பலா பட்டறை: 10/01/2011 - 11/01/2011

மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.


.


ஹைய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே? என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதாயின் வெட்டென மற’ என்பதெல்லாம் ஒருவேளை கொடுக்காப்புளிக்குவேண்டுமானால் சரியாக வரும். அந்நிய மொழிகள் செவி தட்டும் ரயில் பயணங்களில், இரண்டடி கேப்பில் எதிரில் அழகான பெண்கள் இருந்தால் எந்த ஜாடையில் குழந்தை பிறக்கும் என்பது வரைக்கும் மனசு ப்ராயாணிக்கிறது. 

’க்றீச்சென்று..’ ரயில் நின்ற ஸ்டேஷன் இந்த ரயிலுக்கானதல்ல என்பது மக்களின் பரபரப்பிலிருந்து தெரிந்தது. 

உமா கண்களாலேயே என்ன? என்று கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினேன். மெதுவாக காதில் மாட்டி இருந்த ஹெட்போனை எடுத்தாள். அழகான வளையம் ஒன்று அருந்தவம் புரிந்து அவள் காதில் கம்மலாகி இருந்தது. ஒற்றை ஆள்காட்டி விரலில் பின்னப்படாத தலைமுடியை காதோரம் தள்ளிவிட்டாள். எனக்கு சுட்டுப்போட்டாலும் வராதென்றாலும் ஏனோ இவளை ஒரு கவிதையில் வர்ணித்து எழுதவேண்டும் போலிருந்தது. 

சரியாக என் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி புளிச் என்று பான்பராக்கை ரயில் பெட்டிக்கும் ப்ளாட்பார்மிற்கும் இடையில் துப்பியவன் என் கையை சட்டென்று நான் எடுத்ததைப் பார்த்து ’க்யா ஹுவா?’ என்றான். முழங்கைக்கு அருகே இருந்த ப்ளாஸ்த்திரியைப் பார்த்து அவன் கேட்டான் என்று நினைத்துக்கொண்டே ஏதோ நினைவில் ‘ஒன்னுமில்லை, சின்ன உவாதான் என்றேன்’

’க்ளுக்’ என்று சிரித்தாள் உமா. ’பாகல்’ என்று தலையில் அடித்துக்கொண்டு பான்பராக் நகர்ந்ததும்தான் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்தது. அவள் சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. 

’சான்ஸே இல்லை’ என்றாள் உமா. என்னுடைய ஹிந்திதானே என்று நான் கன்ஃபர்ம் செய்துகொள்ளவில்லை. ஒரு பெண்ணை சிரிக்கவைப்பது சுலபமில்லை. அதுவும் யாரென்றே அறியாத ஒரு ரயில் ஸ்னேகத்தில், அதுவும் ஒரு அழகான பெண்ணை...

’இஃப் யூ டோண்ட் மைண்ட்’ என்று அவள் காலை எடுத்து என் பக்கத்தில் நீட்டிக்கொண்டாள். மிக அழகான பவழமல்லி போன்ற பாதங்களும் மெல்லிய சிகப்பு நிற நகப்பூச்சுகளுமாய். மெட்டி இல்லாத விரல்கள் தலைதீபாவளி யாருக்கு என்று கேட்டுவிடலாமா என்று தோன்றியது? ஹும்ம் கேட்டு? சொல்லுவதற்கில்லை இவள் புருஷன் கண்டிப்பாக வழுக்கைத் தலையனாகத்தானிருக்கவேண்டும். ச்சே இதென்ன இப்பொழுதெல்லாம் தாலியே ஒரு பெரிய விஷயமில்லை நான் ஏன் மெட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,

பச்சை மிளகாயை வதக்கியோ எண்ணெயில் பொறித்தோ உப்பு போட்டு சைடாக கொடுத்து சமோசா விற்றுக்கொண்டு வந்தவனை நிறுத்தி ஆளுக்கு இரண்டு சமோசா வாங்கிக்கொண்டோம். ஏதோ ப்ரச்சனை ரயில் இன்னும் அரை மணியோ ஒரு மணி நேரமோ தாமதமாகக் கிளம்பும் என்று சமோசா விற்பவர் மூலம் தெரியவந்தது. 

சின்னச் சின்னக் கடிகளாக சமோசாவை தின்ன ஆரம்பித்தாள். 

