பலா பட்டறை: 04/01/2010 - 05/01/2010

வலை வனம் (150 ஆவது பதிவு)

முகங்களால், எழுத்துக்களால், குரல்களால் இந்த வனம் முழுவதும் என் மேல் பூச்சொறிந்த அனைவரையும் நினைத்துப்பார்க்கிறேன். இதென்ன கணக்கு?? என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளி என்றுதான் நம்மால் யோசனை செய்ய முடிகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று என்று ஆரம்பித்து நூற்று ஐம்பதாக இது நிற்கிறது. இது போன்ற கணக்குகள் எல்லாமே வேடிக்கையாகவும் தோன்றுகிறது. மனித இனமென்ற ஒன்று இல்லையென்றால் இங்கு நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலமென்றெல்லாம் எதுவுமில்லாது அது அது அதனதன் வாழ்வில் சிறப்பாய் வாழ்ந்துகொண்டிருந்திருக்கும். நாம் தான் பெயர், ஒலிக்குறிப்பு, எண்ணிக்கை., வகைப்படுத்துதல் துவங்கி அவைகளின் அனுமதி இன்றி காப்புரிமை வரை சென்றுவிட்டோம்.:)

போகட்டும். இன்னதுதான் என்றில்லாது எழுதத் துவங்கியதின் விளைவு, வெயிலிலாலா, வெண்ணையிலாலா என்றறியாது எங்கெங்கோ பயணப்படுகிறது. இதுவரை சகித்துக்கொண்டு இனியும் சகிக்கப்போகும் நட்புகளுக்கு மிக்க நன்றி.:)

எத்தனையோ கவனமாயிருந்தும், உரிமையின்பால் கொண்ட அன்(ம்)பு பாய்ந்து என்னாலும் சில கீறல்கள் விழுந்தது, மீண்டும் புரிந்து கொண்டு அரவணைத்த நட்புகளுக்கு என் நன்றி! (மேலுள்ள படம் என்னைக்குறிப்பதேயன்றி வேறல்ல.:)


---

தெள த ஜிங் - ஞானமும் நல் வாழ்க்கையும் என்ற புத்தகத்திலிருந்து::

முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு
மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு
சுவரில் சுவரில்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையில் பயன்பாடு.

எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்பாடாகிறது.


- கண்ணதாசன் பதிப்பகம். விலை.ரூ.30/-


நன்றி!

அன்புடன் - ஷங்கர்.

---.

வெண்ணை (0.07) (கூடு தாவல்)
ன்ன செய்யப்போகிறேன்? என்ற கேள்வி எழும்போதெல்லாம் அன்றைய தேவைக்கான இரை என் கண்முன்னே விழும் அல்லது நானே அதனை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். இதுதான் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளின்றி, வருவதை வரவில்வைக்கும் வித்தை குரூரமாயினும் எனக்கு ஏற்புடையதாயிருப்பதற்கு காரணம், எனக்கும் துணை உண்டு,  நினைவுகளின் தாக்கத்தில் அனுபவித்து சுகித்தலில் பிறந்த குழந்தையும், குடித்து புத்தியின் தெளிவுகளற்ற மோன மிதப்பின் கூடலில் பிறந்ததும், சிறந்த வேட்டையின் இரை கண்ட களிப்பில் அவளே வந்து சுகித்ததில் பிறந்ததுமாய் என் வேட்டைகளுக்கு முடிவே இல்லாத பசி கொண்ட குஞ்சுகள் கொண்ட கூடு தினமும் இரை தேட வைக்கும். தவறு, சரி என்பது தாண்டி தின வாழ்வும் வெறுமையான எதிர்காலமும் நல்லவை, கடவுள், அடுத்தவன் துயரம் என்பதை நான் யோசிப்பதே இல்லை. என் வாழ்வு எனக்கு முக்கியம். அதில் அடுத்தவன் வாழ்வு நாசமாய்ப் போவதை நான் நினைப்பதில்லை, அல்லது கண்டும் காணாமல் போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற முன்னேற்பாடுகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. அடுத்த நொடிகள் நம்மால் நிச்சயிக்கப் படுவதில்லை என்பது உண்மையே எனினும் அடுத்த நொடி முன்னே கால் வைக்கவேண்டும் என்ற தீர்மானமே உடல் தூக்கி நடப்பதற்கு சாத்தியப்படுத்துகிறது. திருமண பந்தமும், என்னை நம்பி வந்த துணைக்காய் வேண்டிய சம்பாத்தியங்கள், நானும் அவளும் சந்தோஷித்த கூட்டில் எங்களுக்குப் பின் எங்கள் பிள்ளைகள் இன்புற்று இருக்க வேண்டிய செல்வ தேடலில் எப்போதும் என் வம்ச வழியில் கற்றுணர்த்தப்பட்ட அளவுகளிலேயே நான் பயணப்படுகிறேன். ஒரு போதும் அடுத்தவருக்கு தீங்கு நேராவண்ணமே என்னுடைய பாதைகளில் என்னுடைய கனிகளை நான் சேகரிக்கிறேன். சோற்றுக்கு வழி இல்லை என்றாலும் ஒரு வாய் தண்ணீர் கொண்டு வயிறு நிறைக்க மனம் விழைகிறதே அன்றி, களவும், சூதும், சூழ்ச்சிகளும் எப்போதும் என்னை அடிமைப்படுத்த நான் விடுவதே இல்லை. வாய்ப்புகள் வரும்போதும் தவறு செய்யும் சந்தர்ப்பங்களை நான் கடந்தே போகிறேன் அல்லது காணவில்லை என்றே போகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்ற போதனைகள் என்னை ஈர்த்ததின் காரணமே, இப்படித்தான் வாழ்ந்தேன் என்ற என் முன்னோர்களின் வாழ்கை, குரு என்றழைக்கப்படும் இந்த கூட்டின் முன்னாள் பறவைகள் என்ன உண்டனர்? என்ன ஜீரணித்தது? என்ன வெளிவந்தது? என்ற பதிவுகள் விலங்குகள் போல் சுகித்து இரை தேடி மாளும் இப்பிறப்பின் பால் என்னை அன்னப்பறவையாக்கி நல்லவை அல்லவை பிரிக்கக்கற்றுக் கொடுத்தது. மனமும், மூளையும், உயிரின் இருப்பும் உள்ளே எங்கே? வெளியே எங்கே என்ற தேடலில் உடலில் புறத்தீண்டல் தேவையற்று அகத்தீண்டல் முக்கியமாய்ப் பட்டது. ஒருமுகத்தில் அமிழ்ந்து ஒரு முகத்தில் காண்பது பல முகம் என்ற தெளிவில், குடும்பம், கூடு, கூடி, தேடி, களைத்து நாடி வரும் பிறவிகளைக் காணும்போது, எண்ணங்கள் சலவை செய்து அழுக்குகள் நுரைத்துப்போன போதும் கண்டும் காணாமலே பிறவி கடத்துகிறேன்.

