பலா பட்டறை: 2013

இறந்த காலம்.

ஒரு லட்சத்திற்கும் மேல் ஹிட்ஸுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும், வாசக பெருமக்களுக்கு நன்றி (ஹுக்கும்..)


1980 - லிருந்து வேலூரில் வசித்துவிட்டு 2000 - ல் சென்னைக்கு மீண்டும் குடி பெயர்ந்ததற்குப் பிறகு 2002 - ல் ஒரு முறை சென்றேன். அதற்குப் பிறகு பல மாற்றங்களை வேலூர் பைபாஸ் வழியாக பல ஊர்களுக்குச் சென்று வரும்பொழுது கவனித்து வந்ததோடு சரி, ஊருக்குள், நான் பால்யத்திலிருந்து, இளைஞனாகிய காலகட்டத்தில் சுற்றித் திரிந்த இடங்களுக்குச் செல்ல முடியாத குறையை 11 வருடங்களுக்குப் பிறகு சென்ற வெள்ளியன்று சென்று வந்து தீர்த்துக் கொண்டேன்.

வ்வளவு மாற்றங்கள்?? பரபரப்பில்லாத அமைதியான ஊர் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல், ஜனத்திரள், புதியப் புதிய கட்டிடங்கள், குடியிருப்புகள் என்று பெரும் மாற்றம் அடைந்திருக்கிறது.

குளிருக்கும், வெயிலுக்கும் புகழ் பெற்ற வேலூரின் நவம்பர் மாதத்துக் குளிரை அனுபவித்தபடியே, முதன் முதலில், குரங்குபெடல் சைக்கிளும், லூனாவும் ஓட்டிய சாலையில் பல நினைவுகளோடு பயணித்தேன். 

மகாராணி ஐஸ் க்ரீம்

காதல் சொல்லி முத்தம் கற்றுக்கொடுத்த முன்னாள் காதலியின் நினைவுகள் நகரெங்கும் வியாபித்துக் கிடந்தது. இந்த மாற்றங்களில் அந்த இடங்கள் அப்படியேதான் இருக்கிறது, குறிப்பாக நாங்கள் விரும்பி அடிக்கடிச் சென்ற மகாராணி ஐஸ்க்ரீம் கடை, ஊரீஸ் அருகில் செல்லும் ஒரு கால்வாய் தெரு, சில பஸ் ஸ்டாப்புகள், முதன் முதலில் சந்தித்த இடம் என்று பல இடங்கள். காடலோடு பல விஷயங்களைக் கற்றுத்தந்து இன்றைக்கு என் வாழ்வின் சில வெற்றிகளுக்கு அந்தப் பெண்ணின் அன்பும் ஒரு காரணம்.

ள்ளி நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டீன் ஏஜ் நினைவுகளை மீட்டெடுக்கும் நிலைகளில் நாங்கள் இல்லை என்றாலும், முகச் சுருக்கமும், வயதின் முதுமையும் பழைய பிம்பத்தை அழித்து, முதிர்ந்த பிம்பத்தை மனது அப்டேட் செய்துகொண்டது, கூடவே ஒரு ஒப்பீடும். ஒன்றாயிருந்த நாட்களின் நினைவுகளை வாழ்வின் பொருளீட்டு நிர்பந்தங்கள் எவ்வளவோ தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது என்பது புரிந்தது. குறிப்பாக மனதுக்கு மிகவும் நெருக்கமான பள்ளிக் கால நண்பன் விபத்தில் பாதிக்கப்பட்டு முடங்கிப் போய், மீண்டுவருவதற்கான தனிமைக் கூட்டில் தன் சிறகுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தபோது மனம் மிகவும் நொறுங்கிப் போனது. கால்பந்தாட்ட வீரனும், பழக எளிமையானவனும், தைரியசாலியானவனுமான அவன் மீண்டும் பூரண நலத்துடன் மீண்டு வர மனதார ப்ரார்த்தனை செய்துகொண்டேன். 

பொருளீட்டுதலின் ஆரம்பகாலகட்டங்கள்தான் எவ்வளவு குரூரமானவை? மானைத் துரத்தும் சிறுத்தையைப் போல அது எதைப் பற்றியும் கவலை கொள்ளாது ரத்த வெறி கொண்டு துரத்தி இளைப்பாறவும், கடந்ததை யோசிக்கவும், புதிப்பித்துக்கொள்ளவும் நொடி நேரமும் தரவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது?

20 வருடங்களுக்கும் மேல் இருந்த ஊருக்கு ஏன் அடிக்கடி செல்ல முடியவில்லை? ஏன் நண்பர்களை தொடர்பில் வைத்துக்கொள்ள முடியவில்லை? எங்கே தவறவிட்டேன் என்ற கேள்வியை இன்னும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.


சில்க் மில் பஸ் ஸ்டாப்


ன்றைக்கு அடையாளமாக தனித்து இருந்த பல கட்டிடங்கள் இன்றைக்கு பத்தோடு பதினொன்றாக ஆகிவிட்டிருந்தது. நடிகர் திலகத்தின் சிலை அகற்றும் செய்தியோடு மனது இடிக்கப்பட்டிருந்த நேஷனல் தியேட்டரை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது. நன்றியோடு வருடம் தவறாமல் இந்த தியேட்டர் முதலாளியை நடிகர் திலகம் சந்தித்து வந்திருந்தார். இங்கே என்ன கட்டிடம் வரும் அது என்ன பெயர் கொண்டு ஒரு அடையாளம் பெறும் என்று தெரியவில்லை. என்றைக்கோ இருந்த கட்டிடம் அல்லது தொழிலின் பெயர் தாங்கிய இடங்களைப் போல இதுவும் பெயரை மட்டும் ஒட்டாமல் அந்நியமாய்க் கொண்ட ஒரு இடமாக ஆகிப் போகலாம். ’சில்க் மில்’ என்ற எங்கள் பஸ் ஸ்டாப்பிங்கைப் போல, அங்கேதான் எங்களின் வீர தீர புட்போர்ட் சாகசங்களும், சைட் அடிப்புகளும் அரங்கேறிய இடம். ஆனால் அந்தப் பெயருக்கான எந்த மில்லும் அங்கில்லை. குறைந்தபட்சம் சில்க் ஸ்மிதாவின் போஸ்டர் கூட அங்கே ஒட்டப்பட்டு நான் பார்த்ததில்லை. 

பாலாற்றுப் பாலம்


ப்ரிட்டிஷார் கட்டிய பழைய பாலம் இன்று புதிப்பிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாகிவிட்ட அளவுக்கான வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு ஊரின் வளர்ச்சியைக் காட்டுகிறது, 1980 - ல் நாங்கள் இங்கே வந்த புதிதில் என் தந்தையும் நானும் நடந்தே இந்தப் பழைய பாலம் வழியே சிகப்பாய் ஆர்பரித்து ஓடிய பாலாறு இன்றைக்கு சுறண்டிய மணல் குழிகளோடு வறண்டு காணப்படுகிறது. புகழ் பெற்ற பேலஸ் கேப் ஓட்டல் இன்றைக்கு பாட்டா ஷோ ரூம்.

வேலூர் என்றாலே சிஎம்சி என்ற புகழ் பெற்ற மருத்துவமனையின் புகழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு விஐடியும், தங்க கோபுரமும் முன்னிலையாகி அதைச் சார்ந்த வியாபார வளர்ச்சிகள் டாலடிக்கிறது. தங்கக்கோவில் 10 வருடங்களில் அடைந்த வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது.

வேலூர் கோட்டையின் ஒரு பகுதி


கோட்டை இன்றும் அதே மவுனத்தில் கால மாற்றத்தை சுற்றுப்புற பூங்காக்களின் மேக்கப்பில் கொண்டு ஜீவிக்கின்றது.