டது பக்கக் கீழுதட்டில் ஓட்டி இருந்த சிறிய துகளை தட்டிவிட சைகையாக என் உதட்டில் வைத்துக் காட்டினேன். புரியாமல் என்னைப் பார்த்தாள் என்ன என்றாள் தலையை ஆட்டி, நான் கை நீட்டி மெதுவாகப் பட்டும் படாமல் அந்தத் துகளைத் தட்டிவிட்டேன். ’ஏய் இவ்ளோதானா?’ என்று அதட்டிவிட்டு ’ஒரு சிகரெட் இருக்காடா, தம் அடிக்கலாம்’ என்று கேட்டாள் ஸ்வா..

அழகான பிங்க் நிற தாவணியில் மங்களகரமாக ஒரு பிகர் தம் அடிப்பதைப் பார்த்தால் எந்த ஆண்மகனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். ஸ்வாவுக்கும் தெரியும். ஆனால் இதையெல்லாம் சொல்லி இவளிடம் ஆர்க்யூ பண்ணமுடியாது.

’வேண்டாம் எனக்குத் தலை வலிக்குது நோ ஸ்மோக்கிங் ப்ளீஸ்’ என்றேன். 

’பயந்துட்டியா’ என்று சிரித்தாள். 

’இல்ல சீரியஸாவே மைக்ரேன் வர்ற மாதிரி இருக்கு ஸ்வா.’ 

’தென் ஓக்கே’ என்று மீண்டும் சமோசாவில் ஆழ்ந்துவிட்டவளைப் பார்த்தேன். எனக்கென்று வாய்த்த இவளைப் போல வேறு யாருக்காவது கேர்ள்ப்ரெண்ட் இருப்பார்களா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். காதலுக்கென்று ஒரு பார்முலா இருக்கிறது. பொய் அதில் ப்ரதானம். ஊடல் அதை முன்னெடுக்கும் ஒரு ஊர்தி. இவளுக்கு எல்லாமே தடாலடி. முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு வந்து மிஸ்டர் சந்திரமெளலி கணக்காக என் அப்பாவை ஃப்ரெண்ட் ஆக்கிக்கொண்டு சென்ற ராட்சசி. அசால்ட்டாக ப்ரென்ச்கிஸ் அறிமுகப் படுத்தி ’ஹாப்பி பர்த் டேடா’ என்று ஹார்ட் அட்டாக்கிற்கு சமீபம் என்னை கொண்டு சென்றவள். ’லட்சுமிகரமா இருக்காடா, லவ் பண்றியா? படிப்பு முடிஞ்சி வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கோ.’ என்று அம்மா நம்பும் அளவுக்கு அப்புராணியாக வந்தவள். இவள் தம் அடிப்பதை என் அப்பா பார்த்தால் ’ரொம்ப வேண்டாம்மா உடம்புக்குக் கெடுதல்’ என்று சொல்லக்கூடும் ஆனால் அம்மா? 

’ப்ரம்மம் ஒக்கட்டே’ என்று கொலுவிற்கு வந்து பாடிய ஸ்வா ஏறக்குறைய மருமகளாகவே ஆகிப்போனாள். எனக்குத்தான் உதறலெடுத்தது. பிரியும் வரை உதறல் நிற்கவில்லை. பிரிந்த கணம் முதல் பார்க்கும் பெண்ணிடமெல்லாம் அவள் நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

என்னுடைய கோழைத்தனத்தின் மை கொண்டு எழுதப்பட்ட கடந்த கால வரலாற்றில் ஸ்வா ஒரு தவிர்க்க முடியாத அத்யாயம். அந்தக் கோழைத்தனம் ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்க்கும்போது மீண்டும் வெளியே வரும் நான் கோழை இல்லை என்று நிரூபிக்க எத்தனிக்கும். வித்தைகள் காட்டும். வசீகரிக்க ப்ரயத்தனப்படும். இன்றைக்கு இதோ எதிரில் இந்தப் பெண் உமா.

லையை சிலுப்பிக்கொண்டேன்.

’என்ன ஆச்சு? காரமா இருக்கா? தண்ணிவேணுமா?’ 

வேண்டாம் என்று தலையை ஆட்டினேன்.

;சாரி, கேக்க மறந்துட்டேன். ஆமா, உங்க பேரென்ன?’என்று கேட்டாள் உமா. 


...........


..தொடரும்...


:))))

பாகம் ஒன்று  - விதூஷ்!

.

ஏழாம் அறிவு!

போதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர்ந்து  சீனாவின் ஒரு எல்லையோர கிராமத்தை அடைகிறார். அங்கே செல்லும்போது அவர் மட்டும்தான் சிகப்பு உடை அணிந்திருக்கிறார். மற்ற மக்கள் சாதாரண கலரிலேயே உடை அணிந்திருக்கிறார்கள் (குறியீடாக இருக்கலாம்) 

அந்த கிராம மக்களை எப்படி போதி தர்மர் கவர்கிறார். ஷாலின் டெம்பிள் எப்படி இவரை கடவுளாக வணங்குகிறது. காஞ்சீபுரம் இட்லி தெரிந்த தமிழர்களுக்கு போதிதர்மாவை ஏன் தெரியவில்லை? சரி, 1600 வருடங்களுக்கு முன்பாக அவர் இங்கிருந்து கொண்டு சென்ற குங்பு கலை சீனாவில் பேமஸ் ஆன அளவிற்கு ஏன் இங்கே ஆகாமல், இட்லியும், பட்டுப்புடவையும் அதை அமுக்கிவிட்டது? விடை தேடத்துவங்குகிறார்கள் தமிழ் உணர்வு, தமிழன், மஞ்சள், வேப்பிலை பேட்டண்ட் இத்யாதி இத்யாதி..

வெறுமனே போதிதர்மர் தமிழர், அதனால் மக்களே, நாமதான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கண்டுபிடித்தோம், வாங்க பழகலாம் என்று படம் எடுத்தால் மக்கள் பார்ப்பார்களோ? என்னமோ? என்று போதி தர்மாவின் டிஎன்ஏ, சூர்யாவின் 6பேக், பாம்பே சர்க்கஸ், ஸ்ருதிஹாசன், தமிழை குரங்கு என்று திட்டும் ப்ரொபசரை கெட்ட வார்த்தையில் திட்டும் ஸ்ருதி (செம அப்ளாஸ் பாஸ்) புக்கெட் தீவு சாங், குத்து சாங், குங்பூ பைட், கிராபிக்ஸ், பறக்கும் கார்கள் என்று உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குக் கொடுத்த நோட்டீஸ் போல இறங்கி வந்து அடி அடி என்று அடித்திருக்கிறார்கள். 

பொதுவாக ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ரஷ்யாவை சகட்டுமேனிக்கு கிரிமினலாக்கி ஹீரோ அவர்களை அழிப்பது போல படங்கள் பார்த்திருக்கிறோம். அது கொரியா மற்றும் வியட்நாமாகக்கூட பரிணாம வளர்ச்சிகள் அவ்வப்போது அடைந்திருக்கிறது. நமது தமிழ் படங்களில் கேப்டன் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி என்று காட்டப்படும் திடகாத்திரவில்லனை பக்கம் பக்கமாக வசனம் பேசி தலைக்குமேலே காலை எத்தி உதைத்து தாய் நாட்டைக் காப்பாற்றி இருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வில்லன் சீனா. எனவே குங்பூ மற்றும் சிட்டி ரொபோவிற்கு கொஞ்சம் கம்மியாக வித்தைகள் தெரிந்த சீன வில்லன். நோக்கிக்கோ என்று நோக்கு வர்மத்திலேயே நோக்கி நோக்கி நொங்கெடுக்கிறார்.

அப்புறம் ஸ்ருதி ஹாசன். நல்ல வரவு. சொந்தக்குரலில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பா அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் பாலீஷ் போட்டுப் பேசி இருக்கிறார். ஒரு அழகான அழுகைக் காட்சியும் அவருக்கு இருக்கிறது. பாடல்கள் என்று நாம் நினைக்கும் போதே ஆலம்பனா நான் உங்கள் அடிமை என்றவாரே உடனே வஞ்சனை இல்லாமல் வருகிறது. சூர்யா கமல் சார் பெண் என்று பட்டும் படாமல் ஜோடி போட்டு டூயட் பாடி இருக்கிறார்.

இன்னும் பல விஷயங்களை நீங்கள் தியேட்டரில் சென்று காணலாம்.

அவ்ளொதான் பாஸ் இந்தப் படம் பற்றிய பகிர்தல். மிச்ச மீதியெல்லாம் மற்ற சினிமா விமர்சன ஜாம்பவான்கள் எழுதுவார்கள். என்னதான் எழுதப்போறாங்கன்னு நானும் படிக்க ஆவலோடு இருக்கிறேன். :)


முடிவாக : 

அப்புறம் ஸ்டிவன் ஸெகல் என்று ஒரு குடுமி வைத்த ஹாலிவுட் நடிகர் இருக்கிறார் வெறும் கைகள் கொண்டு அவர்போடும் சண்டை அவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக தேவையான இடங்களில் மட்டும் நிச்சயம் இடம்பெறும் அது எனக்குப் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். அதற்காகவாவது அவர் போதி தர்மருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.


