பலா பட்டறை: புலிநகக் கொன்றை.

புலிநகக் கொன்றை.



.




1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத் தெரிந்து தன் கண் முன்னே சேர்ந்து கலையும் தான் துவங்கிய ஒரு தலைமுறையின் நான்கு கட்டங்களை சப்த நாடியும் ஒடுங்கும் நேரத்தில் வலிய தன் உயிரைப் பிடித்துக்கொண்டு அசை போடும் நாவலாக விரிகிறது புலிநகக் கொன்றை.

ஆசிரியரான திரு.பி.ஏ.கிருஷ்ணன் முதலில் இந்த நாவலை ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதிவிட்டு பின்னர் தமிழில் அவரே மொழி பெயர்த்திருக்கிறார். 

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயரென் கண்ணே - அம்மூவனார் (ஐங்குறுநூறு 142)

என்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த நாவலின் பெயர் கிடைத்ததாகக் கூறுகிறார் ஆசிரியர்.

ஒரு சிகரெட்டினை முழுவதும் ரசித்துப் புகைக்க முடியுமா என்று தெரியவில்லை. முதலில் பற்றவைக்கும்போது கிடைக்கும் ஒரு பதட்டச் சுகம், முதலிழுப்பில் கிடைக்கும் ஒரு வெற்றிச் சுகம் பின்னர் தொடருகிறதா என்றால் இல்லை என்பேன். முதல் மூன்று இழுப்புகளுக்குப் பிறகு பில்டரிடம் முடியப்போகும் வரையில் பிடித்துத் தொலைக்கவேண்டுமே என்ற உந்துதல் தவிர்த்து வேறெதுவும் பெரியதாக அந்த சிகரெட்டினால் கிடைப்பதில்லை. ஆனால் முடியும்போது, பற்றவைக்கும்போது இருந்த அந்த வேகம், ஆவல் மீண்டும் துளிர்த்து, உதடு அந்தப் பஞ்சு நுனியில் நீளும் சூட்டில் துடித்தாலும் ஒரே இழுப்பில் மீண்டும் அந்த ஒரு சிகரெட்டின் முழு சுகத்தினை அனுபவிக்க மனம் முயல்கிறது. 

வாழ்வும் இதுபோலத்தானா? எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆத்திரம், அவசரம், அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளவேண்டுமென்ற வெறியில் ஆரம்பித்து காமம், கடவுள், தேடல் என்று அமைதியாகி, கடைசியில் இதை ருசிக்கவில்லையே அதை முடிக்கவில்லையே என்று கிடந்து தவியாய்த் தவித்து ஏக்கத்தில் அடங்கி உடல் நசுக்கி உயிர் பிரிகிறதா? பிரியும்முன்னர் அசை போடுகிறதா?

வாழ்வில் எல்லாமே சரியாக அதனதன் இடைவெளிகளில் தனது புதிரை சரியாக பொருத்தி, விடையை அவிழ்க்கும்போது வாழ்வது வரமாகத்தான் இருக்கிறது. விடை தெரியாத ஒவ்வொரு கணத்தினையும் நினைவுப் பிரேதங்களாகக் கையிலேந்தி இது எனக்கு சந்தோஷத்தையும், இது எனக்குத் துக்கத்தையும், இது எனக்கு எதையும் தரவில்லை என்று பிரித்துப்பார்க்க முடிகின்ற வாழ்வில், துக்கத்தட்டு தராசில் கீழிறங்கும்போது நிச்சயம் வாழ்வு அதுவும் நான்கு தலைமுறையை தன் கர்ப்பத்தில் துவங்கி முழுமையாகக் காணும் வாழ்வு வரமா? என்றால் பொன்னம்மாப் பாட்டி இல்லை என்பாள். அவள்தான் இந்தக் கதையின் துவக்கம்.

நூறு ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டிலிருந்து கிளை பிரித்துச் செல்லும் கதை விரிந்து பரவிச் செல்கிறது. இது கம்யூனிசத்தைத் தொடுகிறது, பெரியாரைத் தொடுகிறது, கட்டுப்பெட்டிக்காலக் காமத்தைச் சொல்கிறது, காந்தியைத் தொடுகிறது, தீவிரவாதத்தைத் தொடுகிறது, அரசு இயந்திரங்களின் குள்ளநரித்தனத்தைத் தொடுகிறது, போலீஸ் என்ற அதன் கோரப்பற்களைத் தொடுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து சுதந்திரக் காலப் போராட்டங்கள், அது சரி, தவறென்ற வாதம், சுதந்திரம், காந்தி கொலை, பெரியாரின் புரட்சி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம், கம்யூனிஸ்டுகளின் பார்வை, கிரிக்கெட், ஆன்மீகத்துறவரம் என்று பல விஷயங்களைத் தொட கதையின் காலகட்டம் இலகுவாக உதவுகிறது. மேலும் அந்தந்தக் காலகட்டத்திற்கான பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மிகத் திறமையாகக் கையாளப் பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். அந்தக்காலத்திலே மாகாத்மா எங்கூருக்குவந்தப்ப என்ற கதைகளைக் கேட்டவர்கள்/சொன்னவர்கள், அல்லது நினைவுள்ளவர்களுக்கு இந்தக் கதை நிச்சயம் பல பழைய விஷயங்களைக் கிளறிவிடும். 

ஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வி அதனை திறமையாகக் கையாளுபவரின் வாதத் திறமையில் இருக்கிறதென்றே நான் நம்புகிறேன். பால்ய விவாகத்தில் ஆரம்பித்து, கலப்புத் திருமண கைம்பெண்ணிடம் கோறும் மறுமண விருப்பத்தில் முடியும் இந்தக் கதையில் முன்னும் பின்னுமாய் காலம் அலைக்கழிக்கப்பட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.     

இந்தப் புத்தகத்தில் எனக்குத் தைத்தது ஒரு பெண்ணின் நீண்டகால அவளால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வாழ்க்கையின் அவஸ்தையே. கம்யூனிஸமோ. தென்கலை ஐயங்காரோ, இறந்தகாலப் பதிவோ, காந்தியோ, திராவிடமோ ஏதோ ஒன்றைப் பற்றி உங்களிடம் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்பலாம். நீங்கள் இதை சிலாகிக்கலாம் அல்லது ஒதுக்கிவிடலாம். 

வித்தியாசமான வாசிப்பனுவம். எனக்குப் பிடித்திருக்கிறது. :))

புத்தகத்திலிருந்து..

கண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுடனான உரையாடலில் - 

நீங்க எந்தக் கட்சி?
(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா? அல்லது லும்பன் ரகமா? மார்க்ஸ் ரயில் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).

வடை விற்பவனுக்கு வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே என்று சொல்ல ஆசை

“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க? எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”

“எல்லாரையுமா மோசங்கறீங்க? சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”

“கம்யூனிஸ்ட்டா? உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில எம்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிமார்கள அந்த மயித்தப் பிடுங்கிடுவோம் இந்த மயித்தப் பிடுங்கிருவோம்னு சொல்லி பயமுறுத்தினாங்க. அவங்க கதவ இளுத்து மூடிட்டு மெட்ராஸை பார்க்க ஓடிட்டாங்க. நாங்க கொஞ்ச நாளு இவங்க சொல்றதக் கேட்டுகிட்டு மில்லே எங்க கைக்கு வரப்போகுதுன்னு கனாக் கண்டுகிட்டு இருந்தோம். குண்டிப்பீ கரசலாப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது இவங்கள நம்பினா சாப்படற சோறும் தண்ணியும்கூட மாயமாயிரும்னு. அப்புறம்தான் வடைவிக்க வந்தேன். என்னைப் பார்த்தா பரம்பரையா வடை விக்கறவன் மாதிரியாத் தெரியிது?.

--

மூவரில் முதல்வர் எம்ஜிஆர். கண்ணனின் கதாநாயகன். சர்க்கஸில் ஆடுபவர்கள் கூட அணியச் சிறிது சங்கோஜப்படும் உடைகளில் அவர் காதல் பாட்டுகள் பாடினார். சுவர் பக்கம் திரும்பிக்கொண்டு சோகத்தைப் பிழிந்தார். அவர் அருகில் இருந்தால் கன்னிப்பெண்கள் கல்யாணத்துக்கு முன்னோ அல்லது கயவர்களாலோ கர்ப்பம் ஆக வாய்ப்பே இல்லை. கன்னிமையின் காவலன் என்ற பட்டம் அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஏனோ கிடைக்கவில்லை. முந்தையப் படங்களில் கரகரத்த தொண்டையில் பேசும் வில்லன்களுடன் கத்திச் சண்டை போட்டு பிதுங்கிச் சதை வழிந்து வெளித்தள்ளிய இடுப்புகளைக்கொண்ட காப்பாற்றப்படக்கூடாத கதாநாயகிகளையும் காப்பாற்றினார். இந்தப் படங்களில் காதல் காட்சிக்கும் மல்யுத்ததிற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது. அவருக்கு உதவி செய்பவர்கள் இடுப்புச் சிறுத்த சிறுமிகள்.

அடுத்தவர் சிவாஜி. உப்பிய கன்னங்கள். மூன்று நான்கு தாடைகள். எதிர்பாராத சமயங்களில் முகத்தை முறுக்கி உணர்ச்சிகளைப் பிழிபவர், தமிழ் நாட்டு மர்லன் ப்ராண்டோ என்று அழைக்கப் படுபவர். ஆனால் ப்ராண்டாவோவைப்போல் வசனத்தை மெல்பவர் அல்ல. பேசினால் வெகு தொலைவில் இருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கும். வாழ்க்கையின் சுழல்களில் சிக்கிக்கொண்டு அவர் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யும் முயற்சி நான்கு ஐந்து நாள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் துன்பப்படுபவனை நினைவுக்குக்கொண்டுவரும்.

