பலா பட்டறை: மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.

மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.


.


ஹைய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே? என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதாயின் வெட்டென மற’ என்பதெல்லாம் ஒருவேளை கொடுக்காப்புளிக்குவேண்டுமானால் சரியாக வரும். அந்நிய மொழிகள் செவி தட்டும் ரயில் பயணங்களில், இரண்டடி கேப்பில் எதிரில் அழகான பெண்கள் இருந்தால் எந்த ஜாடையில் குழந்தை பிறக்கும் என்பது வரைக்கும் மனசு ப்ராயாணிக்கிறது. 

’க்றீச்சென்று..’ ரயில் நின்ற ஸ்டேஷன் இந்த ரயிலுக்கானதல்ல என்பது மக்களின் பரபரப்பிலிருந்து தெரிந்தது. 

உமா கண்களாலேயே என்ன? என்று கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினேன். மெதுவாக காதில் மாட்டி இருந்த ஹெட்போனை எடுத்தாள். அழகான வளையம் ஒன்று அருந்தவம் புரிந்து அவள் காதில் கம்மலாகி இருந்தது. ஒற்றை ஆள்காட்டி விரலில் பின்னப்படாத தலைமுடியை காதோரம் தள்ளிவிட்டாள். எனக்கு சுட்டுப்போட்டாலும் வராதென்றாலும் ஏனோ இவளை ஒரு கவிதையில் வர்ணித்து எழுதவேண்டும் போலிருந்தது. 

சரியாக என் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி புளிச் என்று பான்பராக்கை ரயில் பெட்டிக்கும் ப்ளாட்பார்மிற்கும் இடையில் துப்பியவன் என் கையை சட்டென்று நான் எடுத்ததைப் பார்த்து ’க்யா ஹுவா?’ என்றான். முழங்கைக்கு அருகே இருந்த ப்ளாஸ்த்திரியைப் பார்த்து அவன் கேட்டான் என்று நினைத்துக்கொண்டே ஏதோ நினைவில் ‘ஒன்னுமில்லை, சின்ன உவாதான் என்றேன்’

’க்ளுக்’ என்று சிரித்தாள் உமா. ’பாகல்’ என்று தலையில் அடித்துக்கொண்டு பான்பராக் நகர்ந்ததும்தான் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்தது. அவள் சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. 

’சான்ஸே இல்லை’ என்றாள் உமா. என்னுடைய ஹிந்திதானே என்று நான் கன்ஃபர்ம் செய்துகொள்ளவில்லை. ஒரு பெண்ணை சிரிக்கவைப்பது சுலபமில்லை. அதுவும் யாரென்றே அறியாத ஒரு ரயில் ஸ்னேகத்தில், அதுவும் ஒரு அழகான பெண்ணை...

’இஃப் யூ டோண்ட் மைண்ட்’ என்று அவள் காலை எடுத்து என் பக்கத்தில் நீட்டிக்கொண்டாள். மிக அழகான பவழமல்லி போன்ற பாதங்களும் மெல்லிய சிகப்பு நிற நகப்பூச்சுகளுமாய். மெட்டி இல்லாத விரல்கள் தலைதீபாவளி யாருக்கு என்று கேட்டுவிடலாமா என்று தோன்றியது? ஹும்ம் கேட்டு? சொல்லுவதற்கில்லை இவள் புருஷன் கண்டிப்பாக வழுக்கைத் தலையனாகத்தானிருக்கவேண்டும். ச்சே இதென்ன இப்பொழுதெல்லாம் தாலியே ஒரு பெரிய விஷயமில்லை நான் ஏன் மெட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,

பச்சை மிளகாயை வதக்கியோ எண்ணெயில் பொறித்தோ உப்பு போட்டு சைடாக கொடுத்து சமோசா விற்றுக்கொண்டு வந்தவனை நிறுத்தி ஆளுக்கு இரண்டு சமோசா வாங்கிக்கொண்டோம். ஏதோ ப்ரச்சனை ரயில் இன்னும் அரை மணியோ ஒரு மணி நேரமோ தாமதமாகக் கிளம்பும் என்று சமோசா விற்பவர் மூலம் தெரியவந்தது. 

சின்னச் சின்னக் கடிகளாக சமோசாவை தின்ன ஆரம்பித்தாள். 

