கிறது.:))

டிஸ்கி: தலைப்பு விளக்கம் நைட்ல அல்வா சாப்ட்டா கிட்னிக்கு நல்லதாம்!

மீண்டும் சந்திப்போம்!