பலா பட்டறை: 05/01/2010 - 06/01/2010

வெண்ணை (0.09) (நீதிக் கதை)ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு பக்கத்து ஊட்ல இருந்தவரை திருடன்னு இல்லாததும் பொல்லாததுமா சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுது. போலீசும் அவர கைது பண்ணி ஜெயில்ல போட்டாங்க, கொஞ்ச நாளுக்கப்புறம் அவர் திருடனில்லைன்ற உண்மை தெரிஞ்சு அவர வெளில விட்டாங்க.. வெளில வந்த அந்த பக்கத்து வீட்டு இளைஞர் தன்னோட பேர கெடுத்ததுக்காக  அந்த பெரிசு மேல கேஸ போட்டாரு.


பெரிசும் தில்லா கோர்ட்டுக்கு போய் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்ன கமென்ட், பெரிசா எடுத்துக்காதீங்க ஜட்ஜையா ன்னு சொல்லிச்சு...


ஜட்ஜையா கொஞ்ச நேரம் தீர்ப்பு கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சாரு... சரின்னு பெரிச கூப்டாறு ஐயா பெரிசு இப்போ நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல எழுதுங்க, எழுதினப்புறம் அந்த பேப்பர துண்டு துண்டா கிழிச்சி கொஞ்ச கொஞ்சமா வீட்டுக்கு போகும்போது போட்டுகிட்டே போங்க...  நாளைக்கு வாங்க கேஸுக்கு தீர்ப்பு சொல்றேன்னாறு.


மறுநாள் எல்லாரும் கோர்ட்டுக்கு வந்தாங்க நீதிபதி பெரிச கூப்பிட்டு, நீங்க வெளில போய் நேத்து தூக்கி போட்ட எல்லா பேப்பர் துண்டுகளையும் எடுத்துகிட்டு வாங்கன்னார்.


பெரிசு ரொம்ப கூலா சாரி ஜட்ஜையா அந்த காகிதமெல்லாம் எங்க பறந்து போயிருக்குமோ தெரியாது. அத தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னாரு.


உடனே நீதிபதி குறுக்கிட்டு அதே மாதிரிதான் வார்த்தைகளும் ஒரு முறை வெளில விட்டா அது ஊர் பூரா பரவிடும் திரும்ப சரி பண்றது கஷ்ட்டம்.. உங்களால ஒழுங்கா பேச முடியாதுன்னா நீங்க பேசாம இருக்கறதே நல்லதுன்னாரு.


நீதி: நாம் நம் வாய்க்கு எஜமானாக இருந்தால்..வார்த்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.. !!


( அதிக வேலை காரணமாக இடுகைகள் எதுவுமே படிக்க முடியவில்லை. தமிழ்மணம் திறந்தால் காலத்தால் அழியாத மீள் இடுகைகள் கண்களில் தென்படுகிறது. சரி நாமும் அப்படி ஏதேனும் எழுதி இருக்கிறோமா என்று பார்த்தால் ஹி ஹி.. எனக்காகவே எழுதப்பட்ட ஒன்றைக் கண்டேன். ரைட்டு எதுவும் எழுதும் மன நிலையில் இல்லாத இப்பொழுதில் என் இருப்பை எனக்கு நீதி சொல்லும் இந்த இடுகை ஒருவேளை உணர்த்தக்கூடும் என்பதால்...!!)

மறந்துடாதீங்க மக்களே ! என்றும் உங்களுக்காகவே இயங்கும் ஒரு பட்டறை!!
(ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா சாமீ...கண்ணக்கட்டுதே! :-).

சவாலே சமாளி (தொடர் கதை / பதிவு) (முடிவு-2)

நண்பர் ஜெய்லானி அழகான ஒரு விருது கொடுத்திருக்கிறார். மிக்க நன்றி ஜெய்லானி :-)

முகிலன் தொடரை முடித்து விட்டார். ஒன்றும் பாதகமில்லை. மூன்று வெவ்வேறு கிளைக்கதைகள்தான். ஒரு கொலையில் மட்டுமே அவை ஒன்று சேரும். எனவே என் பங்கை படித்து முடித்து விடுங்கள். ::-))

---

ப்படி ஒன்றும் விகாரமான ஒன்றைக் கேட்டுவிட்டதாய் அவனுக்கு தோன்றவில்லை. தான் சாதாரணமாய் நினைத்து நல்லதிற்காய் கேட்ட ஒன்று அடுத்தவர்க்கு எப்படி மனதைக் காயப்படுத்தும் ஒன்றாய் மாறிவிடுகிறது என்பது எப்போதும் ஒரு ஆச்சர்யமாகவே இருந்தது. அம்மாவிடமும் இப்படி அவஸ்தைப்பட்டிருக்கிறான். எதுக்குமா இப்படி புலம்பற உன்னையும் என்னையும் பாத்துக்கற மாதிரி ஒரு பொண்ண நானே கூட்டியாரேன் என்றவனைப் பார்த்து அம்மா ஆடிய ஒரு புலம்பல் நாடகம் தொலைக்காட்சி சீரியலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடுத்த வீட்டு பெண்களை எல்லாம் அவன் வீட்டு ஹாலிற்கு வரச்செய்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில விஷயங்களை ஏன் செய்தியாக மூளைக்குள் ஏற்றாது மனதில் ஏற்றி அவஸ்தைப்படுகிறார்கள்? என்று ஷானுக்கு வருத்தம் வரும். அன்றைக்கு ஸ்வாதியும் அப்படித்தான்.

”ஸ்வா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”

”சொல்லு ஷான்”

தாத்தாவ ஏன் ஒரு ஹோம்ல சேர்க்கக்கூடாது?  குடித்த காபியை அப்படியே டேபிளில் வைத்தவள் கண்களும் உதடுகளும் புருவமும் சுறுக்கி, எப்படி நீ அப்படிச் சொல்லலாம் என்று ஆரம்பித்தவள் நாளைக்கு உனக்கும் இப்படி ஆச்சுன்னா எங்கனா ஆஸ்ரமத்துல கொண்டு போய் நான் விட்டுடட்டுமா? இல்ல எனக்கு இப்படி ஆச்சுன்னா நீ என்ன எங்கனா விட்டுட்டு வேற எவளோடவாவது சல்லாபம் ஆரம்பிச்சுடுவியா? நீயும் நானும் சாப்பாடுதான் சாப்பிடறோம் சஞ்சீவி மூலிகை இல்ல. இந்த நிலம என்னிக்கு வேணாலும் உனக்கும் எனக்கும் வரும், உனக்கு எப்படி இப்படி எல்லாம் கேட்க மனசு வருது சண்முகம்.

புரிந்துவிட்டது சண்முகம் என்று அழைத்ததிலேயே அவள் தள்ளி நின்று விட்டாள். இல்ல ஸ்வா நீ தப்பா புரிஞ்சிகிட்ட, தாத்தாவுக்கு இந்தமாதிரி நிலைமைல அதிகமா மெடிகல் கேர் தேவைப்படும். அதுக்கான ஹோம்கள் இருக்கு என்னோட ஹோட்டல்ல சாப்பிட வற்ற ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர் அந்த மாதிரி ஒரு ஹோம்ல ட்ரஸ்டியா இருக்கார், செலவே இல்லாமக் கூட கவனிச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார் அத மனசுல வெச்சித்தான் சொன்னேன்.

