பலா பட்டறை: சிறப்பாக நடந்த பதிவர்கள் விழா - வாழ்த்தும், நன்றியும்!

சிறப்பாக நடந்த பதிவர்கள் விழா - வாழ்த்தும், நன்றியும்!

இன்றைக்கு தமிழ் பதிவர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். மணிஜி, கேபிள்ஜி, அண்ணன் உண்மைத் தமிழன், எல்.கே, சுகுமார் சுவாமிநாதன், ஜாக்கி சேகர், பட்டர் ப்ளை சூர்யா, அகநாழிகை வாசு, வெள்ளிநிலா ஷர்புதீன், காவேரி கணேஷ், சுரேகா, மெட்ராஸ் பவன் சிவகுமார், வீடு திரும்பல் மோகன் ஜி, திசைகாட்டி ரோஸ்விக், சீனா ஐய்யா, நண்டு @ நொரண்டு, பிலாசபி பிரபாகரன், சங்கவி, சேட்டைக் காரர்(ன்),  பழம் பெரும் பதிவர் ஜமால், சிரிப்பு போலிஸ் ரமேஷ், திரு.லதானந்த், சிபி செந்தில் குமார், ஆயிரத்தில் ஒருவன் மணி, பெஸ்கி  போன்ற நண்பர்களை சந்தித்தேன் கூடவே பெருந்திரளான புதிய அறிமுகமில்லாத பதிவுலக  மக்கள் திரண்டிருந்தனர். வேடியப்பன் புத்தக ஸ்டால் போட்டிருந்தார். காலை முதல்  மதியம் வரை பதிவர்கள் அறிமுகம், அதன் பின்னர் கவியரங்கம் என்று  களை கட்டியது நிகழ்சிகள்.


அருமையான மதிய உணவுடன் விழா கட்டுக்கோப்பாக மிகவும் சிறப்பான அளவிலே நடத்தப்பட்டது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். பல பெண் பதிவர்களும் வந்திருந்தார்கள். வயதில் மூத்த பதிவர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டது  ஆச்சரியம். 

விழா ஏற்பாடு செய்தவர்களில் பலரை நான் பார்த்ததில்லை, படித்ததில்லை. ஆனால் மிகப்பெரிய உழைப்பு அவர்களால் இங்கே யார் பெயரையும் முன்னிறுத்தாமல் தரப்பட்டிருந்தது. சுரேகா நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆர்வத்துடன் படித்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை சந்தித்தது வியப்பு கலந்த மகிழ்ச்சி :)

நல்லதொரு விழாவை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டார்கள். அடுத்தது என்ன என்ற கேள்வி அவர்கள்  முன்னே நிற்கிறது. அதையும் சிறப்பாக சமூக அக்கறை சார்ந்து முன்னெடுத்துச் செயல் படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது. 

எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் - ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு   என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு பைசா அளவுக்குக் கூட என் பங்கு இல்லை, என்றாலும், கண்ட மக்கள் அனைவரும் புதியவர்களாக இருந்தாலும் நட்பும், அன்பும், மரியாதையும், மகிழ்ச்சியும் அளித்த அவர்கள் அனைவருக்கும் நானும் ஒரு காலத்தில் பதிவர்  என்ற முறையில்  நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். :))                    
                                  

24 comments: