முதல் பாகம் - ஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1
முதல் பாகத்துல குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் விக்கி பேஜ யாரும் படிச்சிருக்கமாட்டீங்கன்னு தெரியும். இட்ஸ் ஓக்கே.
மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ் மாதிரி எதை எடுப்பது? எதை விடுப்பது? என்று குழப்பும் அப்ளிகேஷன்களால் மண்டை காயத் தேவையில்லை. ஆனால் என்ன மாடல் என்பது கொஞ்சம் குழப்பும்.
முன்பே சொன்னதுபோல நமக்கு என்ன தேவை என்பதைப் பொருத்தே, தேவையான விஷயங்கள் அடங்கிய ஒரு போனை தேர்ந்தெடுப்பது நல்லது. பல ஹை எண்ட் மாடல்களை வைத்துக்கொண்டு வெறுமனே பேசுவதற்குமட்டும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருக்கிறேன்.
விலை அதிகமாக இருக்கும் மாடல் நல்ல மாடல். அல்லது விலை அதிகமான மாடல் வைத்துக்கொள்வதே நான் புழங்கும் அலுவலக, மேல்தட்டு வட்டத்திற்கு எனக்கு மதிப்பாக இருக்கும் என்பது. இரண்டாவதை விட்டுவிடுவோம், சூழ்நிலை கருதி அதை அவர்கள் தவிர்க்க முடியாமல் போகலாம். ஆனால் முதல் காரணி கொஞ்சம் சிக்கலானது. காசு இருக்கிறது என்பதற்காக ஒரு ப்ரைவேட் ஜெட் வாங்கி அதை மண்பாடி லாரியில் ஏற்றி ஒரு க்ளீனரைப்போல ட்ரைவர் அருகில் அமர்ந்துகொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவது போல அபத்தமானது. பந்தாவான பொஸிஷனில் இருப்பவர்கள் மிகச் சாதாரணமான அடிப்படையான விஷயங்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால் எதுக்கு காச வேஸ்ட் பண்ணனும்? எப்படியும் இதன் மீதான மோகம் ஓரிரு மாதங்கள் கூட இருக்காது, அதன் பிறகு இதுவும் மற்றொரு போனே என்ற தத்துவத்தை உதிர்ப்பார்கள். எனவே எப்பொழுதும் இந்தியத் தாரக மந்திரமான சீப் அண்ட் பெஸ்ட் என்ற சூத்திரத்தினை நினைவில் வைப்போர் மேலே தொடர்க!
ஐசிஎஸ் 4.0.4 ல் இப்படித்தான் தமிழ் தெரிகிறது. |
டால்பின் என்ற ப்ரவுசரைத் தரவிறக்கிப் படிக்கும்போது |
இந்தியாவில் விற்கப்படும் சில ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ் எழுத்துகள் தெரிவதில் சிக்கல் இருக்கிறது. இது பெரும்பாலும் ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 வெர்ஷன்களில் இல்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பேஸ்புக், இணையம், எஸ் எம் எஸ், கூகிள் ப்ளஸ் போன்றவைகளில் தமிழில் பகிரப்படுபவைகளில், தமிழ் எழுத்துகள் அழகாகவே தெரியும். நீங்கள் போன் செட்டிங்ஸில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அதற்கு முன்பாக வந்த வெர்ஷன்களில் இந்தப் பிரச்சனை இருந்தது. அப்படித் தமிழ் தெரியாத பிரச்சனை ஆண்ட்ராய்டில் மட்டுமல்ல ஐபோன் தவிர்த்து மற்ற போன்களிலும் இருந்தது, அதற்கு ஒபெரா மினி எனப்படும் ஒரு ப்ரவுசரை தரவிறக்கி அதில் சில செட்டிங்ஸ் மாற்றங்கள் செய்து தமிழ் படித்து வந்தனர்.