ம்ஹூம் அவள் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கண்கள் வேறு கலங்கி இருந்தது. அடடா இன்றைக்கு ஹாஸ்பிடல் போய்விட்டு வந்திருப்பாளே அதைக் கேட்க மறந்தேனே? காதலியா? மனைவியா? அம்மாவா? பிள்ளைகளா? யாராய் இருந்தால் என்ன சில நேரங்களும் சூழ்நிலைகளும் உலகமகா எதிரியாவும் வேண்டத்தகாத மனிதராகவும் எதிர் எதிரே நிற்க வைக்கும். எது பேசினாலும் தவறாய் போகும். ஷான் அது புரிந்து அமைதியாய் இருந்தான். இவளே சமாதானமாகட்டும் விட்டுப் பிடிப்போம் என்று முடிவு செய்தான்.

க்கே எனக்கு டைம் ஆச்சு சொல்லிவிட்டு கிளம்பினாள் ஸ்வாதி. சீயூ, பை, பார்க்கலாம் என்ற சந்திப்பு தொடரும் வார்த்தைகள் எதுவுமில்லாது விருட்டென கிளம்பினாள், வாசல் கடந்து மறைந்தாள்.

வள் மறைந்ததும் ஷான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். டேபிளில் வைத்திருந்த ஐஸ்வாட்டர் டம்ளர் தண்ணீர் கோடுகளால் டேபிளில் ஒரு கோலம் போட்டிருந்தது. டம்ளரிலிருந்த நீர் அத்தனையும் குடித்தான். நேரம் பார்த்தான். வேலைக்குச் செல்ல கிளம்பினான்.


---


”என்ன சண்முகம் அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்ட. ”

”ஒண்ணுமில்லண்ணே சும்மாதான். ”

”அந்த கேஸ் என்னாச்சுப்பா?”

”இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டுப் போயிட்டாருண்ணே. தேவைப்பட்டா கூப்பிடறோம்னு சொல்லிட்டார். ”

”சரி உக்காரு லைன முடிச்சிட்டு வந்துடறேன்.” சுப்ரமணி அண்ணன் டிபன் தட்டையும் காபி நிரம்பிய டபராக்களையும் எடுத்துக்கொண்டு லாவகமாய் யார் மீதும் இடிக்காமல் சப்ளைக்குச் சென்றார்.

சர்வர் வேலை என்பது ஒன்றும் சுலபமானதும் கேவலமானதுமல்ல. 7 வரிசை டேபிள்களில் ஐந்தில் நான்கு நபர்களும் இரண்டில் ஆறு நபர்களும் எப்பொழுதுமே நிரம்பி உட்காரும் லைனில் யோசித்துப்பாருங்கள் அனைவரின் தேவைகளையும் சரியாய் பூர்த்தி செய்யவேண்டும். சரியாய் பில் தர வேண்டும். 12 மணி நேரம் நடந்தே குதிகாலிலிருந்து மேலாக ஒரு வலி பரவும் நிரந்தரமாய்.

சிரித்தபடியே இருக்க வேண்டும், சீருடை அழுக்காகக்கூடாது. தட்டைவிட தோசை அளவு பெரியதாக இருக்கும். டேபிளில் படக்கூடாது. சிலர் தோசையை மடிப்பதை விரும்ப மாட்டார்கள். சிலருக்கு சுடுநீர்தான் வேண்டும், பூரிக்கு எத்துனை வகை மசாலா வைத்தாலும் கெட்டிச்சட்டினி இருக்கா? என்று கேட்பார்கள். இப்போதெல்லாம் காபிக்கே நிறைய கேள்விகள் நல்லா ஸ்ட்ராங்கா, கொஞ்சம் லைட்டா, மீடியமா, கொஞ்சம் சக்கரை கம்மியா, வித்தவுட் சுகர், மினி காப்பி என்று லைனில் வரும் முப்பத்தி ரெண்டு வகை மனிதர்களின் பசியை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டிய வேலை. அதை விட முக்கியம் என்ன கொடுத்தோம் என்று சரியாய் பில் கொடுப்பது.


இடையறாத பாத்திரங்களின் சத்தங்களிலும், சொய்ய்ய் என்ற தோசை வார்க்கும் சத்தங்களின் இடையேயும் சண்முகம் ஸ்வாதியையே நினைத்துக் கொண்டிருந்தான்.    

கி கி கி கீ கீ கிகிகி எஸ் எம் எஸ் வந்திருப்பதாய் மோர்ஸ் கோட் சப்தம் சொல்லியது.

மெஸேஜை திறந்தான். அட! ஸ்வாதி நம்பர்.

Sorry my Love!

மூன்றே வார்த்தை எல்லா பிரச்சனைகளுக்கும் அப்பொழுதைக்கு முடிவுரை எழுதி இருந்தது.
  


.

சவாலே சமாளி (தொடர் கதை / பதிவு)


பரபரப்பு செய்தி!

பிதற்றல்கள் முகிலன் ஒன்பதே மாதத்தில் 500 பதிவினை (இடுகைகளை) எழுதிமுடித்ததற்காய் வாழ்த்து சொல்லி இந்த கதையின் முதல் பாகத்தை உருவான விதத்தை படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும்.*


-----


"ந்த காலத்துல மாஹாத்மா 'வெள்ளையனே வெளியேறுன்னு' ஒரு வார்த்த சொன்னதுக்காக வெள்ளக்காரன்கிட்ட மண்டையில அடிவாங்கி காது கேக்காம போனமாதிரியே கண்ணும் தெரியாம போயிருக்கலாம்."

ன் உசிர்மட்டும் போகக்கூடாதாக்கும். ஸ்வாதி நினைத்துக்கொண்டாள். சப்தம் போட்டுக்கேட்டாலும் ஒன்றும் பிரயொஜனமில்லை. தாத்தாவுக்கு காது கேட்காது. இவரைப்போல தியாகிகள் மட்டுமென்று இல்லை, எல்லா பெரிசுகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் குழந்தைகள் போலவே. சொன்னதையே சொல்லிக்கொண்டு. காதில் வாங்காது ஸ்வாதி மெதுவாய் தாத்தாவை திரும்பப் படுக்க வைத்து முதுகை பரிசோதித்தாள். வெள்ளை நிறத்தில் படுத்துக்கொண்டே இருப்பதின் காரணமாய் ஒருவித வீச்சத்துடன் மூன்று புண்கள் பெரிய பள்ளங்களைப் போல ஆழமாய் இருந்தது. கட்டிலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த அவரின் பழைய இளமைக்கால படம் அதனையொட்டியவாறே நேர் கீழே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. தாத்தாவின் புண்களுக்கு மருந்திடும்போதெல்லாம் அவள் தன் முகத்தையும் தாத்தாவின் புகைப் படத்தையும் பார்ப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. 

ரு வேளை தானும் இப்படித்தான் பேரன், பேத்திகளெடுத்து முதுகில் சீழ் வந்து, வீச்சமடித்து அவஸ்த்தைப்படுவேனோ. இப்போது போடும் ஸ்னோவும், பவுடரும், எடுப்பான உடல்வாகும், இடுப்புவரை அடர்த்தியாய் கைவலிக்கப்பின்னும் தலைமுடியும், திருத்தமான முகமும், வெடிப்புக்கீறல்களில்லா பாதங்களும், இன்னும் ஷானுக்காக மறைத்து வைத்திருக்கும் என் அழகெல்லாம் இப்படித்தானாகுமோ? 

