பலா பட்டறை: என்னை இயற்கையாகச் சாகவிடுங்கள், ப்ளீஸ்..

என்னை இயற்கையாகச் சாகவிடுங்கள், ப்ளீஸ்..


.

நேற்று புத்தகக் கண்காட்சியில் பதிவர் சுரேகாவுடன் திரு.அ.முத்துக்கிருஷ்ணனைச் சந்தித்துக் கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் என்ற அவரின் சமீபத்திய பரபரப்பான புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அணுவினால் வந்த வரப்போகிற தீமைகள் பற்றி, அதை வைத்து நடக்கும் தில்லாலங்கடிகள் பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்ட புத்தகம் இது. 



பூவுலகின் நண்பர்கள் அரங்கில் உயிர்மை வெளியாடாக வந்த இந்தப் புத்தகமும், பூவுலகின் நண்பர்கள் வெளியீடான அணுவாற்றல் ஒரு அறிமுகம் (முதல் பதிப்பு சனவரி 1989) ஒரு சேரப் படிக்கும்போது நமது சந்தேகங்களும், ஏன் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதற்கும், மனித இனம் மட்டுமல்லாத இந்த உலகின் ஆதார தத்துவத்திற்கே இந்த அணுசக்தி உற்பத்தி எவ்வளவு பெரிய சரி செய்ய முடியாத ஒரு பேரழிவை கொண்டுவரும் என்பதற்கும் விடை அளிக்கும்.

சில நாட்களுக்கு முன்னர் நான் பார்த்த The Cove மற்றும் Crude என்ற இரண்டு டாக்குமெண்ட்டரிகளில் முதலாவது ஜப்பானின் தைஜி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டு திமிங்கல மாமிசமாக விற்கப்படும் டால்பின்களைப் பற்றியது. 

அந்தப் படத்தில் அழகான, மனிதர்களுக்கு மிக நெருக்கமான அந்த ஜீவனைக் கூடக் கொன்று தின்கிறார்களே என்ற ஜல்லியெல்லாம் விட்டுவிடுவோம். பிரச்சனையே அதை திமிங்கிலச் சரக்கு என்று விற்றுவிடுவதுதான். சரி அதிலென்ன பிரச்சனை என்றால், தொழிற்சாலை, வாகன மாசுகளால் உருவாகும் மெர்குரி கடலில் படிகிறது அதைத் தின்று உயிர்வாழும் ஒரு குறிப்பிட்ட கடல்வாழ் உயிரியைச் சாப்பிட்டு வாழும் மீன்களை டால்பின்கள் உண்கின்றன. டால்பின்களின் உடலின் இதனால் அளவுக்கதிகமான மெர்குரி விஷம் ஏறிப்போகிறது, இதை திமிங்கில பிரியாணியாக ஏமாந்து சாப்பிடும் மனிதனின் உடலில் இது பல பாதகமான விளைவுகளை உருவாக்குகிறது. அது பிறக்கும் குழந்தைகளையும் தாக்குகிறது. 

அடுத்த படத்தில் செவ்ரான் எனும் பெட்ரோலியக் கம்பெனி அமேசான் காட்டில் பெட்ரோல் எடுக்கிறேன் பேர்வழி என்று அந்த இயற்கை நிலத்தையும் அதன் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரத்தையும் எவரோ காரும் ஏரோப்ளேனும் ஓட்டுவதற்காகக் கிழித்த கதை. 

மாசற்ற பளிங்கு போன்ற ஆற்றிலும், நிலத்திலும் கலந்த பெட்ரோலியக் கசடுகளால் கேன்சர் முதல் சொல்லொணா நோய்களுடன் போராடும் மக்களைப் பற்றி, குடிக்க நீர்கூட இல்லாமல் படும் துயர்களைப் பற்றி அவர்களின் கேள்விகளை பகடியாக்கி கேணையர்களாக ஆக்கும் சட்ட நிபுணர்கள் பற்றி, அதற்காக சோர்ந்துவிடாமல் போராடும் மக்களைப் பற்றி என்று நெஞ்சைப் பதற வைக்கிறது.

