பலா பட்டறை: 01/01/2012 - 02/01/2012

கீமோயணம்.. (போட்டியும், பரிசுகளும்)


.

கேன்சர் (புற்று நோய்) என்பது காதலன் காதலிக்கோ, காதலி காதலனுக்கோ ஒரு சோகப்பாட்டு பாடுவதற்கான பார்முலா என்றுதான் பல காலம் சினிமா என்னை நம்ப வைத்திருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவரின் அக்கா ஒரு ஜலதோஷம் கூட இல்லாமல் சாதாரணமாக இருந்து, கேன்சர் என்று கண்டறியப்பட்டு, உடலெல்லாம் சக்கையாகி ஆளே உருத்தெரியாமல் மாறிப்போய் கண்ணெல்லாம் இடுங்கி ”சாப்டியா சங்கர்?” என்று கேட்கும்போதுதான். இது நோய், வலி, கொடுமை எல்லாம் தாண்டி ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கி, நிலைகுலைத்து இறந்துகொண்டே மனதளவில் மற்றவரையும் கொல்லும் ஒரு நோய் என்பது புரிந்தது. 

கவனிக்க..

அவர் ஒரு பெண்மணி.

அவருக்கு புகைபிடிக்கும் பழக்கமோ, வேறு எந்தக் கெட்ட பழக்கங்களோ இல்லை. 

இத்தனைக்கும் அவரது கணவர் ஒரு பெருங்குடிகாரர். தினமும் குடிப்பவர்களுக்கான உடல் நிலை ப்ரச்சனைகள் தவிர்த்து பெரியதாக அவருக்கு எந்த பாதிப்புமில்லை. 

பிறகு ஏன் இவருக்கு வந்தது? என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குறிய கேள்விகள்..

பரம்பரையில் யாருக்காவது இருந்திருக்கலாம் உடன் பிறந்தவர்கள் 6 பேர் மற்ற அனைவரும் நலம். (சொந்த பந்த குடும்பத்தில் வேறு யாரும் அப்படி இறக்கவில்லை)

உணவுப் பழக்க வழக்கம் காரணமாக இருந்திருக்கலாம். ( கூட்டுக்குடும்பம். வீட்டில் எல்லோரும் சாப்பிடுவதையேதான் அவரும் சாப்பிட்டார். தீவிர சைவம் வேறு) 

எல்லோரும் போலத்தான் சென்னையில் வாழ்ந்தார். கார்ப்பொரேஷன் தண்ணீரைக் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தார்.

ஆனாலும் வந்தது.:((

சரி..

வருமுன்னர் காப்பதற்கு என்ன என்ன செய்யவேண்டும்.?

வந்தபின்னர் எப்படி அதை லகுவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.? 

திடீரென்று இப்படி ஒன்று வந்தால், இறப்பு நிச்சயமென்றால், பொருளாதார ரீதியில் என்ன பாதுகாப்பு திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

இதைப் பற்றிய உங்களின் குறைந்த பட்ச அறிவு என்ன?

தினசரிகளில் இப்படி பாதிக்கப்பட்டவர்களின் உதவி கேட்கும் விளம்பரம் கண்டு கடந்து போயிருக்கிறீர்களா? அல்லது குறைந்த பட்சம் 100/- ரூபாய் மணியார்டர் செய்திருக்கிறீர்களா?

உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்கலாம், நீங்களே அனுபவித்திருக்கலாம், இந்தக் கஷ்டம் என் எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைத்திருக்கலாம். அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் அனுபவத்தை, தெரிந்ததை. தெளிந்ததை நீங்கள் எழுத்தாகவோ, குறும்படமாகவோ பகிரலாம்.அது இதைப் பற்றி பெரியதாக தெரியாதவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்.  அதற்குப் பரிசுகளும் உண்டு. தெரிந்தவர்களிடமும் எழுதச் சொல்லுங்கள். விவரங்களுக்கு..

படத்தைச் சொடுக்கி விவரம் அறியவும்.இதை வைத்து கதையோ, கட்டுரையோ எழுதும் அளவுக்கு நான் வீரனில்லை என்பதால் கொழந்த என்ற நண்பரின் அனுபவத்தைப் படித்து நான் விக்கித்த அந்த இடுகைகளின் சுட்டிகளை உங்களுக்காக இணைத்துள்ளேன். தயவு செய்து படியுங்கள்.

Link 1


Link 2==

நேசத்திற்கு நீங்கள் தரப்போகும் ஆதரவிற்கு நன்றி!

**


புலிநகக் கொன்றை..
1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத் தெரிந்து தன் கண் முன்னே சேர்ந்து கலையும் தான் துவங்கிய ஒரு தலைமுறையின் நான்கு கட்டங்களை சப்த நாடியும் ஒடுங்கும் நேரத்தில் வலிய தன் உயிரைப் பிடித்துக்கொண்டு அசை போடும் நாவலாக விரிகிறது புலிநகக் கொன்றை.

