பலா பட்டறை: 06/01/2011 - 07/01/2011

ஒரு பரதேசியின் பயணம் - 3 - வெள்ளியங்கிரி


.


ஒரு பரதேசியின் பயணம் - 3 - வெள்ளியங்கிரி!!

1990களில் சில வருடங்கள் கோவையில் வாசம் செய்திருக்கிறேன். வெள்ளியங்கிரி போன்ற ஒரு இடம் இருப்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஜெய் வெள்ளியங்கிரி என்று கவுண்டர் ஏதோ ஒரு படத்தில் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு வரும் போதுதான் அந்த பெயரையே கேள்விப் பட்டிருக்கிறேன். அத்தோடு சரி. ஸ்வாமி ஓம்கார் தென் கயிலாயப் பயணம் என்று இடுகை போட்டதும் சென்று வரலாம் என்று எண்ணம் தோன்றியது. ஏற்கனவே பர்வத மலை ஏறிய கர்வம். எவ்வளவோ ஏறிட்டோம் இது ஏற மாட்டோமா? 

பிரபல பதிவர் நண்பர்களிடம் யார் வருகிறார்கள் என்று பேசியபோது இரு முக்கிய தலைகள் வருவதாக சொன்னார்கள் அதில் ஒரு நண்பர் டிக்கெட்டை தட்காலில் புக் செய்துவிட்டு பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக சில காரணங்களால் தன்னால் வர இயலவில்லை என்று சொல்லி டிக்கெட்டை எங்களிடம் சேர்பித்தார் அவர் ஏன் வர இயலாமல் போனது? என்பது எனக்கு பயணத்தின் முடிவில் தெரிந்தது. :))

கோவை சென்று இறங்கிய உடனே லேசான சாரலுடன் காலை இதமாக வரவேற்றது. ஸ்வாமிஜியின் புண்ணியத்தில் குளியலும், காபியும், காலை உணவும் முடித்து, ப்ரணவ பீடம் சென்று வெள்ளியங்கிரியைப் பற்றிய சிறிய அறிமுகம் முடிந்து, ப்ரணவ பீடம் சார்பில் ஒரு பை அளிக்கப் பட்டது. அதில் உலர் பழங்கள், நெல்லிக்கனி, ஆரஞ்சு மிட்டாய்கள், சப்பாத்திகள், புளிப்பு சுவையுடைய சில திண்பண்டங்கள், பொரி கடலை, என்று மலை ஏறும்போது பசியாற உதவும் உணவுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மற்றவர்களுடன் பயணம் ஆரம்பித்தோம்.  

கோவையி்லிருந்து ஈஷா செல்லும் வழியில் சட்டென்று ஒரு இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரம். வெள்ளியங்கிரி கோவில் நீண்ட விசாலமான பிரகாரம், வித்தியாசமான வடிவில் நவக்கிரக சன்னதி, வழக்கமான மலைப்பாதை ஆரம்பத்தில் காணப்படும் ஒரு வளைவு, செங்குத்தாக ஆரம்பிக்கும் சீரான படிக்கட்டுகள் சட்டெனத் தெரியும் பச்சைப் பசுமை மலை உச்சி ப்ஃபூ இந்த மலைக்கா இம்புட்டு பில்டப்பு? போலாம் ரைட்..

ஆரம்பம்

முதல் படி

ஆயிரத்துச் சொச்சம் படிகள் கொண்ட முதல் மலை ஏற ஏற முதலில் வரும் ஒரு இளைப்பாறும் இடம் சிவதீர்த்தம் என்று எழுதப்பட்ட ஒரு சிறிய பாலம் இயற்கையான சுவைமிகுந்த நீர் ஊற்று.  சிறிது சிரமப் பரிகாரம் செய்து மீண்டும் ஏற ஆரம்பிக்கலாமென்றால் மழை கிளம்பு காத்துவரட்டும் என்று அடிக்க ஆரம்பித்தது. பில்டிங்கும் பேஸ்மெண்ட்டும் வீக்காகி வெடிக்கும் நிலையில் முதல் மலை உச்சியில் வருகிறது ஒரு பிள்ளையார் கோவில். எதிரே ஒரு தென்னம் ஓலை வேயப்பட்ட கடை (காற்றோ, களிறோ) சிதறி சின்னாபின்னமாகி இருந்தது. 

ஏற்றி விடப்பா!


குளிர் மழை மேலும் குளிர் மேலும் மழை, சீரான படிக்கட்டுகள் மறைந்து, சதுரமாக வெட்டப்பட்ட பாறைக்கற்களால் அமைக்கப் பட்ட படிகள் போன்ற அமைப்பு ஏன் ஸ்வாமிஜி செப்பல் இல்ல ஷூ போட்டு ஏறக்கூடாது? இது சிவபெருமானின் இருப்பிடம் என்று பதில் சொன்னால் இமயத்திலிருக்கும் கயிலயத்தில் ஷூ போட்டுக்கொண்டே ஏறி தரிசனம் செய்கிறார்களே? என்ற கேள்வி அடுத்ததாக வரும் என்று ஞானதிருஷ்டியில் அவர் அறிந்திருக்கக்கூடும். இம்மாதிரியான மூலிகைகள் நிறைந்த இயற்கை மலைப்பாதையில் பாதங்கள் நேரடியாகப் பட நடப்பதும், உடலில் அந்தப் பகுதியின் காற்று நேரடியாகப் படுவதும் மிக நல்லது என்று சொன்னார். செருப்பில்லாமல் நடக்கமுடியாது என்ற மேட்டுக்குடி மன நிலையை உதறி ஷார்ட்ஸ் பனியனுடன் எளிமையாக(?) ஏற ஆரம்பித்தேன். ஒரு கம்பு எடுத்துக்குங்க என்ற சொல்லைத் தட்டாது அங்கே இருந்த ஒரு மூங்கில் கம்பெடுத்து ஊன்றி ஏற ஆரம்பித்தேன்.

படிப்பாறையில் எறும்புச் சித்தர்!


 மூன்றாவது மலைப் பாதை ஒழுங்கற்று வேர்கள், கற்கள், வழுக்கும் சேறு நிறைந்த பாதையாக மாற ஆரம்பித்தது. ஓரிடத்தில் பாறைகளிலேயே படிகள் செதுக்கி ஒரு வெட்டவெளியும் வந்தது. இப்பொழுது குளிரும் காற்றும் மழையும் கூட்டணிசேர பள்ளத்தாக்கில் கோவை வெயில் வெளிச்சத்தில் பளிச்சினு ஒரு மாற்றமாய் வெப்பத்திற்கு ஏங்க வைத்தது. 

காடு!
ம்முடியல!


மூன்றாவது உச்சியிலும் ஒரு சிதிலமடைந்த குடிசை உட்கார முடியாத அளவுக்கு மழை, ஈரம் அருகில் ஒரு பெரிய பாறை வழக்கம் போல ஒரு நீர் ஊற்று. இம்முறை ஸ்வாமி ஓம்கார் ஒருவர் மட்டுமே உள் நுழையும் அளவுக்குள்ள ஒரு குகையைக் காண்பித்து நான் முதலில் சென்று குரல் கொடுத்ததும் ஒவ்வொருவராக வாருங்கள் என்றார். ஒரு பெரிய பாறை அடியில் இரு வழியாக உள் நுழைய முடியும் அந்த குகையின் அடிவாரம் என்பது சுமார் இருபது அடி ஆழத்தில் இருந்தது. கால்களை முதலில் உள்ளே நுழைத்து மெதுவாக இறங்கினால் உள்ளே வளைந்து சென்று முடியும் இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் எதிரே நந்தி. லிங்கத்தின் வலதுபுறத்தில் அம்மன், லிங்கத்தின் தலையில் இயற்கையாகவே பாறைக் கசிவிலிருந்து வழிந்துகொண்டே இருக்கும் நீர். லிங்கத்தில் இடதும் வலதும் இரண்டு பாதைகள் ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவிற்கு உள்ளே சென்றுகொண்டே இருக்கிறது எங்கே செல்லும் இந்தப் பாதைகள் யாம் அறியோம் பராபரமே! சக்தி இல்லையேச் சிவமில்லை!


இந்த வர்ணணைகள் நீங்கள் எங்கோ கண்டது போல ஒரு தோற்றமளித்தால் ஆம், சூப்பர் ஸ்டார் பாபாஜி குகையில் சென்றதை விஜய் டிவியில் பார்த்திருப்பீர்களே கிட்டத்தட்ட அதனைப்போன்றே ஒரு இடம். வெளியில் இருக்கும் குளிர் உள்ளே இல்லை. டார்ச் லைட் இல்லையென்றால் வெளிச்சமில்லை உள்ளிருக்கும் அந்தப் பாதைகளிலிருந்து எதுவேண்டுமானாலும் வரலாம். திடீரென்று மழை நீர் உள்ளே புகலாம் ஆனாலும் அதி அற்புதமாக அதிகம் பேரால் அறியப்படாத இடமாக மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவது போன்று கால்வழியே உள் சென்று தலை வழியே வெளிவரும் அந்தக் குகை ஒரு மறுபிறப்பினை ஒத்த தரிசனம் என்றார் ஸ்வாமி. எல்லா வகையிலும் அது உண்மைதான். 

வெறும் காற்றடைத்த பையடா!

முழுவதுமான வழுக்குப் பாதை இனி ப்ரயாணம் எவ்வாறு இருக்கும் என்பதை கட்டியம் கூறுவது போல் நான்காவது மலையில் நாலு கால்களில் நடக்க ஆரம்பித்திருந்தோம். குளிரும் மழையும் அதிகம் இருந்ததால் உடலில் நீர் இழப்பு இல்லை. மாறாக விரல்கள் பாதங்கள் மரக்க ஆரம்பித்தது. திடீரென்று பாதங்களின் விரல்கள் எதிர் திசையில் தானாகவே இழுத்துக்கொண்டது. முதல் மலையில் வெடிக்கக் காத்திருந்த விலா எலும்புகள் இப்பொழுது அமைதியாகி இருந்தன. ஒரு வெட்டவெளி கண்ணில் பட்டது வலதுபக்கம் இருந்த ஒரு பெரிய சரிவில் அடர்ந்த மரங்களையுடை காடு. 

ஸ்வாமி ஓம்கார்

மலைப் பாதை!


நான்கு முடிந்து ஐந்தாவது மலையின் ஆரம்பத்தில் எங்களை வருக வருக என்று வரவேற்றனர் அரசியல்வாதிகள். யெஸ் ஜம்ப்பி ஜம்ப்பி ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள். மழை, ஒதுங்க இடமில்லை, பாறையில் சாய்ந்தாலோ ஓரிடத்திலேயே நின்றாலோ குருதி உறிஞ்ச ஒட்டும் அட்டைகள், ஓம் நமச்சிவாய ஆரம்பம் ஆறாவது மலை. 

முதல் மலையில் முதலில் வரும் இடம்!


ஏற்ற இறக்கங்களுடன் சமதளப்பாதைகள், அதள பாதாளம் அற்புதமான இயற்கைக் காட்சிகள், ஆளையே தூக்கும் அசுரக்காற்று வெளிச்சம் குறைய ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஏழாவது மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே இருக்கும் ஒரு சுனையில்தான் குளித்துக் குளிர்பெற்று குளிர் நீங்கி ஏழாம் மலை ஏறி ஈசனைக் காணவேண்டும். ஆனால் இயற்கை எங்களுக்கு வேறு கட்டளை இட்டது. ஏழாவது மலை அடைய முடியாத அளவுக்கு மழையும் காற்றும் மேகமுமாய் ஆக்ரோஷமாக இருந்தது. சுமார் 24 நபர்கள் அடங்கிய எங்கள் குழுவில் சில வயதானவர்களும் இருந்தார்கள். ஏழாம் மலை ஏறி தங்குவதாக இருந்த எங்கள் திட்டத்தில் இப்பொழுது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வந்தது. ஸ்வாமிஜி இருக்கும் நிலையை விளக்கிச் சொல்லி ப்ராக்டிகலாக நாம் இப்பொழுதே திரும்பிவிடலாம் என்று சொன்னதை அனைவரும் ஏற்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் ஏழாம் மலை எட்டிப் பார்த்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். 

அந்தப் பாதாள குகை அருகில்!


இரண்டே மணி நேரத்தில் அசுரப் பாய்ச்சலில் எங்கும் நிற்காமல் ஐந்து மலை இறங்கி மீண்டும் பிள்ளையார் கோவில் வந்து கால் நீட்டிப் படுத்தபோது குண்டலினி மற்றும் உடலில் ஓடும் சக்கரங்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே அதெல்லாம் இதுவாக இருக்குமோ என்று சிட்டி ரோபோ போல பார்ட் பார்ட்டாக உடலின் பாகங்கள் உணர ஆரம்பித்தபோது உடல் நடுங்கத் தொடங்கியது. 

அரோகரா அதோ பிள்ளையார் கோவில் ஓம் நமச்சிவாய என்ற குரல் வந்த திசையில் சில இளைஞர்கள் மலை ஏறி வருவதைக் கண்டு அவர்களை கோவிலிலேயே ஓய்வெடுத்து காலையில் மழை இல்லையென்றால் மலை ஏறுமாறும் இல்லையென்றால் இறங்கிவிடுமாறும் சொல்லி வானிலை மோசமாக இருப்பதும், தங்க இடமில்லாமல் இருக்கும் நிலையையும் புரியவைத்தோம் சரிங்ணா என்று சொல்லி அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மீண்டும் குளிர ஆரம்பித்தது.. ஒரு மணி நேர ஓய்விற்குப் பிறகு இறங்கிவிடலாம் என்று காலை எடுத்தபோது தெரிந்தது ஓய்வெடுத்தது எவ்வளவு தவறு என்பது. 200 அடிகள் இறங்கிய உடன் உடல் மீண்டும் ஒத்துழைத்தது. ஒரு வழியாக 12 மணி அளவில் மலை அடிவாரம் அடைந்து கால் நீட்டிப் படுத்தோம். உறங்குவதும் விழிப்பதுமாக ஒரு மன நிலை. மழை பெய்துகொண்டே இருந்தது.

 சிறிய குழுக்களாக மக்கள் மலை ஏற வந்துகொண்டே இருந்தார்கள். மனதிலேயே கோவில்கட்டி ஈசனை வழிபட்ட ஒரு நாயனாருக்கு மனம் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஆரம்பித்திருந்தது. தூணிலும் துரும்பிலும் உன்னிலும் என்னிலும் இருக்கும் இறைவன் என்ற வசனங்கள் மனதினுள்ளே சாகா வரம் பெற ஆரம்பித்திருந்தது. 

இது ஜஸ்ட் லைக் தட் ட்ரெக்கிங் அல்ல, ஏன் விரதம் இருக்கவேண்டும்? ஏன் வெறும் காலில் ஒரு மண்டலம் நடக்கவேண்டும்? ஏன் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும்? ஏன் இந்தக் கடவுளின் பெயரில் இத்தனைக் கட்டுப்பாடுகள்? இதெல்லாம் காரணம் புரிய ஆரம்பித்தது. இயற்கையென்றால் இயற்கை இறைவனென்றால் இறைவன். இரண்டும் எப்பொழுதும் காண்பதுபோல இங்கே காணக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மெனெக்கெட்டால் மேன்மையானது கிடைக்கும். வெள்ளியங்கிரிப் பயணம் அதை உணர்த்தியது. இன்று போய் நாளை வா என்பது போல அது மீண்டும் ஒரு முறை பூரணமாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்கவே முழுமை அடையாத ஒரு பயணத்தை எனக்கு வழங்கி இருக்கிறதாகவே நான் உணர்கிறேன். சரியான முன்னேற்பாடுகளுடன் அடுத்தமுறை ஒரு முழுமையான பயணம் முடித்து சிறப்பான மன உணர்வுகளை பகிர விருப்பம். எல்லாம் அவன் செயல்.

நன்றி மறப்பது நன்றன்று:-

டிக்கெட் எடுத்துக் கொடுத்த ஏற்கனவே ஏழு மலை ஏறி இறங்கி இருந்த அந்தப் புண்ணியவான் + பிரபலப் பதிவருக்கு சூட்சும சக்தி ஏதேனும் சேதி சொல்லி இருந்திருக்கக்கூடும், அதனாலேயே அவர் பயணம் கடைசி நேரம் தடைப் பட்டிருக்கிறது:))

கோவையில் காவி சட்டை வேட்டியில் கையில் கம்புகொண்டு ஒரு சாமியார் சாப்பாட்டுக்கு ஓட்டல் தேடியதை நீங்கள் கண்டிருந்தால் அது சாட்சாத் நானேதான். உடனிருந்தவர் பதிவர் எறும்பு ராஜகோபால். நான் இஸ்துகினு இஸ்துகினு கம்புகொண்டு நடப்பதை ஏளனத்துடன் பார்த்து அடுத்து சதுரகிரி போறோம்தானே? என்றார்! 

மாலை பதிவர்(?) சகோதரி விஜி அவர்கள் வீட்டிற்கு சென்று அருமையான காபி குடித்தோம்,  காங்கிரஸ் இணைய தளபதி சஞ்செய் வந்தார், சகோதரி சக்தி மற்றும் தாரிணிப் ப்ரியாவுடன் செல்லில் அழைத்துப் பேசி ஒரு மினி மாநாடு முடிந்து சுவையான இரவு உணவு முடித்து விடைபெற்று வீடு வந்தோம். 

எங்கிருந்தோ பெயர்த்தெடுத்து இந்தத் தமிழகத்தில் வெள்ளியங்கிரியை வைத்தது யார்? இதைப் படித்து வெள்ளியங்கிரி ஏறக்கூடாது என்று முடிவெடுத்தால் நீங்கள் தமிழகத்திலிருக்கும் ஒரு மிக மிக முக்கியமான ப்ரயாணத்தை இழக்கிறீர்கள். ஏறலாம் என்று முடிவெடுத்தால் அதி அற்புதமான ஒரு தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும் இயற்கையோ, ஈசனோ, சுற்றுச்சூழலோ, ஆரோக்கியப் ப்ரயாணமோ, ட்ரெக்கிங்கோ ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கும் உரிமை உங்களுக்கிருக்கிறது.                   


ஒன்றுமில்லாததில் 
ஒன்றுமில்லாததிருந்திருக்கவேண்டும்
அந்த ஒன்றுமில்லாததிலும்
ஒன்றுமில்லாததிருந்ததா என்பது
என்றுமில்லாதது மட்டுமே
அறியும்!


தென்னாடுடைய சிவனே போற்றி!

.