டது பக்கக் கீழுதட்டில் ஓட்டி இருந்த சிறிய துகளை தட்டிவிட சைகையாக என் உதட்டில் வைத்துக் காட்டினேன். புரியாமல் என்னைப் பார்த்தாள் என்ன என்றாள் தலையை ஆட்டி, நான் கை நீட்டி மெதுவாகப் பட்டும் படாமல் அந்தத் துகளைத் தட்டிவிட்டேன். ’ஏய் இவ்ளோதானா?’ என்று அதட்டிவிட்டு ’ஒரு சிகரெட் இருக்காடா, தம் அடிக்கலாம்’ என்று கேட்டாள் ஸ்வா..

அழகான பிங்க் நிற தாவணியில் மங்களகரமாக ஒரு பிகர் தம் அடிப்பதைப் பார்த்தால் எந்த ஆண்மகனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். ஸ்வாவுக்கும் தெரியும். ஆனால் இதையெல்லாம் சொல்லி இவளிடம் ஆர்க்யூ பண்ணமுடியாது.

’வேண்டாம் எனக்குத் தலை வலிக்குது நோ ஸ்மோக்கிங் ப்ளீஸ்’ என்றேன். 

’பயந்துட்டியா’ என்று சிரித்தாள். 

’இல்ல சீரியஸாவே மைக்ரேன் வர்ற மாதிரி இருக்கு ஸ்வா.’ 

’தென் ஓக்கே’ என்று மீண்டும் சமோசாவில் ஆழ்ந்துவிட்டவளைப் பார்த்தேன். எனக்கென்று வாய்த்த இவளைப் போல வேறு யாருக்காவது கேர்ள்ப்ரெண்ட் இருப்பார்களா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். காதலுக்கென்று ஒரு பார்முலா இருக்கிறது. பொய் அதில் ப்ரதானம். ஊடல் அதை முன்னெடுக்கும் ஒரு ஊர்தி. இவளுக்கு எல்லாமே தடாலடி. முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு வந்து மிஸ்டர் சந்திரமெளலி கணக்காக என் அப்பாவை ஃப்ரெண்ட் ஆக்கிக்கொண்டு சென்ற ராட்சசி. அசால்ட்டாக ப்ரென்ச்கிஸ் அறிமுகப் படுத்தி ’ஹாப்பி பர்த் டேடா’ என்று ஹார்ட் அட்டாக்கிற்கு சமீபம் என்னை கொண்டு சென்றவள். ’லட்சுமிகரமா இருக்காடா, லவ் பண்றியா? படிப்பு முடிஞ்சி வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கோ.’ என்று அம்மா நம்பும் அளவுக்கு அப்புராணியாக வந்தவள். இவள் தம் அடிப்பதை என் அப்பா பார்த்தால் ’ரொம்ப வேண்டாம்மா உடம்புக்குக் கெடுதல்’ என்று சொல்லக்கூடும் ஆனால் அம்மா? 

’ப்ரம்மம் ஒக்கட்டே’ என்று கொலுவிற்கு வந்து பாடிய ஸ்வா ஏறக்குறைய மருமகளாகவே ஆகிப்போனாள். எனக்குத்தான் உதறலெடுத்தது. பிரியும் வரை உதறல் நிற்கவில்லை. பிரிந்த கணம் முதல் பார்க்கும் பெண்ணிடமெல்லாம் அவள் நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

என்னுடைய கோழைத்தனத்தின் மை கொண்டு எழுதப்பட்ட கடந்த கால வரலாற்றில் ஸ்வா ஒரு தவிர்க்க முடியாத அத்யாயம். அந்தக் கோழைத்தனம் ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்க்கும்போது மீண்டும் வெளியே வரும் நான் கோழை இல்லை என்று நிரூபிக்க எத்தனிக்கும். வித்தைகள் காட்டும். வசீகரிக்க ப்ரயத்தனப்படும். இன்றைக்கு இதோ எதிரில் இந்தப் பெண் உமா.

லையை சிலுப்பிக்கொண்டேன்.

’என்ன ஆச்சு? காரமா இருக்கா? தண்ணிவேணுமா?’ 

வேண்டாம் என்று தலையை ஆட்டினேன்.

;சாரி, கேக்க மறந்துட்டேன். ஆமா, உங்க பேரென்ன?’என்று கேட்டாள் உமா. 


...........


..தொடரும்...


:))))

பாகம் ஒன்று  - விதூஷ்!

.

6 comments:

நேசமித்ரன் said...

ஷங்கர் , கலக்குறீங்க போங்க ! :))

Unknown said...
This comment has been removed by the author.
மணிஜி said...

நான் எதிர்பார்த்த அதே டோன்...சூப்பர் ஷங்கர்... அடுத்தது யார்?

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Suresh Subramanian said...

கதை நன்றாக செல்கிறது... .. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

ஜோதிஜி said...

வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்