---

துதான் செய்யவேண்டும் என்பதற்கு இதுதான் செய்யப்போகிறோம் என்ற தெளிவின் பால் நம்மீதே நம்பிக்கை கொண்டு வாழ்தல் அவசியம். பிறப்பும், இறப்பும் ஒன்றாய் பயணம் செய்யும் இந்த ஒன்பது ஓட்டை உடல் படகில், பகுத்து அறிந்து செய்யும் செயல் பாவ நட்டக்கணக்கினை கிழித்துப்போட்டு சக மனிதன், எனது உயிர்ச் சமூகம், அதன் முன்னேற்றம், அதற்கான வழிமுறைகள் என்ற அளவிலேயே எண்ணங்கள் விதைத்து, எல்லோருக்குமான இன்பங்களின் பொது விதி வகுத்து, அடிமைத்தனமகற்றி, என் குடும்பம், அதன் முன்னேற்றம் சமூகம் சார்ந்ததாயும், சுதந்திர எண்ணங்களின் வித்தில் தின வாழ்வு, ஏற்றத்தாழ்வின்மை, சக மனிதருக்குதவி என்ற வகையில் என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், இதன் பிரக்ஞையற்ற மக்கள், வழிபாடுகளிலும், கள்ளத்தனங்களிலும் நேரம் கடத்தி புத்திக்கழுவிலேற்றிய எண்ணங்களின் எச்சங்கள் பாதை எங்கும் கிடைப்பினும், மாறும் என்ற நினைப்பில் நானும் நகர்கிறேன்.                

---

உனக்குச்சரியெனப்பட்டதும்
அடுத்தவனுக்குத்தவறெனப்பட்டதும்
எவனோ ஒருவனின் ஞான போதனைகளும்
மார்பிலடித்த அழுகைகளும்
வயிறு பிடித்த சிரிப்புகளும்
தலை நிமிர்ந்த வெற்றிகளும்
தரை பார்த்த தோல்விகளும்
இன்னும்.. இன்னும்.. எல்லாமே
காணும்போதே..


இறக்கும் காலமே.
.

காதலன் - (என்ன கொடுமை சார் இது??)
வேற வழியே இல்லாமல்தான் டாக்டரைப் பார்க்கும் அந்த முடிவுக்கு வந்தேன். முதலில் எதாவது அல்ப்ராஸொலம் மாத்திரை வாங்கி போடலாம் என்றுதான் நினைத்தேன், மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுமே என்பதால், ப்ச், போலியா, காலாவதியானதா என்ற பிரச்சனைகள் இருப்பதால் டாக்டரை போய் பார்ப்பது அவசியம் எனத் தோன்றியது.


டாக்டருடைய வீடு கம் க்ளினிக் அடைந்து, பெரிய கேட்டைத் திறந்து, மெல்ல ரிசப்ஷனில் பதிவு செய்து என் பெயர் கூப்பிடக் காத்திருந்தேன்.

உடலில் வியாதிகள் இல்லாமல், ஏதேனும் வியாதி இருக்குமோ என்று சந்தேகத்தோடு போகும்போது நிறைய விஷங்கள் பொறுமையாய் கவனிக்க முடிகிறது.

நான் தரையில் இருந்த டைல்ஸ் கட்டங்களை எண்ண ஆரம்பித்தேன்.

எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர்.ஷங்கர்.

யெஸ் சிஸ்டர்,

நீங்க டாக்டரை போய் பார்க்கலாம்.

தேங்ஸ்..


டொக், டக்..

மே ஐ கமின் டாக்டர்

யெஸ், வாங்க நேம்..., ஷங்கர், ...ம்ம் சொல்லுங்க என்ன பிரச்சனை?

சார் நான் ஒரு பதிவர், ஐ மீன் ப்ளாக்கர்,

அடடே எழுத்தாளரா? வெரி குட்.

அய்யய்யோ,  இண்டெர்னெட்ல எனக்கு தெரிஞ்சத ஓசில கிறுக்கிட்டு இருக்கறவன் சார், நீங்க சொல்றதெல்லாம் பெரிய வார்த்தை.

ஹா ஹா சரி என்ன விஷயம் நான் எப்படி உங்களுக்கு உதவலாம். சொல்லுங்க?

லவ் ப்ராளம் சார், அதாவது எனக்கு இப்பல்லாம் நிறைய லவ் லெட்டர்ஸ் மின்னஞ்சல்ல வருது. ரொம்ப பயமா இருக்கு.

அப்படியா என்ன மாதிரி?

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களுக்கு நிறைய லவ்வர்ஸ் இருக்கலாம் ஆனா நான் அவங்க மாதிரி கிடையாது, ஸ்பெஷல், உங்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன், வேணும்னா இன்னிக்கு ஸ்பென்சர் 'சப்வே' க்கு வாங்க,

நீங்க இல்லாம நான் ரொம்ப விசனப்படுறேன், உங்களுக்காகவே நான் பொறந்தா மாதிரி ஒரு ஃபீலிங்ஸ், தயவு செஞ்சி 'ம்' னு ஒரு வார்த்தை சொல்லுங்க.

உங்க போட்டோ பார்க்காட்டி எனக்கு தூக்கமே வரல, உங்க பதிவு தவிர்த்து வேற எதையும் நான் படிக்கறதில்லை, நீங்க எழுதாத நாட்கள்ல நான் சாப்பிடறதே இல்லை, ப்ளா.. ப்ளா.. இப்படி நிறைய வருது டாக்டர்

அட எஞ்சாய், ஷங்கர் இதெல்லாம் பப்ளிக்கா வெளிப்படுத்திக்கிற மக்களுக்கு சகஜம்தானே,

இல்ல சார் எனக்கு கல்யாணமாயி ரெண்டு குழந்தைகள் இருக்கு, சொன்னாலும் புரியாம தினம் மெயில் வருது, அன்பே ஆருயிரே, நீயின்றி நானில்லை அப்படின்னு, என்னால முடியல.:(

என்னது கல்யாணம் ஆயிடிச்சா? ரொம்ப சென்சிடிவ் மனிதரா நீங்க? அட இந்த வயசுலயும் லவ் லெட்டெர்ஸ் வருதுன்னு, பெருமை படுங்க சார். இதப்பத்திக்கூட எழுதலாம் நீங்க. இன்ஃபாக்ட் இதுவே ஒரு சிகிச்சைதான். உங்களுக்கு உங்க லிமிட்ஸ் தெரிஞ்சிருக்கு அப்பறம் ஏன் பயப்படறீங்க.

அட இது நல்ல ஐடியாவா இருக்கே டாக்டர், எழுதிடறேன்.

அப்புறம் ஷங்கர்.

சொல்லுங்க டாக்டர்

பதிவுல அந்த பெண்களோட பெயர் எதையும் போடாதீங்க,

எந்த பெண்கள் டாக்டர்?

அதான் உங்களுக்கு லவ் லெட்டர்ஸ் எழுதினவுங்க..அட, நீங்க வேற, எல்லாமே ஆம்பளைங்க டாக்டர்..!!!!!!!!!!!!!!!!!!!!


                              !!!!!!!!!!!!!டொய்ங்!!!!!!!!!!!.

வெண்ணை (0.06) (உரைக்காதவைகள்)
தலைவரே வாழ்க..
தலைவர் வாழ்க...
தலைவா வாழ்க...
தலைவனே வாழ்க...

ஏவ்வ்வ்வ்வ்...
கவர் கொடு நண்பா
கடை மூடிடுவான்
கிளம்பரோம்..


--


சில நேரங்களில்
கண் தெரிவதில்லை
காது கேட்பதில்லை
புத்தி உரைப்பதில்லை
ஏதும் நிகழந்ததாகவும்
நினைவில்லை,
ஆயினும் அந்தச் சில நேரங்களின்
குறிப்புகளை வேறொரு நாளில் கக்க
என் பல்லிடுக்குகளில்
பத்திரப்படுத்தி இருக்கிறேன்

இருப்பினும், இருப்பினும், இருப்பினும்
எல்லாம் மரத்து
உங்களைக் காப்பாற்ற
எப்போதும்
என்னையே தேர்ந்தெடுங்கள்..!


