பலா பட்டறை: 10/01/2013 - 11/01/2013

மயிறு மாதிரி தெரியற்து.

மயிறு மாதிரி தெரியற்து.


"என்னங்கானும் தக்ளி நூத்துண்டுருக்கீர்?"

"மயிறு மாதிரி தெரியற்து. கண்ணாடிய வேறக்காணோம்"

இது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் வசனம். காரணம் உசிலைமணி அவர்களின் மூக்குக் கண்னாடியை ஊர்வசியின் பாட்டி லவட்டிக்கொண்டு போயிருப்பார், கையில் இருப்பது மங்கலாகத் தெரிவதால் கண்ணாடி இல்லாத அவஸ்தையை காமெடியாக்கி இருப்பார்கள்.

சிறு வயதில் கண்ணாடி அணிந்திருக்கும் நண்பர்களைப் பார்த்தால் மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும், 1970களில் பிறந்த எனக்கு 9வது வகுப்பில்தான் சக மாணவன் கண்ணாடி அணிந்ததையே பார்க்க வாய்த்தது. இப்பொழுது கிண்டர்கார்டனிலேயே சர்வசாதாரணம். ஆக, அது அப்பொழுது ஒரு ஆச்சர்யம். எதற்காக இந்தக் கண்ணாடி? குடுடா என்று வாங்கிப் பார்த்தால் ஒன்று எல்லாம் சிறியதாகத் தெரியும், அல்லது அதைப் போட்டிருக்கும் நண்பனின் கண்களே மிகப் பெரியதாகத் தெரியும்.

எனக்கு சாதாரணமாக இப்படித் தெரிவது இவனுக்கு எப்படி சரியாகத் தெரிகிறது என்ற ஆராய்ச்சியில்,' கண்ணாடி போடாவிட்டால் உனக்கு எப்படி மச்சிதெரியிது?' என்ற கேள்விக்கான பதிலாக 'மங்கலாகத் தெரியும்' என்ற விடையை என் கண்களை வைத்தே பரிசோதனை செய்யத் துவங்கியதின் விளைவா என்றெல்லாம் அறியாது, வழக்கம் போல டான் பாஸ்கோவின் 11ம் வகுப்பின், கடைசி பெஞ்சில் அமர்ந்து அருகில் இருக்கும், சுகுவிடமும், ரவியிடமும் போர்டில் என்ன எழுதி இருக்கிறது என்ற சந்தேகம் அடிக்கடி கேட்டதில் விளைவு, ரவி என் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம், " அம்மா இவனுக்கு போர்ட்ல இருக்கற எழுத்தே தெரியலங்கறான், கண்ண டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டுப் போனான்.

1988ல் பிள்ளையார் சதுர்த்திக்கு முந்தைய நாள் -0.75 என்ற பவரில் கண்ணாடி போட்டு, வேலூர் ராஜா தியேட்டர் அருகில் சாலை, மேடும் பள்ளமுமாகத் தெரிய, தட்டுத்தடுமாறி எருக்கம் பூ மாலை வாங்கி 50 காசுகள் கொடுக்க சில்லறை எடுத்து உள்ளங்கையைப் பார்த்தால் மச மசவென்று கண்ணில் க்ரீஸ் தடவிவிட்டாற்போல இருந்ததை கவனித்து, பூ விற்ற அம்மாவிடமே நிங்களே எடுத்துகிட்டு மிச்சத்தைக் கொடுங்க என்று எஸ்கேப்பாகி வீடு வந்தேன்.


அது வரை ஆராய்ச்சிக்குறிய பொருளாக இருந்த மூக்குக்கண்ணாடி எவ்வளவு பெரிய அவஸ்தை என்று நான் வெகு சீக்கிறமாகவே உணரத் துவங்கிவிட்டேன். 11ம் வகுப்பில் நாங்களே பெரும்பாலும், மண்ணும், செங்கல்லும், சிமெண்ட்டும் சுமந்து கட்டிய பாஸ்கெட் பால் கோர்ட் அருமையாகத் தயாராகி சக நண்பர்களை பிடி மாஸ்டர் அழைத்து டீம் உருவாக்கி பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகியிருந்த சமயம், மாஸ்டரிடம் சென்று "சார், நானும் ஜாய்ன் பண்ணிக்கிறேன், எனக்கும் பாஸ்கெட் பால் ஆடனும்னு ஆசை" என்று சொல்ல, அவர் ஒரே பதிலாக " பாக்கியராஜையெல்லாம் டீம்ல சேர்த்துக்கறதில்லை" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

"டேய், யார்ரா அது பாக்கியராஜ் நம்ம க்ளாஸ்ல? மாஸ்டர் என்ன வேற யாரோன்னு நெனெச்சிட்டாரோ" என்று அப்பாவியாக கூட வந்த ஶ்ரீதரிடம் கேட்டேன்.

"மச்சி, உன்னை சோடா புட்டின்னு அந்தாள் பேஷனா சொல்றார்டா, கண்ணாடி போட்டிருக்கறதால உன்ன டீம்ல சேர்த்துக்க மாட்டாராம்" என்று சொன்னபோது இந்தக் கண்ணாடி இன்னுமென்னை என்னவெல்லாம் படுத்தப் போகிறது என்று காட்சிகள் கண் முன்னே விரிந்தது. 

டூர் போகும்போதெல்லாம், கூட வந்த நண்பர்கள் ஸ்டைலாக கூலிங் க்ளாஸ் அணிந்து சைட் அடிக்க 'மங்கலாகத் தெரிந்தாலும் ஹீரோவாக்கும்' என்று நானும் ஓசியில் வாங்கிப் போட்டு ஸ்டைல் காண்பித்ததின் விளைவு, கட கடவென்று -2.75க்கு வந்து பகலில் பசுமாடு தெரியாமல் போய்விடுமோ என்ற கதிக்கு கொண்டு விட்டது. அதன் பிறகு உசாராகி, வேலை, நல்ல உணவு, சொகுசெல்லாம் ஆனபிறகு பவர் கூடாமலும், குறையாமலும் ஸ்டெடியாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில்தான் தலைப்புச் செய்தி வருகிறது.

ஆயினும் கூலிங்க்ளாஸ் போடவேண்டும் என்ற ஆசை என்னை விட்டு அகலவே இல்லை, இரண்டு விதமான பவர் ஏற்றிய கூலிங் கண்ணாடிகள் என்னிடம் உண்டு. பார்ப்பதற்கு சாதரனமாகவே இருப்பதால் நண்பர்கள் போட்டுப் பார்த்து கண் வலி வந்த கதை எல்லாம் உண்டு. ஸ்டைல் என்பதைத் தாண்டி வெயிலில் என்னை மைக்ரேன் வராமல் காப்பாற்றிய ஆபத்பாந்தவன் அவைகள்.

ஆமாம், இப்பொழுதெல்லாம் எதையாவது படிக்கவேண்டுமென்றால் இரண்டு அடி தள்ளி வைத்துத்தான் படிக்க முடிகிறது. காதோரமும், முன் நெற்றி மேலும் நிறையவே நரை முடிகள், யெஸ், வெள்ளெழுத்துக்கு அரை வடிவத்தில் எற்கனவே உள்ள கண்ணாடியில் உள் வாடகையா? அல்லது, தனியாக படிப்பதற்கென்றே ஒரு பூதக்கண்ணாடி வாங்க வேண்டுமா என்ற முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தாயிற்று, கண் மருத்துவமனைக்குச் சென்றால் காட்டராக்ட் சிகிச்சை செய்து கருப்பு காகுள்ஸ் டைப்பில் கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்களின் மேனரிசம்களை மனது கவனிக்கத் துவங்கிவிட்டது. 

சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் இளம்பெண் முதல், பஸ்ஸிலோ ரயிலிலோ சந்திக்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் அண்ணாவிலிருந்து அங்கிள் என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள்.

2103ல் நானும் முதன் முதலில் தக்ளி நூற்றேன் என்று சரித்திரத்தில் பதியவே இந்த இடுகை. மயிறு மாதிரி தெரியற்து என்று தடுமாறுவதற்குள் வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி போட்டாகவேண்டும்.

-0_0-