சூர்யா போதி தர்மர் வேடத்திற்கு கச்சிதமாக உழைத்திருக்கிறார். படமாக்கிய விதம் மிக அருமை. சிறிது தாமதமாகச் சென்றாலும் இந்தக் காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.

இந்தப் படத்திற்கான ஒரு பேட்டியில் படம் பார்த்துட்டு வர்றவங்களுக்கு படம் மனசில நிக்கனும் என்று சூர்யா சொல்லி இருந்தார். ஆமாம் எனக்கு போதி தர்மரைப்பற்றி அறிந்துகொள்ள ஷாலின் டெம்பிளும், 36சேம்பரும் தராத ஒரு ஆவலை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காகவாவது ஏழாம் அறிவுக்கு நன்றி!

.

மங்காத்தா.. (சவால் சிறுகதை) - 2
முதலில் அந்த இரண்டு துண்டு சீட்டு செய்திகளையும் பார்த்தபோது எனக்கு கோவம் வந்தது. விஷ்ணு என் கையில் மாட்டினால் அவனை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று நினைத்தபோதே போன் அடித்தது. அவன்தான். குரலில் எதுவும் வித்தியாசம் காண்பிக்காது அலோ என்றேன்..

கோகுல் சார் நான் விஷ்ணு

சொல்லுய்யா மாகாவிஷ்ணு என் கிட்டயே டபுள் கேமா?

என்ன சார் எனி ப்ராப்ளம்? தெளிவாத்தானே எழுதி அனுப்பி இருக்கேன். கையெழுத்துப் புரியாமப் போயிடக்கூடாதுன்னு ப்ரிண்டே எடுத்து அனுப்பி இருக்கேனே?

நல்லா காட்றியேப்பா பிலிமு. தவறானக் குறியீட்டக் குடுத்திருக்கேன்னு ஒரு சீட்டு இருக்கே அவ்ளோ கேனையனா நானு?

சார் நல்லாப் படிங்க அது எஸ்.பி கோகுல் நீங்க எம் ஆர் கோகுல் ஆனா உங்க உண்மையான பேரு இதுல சம்பந்தப்படக்கூடாதுன்னுதானே எல்லாருக்கும் கோகுல்னு பேரு வெச்சி மூவ் பண்றோம். ஏன் கன்ப்யூஸ் ஆகறீங்க?

ஓஹோ அப்படியா? சரி வில்லங்கம் வரக்கூடாதுன்னு நீங்க சொல்றதெல்லாம் ஓக்கே, எஸ்பி கோகுலுக்கு தவறான மெஸ்ஸேஜ் கொடுக்கற மாதிரி எனக்கும் நாளைக்கு தரமாட்டீங்கன்னு என்னய்யா நிச்சயம்?  அப்புறம் அத என்கிட்ட அனுப்பவேண்டிய அவசியம் என்ன?

ஹா ஹா சார் எஸ்பி கோகுல் ஒரு கறுப்பு ஆடு சரியான தகவல் கொடுத்தா எல்லாருமே மாட்டிப்போம். எந்த ஆதாரமும் சிக்கக்கூடாதுன்னு ஒரு சாதாரண கிரிமினல் அஃபென்ஸ்லயே அவர மூவ் பண்ணுவோம். இந்த ட்ரான்பரன்ஸி எல்லாருக்கும் தெரியனும் அதுதான் ப்ரொபஷனல் எதிக்ஸ். இல்லைன்னா நாளைக்கு பேப்பர்ல நியூஸ் படிச்சி நீங்க பயப்படக்கூடாதுல்ல.

ஷேர் ட்ரேடிங்லாம் பண்ணி சின்ன வயசிலயே கோடிகள அள்றீங்க இதெல்லாம் தெரியாதா என்ன? சைலண்டா அதெல்லாம் சரியாகும் நீங்க டீலிங்க மட்டும் பாருங்க ஓக்கே.

எனக்கு ஏசியிலும் லேசாக வியர்த்தது. சரி இது புலிவால், த்ரில் இல்லாமல் என்ன வாழ்க்கை. கோடிகளில் காசு. ஓக்கே விஷ்ணு டன். 3சி. 