ஆசிரியரான திரு.பி.ஏ.கிருஷ்ணன் முதலில் இந்த நாவலை ஆங்கிலத்தில் The Tiger Claw Tree என்ற பெயரில் எழுதிவிட்டு பின்னர் தமிழில் அவரே மொழி பெயர்த்திருக்கிறார். 

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயரென் கண்ணே - அம்மூவனார் (ஐங்குறுநூறு 142)

என்ற பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து இந்த நாவலின் பெயர் கிடைத்ததாகக் கூறுகிறார் ஆசிரியர்.

ஒரு சிகரெட்டினை முழுவதும் ரசித்துப் புகைக்க முடியுமா என்று தெரியவில்லை. முதலில் பற்றவைக்கும்போது கிடைக்கும் ஒரு பதட்டச் சுகம், முதலிழுப்பில் கிடைக்கும் ஒரு வெற்றிச் சுகம் பின்னர் தொடருகிறதா என்றால் இல்லை என்பேன். முதல் மூன்று இழுப்புகளுக்குப் பிறகு பில்டரிடம் முடியப்போகும் வரையில் பிடித்துத் தொலைக்கவேண்டுமே என்ற உந்துதல் தவிர்த்து வேறெதுவும் பெரியதாக அந்த சிகரெட்டினால் கிடைப்பதில்லை. ஆனால் முடியும்போது, பற்றவைக்கும்போது இருந்த அந்த வேகம், ஆவல் மீண்டும் துளிர்த்து, உதடு அந்தப் பஞ்சு நுனியில் நீளும் சூட்டில் துடித்தாலும் ஒரே இழுப்பில் மீண்டும் அந்த ஒரு சிகரெட்டின் முழு சுகத்தினை அனுபவிக்க மனம் முயல்கிறது. 

வாழ்வும் இதுபோலத்தானா? எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆத்திரம், அவசரம், அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளவேண்டுமென்ற வெறியில் ஆரம்பித்து காமம், கடவுள், தேடல் என்று அமைதியாகி, கடைசியில் இதை ருசிக்கவில்லையே அதை முடிக்கவில்லையே என்று கிடந்து தவியாய்த் தவித்து ஏக்கத்தில் அடங்கி உடல் நசுக்கி உயிர் பிரிகிறதா? பிரியும்முன்னர் அசை போடுகிறதா?

வாழ்வில் எல்லாமே சரியாக அதனதன் இடைவெளிகளில் தனது புதிரை சரியாக பொருத்தி, விடையை அவிழ்க்கும்போது வாழ்வது வரமாகத்தான் இருக்கிறது. விடை தெரியாத ஒவ்வொரு கணத்தினையும் நினைவுப் பிரேதங்களாகக் கையிலேந்தி இது எனக்கு சந்தோஷத்தையும், இது எனக்குத் துக்கத்தையும், இது எனக்கு எதையும் தரவில்லை என்று பிரித்துப்பார்க்க முடிகின்ற வாழ்வில், துக்கத்தட்டு தராசில் கீழிறங்கும்போது நிச்சயம் வாழ்வு அதுவும் நான்கு தலைமுறையை தன் கர்ப்பத்தில் துவங்கி முழுமையாகக் காணும் வாழ்வு வரமா? என்றால் பொன்னம்மாப் பாட்டி இல்லை என்பாள். அவள்தான் இந்தக் கதையின் துவக்கம்.

நூறு ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டிலிருந்து கிளை பிரித்துச் செல்லும் கதை விரிந்து பரவிச் செல்கிறது. இது கம்யூனிசத்தைத் தொடுகிறது, பெரியாரைத் தொடுகிறது, கட்டுப்பெட்டிக்காலக் காமத்தைச் சொல்கிறது, காந்தியைத் தொடுகிறது, தீவிரவாதத்தைத் தொடுகிறது, அரசு இயந்திரங்களின் குள்ளநரித்தனத்தைத் தொடுகிறது, போலீஸ் என்ற அதன் கோரப்பற்களைத் தொடுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்து சுதந்திரக் காலப் போராட்டங்கள், அது சரி, தவறென்ற வாதம், சுதந்திரம், காந்தி கொலை, பெரியாரின் புரட்சி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம், கம்யூனிஸ்டுகளின் பார்வை, கிரிக்கெட், ஆன்மீகத்துறவரம் என்று பல விஷயங்களைத் தொட கதையின் காலகட்டம் இலகுவாக உதவுகிறது. மேலும் அந்தந்தக் காலகட்டத்திற்கான பாத்திரங்கள் பேசும் வசனங்கள் மிகத் திறமையாகக் கையாளப் பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். அந்தக்காலத்திலே மாகாத்மா எங்கூருக்குவந்தப்ப என்ற கதைகளைக் கேட்டவர்கள்/சொன்னவர்கள், அல்லது நினைவுள்ளவர்களுக்கு இந்தக் கதை நிச்சயம் பல பழைய விஷயங்களைக் கிளறிவிடும். 

ஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வி அதனை திறமையாகக் கையாளுபவரின் வாதத் திறமையில் இருக்கிறதென்றே நான் நம்புகிறேன். பால்ய விவாகத்தில் ஆரம்பித்து, கலப்புத் திருமண கைம்பெண்ணிடம் கோறும் மறுமண விருப்பத்தில் முடியும் இந்தக் கதையில் முன்னும் பின்னுமாய் காலம் அலைக்கழிக்கப்பட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.     

இந்தப் புத்தகத்தில் எனக்குத் தைத்தது ஒரு பெண்ணின் நீண்டகால அவளால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வாழ்க்கையின் அவஸ்தையே. கம்யூனிஸமோ. தென்கலை ஐயங்காரோ, இறந்தகாலப் பதிவோ, காந்தியோ, திராவிடமோ ஏதோ ஒன்றைப் பற்றி உங்களிடம் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்பலாம். நீங்கள் இதை சிலாகிக்கலாம் அல்லது ஒதுக்கிவிடலாம். 

வித்தியாசமான வாசிப்பனுவம். எனக்குப் பிடித்திருக்கிறது. :))

புத்தகத்திலிருந்து..

கண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுடனான உரையாடலில் - 

நீங்க எந்தக் கட்சி?
(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா? அல்லது லும்பன் ரகமா? மார்க்ஸ் ரயில் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).

வடை விற்பவனுக்கு வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே என்று சொல்ல ஆசை

“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க? எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”

“எல்லாரையுமா மோசங்கறீங்க? சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”

“கம்யூனிஸ்ட்டா? உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில எம்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிமார்கள அந்த மயித்தப் பிடுங்கிடுவோம் இந்த மயித்தப் பிடுங்கிருவோம்னு சொல்லி பயமுறுத்தினாங்க. அவங்க கதவ இளுத்து மூடிட்டு மெட்ராஸை பார்க்க ஓடிட்டாங்க. நாங்க கொஞ்ச நாளு இவங்க சொல்றதக் கேட்டுகிட்டு மில்லே எங்க கைக்கு வரப்போகுதுன்னு கனாக் கண்டுகிட்டு இருந்தோம். குண்டிப்பீ கரசலாப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிது இவங்கள நம்பினா சாப்படற சோறும் தண்ணியும்கூட மாயமாயிரும்னு. அப்புறம்தான் வடைவிக்க வந்தேன். என்னைப் பார்த்தா பரம்பரையா வடை விக்கறவன் மாதிரியாத் தெரியிது?.

--

மூவரில் முதல்வர் எம்ஜிஆர். கண்ணனின் கதாநாயகன். சர்க்கஸில் ஆடுபவர்கள் கூட அணியச் சிறிது சங்கோஜப்படும் உடைகளில் அவர் காதல் பாட்டுகள் பாடினார். சுவர் பக்கம் திரும்பிக்கொண்டு சோகத்தைப் பிழிந்தார். அவர் அருகில் இருந்தால் கன்னிப்பெண்கள் கல்யாணத்துக்கு முன்னோ அல்லது கயவர்களாலோ கர்ப்பம் ஆக வாய்ப்பே இல்லை. கன்னிமையின் காவலன் என்ற பட்டம் அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஏனோ கிடைக்கவில்லை. முந்தையப் படங்களில் கரகரத்த தொண்டையில் பேசும் வில்லன்களுடன் கத்திச் சண்டை போட்டு பிதுங்கிச் சதை வழிந்து வெளித்தள்ளிய இடுப்புகளைக்கொண்ட காப்பாற்றப்படக்கூடாத கதாநாயகிகளையும் காப்பாற்றினார். இந்தப் படங்களில் காதல் காட்சிக்கும் மல்யுத்ததிற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது. அவருக்கு உதவி செய்பவர்கள் இடுப்புச் சிறுத்த சிறுமிகள்.

அடுத்தவர் சிவாஜி. உப்பிய கன்னங்கள். மூன்று நான்கு தாடைகள். எதிர்பாராத சமயங்களில் முகத்தை முறுக்கி உணர்ச்சிகளைப் பிழிபவர், தமிழ் நாட்டு மர்லன் ப்ராண்டோ என்று அழைக்கப் படுபவர். ஆனால் ப்ராண்டாவோவைப்போல் வசனத்தை மெல்பவர் அல்ல. பேசினால் வெகு தொலைவில் இருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கும். வாழ்க்கையின் சுழல்களில் சிக்கிக்கொண்டு அவர் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யும் முயற்சி நான்கு ஐந்து நாள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் துன்பப்படுபவனை நினைவுக்குக்கொண்டுவரும்.