நினைத்தவுடனே அனிச்சையாய் தலையாட்டிக்கொண்டாள். சேச்சே.. ஆரோக்கியமாய் இருக்கும்போதே போய்ச்சேர்ந்துவிடவேண்டும். என்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம். மூத்திரம் போக அடுத்தவர் துணை வேண்டாமல் மிருகங்களே மடியும்போது எனக்கென்ன பிறர் அவஸ்தையில் ஒரு வாழ்வு நீட்டிப்பு?      

"ஹாத்மாவ சுட்டப்பவே என் மூச்சும் நிற்காமப் போச்சே.." முருகேசன் தாத்தாவின் தினப்புலம்பல் ஆரம்பமாகிவிட்டது. இப்போதெல்லாம் ஸ்வாதி தனியாய் தவிக்க விட்டு தாத்தா போய் போய்விடுவாறோ என்ற கவலையை மறந்திருந்தாள். யாரை வெளியேற்ற மண்டையில் அடிவாங்கி இன்னும் புலம்பிக்கொண்டிருக்கிறாரோ அதே வெள்ளைக்காரனின் 'கால் சென்டர்’ கம்பெனியில் நல்ல சம்பளத்தில் தான் வேலை செய்து தாத்தாவைக் காப்பாற்றுவதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நினைக்கும்போது ஸ்வாதிக்கு மெல்லிய சிரிப்பு வரும். உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என்றெல்லாம் சொன்னாலும் நவீன அடிமைத்தனம் மீண்டும் உணவு ருசியாய், ஆடைகளாய், மின்சாதனங்களாய், மருந்துகளாய், குளிர்பானங்களாய் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆக்டபஸ் சூழ்ச்சியை தாத்தாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.

மெதுவாய் தாத்தாவின் முதுகில் மருந்துகள் தடவி, நிற்க வைத்து, விரிப்புகள் மாற்றி படுக்க வைத்தாள். மணி பார்த்தாள் 8.05 கிளம்ப வேண்டியதுதான். ரோஸி இன்னும் காணுமே. சம்பளத்திற்கு வரும் தாதி என்றாலாவது கடிந்துகொள்ளலாம். இவள் சேவை செய்பவள் இன்றைக்கும் தாமதமானால் ஷான் முகம் தூக்குவான். ஷான் அவன் பெயரை மெல்ல உச்சரித்தாள் சண்முகம் என்ற பெயருள்ள பணியிலுள்ள சக நண்பருக்கு அவள் கால் சென்டர் சூட்டிய நாமகரணம் அது. அட நல்லாருக்கே என்று சண்முகம் என்ற தன் மேல் மிகப் பிரியமாய் இருக்கும் காதலனுக்கும் அதே பெயர் வைத்துவிட்டாள் ஸ்வாதி. 

“சாரி அக்கா” ரோஸியின் குரலில் கவனம் கலைந்து, எல்லாம் மறந்து, ”பரவாயில்ல ரோஸி தாத்தாவுக்கு..என்று ஸ்வாதி ஆரம்பிக்கும்போதே அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அக்கா நீங்க வேலைக்கு கிளம்புங்க.” என்றாள் ரோஸி.

ஸ் பிடித்து தனது அலுவலகத்திலிருந்து ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கினாள் டாக்டரைப் பார்த்துவிட்டு ஷானை பார்க்க வேண்டும். மெதுவாய் ஏதோ யோசனையுடன் நடக்கத்துவங்கினாள்.    

---

”ஏம்பா இந்த சர்வர் வேலைய விட்டா வேற வேலை கிடைக்காதா? ”அம்மா வழக்கமான கேள்வியை ஆரம்பித்தாள். எல்லா தாய்மாருக்கும் இருக்கும் அதே மகன் கனவுகள் அவளுக்கும் இருந்தது. ஒரு மருமகள் கிடைத்தால் சீரியலில் வருவதுபோல அவளைச் சீண்டும் தின பொழுதுகளின் தீனிகளுக்காய் அலைந்து கொண்டிருந்தாள். ஒரே மகனின் ஹோட்டல் வேலை வெளியில் கவுரவமாய் சொல்ல முடியாத அளவுக்கு அவள் தாயாரித்த அவளின் சமூக அளவுகோல் தடுத்துக்கொண்டிருந்தது.

”ஏம்மா சர்வர் வேலைன்னா அப்படி என்ன கொறைச்சல். சாப்பாடும் போட்டு, டிப்ஸோட, கை நிறைய சம்பளமும் கிடைக்குது. கொஞ்ச நாள்ல தொழில் கத்துகிட்டேன்னா நானும் ஒரு ஹோட்டல் வெச்சி முதளாளி ஆகிடுவேன் பாரு.”

”அதுக்கில்லடா யார் சர்வருக்கெல்லாம் பொண்ணு குடுப்பாங்க?” சண்முகம் என்ற ஷான் அவன் அம்மாவை மெதுவாய் திரும்பிப் பார்த்தான். அந்த கவலை உனக்கு வேண்டாம்மா நானே பார்த்துப்பேன் என்று சொல்ல வந்தவன் வெறுமனே சிரித்துவிட்டு ”நான் கிளம்பரேம்மா வேலைக்கு நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு பஸ் பிடிக்க நடந்தான். இன்றைக்கு ஸ்வாதி என்ன ட்ரெஸ் போட்டிருப்பாள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஒரு சிரிப்பைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப்போவதாக இருக்கிறான். அதைக்கேட்டு அவள் என்ன நினைப்பாளோ என்ற என்ற அச்சமும் அவன் மனத்தில் எழுந்தது. அவன் பஸ் வரும்வரையில் இதே சிந்தனை ஈக்கள் அவன் கவனத்தை மொய்த்துக்கொண்டிருந்தது.

---

ஸ்வாதி டாக்டருகைய கிளினிக் அடைந்தபோது லேசாக தூரல் ஆரம்பித்திருந்தது. எப்போதுமே குடை கொண்டுவர ஸ்வாதி விருப்பப்படுவதில்லை. மழையோ வெயிலோ இரண்டிலும் முழுதாய் நனையப்பிடிக்கும். 15 நிமிடங்கள் ஆயிற்று அவள் டாக்டரை சந்திக்க. 

டாக்டர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார் ”சாரி ஸ்வாதி, உங்களுக்கு கர்ப்ப பையில சில பிரச்சனைகள் இருக்கு. ஹார்மொன் ப்ராப்ளத்துனாலன்னு இருந்தா மருந்துங்க கொடுத்து சரி பண்ணிடலாம். ஆனா..” 

டாக்டர் சொன்னதைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா, பிரமிப்பதா என்ற எந்த உணர்ச்சியைக் காட்டுவதெனெத்தெரியாது ஸ்வாதி அமர்ந்திருந்தாள். பெரும்பாலான நேரங்கள் இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. அதிகமாய் டிவி அல்லது சினிமா பார்ப்பவர்களால் சட்டென உணர்ச்சிகளை முகங்களில் கொண்டுவர முடிகிறது. நான் ஏன் சராசரி பெண்களைப்போல இல்லை.