--


வலிஒலிகள் எழுப்பாதமையால்
ஆணவம் கொண்டயர்ந்தவனுக்கு
சும்மா துப்பிய எச்சிலில்
புகை மூட்டக்கணக்கு
மூச்சு முட்டுகிறது..

--

வீம்புக்காய் சுவற்றிலடித்த
கீரையைய்யே வழித்து, வழித்து
தின்ற வீரனிடம்
மானம், அவமானமெல்லாம்
உவமானத்தில் பிசைந்து
எகனை மொகனை பொறையுடன்
உனக்கே ஊட்டி, பிண்டமே
உன் உயிர்வளர்த்தவன் நான் என்பான்
உவகை கொள்,
உயிர் எடுக்கும்வரை
உயிர் கொடு
அவனுக்கே எப்பொழுதும் முடிகொடு..!


---

தல

இன்னாய்யா?

என்னாத்தல இப்படி பண்ணிட்ட மானம் பூட்ச்சு.. இனிமே எப்படி வெளில தல காட்டறது

அடப்பாவி, கேணையாடா நீ? அதெல்லாம் ஒண்ணுமில்லடா? வா அந்த சேட்டு கடைக்குப் போலாம்

சேட்டு, அடமானம் வெக்கனும்..

இன்னாதுப்பா? தங்கமா, வெள்ளியா??

இல்ல சேட்டு, மானம், மருவாத, மனித நேயம்..

யோவ் லூசாய்யா நீயி? அதுக்கெல்லாம் எவன்யா துட்டு குடுப்பான்..போய் வேற எதுனா எட்த்துகினு வாய்யா..

சேட்டு சொன்னத கேட்டியா?  அதெல்லாம் டப்பு பேராதுன்னு??
சொம்மா கூவாத, எங்கனா, எதுனா பீராய முடியுமான்னு பார், பொழப்ப கவனி. புரியிதா??

.

ஒரே கரு, பல முட்டைகள்.

காலையில் அலாரம் அடித்து திரும்பிப் பார்த்தபோது ஜார்ஜி அங்கே இல்லை.

எங்கே போனான்? மெதுவாய் எழுந்திருந்து சோம்பல் முறித்தவாறே டேபிளை பார்த்தபோது, கவனித்தேன் லாப்டாப் காணோம். புரிந்து விட்டது. ப்ளாக், பதிவு, கவிதை, இலக்கியம் என்று ஒரு மூன்று மாதமாக புலம்பிக்கொண்டிருக்கிறான். இவனுக்கும் உள்ளூர எழுத ஆசை, தினமும் என்ன என்னவோ எழுதுகிறான், என்னிடமும் சிலாகிக்கிறான், எனக்குத்தான் கடுப்பாய் இருக்கிறது.

ஒவ்வொன்றையும் படித்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்லும்போதெல்லாம், எனக்கு மண்டை காய்கிறது. ”உனக்கு இது புரியாது மச்சி” அவன் சொல்லும்பொதெல்லாம் எனக்கு வெறுப்பேறும்.

சரிப்பா நீங்கதான் ஒஸ்த்தி, ஆனா நான் ஒரு மேட்டர் சொல்றேன், அத நீ எப்படி பதிவா போடுறன்னு காமி நான் ஒத்துக்கறேன். எனக்கு புரியலன்னு, என்ன டீலா?

அவன் என்னைப்பார்த்து சிரித்தான், ‘மாட்டினியா’ என்ற தொனி இருந்தது.

சொல்லு உன் மேட்டர, ஒன்னு என்ன ஒம்போது விதத்துல எழுதறேன் பார்..

சரி பார்க்கலாம், இதுதான் என் மேட்டர், ராணின்னு ஒரு பொண்ணு பிள்ளையார் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு சூரத் தேங்காய் உடைச்சிட்டு குழந்தை பிறக்கனுமேன்னு வேண்டிகிட்டு, திரும்பி வீட்டுக்கு போறா” இப்ப பதிவு எழுது.

--

ஸாகேதஸீம்நி பவதீ மணிபாதரக்ஷே
மாங்கல்ய லாஜநிகரை: அவகீர்யமாணா:
கீர்த்தி ஸ்வயம் வரபதே: பரதஸ்ய காலே
வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே

அதாவது பரதன், ராமருடைய பாதுகையை (காலணிகளை) எடுத்துக்கொண்டு அயோத்திக்குள் வரும்போது அங்கிருந்த பெண்கள், புனிதமாய்க் கருதி அதன்மீது, பொரிகளை வாரி இறைத்தனராம், ராமரிடைய பாதுகையின் கீர்த்தியை விளக்க, அது பரதனுடன் வந்ததை கொண்டாடியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அன்று அந்த பாதுகைக்கு தந்த அந்த அளவுக்காவது இன்று பெண்களுக்கு மரியாதை இருக்கிறதா? மருந்துகள் கை விட்ட நிலையில் ஒரு பெண் ஆறுதலுக்காய் கோவிலில் வேண்டிக்கொண்டால் என்ன தவறு?

அரசமரம் சுற்றி, தோப்புக்கரணம் போட்டு, தரையில் வீழ்ந்து வணங்கி, தேங்காய் உடைத்து, கொழுக்கட்டை செய்து வழிபடும் பெண்களின் வலி வழிபாடாக அதைப்பாருங்கள்.

வேதத்தின் அடிப்படையில் சொல்லுவதை, கேலி பேசி, தற்குறித்தனம் என்று கிண்டலடிக்கும் நாம், அதையே ஒரு ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ, அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியாக யூ-ட்யூபில் காண்பித்து சைண்டிஃபிக் பெயர் வைக்கும்போது, உடனே கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறோம்.

என்னமோ போடா மேடி..!

--

இப்படித்தான் ஒருமுறை எங்க மாமாவோட பைக்க எடுத்துகிட்டு, கிராமத்துலேர்ந்து, டவுனுக்கு போகச்சொல்ல, ஆத்தங்கரையில, தண்ணி கரை புரண்டு ஓடுதுன்னு, என் நண்பன் சைகையில் சொன்னான்,

சரின்னுட்டு, வேற வழியா போகச்சொல்ல ஒரு பொண்ண பிள்ளையார் கோவிலாண்ட பார்த்தேன், கண்ண மூடி சாமி கும்பிட்டுகிட்டு இருந்திச்சி, கையில ஒரு தேங்கா, இந்த வயசுல இப்படி ஒரு பக்தியான்னு யோசிச்சிகிட்டு இருக்கும்போதே, இடுப்புல குழந்தை பிறக்கறதுக்காக கட்டற தொட்டில் இருந்துச்சு, திடீர்னு படிக்கட்டு வழியா ஒரு பாம்பு கோவிலுக்குள்ள போச்சு, நான் ஐய்யோ தங்கச்சி பாம்புன்னு சவுண்டு விடறதுக்குள்ள, படால்னு தேங்காய தரையில அடிச்ச சவுண்டுல உடனே பாம்பு மெரண்டு, அப்படியே ஒரு பொந்துக்குள்ளார போயிடிச்சு.

