ஒரு லட்சத்திற்கும் மேல் ஹிட்ஸுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும், வாசக பெருமக்களுக்கு நன்றி (ஹுக்கும்..)
1980 - லிருந்து வேலூரில் வசித்துவிட்டு 2000 - ல் சென்னைக்கு மீண்டும் குடி பெயர்ந்ததற்குப் பிறகு 2002 - ல் ஒரு முறை சென்றேன். அதற்குப் பிறகு பல மாற்றங்களை வேலூர் பைபாஸ் வழியாக பல ஊர்களுக்குச் சென்று வரும்பொழுது கவனித்து வந்ததோடு சரி, ஊருக்குள், நான் பால்யத்திலிருந்து, இளைஞனாகிய காலகட்டத்தில் சுற்றித் திரிந்த இடங்களுக்குச் செல்ல முடியாத குறையை 11 வருடங்களுக்குப் பிறகு சென்ற வெள்ளியன்று சென்று வந்து தீர்த்துக் கொண்டேன்.
எவ்வளவு மாற்றங்கள்?? பரபரப்பில்லாத அமைதியான ஊர் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல், ஜனத்திரள், புதியப் புதிய கட்டிடங்கள், குடியிருப்புகள் என்று பெரும் மாற்றம் அடைந்திருக்கிறது.
குளிருக்கும், வெயிலுக்கும் புகழ் பெற்ற வேலூரின் நவம்பர் மாதத்துக் குளிரை அனுபவித்தபடியே, முதன் முதலில், குரங்குபெடல் சைக்கிளும், லூனாவும் ஓட்டிய சாலையில் பல நினைவுகளோடு பயணித்தேன்.
மகாராணி ஐஸ் க்ரீம் |
காதல் சொல்லி முத்தம் கற்றுக்கொடுத்த முன்னாள் காதலியின் நினைவுகள் நகரெங்கும் வியாபித்துக் கிடந்தது. இந்த மாற்றங்களில் அந்த இடங்கள் அப்படியேதான் இருக்கிறது, குறிப்பாக நாங்கள் விரும்பி அடிக்கடிச் சென்ற மகாராணி ஐஸ்க்ரீம் கடை, ஊரீஸ் அருகில் செல்லும் ஒரு கால்வாய் தெரு, சில பஸ் ஸ்டாப்புகள், முதன் முதலில் சந்தித்த இடம் என்று பல இடங்கள். காடலோடு பல விஷயங்களைக் கற்றுத்தந்து இன்றைக்கு என் வாழ்வின் சில வெற்றிகளுக்கு அந்தப் பெண்ணின் அன்பும் ஒரு காரணம்.
பள்ளி நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டீன் ஏஜ் நினைவுகளை மீட்டெடுக்கும் நிலைகளில் நாங்கள் இல்லை என்றாலும், முகச் சுருக்கமும், வயதின் முதுமையும் பழைய பிம்பத்தை அழித்து, முதிர்ந்த பிம்பத்தை மனது அப்டேட் செய்துகொண்டது, கூடவே ஒரு ஒப்பீடும். ஒன்றாயிருந்த நாட்களின் நினைவுகளை வாழ்வின் பொருளீட்டு நிர்பந்தங்கள் எவ்வளவோ தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது என்பது புரிந்தது. குறிப்பாக மனதுக்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கால நண்பன் விபத்தில் பாதிக்கப்பட்டு முடங்கிப் போய், மீண்டுவருவதற்கான தனிமைக் கூட்டில் தன் சிறகுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தபோது மனம் மிகவும் நொறுங்கிப் போனது. கால்பந்தாட்ட வீரனும், பழக எளிமையானவனும், தைரியசாலியானவனுமான அவன் மீண்டும் பூரண நலத்துடன் மீண்டு வர மனதார ப்ரார்த்தனை செய்துகொண்டேன்.
பொருளீட்டுதலின் ஆரம்பகாலகட்டங்கள்தான் எவ்வளவு குரூரமானவை? மானைத் துரத்தும் சிறுத்தையைப் போல அது எதைப் பற்றியும் கவலை கொள்ளாது ரத்த வெறி கொண்டு துரத்தி இளைப்பாறவும், கடந்ததை யோசிக்கவும், புதிப்பித்துக்கொள்ளவும் நொடி நேரமும் தரவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது?