”வேற வழியே இல்லையா டாக்டர்.” டாக்டர் ஸ்வாதியின் கையைப் பற்றி ”சின்ன வயசுல அதுவும் கல்யாணமாகாத பெண்ணுக்கு இது கொஞ்சம் கஷ்டமானதுதான், ஆனா உன்னைப் புரிஞ்சவர் ஒருத்தர் உனக்குக் கிடைக்கும்போது, இது ஒரு பெரிய விஷயமா இருக்காதும்மா.” மெதுவாய் பேசினார். அவளுக்கு ஏனோ தன் அம்மாவின் நினைவு வந்தது. 

ன்னாரெனத்தெரியும்போது தொடுதல்கள் பல அர்த்தங்களைத் தருகின்றன. வேறேதேனும் சந்தர்பத்தில் யாரேனும் இவ்வாறு கை தொட்டு பேசி இருந்தால் அந்நிகழ்வு சாதாரணமான ஒன்றாய் இருந்திருக்ககூடும். ஆனால் இப்போது அந்த தொடுதல் அவளுக்கு மிகத் தேவையானதும் ஆறுதலமாயுமிருந்தது.

தாய்மையே அனுபவித்தறியாத ஸ்வாதிக்கு தாயாக முடியாத நிலையை நினைத்து தன் மனசு அலட்டிக்கொள்ளாததை வியப்பாகவே பார்த்தாள். இறக்கப்போகும் தாத்தாவைப் பார்த்து வாழ்வின் நிலையாமை பழகிவிட்டதா என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டாள். சரி இதை ஷான் எப்படி ஏற்றுக்கொள்வானோ என்ற கேள்வி மட்டுமே அவளிடம் இருந்தது. உடல் பசி முடிந்ததும் வாரிசு பசி என்ற ஒன்று வருமே? என்னதான் உருகி உருகி காதலித்தாலும் இல்ல எங்கம்மா சொல்றாங்க என்று ஆரம்பிப்பானோ என்ற உறுத்தல் உள்ளே கிளை விடத்தொடங்கி இருந்தது.

”ஸ்வாதி” திடுக்கிட்டுத்திரும்பினால் ஷான் நின்றுகொண்டிருந்தான். வலது கையின் நான்கு விரல்களை காட்டிக்கொண்டிருந்தவனை என்ன என்று இரு புருவங்கள் நெறித்து ஸ்வாதி சைகையில் கேட்டாள். ”நாலு முறை உன்னக் கூப்பிட்டும் அப்படி என்ன இளவரசி யோசனை?” 

”ஓ காட், சாரி ஷான் கவனிக்கல. காஃபி?” என்று கேட்டவளுக்கு ”ரைட்டோ” என்றவன் உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். எப்படிச் சொல்வது?

---

வளுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் அவன். இது மூன்றாவது நாள் அவள் இந்த பஸ்ஸ்டாப்புக்கு வருவதை நிறுத்தி. காரணம்? மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம். அதை நினைத்தால் அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.

“ஹாய் ஸ்வாதி”

“ஷான், எத்தன தடவ உன்கிட்ட சொல்றது. என்னை ஸ்வானு கூப்புடுனு?”

“எங்கப்பாம்மா எனக்கு அழகா சண்முகம்னு பேரு வச்சிருக்காங்க. நீ என்னடான்னா அத ஷான்னு ஸ்டைலா கூப்புடுற. இந்த கால் செண்டர்ல வேலைக்குச் சேந்ததுல இருந்து உன் போக்கே சரியில்ல”

“அமெரிக்கன்ஸ் எல்லாம் அப்பிடித்தான் ஷான். பேரைச் சுருக்கிக் கூப்புடுவாங்க. நாமும் அப்பிடிக் கூப்புடலாமே?” 

“அது இருக்கட்டும். நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும் ஸ்வாதி.. சாரி ஸ்வா”

“கேளு ஷான்” என்று இவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். இவன் அதைக் கேட்டிருந்திருக்கக்கூடாது. கேட்டு விட்டான்.

ப்போது மூன்று நாட்களாக இவனைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாள். செல்லில் கூப்பிட்டாலும் எடுப்பதேயில்லை. 

தூரத்தில் கடலை விற்கும் வண்டி மணியடித்துக் கொண்டே போனது. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட்டுகளோடு இன்று ஆடப் போகும் போட்டிக்கு ஸ்ட்ராட்டஜி டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர். காய்கறி வாங்கிக் கொண்டு செல்லும் மாமிகள் சலசலவென பேசிக்கொண்டே செனறனர். இவை எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ஸ்வா ஸ்வா ஸ்வா. அவன் சுவாசம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருந்தாள்.

ட்டென நினைவுக்கு வந்தவனாகக் கலைந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தான். ட்யூட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

வன் வேலை செய்யும் இடம் வந்ததும் ஒரு நொடி நின்று நிமிர்ந்து பார்த்தான். “ஹோட்டல் சரவணபவன்” என்ற பலகையைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.01.திகில் தொடரும்...!
02.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.
03.மூன்று பேரில் சிறப்பாக எழுதியவரைத் தேர்ந்தெடுப்பவர்களில் 3 பேருக்கு பாரீஸ்/பர்மா பஜார் இன்ப சுற்றுலா பரிசு.* *condition apply:)


.

வெண்ணை (0.08) (கொடூர கவிதைகள்)
ஞானம்!

ஒன்றுமில்லாததை தேடி அலைந்தேன்
கிடைத்ததா என்று குரு கேட்டார்
கிடைக்கவில்லை என்றேன்
தேடு! கிடைத்தவுடன் கொண்டுவா என்றார்
கிடைத்தால் என்ன செய்வீர்கள் குருவே? என்றேன்
ஒன்றுமில்லை என்றார்!தாயம்!

பிறப்பிற்கான செய்கைகளை சிலாகித்த
நண்பனொருவன் இறப்பின் செய்கைகளாய்
அவை மாறுவதாய்ச் சொன்னவுடன்
சினம் கொண்டு எச்சரித்தான்.
மிச்ச நாட்களிலேனும் மச்சங்கள் வைத்து
சொச்சங்கள் எழுத நினைத்து சூது கட்டைகள்
விசிறினேன் ஒரு கட்டை முதுகும், ஒரு கட்டை
வயிறும் காட்டியது!வலை

வலையில் வராதவளுக்காய்
திறந்திருந்த மடிக்கணினியில்
வலை விரித்து காத்திருந்தது
எட்டுக்கால் பூச்சி!செங்கோல்

பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!


உண்மை!

ஆடை கட்டி வந்தவர்களே
வெட்கமாயில்லை?
ரசிக்க வந்தவர்களை
மௌனமாய் கேட்டது
இயற்கை!


கிருமி!

கடவுள் வந்தால் என்ன கேட்பாய்?
என்று கேட்டவனிடம்
அது தெரியாது ஆனால்
அவர் என்ன கேட்பார் எனத்தெரியுமென்றேன்
என்ன என்று கேட்டவனுக்குச் சொன்னேன்

உங்கள யாருடா உள்ள விட்டது???