நான் வண்டிய நிறுத்திட்டு என்னம்மா ஏன் தேங்காய கீழ போட்டீங்கன்னேன். குழந்தை பிறக்க வேண்டுதலுக்காக பிள்ளையாருக்கு நேர்ந்துக்கிட்டேண்ணே அப்படின்னு சொல்லி அதுபாட்டுக்கு தொட்டில மரத்துல கட்ட போயிடிச்சி.

அவருக்கே இன்னும் கல்யாணம் ஆகலன்னு நினச்சிகிட்டே பைக்க எடுத்துகிட்டு டவுனுக்கு பொறப்பட்டேன்.
--

கூசிய நாவுகளின் ஒலி கேட்டு
நாசியே கையான ஆலிலை சருகுகளின்
போர்வை கொண்டதோர் வடிவ கல்லின்
முன் நின்றிருந்த போகப்பொருள்
யாரையோ நினைத்து சில்லுகளாய்
சிதறவிட்டது
ரொளத்திரத்துண்டுகளை
பார்த்தபடி மவுனம் காத்தது பரம்பொருள்..

--

என்னடா மேக்ஸ் நெத்தில காயம். சரித்து வைக்கப்பட்ட அவன் டி.வி.எஸ் 50 -ல் கால் வைத்தவாறே கேட்டேன்.

கோவில்ல பார்த்தேண்டா,

அவன் தேன பத்தி சொல்கிறான். அடப்பாவி, அவளை இன்னுமா மறக்கவில்லை.

வில்ஸ்ஸா அடிப்பீங்க?
வேண்டாம்னு சொல்லு இப்பவே விட்டுடறேன்.
ச்சீ,, உங்களுக்கு பிடிக்கும்னா, அது எனக்கும் பிடிக்கும், அய்யய்யோ ஏன் அணைச்சிட்டீங்க.?
ஒரே உரையில ரெண்டு கத்தி இருக்கக்கூடாது தேனு.
ஏய் என் பேரு ராணிப்பா.

ஆனால் காலம் தேனை வேறொருவன் புறங்கையில் வழியவிட்டது. மேக்ஸ் எனப்படும் மேகனாதன் அவளை மறந்திருப்பானென்று நினைத்தேன்..

’டிங்’, கோவில் மணி சத்தத்தில் கவனம் கலைந்து, வெள்ளை சுவற்றில் காவி கோடுகள் போட்ட மதில் சுவர் தாண்டி, நிறைய வளையல்களோடு ஒரு கை மட்டும் தெரிந்தது, ஆவலுடன் யாராய் இருக்குமென்று மேக்ஸ்சின் வண்டியில் கால் வைத்து எம்பிப்பார்த்தேன்,

டேய் ராணிடா...

பைத்தியக்காரா, மேக்ஸ் சிரித்தான். பின் மண்டையில் அடித்துக்கொண்டு நானும் சிரித்தேன்.

நல்ல காலம் பொண்ணு அப்படியே அம்மா சாயல், மேக்ஸ் கண்ணைப்பார்த்தேன்,  எதுவும் எனக்குத் தென்படவில்லை.

---

திண்டிவனம் இறங்கி, கரும்பு சாரு குடித்திவிட்டு, கேட்டேன். இங்க குடிசையில் ஒரு ஜுனூன் சித்தர் இருக்காராமே, எப்படி பாட்டி போகனம் , தா அந்த ஆட்டோகாரன் கிட்ட கேளு என்று கேட்ட ஆட்டோகாரர்,

வழி தெரியாது சார், நிறைய பேர் இருக்காங்க, அந்த கோவில்ல கேட்டுக்கோ

கோவிலில் ஒரு பெண் கையில் தேங்காய் வைத்துக்கொண்டு கண் மூடி பிரார்த்தனையில் இருந்தது, இப்படி சிதறடிக்கும் தேங்காய்களால் சட்டினி விலை ஏறிப்போனதை நினைத்துக்கொண்டே, சித்தர் பற்றி கேட்க உள்ளே தேடினேன்.

---

சயின்ஸ்ல தேங்காய் உடைக்கிறதுக்கும், பிள்ளை பெறுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை. அன்றைக்கு பெரியார் சிலைக்கு முன்பாக ஒரு பெண் தேங்காயை கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. என்னடா இங்கயும் கெடா வெட்ட ஆரம்பிச்சுட்டாங்களான்னு கிட்டப்போய் பார்த்தா, எதிர்க்க இருக்கற பிள்ளையார் கோவில்ல பிள்ளை பிறக்கறதுக்காக வேண்டிகிச்சாம்.

எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல..

கீழ இருக்கற மரம் ஏன் இப்படி படுத்துகினு இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?
  
ஏன்னா அது புள்ள பெத்துடிச்சி.  அதுனோட புள்ளைய உடைச்சா உங்களுக்கு எப்படிய்யா புள்ள பொறக்கும்?

---

டேய் ஜார்ஜி, நிசம்மாவே பெரிய ஆளுடா நீயி. ஒன்னுமில்லாத மேட்டர எப்படிடா ஊதி பெரிசாக்குற?

இதென்ன பெரிய விஷயம், ரயில் பத்தி ஒரு தத்துவம் சொல்லட்டா?

சொல்லுங் அபீஸர்..

ரயிலே கண்டுபிடிக்கலன்னா என்ன ஆயிருக்கும் சொல்லு??

ஐய்யோ நான் வெறும் பொட்டி தட்டறவண்டா, அவ்வளவு மூளை இல்ல நீயே சொல்லு..
ஹும்ம்ம் இது கூட தெரியாதா தண்டவாளம் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும் மச்சி.


”ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ”


ஆட்டோ வரல்லன்னா, அப்பப்ப அப்பப்படும். (ஒன்லி சிரிப்ஸ் ப்ளீஸ்!) :)))
இதை யாராவது தொடர விருப்பமாயின் தொடரலாம்..:)


விதி முறைகள்: 


01.மேட்டர் மேல சொன்னதுதான், அத எப்படி சொல்றீங்கன்றதுதான் விஷயமே,  
02.உங்க ஸ்டைல்ல கண்டிப்பா இருக்ககூடாது.
03.குறைந்தது மூன்று விதமாக எழுதவேண்டும். 
04.பின்னூட்டம், மற்றும் ஓட்டளிப்பவர்களின் தீர்ப்பே இறுதியானது.:)))


 நான் அழைப்பது பிதற்றல்கள் முகிலன்’


.

வெண்ணை (0.05) (வாழ்த்துகளுக்கான நாள்)
அன்பார்ந்த ரத்தத்தின் ரத்தங்களே..

(யூ மீன் சேம் ப்ளட்?? )

அன்பார்ந்த கழக நண்பர்களே..

(யோவ் எந்த கட்சியா நீயி.. மொதல்ல அதச்சொல்லு)

வலையுலக நட்புகளே..

(எல்லா மொழிகளுமா? ஆல் வேர்ல்ட் ப்ளாக்கர்ஸ்???  இல்ல, ஒன்லி டமிள்??)

சங்க சிங்கங்களே??

(என்னது சங்கமா? எந்த சங்கம்? பதிவு நம்பர் காமி.. யோவ் புடிச்சு கட்டுங்கப்பா)

டியர் ஃப்ரென்ட்ஸ்..

(புட்டு, தமிழ்ல சொல்லுய்யா, ..)

அதுவந்து..

(ம் ம் சொல்லு)

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

(யா திஸ் ஈஸ் தி லிமிட்... அரெஸ்ட் ஹிம்...)


அய்யய்யோ அனைவருக்கும் சித்திரைத் திரு நாள் வாழ்த்துகள்..