அப்பாடா ஒன்று ஜப்பான், மற்றோன்று எங்கோ அமேசான் என்று டிவியை அணைத்துவிட்டு அக்கடா என்று யார் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்? ஏன் இன்னும் கடலூரில் போர்க்கால நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பல்குத்திக்கொண்டே யோசிக்க முடியவில்லை. 

ஏனென்றால் மேலே சொன்ன இரண்டு புத்தகங்களும் அதைவிட அதற்கும் மேலே உள்ள தலைப்பும். 

இயற்கையாக நாம் சாவதற்குறிய எல்லாவழிகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதாகவே உணவிலிருந்து, உறக்கம் வரைக்கும் புகுத்தப்படும் எல்லாமே உணர்த்துகிறது.

மரபணு மாற்ற உணவுகளை ஆராயாமல் ஏற்றுக்கொண்டதன் மூலமாக, பாரம்பரிய நிலம் சார்ந்த உணவுகளை, விவசாயத்தை உதாசீனப் படுத்தியதன் மூலமாக சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்ற புள்ளிகளில் ஆரம்பிக்கும் பிரச்சனை, இறப்பினை ஒரு நோயால் பூர்த்தி செய்கிறதே அன்றி இயற்கையான, உடல் உறுப்புகளின் வயதால் இயக்கத்தை நிறுத்துவதால் அல்ல. எனில் இதுதான் சரி என்று நம்மில் புகுத்தப்பட்ட ஒரு நவீன வாழ்வுமுறை மிகப்பெரிய ஒரு சிக்கலை நோக்கி நம்முடைய தலைமுறையைத் தள்ளுவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை திரி கொளுத்தி வைத்திருக்கிறது.

எப்படி உணவென்பது பசியிலிருந்து ருசிக்கு மாறியதோ அப்பொழுதே இறப்பு விதியிலிருந்து சதிக்கு மாற்றப் பட்டிருக்கிறது. தீனி தின்னும் பண்டாரமாக உலக மக்களின் மீதான இந்தப் பார்வை சற்றொப்ப ஒரு கோழிப்பண்ணைக்கு ஒப்பானது. நன்றாகக் கொழுக்கவைக்க விதவிதமான தீனிகளைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து வளர்க்கப்படும் கறிக்கோழிகள் போலத்தான் பொதுமனித இனம் இன்றைக்கும் உலகின் ஆளும் சக்திகளால் வியாபார வாங்கும் சந்தையாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றி வளைத்தாயிற்று இனி கூடங்குளம் வி(ஷ)யத்துக்கு வரலாம்..

கூடங்குளத்தில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. அருமையான குறைந்த செலவிலான மின்சாரம் கிடைக்கும் ஏங்க சும்மா பிரச்சனை பண்றாங்க என்று கேட்கப்படும் பொதுமக்களுக்கான பொறுமையான பதில் சரியாகக் கிடைக்காததற்குக் காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் ஊடகங்கள் அல்லது செய்தி பெறும் வழிகளாகவே இருக்கின்றன. முக்கால்வாசித் தமிழ்நாடு இதில் முழுமையாகப் பாதிக்கப்படும் என்ற செய்தி இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களை நிச்சயம் ஒரு மேப்பைத் தேடச்செய்யும் அதில் தனது வீடும் சொத்தும் வருகிறதா என்று பார்க்கச் சொல்லும். வந்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு உடனே ஒரு எதிர்ப்பு நிலையை எடுக்கச்சொல்லும். இது சரியான அணுகுமுறையா?

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் எழுதியது இருக்கட்டும் நீங்கள் கொஞ்சம் நெட்டில் தேடுங்கள், இதைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் ஹோம் ஒர்க் செய்யுங்கள் நாங்கள் சொல்வதில் தவறிருந்தால் எங்களை தரவுகளுடன் கேள்விகேளுங்கள். சரி என்றால் இதை மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக மக்களுக்குப் பரப்புங்கள். இது வாழும் நமக்கான போராட்டமல்ல இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கப்போகும் ஒரு குழந்தை ஊனமில்லாமல் பிறக்க, கேன்சரில் இறக்காமலிருக்க நாம் ஒவ்வொருவரும் எடுக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு நிலைப்பாடு என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.