சாரதி மாளிகையின் ப்ளாட்பாரத்தில் 25ரூபாய்க்கு என் அம்மா எனக்கு தீபாவளி உடை வாங்கித் தந்ததும், டேப் ரிக்கார்டர் காலத்தில் 10 ரூபாய்க்கு பல படங்களின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யப்பட்ட பைரஸி காஸட் வாங்கியதும் கண் முன்னே விரிந்தது. அந்தக் கட்டிடம் மாற்றங்களின்றி அப்படியேதான் இருக்கிறது. 

நான் 5-6ம் வகுப்புகள் படித்த கழிஞ்சூர் கிராமப் பள்ளிக்கூடம் அதே நிலையில் காலத்தின் விரிசல்களைக் கொண்டு சிதிலமாகவே இருக்கிறது. 30 வருட நினவுகளை எந்த சிக்கலுமில்லாமல் மீட்டெடுக்க முடிந்த இந்தப் பள்ளியில் நான் படித்தேன் என்பதை என் பிள்ளைகள் நம்புவார்களா என்று தெரியவில்லை, விரைவில் இந்த இடங்களை அவர்களோடு சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறேன்.

கழிஞ்சூர் அரசு பள்ளிக்கூடம்


னம்பழம், கொடுக்காப்புளி, பாலாற்றின் ரயில்வேப் பாலத்தில் நடந்தது, சுழல் இருக்கும், புதை மணல் இருக்கும் என்ற பயத்தினூடே ஆற்றங்கரையிலிருந்துகொண்டு ஆற்று நீரைப் பார்த்தது, ஹார்லிக்ஸ் பாட்டிலில் முதன் முதலில் பிடித்துக் வளர்க்கக் கொண்டுவந்த மீன் குஞ்சு என்ற பல விஷயங்களை அந்தப் பள்ளியில் படிக்கும்போதுதான் சக மாணவர்களின் சகவாசங்களால் அறிந்தேன்.

பீடி இலையை லாவகமா நரம்பு நீவி, வெட்டி எடுத்து, புகையிலை தூவி அதன் வாய் மடக்கி, நூல் கட்டியபடியே இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்ட அன்று லீவு விட்ட மதியத்தை சீனிவாசன் என்ற நண்பனோடு அவனின் மஞ்சம்பில் வேய்ந்த, மண் தரை குடிசையிலமர்ந்து தினத்தந்தி பேப்பர் ஏன் இன்று சிகப்பு நிறத்தை இழந்து முழுவதும் கருப்பாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆழ்ந்த யோசனையுடன் அந்தப் படுகொலையை நான் வாசித்ததை சீனிவாசனின் அப்பா பார்த்துக்கொண்டிருந்தார், குடிக்கத் தண்ணீர் கேட்டதற்கு எங்க வீட்ல எல்லாம் தண்ணி சாப்பிடுவியா தம்பி என்று கேட்ட அவன் அம்மாவை நாங்கள் இருவருமே விநோதமாகவே பார்த்தோம். அதுவரை பள்ளியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் அன்றிலிருந்து அவன் வீட்டிலேயே மதிய உணவைச் சாப்பிடலானேன். அந்தக் கூரைதான் இன்னும் நான் கட்டிய என் வீட்டு மாடிக்கு எப்படியாவது மஞ்சம் பில் வேய்ந்த கூரை போட ஏங்குகிறது, கழிஞ்சூர் என்ற அந்தக் கிராமம் இன்றைக்கு முழுவதும் காங்கிரீட் வீடுகளாக மாறிவிட்டாலும் அந்த சாணம் மெழுகப்பட்ட தரை கொண்ட குளுமையான வீடு நான் இதுவரை தங்கிய எல்லா இடங்களையும் விட மனதில் அதிக நெருக்கமாகத் தேங்கிவிடக் காரணம் அந்தக் குளுமையும், அந்த நண்பனின் அன்பும். 

