பலா பட்டறை: பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!

பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


.


பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.

பூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ஐந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.

 கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.

இதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.

ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா! அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி!

ஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.

இரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.

அங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம்!!??? கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா? என்பது போல் இருக்கிறது :))

வெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது!.

மலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை

சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்

அந்த நால்வர்!

முதலில் வரும் சிமெண்ட் பாதை

பின்னர் வரும் கற் பாதை

காட்டினூடே செல்லும் பாதை

கடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை
இறங்கும் வழியில்

முதலில் இறங்கவேண்டிய மலைப்பாதை

சூலம்!

ஓம் நமச் சிவாய :))

இன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து

உதயத்திற்கு முன்பான ட்ரைய்லர்!

வெண் பஞ்சு மேகங்கள்

விளிம்பு நிலை மோட்ச தியானம் :))

கோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..


கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே! மறக்க முடியாத ஒரு அனுபவம்! 

மிக்க நன்றி!

:))

33 comments:

மரா said...

பபாஷா என்ன ஒரு கடமை உணர்ச்சி. இப்பதான் குளிச்சிட்டு வந்து கணினியை ஆன் பண்றேன்... போஸ்ட்.. கலக்குறீங்க பாஸ். என்னா டங்குவார் அந்துபோறதுன்னா என்னான்னு ஆரும் கேட்டா இந்த மலைக்கு தாட்டி வுடலாம் :-)

vasu balaji said...

மஞ்ச வேஷ்டி மயிலு இவ்வளவு பக்த கேடியா?:))

மரா said...

விளையாட்டு போல பேசிக்கிட்டு இருந்தோம் நானும் சாறு சங்கரும் ‘ட்ரெக்கிங்’ அது இதுன்னு.... பயபுள்ள கோத்துவிட்டுப்புட்டாரே.பகல்ல பார்த்தா எனக்கே பயங்கர ஆச்சரியம்- நாமளா இவ்ளோ பெரிய மலையில ஏறுனோம்னு.மெய்யாலுமே இது எனக்கு சாதனைதான்.சூப்பரா மோட்டிவேட் பண்ண உங்களுக்கும் எறும்பு நண்பருக்கும் எனது நன்றிகள்.

மரா said...

என்ன கோலி சோடாதான் ஒரு பத்து குடிச்சிருப்போம்.இளநீர் சூப்பர்.நமக்கு துணை வந்த நாய்,குரங்கு கடிபட்ட நாய், சாக கிடந்த நாயின் ஓலம் இவைகள் தான் கொஞ்சம் மனசை பிசையுது :(

மரா said...

@ஆசான்
ஓம் நமச்சிவாய நமச்சிவாயன்னு சொல்லிகிட்டே ஏறிட்டு வந்திருக்கோம். அடுத்து பயணம் *சதுரகிரி*

CS. Mohan Kumar said...

அலோ கலக்கிருக்கீங்க. நமக்கும் ஒரு தகவல் சொல்லுங்க. முடியும் போது சேந்துக்கலாமில்ல

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சதுரகிரிக்கு நானும் கலந்து கொள்ளலாமா?

ஜோதிஜி said...

பத்தியா பிரிக்காம இருந்தாலும் படிக்கிறவர்களுக்கு மோட்ச நிலை கிட்டி விடுமோ?

Unknown said...

//கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய்.//

இது ஒரு ஆச்சரியமான காட்சி!! போன வருஷம் கேயார்பி மற்றும் சில நண்பர்களுடன் ஏறினோம். அருமையான அனுபவம். மீண்டும் போகவேண்டும்!!

Jerry Eshananda said...

enlightening pilgrimage...congrats.

HariV is not a aruvujeevi said...

போளூர் வழியாக பருவத மலை பயணம்............. himmmmmmm good old days
கடலாடி வழியில்? நன்று. அப்படியே கேட்டவரம்பளையம் போய் வந்து இருக்கலாமே.
பருவதமலை பற்றி கடலாடியில் பிறந்து வளர்த்தவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். அதை பற்றி ஒரு ப்ளாக் எழுத ஆசை. காஞ்சி பெரியவர் இந்த மலை விஜயத்திற்கு சென்று மலை ஏறாமல் மலை சுற்றி வந்து விட்டார். கரைகண்ட இஷ்வரர் களை பற்றி எழுத வேண்டும். அடுத்து முறை ஊருக்கு வரும்போது பார்போம் தெய்வ சங்கல்பம் என்ன வென்று? . நன்றி

Prince said...

I also went there before 5 months
lifes unforgettable trip..

க ரா said...

மயிலு மாம்ஸ் ஒரு ரெண்டு சுத்து இளைச்ச மாதிரி தெரியுது.. ஜீ கலக்கறேள் :)

எல் கே said...

/அடுத்து பயணம் *சதுரகிரி//

மறக்காம எனக்கு சொல்லுங்கள் . கண்டிப்பா போகணும்

சி.பி.செந்தில்குமார் said...

ஜாலியாத்தான் போய் இருக்கீங்க. ? அதென்னா பகீர்? ஹி ஹி டைட்டில் அட்ராக்‌ஷன்>?

சி.பி.செந்தில்குமார் said...

>>>இது பலான பட்டறை அல்ல.

haa haa ஹா ஹா மிக ரசித்தேன் சார்..

ஷர்புதீன் said...

இந்த மாதிரியெல்லாம் ஒரு பயணத்திர்க்குதான் அலைகிறேன், கூப்பிட மாட்டேன்குரான்களே

R. Gopi said...

கலக்கிட்டீங்க பாஸ்

உணவு உலகம் said...

நல்ல பயணம். நல்ல பகிர்வு. ஐவர் கூட்டணி அசத்திட்டீங்க.

ஊரான் said...

காடுகளையும் மலைகளையும் பார்த்திராத நகரவாசிகளுக்கு இவை பகீர் பயணங்கள்தான். "இதெல்லாம் எனக்கு டீ சாப்பிடரது மாதிரி" என்று சொல்வது போல இத்தகைய பகீர் பயணங்கள் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மிகச்சாதாரண அன்றாட நடவடிக்கைகள்.

சுற்று வட்டார மக்கள் தங்கள் உழவுத் தொழிலுக்குத் தேவைப்படும் ஏர் கலப்பைக்கான மரங்களைத் தேடியும், வீடு மற்றும் மாட்டுக் கொட்டகை போடுவதற்குத் தேவையான சில மரக்கழிகளைத் தேடியும், கூரை போடுவதற்குத் தேவையான மஞ்சம் புற்களைத் தேடியும், நெல் வயல்களுக்கு அடி உரமாகப் போடப்படும் தழைகளைத் தேடியும் (பெரிய சுமைக்கட்டுகளாக) அலைய காடு மலைகளின் மூளை முடுக்குகளையெல்லாம் அலச வேண்டும். அலைந்து திரட்டிய சுமைகளை சுமந்து வெற்றுக் கால்களுடன் லாவகமாக இறந்கும் அசாத்திய திறமையும் இங்கு சர்வ சாதாரணம். இங்கே சொல்லப்பட்ட சாலையோ கற்பாறை பாதைகளோ எதுவும் இருக்காது.

இவை எல்லாம் எனது இளமைக்கால நினைவுகள்.

அப்பகுதி மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் கிராம மக்களின் வாழ்க்கையை புரிந்து கொள்ள பலருக்கு உதவும்.

பர்வத மலை பக்திக்கான ஒரு இடமாகப் பார்க்க வேண்டியதில்லை. அங்கு சென்றால் பக்தியையும் தாண்டி உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் அலாதியானதாக இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்.

Ashok D said...

சூப்பருங்ணா...

பனித்துளி சங்கர் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தலைவா புகைப்படங்கள் அனைத்தும் அசத்தல் .

மாதேவி said...

பர்வதமலை காட்சிகள் நன்றாக இருக்கின்றன.

Unknown said...

பிரமிக்க வைத்த அதிர்வுகளை பர்வதமலை எனக்கு தந்திருக்கிறது..

Unknown said...

தல எங்க இருக்கு? பர்வதமலை. நம்மூரு வெள்ளியங்கிரி மலை மாதிரியே இருக்கே?

Unknown said...

செளக்கியமா பாஸு... :-)

சாமக்கோடங்கி said...

வெள்ளிங்கிரி மலையும் நீங்கள் வருணித்ததைப் போன்றே இருக்கும். இரண்டு முறை போய்வந்த அனுபவம் உண்டு. செல்போனில் எடுத்த படங்கள் தான் உள்ளன.

உங்கள் கூடவே மலை ஏறிய ஒரு அனுபவத்தைக் கொடுத்து விட்டீர்.. மிக்க நன்றி..

RVS said...

பரவசமான பர்வத மலைப் பயணம்! நல்ல பகிர்வு. ;-))

நாளைப்போவான் said...

sooooper! adutha thadavai nanum varuvaen!!!

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

Unknown said...

// உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது!.//


அருமையான பதிவு...நன்றி..

Unknown said...

நல்ல பதிவு. அருமையா இருக்குது

R. Gopi said...

உங்கள் பயணக் கட்டுரைகள் பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_09.html