அடுத்ததா ஜெமினி. நன்றாக நடிப்பது தண்டிக்கக்கூடிய குற்றமென்று அவர் நினைப்பதாக அவரைப் பிடிக்காதவர்கள் சொன்னார்கள்.

--

ராஜகுமாரன் எப்படி வசனம் பேசறான் பாருங்கோ..

எப்படிப் பேசினாலும் இடைவெளி இல்லாமப் பேசக்கூடாது. சினிமாவுக்கு வசனத்துக்கா வருவா? அதை பிளேட்டு போட்டு கேட்டுக்கலாமே. சினிமாவை அதனுடைய பிம்பங்களுக்காக வரனும். பார்த்ததுக்கப்புறம் மனசுல நிக்கனும். அது காட்டாததைத்தான் யோசிச்சிப் பார்க்க வைக்கனும். இதுல அப்படியாவது எதாவது இருக்கா? அம்மா பிள்ளை க்ளோஸ் அப்பையும் மிட் ஷாட்டையும் மாத்தி மாத்தி காட்டறான். டைரக்டருக்கு சின்ன வயசுல மண்டைல அடி பட்டிருக்கும்னு நினைக்கறேன்.

--

திருப்பள்ளியில் ரெங்கநாயகியுடன் தனது அடுக்கு மொழியை பயிற்சி செய்வான். “பசியில் பரிதவிக்கும் பாலன் எனக்குப் பலகாரம் படைக்காமல் பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே”

“கரண்டியாலே மண்டைலபோடுவேன். கேக்கறத தமிழ்ல கேளு”

கோபால பிள்ளைக்கு ஒரு அரசியல்வாதியும் பிடிக்காது. ஆனால் திமுக என்றாலே முகமெல்லாம் சிவந்துவிடும். “இவங்க ஜனங்களுக்கு செஞ்சிருக்கர ஒரே தொண்டு என்னன்னா? தமிழ்ல புதுப்புது வசவெல்லாம் கண்டுபிடிச்சதுதான். ஒண்ணும் தெரியாமலேயே ஒரு விஷயத்தைப் பத்தி ரெண்டுமணி நேரம் பேசறதும் இவங்களாலேதான் முடியும்”

“திராவிட நாடு கிடைக்குமா?”

“ அது எங்க இருக்கு கிடைக்கறதுக்கு? இவங்க இப்படிக்கேக்கறாங்கன்னே மத்த மூணு பேருக்கும் தெரியாது. இவங்கதான் ’அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு’ன்னு சொல்லறாங்க. திராவிட நாடு கிடைக்காமப் போனா தமிழ் நாடு இவங்களால சுடுகாடு ஆயுடும்னு சொல்றாங்களா என்னன்னு தெரியல”


புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை. ரூ.250/-
முதல் பதிப்பு டிசம்பர் 2002.

--


இந்த ஆசிரியரின் அடுத்த நாவலான கலங்கிய நதி (ஆங்கிலத்தில் The Muddy River) படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதைப்பற்றி சொல்வனம் தளத்தில் வந்த ஒரு பதிவு.


--

நன்றி! :))

  

7 comments:

vasu balaji said...

தொப்புள் கொடி ஓடுது. முடிச்சதும் இது ரண்டும்தான்.:)

முரளிகண்ணன் said...

பகிர்தலுக்கு நன்றி ஷங்கர்

சாந்தி மாரியப்பன் said...

எத்தனையோ முறை வாசிச்சிருந்தாலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வாசிப்பனுபவம் தருது.

ஹேமா said...

பதிவில் தமிழின் சுவை !

சுரேகா.. said...

நல்லா ஆழ்ந்து படிச்சிருக்கீங்க!

மேற்கோள்களுடன்,தெளிவான விமர்சனம்!

அருமை தலைவரே!

பிரபாகர் said...

இது பற்றி பேசும்போது சொல்லியிருக்கிறீர்கள். நவரசங்களும் கலந்து இருக்கும் போலிருக்கிறதே? எம்ஜிஆர், சிவாஜி மற்றும் சிவாஜி பற்றி குறிப்பிட்டிருந்ததை படித்து நிறைய சிரித்தேன். வடை விற்பவர் சொல்லுவதில்தான் எத்தனை உள்ளர்த்தங்கள்?

படிக்கவேண்டும் சேம்பிளட், வாங்கி அல்லது உங்களிடம் வாங்கி...

வித்தியாசமான விமர்சனம்.

பிரபாகர்...

ஜோதிஜி said...

மின்சார ரயில் பயணத்தில் படித்து விடுவீர்கள் என்று தான் நினைக்கின்றேன். வாங்கி வந்த புத்தகங்கள் கண் எதிரே? ஆனால் எப்போது படிப்பேன் என்று தெரியவில்லை.

புத்தகங்கள் படிக்க படிக்க எழுத்து நடை மாறும் என்பதற்கு சமீப உங்கள் மாற்றம் உதாரணம்.

நன்று.