ஜின்ஜெர்ப்ரெட் 2.3.6 (Ginger Bread) வெர்ஷனுக்குப் பிறகான ஐஸ் க்ரீம் சாண்ட்விச் (ICS 4) லும் வெர்ஷன் 4.0.3 வரை தமிழ் பல மாடல்களில் சரியாகத் தெரிகிறது, சில போன்களில் கொக்கி கொமாராக இழுத்துக்கொண்டும் தெரிகிறது.லேட்டஸ்ட் ஜெல்லி பீனில் இந்தக் குறை இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்படிக்கும் என்னுடைய அமெரிக்க வாசகர்கள் யாராவது ஜெல்லிபீனில் இயங்கும் நெக்ஸஸ் போனை பரிசளித்தால் அதைப்பற்றியும் எழுதத் தயாராக இருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக என்னால் வேறென்ன கைமாறு செய்ய முடியும்? :)
தமிழ்விசை பற்றி அறிய படத்தை க்ளிக் செய்யவும். |
சரி, தமிழ் படித்தால் மட்டும் போதுமா? தமிழில் தட்டச்ச ஏதேனும் வழி இருக்கிறதா? என்றால் அதற்கும் ஒரு அப்ளிகேஷன் இருக்கிறது. தமிழ்விசை எனும் அந்த விசைப் பலகையைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தட்டச்சியே தமிழைக் கொண்டுவரமுடியும் (NHM போல).
unmaiyil indha tamilai nammudaiya pOnil padikka mudivadhum ezhudha mudivadhumthaan evvalavu makilchiyaaka irukkiradhu!!
படிக்கவே கடுப்பாக இருக்கிறதல்லவா? இதற்குப் பதில் அழகு தமிழிலேயே அனைத்தையும் படிக்க முடிவதும், தட்டச்ச முடிவதும் சமூகதளங்களான பேஸ் புக், ட்விட்டர், ப்ளாக், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை பெரும்பாலும் பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துவிட்டது. யோசித்துப் பாருங்கள். சிம்பியன் போன்ற ஓப்பன் ஸோர்ஸ் அல்லாத சிஸ்டத்தில் இயங்கும் போன்களில் இது சாத்தியமே இல்லை. அவர்களிடம் என்னுடைய போனில் தமிழ் தெரியவில்லை என்று கேட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் நம்மவர் ஒருவரே தமிழில் எழுத ஒரு தட்டச்சு அப்ளிகேஷனை உருவாக்கி அதுவும் இலவசமாகத் தந்திருக்கிறார்கள் என்றால் இது மிகப் பெரிய விஷயம்தானே? இதுதான் ஆண்ட்ராய்டின் வெற்றிக்குக் காரணம்.
பேஸ்புக்கில் தமிழ் படிக்கும்போது |
ட்விட்டரில் தமிழ். |
இதுமட்டுமல்ல விதவிதமான கீபோர்ட்கள் இருக்கிறது. ஸ்வைப் என்பது அதில் ஒன்று How are you என்று தனித்தனியாக ஒவ்வொரு பட்டனாக ஒற்றி எடுக்காமல் அப்படியே ஒவ்வொரு எழுத்தையும் தொட்டு ஒரு கோலம் போட வேண்டியதுதான் வார்த்தை ரெடி!
கோலம் போட்டு டைப் பண்ணும் ஸ்வைப் கீ போர்ட் |
இப்படி அவசியமானவற்றை எங்கே தேடுவது? எப்படித் தரவிறக்கிப் பயன்படுத்துவது? அதற்குத்தான் கூகிள் ப்ளே என்ற மார்க்கெட் உதவுகிறது. https://play. google.com/store இது உங்கள் ஆண்ட்ராய்ட் போனிலேயே இருக்கும். இதன் மூலம் வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் தரவிறக்கிப் பயன்படுத்தமுடியும். இதில் தரவிறக்க உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் கண்டிப்பாகத் தேவை. இது கிட்டத்தட்ட கூகுள் சர்ச் போலத்தான். ஏதேனும் ஒரு குறிச்சொல்லை வைத்துக்கொண்டு அதற்கான அப்ளிகேஷனை நீங்கள் தேடிக் கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் ரேட்டிங், அதைப் பயன்படுத்தியவர்களின் விமர்சனங்கள் இருக்கும். உங்கள் கணினியிலிருந்தே உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்க கட்டளை குடுத்தால் அது ஆட்டோமேட்டிக்காக உங்கள் போனில் டவுன்லோடாகி இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிடும். அஃப்கோர்ஸ் இணையத் தொடர்பு மூலமாகத்தான். இணையத் தொடர்பில்லாத ஸ்மார்ட்போன் இரண்டு கையில்லாத சால்வை போத்திய கெட்டபய காளியைப் போல.
