பலா பட்டறை: மஞ்சு!! - (201- ஆவது இடுகை!)

மஞ்சு!! - (201- ஆவது இடுகை!)


”பாண்டியானு” என்றாள் மஞ்சு.

இரு கன்னங்கள் அவ்வளவு ரோஸ் நிறத்தில் எந்த சாயமுமில்லாமல் எப்படி அவ்வளவு அழகாயிருக்கிறாள் என்று அவளைக் கண்டமுதல் யோசித்துக்கொண்டே இருந்தேன். இருபுறமும் பஃப் வைத்த அழகான மஞ்சள் நிறச் சட்டை, நிறைய ஃப்ரில்களுடன் பாவாடை, அவளின் உயரத்தில் பாதிதாண்டிய கரு கரு கூந்தல், நுனியில் கூந்தலை முடிச்சு போட்டு அதில் வடியும் ஈரம் சொட்டிச் சொட்டி அது அவள் சட்டையை நனைத்துக்கொண்டு வட்டம் போட்டு இருந்தது.

”எப்படி இவ்வளவு ரோஸ் கலர்ல இருக்கே மஞ்சு” என்றேன், ”திவசம் சவனப்ப்ராஸம் கழிக்கு ஈ கலர் கிட்டும்” என்றாள்.

வேறொரு நாள் அவள் வீட்டின் பரம்பில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு செடியிலிருந்து ஏதோ பறித்தாள், அவளின் அசைவுகளையே ரசித்துக்கொண்டிருந்தேன். 

”வேணோ” என்றாள். 

அவள் கையில் ரோஸ் நிறத்தில் ஒரு காயுமில்லாத பழமுமில்லாத ஒரு வஸ்து இருந்தது.

 ”என்னதிது மஞ்சு?”

 ”சாம்பக்கா” நான் திரும்பிப் பார்த்து யாருடைய அக்கா என்று கேட்டபோதுதான் அவள் ”பாண்டியானு” என்றாள், இரு கன்னத்திலும் குழிகள் விழ சிரித்தாள். 

என் பாட்டியுடன் 10ஆம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் கேரளாவின் கோட்டயம் வந்ததிலிருந்து எனக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பித்திருந்தது. தமிழ் நாட்டிலுருந்து யார் வந்தாலும் இவர்கள் அழைப்பது ”பாண்டி:” போக கையில் கண்டிப்பாக காய சஞ்சி வைத்திருப்பார்கள் என்று பெட் கட்டுகிறார்கள் (மஞ்சள் துணிப் பை). ’இல்லை’ என்று சொல்வதற்கு இரண்டு கண் இமைகளையும் சிமிட்டுகிறார்கள். ’ஓ’ என்ற ஒற்றை வார்த்தையில் பத்து பேராவுக்கான விஷயங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். பாவாடை சட்டை அல்லது தாவணியில் அழகாய் மனதில் தீ மூட்டுகிறார்கள். பாட்டி அவளின் உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்றபோதுதான் முதலில் மஞ்சுவைப் பார்த்தேன். 

”இட்ஸ் எ ஃப்ரூட் கழிக்கு” என்றாள். 

அடிப்பாவி கையில் வைத்திருந்த இந்த வஸ்துவோட பேர்தான் ”சாம்பக்காயா?” கிட்டத்தட்ட பேரிக்காய் மாதிரி இருந்தது. 

அவள் என்னை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். அழகான ஒரு ஆற்றங்கரையில் ஒரு புதரின் அந்தப் பக்கம் அவளும் இந்தப் பக்கம் நானும் குளித்தோம், நடு ஆறு வரை நீச்சல் அடித்து கரையில் இருந்தவாரே உள்ளங்கைகளால் நான் நீரெடுத்துக் குளிப்பதைக் கண்டு ”அய்யே” என்று அவள் சிரித்தபோது எனக்கு நீச்சல் தெரியாததற்குக் காரணமான காய்ந்து வெண் மணலாராய்ப் போயிருந்த பாலாற்றை சபித்தேன். 

அங்கே ரப்பர் செறுப்பை சுத்தமாய் கழுவி வெள்ளையாய் ஆக்கிக்கொண்டிருந்த ஒரு ஆளும் கேட்டான் ”பாண்டியானோ?”

”அம்பலத்தி போகாம் வா” என்று அவள் கோவிலுக்குக் கூட்டிச் சென்று என் மேல் சட்டையைக் கழற்றச்சொன்னதும் ஏன் இங்கே கோவிலை அம்பலம் என்று சொல்கிறார்கள் என்று புரியவந்தது.