அடுத்ததா ஜெமினி. நன்றாக நடிப்பது தண்டிக்கக்கூடிய குற்றமென்று அவர் நினைப்பதாக அவரைப் பிடிக்காதவர்கள் சொன்னார்கள்.

--

ராஜகுமாரன் எப்படி வசனம் பேசறான் பாருங்கோ..

எப்படிப் பேசினாலும் இடைவெளி இல்லாமப் பேசக்கூடாது. சினிமாவுக்கு வசனத்துக்கா வருவா? அதை பிளேட்டு போட்டு கேட்டுக்கலாமே. சினிமாவை அதனுடைய பிம்பங்களுக்காக வரனும். பார்த்ததுக்கப்புறம் மனசுல நிக்கனும். அது காட்டாததைத்தான் யோசிச்சிப் பார்க்க வைக்கனும். இதுல அப்படியாவது எதாவது இருக்கா? அம்மா பிள்ளை க்ளோஸ் அப்பையும் மிட் ஷாட்டையும் மாத்தி மாத்தி காட்டறான். டைரக்டருக்கு சின்ன வயசுல மண்டைல அடி பட்டிருக்கும்னு நினைக்கறேன்.

--

திருப்பள்ளியில் ரெங்கநாயகியுடன் தனது அடுக்கு மொழியை பயிற்சி செய்வான். “பசியில் பரிதவிக்கும் பாலன் எனக்குப் பலகாரம் படைக்காமல் பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே”

“கரண்டியாலே மண்டைலபோடுவேன். கேக்கறத தமிழ்ல கேளு”

கோபால பிள்ளைக்கு ஒரு அரசியல்வாதியும் பிடிக்காது. ஆனால் திமுக என்றாலே முகமெல்லாம் சிவந்துவிடும். “இவங்க ஜனங்களுக்கு செஞ்சிருக்கர ஒரே தொண்டு என்னன்னா? தமிழ்ல புதுப்புது வசவெல்லாம் கண்டுபிடிச்சதுதான். ஒண்ணும் தெரியாமலேயே ஒரு விஷயத்தைப் பத்தி ரெண்டுமணி நேரம் பேசறதும் இவங்களாலேதான் முடியும்”

“திராவிட நாடு கிடைக்குமா?”

“ அது எங்க இருக்கு கிடைக்கறதுக்கு? இவங்க இப்படிக்கேக்கறாங்கன்னே மத்த மூணு பேருக்கும் தெரியாது. இவங்கதான் ’அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு’ன்னு சொல்லறாங்க. திராவிட நாடு கிடைக்காமப் போனா தமிழ் நாடு இவங்களால சுடுகாடு ஆயுடும்னு சொல்றாங்களா என்னன்னு தெரியல”


புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை. ரூ.250/-
முதல் பதிப்பு டிசம்பர் 2002.

--


இந்த ஆசிரியரின் அடுத்த நாவலான கலங்கிய நதி (ஆங்கிலத்தில் The Muddy River) படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதைப்பற்றி சொல்வனம் தளத்தில் வந்த ஒரு பதிவு.


--

நன்றி! :))

  

என்னை இயற்கையாகச் சாகவிடுங்கள், ப்ளீஸ்..


.

நேற்று புத்தகக் கண்காட்சியில் பதிவர் சுரேகாவுடன் திரு.அ.முத்துக்கிருஷ்ணனைச் சந்தித்துக் கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் என்ற அவரின் சமீபத்திய பரபரப்பான புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அணுவினால் வந்த வரப்போகிற தீமைகள் பற்றி, அதை வைத்து நடக்கும் தில்லாலங்கடிகள் பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்ட புத்தகம் இது. பூவுலகின் நண்பர்கள் அரங்கில் உயிர்மை வெளியாடாக வந்த இந்தப் புத்தகமும், பூவுலகின் நண்பர்கள் வெளியீடான அணுவாற்றல் ஒரு அறிமுகம் (முதல் பதிப்பு சனவரி 1989) ஒரு சேரப் படிக்கும்போது நமது சந்தேகங்களும், ஏன் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் நடத்தப் படுகின்றன என்பதற்கும், மனித இனம் மட்டுமல்லாத இந்த உலகின் ஆதார தத்துவத்திற்கே இந்த அணுசக்தி உற்பத்தி எவ்வளவு பெரிய சரி செய்ய முடியாத ஒரு பேரழிவை கொண்டுவரும் என்பதற்கும் விடை அளிக்கும்.

சில நாட்களுக்கு முன்னர் நான் பார்த்த The Cove மற்றும் Crude என்ற இரண்டு டாக்குமெண்ட்டரிகளில் முதலாவது ஜப்பானின் தைஜி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டு திமிங்கல மாமிசமாக விற்கப்படும் டால்பின்களைப் பற்றியது. 

அந்தப் படத்தில் அழகான, மனிதர்களுக்கு மிக நெருக்கமான அந்த ஜீவனைக் கூடக் கொன்று தின்கிறார்களே என்ற ஜல்லியெல்லாம் விட்டுவிடுவோம். பிரச்சனையே அதை திமிங்கிலச் சரக்கு என்று விற்றுவிடுவதுதான். சரி அதிலென்ன பிரச்சனை என்றால், தொழிற்சாலை, வாகன மாசுகளால் உருவாகும் மெர்குரி கடலில் படிகிறது அதைத் தின்று உயிர்வாழும் ஒரு குறிப்பிட்ட கடல்வாழ் உயிரியைச் சாப்பிட்டு வாழும் மீன்களை டால்பின்கள் உண்கின்றன. டால்பின்களின் உடலின் இதனால் அளவுக்கதிகமான மெர்குரி விஷம் ஏறிப்போகிறது, இதை திமிங்கில பிரியாணியாக ஏமாந்து சாப்பிடும் மனிதனின் உடலில் இது பல பாதகமான விளைவுகளை உருவாக்குகிறது. அது பிறக்கும் குழந்தைகளையும் தாக்குகிறது. 

அடுத்த படத்தில் செவ்ரான் எனும் பெட்ரோலியக் கம்பெனி அமேசான் காட்டில் பெட்ரோல் எடுக்கிறேன் பேர்வழி என்று அந்த இயற்கை நிலத்தையும் அதன் வாழ்வாதாரத்தை நம்பி இருக்கும் மக்களின் சுகாதாரத்தையும் எவரோ காரும் ஏரோப்ளேனும் ஓட்டுவதற்காகக் கிழித்த கதை. 

மாசற்ற பளிங்கு போன்ற ஆற்றிலும், நிலத்திலும் கலந்த பெட்ரோலியக் கசடுகளால் கேன்சர் முதல் சொல்லொணா நோய்களுடன் போராடும் மக்களைப் பற்றி, குடிக்க நீர்கூட இல்லாமல் படும் துயர்களைப் பற்றி அவர்களின் கேள்விகளை பகடியாக்கி கேணையர்களாக ஆக்கும் சட்ட நிபுணர்கள் பற்றி, அதற்காக சோர்ந்துவிடாமல் போராடும் மக்களைப் பற்றி என்று நெஞ்சைப் பதற வைக்கிறது.

அப்பாடா ஒன்று ஜப்பான், மற்றோன்று எங்கோ அமேசான் என்று டிவியை அணைத்துவிட்டு அக்கடா என்று யார் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்? ஏன் இன்னும் கடலூரில் போர்க்கால நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பல்குத்திக்கொண்டே யோசிக்க முடியவில்லை. 

ஏனென்றால் மேலே சொன்ன இரண்டு புத்தகங்களும் அதைவிட அதற்கும் மேலே உள்ள தலைப்பும். 

இயற்கையாக நாம் சாவதற்குறிய எல்லாவழிகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதாகவே உணவிலிருந்து, உறக்கம் வரைக்கும் புகுத்தப்படும் எல்லாமே உணர்த்துகிறது.

மரபணு மாற்ற உணவுகளை ஆராயாமல் ஏற்றுக்கொண்டதன் மூலமாக, பாரம்பரிய நிலம் சார்ந்த உணவுகளை, விவசாயத்தை உதாசீனப் படுத்தியதன் மூலமாக சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்ற புள்ளிகளில் ஆரம்பிக்கும் பிரச்சனை, இறப்பினை ஒரு நோயால் பூர்த்தி செய்கிறதே அன்றி இயற்கையான, உடல் உறுப்புகளின் வயதால் இயக்கத்தை நிறுத்துவதால் அல்ல. எனில் இதுதான் சரி என்று நம்மில் புகுத்தப்பட்ட ஒரு நவீன வாழ்வுமுறை மிகப்பெரிய ஒரு சிக்கலை நோக்கி நம்முடைய தலைமுறையைத் தள்ளுவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை திரி கொளுத்தி வைத்திருக்கிறது.

எப்படி உணவென்பது பசியிலிருந்து ருசிக்கு மாறியதோ அப்பொழுதே இறப்பு விதியிலிருந்து சதிக்கு மாற்றப் பட்டிருக்கிறது. தீனி தின்னும் பண்டாரமாக உலக மக்களின் மீதான இந்தப் பார்வை சற்றொப்ப ஒரு கோழிப்பண்ணைக்கு ஒப்பானது. நன்றாகக் கொழுக்கவைக்க விதவிதமான தீனிகளைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து வளர்க்கப்படும் கறிக்கோழிகள் போலத்தான் பொதுமனித இனம் இன்றைக்கும் உலகின் ஆளும் சக்திகளால் வியாபார வாங்கும் சந்தையாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றி வளைத்தாயிற்று இனி கூடங்குளம் வி(ஷ)யத்துக்கு வரலாம்..