கிராமத்து மஞ்சம்பில் வேய்ந்த வீடுகள் இருந்த தெரு


சீனிவாசனின் அப்பா அன்றைக்கு மிருதங்கம், தபேலா வாசிக்கத் தெரிந்த ஒரு கலைஞர். பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் என்ற படத்திற்காக இளையராஜா குழுவில் இவரும் சேர்ந்து தபேலா வாசித்ததை ஒருமுறை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன முயன்றும் பள்ளியும், அதன் அருகிலிருக்கும் பல திரைப்படங்கள் மண் குவித்து நான் என் பாட்டியோடு கண்ட சண்முகா கொட்டாயும் தவிர்த்து வேறு எதுவும் அடையாளம் காணவியலாத அளவுக்கு மாறிவிட்டிருந்தது. வேறு பெயர்கள் நினைவிலில்லாமல் சீனிவாசன் வீட்டைக் கண்டுபிடிக்க சாத்தியமேயில்லை என்று புரிந்துகொண்டேன்.


பிஎட் கல்லூரி மைதானம், வீடுகள் நிறைந்து..


காந்திநகர், திருநகரில் நான் சைக்கிள் ஓட்டிப் பழகிய, நாங்கள் கிரிக்கெட் விளையாடிய  நடந்தால் நெருஞ்சி முள் குத்தும், மிகபெரிய பிஎட் காலேஜ் மைதானம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீடுகள் சூழ காணாமல் போய்விட்டிருந்தது. போலவே ‘விடுதலை ரஜினி ரசிகர் மன்றம்’ சார்பாக நாங்கள் போஸ்டர் ஒட்டிய வீடுகளும் காணோம்.  இறந்த மாடுகளை நடு வயிற்றில் கத்தி போட்டு வெட்டி எடுத்து, தோலுரித்து மிச்சம் விசிறிய மார்பெலும்பை தின்ன வரும் மெல்ல ஓடிப் பின் பறக்கும் பெரிய வல்லூறுகள் அதனருகில் இருந்த கிளைகள் கொண்ட பனை மரம், முட்டிபீஸென்று கோலி விளையாடி கைவிரலெல்லாம் தோல் பிய்த்த இடங்கள் எல்லாம் வீடுகளாகிவிட்டிருக்கின்றன. 

காலம், செரிக்காமல் மெல்ல வாயிலெடுத்த உணவுத் துணுக்காய் நான் அங்கே ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். கலைந்துபோன எல்லாவற்றையும் மீட்டி எடுக்க என்னை அறியாமல் மனம் தவித்துக் கொண்டிருந்தது, அது முடியாது எனத் தெரிந்தும், குழந்தையப் போல குதூகலமாய் 10 வயது சிறுவனின் மனதோடு நான் எல்லாவற்றையும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.

கால்பந்து மைதானம் - கான்வெண்ட்டாகிப் போனது

டான்பாஸ்கோ பள்ளியில் நான் முதன் முதலில் கவியரங்கில் கவிதை படித்த ஆடிட்டோரியமும், சர்ச்சும் பார்த்துக்கொண்டே எதிரில் திரும்பினால் முதன் முதலில் ஜாகிங்கும், ஓட்டப்பயிற்சியும், கால்பந்தாட்டமும், கிரிக்கெட்டும் விளையாடிய மைதானம் இன்றைக்கு ஆங்கில வழிக் கல்விக்கான கட்டிடத்தைத் தாங்கி நிற்கிறது. 11-12 ம் வகுப்பில் நாங்கள் செய்த அட்டூழியங்களை நினைத்துக்கொண்டே கடந்தேன். மாலை பள்ளி விட்டவுடன் எங்கள் பள்ளியின் பின்னால் இருக்கும் அக்ஸிலியம் பெண்கள் காலேஜின் பக்கம் சைட்டடிக்க நண்பர்கள் சைக்கிள்கள் எல்லாம் இடப்புறம் திரும்ப, நானும் சுகுவும் மட்டும் வலப்புறம் திரும்பி யோக்கிய முனிகளாய் வீடு சென்ற அந்த நீண்ட சாலை பெரும் மாற்றங்களின்றி இருக்கிறது.

சைட் அடிக்காமல் யோக்கிய முனிகளாய் வீடு திரும்பும் பாதை


நான் வாழ்ந்த அந்த வாழ்க்கையை இன்று என் பிள்ளைகள் வாழவில்லை. பாலாற்றங்கரையின் ரயில்வே பாலத்தில் மதிய நேரத்தில் என் பிள்ளைகள் தண்டவாளத்தில்  தனியே அவர்களின் நண்பர்களோடு நடப்பதை இன்று கனவிலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இன்று அவர்கள் சாப்பிடும் 40 ரூபாய் சிப்ஸ் பாக்கெட் விலையில் நான் புதுத் துணி வாங்கி தீபாவளி கொண்டாடினேன் என்பதை, என் அப்பா சொல்லும் என் நினைவு தெரிந்து பவுன் 100 ரூபாய் என்ற வாசகம் போல அடித்துப் போட்டுவிடும். வயதாகிறது என்பதை நிரூபிக்கத்தான் எவ்வளவு வடுக்களை காலம் காப்பாற்றி வைக்கிறது?ஊரிஸ் கல்லூரிக்கு எதிரில் இருந்த இரட்டை திரை அரங்கில் ஒன்று மட்டும்.


ரு நாள் போதாமல் சுற்றி அலைந்துவிட்டு சென்னை திரும்பிவிட்டேன். பிள்ளைகள் ஆர்வமாய்க் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் கூட்டிச் சென்று காண்பிக்கிறேன் என்ற பதிலில் முடித்துக்கொண்டேன். உடலிலும் ,மனதிலும் தெம்பும், இளமையும் இருக்கும்போதே அவர்களைக் கூட்டிச் சென்று ஒரு ஆச்சரிய சுற்றுலா காண்பித்து வர முடிவு செய்திருக்கிறேன். அவர்களைக் கொண்டுதான், அவர்களின் பார்வையின் ஆச்சர்யங்களைக் கொண்டுதான் என் பால்யத்தை இன்னும் பலகாலத்திற்கு மீட்டெடுத்து நினைவில் சேமிக்க முடியும்.


_/\_ நன்றி :))

மயிறு மாதிரி தெரியற்து.

மயிறு மாதிரி தெரியற்து.


"என்னங்கானும் தக்ளி நூத்துண்டுருக்கீர்?"

"மயிறு மாதிரி தெரியற்து. கண்ணாடிய வேறக்காணோம்"

இது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் வசனம். காரணம் உசிலைமணி அவர்களின் மூக்குக் கண்னாடியை ஊர்வசியின் பாட்டி லவட்டிக்கொண்டு போயிருப்பார், கையில் இருப்பது மங்கலாகத் தெரிவதால் கண்ணாடி இல்லாத அவஸ்தையை காமெடியாக்கி இருப்பார்கள்.

சிறு வயதில் கண்ணாடி அணிந்திருக்கும் நண்பர்களைப் பார்த்தால் மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும், 1970களில் பிறந்த எனக்கு 9வது வகுப்பில்தான் சக மாணவன் கண்ணாடி அணிந்ததையே பார்க்க வாய்த்தது. இப்பொழுது கிண்டர்கார்டனிலேயே சர்வசாதாரணம். ஆக, அது அப்பொழுது ஒரு ஆச்சர்யம். எதற்காக இந்தக் கண்ணாடி? குடுடா என்று வாங்கிப் பார்த்தால் ஒன்று எல்லாம் சிறியதாகத் தெரியும், அல்லது அதைப் போட்டிருக்கும் நண்பனின் கண்களே மிகப் பெரியதாகத் தெரியும்.