:-)
.

மரணஜீவிதம்..அம்மா என்னோட ஹேர்க்ளிப் எங்க? இதோடு மூன்றாவது முறையாய் கத்திவிட்டாள் ஸ்வாதி. அவனுக்கு அவள் குரல் மாடியில் தெளிவாய் கேட்டது. குரல் கேட்க்கும்போதே மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது.

காதல் உள்ளே நுழையும் முன்பு வரை ஒரு ஆச்சரியம் நுழைந்த பின்னோ அது மரண அவஸ்த்தை. இதுவரையிலும் நட்பாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனி என்ன ஆகுமோ எனத்தெரியாது. ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே முடிவு செய்திருந்தான். இன்றைக்காவது அவளிடம் சொல்லவேண்டியதுதான்.

தனியாய் ஒரே பிள்ளையாய் அதுவும் சகோதர சகோதரி பொறுப்புகளும் தொல்லைகளுமில்லாத ஆண் மகனாய் பிறப்பவனுக்கு அழகாய் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அன்பு பொழிகிறது. நட்பாக ஆரம்பித்து காதலாய் அது மாறுமா என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யங்கள் சுகமான மரண அவஸ்த்தை,

மரண அவஸ்த்தை. ஆச்சர்யமாய் இருந்தது அவன் யோசிப்பு. மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன். அவனே கேட்டுக்கொண்டான். ஒஹ் புரிந்துவிட்டது. இந்த வாழ்வு. யெஸ் இந்த வாழ்வு இந்த பிறப்பின் பூரணம் மரணம். அதை நோக்கியே இந்த உயிர் வளர்கிறது, சிரிக்கிறது, அழுகிறது, அகங்காரம் கொள்கிறது, அன்பு கொள்கிறது, அழிவு செய்கிறது, ஆக்கம் செய்கிறது, அடுத்த மரணத்தினை தயாரிக்க கூடல் கொள்கிறது, மரணத்தை குழந்தையாய் பெற்று கொஞ்சுகிறது, தாலாட்டி சீராட்டி, மரணமில்லா பெருவாழ்வு போதனைகள் புகுத்தி மகனே உன் சமர்த்து என்று இந்த உயிர் கோளில் மேய விடுகிறது. உயிருடன் இருக்கிறதா என்று தினமும் மரணத்தின் வளர்ச்சியை கவனமாய் பாதுகாக்கிறது.      

மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தலையை உதறிக்கொண்டான். ஏன் இறப்பு இங்கே அழுகையாய்ப் போனது? மீண்டும் உள்ளே கேள்வி எழுந்தது. ஒரு தொடர்பு விட்டுப்போவதாலா? இறப்பதற்காகவே உயிர் என்பது வாழ்கிறது என்பதை மறந்து இறப்பை வெல்லவே உயிர் வாழ்கிறேன் என்பது போதையாய் மரத்துப்போனதா? அதிகபட்ச ஆசையென்பது இதுதானா? தொடர் உயிர் வாழ்தலில் சாதிக்கப்போவதென்ன? அல்லது வெறும் அதிக பட்ச 100 வருட் உயிர் வாழ்தலுக்கே மனமும் தயாராகிவிட்டதா? அதன்பிறகும் என்ன செய்வதெனத்தெரியாமலே இறப்பு பிறக்கிறதா?

ஒரு காதலிக்கும் பெண்ணின் குரல் கேட்டால் மரணம் பற்றிய சிந்தனைகள் யாருக்கேனும் வருமா? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வேளை எல்லாருக்குமே இப்படி ஒரு எண்ணம் வருமா? மறைத்து வெளியில் சொல்லாது தன் வேலை தன் காதல் தன் சம்பாத்தியம், கிரிக்கெட் என்று சுலபமாய் தாண்டுகிறார்களோ? அல்லது என் யோசனையே தவறா?  

அம்மா டைம் ஆச்சு வர்ரேன். ஸ்வாதி தெரு இறங்கும் குரல் கேட்டது.

நேரே அவள் பின்னாலே சென்றான். அவள் ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். அப்போதுதான் கிளம்பி விட்டிருந்த பஸ்ஸில் அனைவரும் ஏறிச்சென்று விட்டிருந்தனர். காலியாய் இருந்த அந்த பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்தவாரே மெதுவாய் செல்போனை எடுத்தாள் ஸ்வாதி. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவள் திடீரென ஒரே படத்தை வெறித்துப் பார்த்தாள் அது அவனுடைய படம். எப்போது இதை எடுத்தாள். என்னை ஏன் கவனிக்கவில்லை, ’கிறீச்’சென்ற சப்த்தத்துடன் ஒரு பஸ் வந்து நின்றது. சட்டென கவனம் கலைந்து இருக்கையிலிருந்து எழுந்த ஸ்வா அவனுள்ளே புகுந்து நேரே எழுந்து பஸ்ஸில் ஏறினாள். தன்னுள் அவள் புகுந்து போனதை அதிசயித்தவாறே அவன் மெதுவாய் திரும்பினான். புகை கக்கிக்கொண்டு பஸ் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தது. அவன் காத்திருந்தான்.

--

”இங்கதான் இருக்கீங்களா?” ஸ்வாதி கேட்டபடியே பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்தாள். அவன் திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான்.

”ஹலோ ஷான் உங்களத்தான், என்ன அப்படிப் பார்க்கறீங்க?”

“ ஹாய் ஸ்வா..”

”உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.. ” என்றாள் ஸ்வாதி.

அவன் சிரித்தான். ”நானும்தான்” என்றான்.

---

அன்றைக்கு மொத்தம் மூன்று குண்டுகள் ஹோட்டல், மார்கெட் மற்றும் பஸ்ஸில் 68 பேரை பலிவாங்கி இருந்தது.


.

இரண்டாம் பாவம்....அமைதியாய் உலகத்தையும், பரந்த வெளியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாயிரம் சிந்தனைகள் மனதினுள்ளே புயலாக அடித்துக் கொண்டிருந்தது.  அடுத்தது என்ன செய்யப்போகிறேன்? எப்படி வாழ்வு நகர்த்தப்போகிறேன்? நானும், வெறுமையும் நேருக்கு நேர் உட்கார்ந்திருந்தபோது. கற்றுக்கொடுக்கப்பட்டவை எல்லாமே குப்பையாகிப்போனது.

என்னால் எதுவும் செய்யமுடியாத முடிவின் ஆரம்ப ஆட்டம் தொடங்கியதை விருப்பு வெறுப்பின்றி வெறுமனே எதிர்கொள்ள முடியாத அளவுக்கு சக்தியற்றுப்போயிருந்தேன். அன்பினால் என்னை அரவணைத்தவர்கள் அதிகமில்லை என்றாலும், தாயில்லாமல் தாயாகவும் இருந்த தந்தையை நினைக்க நினைக்க துக்கம் பொங்கியது.

"நல்லா படி. நல்லா வருவ. துரோகமும் குரோதமும் வேண்டாம். "

"சரிப்பா."