சரி, இனி போன் வாங்குவதிலிருந்து ஆரம்பிப்போம்.
முதலில் என்ன பட்ஜெட் என்பதில் உங்களுக்கான தோசை, சாதாவாகவோ, மசாலா சேர்த்தோ, ஸ்பெஷல் சாதாவாகவோ, ஊத்தப்பமாகவோ கிடைக்கும்.
ஏனென்றால் பட்ஜெட்டை சார்ந்ததுதான் தொடுதிரை / அளவு (அதாங்க டச் ஸ்க்ரீன் ), இன்டர்னல் மெமரி, ப்ராசசர், கேமரா மெகா பிக்ஸல் மற்றும் தரம் போன்றவை அமையும். 10000த்திற்குள்ளான போன்கள், 15000த்திற்குள்ளான போன்கள், 20, 30, நாற்பதாயிரத்தை நெருங்கியும் மாடல்கள் இருக்கின்றன.
1ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராசசர், 512>எம்பி ராம், 4> ஜிபி இண்டர்னல் மெமரி, 3.5>இன்ச் ஸ்க்ரீன், 5 மெகா பிக்ஸல் கேமரா, கூடவே ஒரு ஃப்ரண்ட் கேமரா (ஸகைப், கூகுள் ஹேங் அவுட், வீடியோ காலிங்கிற்கு) என்பதை குறைந்த பட்ச அளவாக இருந்தால் ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் மாடலை ஓரளவு நம்மால் அனுபவிக்க முடியும். இதில் முக்கியமானது இண்டர்னல் மெமரி எனப்படும் போனிலேயே இருக்கும் நினைவகத்தின் அளவு. பல மாடல்களில் இது மிகக் குறைவாக இருக்கும் அதனாலேயே விலை கம்மியாக இருக்கும். நீங்கள் பல அப்ளிகேஷனை தரவிறக்கிப் பயன்படுத்தத் துவங்கும்போது இந்த நினைவகம் முழுவதும் நிரம்பி உங்கள் போனின் செயல்பாட்டை மிகவும் மெதுவாக ஆக்கிவிடும், அருகிலிருக்கும் அமெரிக்க நண்பர் இதுக்குத்தாங்க ஆப்பிள் ஐபோன் வாங்குங்கன்னு சொன்னேன் என்று உங்களை வெறுப்பேற்றுவார். (உடனே அதுல பேட்டரியக் காமிங்க, மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கா? என்றெல்லாம் எதிர்கேள்வி கேட்டு சமாளிப்போம்னு வெச்சிக்கிடுங்க இருந்தாலும்...)
விற்பவரும் சாமர்த்தியமாக 32ஜிபி வரைக்கும் எக்ஸ்பாண்ட் பண்ணிக்கலாம் சார் என்று உங்களை அசரடிப்பார், ஆனால் இண்டர்னல் மெமரியில் இருக்கும் அனைத்தையும் நீங்கள் எஸ் டி கார்டுக்கு மாற்ற முடியாது என்பதை நினைவில் வையுங்கள். (ரூட்டிங் என்றொரு பைபாஸ் சர்ஜரி இருக்கிறது அதைப் பற்றி இப்பொழுது வேண்டாம்)
சரி, இண்டர்னல் மெமரி ஓக்கே. ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் டுயல் கோர் ப்ராஸஸர் வேகமான செயல்பாட்டுக்கு உதவும். சரி. அதுவும் இருக்கிறது. பிறகு? கேமரா. மின்னுவதல்லாம் மின்னலல்ல என்பதைப்போல 5 மெகா பிக்ஸல் என்று சொல்லுவதெல்லாமும் அதே தரத்தில் இருக்கும் என்பது நிச்சயமில்லை. எவ்வளவு சாதாரணக் கேமராவும் நல்ல வெளிச்சத்தில் நன்றாகத்தான் படமெடுக்கும் என்றாலும், பயன்படுத்தப் படும் லென்ஸ் வைத்து படத்தின் தெளிவு கூடுகிறது, போலவே அதில் உபயோகப் படுத்தப்படும் எல் இ டி ப்ளாஸ் லைட்டும். ஆக, இது பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் கம்பெனியைப் பொறுத்து வேறுபடுகிறது. நோக்கியாவில் 3 மெகா பிக்ஸலில் அருமையாக விழும் படங்கள் சாம்சங்க் 5 மெகா பிக்ஸலில் சாதாரணமாக இருப்பதை கண்டிருக்கிறேன். எனவே கேமரா உங்களுக்கு முக்கியமென்றால் ஒரு படம் எடுத்து அதன் க்வாலிட்டி எப்படி? என்று சோதித்து வாங்குவதில் தவறில்லை. ஏனெனில் நல்ல கேமரா இருக்கும் போன் உங்கள் பிரயாணத்தில் தனியே ஒரு கேமராவைத் தூக்கிச் செல்வதிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதோடு, கண்டதும் உடனே பாக்கெட்டிலிருந்து படமெடுக்க உதவுகிறது. அது மட்டுமில்லை எடுத்த படத்தை நீங்கள் உடனே மெயிலிலோ, ட்விட்டரிலோ, ப்ளூடூத்திலோ, பேஸ்புக்கிலோ பகிர்ந்துகொள்ள முடியும்.