20 வருடங்களுக்கும் மேல் இருந்த ஊருக்கு ஏன் அடிக்கடி செல்ல முடியவில்லை? ஏன் நண்பர்களை தொடர்பில் வைத்துக்கொள்ள முடியவில்லை? எங்கே தவறவிட்டேன் என்ற கேள்வியை இன்னும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.
சில்க் மில் பஸ் ஸ்டாப் |
அன்றைக்கு அடையாளமாக தனித்து இருந்த பல கட்டிடங்கள் இன்றைக்கு பத்தோடு பதினொன்றாக ஆகிவிட்டிருந்தது. நடிகர் திலகத்தின் சிலை அகற்றும் செய்தியோடு மனது இடிக்கப்பட்டிருந்த நேஷனல் தியேட்டரை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. நன்றியோடு வருடம் தவறாமல் இந்த தியேட்டர் முதலாளியை நடிகர் திலகம் சந்தித்து வந்திருந்தார். இங்கே என்ன கட்டிடம் வரும் அது என்ன பெயர் கொண்டு ஒரு அடையாளம் பெறும் என்று தெரியவில்லை. என்றைக்கோ இருந்த கட்டிடம் அல்லது தொழிலின் பெயர் தாங்கிய இடங்களைப் போல இதுவும் பெயரை மட்டும் ஒட்டாமல் அந்நியமாய்க் கொண்ட ஒரு இடமாக ஆகிப் போகலாம். ’சில்க் மில்’ என்ற எங்கள் பஸ் ஸ்டாப்பிங்கைப் போல, அங்கேதான் எங்களின் வீர தீர புட்போர்ட் சாகசங்களும், சைட் அடிப்புகளும் அரங்கேறிய இடம். ஆனால் அந்தப் பெயருக்கான எந்த மில்லும் அங்கில்லை. குறைந்தபட்சம் சில்க் ஸ்மிதாவின் போஸ்டர் கூட அங்கே ஒட்டப்பட்டு நான் பார்த்ததில்லை.
பாலாற்றுப் பாலம் |
ப்ரிட்டிஷார் கட்டிய பழைய பாலம் இன்று புதிப்பிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாகிவிட்ட அளவுக்கான வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு ஊரின் வளர்ச்சியைக் காட்டுகிறது, 1980 - ல் நாங்கள் இங்கே வந்த புதிதில் என் தந்தையும் நானும் நடந்தே இந்தப் பழைய பாலம் வழியே சிகப்பாய் ஆர்பரித்து ஓடிய பாலாறு இன்றைக்கு சுறண்டிய மணல் குழிகளோடு வறண்டு காணப்படுகிறது. புகழ் பெற்ற பேலஸ் கேப் ஓட்டல் இன்றைக்கு பாட்டா ஷோ ரூம்.
வேலூர் என்றாலே சிஎம்சி என்ற புகழ் பெற்ற மருத்துவமனையின் புகழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு விஐடியும், தங்க கோபுரமும் முன்னிலையாகி அதைச் சார்ந்த வியாபார வளர்ச்சிகள் டாலடிக்கிறது. தங்கக்கோவில் 10 வருடங்களில் அடைந்த வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது.
வேலூர் கோட்டையின் ஒரு பகுதி |
கோட்டை இன்றும் அதே மவுனத்தில் கால மாற்றத்தை சுற்றுப்புற பூங்காக்களின் மேக்கப்பில் கொண்டு ஜீவிக்கின்றது.
சாரதி மாளிகையின் ப்ளாட்பாரத்தில் 25ரூபாய்க்கு என் அம்மா எனக்கு தீபாவளி உடை வாங்கித் தந்ததும், டேப் ரிக்கார்டர் காலத்தில் 10 ரூபாய்க்கு பல படங்களின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யப்பட்ட பைரஸி காஸட் வாங்கியதும் கண் முன்னே விரிந்தது. அந்தக் கட்டிடம் மாற்றங்களின்றி அப்படியேதான் இருக்கிறது.
நான் 5-6ம் வகுப்புகள் படித்த கழிஞ்சூர் கிராமப் பள்ளிக்கூடம் அதே நிலையில் காலத்தின் விரிசல்களைக் கொண்டு சிதிலமாகவே இருக்கிறது. 30 வருட நினவுகளை எந்த சிக்கலுமில்லாமல் மீட்டெடுக்க முடிந்த இந்தப் பள்ளியில் நான் படித்தேன் என்பதை என் பிள்ளைகள் நம்புவார்களா என்று தெரியவில்லை, விரைவில் இந்த இடங்களை அவர்களோடு சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறேன்.