"நீ எதுவேண்டுமானாலும் ஆகிக்கொள் அதில் மனிதனாய் இருக்க முடியுமா என்பது மட்டுமே உன் சரி பார்த்தலாய் இருக்கட்டும். "

பாதிரியாய் இறை தொண்டில் என்னை பார்க்க அவர் ஆசைப்பட்டாலும், துரித கதியில் மனிதர்களைக் கொல்லும் ராணுவத்தில் நான் சேர்ந்தது நாங்கள் இருவருமே எதிர்பார்க்காதது. அபரிமிதமான படிப்பும், மூளை உபயோகமும் என்னை அங்கே இணைத்துவிட்டது. ஒருவேளை இப்போது நான் இருக்கும் இந்த நிலைமைக்கும் என்னுடைய பாவச் செயலே காரணமோ?

மீண்டும் கண்கள் பிரபஞ்சத்தில் நிலை குத்தியது. அப்பா உலகைக் சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டார். நான் ராணுவத்தில் பல பரிசோதனைகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தேன். உடல் தசைகளின் வலிமையை அணு அணுவாய் பரிசோதிக்கும் ஒரு செயற்கை நீர் தொட்டியின் ஆழத்தில் பிராணவாயு குழாயில் ஏற்பட்ட பிரச்சனையின்போது பதட்டத்தில் மெதுவாய் மேலே வரவேண்டிய வழிமுறையை கைவிட்டு அவசர அவசரமாக வெளிவந்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில், மெல்லக் கண் விழிக்கும் போது காதலாய் அருகிலிருந்த ஜெனீபருக்கு நான் பரிசளிக்க வேண்டிய மோதிரத்தை இதோடு நூறாவது முறையாகப் பார்த்துவிட்டேன்.

நாடகம் முடியப்போகிறது. எப்போது என்பதே கேள்வி. அடுத்தது என்ன என்பதை யார் அறிவார்? இதோ இந்த உலகத்தில் மறுபடி எங்கேனும் நான் பிறக்கக்கூடும். மனிதனாகவோ மற்ற எதுவாகவோ. அல்லது இல்லாமலும் போகலாம். இருப்பதைக்கண்டுபிடித்து பெயர்கள்வைத்த அறிவியல், என் முடிவை தோல்வி என்று ஒப்புக்கொள்ளாமல் சோதனையில்  தவறென்று வாதிக்கும். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளும் இந்த உலகத்தின் நானும் என்னை இந்த நிலையில் வைத்து காட்சிப்பொருளாக்கி இருக்கும் விஞ்ஞானமும் வாயெல்லாம் மிட்டாய் பிசுபிசுப்பில் கையில் பலூன் கொண்டு ராட்டினம் பார்க்கும் குழந்தையே அன்றி வேறல்ல என்ற எண்ணம் தோன்றியவுடன் என்னுடைய கடைசி சிரிப்பு முகத்தில் வந்து போனது.      

ஜன்னலிலிருந்து பார்வையை கணினிப் பக்கம் திருப்பினேன். நீலமாய் இருக்கும் பூமிப்பந்தினை மொத்தமாய்க் கடல் முழுங்கி விட்டிருந்தது. எவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு கோரத் தாண்டவம். இவ்வளவு நாள் இந்த நீர் இந்த உலகில் எங்கு இருந்தது? யாரிடம் நான் போய் கேட்பேன்? விடை தெரியாத கேள்வியை மனதில் சுமந்தபடியே என்னை சுமந்து கொண்டு இந்த பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது இந்த வின்வெளி ஓடம்.

இவை எதுவும் அறியாது உறங்கும் கேப்ஸ்யூலிலிருந்து "ஹாய் ஷான்" மிதந்தபடியே வந்த ஜெனியை பிடித்தபடியே அந்தரத்தில் மண்டியிட்டு, கணினியை மறைத்து  மோதிரம் காட்டி...                    "வில் யூ மேரி மீ" என்றேன்.கையை விரித்தவள் கையில் ஒரு ஆப்பிள் iPod இருந்தது..

ஒரு ஆதங்கம்...:(கடவுளின் குழந்தைகள் என்ற ஒரு இடுகையில் ஏற்கனவே என் உணர்வுகளைச் சொல்லி இருந்தேன். இன்றைக்கு சந்தியா என்ற ஒரு சகோதரியின் இந்த இடுகையை படித்தபோது, மனது மிகவும் கஷ்டப்பட்டது.

பள்ளிகள் நடந்து கொள்ளும் விதம் கேவலமாயிருக்கிறது. பெரியதாக ஜம்பம் பேசும் பள்ளிகளையும், அதன் வாயிலில் தவம் கிடந்து அட்மிஷனுக்காய் அலைவதையும் நான் அறவே வெறுக்கிறேன்.

ஒரு குழந்தை என்பது குழந்தைதான் அதற்கு மேல் எந்த அளவுகோலும் கொண்டு ஒரு குழந்தையை சீர் தூக்குவது கேவலம். அக் குழந்தைக்கான உரிமையை தட்டிப்பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அந்த இடுகையிலுள்ள நியாயமான ஆதங்கம் மனதைப் பிசைகிறது. நல்லவேளை எனக்கு வரவில்லை என்று தாண்டிப்போக முடியவில்லை.

இந்தமாதிரியான அவலங்கள் என்று தீரும்? அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்று நடத்தும் ஒரு பள்ளியில், ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பிற்கு போவதற்கே இத்தனை வியாக்கியானம் பேசுகிறார்கள் என்றால், இனி ஒவ்வொரு படியும் தாண்ட அக்குழந்தையும், பெற்றோரும் என்ன பாடுபடப்போகிறார்கள்?

இதற்கெல்லாம் விடிவே இல்லையா? என்னதான் சிறப்பு பள்ளிகள் அல்லது அரசாங்க பள்ளிகள் என்று விவாதித்தாலும், பள்ளிகளின் இது போன்ற செயல்கள் சரியா?

இன்னும் எத்தனை குழந்தைகள் இதுபோல நிராகரிக்கப்பட்டிருக்கிறதோ என்பதை நினைக்கும்போது....

ப்ச்....


.

என்னமோ எழுதுகிறேன்...

பார்வை இன்றி
ஒலி கேட்க முடியாதவனுக்கு

கடவுளும், வேதங்களும்
ஸ்பரிசத்தை தீட்டாக்கும்போது

உங்கள் மொழியும் என் மொழியும்
என்னத்தை கிழித்துவிடும்?

கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு

உருவமில்லாத மனமோ
நிறங்களைச் சூடிக்கொள்கிறது..


--


வாடா பேராண்டி

வாஞ்சையுடன் கன்னம் தடவும்
கண்தெரியாமல் போன என் பாட்டி

கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

--

ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..

எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்

உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..


.

பறவை மனசு..”எத்தினி வருஷம்ணே ஆச்சு நீங்க வந்து? ”

”அது ஆச்சு தம்பி பத்து வருஷம், அட நாள் கண்ணக்கெல்லாம் ஆரு பாக்கறா? எழுந்தோமா வேல செஞ்சோமா, கிடைக்குற கேப்புல பயலுங்ககூட விளாண்டோமான்னு பொழுது போகுது. மொதல்ல உனக்கும் அப்படித்தான் இருக்கும், போகப் போக பழகிடும். ”

”நான் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லண்ணே.”