 கூச்சத்துடன் எல்லோருடைய கண்களும் என்னையே பார்ப்பதுபோல என் வெண்டக்காய் உடலை மறைக்க என்னென்னமோ செய்வதை ஓரக்கண்ணால் பார்த்த மஞ்சு ”தே முண்டு சூழ்ச்சிக்கணும் கேட்டோ” என்ற பொழுது அவள் கண்கள் சென்ற திசையை வைத்துக் கணித்ததில் என் வேட்டி முடிச்சு அபாயகரமான நிலையில் இருப்பது கண்டு அப்படியே அதை கையால் பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என கோவிலை விட்டு வெளியே வந்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் கோட்டயம் செல்வது வாடிக்கையாய்ப் போனது, பல மளையாள வார்த்தைகள் புரிய ஆரம்பித்திருந்தது. காலேஜின் இரண்டாம் ஆண்டில் மஞ்சு புடவை அணியத் துவங்கி இருந்தாள். கோட்டயம் போட் ஜெட்டியிலிருந்து ஆலப் புழை வரை போட்டில் ப்ரயாணம் செய்தோம். தோள்களால் உரசிக்கொண்டோம், அவள் சாப்பிட்ட உணவை எனக்கு ஊட்டிவிட்டாள், என் தோளில் சாய்ந்து தூங்கினாள், அவளின் இரு கைகளாலும் என் வலது கையைப் பிடித்துக்கொண்டு ஆலப் புழையின் சாலைகளில் நடந்தோம். 

எனக்கு ஏற்பட்ட உணர்சிகளை நான் பல முறை என் நண்பர்களின் காதல் கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். மஞ்சு ஒரு நாளும் என்னைக் காதலிப்பதாகவோ, அல்லது குறைந்த பட்சம் காதல் பற்றியோ பேசியதில்லை. ஏதோ ஒரு மாயையைப் போன்ற ப்ரேமை எங்களைச் சுற்றி அல்லது என்னைச் சுற்றி கூடு கட்டி இருந்தது. எக்காரணத்திற்காகவும், எக்காலத்திலும் அதை நானாக உடைக்கப் போவதில்லை என்று எனக்குள் சபதம் செய்திருந்தேன்.  

ஒரு முறை கோட்டயத்தின் பெரிய கோவிலின் வரிசையாய் சென்ற படிகளில் அமர்ந்து கொண்டிருந்தபோது மஞ்சு கேட்டாள் ’ நிங்கள் ஆரெங்கிலும் ப்ரேமிக்குன்னோ ஏட்டா?”

நான் உள்ளுக்குள் செறுமிக்கொண்டு பேச ஆரம்பிப்பதற்குள் ”எனிக்கு ஒரு தமிழாள இஷ்டமானு” என்றாள்.

ஏற்கவே உயரத்திலிருந்த அந்த பெரிய கோவிலைவிட என் மனம் இன்னும் உயரத்தில் பறக்கத்துவங்கி இருந்தது.

”தமிழ் ஆளா யார் அது மஞ்சு?” என்றேன்.

அவள் ஆரம்பித்து சொன்ன பெயர் என்னுடையது இல்லை என்று புரியவே எனக்கு கொஞ்ச நேரம் கழித்தது. உணர்ச்சிகளால் பின்னப்பட்டிருந்த என் மனக் கூட்டில் நான் காதல் தூசியை அழித்து சினேகத்தை விட்டு வைத்திருந்தேன். எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அவர் இங்கேதான் இருக்காரா? என்றேன். 

”ஏய், இல்லா. பட்ஷே கோன்டாக்ட் நம்பருண்டு எப்போ வேணெங்கிலும் விளிக்காம். ஞான் சர்ப்ரைஸாயிட்டு விளிச்சுப் பறையாம் போகுன்னு. புள்ளி சென்னையிலானு தாமஸம். ஞான் அவிட வரும்போள் ஏட்டன் சகாயிக்கனும். இதானு டீட்டெயில்”

அவள் கொடுத்த காகிதத்தில் இப்படி எழுதி இருந்தது..
ஷங்கர் Shankar.
palaapattarai.blogspot.comமுதன் முறையாக மஞ்சுவைப் பார்த்து மலையாளத்தில் சொன்னேன் ”நினக்கு வட்டானு”
( சற்றொப்ப 200 இடுகைகளில் மொக்கை போட்டதைத் தாங்கிய உங்களுக்கு நன்றி சொல்ல இதை விட்டால் வேறு எந்த வழியும் தெரியாததால், ஆதரவளிக்கும் அன்பு வலையுலக நண்பர்களே எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி! ) :))))


.

18 comments: