பலா பட்டறை: டைமன்ட் வாசனை ( சவால் சிறுகதை)

டைமன்ட் வாசனை ( சவால் சிறுகதை)”டாக்டர் காமினிக்கு ஊசின்னா பயம் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.” இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பரிவாய்ச் சொன்னார்.

”ஹே நோ ப்ராப்ளம் நான் பார்த்துக்கறேன் நீங்க ஸ்டேஷனுக்குப் போங்க.” 

டாக்டர் காமினியைப் பார்த்தார் முகத்தில் மாஸ்க் பொறுத்தி உடலெல்லாம் வயர்களால் இணைக்கப் பட்டு பீப் பீப் என்று சத்தம் போடும் கருவியால் இணைக்கப் பட்டிருந்த அந்த அறையின் கட்டிலில் மாட்டி இருந்த குறிப்பேட்டில் அடுத்த மருத்துவக் குறிப்புகளை எழுதிவிட்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

யாருமே கவனிக்காத தருணங்கள் காமினிக்கு கிடைத்தது. சிவாவின் இருப்பிடம் நோக்கி காமினியின் பயணம் ஆரம்பித்தது. 

சிவாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. காமினியின் வருகையில் அவன் ஆச்சரியப் படவில்லை. எப்படியும் காமினி இங்கே வரும்போது காமினியை முடிக்க வேண்டுமென்ற திட்டமிடலில் ஒரு துப்பாக்கி எப்பொழுதுமே லொட் செய்யப்பட்டு இடது பாக்கெட்டில் தயாராகவே இருந்தது. இனி எந்த பச்சாதாபத்திற்கும் இடமில்லை. விஷயம் கை மீறிப் போய்விட்டது. சுட்டால் மட்டும் போதாது காமினியின் கடைசி டிஎன்ஏ வரைக்கும் சாம்பலாக்கிவிட்டுத்தான் மறு வேலை. 

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினி எந்த உணர்சியும் இல்லாது சிவாவைப் பார்த்த பார்வையில் சிவாவிற்கு வேறு யோசனை தோன்றியது. சுடுவதற்கு பதில் உணவில் விஷம் கொடுத்துவிடலாம் ரத்தம் சிந்தினால் கார்பெட் கெட்டுப் போகும் என்ற தேவையில்லாத எண்ணம் உதித்தபோது ‘பரந்தாமன்’ என்று செல் அடித்தது. 

”யெஸ் பாஸ்..”

”காமினி வந்தாச்சா? ”

”ஆச்சு பாஸ். இதோ இப்ப முடிச்சுடுவேன். ”

”நோ சிவா. ”

”ஏன் பாஸ்? ”

”நம்மாளுங்க சொதப்பிட்டாங்க. டைமண்ட கண்டுபிடிக்க முடியல. அந்த இடத்தை காமினி மட்டுமே கண்டுபிடிக்க முடியும். போலீஸ் இன்னும் காமினிய நம்புது. இன்னேரம் அவங்க காமினியத் தேடத் தொடங்கி இருப்பாங்க. அதுக்குள்ள காமினிய அனுப்பி டைமண்ட கண்டுபிடிச்சிடலாம்.    ”

”சரி சார் நான் காமினியோட ஸ்பாட்டுக்கு வந்துடறேன்.”

--

ஸ்பாட்டில் பரந்தாமன் பரிவாரங்களோடு நின்று கொண்டிருந்தார். காமினியின் அருகே வந்து காமினி டார்லிங் கமான் டார்லிங் ஃபைண்ட் த டைமண்ட் என்றார். யார்ரா டைமண்ட புதச்சது என்ற கேள்விக்கு பரிவாரத்திலிருந்து வந்த ஒருவனிடம் காமினியோட அந்த எடத்துக்கு மாறு வேஷத்துல போ, போலீஸ் இருப்பாங்க உசாரா இரு. மத்தத காமினி கிட்ட விட்டுடு. நாங்க இங்கேயே வெய்ட் பண்றோம். க்விக்.

சரியாக 50 நிமிடங்களில் காமினியும் அந்த பரிவார உருப்படியும் வந்தனர். அவன் கையிலிருந்த வெல்வெட் பையைப் பார்த்ததுமே பரந்தாமன் கண்கள் விரிந்தது. 

பரந்தாமன் ஓடிச்சென்று காமினியை அலேக்காகத் தூக்கினார். 

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார்.
 பரந்தாமன்.

”காமினியப் போய் கொல்லப் பார்த்தியேடா சிவா. ”

இல்ல பாஸ் இப்பவும் சொல்றேன். காமினி போலீஸ் கைல கிடைச்சா நமக்குத்தான் ஆபத்து. மொத்தத்தையும் மோப்பம் பிடிச்சிடுவாங்க, காமினிக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? என்ற சிவாவை பார்த்து 

’வவ்’

என்றது காமினி வாலாட்டியபடியே..


(காமினி கொடுமைகள் - தொடரலா(ரு)ம். ).

22 comments: