பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)

ஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)


திருச்சிற்றம்பலம்.


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

- பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்


சென்ற வருடம் இதே ஜூன் மாதத்தில் ஸ்வாமி ஓம்கார் எங்களை அழைத்துச் சென்ற நாளிலேயே மழை வெளுத்து வாங்கி நிற்க முடியாமல் அட்டைக் கடி பட்டு, விரல்கள் இழுக்க ஏழாவது மலை பார்க்கமுடியாமல் ஏழாம் மலை அடிவாரத்திலிருந்து ஒரேயடியாய் இறங்கிய தேதியைக் காட்டிலும் பத்து நாட்கள் தள்ளியே இந்த வருட யாத்திரை ஆரம்பித்தது. சென்ற ஆண்டுப் பயணம் படிக்க ஒரு பரதேசியின் பயணம் -3- வெள்ளியங்கிரி

எறும்பு ராஜகோபால் ஏற்கனவே புக் செய்திருந்த ரயில் டிக்கெட் கடைசி வரை வெயிட்டிங் லிஸ்டியே காண்பித்து பல்ப் குடுத்தபோது மணி வெள்ளி இரவு 7.30. சரி, ஏதாவது ஆம்னி பஸ்ஸில் கோவை சென்றுவிடலாமென்று ஆன்லைனில் தேடினால் அநேகமாக அனைத்து வண்டிகளிலும் சீட் இல்லை.

ராஜகோபால் முதலில் கோயம்பேடு சென்று ஏதாவது வண்டியில் டிக்கெட் கிடைக்குமா என்று பார்த்தபோது ஏஆர்சி பார்சல் சர்வீஸாரின் பஸ்ஸில் இடம் இருந்தது. வோல்வோ இல்லாத சாதாரண செமி ஸ்லீப்பர் ஏசி பஸ். பிரயாணம் சுகமாக அமைந்து, மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்வாமிஜி எங்களுக்கான சிரமப் பரிகாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த குஜராத் சமாஜத்திற்கு சென்றோம். எங்களுக்கு முன்பாகவே முதல் யாத்திரைக்கு வந்திருந்த அகநாழிகை வாசுதேவன் முதலில் ஓடிவந்து வரவேற்றார். வழக்கம் போல பஸ் பிடித்தாவது வந்து பொறியில் சிக்கும் இந்த ஆன்மீக புழுக்களை இன்முகத்தோடு அறைக்குள் இருந்தவாறு ஸ்வாமிஜி வரவேற்றார். குளித்துவிட்டு கிடைத்த நேரத்தில் பதிவர் விஜி மற்றும் சகோதரி பிரபா அவர்கள் வீட்டிற்குச் சென்று சிறிது பலகாரமும், ரோஸ்மில்க்கும் அருந்திவிட்டு மாலை மலை ஏற முடிவு செய்தோம்.

ஸ்வாமிஜியிடம் அப்பொழுதுதான் மலை ஏறும் ப்ரோக்ராம் பற்றிக் கேட்டேன். இரவு ஏற ஆரம்பிப்போம் என்றார். எனக்கு திக்கென்றானது. ஏனெனில் முதல் மலை தவிர்த்து மற்ற இடங்களில் தங்குவதற்குக் கூட இடமில்லை, மழை பெய்தால் அவ்வளவுதான் மிகப்பெரிய ரிஸ்க் ஆயிற்றே என்று எண்ணும்போதே, இரவு மலை ஏறி முதல் மலையிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் தங்கிவிட்டு மறுநாள் காலை 4 மணிக்கு மீதமுள்ள ஆறு மலைகளும் ஏறுவோம் கவலைவேண்டாம் என்று விளக்கினார்.

மழை பற்றிய கவலை எனக்கு உள்ளுக்குள் அரித்துக்கொண்டே இருந்தது. பருவ மழை துவங்கி 20 நாட்களுக்குப் பிறகான பயணம். சென்ற முறையை விட 10 நாட்கள் தாமதம், அதுவும் அந்த மலைப்பகுதியில் ஏற்கனவே மழையால் ஏறமுடியாமல் திரும்பிவந்த ஏமாற்றம், ஏழாவது மலை காணாமல் திரும்புவதில்லை என்கிற உறுதி, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடரான சுப்பாண்டிதான் இப்படி ஒரு நாளில் மலைப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்று அவரைத் தேடினேன், ஸ்வாமிஜியைத் தவிர்த்து வேறு யாரும் உடன்வந்திருக்கவில்லை.

திடீரென்று நமது இலக்கிய வாசிப்பாளர் வாராவாரம் மலைஏறும் ட்ரெக்கிங் பித்தர் சாறு சங்கரிடமிருந்து போன் வந்தது, எங்கே இருக்கீங்க? என்றார். கோவையில் என்று சொன்னேன். நான் புல்லட் எடுத்துக்கொண்டு வெள்ளியங்கிரி அடிவாரத்தில் இருக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சி தந்தார். பயபுள்ள கோயம்பத்தூர் வரையில் தனியாக புல்லட்டில் வந்திருக்கிறது எல்லாம் ஈசன் செயல்.

ஸ்வாமி ஓம்கார் அன்பர்களுக்கு பயணம் பற்றி விவரிக்கிறார்.

மாலை, 4 மணி அளவில் ஸ்வாமிஜியின் ப்ரணவபீடம் சென்டரில் அனைவரும் ஒன்று சேர்ந்தோம், வழக்கம் போல ஸ்வாமிஜி முதல் முறை மலை ஏறுபவர்களுக்காக சில அறிவுரைகள் வழங்கினார், கூட்டுத் தியானமும் நடைபெற்றது. உலர்பழங்கள், ரெடி டு ஈட் வகை சப்பாத்தி மற்றும் பப்பட், சில புளிப்பு மாத்திரைகள், ஆரஞ்சு மிட்டாய்கள், அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க நல்லெண்ணெய், குளுக்கோஸ் பாக்கெட், ஒரு எனர்ஜி ட்ரிங் பாக்கெட், முந்திரி, பாதாம் அடங்கிய பாக்கெட்டுகள் போன்றவை அடங்கிய ஒரு பை அனைவருக்கும் அளிக்கப்பட்டது, கூடவே ஒரு மூங்கில் கழியும். சென்ற முறையை விட இம்முறை எண்ணிக்கை அதிகம் 36 பேர் அடங்கிய குழுவாக ஒரு பஸ்ஸில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு ப்ராயாணமானோம்.

மலை ஏறும் முன்பாக அடிவாரத்தில் இரவு உணவு


அடிவாரத்தில் சாறு சங்கரும் எங்களுடன் சேர்ந்துகொள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து இரவு உணவாக இட்லியும், கோதுமை ரவை உப்புமாவும், பொருள்விளாங்கா உருண்டையும் (சேல்ஸ் ஆகாத இந்த ஐட்டத்தின் ஸ்பான்ஸர் ஜெய் மாதாஜி விஜி) எடுத்துக்கொண்டோம். மலை ஏறும் பாதை கேட் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது,  அந்த இடத்தைப் பார்த்ததும் சென்றவருடம் மலை இறங்கியபின் இதே இடத்தில் இந்தப் பாதையைப் பார்த்து இனி வாழ்க்கையில் எந்த மலையும் ஏறுவதில்லை என்று நான் எடுத்த சபதம் நினைவுக்கு வந்தது, மீண்டும் இங்கேயே என்னை சுண்டி இழுத்தது எது? என்ற கேள்விக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை.:)))))

காவலுக்கிருந்தவர் இரவு மலை ஏற அனுமதி இல்லை என்றார் பயணம் சிறிது தாமதமானது, கூட வந்தவர்களின் ஆன்மீக கேள்விக்ளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் ஸ்வாமிஜி. அருகில் உறங்கிக்கொண்டிருந்த நான் திடீரென்று எழுந்து பிரபஞ்சம் ஏன் தோன்றியது என்று கேட்டேன், ஜெய் சங்கர் என்றபடியே என்னை மீண்டும் உறங்கச்சொன்னார். சிறிது நேரம் கழித்து காவலாளியிடம் சென்ற ஸ்வாமிஜி அவரிடம் நாங்கள் முதல் மலையில் தங்கிவிட்டு காலைதான் ஏறுவோம் என்று உறுதி அளித்தவுடன் பத்திரமாபோங்க என்று வழிவிட்டார். நான் மேலே வானத்தைப் பார்த்தேன், நட்சத்திரங்கள் பளிச் என்று மின்ன, மேக மூட்டமற்று தெளிவாகவே இருந்தது மழை மட்டும் வரக்கூடாது என்ற நினைப்புடன் குழுவோடு ஏறத்துவங்கினேன்.

மழை குளிர் தாங்கும் கோட், உள்ளே ஸ்லீவ்லெஸ் பனியன், அதனுள்ளே உள்பனியன் என்ற உடைகள் ஒவ்வொன்றாக கழற்றப்பட்டது, ஏற, ஏற உடல் சூடு அதிகமாகியது. மழை இல்லை, மரங்கள் சூழ்ந்திருந்ததால் காற்று தடைப்பட்டிருந்தது, வியர்த்துக்கொட்டியது, ஒருவழியாக முதல் மலை பிள்ளையார்கோவில் வரும்போது சப்தநாடியின் சப்தம் எனக்கே கேட்டது.

முதல் மலை உச்சியில் வரும் பிள்ளையார் கோவில்


நான்கு மணிநேரம் சுமாருக்கு அங்கே படுத்து உறங்கி காலைதான் பயணம் தொடருவோம் என்று ப்ளான் செய்த ஸ்ரீமான்.சுப்பாண்டியை பாராட்டத் தேடினேன், வாங்க என்று எங்களுக்கு முன்னாலேயே சென்று இடம் பிடித்த ஸ்வாமிஜியின் குரல்தான் கேட்டது. குளிர் இருந்தது, காற்று இருந்தது, நல்லவேளையாக மழை இல்லை. இயற்கைக்கு நன்றி சொல்லி. கிடைத்த 
இடத்தில் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தோம்,

வெள்ளி சூழ் காலை

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்..


’சம்போ மகாதேவ’ என்று சரியாக 4 மணிக்கு ஸ்வாமிஜியின் கோஷம் எல்லோரையும் எழுப்பியது, அதிகாலைப் பனியுடன் காட்சி தந்த இயற்கை, வெளிச்சம் வரும் கிளம்புங்கப்பா என்று அரவணைக்க, மரங்கள் சூழ்ந்த கற்கள் நிறைந்த காட்டுப் பாதையில் டார்ச் லைட் உதவியோடுஇரண்டாம் மலைப் பயணம் ஆரம்பமாகியது. அனைவரும் படுத்து உறங்கி ஓய்வெடுத்திருந்தபடியால் சட்டென்று பாறைப் பாதை கடந்து இரண்டாம் மலை உச்சியான சிவநீர் என்ற இயற்கை சுனை நீர் வரும் இடத்தை அடைந்துவிட்டோம். அதிகக் களைப்பின்றி நீர் குடித்து நீர் நிரப்பி மூன்றாவது மலை ஏறத்துவங்கினோம். காற்றும் குளிரும் உடலுக்குத் தெம்பூட்டுவதாகவே இருந்தது. மெல்ல அடி எடுத்து பிரம்ம குகை வந்த மூன்றாவது மலை முடிந்து, நான்காவது மலை ஏற ஆரம்பித்தோம்.

ஐந்தாம் மலையிலிருந்து ஆறாம் மலை செல்லும் பாதை


வேண்டியபடியே மழை அறவே இல்லை, அல்லது அனைவரும் வேண்டியும் மழைபெய்யவில்லை என்றும் கொள்ளலாம், உலக வெப்பமயமாதலோ, மரங்கள் வெட்டுவதாலோ மனிதன் இழைக்கும் தீமைகளுக்கு பதிலடி தர இயற்கை முடிவெடுத்து விட்டதாகவே தெரிந்தது. 109 டிகிரி சர்வசாதாரணமாக பொசுக்கிய சென்னை வெயில் நினைவுக்கு வந்தது, கடவுளோ, இயற்கையோ என்னுடைய ப்ரார்த்தனை பலிக்குமளவிற்கு யோக்கியவான் நான் இல்லை என்பது தெரிந்ததாலேயே ஒரே வருடத்தில் அற்புதமாக மழை பெய்த இடம் இன்றைக்கு மழை இல்லாமல் அமைதியாக இருந்தது பயத்தை தந்தது. அட்டைகளை மீண்டும் நினைவுபடுத்திய பாறைக்கு வந்து சேர்ந்தோம், மழை இல்லாததாலும் ஈரம் இல்லாததாலும் அட்டைகளும் கண்ணில் படவில்லை ஐந்தாவது மலை கடக்க ஆரம்பித்தோம். 

பனி சூழ்ந்த காலையில், எறும்பு சித்தருடன் நான்


காற்று குளிருடன் சுழற்றி அடித்தது, இதுவரை சுமையாக இருந்த ஜெர்கினை எடுத்து அணிந்துகொண்டு, தலைக்கு கம்பளி குல்லாயும் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம், பேஸ்மெண்ட் வீக்காகி வெடிக்கத் துவங்கி இருந்தது, பளிச்சென்று வெயில் வந்து சென்றதை ரசித்தாலும் தூரத்தே ஸ்வாமிஜியும் இன்னபிற ஆரோக்கிய பக்தர்களும் நடக்கும் தூரம் மலைப்பைத் தந்து மனதை அசைத்துப்பார்த்தது. என்ன ஆனாலும் ஏழாவது மலை என்ற டார்கெட் மனதில் ஓடியது, 100 வது சதத்திற்காக சச்சினுக்கு கிடைத்த வாய்ப்பைப் போல மழை இல்லாத, அடிக்கடி வெயில் வந்தாலும் குளிரடிக்கும் இந்தப் பருவ நிலை 
இதைவிட்டால் வெள்ளியங்கிரி யாத்திரையில் அமையாது என்று உள்ளே ஒரு உறுதி ஏற்பட்டது.


சில விஷயங்கள்:

முதல் மலை முழுவதும் பாறைகளாலான படிக்கட்டுகளுடன் செங்குத்தான ஏற்றம் கொண்டது. கிட்டத்தட்ட திருப்பதியின் முதல் மலை காலி கோபுரம் போல.

இரண்டாவது மலை பாறைகளில் படிகள் செதுக்கப்பட்டிருக்கும், மழைக் காலங்களில் வழுக்கும் என்பதாலேயே வழுக்குப் பாறை என்றும் சொல்லுவர்.

மூன்றாவது மலை பாறைகளாலான படிக்கட்டுகள், மண் பாதை, மரங்களின் வேர்கள் என்று கலந்து வரும்.

நான்காவது மலை கற்களும், மணலும் நிரம்பிய அசல் காட்டுப்பாதை, மழை இருந்தால் மிகவும் சிரமத்தை அளிக்கும்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது பாதை சிறிது சமதளமாக நடக்கக்கூடியதும், ஏற்ற இறக்கம் கொண்டதும் காற்று வேகமாக மேலே வந்து நம்மைத் தள்ளுமளவிற்கு சமவெளியைக் கொண்டதாக, அழகான இயற்கை பள்ளத்தாக்குகளையும். மலைத் தொடர்களையும் , அடர்த்தியான காடுகளையும் கண்டு ரசித்து மகிழக்கூடிய பாதை, நல்ல பனி / மேகமூட்டம்
இருக்கும் நாட்களின் சுற்றியுள்ள அனைத்துமே வெள்ளியாக புகையாகத் தெரியும், வெயிலடிக்கும்போது அற்புதமான இயற்கையின் தரிசனைத்தைக் காணமுடியும்.

சுரண்டப்பட்ட விபூதிப் பாறை


ஆறாவது மலைதான் விபூதி மலை என்று அழைக்கப்படும். மாவுபோன்ற பாறைகளை சுரண்டி அதிலிருந்து கொட்டும் துகள்களை மலைக்கு வருபவர்கள் விபூதி பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள். சாதாரணமாக விரல்களால் சுரண்டினாலேயே மணலாகக் கொட்டும் அந்தப் பாறைதான் எங்களையும் சுமக்கிறது, கட்டுக்கோப்பான மலையாகவும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

ஏழாவது மலை, அதைப் பிறகு பார்க்கலாம்.
--

ஏழாவது மலை அடிவாரத்தில் இருக்கும் சுனை


ஒருவழியாக ஆறாவது மலை முடிந்து, அடிவாரத்தை அடைந்து அங்கிருக்கும் சிறு குளத்தை அடைந்ததும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது, சென்ற வருடம் இங்கே நிற்கக்கூட முடியாமல் அட்டைகள் கடிக்க இனி ஏற முடியாது என்று முடிவெடுத்து ஒரே ஓட்டமாக ஐந்து மலை இறங்கியது நினைவுக்கு வந்தது. குளத்தில் கூட் அட்டைகள் இல்லை, முழங்கால் அளவிற்கு இருந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக பளிங்குபோல நடந்து வந்த களைப்பிற்கு உற்சாகமாக அமைந்தது. குளித்து முடித்து, வேட்டி கட்டி, ஜெர்கினை மாட்டி பதினைந்து அடிகள் ஏறி வலது புறம் திரும்பியதும் ஏழாம் மலைக்கான பாதை தெரிந்தது.

காலை 9.15 மணிக்கு பனி சூழ்ந்த ஏழாம் மலை பாதை ஆரம்பம்


கடந்துவந்த ஆறு மலைகளை விட இந்த மலை வித்தியாசமானது என்பது புரிந்தது. காற்று கடுமையான குளிருடன் நம்மைச்சாய்த்து விடுமளவிற்கு அடித்தது. ஏற ஏற மேக மூட்டமும், பனியும் ஒருசேரத் தாக்கியது, தலைக்கு அணிந்திருந்த குல்லாவில் சிறிய பனித்துகள்கள் ஒட்டிக்கொண்டன. திடீரென்று வெயில் வந்தபோது சுற்றுப்புறமும், பள்ளத்தாக்கும், மலைகளும் விவரிக்கமுடியாத இயற்கையின் அற்புத தரிசனத்தைத் தந்தது, மனிதக் காலடி படாத இயற்கை வாழும் இடங்களின் செழுமை அதன் அடர்பச்சை நிறத்திலேயே தெரிந்தது. சுற்றுப் புறத்தை ரசித்தபடியே ஏறிக் கொண்டிருந்தோம்,

காற்றின் ஒலி வீடியோ..


வெள்ளியங்கிரியில் என்ன தரிசனம் கிடைத்தது???


(இன்னும் செல்லும் இந்தப் பாதை...)

.

24 comments:

க ரா said...

இன்னும் எத்தனை பார்ட் வரும் குருஜி :) உங்களை மீண்டும் எழுத வைத்த சிவபெருமானுக்கு என் நன்றிகள்.

vasu balaji said...

good good:)

நாடோடி இலக்கியன் said...

nice to read.

திவாண்ணா said...

நன்றீ! அதென்ன அட்டை கடிக்கு நல்லெண்ணை?

திவாண்ணா said...

:-)

நிகழ்காலத்தில்... said...

@வாசுதேவன் திருமூர்த்தி
அட்டை கடிக்க வாகாக நாம் கால் அகப்படுவதிலிருந்து தப்பிக்க மட்டுமே நல்லெண்ணெய் :)

நிகழ்காலத்தில்... said...

கூட வந்தவர்களின் ஆன்மீக கேள்விக்ளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் \\

ஆர்வமாக மக்கள் அதிகம் கேள்விகள் கேட்ட சப்ஜெக்ட்., பேய் பிடித்தவர்கள் பற்றி .. சிவன் சன்னதி என்பதால் இப்படி நடந்ததோ என்னவோ :))

நம்ம சாமி சளைக்காமல் அவர்களுக்கு
தகுந்தவாறு சுருக்கமாக விளக்கம் அளித்தார்.

எல் கே said...

todarungal

உணவு உலகம் said...

அடிக்கடி ஆன்மீகப்பயணம். கொடுத்துவைத்தவர்கள்.

K.MURALI said...

Good.
Nice to read.

muthukumaran said...

நல்ல விவரணை.. எனக்கு என்று வர கொடுத்து வைத்திருக்கிறது என்று தெரியவில்ல..

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! தொடருங்கள்... நன்றி !

ஜோதிஜி said...

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்..

அந்த தவத்தை படம் வரைந்து பாகம் குறித்தால் நாங்களும் குதிக்க தயார்.

ravi said...

one of the places where you could feel god, rekindled my thoughts of my journey over there. http://mcxu.blogspot.com/2012/01/blog-post.html

அபி அப்பா said...

மிக நல்ல "ஆற்றுப்படுத்தும்" பதிவு சங்கர். நானும் ஒரு முறை வந்து கலந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாகியது. நல்லா எழுதி இருக்கீங்க..அருமை..

கொக்கரக்கோ..!!! said...

ஆவல் அடக்கமுடியவில்லை. சீக்கிரம் தரிசனம் பற்றி எழுதுங்கள்.

anujanya said...

பயணங்கள் மற்றும் பயணக் கட்டுரைகள் எப்பவுமே சுவாரஸ்யம் தான். அதுவும் நீங்க எழுதினா கேட்க வேண்டாம். நல்லா வந்திருக்கு. அடுத்த
பாகத்திற்கு ஆவலுடன் வெய்ட்டிங் :)

துபாய் ராஜா said...

தென்நாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டிற்கும் இறைவா போற்றி.

திருச்சிற்றம்பலம்.

விஜி said...

அலோவ், நான் பிரியாணியே தரேன்னு சொன்னேன். அவருதான் பொருள் வெளங்கவே கூடாதுன்னார் :))

CS. Mohan Kumar said...

மிக அருமை. பொறுமையாக ரசித்து படிதேன் தொடருங்கள்

Ravichandran Somu said...

Excellent...அடுத்த முறை இந்த பயணத்தில் இணைந்து கொள்ள சிவபெருமான் அருள் வேண்டும் !!!

Unknown said...

இந்த முறை கொடுத்துவைக்கவில்லை :((

ஆவலைத் தூண்டுகிறது உங்கள் ஸ்டாப் :))

Unknown said...

அருமை

sathishsangkavi.blogspot.com said...

கூடவே வந்தது போல் உணர்வு...

நானும் கோவைதான்... வரும் தகவல் தெரியவில்லை இல்லை என்றால் உங்களை சந்தித்திருப்பேன்...

அடுத்த முறை சந்திப்போம்...