(ஒவ்வொரு மாசத்துக்கும் இப்படி வாழ்த்து சொல்லுவியா நைனா???)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


:)

--------------


காலம்

ஆரம்பம், முடிவு என
நகர்த்துபவர்களின்
பெயர்களையும், நேரங்களையும்
நிகழ்வுகளையும்
சுமந்தபடி

வெளிச்சமும்,

வெளிச்சமில்லாததுமாய்
என்றறியப்பட்டதாய் ..

தினமும் கடந்துபோகிறது .!
.

வெண்ணை.. (0.04) மனித விலங்கின் சூத்திரங்கள்..வ்வொரு மிருகத்துக்கும், பறவைக்கும் அதன் ஒலிகளே தொடர்புகொள்ளும் கருவியாக இருக்கிறது. கிடைக்கும் சுள்ளிகளைக்கொண்டு கூடு கட்டியோ, குகைகளில் பதுங்கியோ, தண்ணீரிலோ அவையும் வாழ்க்கை நகர்த்துகிறது.

என்ன பெரிய தேவை? உணவு, தண்ணீர், அச்சமில்லாது உறங்க ஓரிடம். நிம்மதியாய் கலவி, பின் சந்ததி வளர்க்க வந்த வாரிசுகளுக்கு சூழலின் அபாயங்கள் புரியவைக்கவும், உணவுக்கான போராட்ட முறைகள் தெரிய வைக்கவும் சில பயிற்சிகள். குட்டிகள் வளரும் வரை காபந்து. அதன் பின் அதனதன் வழி, அதனதன் வாழ்வு, அதனதன் போராட்டம்.

இதன் நடுவில்தான் ஆறறிவு கிளை பிரிந்து, அபத்தங்களைக் கட்டி அழத்தொடங்கியதோ?

குழந்தை பெற்று, பாலூட்டி சீராட்டி, வித்தைகள் கற்றுத்தந்து, அன்பினாலே விலங்கிட்டு, அதனூடே வாழ்வு நகர்த்தி, சாமர்த்தியங்கள் முதலீட்டில் ஒரு தனி உயிரின் பரிபூரண வாழ்வு சிதைக்கப்படுகிறதோ?

ஒரு விலங்கிற்கான வாழ்வு முறை சுதந்திரம் மனிதனுகில்லாமல் சார்புடையவனாக, எதையாவது பின்பற்றுபவனாக, பின்பற்றச்சொல்லுபவனாக ஏன் மாறிப்போனான்?

அதிகாரங்கள் யார் தந்தது? எல்லா தர்க்கங்களிலும் தன்னையே முன்னிருத்தி தனக்கானதே இவ்வுலகென்றும், மற்றெல்லா உயிரினமும் தன்னாலே பிழைக்கிறதென்றுமான தத்துவம் உயிர்பெற்றதெப்போது? வெறும் ஒலிகளை ஒழுங்கு படுத்தி வடிவங்கள் தந்த ஆணவமா?

ஒரு பறவைக்கோ, விலங்கினத்திற்கோ தெரிந்த குழந்தை வளர்ப்பும், அவை கற்றுத்தரும் வாழ்வு எதிர்நோக்கும் பாடங்கள் அளவுக்கு நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவைகள் அளவுக்கு சுய புத்தி உண்டா?

கூடலின் சுகம் மென்று, வலியுடன் குழந்தை ஈன்று, அன்புடன் அரவணைத்து, தனியே வாழ்வு சுவைத்துக்கொள் என்ற மற்ற உயிரினிங்களின் சுதந்திரத்தை மட்டும் எப்படி ஆறறிவு தவற விட்டது? எங்கே பிசகு? அதி மிகுந்த அன்பின் போதையா? சுயநலத்தின் சூழ்ச்சியா? வாழ்வுமுறை பயமா? பயமே அழிவிற்கான மூலதனமா? ஆளத்துடிக்கும் தூண்டுதலா?

சரி, தவறு என்ற நிகழ்வுகளின் தீர்ப்புகளில் உண்மையிலேயே அது சரிதான் அல்லது தவறுதான் என்று எதை முன் வைத்து முடிவுக்கு வருகிறோம்?      

எதுவரை போகும்? மனிதனைத்தவிர இறப்பினைப்பற்றி பயங்களும், யோசனைகளுமில்லாத உயிரினத்தில் மனித இனம் போகும் பயணம் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கிறது? மரணம் பற்றி பயம் கொள்ள வைப்பது எது?

--

பெயரில்லா கவிதை..


நிலவில்லாத இரவொன்றில்
காற்றினிலாடும்
மெழுகுவர்த்திச்சுடர்

மின் வெளிச்சம்
ஜடமாய்க் காட்டிய
பொருட்களுக்கும்
உயிர் தந்துவிடுகிறது...


.

ஆயிரம் வகை தோசைகள்..

ஆயிரம் வகை தோசைகள்..
தேவையான பொருட்கள்:

ரெடிமேட் தோசை மாவு, எவர் சில்வர் தாவா, இண்டக்‌ஷன் ஸ்டவ், கரண்ட்.
மினரல் வாட்டர், டிஸ்போஸபிள் க்ளாஸ், பேப்பர் தட்டுகள், டிஷ்யூ பேப்பர். கத்தி, ஸ்பூன், கரண்டி.

வெண்ணை,
கேரட்,
கோஸ்,
தக்காளி,
வெங்காயம்,
காட்பரீஸ் சாக்லேட்,
மில்க்மெய்ட்,
இட்லி மிளகாபொடி,
கொத்துமல்லி,
புதினா,
வாழைப்பழம்,
நல்லெண்ணை,
தேங்காய் எண்ணை,
துருவிய தேங்காய்,
சீஸ்,
நெய்,
வெண்ணிலா ஐஸ்கிரீம்,
சர்க்கரை,
வெல்லம்,
தேன்,
தயிர்,
லேய்ஸ் சிப்ஸ்,
குர்குர்ரே,
இனிப்பு சோம்பு,
தூள் பக்கோடா,
ஓமப்பொடி,
பச்சை மிளகா,


செய்யறதுக்கு நீங்க, சாப்பிடறதுக்கு ஒரு அப்புராணி.
அதாங்க தாவாவ அடுப்புல வெச்சி, ரெடிமேட் தோச மாவ ஊத்தி, மேல சொன்ன ஐட்டம்ல ஒன்னு ஒன்னா தோசை மேல போட்டு சாப்பிடுங்க, அப்புறம், ரெண்டு,ரெண்டு ஐட்டமா மிக்ஸ் பண்ணுங்க, அப்புறம் மூணு,மூணு ஆஹ்ஹா கப்புனு புடிச்சிடீங்களே. அதான் அதேதான், மாறி, மாறி எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி 1000 என்ன? 6000 வகை தோசைகள் கூட பண்ணலாம்.

விளாட்டு இல்லீங்க சீரியஸ்தான். சாப்பிட்டுபார்த்துட்டு சொல்லுங்க.


எல்லாமே ரெடிமேடா கிடைக்கிற ஐட்டம்ஸ்தான், ரொம்ப மெனெக்கெடவேண்டாம்..:)))


--

எதப்போட்டாலும் ’குத்து’றாங்க’, அதான் இதப்போட்டேன். ஹி..ஹி. 


.

