பலா பட்டறை: 06/01/2010 - 07/01/2010

நான் வரைந்த சில படங்கள்..


1990 களில் நான் வரைந்த சில படங்கள். பல படங்கள் ஆனந்த விகடனில் திரு.மணியம் செல்வன் அவர்கள் வரைந்தவை. இவை எல்லாமே புத்தகத்தைப் பார்த்து கருப்பு நிற ரெனோல்ட்ஸ் பேனா கொண்டு வரைந்தேன். இப்பொழுதும் எனக்குப் பிடித்த ஓவியர் ம.செ தான். :))

நன்றி!

:))

.

மோதல்..

மனங்களை முன்னிருத்தி..

கடவுள் விற்றான்
காதல் விற்றான்

மனிதம் விற்றான்
இயற்கையை விற்றான்

அகந்தை விற்றான்
அழிவை விற்றான்

ஆறறிவென்றே கூவிக்கூவி
அனைத்துயிர்க்கும் ஏழரையானான்

கடவுள் உண்டு என்றான்
கடவுள் இல்லை என்றான்

கருப்புச்சட்டை இரண்டுக்கும் போட்டு
இருட்டுக்கடை அல்வா விற்றான்

கடைசியாக

உரிமைகள் விற்று
அடிமைகள் ஆகி
குரெலெழுப்பாது குப்புறக்கிடக்க
தண்ணீரில்லாக்காட்டிலும்
டாஸ்மாக் பெற்றான்...!


எதிரெதிரெதிர்ரெதிர்..!!

(யாஹூஹூஹூஹூ :)))


.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???ஒரு இனத்தை அழிக்க போர் தொடுக்க வேண்டியதில்லை. பதிலாக ஒரு டிவி பொட்டியும் சரக்கு புட்டியும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும் போல!!

ஆமாம் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. தமிழகத்தின் முதன்மையான ஒரு சானல் காலை முதல் இரவு வரை மக்களுக்கு உபயோகமே இல்லாத குடும்ப வாழ்க்கையை சிதைக்கும், மனித மனங்களில் நஞ்சை விதைக்கும் கேவலமான மெகா தொடர்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது. இலவச தொலைக்காட்சி புண்ணியத்தில் இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் இதனைப் பரப்பும் (தொலைக்காட்சி பார்த்தால் பொது அறிவு வளருமாம்!) பகுத்தறிவு வேலையும் செவ்வனே நடக்கிறது. விளிம்பு நிலை மனிதரிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை இம்மாதிரி ஊடகங்களால் பரப்பப்படும் அபத்தக்கதைகள் மூலம் மனச்சிதைவு அடையும் மக்கள் ஏராளம்.

இவர்களால் தீண்டாமையையோ, கடவுள் மறுப்பையோ, இயற்கை வேளாண்மையையோ, ஹிந்தி எதிர்ப்பையையோ, தமிழ் மொழியின் சிறப்பையோ, சுய வேலை வாய்ப்புகளுக்கான வழிமுறைகளையோ, நுகர்வோர் உரிமைகளையோ, நகைச்சுவையையோ நிகழ்ச்சியாகக் காண்பிக்க முடியாது. ஏனென்றால் இவற்றிற்கு டிஆர்பி கிடைக்காது. எனில் இதெல்லாம் மக்கள் விரும்பவில்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். (கொள்கை வேறு, டிஆர்பி வேறு ஹி ஹி)

கள்ளக்காதல், குடும்ப குழப்பங்கள், திருட்டு, கொலை, சூழ்ச்சி, அடிதடி, குடிக்கும் காட்சிகள், ரவுடியிசம், பழிவாங்கும் படலம், மர்ம மாந்த்ரீகம் மற்றும் இதர புண்ணாக்குகள். சுபம்! இதற்குத்தான் டிஆர்பி ரேட்டிங்குகள் உச்சம். முதன்மையான சானல். உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காக இவர்கள் செய்யும் சேவைக்கான பரிசு டிஆர்பியில் முதலிடம்!! (என்னது நியூஸா? அடப் போங்க பாஸ் :-) )

அடுத்தது டாஸ்மாக். கோவிலில் கூடும் கூட்டம் கண்டு பொங்கி எழுந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இங்கே அதை விட கூட்டம் பொங்கி வழிந்து வாந்தி எடுத்து வாசனை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து கிடக்கிறது. நூலகம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால், ஊருக்குள் நுழையும் வாயிலிலேயே ஒன்றுக்கு இரண்டாக கடைகள். இது இங்கு மட்டுமல்ல மிகவும் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கூட நுழை வாயிலிலேயே சாராயக் கடைகள்தாம் நம்மை வரவேற்கின்றன. என்னே மகேசன் தொண்டு!

புறநகர், கிராமங்களில் கிடைக்கும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மிட்டாய்களில் எந்த கம்பெனி பெயரும் இல்லை, எழுத்துக்கள் மாற்றி பிரபலமான நிறுவனங்கள் பெயரில் வரும் பிஸ்கெட்டுகள், கலப்பட பொருட்கள் என்று பரிதாபமாக இருக்கிறது. போதாதகுறைக்கு போலி மருத்துவர்கள். அது சரி போலி பண்டங்கள் தின்னும் மனிதர்களுக்கு போலி மருத்துவர்கள் போதுமென்று விட்டுவிட்டார்கள் போல. முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல போலியை போலியை விட்டே எடுக்கலாம். ஜெய் ஜக்கம்மா.

இது என்னமாதிரியான கலாச்சாரம் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழினம் என்று புளங்காங்கிதம் அடைபவர்கள் இம்மாதிரி குடித்து, சீரழிக்கும் கதைகள் கேட்டு இந்த இனம் இன்னும் தழைக்கும் என்று எண்ணுகிறார்களா?

தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்களேன்!


மைக் டெஸ்டிங்:

ஒன்று::

சரி விடுங்க. சோற்றால் அடித்த பிண்டம் என்று இனியும் சொல்ல முடியுமா? சோற்றைத் தாண்டி இப்பொழுது நிறைய விஷயங்களில் அடிக்க ஆரம்பித்தாயிற்று. அழிக்கும் வரை போர் தொடரும்.

இரண்டு::

ஏம்ப்பா உத்தமரே உனக்கு பிடிக்கலைன்னா உன்ன யாரு பாக்கச்சொன்னது? என்று கேட்கும் நண்பர்களுக்கு, நீங்கள் போராடும் எல்லா காரணத்துக்கும் இந்த பதில் பொருந்தும்தானே?.    

மூன்று::

அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )


.

பாம்பு என்றால் - பொதுபுத்தி..இதற்கு முந்தின இடுகையில் கூறியது போல பாம்பு என்றால்? என்ற புத்தகம் படித்து முடித்தேன் (மொத்தமே 72 பக்கங்கள்) மிகவும் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தப் புத்தகம் வெறும் பாம்புகள் அதன் வகை, விஷங்கள் என்று கூறிச்செல்லாமல் பாம்பைப் பற்றிய வெகுஜன மூட நம்பிக்கைகளை வெகுவாகச் சாடியது.

பாம்பினங்கள் 15கோடி ஆண்டுகளுக்கு முன் ஊர்வன இனத்திலிருந்து பரிணமித்தவை. மனித இனத்தின் வயது வெறும் 2 லட்சம் ஆண்டுகள்!!

ஓரிடத்தில் பாம்புகள் வளமாக இருக்கிறது என்றால் பல்லுயிரியம் செழித்து இருப்பதாக அர்த்தம். அன்றி இல்லாமலிருப்பது அவ்விடத்தின் பாழ்பட்ட தன்மையாக கருதவேண்டியதாகும். (சிமெண்ட் போட்டு, செடி அழித்து கொசு வளர்க்கும் நகரங்கள்:)

பாம்புகளைப்பற்றிய நம் அறிவுதனை எள்ளி நகைக்கும் நூலாசிரியர் பாம்புகள் பழிவாங்கும், ஆதிசேஷன் கதைகள், நாக ஜோதிடம், கடிக்குப் பச்சிலை மருந்துவம், மந்திரம் சொல்லுதல், பால் குடிக்கும் பாம்புகள், பாம்பைக்கண்டால் அடித்துக் கொல்லும் நம் வீர சாகசங்கள், அதுவே நல்ல பாம்பாக இருந்தால் அதைச் சாகடித்து அதற்கு சடங்குகள் செய்யும் அபத்தங்கள் (இல்லன்னா பழிவாங்கிடும்!), மேலும் அரசாங்கம் அதிரடிப்படைகளுக்கு ’கோப்ரா’என்றும், கோவையில் சாலையில் எழுதப்பட்டிருந்த வேகம் ஒரு நாகம் வேண்டும் விவேகம் என்று பாமரத்தனமாக பாம்பினைவைத்து பிரச்சாரம் செய்வதையும் மிக கடுமையாகச் சாடுகிறார்.