டன். கோகுல் சார். வெயிட் ஃபார் தி ரிசல்ட்ஸ்.

சீட்டை மறுபடி எடுத்துப்பார்த்தேன்..

S W H2 6F

டிவியை ஆன் செய்தேன். சரியாக 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறவேண்டிய பாட்டிங் பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் முதல் பால் Sixer, இரண்டாம் பால் Wicket, மூன்றாம் பால் Hit Wicket, நான்காவது பால் 2Runs ஐந்தாவது பால் Sixer, ஆறாவது பால் Four.

ச்சே ரெண்டு ரன்ல போச்சி சார். தலையில் கைவைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டே வந்த அஸிஸ்டென்ண்டைப் பார்த்து வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டேன்.

சரி விடுங்க அடுத்த மேட்ச்ல ஜெயிச்சிடலாம்.

வரும் ஆறுகோடியில் விஷ்ணுவிற்கு 1 கோடி கொடுக்கவேண்டும். 


-@- 

கைப்புள்ள.. (சுமாரான சவால் சிறுகதை)


மெதுவாக ஆழ இழுத்துப் பற்றவைத்த சிகரெட்டின் புகை உள்ளே நுழைந்து ஒரு தள்ளாட்ட மெஸ்ஸேஜை மூளைக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக சிகரெட் பிடிக்காமல் இருந்தது காரணமா?
.
ச்சே.., இதுவல்ல முக்கியம். மீண்டும் நேற்று இரவெல்லாம் படித்ததை நினைவுக்குக் கொண்டுவந்தேன். ம்ஹும்ம் ஒரு இழவும் கோர்வையாக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பேசாமல் விவசாயமே பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அவனவன் அமெரிக்கா சம்பளத்தையெல்லாம் விட்டுவிட்டு ஆடும் மாடும் வளர்க்க ப்ரோஜெக்ட்டோடு அலைகிறார்களாம். அய்யோ பாழாய்ப்போன நான் படித்ததெல்லாம் தவிர மற்றதெல்லாம் மண்டைக்குள் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறது?
.
கடைசி இழுப்பை சூடாக உதடு வேக அடித்துவிட்டு, எக்ஸாம் ஹாலில் முதலாவதாக நுழைந்தேன். காலியாக இருந்த ஹாலின் ஜன்னலோரத்தில் வெவ்வேறு நிறங்களில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த காகிதப்பூக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது என் டெஸ்கின் அடியிலிருந்து மொபைல் போன் சத்தம் கேட்டது.
.
என்ன இது? யாருடையது இது? இங்கே எப்படி வந்தது? ஒரு எழவும் புரியாமல், போனை ஆன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்த வேளையில் ..
திடீரென்று 4 பேர் உள்ளே நுழைந்து தாங்க் காட்.. என்றவாறே
”பாஸ் இது எங்க போன் தான். காலைல ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது மறந்து விட்டுட்டுப் போயிட்டோம்.” என்று சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.
.
படம் பேர் என்ன நண்பா?
.
”கைப்புள்ள..”
.
ஹும்ம் பேசாமல் விஸ்காமே எடுத்திருக்கலாமோ? என்று மீண்டும் மனசு விவசாயத்திலிருந்து சினிமாவிற்குத் தாவியது. சம்பாத்தியம் தாண்டி ஏதோ ஒரு அடையாளம் வேண்டியே நான் எனக்குள் அலைகழிகிறேன் என்று என் மேலேயே வெறுப்புவந்தது. மீண்டும் காகிதப் பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெறும் நிறத்தை மட்டும் கொண்டு வாசமுமில்லாமல் இருக்கும் இந்தச் செடி ஏன் முட்களைக் கொண்டு தன்னைக் காத்துக்கொள்கிறது என்று கேள்வி எழுந்தது.
.
ஒவ்வொருவராக எக்ஸாம் ஹால் நிரம்பத்துவங்கிய நேரம்..
.
எக்ஸ்கியூஸ்மி இன்னைக்கு என்ன எக்ஸாம்? என்று அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து என் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்த பெண்ணைக் கேட்டேன்.

ஒரு ஏலியனைப் பார்ப்பது போல என்னை அவள் பார்த்தாள். இந்த மாதிரி படிக்கிற பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாயிடலாமா? என் மனது அடுத்த கிளை தாவத் துவங்கியது!
-@-