கழிஞ்சூர் அரசு பள்ளிக்கூடம் |
பனம்பழம், கொடுக்காப்புளி, பாலாற்றின் ரயில்வேப் பாலத்தில் நடந்தது, சுழல் இருக்கும், புதை மணல் இருக்கும் என்ற பயத்தினூடே ஆற்றங்கரையிலிருந்துகொண்டு ஆற்று நீரைப் பார்த்தது, ஹார்லிக்ஸ் பாட்டிலில் முதன் முதலில் பிடித்துக் வளர்க்கக் கொண்டுவந்த மீன் குஞ்சு என்ற பல விஷயங்களை அந்தப் பள்ளியில் படிக்கும்போதுதான் சக மாணவர்களின் சகவாசங்களால் அறிந்தேன்.
பீடி இலையை லாவகமா நரம்பு நீவி, வெட்டி எடுத்து, புகையிலை தூவி அதன் வாய் மடக்கி, நூல் கட்டியபடியே இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்ட அன்று லீவு விட்ட மதியத்தை சீனிவாசன் என்ற நண்பனோடு அவனின் மஞ்சம்பில் வேய்ந்த, மண் தரை குடிசையிலமர்ந்து தினத்தந்தி பேப்பர் ஏன் இன்று சிகப்பு நிறத்தை இழந்து முழுவதும் கருப்பாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆழ்ந்த யோசனையுடன் அந்தப் படுகொலையை நான் வாசித்ததை சீனிவாசனின் அப்பா பார்த்துக்கொண்டிருந்தார், குடிக்கத் தண்ணீர் கேட்டதற்கு எங்க வீட்ல எல்லாம் தண்ணி சாப்பிடுவியா தம்பி என்று கேட்ட அவன் அம்மாவை நாங்கள் இருவருமே விநோதமாகவே பார்த்தோம். அதுவரை பள்ளியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் அன்றிலிருந்து அவன் வீட்டிலேயே மதிய உணவைச் சாப்பிடலானேன். அந்தக் கூரைதான் இன்னும் நான் கட்டிய என் வீட்டு மாடிக்கு எப்படியாவது மஞ்சம் பில் வேய்ந்த கூரை போட ஏங்குகிறது, கழிஞ்சூர் என்ற அந்தக் கிராமம் இன்றைக்கு முழுவதும் காங்கிரீட் வீடுகளாக மாறிவிட்டாலும் அந்த சாணம் மெழுகப்பட்ட தரை கொண்ட குளுமையான வீடு நான் இதுவரை தங்கிய எல்லா இடங்களையும் விட மனதில் அதிக நெருக்கமாகத் தேங்கிவிடக் காரணம் அந்தக் குளுமையும், அந்த நண்பனின் அன்பும்.
கிராமத்து மஞ்சம்பில் வேய்ந்த வீடுகள் இருந்த தெரு |
சீனிவாசனின் அப்பா அன்றைக்கு மிருதங்கம், தபேலா வாசிக்கத் தெரிந்த ஒரு கலைஞர். பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்திற்காக இளையராஜா குழுவில் இவரும் சேர்ந்து தபேலா வாசித்ததை ஒருமுறை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன முயன்றும் பள்ளியும், அதன் அருகிலிருக்கும் பல திரைப்படங்கள் மண் குவித்து நான் என் பாட்டியோடு கண்ட சண்முகா கொட்டாயும் தவிர்த்து வேறு எதுவும் அடையாளம் காணவியலாத அளவுக்கு மாறிவிட்டிருந்தது. வேறு பெயர்கள் நினைவிலில்லாமல் சீனிவாசன் வீட்டைக் கண்டுபிடிக்க சாத்தியமேயில்லை என்று புரிந்துகொண்டேன்.
பிஎட் கல்லூரி மைதானம், வீடுகள் நிறைந்து.. |
காந்திநகர், திருநகரில் நான் சைக்கிள் ஓட்டிப் பழகிய, நாங்கள் கிரிக்கெட் விளையாடிய நடந்தால் நெருஞ்சி முள் குத்தும், மிகபெரிய பிஎட் காலேஜ் மைதானம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீடுகள் சூழ காணாமல் போய்விட்டிருந்தது. போலவே ‘விடுதலை ரஜினி ரசிகர் மன்றம்’ சார்பாக நாங்கள் போஸ்டர் ஒட்டிய வீடுகளும் காணோம். இறந்த மாடுகளை நடு வயிற்றில் கத்தி போட்டு வெட்டி எடுத்து, தோலுரித்து மிச்சம் விசிறிய மார்பெலும்பை தின்ன வரும் மெல்ல ஓடிப் பின் பறக்கும் பெரிய வல்லூறுகள் அதனருகில் இருந்த கிளைகள் கொண்ட பனை மரம், முட்டிபீஸென்று கோலி விளையாடி கைவிரலெல்லாம் தோல் பிய்த்த இடங்கள் எல்லாம் வீடுகளாகிவிட்டிருக்கின்றன.