கூடங்குளத்தில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. அருமையான குறைந்த செலவிலான மின்சாரம் கிடைக்கும் ஏங்க சும்மா பிரச்சனை பண்றாங்க என்று கேட்கப்படும் பொதுமக்களுக்கான பொறுமையான பதில் சரியாகக் கிடைக்காததற்குக் காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் ஊடகங்கள் அல்லது செய்தி பெறும் வழிகளாகவே இருக்கின்றன. முக்கால்வாசித் தமிழ்நாடு இதில் முழுமையாகப் பாதிக்கப்படும் என்ற செய்தி இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களை நிச்சயம் ஒரு மேப்பைத் தேடச்செய்யும் அதில் தனது வீடும் சொத்தும் வருகிறதா என்று பார்க்கச் சொல்லும். வந்தால் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு உடனே ஒரு எதிர்ப்பு நிலையை எடுக்கச்சொல்லும். இது சரியான அணுகுமுறையா?

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் எழுதியது இருக்கட்டும் நீங்கள் கொஞ்சம் நெட்டில் தேடுங்கள், இதைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் ஹோம் ஒர்க் செய்யுங்கள் நாங்கள் சொல்வதில் தவறிருந்தால் எங்களை தரவுகளுடன் கேள்விகேளுங்கள். சரி என்றால் இதை மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக மக்களுக்குப் பரப்புங்கள். இது வாழும் நமக்கான போராட்டமல்ல இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கப்போகும் ஒரு குழந்தை ஊனமில்லாமல் பிறக்க, கேன்சரில் இறக்காமலிருக்க நாம் ஒவ்வொருவரும் எடுக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு நிலைப்பாடு என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.

இப்பொழுது மீண்டும் மேற் சொன்ன டாக்குமெண்டரிகளைப் பார்க்கும்போது மெத்தப் படித்த மேதாவிகள் செய்த தவறுக்காக வாங்கும் வக்காலத்துகளில் உள்ள மொள்ளமாறித்தனம் புரியவரும். நாளை முக்கால்வாசி தமிழ்நாடு அணுக்கதிரால் வாழத்தகுதியற்றதாக மாறும்போது இவர்கள் உங்களுக்குக் கூறப்போகும் பதில் தமிழ் நாட்டில் சுகாதாரமில்லை, சாக்கடை வசதி இல்லை, கொசு அதிகம், மக்கள் மாவா போட்டார்கள், டாஸ்மாக்கில் குடித்தார்கள் ஆகவே செத்தார்கள் என்பதாகத்தான் இருக்குமே அன்றி ஆமாம் உலை வெடித்துவிட்டது உயிர் போய்விட்டது என்பதாக இருக்காது. 

--

மின்சாரத்தை உற்பத்தி செய்ய காப்பர் வைண்டிங் சூழ்ந்த ஒரு ஆல்டர்னேட்டரை சுற்றவேண்டும். அதைக் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றினால் நமக்கு மின்சாரம் கிடைக்கும். சரி எதை வைத்துச் சுற்றலாம்., டீசல் இன்சினை வைத்துச் சுற்றலாம். என்ன எழவு டீசல் செலவாகும் அதனால் டாலர் செலவாகும், ஏகப்பட்ட கரிப்புகை வரும், பராமரிப்புச் செலவு லொட்டு லொசுக்கென்று எல்லாம் கூட்டிக் கழித்தால் கட்டுப்படியாகாது. 

சரியென்று நீராவியின் ஆற்றலை வைத்து சுற்றவைக்கலாமென்று பார்த்தால் எதையாவது எரித்தால்தான் நீர் ஆவியாகும்., நிலக்கரி கிடைத்தது. ம்ஹும் இதுவும் கொஞ்சநாளில் பூட்டகேஸ், குந்தித் தின்றாயிற்று குன்று மாளப்போகிறது. 

ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதில் விழும் தண்ணீரின் வேகத்தை வைத்து சுற்றிவிடலாமென்றால், உள்நாட்டு அரசியல், மழை பெய்யாதது, தண்ணிருக்கான சண்டைகள், நதி நீர் இணைப்பின் சிக்கல்கள் என்று மிகப்பெரியதாக எதுவும் செய்யமுடியவில்லை.

கவலைப்படாதே சகோதரா என்று கைகொடுக்க வந்ததுதான் அணுமின் உற்பத்தி. எப்படி. அணுவைப் பிளக்கும்போது அபரிமிதமான வெப்பம் வரும். அந்த வெப்பத்தின் மூலம் தண்ணீரை சூடாக்கலாம் அதன் நீராவி கொண்டு ஆல்டர்னேட்டரை சுற்றவைத்து கரண்ட் எடுத்துவிடலாம். திரும்பத் திரும்ப இதை செயவதன் மூலம் மிக குறைந்த செலவில் மின்சாரம். நாட்டு மக்களுக்கு 24 மணி நேரம் ஒளிவீசும். சுபிட்சம். சுபம். 

இப்படித்தான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சொல்லப்பட்டவர்களாலேயே மென்று முழுங்க முடியாத அளவுக்கு அது வேலை காட்டியது ரஷ்யாவின் செர்னோபில் என்ற ஊரில் உள்ள ஏற்பட்ட அணு உலை விபத்து.அழிக்க முடியாத ஆற்றலாக உள்ள இந்த சக்தியின் மூலமே நமக்கெல்லாம் செலவில்லாத மின்சாரம் கிடைக்கும் என்ற இனிப்பைத் தடவி இவர்கள் நமக்கு சொல்ல மறுப்பதெல்லாம் இது அணுகுண்டிற்கான மூலப்பொருட்களின் உற்பத்திக்கூடம் இதன் வெறும் கழிவுதான் மின்சாரம். 

வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெயிலடிக்கும் ஒரு நிலத்தில் எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாத சூரிய சக்தி சார்ந்த மின்சாரப் பயன்பாட்டிற்கான மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்க எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல்,  சிறப்பான காற்றாலைகள் கண்டுபிடிப்பு மற்றும் பொருத்துதலுக்கான முயற்சிகளை முன்னெடுக்காமல், கடலில் வீணாகக் கலக்கும் ஆறுகளை ஒருங்கிணைத்து சிறு அணைகள் கட்டி மின்சார உற்பத்திக்கான எந்த முயற்சியும் எடுக்க வக்கில்லாத அதிபுத்திசாலிகள் முன்வைக்கும் தீர்வுதான் இந்த அணுமின் உற்பத்தி.ஏன் இதை எதிர்க்கவேண்டும்? ஏனென்றால் இதில் ஏற்படும் தவறு ஈடு செய்ய முடியாதது. தலைமுறை கடந்து பாதிப்பை ஏற்படுத்துவது. அழிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துவது. புல் பூண்டு முளைக்கவிடாமல் செய்யும் ஒரு மிகப்பெரிய அழிவு சக்தி. மேலும் இது வெறும் மின்சாரத்திற்கானது என்பது பம்மாத்து. இதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை பல நூறு ஆண்டுகளுக்கு பாதுகாக்கவேண்டும். நினைவிருக்கிறதில்லையா? மனிதன் குரங்கிலிருந்து வந்தவன்,. ஆறறிவுப் பைத்தியம் வேறு, குடிப்பழக்கமும் தாராளமாக உண்டு. ஒரு அழிவு சக்தியிலிருந்து இன்னொரு அழிவு சக்தியைக் கண்டுபிடிக்கும் தலைமுறையில் எந்தக் குரங்கு எல்லை மீறும் என்பது எழுதிக்கொண்டி்க்கும் இந்தக் குரங்கும் அறியாது என்பதே நிதர்சனம்.

போக மின்சாரசேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சமூகத்துக்கு, மின்இழப்பினை ஈடு கட்டத்தெரியாத மின்சார பொறியாளர்களுக்கு தெருவுக்கொரு அணு உலை வந்தாலும் பத்தாது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.

சரி இதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இல்லை. சோற்றுக்கே வழியில்லாதவன் முன்பாக சாப்ட்டீங்களா என்று பாலிடாயில் நீட்டுகிறார்கள். நமக்குத் தேவை அனைவருக்கும் சத்தான நிலம் சார்ந்த உணவு. சுகாதாரமான குடிநீர். பசுமையான சுற்றுச்சூழல். எதையும் வீணாக்காத நேர்மை. சுய ஒழுக்கம். மின்சாரச் சிக்கனம். சுகாதாரம், தனி மனித ஒழுக்கம், நல்லவைகளுக்காக, பிறக்காத சந்ததிகளுக்கான சிறப்பான வாழ்வுச் சூழலை விட்டுச் செல்வதற்காகப் போராடுவது என்று நாம் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தலைவன் வருவான், கட்சி வரும் கவுன்சிலர் வருவான் என்று எதிர்பார்க்காமல் தனி மனிதராக நம்மால் தேவையில்லாமல் ஒரு விளக்கு அணைக்கப்பட்டாலும், ஒரு டம்ப்ளர் தண்ணீர் வீணாக்கப் படாமல் இருந்தாலும், ஒரு பருக்கை உணவு சிந்தாமல் உண்ணப்பட்டாலும் அதில் முதலடியை எடுத்துவைத்ததாகவே கொள்ளப்படும்.    