வெண்ணை..(0.03) (டிங் டிங் டி டிங்)
லிஸன். இது முக்கியமான ஒரு ப்ரொஜக்ட். நம்ம கம்பெனிக்கு மிகப் பெரிய ப்ரெஸ்டீஜ் இஷ்யூன்னு, எம்.டி பர்சனல் கேர் எடுத்து, அதிக கவனம் வெச்சி செய்ய சொல்லி இருக்கார். ஏன்னு உங்களில் யாருக்காவது தெரியுமா??

பிகாஸ், நாம் எழுப்பும் இந்த கட்டிடம் 60 மாடிகளைக் கொண்டதாலா?

இல்லை நண்பர்களே. அதல்ல இங்கே பிரச்சனை, இது ஒரு கூட்டு முயற்சி என்பது உங்களுக்கு தெரியுமல்லவா?

யெஸ் சார். நமக்கு வரவேண்டிய ஆர்டர் இது. தனியே கட்டி பெயர் வாங்கி இருக்கவேண்டியது, கடைசியில் அந்த ஜப்பான் கம்பெனியும் போட்டிக்கு வந்துவிட்டது.

எக்ஸாட்லி மை பாய். எனி வே.. நாம் யார் என்பதை காண்பிப்போம்.

யெஸ் ஸார்..

--

வாட் தெ ஹெல்? என் மானத்த வாங்கறதுக்குன்னே எல்லாரும் அந்த ஜப்பான் கம்பெனிக்கு விலை போயிட்டீங்களா?

நோ பாஸ்.

பின்ன எப்படிய்யா கட்டிடம் சரிஞ்சிது? பெரிசா பேசினோமே? கட்டிடகலையில நாங்க 3000 வருஷ அனுபவசாலிங்கன்னு, இப்ப அந்த ஜப்பான்காரன் கட்டறான். கட்டி நிக்க வெச்சிட்டான்னு வைச்சிக்க. மானம் போய்டும்.

எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை சார். கீழ மொத்தம் லைம் ஸ்டோன், சாலிட் சாயில் இல்ல, நிறைய ஏர் பாக்கெட்ஸ். நாமளே மொதல்ல ஏமாந்துட்டோம், இப்ப விஷயம் தெரிஞ்சி அவன் கை வெக்கிறான், ஜப்பான் என்ஜினியர்களால முடியாது சார். ஐ பெட்.

அடப்போய்யா.. அவங்களப்பத்தி உனக்கு தெரியாது..

--

சார்.. குட் நியூஸ்.

வாட்.?

ஜப்பான் காரன் கட்டினதும் பணால்.

ஓ காட். அப்பறம். ?

ஹை லெவல் மீட்டிங் இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு..

--

ஜெண்டில்மேன்.. இது ஒரு டிபிகல் சாயில். ஐ அக்ரீ. கொஞ்சம் கஷ்டமான வேலைதான். நம்மூருகாரங்களாச்சே முடிச்சிடுவீங்கன்னு நெனெச்சேன். பட். இது அவங்களுக்கும் ஒரு சவால்தான். நவ் இத கட்டி முடிக்க ஒரே சொல்யூஷன்தான் இருக்கு..அவங்க ஐ மீன் ஜப்பனீஸ் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க, இனி ஈகோ இல்லாம நீங்க ஓக்கே சொன்னா வி வில் வின் டுகெதர். என்ன சொல்றீங்க.?

நோ ப்ராப்ளம் சார். ஆனா என்ன அந்த வழி.?

சிம்பிள். ஸ்ட்ரக்ச்சர் டிசைன்ல ரெண்டு பேருக்குமே வேற வேற எடத்துலதான் ஃபெய்லியர். உங்களுக்கு ஆன இடத்துல அவங்களுக்கு ஆகல, அதே மாதிரிதான் அவங்களுக்கும், ஸோ ரெண்டு பேருமே ஒண்ணா இணைஞ்சி இந்த ப்ரோஜக்ட் முடிச்சா நல்லது.

ம்ம்.. ஓகே சார், டீல். ப்ரோஜெக்ட் முடியனும், அது முக்கியம் ஆனா??

வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? தட் நேம் ஆஃப் த பில்டிங்? ரைட்?

ஆமாம் சார் அதுல யார் பங்களிப்பு அதிகம் இருக்கோ அவங்க பரிந்துரைக்கிற பேர் கட்டிடத்துக்கு வைக்கறதாதானே அக்ரிமெண்ட்.

யா, பட் இப்ப மொதல்ல வேலை முடிப்போம், பங்களிப்பைப் பொறுத்து அதை தீர்மானிப்போம்.

--

ப்ளீஸ்.. சைலெண்ட். இது ஒரு நல்ல நேரம், மிகுந்த வேதனைகளுக்குப் பிறகு வேலை முடிந்த நேரம். ஒரு கட்டிடம் முழுமை பெற்ற நேரம், கொண்டாடுங்கள், ஏன் சர்ச்சை நண்பர்களே?

சார். நமது கொண்டாட்டங்களுக்கு முன் முக்கியமாய் செய்யவேண்டிய ஒன்று இந்த கட்டிடத்திற்கு பெயர் வைப்பது. அதனை முடிவு செய்துவிட்டு மற்றவைகள் பற்றி பேசலாம்..

ஓ யெஸ். நான் அதை மறந்து விட்டேன்.  நீங்கள் இரு நாட்டினரும் சேர்ந்து இந்த கட்டிடத்தை கட்டி முடித்ததாலும் இருவருமே ஒத்துப்போகிற ஒரு பெயரையே நான் பரிந்துரை செய்யலாமென்று இருக்கிறேன்.

வாட், தமிழும், ஜப்பானீஸும் கலந்தா? அதுவும் இப்படிப்பட்ட ஒரு கட்டிடத்திற்கா? எப்படி சார்??

முடியும். அதுவும் இந்த கட்டிடக் கதையைக் கேட்ட என் 5 வயது குழந்தை வைத்த பெயர் அது.

வாவ் என்ன பெயர் சார்..
’நிக்கிமோ நிக்காதோ’

--

இது ஜேப்னீஸா?, ட்டாமிளா?    


டிங் டிங் டி டிங்..:)முட்டாள்.. (The Idiot) - Akira Kurosawa..


எல்லோருக்கும் மரணம் வருமென்று அறிந்தும், அடுத்தவருக்கு நிகழும்போது மட்டும், துக்கம் கொண்டு, அழுகையுடன், நமக்கும் வருமென்ற யோசனைகளின்றி, கூடி நின்று அழும் மக்களுடன் ஒருவராய், இறந்தவரின் சந்தோஷ நினைவுகளை, துக்கத்துடன் அசை போட்டு, மீண்டும் ’வாழ்வு’ என்றழைக்கும் சூழ்ச்சிகளில் ’பின்னப்பட்ட’ இன்ப, துன்ப போதைகளில் மூழ்கிப்போவது பொதுவில் எல்லோருக்கும் வாய்ப்பதுதான்.

வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் வரிசையாய் மரண தண்டனைக்காய் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்காய் துப்பாக்கிக் குண்டில் வாழ்வு முடித்து வைக்கப்படுகிறது. மரணம் கண்ணெதிரே காணக்கிடைக்கிறது வரிசையில் வந்துகொண்டிருக்கிறது.

இதுவரை வாழ்வில், துக்கம், சந்தோஷம், துரோகம், அன்பு, காமம், காதல், கருணை என எல்லாம் கண்ட அவனுக்கு, இதோ இன்னும் சில நிமிடத்தில், வரிசையில் மரணம் நிச்சயம் என்ற நிகழ்வுகளின் நிஜத்தில் மரணம் சம்பவிக்கப்போவதற்கு முன்பான மன நிலை என்ன சொல்லும்?