காலம், செரிக்காமல் மெல்ல வாயிலெடுத்த உணவுத் துணுக்காய் நான் அங்கே ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். கலைந்துபோன எல்லாவற்றையும் மீட்டி எடுக்க என்னை அறியாமல் மனம் தவித்துக் கொண்டிருந்தது, அது முடியாது எனத் தெரிந்தும், குழந்தையப் போல குதூகலமாய் 10 வயது சிறுவனின் மனதோடு நான் எல்லாவற்றையும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.
கால்பந்து மைதானம் - கான்வெண்ட்டாகிப் போனது |
டான்பாஸ்கோ பள்ளியில் நான் முதன் முதலில் கவியரங்கில் கவிதை படித்த ஆடிட்டோரியமும், சர்ச்சும் பார்த்துக்கொண்டே எதிரில் திரும்பினால் முதன் முதலில் ஜாகிங்கும், ஓட்டப்பயிற்சியும், கால்பந்தாட்டமும், கிரிக்கெட்டும் விளையாடிய மைதானம் இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விக்கான கட்டிடத்தைத் தாங்கி நிற்கிறது. 11-12 ம் வகுப்பில் நாங்கள் செய்த அட்டூழியங்களை நினைத்துக்கொண்டே கடந்தேன். மாலை பள்ளி விட்டவுடன் எங்கள் பள்ளியின் பின்னால் இருக்கும் அக்ஸிலியம் பெண்கள் காலேஜின் பக்கம் சைட்டடிக்க நண்பர்கள் சைக்கிள்கள் எல்லாம் இடப்புறம் திரும்ப, நானும் சுகுவும் மட்டும் வலப்புறம் திரும்பி யோக்கிய முனிகளாய் வீடு சென்ற அந்த நீண்ட சாலை பெரும் மாற்றங்களின்றி இருக்கிறது.
சைட் அடிக்காமல் யோக்கிய முனிகளாய் வீடு திரும்பும் பாதை |
நான் வாழ்ந்த அந்த வாழ்க்கையை இன்று என் பிள்ளைகள் வாழவில்லை. பாலாற்றங்கரையின் ரயில்வே பாலத்தில் மதிய நேரத்தில் என் பிள்ளைகள் தண்டவாளத்தில் தனியே அவர்களின் நண்பர்களோடு நடப்பதை இன்று கனவிலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இன்று அவர்கள் சாப்பிடும் 40 ரூபாய் சிப்ஸ் பாக்கெட் விலையில் நான் புதுத் துணி வாங்கி தீபாவளி கொண்டாடினேன் என்பதை, என் அப்பா சொல்லும் என் நினைவு தெரிந்து பவுன் 100 ரூபாய் என்ற வாசகம் போல அடித்துப் போட்டுவிடும். வயதாகிறது என்பதை நிரூபிக்கத்தான் எவ்வளவு வடுக்களை காலம் காப்பாற்றி வைக்கிறது?
ஊரிஸ் கல்லூரிக்கு எதிரில் இருந்த இரட்டை திரை அரங்கில் ஒன்று மட்டும். |
ஒரு நாள் போதாமல் சுற்றி அலைந்துவிட்டு சென்னை திரும்பிவிட்டேன். பிள்ளைகள் ஆர்வமாய்க் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் கூட்டிச் சென்று காண்பிக்கிறேன் என்ற பதிலில் முடித்துக்கொண்டேன். உடலிலும் ,மனதிலும் தெம்பும், இளமையும் இருக்கும்போதே அவர்களைக் கூட்டிச் சென்று ஒரு ஆச்சரிய சுற்றுலா காண்பித்து வர முடிவு செய்திருக்கிறேன். அவர்களைக் கொண்டுதான், அவர்களின் பார்வையின் ஆச்சர்யங்களைக் கொண்டுதான் என் பால்யத்தை இன்னும் பலகாலத்திற்கு மீட்டெடுத்து நினைவில் சேமிக்க முடியும்.
_/\_ நன்றி :))
0 comments:
Post a Comment