நாம் கேட்கவேண்டிய ஒரே கேள்வி, விபத்தென்பது தவிர்க்க முடியாதது, விபத்தே நடக்காது என்று அறுதி இட்டுக்கூறக்கூடிய ஒன்றை இதுவரை எந்த மனிதக் கண்டுபிடிப்பும் சாதிக்கவில்லை. இது உங்களைப் பொருத்தவரை உன்னதமானதாக இருக்கலாம். ஆனால் விபத்தொன்று வந்துவிட்டால் அதிலிருந்து இந்த பெருமை மிக்க நிலம் புல் பூண்டு முளைக்காமல் வாழத்தகுதியில்லாமல் போகும்தானே? இதிலிருந்து மீள முடியுமா? உங்களிடம் நேர்மையாக அதற்கென்ன வழி இருக்கிறது???????


ஆமாம் இயற்கையாகச் சாகவே எனக்கு விருப்பம். உங்களுக்கு???


படியுங்கள்:::புத்தகக் கண்காட்சியும் சில ஆச்சரியங்களும்..!


கடந்த சில வருடங்களாகவே இந்த முதல் நாளில் புத்தகக் கண்காட்சிக்குப் போவதென்பது கிட்டத்தட்ட ஒரு வியாதியாகவே ஆகிவிட்ட நிலையில் இன்று கேவிஆர், எறும்பு ராஜகோபால், குட்டி’டின், சாறுசங்கர், மயில் ராவணன் புடை சூழ மாலை 5.30 மணி வாக்கில் அனுமதி இலவசத்தில் கண்காட்சிக்குள் நுழைந்தோம்.  

அவியல் கூடாரம்!

n

எல்லாம் தயார்! 


வழக்கத்தை விட இம்முறை ஸ்டால்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நடந்து நடந்து கால் வலித்ததும் முழுமையாகக் காண முடியாததும் மிச்சம். அதுவும் முதல் நாளில் ரீப்பர்களில் ஆணி அடித்து புத்தகக் கட்டுகளைப் பிரித்துக்கொண்டிருந்த பதிப்பாளர்கள் இம்முறை 95% தயாராக இருந்தது வியப்பு. கணிசமான அளவில் மக்களின் கூட்டமும் இருந்தது. கேபிள்ஜி, கேஆர்பி, யுவக்ருஷ்ணா, அதிஷா ஆகியோரையும் காணமுடிந்தது.  எதுக்கு அங்கிட்டு இங்கிட்டு சுத்தறீங்க நம்ம கடைக்கு வாங்க பழகலாம் என்று டிஸ்கவரி வேடியப்பன் ஒரு ஸ்டால் போட்டிருக்கிறார்.

புத்தகத் திருவிழாவின் வாஸ்து பிரகாரம் ஈசான மூலையில் இருக்கும் லிச்சி ஜூஸ் கடைக்கு சென்று ஆர்டர் செய்யப்போனால் 25ரூ பாட்டில் என்றார்கள். ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து ஆளுக்கொரு வாழைத்தண்டு சூப் பருகினோம்.

சீச்சீ இந்த லிச்சி புளிக்கும்..


வழக்கம்போலவே இந்த ஆண்டும் இட்லி குண்டானை ஒத்த அரங்க மேற் கூரை வடிவமைப்பு சொற்ப கூட்டத்திற்கே மூச்சு முட்டுவதாகவும், சூடாகவும், வியற்வை பெருக்கும் அளவிலும் இருந்தது. நல்ல காற்றோட்டமான வடிவமைப்பு கிடைக்க இன்னும் என்னென்ன புண்ணியம் செய்யவேண்டுமோ தெரியவில்லை. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன், மனைவியுடன் கூட்ட நெரிசலில் உள்ளே செல்பவர் வெறுத்துப்போவார்கள் என்பது நிச்சயம்:((

சுஜாதாவின் மலிவு பதிப்பு புத்தகங்கள்

சுஜாதாவின் பல நாவல்கள் 15/20 ரூவாய்க்கு சல்லிசுவிலையில் பழைய மலிவுப் பதிப்பில் கிடைத்தது. அள்ளிக்கொண்டோம். 
காமிக்ஸ் ஸ்டால்


பெரிய ஆச்சர்யமாக லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஒரே பண்டலாக அனைத்து இதழ்களையும் 900/- ரூபாய்க்குத் தருகிறார்கள். 30 வருடக் கனவு. அதையும் அள்ளிக்கொண்டோம். 

ஜெய் ஜாக்கி


ஜாக்கி சேகரின் அறச்சீற்றத்தில் அம்மாவே கடலூருக்குச் செல்லும்போது பபாசி மட்டும் சும்மா இருக்குமா என்ன? அவர்களும் ஒரு உலகப் பட ஸ்டாலுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் 60ரூபாய்க்கு டிவிடிக்கள் கிடைக்கிறது.
கேவிஆர்

எம்புட்டு காமிக்ஸு.


வழக்கம் போல டூவீலருக்குப் பத்து ரூபாய் பார்க்கிங். கால்தடுக்கும் சிகப்பு நிற கார்பெட்கள் என்று களை கட்டிவிட்டது புத்தகக் கண்காட்சி. 

டிஸ்கி : எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சி. இஃகி :)))