ஒரு சிம், இரண்டு சிம் கார்டுகள் கொண்ட போன்களும் கிடைக்கின்றன. உங்களுக்கு அவசியமானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு இரண்டு சிம் கொண்ட மூன்று மாடல்களைப் பார்ப்போம்:
நமது பட்ஜெட் 10000/- என்றால்..
சாம்சங் கேலக்ஸி ஏஸ் டுயல்
சோனி டிப்போ டுயல்
மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ110
இந்த மூன்று மாடல்களில் மேலே சொன்ன அளவீடுகளை வைத்துப் பார்த்தால் எது சிறந்தது? நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
முடிந்தால் இங்கே பதில் கூறுங்கள். அல்லது அலுவலகம் சென்று வரும் வழியில் லைவ் டெமோ காண்பிக்கும் ஒரு ஷோரூமில் இந்த மாடல்களை உபயோகித்துப் பாருங்கள். அல்லது அடிப்படையான விசயங்களை உங்களுக்குச் சொல்லும் கீழே உள்ள தளத்தில் சென்று வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் உபயோகித்தவர்களின் கருத்துகளையும் படியுங்கள்.
உதாரணத்திற்கு, மேலே சொன்ன மாடல்களின் ஒரு ஒப்பீடு:
(இந்தத் தளத்தில் வேறு, வேறு மாடல்களைக்கூட நீங்கள் ஒப்பீடு செய்துகொள்ளலாம். இதெல்லாமே அந்தந்த தயாரிப்பாளர்கள் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்டவை, ஒன்றை வாங்கச் செல்வதற்கு முன்பான அதைப்பற்றிய சிற்றறிவுக்கு இவைகள் உதவுமே அன்றி இவையே வேதவாக்கல்ல என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.)
http://www.gsmarena.com/ இந்தத் தளத்தில் உங்களுக்குப் பிடித்த மாடலை செலக்ட் செய்து அதன் டெக்னிக்கல் விவரங்கள், அதை வாங்கியவர்களின் கருத்துகள் (அவை அனைத்தும் உண்மையுமல்ல பொய்யுமல்ல :) )போன்றவற்றையும் படியுங்கள்.
மேலே உள்ளவைகள் உதவிகரமாக இருந்ததா? அல்லது மேலும் குழப்புகிறதா? அல்லது, அய்யா சாமி ஆண்ட்ராய்ட் பொழச்சிப்போகட்டும் அதப்பத்தி எழுதிக் கொலபண்றத நிப்பாட்டுங்க, என்று தோன்றுகிறதா? எதுவா இருந்தாலும் கருத்த சொல்லுங்க பாஸ் 66A எல்லாம் பாயாது.
டிஸ்கி: தமிழ்மணம் ரெகுலராகப் போய் மாமாங்கம் ஆகிவிட்டதால், சமீபத்தில் சென்றபோது அண்ட்ராய்டைப் பற்றி நன்றாக எழுதி இருக்கும் பலரின் தளங்களையும் வாசிக்க முடிந்தது. அடுத்த இடுகையிலிருந்து அவற்றின் இணைப்பையும் தர உத்தேசம். உங்களைக் கவர்ந்த இடுகை பற்றியும் கமெண்ட்டில் நீங்கள் தெரிவிக்கலாம். எனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
தொடர்வதற்கு நன்றி.
(கொடுமை தொடரும்..)