”அட நான் மட்டும் என்னப்பா? வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா? பொலம்பறத நிறுத்து. அது மனசுல சீக்கு புடிச்சுடும். எது கிடைச்சிதோ அத அனுபவி. அங்கிட்டும் இங்கிட்டும் வித்தியாசம் ஒன்னுமில்ல. படிச்சவன் நீயி, உனக்கு நாஞ் சொல்லித்தரவேண்டியதா இருக்கு பாரு.”

”எந்த ஊர்ணே நீங்க?”

” பேச்ச வெச்சி கண்டுபிடிக்க முடியலல்ல?, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற? பீடி குடிக்கிறியா? ”

”பழக்கமில்லண்ணே”

”நல்லதுதான். மருவாதைக்கு சொல்றதா இருந்தா வேணாந்தம்பி, எனக்கு அப்படியெல்லாம் வயசு வித்தியாசம் பாக்கத்தெரியாது. என்னப்பொறுத்தவரைக்கும், படிச்சவன சார்னு சொல்லுவேன் அவ்வளவுதான்”

”பத்து வருஷமா இருக்கீங்களே, எப்படின்ணே முடிஞ்சிது.?”

“எல்லாம் ஒண்ணுதான் தம்பி. இடையில ஒரே முறை போயிருக்கேன். வீட்டுல யாருமே சேர்த்துக்கல, சர்தாம் போங்கடான்னுட்டு ஒரு ஓட்டல்ல ரூம் எடுத்தேன். அட அப்பத்தான் எதோ மனசுக்குத் தெரிஞ்சிது. சட்டுனு வெளில வந்து ப்ளாட் பாரத்துல படுத்தேன். இடுப்புத்துணி நவுந்தது தெரியாம நிம்மதியா தூங்னினேன்னா பாத்துக்க.”

”புரியலண்ணே”

” அட இங்க நாலு செவுத்துக்குள்ள இருக்கறோம் ஜெயிலுங்கறான். வெளில அந்த நாலு செவுத்தையும் பார்டர்ன்னுட்டு நாடுங்கறான். மொதல்ல எனக்கும்தான் புரியல மார்ல அடிச்சிக்கிடு அழுவேன். ஆனா அந்த ஓட்டல்ல கதவெல்லாம் தாப்பாப் போட்டு ரூமுக்குள்ள இருக்கும்போதும் செல்லுல அடச்சி வெச்சிருக்கறாமாதிரியே இருந்துதுப்பா. ”

”நீயே சொல்லு விடுதலைன்னா என்ன? உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம்? நல்லா ரோசனை பண்ணு, வெளில உன்ன ஏமாத்த பெருங் கும்பலே இருக்கு. ஆனா இங்க நீ ஏமாத்துவியான்னுதான் பார்த்துகிட்டே இருக்கான். இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான். கடசி முச்சூடும் இங்கயே என் காலம் கழிஞ்சா சந்தோஷந்தான். அட எனக்கு விடுதலையே வேணாந்தம்பி“

நான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.

.

ம்ருதுளா..இடதும், வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை .

நன்றாய்
திரும்பி நின்று
வலதை இடமாகவும்..
இடதை வலமாகவும்..

மாற்றிவிட
முனைந்த போதும்

இடதும் வலதுமாகவே
இருக்கிறது
வாழ்க்கை.


எழுதி முடித்து நிமிர்ந்தபோது, அனந்தன் காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தான்.

”வாட்ஸ் ஹாப்பனிங்? கதையா? கவிதையா?”

”ரெண்டும் இல்ல நேரக் கொலை.”

”எப்பவுமே நக்கல்ஸ்தாண்டா உனக்கு. சரி. ஃப்ரீயா? ம்ருதுளா ஷாப்பிங் போலாம்னு சொன்னா .”

”ஹாங்..” என்று உதடுகள் சொன்னாலும் உள்ளுக்குள் மனம் குமுறிக்கொண்டிருந்தது.

முகத்தை படிச்சிட்டான் போல.. ”என்னடா ரொம்ப ஃபீல் ஆயிட்டயா?” அவன் கவிதையை வைத்தே கேட்டிருப்பான்..

”ஆனந்த் வந்த விஷயம் சொல்லு ப்ளீஸ்..”

”யேய் கூல்டவ்ன் யார்.. லவ்ன்னா இதெல்லாம் சகஜம். இதுக்குப்போய் இவ்ளோ எக்ஸ்ப்ரஷன் வேஸ்ட் பண்ற. ஓக்கே நான் நாளைக்கு காலைல மும்பை போய் அங்கேர்ந்து நைட் லாஸ் ஏஞ்சல்ஸ் போறேன். ஈவ்னிங் நானும் ம்ருதுளாவும் ஷாப்பிங் போறோம். நீ வற்றியான்னு கேட்கலாம்னுதான் வந்தேன்.”

நான் ஆனந்தை முறைத்தேன். எல்லாத்துக்கும் இவனே காரணம்.

--

எனக்குப் பிடித்ததை
நீ சொல்வாய் என
நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன்

உனக்குப்பிடித்ததை நான்
சொல்வேனென நீயும்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்

காதலுமின்றி நட்புமின்றி
காரணமில்லாத உரையாடல்கள்
போதுமாயிருக்கிறது
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே

”ரொம்ப அழகா எழுதறீங்களே, எப்படி இதெல்லாம் உங்களுக்கு எழுத முடியுது?” ம்ருதுளா அவளுக்காய் நானெழுதிய குறிப்பென அறியாது அதை வெறும் கவிதையாகவே வாசித்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே

”அது .. வந்து.. ஒரு ஃபீலிங் ம்ருதுளா எப்படி சொல்றது, ரசிச்சி பார்க்கும் சில விஷயங்களின் வெளிப்பாடுதான் இந்த மாதிரி. உதாரணம் உங்க பேர் மாதிரி சிலது கேட்கும்போதே உள்ள இடறும்.”

அவள் கண்களை இன்னும் அகல விரித்து என்னைப் பார்த்தாள். என் பேர் அவ்ளோ அழகா? என்ற சுய நலக்கேள்வியை மட்டும் அந்த பார்வை கேட்டது.

”இந்த கவிதை நோட்டை நான் எடுத்துட்டுப்போய் முழுசும் படிச்சிட்டு தரட்டுமா?”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாது முழித்தேன். காதல் கவிதைகள் அதில் நிறைய இருக்கிறது. ஆனால் நான் எந்த பெண்ணையும் காதலித்ததில்லை. ம்ருதுளா மட்டுமே என்னை மிகவும் சலனப்படுத்தியவள். வெறும் கவிதையாய் படிப்பாளா? இல்லை, ’உங்க லவ்வர் ரொம்ப லக்கிங்க அவங்க பேர் என்ன? எனக்கு இண்ட்ரட்யூஸ் பண்ணி வைய்யுங்களேன்’ என்று கேட்டுவிடுவாளோ? என்று தோன்றியது. ஆனால் அழகான பெண்கள் அருகிலிருக்கும்போது மனசும், நாக்கும் நாம் சொல்வதை எங்கே கேட்கிறது?.

”ஓ தாராளமா? படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.”

”தேங்க் யூ’” அந்த யூ’வை கொஞ்ச நேரம் இழுத்தவள் எப்போது பை’ சொன்னாள் எப்போது கிளம்பிச்சென்றாள் என்ற எதுவும் தெரியாது அப்படியே அமர்ந்திருந்தேன்.