நிறைய தகவல்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் பாம்பின் வகைகள், அதில் மிகக் குறைந்த அளவே உள்ள விஷப் பாம்புகள் வகைகள், அவைகளிலும் அவை மனிதனை ஏன் கடிக்கின்றன? விஷப்பாம்புகளுடன் தனி அறையில் வித்தை காட்டும் சாகசங்கள் உண்மையில் என்ன? உண்மையில் பாம்பு கடித்தால் இறப்பது விஷத்தினாலா? கால தாமத்தினாலா? பயத்தினாலா? கடிபட்டால் என்ன செய்யவேண்டும்? பச்சைப்பாம்பு கண்ணைக் கொத்துமா? பாம்புகள் பிண்ணிப் பிணைவது எதற்காக? நல்ல பாம்பும் சாரையும் ஜோடிகளா? பாம்பு விஷத்தை அப்படியே முழுங்கினால் இறப்பு வருமா? அந்த விஷத்தில் என்னதான் இருக்கிறது? தமிழ் இலக்கியங்களில் பாம்புகளைப் பற்றிய குறிப்புகள் குறைவாக இருப்பது போன்றவைகளை அலசி இருப்பதோடு வெறும் 4 வகை நஞ்சுடைப் பாம்புகள் கடித்து ஒருவர் இறப்பதென்பது பாதிக்கப்பட்டவரின் மன உறுதி, பொது அறிவினைப் பொறுத்ததே ஆனால் அந்த 4 வகைகளுக்காக/  கண்ணில் காணும் எல்லா பாம்புகளையும் அடித்துக் கொல்லாமல் உணவு தானியங்களைப் பாழ்படுத்தும் எலி போன்ற கொறி விலங்குகளை அழிக்கும் இயற்கைக்கு மிகவும் உதவியாய் இருக்கும் பாம்புகளை அப்புறப் படுத்தி உதவியை செய்தாலே போதும் அவைகளும் இங்கே வாழ்ந்து விட்டுப்போகும்.

தவறான நடை முறைகளால், கவனமும், பாதுகாப்பும் இன்றி எதையும் செய்யும்போது தற்செயலாக தண்டனைப் பெறுகிறோமே, அதில் ஒன்றுதான் பாம்புக்கடி!!!!!   

அரவங்கள் காக்கப்படவேண்டும்.

கண்டிப்பாய் வாங்கிப் படியுங்கள்.

பாம்பு என்றால்?
-ச.முகமது அலி.

இயற்கை வரலாறு அறக்கட்டளை
பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம்.
04259-253252 / 253303 விலை.ரூ.50/-

---

உஸ்ஸ்ஸ்ஸ்..

எதேச்சையாய் உருவான இரண்டு
கிருமிகள் கீழே விழுந்த ஆப்பிளைத் தின்று
வேடிக்கைப்பார்த்த என்னை சாத்தான் என்றது.
ஏதும் சொல்லாததை இறைவன் என்றது.
தம்மையோ மனிதர் என்றழைத்துக்கொண்டது!!!
சில புத்தகங்கள்..

சமீபத்தில் பிரபல பதிவர் மயில் ராவணன் அவர்களை சந்தித்தபோது அவரிடமிருந்து சில சுவாரஸ்யமான புத்தகங்கள் படிக்கக் கிடைத்தது. அவற்றிலிருந்து என்னைக் கவர்ந்தவைகள் சில..

கீழே உள்ள கவிதைகளை எழுதிய கிருஷாங்கினி அவர்களுடன் சிறிது நேரம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. அவரின் கணவர் சிறந்த ஓவியர் என்பதும் தெரிய வந்தது. பிறிதொரு நாளில் அவரை சந்திக்கும்போது அவரின் ஓவியங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். கலைக்குடும்பம்! :))


முழு மூங்கில் வெட்டி, பிளாச்சுகளாக்கி
சாமிக்குச் சப்பரமும் சாவுக்குப் பல்லக்கும்
கட்டிடலாம் - பூக்கொண்டு;
பூவற்று கயிறு கொண்டு கட்டி
பாதாளச் சாக்கடை அடைப்பும் எடுக்கலாம்
எதற்கும் வளையும் மூங்கில் - எனவே..

--

மூடிய தோலைத் தவிர சிதறிய
சதையும் ரத்தமும் எல்லாமும்
கூழான எதிரெதிர் மோதல்
கருத்த சாலையில்
சிவப்பைப் பரப்பி,
முழுவதும் மாடுகளை ஏற்றிய லாரியும்
சில மனிதர்களுடன் வேனும்.
சொல்லப்பட்டவை ஆறு உயிர்கள்
வழக்கம்போலத் தன்னினம்.

--

களிமண் பூமியில் சூளையிட்டு
அறுத்தெடுக்கும் செங்கற்கள்
களிமண் விளைபூமியைப் பிரிக்கும்
அடுக்கடுக்காய் சிமென்ட்டுடன்
அழகான சுவராகி - பயிரற்று..

--

கவிதைகள் கையெழுத்தில் - கிருஷாங்கினி

சதுரம் பதிப்பகம்
34, சிட்லப்பாக்கம் 2 வது பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை - 600 047.
044-22231879 / nagarajan63@gmail.com
--
அடுத்த புத்தகத்தில்..


ஜென் கவிதைகள்
-யாழன் ஆதி

எல்லோரும் உறங்கும் நேரம்
யாருக்குமே தெரியாமல் வந்தது
மழை
மிதந்து சென்றன குமிழிகள்
எவருமே பார்க்காவிடினும்

--

நடுக்கும் குளிர்
சுடச்சுட நெருப்பு
எரியும் புத்தர் சிலைகள்
குளிர்காய்கிறார் துறவி.

--

புறப்பட்ட இடம் மறக்கும்
புதிய மனம்
பயணம்.

--

எல்லாவற்றையும் விட்டுவிட்டு
நடந்தார் துறவி
விட்டுவிட்டதையும்.

வெய்யில் கவிதைகள் என்ற தலைப்பில்.

கொலை செய்வதற்கான
காரணங்களை
பசியும் காமமும் உருவாக்கித்தரும்
பயிற்சிக்கு வேண்டுமாயின்
நீங்கள் மிகவும் நேசிக்கும்
வளர்ப்புப் பிராணியொன்றை
கொன்று பழகலாம்
குற்ற உணர்ச்சியற்று
வாழ்வதற்கான ஒரே வழி
நம்பிக்கையோடு உங்கள் மடியில்
கண்ணயரும்போது
கடவுளின் கழுத்தை அறுத்துவிடுங்கள்

--

பாகற்கொடியின் சுறுள் பற்றலை
மெல்ல அவிழ்ப்பது போல
ஆறிய காயங்களிலிருந்து
தையலை பிரிப்பதுபோல
திரிவிழாக் கூட்டத்தில்
என் விரல்களை
நானும் அறியாதபடிக்கு
பிரித்தெடுக்க முயலுகையில்
புரிந்தது
இன்று நீ
கணக்கிலடங்கா முத்தங்களைப்
பொழிந்ததின் நிமித்தம்
உன்மீது குற்றமில்லை அம்மா
பொம்மைகளை வெறித்தபடி
உன்னை தொலைத்தது நான்தான்.


- மணல் வீடு
இருமாத இதழ் / இதழ் வடிவமைப்பும், தரமும் அருமை.

இதழ் எண் 12&13
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 456.
ஆண்டு சந்தா: ரூ.100/-
98946 05371 / manalveedu@gmail.com

----

இது காசு கொடுத்து வாங்கியது. :-)


இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி திண்டுக்கல் ஆர்.எஸ்.நாராயணன் அவர்கள் எழுதியுள்ள இந்த புத்தகம் மாடியிலேயே காய்கறி செடிகள் மற்றும் மரம் வளர்ப்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள்/உரம்/சந்தேகங்களை போக்கும் பதில்களையும் அழகாக தொகுத்திருக்கிறார். விரைவில் முழம் பூ 50 ரூபாம்மா/ வெண்டைக்கா கிலோ 150 ரூவாம்மா என்ற விலைகள் கேட்க்கும்போது இந்தப் புத்தகம் எல்லார் வீட்டிலும் இருக்கும் என்பது என் கருத்து. கண்டிப்பாய் படியுங்கள்.

தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்,
41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
044- 26251968 / ncbhbook@yahoo.co.in

ச.முகமது அலி என்பவரின் பாம்பு என்றால்? என்ற புத்தகம் வாசிப்பில் இருக்கிறது. இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியீடு. படித்து முடித்தபின் பகிர்கிறேன். கிராமத்திற்கு வந்து 13 நாட்களில் 4 பாம்புகளைப் பார்த்ததும் உடனே தேடி எடுத்துப் படிக்கத் துவங்கிவிட்டேன். :)))


நன்றி!.


.

நிழல்..பொங்கிய ஒரு வேரிலமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர் சிலர்
எப்படி வெட்டலாம்
எவ்வளவு கிடைக்கும் என்று..

எந்த வெறுப்புமின்றி
நிழல் தந்துகொண்டிருந்தது
மரம்..!

--

ந்தப் பறவைகள்
வான் நோக்கிப் பறந்ததாய்
நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
அவை தரை நோக்கியே
பறப்பதறியாது..!

--

ருட்டில்
கண்மூடி தோள் சாய்ந்த
குழந்தையிடம் ஏன் என்று
கேட்டதற்கு பயமாயிருக்கிதென்றான்
கண்மூடினாலும் இருட்டாகத்தானிருக்கும்
என்பதை நான் அவனிடம்
சொல்லவில்லை...!

--


.

கூடு..ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!
.

கூடு..ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!
.