அது வாழ்வின் முழுமையை புரியவைக்கிறது. இது வரை வாழ்ந்த வாழ்வின் நீள அகலங்கள் கண்களுக்குள் வருகிறது. இறக்கப்போவது நிச்சயம் எனும்போது வாழ்ந்தது நிறைவுதானா? என்ற கேள்வி வருகிறது. தவறுகளுக்கான மன்னிப்புகள் எழுகிறது. இதுவரை வரிசையில் அவனுக்கு முன்பாக இருந்தவர்கள் சுடப்பட்டு பிரேதமாய் கிடக்க, அவன் முறை வரும்போது, வாழ்வுக்கும் சாவுக்குமான சங்கிலி பிணைக்கும் நேரத்தில், உத்தரவு வருகிறது. மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது. ஆஹா தப்பித்தோம், சாவினின்று கடைசி நொடியில் விடுதலை, இனி என்ன? கொண்டாட்டமா? குடியா? போகமா? மரணம் நிறுத்தச்சொன்ன உத்தரவு சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும், மண்டை பிளந்து சரிந்து கிடக்கும் அந்த சவங்களில் அவனும் ஒருவனாகி இருக்கக்கூடும். இப்போது சாவினின்று விடுதலை என்ற எண்ணம் அவனுக்கு வாழ்வின் மீதான மதிப்பை அதிகமாக்குகிறது. நினைவுகளின்றி போதனைகளின்றி குழந்தையாய் பிறந்து மரணத்தை கண்டவன் இப்போது, விவரம் தெரிந்து மீண்டும் பிறந்ததாய் உணர்கிறான், இன்னொரு வாழ்வு இப்போது கிடைத்தது. ஒவ்வொரு நொடியும் அதனை ரசிக்க, அர்த்தமுள்ள அதை மதிக்க இயல்பாகவே அவன் மனம் மாறுதலடைகிறது.

விடுதலையாகி வெளி உலகிற்கு வரும் அவனை, மரணம் கண்ணெதிரே தினம்தோறும் நிகழ்ந்தும் தனக்கு வராது என்ற நம்பிக்கையில், சூழ்ச்சிகளை, துரோகங்களை, பகட்டுகளை, நடிப்புகளை, தேனாய் குடித்து அதன் இனிப்புகளின் மயக்கத்தில் வாழ்வு நடத்தும் மக்கள் என்னவாய் எதிர்கொள்வார்கள்?

அவன் வந்து சேரும் அந்த நகரின் பேரழகியின் படத்தைப் பார்க்கிறான். அருகிலுள்ளவனுக்கு அவளின் அழகு முகம் கிளர்ச்சியை உண்டாக்குகிறது, அவனுக்கோ அவள் கண்கள் மரணத்தை நோக்கியவையாக அல்லது அனுபவிப்பதாய் சொல்கிறது.

வாழ்வது என்பது உயிரோடிருத்தல் மட்டும்தானா? வெறுமனே உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்வு என்பதாய் கொள்ள முடியுமா? உணர்வுகள் இறந்து வாழும் ஒருவரை எப்படி வாழ்வதாய்க் கொள்ள முடியும்? தன் தேவைகளுக்காய், ஆசைகளுக்காய், இரவுகளின், தனிமையின், காமத்தின் வேட்டைகளுக்கு, வேட்க்கைகளுக்கு இரையாக்கப்பட்டு தினம் கொல்லப்படும் ஒருவரின் கண்கள் இறப்பின் வலிகளை தாங்கி இருப்பதில் வியப்பென்ன? அதனை நேரில் கண்ட நம் நாயகனால் அவ்வாறு வாழும் ஒரு அழகியின் முக அழகும் கவர்ச்சியும் எப்படி கவர முடியும்?

இப்படி வாழ்வினை அர்த்தமுள்ளதாய் வாழ நினைக்கும் ஒருவன், அவைகள் மறந்த கூட்டத்தில் என்னவாய் காணப்படுகிறான்? அவனை விரும்பும் பெண்கள், வெறுக்கும் மனிதர்கள், கேலி பேசும் கூட்டம், ஒரு கொலை என பயணம் செய்யும் படத்தில் மேலே சொன்னதுதான் கதையின் சாராம்சமா? வேறு என்ன அந்தப் படம் சொல்ல வருகிறது?

கடினமாய் சிதைந்து போன ஒரு பாறையை செதுக்கும் பணியே வாழ்வென்றால், அது சிலையாய் முழுமை பெற்று, பூரணத்துவம் அடைவதுதான் மரணமா? எனில் அதனை துக்கமாய்ப் பார்ப்பது ஏன்? செதுக்கப்படும் ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டாமா?

அகிரா குரசாவாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் மாடியில் நேற்று திரையிடப்பட்ட 'THE IDIOT' படத்தினை கண்டதும் வந்த எண்ணங்களே மேலுள்ளது. ஆனால் படம் இதைத்தான் சொல்கிறதா? இதன் உண்மையான களம் என்ன? திரு. சிவராமனின் சிதைவுகள் பக்கத்தில் வெளிவரும் என்று நம்புகிறேன். 1951 ல் எடுக்கப்பட்ட இந்த கருப்பு வெள்ளைப் படத்தின் காட்சி அமைப்புகள், படத்தொகுப்பு, இசை, பிரமிக்க வைக்கிறது. தஸ்தாவெஸ்கியின் உணர்ச்சிகள் கொப்பளிக்கும் எழுத்துக்களை அப்படியே திரை வடிவமாக்கி உணரச்செய்யும் விதம், ஏன் இன்னும் அகிரா குரசாவாவை கொண்டாடுகிறார்கள்? என்று புரிந்தது.    

படம் முடிந்த பின் திரு.ராஜசுந்தரராஜன் அவர்களின் விவரிப்பு அற்புதம். அதனைக் கேட்ட பிறகு இந்தப் படத்தைப் பற்றி நான் எழுத முடியுமா? என்ற எண்ணம் தோன்றியது உண்மை. ஆனாலும் படம் தந்த பாதிப்பை பதிவு செய்து, இறக்கி வைக்கவே இதனை எழுதினேன்.

நன்றி!

வெண்ணை..(0.02) (ஞான மரம்)ஞானம் கிடைக்குமா? என்று போதி மரம் தேடி ஒரு வனாந்திரத்தினுள்ளே சுற்றி அலைந்தேன். வாழ்ந்து கொண்டிருக்கும் மரங்களை, வளர்ந்து கொண்டிருப்பதாய் மனம் கற்பித்துக்கொண்டிருந்தது.

மரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சரிதானா? என்ற கேள்வியை புறம் தள்ளி, ஞானம் தரும் அந்த மரத்தைத்தேடி அலையத்தொடங்கினேன்.

சுற்றிக்களைத்த நேரத்தில் ஒரு பெரு மரத்தின் பொங்கிய வேரின் மேல் அமர்ந்து, கற்பனையில் வளர்த்த அந்த போதி மரத்தின் அடையாளங்கள் பொருத்தி இன்னும் என் கண்கள் சுற்றிச் சுழன்று எல்லாப் பச்சையிலும் அந்த போதிப்பச்சையைத் தேடிக்கொண்டிருந்தது.

”என்னப்பா தேடுகிறாய்..?”

