பலா பட்டறை: ஒளியும் ஒலியும்!

ஒளியும் ஒலியும்!


.



ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கியபிறகுதான் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரமுடிந்தது. தண்டவாளங்களைக் கடப்பதற்காகப் போட்டிருந்த மேம்பாலத்தின் அடியில் கடப்பாக் கல்லாலான நீள இருக்கை இருந்தது. ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரருகில் நானும் அமர்ந்தேன். இடது பக்கத்தில் ரயிலின் கால அட்டவணை ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்தார்கள். வெறும் எண்களாலான அதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் கடுப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று. பூஜ்ஜியம் ஒன்றுலிருந்து இருபத்து நான்குவரை நடுவில் எழுதி இரு பக்கமும் ஆல்பா நீயூமரிக்கலில் எழுதப் பட்டிருந்த அந்த பட்டியலை என்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? 

நான் மீண்டும் ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எதிர் ப்ளாட்பாரத்தில் அழகாக கிளை விரித்துப் பரவிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த பயணிகள் மிகச் சிறியவர்களாக காணப் பட்டார்கள். மரத்தின் பிரம்மாண்டம் மனதில் எதையெதையோ எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னினும் சிறிய மனிதனால் தான் எப்பொழுதுவேண்டுமானாலும் கூறுகளாக்கப் படுவோமென்று அந்த மரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா? அதனாலேயே அமைதியாய் நிழல் தந்து நிற்கிறதா? அல்லது அழிவென்பது மாயை அது வேறொன்று பிறப்பதற்கான ஒரு சலனம் என்று உணர்ந்திருக்குமா? நான் மரத்திற்கு மேலேயும் பார்த்தேன். இவ்வளவு நீலமாக, மேகங்களற்ற வானம் தொடர்ச்சியாக இப்பொழுது காணக்கிடைக்கிறது. சென்னையில் இது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிசயம். இன்றைக்கு வெயில் அதிகம்தான் இல்லையென்றால் இப்படியெல்லாம் நான் யோசிக்க வாய்ப்பில்லை.

உடல் பெருத்த பார்வையற்ற ஒரு வயதான பெண்மணி தனக்கு வழி காட்டும் ஒரு குச்சி கொண்டு ஒரே ரீதியில் எழுப்பிய சத்தத்தால் நான் அவரைப் பார்க்கத் தொடங்கினேன். இவருக்கு ஆலமரமோ, அதன் உணர்வுகளோ, நீல வானமோ, மேகங்களோ ஒரு பொருட்டே அல்ல. சப்தங்களாலும், தொடுகைகாளாலும் ஆன உலகு. அவர் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையைத் தாண்டிச் சென்று நின்றுவிட்டார். களைப்பான ஒரு உஸ்ஸ்ஸென்ற வெயிலின் மீதான சாபம் அவர் வாயிலிருந்து வந்தது. மீண்டும் அவர் வந்தவழி திரும்பினார் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நாங்கள் அமர்ந்திருந்த அந்த இருக்கையை தன் குச்சியால் தொட்டார். அருகிலிருந்த பெரியவர் ”யாருமில்ல உக்காரும்மா” என்றார். ”தாண்டிப் போயிட்டேன்” என்றபோது எனக்குப் புரிந்தது அவர் இந்த இருக்கையை நோக்கித்தான் உட்காருவதற்காக வந்திருக்கிறார். இந்த இடம்தான் ரயிலின் கடைசி பெட்டி நிற்கும் இடம் இங்கிருந்துதான் அவர் முதல் பெட்டிவரை தன் யாசகத்தைத் தொடரவேண்டும். 

ரயில் பெட்டியிலும் இவர்கள் பிரயாணம் செய்யும்போதும் தடுமாறுவதே இல்லை. சரியாக வாசல் எது? எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எங்கே திரும்பவேண்டும், எது 10 ரூவாய்த்தாள்? எது 5 ரூபாய் நாணயம் என்பது முதல் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்கள் கையில் கொண்டுவரும் 20 வகை ஐட்டங்களின் கேட்பதை சரியாக எடுத்துக்கொடுப்பதும் சுலபமாகவே நடக்கிறது. 

“வெயில் கொஞ்சம் தாழ்ந்திருச்சி போல இருக்கே” என்றபொழுது மீண்டும் மேலே பார்த்தேன் இப்பொழுது வானம் மூட்டத்தோடு இருந்தது. சற்று முன்புவரை நீலமாக தெளிவாக இருந்த வானம் இப்பொழுது மூட்டமாக இருக்கிறது. தெளிவாக இருந்ததைப் பற்றி இப்பொழுதுதானே சிலாகித்தேன்? வெறும் உணர்சிகளால் தன்னைச் சுற்றி நிகழ்வதை தொடர்ச்சியாக கவனிக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்து எனக்கு வெட்கம் வந்தது.

பார்வை இருந்தும் குருடராய்? எங்கோ எதற்காகவே படித்த இந்த வாக்கியம் எனக்கு நினைவுக்கு வந்தது. பார்வையுள்ளவன் பயன்படுத்தாத காட்சிப் பொருட்கள் அவனைச் சுற்றி நிறைய இருக்கிறது. வெறும் சாட்சியாக, செய்தியாக, எச்சரிக்கைகளாக, கிளர்ச்சியாக வெறுமே பார்த்துக் கடப்பவைகளில் பார்க்கவேண்டியவைகளும் கடந்து போவதே பார்வைக் குருட்டு. பார்வை இருந்தும் பார்க்கத் தவறிய, சோம்பலுற்ற தருணங்கள் ஒரு நாளில்தான் எத்தனை கடக்கின்றன? நான் மீண்டும் அந்த ரயில் அட்டவணையைப் பார்த்தேன். 

”அடுத்த வண்டி அரக்கோணமா?” அந்தப் பெரியவர் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு நான் அந்த ரயில் கால அட்டவணையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காரணமாயிருந்திருக்கலாம். நான் ”தெரியலைங்க” என்று சொல்வதற்குள் அந்த பார்வையற்ற பெண்மணி ”அடுத்தது மெட்ராஸ் திருவள்ளூர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடும்” என்றார். 

”எல்லாமே மெட்ராஸ்லேர்ந்து வரதுதானேம்மா?”

”இல்லைங்க சார். பீச்லேர்ந்தும் வரும், அம்பத்தூர்லேர்ந்தும் வரும். எங்கேர்ந்து கிளம்பி எங்கே போகுதுன்னு சேர்த்து டைம் டேபிள்ள எழுதி இருக்கறத வெச்சி சொல்றதும் அப்படியே வந்திடுது. ”

சொல்லிவிட்டு அந்த பெண்மணி கடக்கும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் தான் கையில் வைத்திருந்த அந்த எவர் சில்வர் தம்ளரில் ஒரே ஒரு காயனைப் போட்டுக் குலுக்கிக் கொண்டிருந்தார்.  கடந்து போனவர்களில் சிலர் மட்டும் அந்தப் பெண்மணியின் தம்ளரில் சில்லறைகளைப் போட்டுவிட்டு சென்றார்கள்.

கண்ணிருந்தும் குருடராய், எல்லா அறிவிப்புகளும், விளம்பரங்களும், எச்சரிக்கைப் பலகைகளும், விதிகளும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடுமோ என்னமோ?. 

சம நிலையிலிருந்து வழுக்கி சுய நலமாய் தன் வசதிக்கு இந்த உலகை மாற்றும் மனிதனிடமிருந்து இயற்கை லாவகமாய் தப்பித்துக்கொண்டிருப்பதைப் போல பார்வையுள்ளவர்களால் பார்வையுள்ளவர்களுக்காக கட்டி எழுப்பப்பட்ட வசதிகளை பார்வையில்லாத இந்தப் பெண்மணி எள்ளுவதைப் போல எனக்குத் தெரிந்தது.

நான் மீண்டும் அந்த அட்டவணையை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தேன். 

.

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu sankar...
ama ippalam namma pakkamey kanom ennachu?

vasu balaji said...

அவர்களுக்கான ரயில் உலகம் தனி. செண்ட்ரலில் மாலை நேரங்களில் பாருங்கள். 12,13,14 ப்ளாட் பாரங்களில் வண்டி வருவதை அதிர்வுகளில் உணர்ந்து, போர்ட் மாட்டுமுன்னமே எங்கு போகும் என்பதைச் சொல்வது அதிசயமில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் கண்ட்ரோலர் போல், இந்த வண்டி ஷெட்டுக்கு விடுவான். 12 ஆ 14 ஆ தெரியலை என்று சிரிப்பதும், அப்படியே நடப்பதும் பேராச்சரியம்:)

Chitra said...

சம நிலையிலிருந்து வழுக்கி சுய நலமாய் தன் வசதிக்கு இந்த உலகை மாற்றும் மனிதனிடமிருந்து இயற்கை லாவகமாய் தப்பித்துக்கொண்டிருப்பதைப் போல பார்வையுள்ளவர்களால் பார்வையுள்ளவர்களுக்காக கட்டி எழுப்பப்பட்ட வசதிகளை பார்வையில்லாத இந்தப் பெண்மணி எள்ளுவதைப் போல எனக்குத் தெரிந்தது.


.... Over here, most of the amenities can be easily used by the "physically challenged" people too.

Anisha Yunus said...

namakku Braille moziye kashtamthan. sila neram ivargaLaip paarthu naan poraamaippattathum undu. ella savugariyamum iruppathanaalthaan vaazkkaiyil munnera mudiyavillaiyaa enru!!!!

problem generator said...

FOCUS on things will fail when distraction comes. Blinds are blessed on that. They focus the energy to serve them the next step. WE who has the vision usually loose it and admire in distractions. HE WHO do not have that is the best.

Sundaka