இப்பொழுது மீண்டும் மேற் சொன்ன டாக்குமெண்டரிகளைப் பார்க்கும்போது மெத்தப் படித்த மேதாவிகள் செய்த தவறுக்காக வாங்கும் வக்காலத்துகளில் உள்ள மொள்ளமாறித்தனம் புரியவரும். நாளை முக்கால்வாசி தமிழ்நாடு அணுக்கதிரால் வாழத்தகுதியற்றதாக மாறும்போது இவர்கள் உங்களுக்குக் கூறப்போகும் பதில் தமிழ் நாட்டில் சுகாதாரமில்லை, சாக்கடை வசதி இல்லை, கொசு அதிகம், மக்கள் மாவா போட்டார்கள், டாஸ்மாக்கில் குடித்தார்கள் ஆகவே செத்தார்கள் என்பதாகத்தான் இருக்குமே அன்றி ஆமாம் உலை வெடித்துவிட்டது உயிர் போய்விட்டது என்பதாக இருக்காது. 

--

மின்சாரத்தை உற்பத்தி செய்ய காப்பர் வைண்டிங் சூழ்ந்த ஒரு ஆல்டர்னேட்டரை சுற்றவேண்டும். அதைக் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றினால் நமக்கு மின்சாரம் கிடைக்கும். சரி எதை வைத்துச் சுற்றலாம்., டீசல் இன்சினை வைத்துச் சுற்றலாம். என்ன எழவு டீசல் செலவாகும் அதனால் டாலர் செலவாகும், ஏகப்பட்ட கரிப்புகை வரும், பராமரிப்புச் செலவு லொட்டு லொசுக்கென்று எல்லாம் கூட்டிக் கழித்தால் கட்டுப்படியாகாது. 

சரியென்று நீராவியின் ஆற்றலை வைத்து சுற்றவைக்கலாமென்று பார்த்தால் எதையாவது எரித்தால்தான் நீர் ஆவியாகும்., நிலக்கரி கிடைத்தது. ம்ஹும் இதுவும் கொஞ்சநாளில் பூட்டகேஸ், குந்தித் தின்றாயிற்று குன்று மாளப்போகிறது. 

ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதில் விழும் தண்ணீரின் வேகத்தை வைத்து சுற்றிவிடலாமென்றால், உள்நாட்டு அரசியல், மழை பெய்யாதது, தண்ணிருக்கான சண்டைகள், நதி நீர் இணைப்பின் சிக்கல்கள் என்று மிகப்பெரியதாக எதுவும் செய்யமுடியவில்லை.

கவலைப்படாதே சகோதரா என்று கைகொடுக்க வந்ததுதான் அணுமின் உற்பத்தி. எப்படி. அணுவைப் பிளக்கும்போது அபரிமிதமான வெப்பம் வரும். அந்த வெப்பத்தின் மூலம் தண்ணீரை சூடாக்கலாம் அதன் நீராவி கொண்டு ஆல்டர்னேட்டரை சுற்றவைத்து கரண்ட் எடுத்துவிடலாம். திரும்பத் திரும்ப இதை செயவதன் மூலம் மிக குறைந்த செலவில் மின்சாரம். நாட்டு மக்களுக்கு 24 மணி நேரம் ஒளிவீசும். சுபிட்சம். சுபம். 

இப்படித்தான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சொல்லப்பட்டவர்களாலேயே மென்று முழுங்க முடியாத அளவுக்கு அது வேலை காட்டியது ரஷ்யாவின் செர்னோபில் என்ற ஊரில் உள்ள ஏற்பட்ட அணு உலை விபத்து.



அழிக்க முடியாத ஆற்றலாக உள்ள இந்த சக்தியின் மூலமே நமக்கெல்லாம் செலவில்லாத மின்சாரம் கிடைக்கும் என்ற இனிப்பைத் தடவி இவர்கள் நமக்கு சொல்ல மறுப்பதெல்லாம் இது அணுகுண்டிற்கான மூலப்பொருட்களின் உற்பத்திக்கூடம் இதன் வெறும் கழிவுதான் மின்சாரம். 

வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெயிலடிக்கும் ஒரு நிலத்தில் எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாத சூரிய சக்தி சார்ந்த மின்சாரப் பயன்பாட்டிற்கான மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்க எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல்,  சிறப்பான காற்றாலைகள் கண்டுபிடிப்பு மற்றும் பொருத்துதலுக்கான முயற்சிகளை முன்னெடுக்காமல், கடலில் வீணாகக் கலக்கும் ஆறுகளை ஒருங்கிணைத்து சிறு அணைகள் கட்டி மின்சார உற்பத்திக்கான எந்த முயற்சியும் எடுக்க வக்கில்லாத அதிபுத்திசாலிகள் முன்வைக்கும் தீர்வுதான் இந்த அணுமின் உற்பத்தி.



ஏன் இதை எதிர்க்கவேண்டும்? ஏனென்றால் இதில் ஏற்படும் தவறு ஈடு செய்ய முடியாதது. தலைமுறை கடந்து பாதிப்பை ஏற்படுத்துவது. அழிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துவது. புல் பூண்டு முளைக்கவிடாமல் செய்யும் ஒரு மிகப்பெரிய அழிவு சக்தி. மேலும் இது வெறும் மின்சாரத்திற்கானது என்பது பம்மாத்து. இதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை பல நூறு ஆண்டுகளுக்கு பாதுகாக்கவேண்டும். நினைவிருக்கிறதில்லையா? மனிதன் குரங்கிலிருந்து வந்தவன்,. ஆறறிவுப் பைத்தியம் வேறு, குடிப்பழக்கமும் தாராளமாக உண்டு. ஒரு அழிவு சக்தியிலிருந்து இன்னொரு அழிவு சக்தியைக் கண்டுபிடிக்கும் தலைமுறையில் எந்தக் குரங்கு எல்லை மீறும் என்பது எழுதிக்கொண்டி்க்கும் இந்தக் குரங்கும் அறியாது என்பதே நிதர்சனம்.

போக மின்சாரசேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்துக்கு, மின்இழப்பினை ஈடு கட்டத்தெரியாத மின்சார பொறியாளர்களுக்கு தெருவுக்கொரு அணு உலை வந்தாலும் பத்தாது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.

சரி இதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இல்லை. சோற்றுக்கே வழியில்லாதவன் முன்பாக சாப்ட்டீங்களா என்று பாலிடாயில் நீட்டுகிறார்கள். நமக்குத் தேவை அனைவருக்கும் சத்தான நிலம் சார்ந்த உணவு. சுகாதாரமான குடிநீர். பசுமையான சுற்றுச்சூழல். எதையும் வீணாக்காத நேர்மை. சுய ஒழுக்கம். மின்சாரச் சிக்கனம். சுகாதாரம், தனி மனித ஒழுக்கம், நல்லவைகளுக்காக, பிறக்காத சந்ததிகளுக்கான சிறப்பான வாழ்வுச் சூழலை விட்டுச் செல்வதற்காகப் போராடுவது என்று நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தலைவன் வருவான், கட்சி வரும் கவுன்சிலர் வருவான் என்று எதிர்பார்க்காமல் தனி மனிதராக நம்மால் தேவையில்லாமல் ஒரு விளக்கு அணைக்கப்பட்டாலும், ஒரு டம்ப்ளர் தண்ணீர் வீணாக்கப் படாமல் இருந்தாலும், ஒரு பருக்கை உணவு சிந்தாமல் உண்ணப்பட்டாலும் அதில் முதலடியை எடுத்துவைத்ததாகவே கொள்ளப்படும்.    


நாம் கேட்கவேண்டிய ஒரே கேள்வி, விபத்தென்பது தவிர்க்க முடியாதது, விபத்தே நடக்காது என்று அறுதி இட்டுக்கூறக்கூடிய ஒன்றை இதுவரை எந்த மனிதக் கண்டுபிடிப்பும் சாதிக்கவில்லை. இது உங்களைப் பொருத்தவரை உன்னதமானதாக இருக்கலாம். ஆனால் விபத்தொன்று வந்துவிட்டால் அதிலிருந்து இந்த பெருமை மிக்க நிலம் புல் பூண்டு முளைக்காமல் வாழத்தகுதியில்லாமல் போகும்தானே? இதிலிருந்து மீள முடியுமா? உங்களிடம் நேர்மையாக அதற்கென்ன வழி இருக்கிறது???????


