'ஸ்வாவின்
போட்டோவையே பார்த்துக்கொன்டிருந்தேன். மற்றவர்களைப் போல அல்லாமல்,
தனித்தனியாக, நேர்த்தியான விலை உயர்ந்த கேமராவில், உரிய லைட்டிங்கில், தக்க
லென்ஸ்களைப் பொருத்தி என்னால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. ஒற்றைக்
காதில் தொங்கும் ஒரு ஜிமிக்கி, அவளின் தூய்மையான ஆள்காட்டி விரலில் சுற்றி
இருக்கும் தலைமுடி, ஆரோக்கியமான ரோஸ் நிற ஈறுகள் தெரியச் சிரிக்கும் அழகான
உதடுகள், பவழமல்லியை ஒத்ததுபோல இருக்கும் குதிகால், இமைகள், கண்ணின்
கருவிழி, புருவங்கள் என்று நீங்கள் இப்படியெல்லாம் உங்கள் காதலியைப்
புகைப்படம் எடுத்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது, நான் அப்படித்தான்
ஸ்வாவை எடுத்திருந்தேன்.'
"அஷோக்,
என்னுடைய போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒவ்வொன்றும் அவ்வளவு
அழகாக எனக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோக்கள். புதியதாக வாங்கிய
காஸ்ட்லி கேமராவை என் முன்னே பிரித்து எடுக்கப்பட்ட முதல் படங்கள் அவை.
அவன் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்தேன். அவனை ஆறுதல் படுத்த முடியாது,
இப்பொழுதைக்கு ஒன்றும் செய்வதற்கில்லை. அவன் என்னை மறந்துவிடவேண்டும்.
அவனால் முடியுமா என்று தெரியவில்லை. என்னாலும் முடியாது. ஆனாலும்.."
'ஸ்வாவை
எடுத்த படங்களை எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டேன். நடந்து தாம்பரம்
ஸ்டேஷனுக்கு வந்தேன். ரயில் ட்ராக் வழியே நடக்க ஆரம்பித்தேன்.'
"இவன்
ஏன் ட்ராக்கில், இந்த வெயில் காலத்தில் லூஸு மாதிரி நடக்கிறான் என்று நான்
யோசிக்கும்போதே அஷோக் பையிலிருந்து கேமராவை எடுத்தான், தண்டவாளத்துக்கு
அருகில் கேமராவை சிறிய ஸ்டான்டில் பொருத்தினான்."
"வீடியோ
மோடுக்கு கேமராவை மாற்றினேன். ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்தேன். ஆழ ஒரு
சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது.
கேமரா வழியே 'Rule of Third' சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன்.
ஸ்வாவிற்கு நேர்த்தி என்றால் மிகவும் பிடிக்கும். ரயில் நான் இருக்கும்
இடத்தை அடைய ஒரு நிமிடம் இருக்கும், இதே நேரத்தில் வரும் இந்த ரயிலில்தான்
எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ..பாங்.. என்று ஹார்ன் தொடர்ந்து
அடிக்கத் துவங்கியது. முழு முகத்துடன் தலைசாய்ந்து சிரிக்கும் அவளின் ஒரு
புகைப்படத்தைப் பார்த்தபடி, அதே ரயில் கடக்கட்டும் என்று தலையை
தண்டவாளத்தில் வைத்தேன். ஸ்ஸ்ஸ்ஸ்.."
'ரயில்
என்னைக் கடந்துபோனதும்தான் ஸ்வாவைப் பார்த்தேன். என்னைப் பின்தொடர்ந்து
வந்தாயா? தலையாட்டினேன், மெல்லிய புன்னகையை இருவரும்
பரிமாறிக்கொண்டோம். 'வா' என்று இரு கை விரித்து அழைத்தாள். அதற்குள்
எங்கிருந்தோ நான்குபேர் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.'
-செல்பி
எடுக்கப்போறான் போலன்னு பார்த்துகினே இருந்தேன் சார், வண்டி ஏத்தறதுக்கு
முன்னாடிதான் தலைய வெச்சான், தண்டவாளம் சூடு தாங்கல போல சட்டுனு
எடுத்துட்டு திரும்ப வெச்சிட்டான். தற்கொலை பண்ணி சாவச்சொல்லக்கூட சூடு
தெரியுமா சார்? என்னா பிரச்சனையோ? யார்னா போலீஸுக்கு போன் பண்ணுங்க சார்.