யாருமற்ற வனத்தில் என் உயிரியின் குரலே என்னை மிரளச்செய்த நொடிகளை மனனம் செய்யாது..

”யாரது?” என்றேன்.

”நான்தானப்பா, நீ உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறாயே அந்த மரம் என்று நீ அழைக்கும் நானேதான் அழைத்தேன்.”

மரம் பேசுமா? என்ற கேள்வியை போதிமரம் பேசும் என்ற பொதி சுமந்த போதையை உள்ளிருந்து வியந்தவாரே..

”நான் போதி மரம் தேடி ஞானம் பெற வந்தவன். எங்கிருக்கிறதென்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்..”

போதிமரத்தை ஏன் தேடுகிறாய்?, கண்டு என்ன செய்யப்போகிறாய்? என்ற கேள்விகளை எதிர்பார்த்து பதில் தேடிக்கொண்டிருந்தது மனம். ஒருவேளை இதுவே, அதுவாயும் இருக்கலாம் என்று மனத்தை ஆயத்தப்படுத்தத்துவங்கிய நேரம்..

”ஓ போதி மரமா? அதனை அடைவது சுலபமே. ஆனால் அதற்கு முன் நான் சொல்லுவதை நீ செய்தால் அதனையடையும் வழி சொல்வேன்.” என்ற அந்த மரத்தைப்பார்த்து..

”நிச்சயம் செய்கிறேன்..” என்றேன்.

”சரி இந்த வனத்தினுள்ளே ஒரு கிராமம் உள்ளதை நீ அறிவாய் அல்லவா?”

”ஆம். ஆனால் அந்த மக்கள் ஒரு போதும் போதி மரத்தைப்பற்றி பேசுவதுமில்லை அது குறித்தான கேள்விகளையும் செவிமெடுப்பதில்லை ”என்றேன்.

”சரி போகட்டும். போதி மரம் பற்றியும் அதன் மூலம் ஞானம் பெறுவது பற்றியும் அறிய முதலில் எதிரில் இருக்கும் அந்த புதரின் அடியில் போய் அமர்ந்து கொள், சிறிது நேரம் கழித்து திரும்பி வா”

”சரி” என்றேன். இது ஏதோ பரிட்சையாக எனக்குப் பட்டது. என்ன ஆனாலும் சரி அடைந்தே தீர வேண்டிய ஞானம் என்னை புதரின் அடியில் போய் உட்கார வைத்தது.

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது. எண்ணங்கள் ஏதுமற்று இருப்பது, மனதை மூடினேன், புறமும் மூடினேன், ஒலிகள் எல்லாம் மக்கி, உள்ளே தெரியும் வண்ண ஜாலங்களும் ஒதுக்கி அதன் பின்னே வரும் வெறுமை என்னும் கருமையை அகற்ற இயலாது அப்படியே அமிழ்ந்து நொடிகளில் யுகங்கள் கடப்பதறியாது வெறுமனே அமர்ந்துவிட்டு மீண்டும் மரமருகில் சென்றேன்.

”என்ன நடந்தது?”

”எல்லாம் கடந்த பின்னும் கருமை என்னும் நிறமும் அகற்றி உள்ளே போக முடியாத நிலை சொன்னேன், வெறுமை என்பதும் என்ன என்ற அளவுகளும் என்னின் அடுத்த நிலையை கேலி செய்வதாய் உணர்ந்த நொடியில்...”

மரம் சொன்னது.. ”சரி போகட்டும் அந்த பாதை சரிவில் ஒரு மரம் இருக்கிறது கண்டாயா? ”

”ஆமாம்”

”அதன் அருகில் சரிவின் விளிம்பில் நில். என்ன தோன்றியது என்று வந்து சொல். இதற்கு மேல் கேள்விகளில்லை, தோன்றியது சொன்னபின் ஞான மர ரகசியம் சொல்லப்படும்..”

பரவசமான மன நிலையில் சரிவினை நோக்கி ஓடினேன். விளிம்பில் மரத்தின் அடியில் நின்றேன். வெறுமனே மரத்தைப்பார்த்துகொண்டிருந்தேன். பின் மீண்டும் என்னிடம் பேசிய மரத்தின் அருகில் சென்றேன்

”அந்த மரத்தின் அடியில் நின்றபோது என்ன தோன்றியது?”

”ஒன்றும் தோன்றவில்லை. வெறுமனே நின்றேன் இதன் பிறகு போதி மரம் காணக்கிடைக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது” என்றேன்.

”நல்லது நீ போய்வரலாம் உனக்கு போதி மரம் கிடைக்காது.”

விக்கித்து நின்ற என்னைப்பார்த்து ”விளக்கம் வேண்டுமா” என்றது..

தலையாட்டிய என்னிடம் ”சரி கேள்”

முதலில் நீ சென்ற புதரில் ஒரு தாய் நேற்று அமர்ந்து தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். சரிவிலுள்ள மரத்தில் அதற்கும் முன் ஒருவன் மலஜலம் கழித்தான். யாரோ ஒருவர் மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் கிடைத்ததால் அதன் கீழ் அமர்ந்தால் உனக்கும் ஞானம் கிடைக்குமென்று வந்த நீ சிறிது சிந்தித்துப்பார்..

மரத்தினடியில் அமர்ந்ததால் ஞானம் கிடைத்திருக்குமாயின் அந்த புதரினடியில் அமர்ந்தபோது உன் மார்பில் பால் சுரந்திருக்க வேண்டும், சரிவின் மரத்தினடியில் கழிவுகள் வெளிப்பட்டிருக்கவேண்டுமல்லவா??

எனில் போதிமரம் கிடைத்தால் மட்டும் அடியில் அமர்ந்தால் ஞானம் கிடைத்து விடுமா என்ன??

மண்ணின்றி வேர்களின்றி நிலையில்லாது நடக்கும் நானே ஒரு மரம்தான் என்ற எண்ணம் இப்போது உள் மண்டைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது..

ஞானம்?? 
.

முடிவற்ற..இன்றைக்கு முன் இறந்துபோன
ஏழு நாட்களின் தாக்கத்தில்
இன்றைய நாளும் இறப்பதறியாது
வாழ்வது பற்றிய குறிக்கோள்கள் மீது
கேள்விகள் எழுந்தது..

எல்லா முனைப்புகளும் முடிவினை நோக்கியே
என்ற சிந்தனையில் இலக்குகளில்லா வாழ்வின்
சூட்சுமங்களில் இறக்கப்போகும் முன்னேற்பாடுகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்..


-----

இதுவரை பறவைக்கும், குஞ்சுக்கும்
வீடாயிருந்த கூடு, அடித்த புயலில்
ஏதுமற்ற வெளியை, குடிவைத்து
சிதிலங்களின் சின்னமாய் சிக்கல் பின்னல்களில்
ஊடாக, கூடாகவே சரிந்து கிடக்கிறது..

-----

விழிப்பினைத் தள்ளிப்போட்ட
உறக்கத்தின் முடிவில்
பெற்றவர்கள், பெற்றவைகள்
பறவைகள், தொலைக்காட்சி,
செல்பேசி, வாகனம் மற்றும்
வயிற்றினுள் பசியின் உறுமல் என
சேதி சொல்லும் ஒவ்வொரு
ஒலிக்குமான அர்த்தங்கள்
தேவைகளின் மொழிகளாய்

விழிகளைத் திறக்கவைத்து
ஓடச்சொல்கிறது
இருப்பின் வேட்டைக்காய்...