மனசு வேகமாய் எழுதத் தொடங்கியது..

நீ கொடுத்துச்
சென்ற
வளையலை போலவே
விட்டுச்சென்ற
ரோஜாவை போலவே
என்னையும்
விட்டுச்சென்றாய்
உன் நினைவுகளுக்கு
மத்தியில்

தனியாய்.....

---

”சொல்லுங்க ம்ருதுளா. எதுக்கு இங்க வரச்சொன்னீங்க?”

வைதேகி ஃபால்ஸ்க்கு இவளுடன் நான் மட்டும் வந்ததை நம்ப முடியாமல் அவள் முகத்தை விலக்கி பின்னால் பார்த்தேன். மாட்டு வண்டி மட்டுமே தத்தித் தத்தி உருண்டு செல்லும் அந்த மணல் வழியில் என்னையும் அவளையும் சேதாரமில்லாது, கீழே தள்ளி மானத்தை வாங்காது கொண்டுவந்து சேர்த்த அந்த பச்சை நிற டீசல் புல்லட் எங்கள் இருவருக்கும் சாட்சியாய் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது.

”ரொம்ப அழகா இருக்குங்க இந்த இடம். கொஞ்சம் தண்ணில போய் நிற்கலாமா?”

”அய்யய்யோ வேண்டாம் ம்ருதுளா ரொம்ப வழுக்கும். இந்த பாறைல உட்கார்ந்துகிட்டு அப்படியே கால் நனைச்சிக்கிங்க.”

நான் திரும்பவும் ”சொல்லுங்க ம்ருதுளா. எதுக்கு இங்க வரச்சொன்னீங்க?”

”கரெக்‌ஷன்’ இங்க போலாம்னு சொன்னேன்.” சிரித்தாள். நானும் சிரித்துக்கொண்டே ”சரி விஷயம் சொல்லுங்க.”

”இல்ல இந்த. மாதிரி சூழ் நிலையில உங்களுக்கு என்ன தோணும்? ஐ மீன் என்னைப் பத்தி என்ன தோணும்? யாருமில்லாத இந்த ஆற்றங்கரையில், ஜிலீரென்ற தண்ணீரில் கால் நினைக்கும் பரவசத்தில், பறவைகளின் ஒலிகளில் ஒரு கவிஞனுக்கு என்ன தோன்றும்? என்னை மாதிரி ஒரு பொண்ணு அருகிலிருக்க என்ன தோணும்? அத தெரிஞ்சிக்க எனக்கு ஆசை. அதனாலதான் இங்க போலாம்னு உங்கள கூட்டிகிட்டு வந்தேன்.”

நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா? உனக்கு சப்ஸ்ட்டூட்டே கிடையாது, ஏதோ ஒரு தமிழ் படத்தின் நாயகியைப்பார்த்து சொல்லும் வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது.

நான் தயங்குவதைப்பார்த்து..

”ப்ளீஸ்” மீண்டும் அந்த ஸ்ஸை இழுத்தாள் எனக்கு வாயில் வரிகள் விழ ஆரம்பித்தது.

ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்
தேடிச்சிலர்
வந்திடினும்
நாடகம் நடத்திடுவோம்
நாமங்கு இல்லையென்று
ஒரு நாளேனும்
ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்.

”வாவ்..” அவள் செல்போனை எடுத்து டயல் செய்யாமலேயே, ”ஹேய்.ஆனந்த். நான் சொல்லல ஹி ஈஸ் எ ஜீனியஸ்னு இப்ப கேட்டீங்கள்ல இங்க வாங்க.” நான் முழித்தேன் யார் ஆனந்த்? இவள் யாரைக் கூப்பிடுகிறாள்? என்ன நடக்கிறது இங்கே? ஜீன்ஸ் பேண்ட்டில் மண்ணோடு ஒருவன் வந்தான். வடக்கூர்காரன் போல.

”ஹாய் ஐ ஆம் ஆனந்த். ம்ருதுளாவோட பாய் ஃப்ரென்ட். நானும் உங்க கவிதைகளுக்கு இப்ப ரசிகனாயிட்டேன். வெரி நைஸ் டு மீட் யூ” என்றான் ”ஆனா எப்படி பாஸ் கீழ விழாம வண்டி ஓட்டிக்கிட்டு வந்தீங்க?”

பாய் ஃப்ரெண்ட்?? எனக்கு ஏனோ புறா நினைவு வந்தது.

”எங்க லவ்வுக்கு உங்க உதவி தேவை,” ஆனந்த் ஆரம்பித்தான். புறாவேதான் கண்ணெதிரே நிற்கும் இருவரின் பிம்பங்களைத்தாங்கிய மனசின் நினைவு சிலேட்டை உள்ளுக்குள் அழித்துக்கொண்டிருந்தேன். ம்ருதுளா தவிர மற்றெல்லாமும் அழிந்து கொண்டிருந்தது.

--
”சாரி ஆனந்த் நான் வரலை. ஈவ்னிங் ஃபளைட் பிடிச்சி டெல்லி போய் ரிஷிகேஷ் போறேன். குருஜி வரச்சொல்லி இருக்கார்.”

”ஹும்ம் சாமியாராவே ஆயாச்சா? ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்ல, கவிதை எழுதற நேரத்துக்கு க்ராஸ்கட் ரோட் போய் நின்னிருந்தா, இன்னேரம் ரெண்டு கொழந்தையோட செட்டில் ஆயிருக்கலாம்.”

ஏழாவது ஸ்ட்ரீட் எக்ஸ்டன்ஷனில் ரயில்வே க்ராஸ் தாண்டி, ரூட்ஸ் கம்பெனி இடப்புறத்தில் சங்கனூரில் என்,ஆர்.ஐ வாலிபர் வெட்டிக்கொலை என்ற செய்தி தினசரிகளில் வருவதை விரும்பாது, மூக்கின் நுனியை கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ’ஷாந்தமு லேதா சவுக்கியமு லேது’ச்ச என்ன தியானம் பண்ணினாலும் இந்த பாழாய்ப்போன சினிமா டயலாக் எங்கயாவது நினைவுக்கு வந்துவிடுகிறது.

”ஓகே சாமியார். அப்ப உங்க இஷ்டம். நானும் இப்பல்லாம் கவிதை எழுதறேன் தெரியுமில்ல அதுல ம்ருதுளாவுக்கு ரொம்ப சந்தோஷம்..”

நான் அவனை வெறித்துப்பார்த்தேன். ”அப்படியா என்ன கவிதை?”


கூடலுக்கு பின்னுள்ள
நிமிடங்கள் ஞானி ஆக்குகின்றன
பேரழகியாய் இருந்தாலும்
வெறும் பெண்ணாய் பார்க்க முடிகிறது..

கையில் தடி கொண்டு, காவி உடையில்
பெண் போகம் வேண்டாம் என்று சென்ற
முனிவரிடம் சொல்ல ஆசை..

உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்...

இது இறை கட்டளை.ரிஷிகேஷை கேன்சல் செய்துவிட்டு க்ராஸ்கட் ரோட் போய்விடலாமா? மனசு கேட்டுக்கொண்டிருந்தது.


--