ஆமாம் இயற்கையாகச் சாகவே எனக்கு விருப்பம். உங்களுக்கு???


படியுங்கள்:::



13 comments:

Joe said...

ஷங்கர் அண்ணே,
அருமையான கட்டுரை.

இந்தப் பக்கமிருக்கிற பொதுசனம், "கரண்ட் கிடைக்குமே, ஏன் தேவையில்லாமல் வளர்ச்சிப் பணியை தடுக்கிறார்கள்?" என்றே கேட்டுக் கொண்டிருக்கிறது.

RAVI said...

// மின்இழப்பினை ஈடு கட்டத்தெரியாத மின்சார பொறியாளர்களுக்கு //

சம்பளத்தையே சரியா கணக்குப்போட்டு எண்ணத்தெரியாது.கால்குலேட்டர் பொறியாளர்கள்.

// சோற்றுக்கே வழியில்லாதவன் முன்பாக சாப்ட்டீங்களா என்று பாலிடாயில் நீட்டுகிறார்கள் //

முழுவதுமே அருமை.

மரா said...

நல்ல பல விளக்கங்கள்.நல்லதொரு கட்டுரை.

சுரேகா.. said...

மிகவும் சரியாக, மனதில் தைக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். ஆம்.. நான் இயற்கையாகச் சாக விரும்புகிறேன்.!!

நான் அந்தப் படத்தையும் பார்த்துவிட்டேன் தலைவரே!

அதிர்ச்சியாய் இருக்கிறது..!

ஜோதிஜி said...

நானும் இதை பார்த்தவுடன் வாங்கி விட்டேன். இன்னமும் படிக்க தொடங்கல. மறுபடியும் வந்தீகளோ?

Unknown said...

நானும் இயற்கையாக சாவதையே விரும்புகிறேன்,

ஆனால் நம் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்...

பிரபாகர் said...

ஷங்கர்... நாகரீகத்தின் விலையாய் இன்று நாசமாய் போக எண்ணிலா வழிகள்... நெடிய கட்டுரையில் அணு உலை பற்றி படித்து இயற்கையாய் சாவோமா எனும் பெரும் ஐயம்... இடுகையை தலைப்பை சொல்லி கெஞ்சவேண்டும் போல் இருக்கிறது... சேம் பிளட்.

பிரபாகர்...

thiagu1973 said...

//விபத்தென்பது தவிர்க்க முடியாதது, விபத்தே நடக்காது என்று அறுதி இட்டுக்கூறக்கூடிய ஒன்றை இதுவரை எந்த மனிதக் கண்டுபிடிப்பும் சாதிக்கவில்லை.//

விபத்தே நடக்காத ஒரு சாலை பயணத்தை என்றாவது தரமுடியுமா

Ahamed irshad said...

சிற‌ப்பான‌,தெளிவான‌ விள‌க்க‌ம்..ந‌ன்றி..

Unknown said...

//வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெயிலடிக்கும் ஒரு நிலத்தில் எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாத சூரிய சக்தி சார்ந்த மின்சாரப் பயன்பாட்டிற்கான மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்க எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல், சிறப்பான காற்றாலைகள் கண்டுபிடிப்பு மற்றும் பொருத்துதலுக்கான முயற்சிகளை முன்னெடுக்காமல், கடலில் வீணாகக் கலக்கும் ஆறுகளை ஒருங்கிணைத்து சிறு அணைகள் கட்டி மின்சார உற்பத்திக்கான எந்த முயற்சியும் எடுக்க வக்கில்லாத அதிபுத்திசாலிகள் முன்வைக்கும் தீர்வுதான் இந்த அணுமின் உற்பத்தி.//

இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

//போக மின்சாரசேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்துக்கு, மின்இழப்பினை ஈடு கட்டத்தெரியாத மின்சார பொறியாளர்களுக்கு தெருவுக்கொரு அணு உலை வந்தாலும் பத்தாது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.//

மெத்தச் சரி.

அவசியமான பதிவு!!

இல்யாஸ்.மு said...

அருமையான தெளிவான கட்டுரை..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கட்டுரை நல்லா இருக்குங்க.

Ashok D said...

gud one