எனக்கு சாதாரணமாக இப்படித் தெரிவது இவனுக்கு எப்படி சரியாகத் தெரிகிறது என்ற ஆராய்ச்சியில்,' கண்ணாடி போடாவிட்டால் உனக்கு எப்படி மச்சிதெரியிது?' என்ற கேள்விக்கான பதிலாக 'மங்கலாகத் தெரியும்' என்ற விடையை என் கண்களை வைத்தே பரிசோதனை செய்யத் துவங்கியதின் விளைவா என்றெல்லாம் அறியாது, வழக்கம் போல டான் பாஸ்கோவின் 11ம் வகுப்பின், கடைசி பெஞ்சில் அமர்ந்து அருகில் இருக்கும், சுகுவிடமும், ரவியிடமும் போர்டில் என்ன எழுதி இருக்கிறது என்ற சந்தேகம் அடிக்கடி கேட்டதில் விளைவு, ரவி என் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம், " அம்மா இவனுக்கு போர்ட்ல இருக்கற எழுத்தே தெரியலங்கறான், கண்ண டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டுப் போனான்.

1988ல் பிள்ளையார் சதுர்த்திக்கு முந்தைய நாள் -0.75 என்ற பவரில் கண்ணாடி போட்டு, வேலூர் ராஜா தியேட்டர் அருகில் சாலை, மேடும் பள்ளமுமாகத் தெரிய, தட்டுத்தடுமாறி எருக்கம் பூ மாலை வாங்கி 50 காசுகள் கொடுக்க சில்லறை எடுத்து உள்ளங்கையைப் பார்த்தால் மச மசவென்று கண்ணில் க்ரீஸ் தடவிவிட்டாற்போல இருந்ததை கவனித்து, பூ விற்ற அம்மாவிடமே நிங்களே எடுத்துகிட்டு மிச்சத்தைக் கொடுங்க என்று எஸ்கேப்பாகி வீடு வந்தேன்.


அது வரை ஆராய்ச்சிக்குறிய பொருளாக இருந்த மூக்குக்கண்ணாடி எவ்வளவு பெரிய அவஸ்தை என்று நான் வெகு சீக்கிறமாகவே உணரத் துவங்கிவிட்டேன். 11ம் வகுப்பில் நாங்களே பெரும்பாலும், மண்ணும், செங்கல்லும், சிமெண்ட்டும் சுமந்து கட்டிய பாஸ்கெட் பால் கோர்ட் அருமையாகத் தயாராகி சக நண்பர்களை பிடி மாஸ்டர் அழைத்து டீம் உருவாக்கி பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகியிருந்த சமயம், மாஸ்டரிடம் சென்று "சார், நானும் ஜாய்ன் பண்ணிக்கிறேன், எனக்கும் பாஸ்கெட் பால் ஆடனும்னு ஆசை" என்று சொல்ல, அவர் ஒரே பதிலாக " பாக்கியராஜையெல்லாம் டீம்ல சேர்த்துக்கறதில்லை" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

"டேய், யார்ரா அது பாக்கியராஜ் நம்ம க்ளாஸ்ல? மாஸ்டர் என்ன வேற யாரோன்னு நெனெச்சிட்டாரோ" என்று அப்பாவியாக கூட வந்த ஶ்ரீதரிடம் கேட்டேன்.

"மச்சி, உன்னை சோடா புட்டின்னு அந்தாள் பேஷனா சொல்றார்டா, கண்ணாடி போட்டிருக்கறதால உன்ன டீம்ல சேர்த்துக்க மாட்டாராம்" என்று சொன்னபோது இந்தக் கண்ணாடி இன்னுமென்னை என்னவெல்லாம் படுத்தப் போகிறது என்று காட்சிகள் கண் முன்னே விரிந்தது. 

டூர் போகும்போதெல்லாம், கூட வந்த நண்பர்கள் ஸ்டைலாக கூலிங் க்ளாஸ் அணிந்து சைட் அடிக்க 'மங்கலாகத் தெரிந்தாலும் ஹீரோவாக்கும்' என்று நானும் ஓசியில் வாங்கிப் போட்டு ஸ்டைல் காண்பித்ததின் விளைவு, கட கடவென்று -2.75க்கு வந்து பகலில் பசுமாடு தெரியாமல் போய்விடுமோ என்ற கதிக்கு கொண்டு விட்டது. அதன் பிறகு உசாராகி, வேலை, நல்ல உணவு, சொகுசெல்லாம் ஆனபிறகு பவர் கூடாமலும், குறையாமலும் ஸ்டெடியாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில்தான் தலைப்புச் செய்தி வருகிறது.

ஆயினும் கூலிங்க்ளாஸ் போடவேண்டும் என்ற ஆசை என்னை விட்டு அகலவே இல்லை, இரண்டு விதமான பவர் ஏற்றிய கூலிங் கண்ணாடிகள் என்னிடம் உண்டு. பார்ப்பதற்கு சாதரனமாகவே இருப்பதால் நண்பர்கள் போட்டுப் பார்த்து கண் வலி வந்த கதை எல்லாம் உண்டு. ஸ்டைல் என்பதைத் தாண்டி வெயிலில் என்னை மைக்ரேன் வராமல் காப்பாற்றிய ஆபத்பாந்தவன் அவைகள்.

ஆமாம், இப்பொழுதெல்லாம் எதையாவது படிக்கவேண்டுமென்றால் இரண்டு அடி தள்ளி வைத்துத்தான் படிக்க முடிகிறது. காதோரமும், முன் நெற்றி மேலும் நிறையவே நரை முடிகள், யெஸ், வெள்ளெழுத்துக்கு அரை வடிவத்தில் எற்கனவே உள்ள கண்ணாடியில் உள் வாடகையா? அல்லது, தனியாக படிப்பதற்கென்றே ஒரு பூதக்கண்ணாடி வாங்க வேண்டுமா என்ற முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தாயிற்று, கண் மருத்துவமனைக்குச் சென்றால் காட்டராக்ட் சிகிச்சை செய்து கருப்பு காகுள்ஸ் டைப்பில் கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்களின் மேனரிசம்களை மனது கவனிக்கத் துவங்கிவிட்டது. 

சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் இளம்பெண் முதல், பஸ்ஸிலோ ரயிலிலோ சந்திக்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் அண்ணாவிலிருந்து அங்கிள் என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள்.

2103ல் நானும் முதன் முதலில் தக்ளி நூற்றேன் என்று சரித்திரத்தில் பதியவே இந்த இடுகை. மயிறு மாதிரி தெரியற்து என்று தடுமாறுவதற்குள் வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி போட்டாகவேண்டும்.

-0_0-


கடல் - விமர்சனம்.

அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும்.

அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.

என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்???

அதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா? ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன்? கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ?

ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா :(

-0-

குழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும்.

அய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.

முழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.

ரீ ரெக்கார்டிங் - அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்யூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்?

-0-

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது.


மீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும்,  மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

-0-

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )

கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! 


.

விஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)


விஸ்வரூபம்.
கமலின் இந்தப் படத்தை காளஹஸ்தியில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. படத்தைப் பற்றிய அரசியலுக்குள் போக விரும்பவில்லை, ஏனெனில் பாகம் இரண்டு வர இருப்பதாக படத்தின் இறுதியில் காட்டப்படுவதால் (வந்தால்) அதையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக இப்படத்தின் அரசியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு. 

ஆம். நீங்கள் பலரின் விமர்சனத்தைப் படித்ததுபோல படம் உலகத் தரத்தில்தான் ஒரு தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்கொண்ட களம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா. ஆங்கிலத்தில் பல படங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், அர்னால்ட் டைப் ஹீரோயிசம், டெக்னிகல் மிரட்டல்களுடன் வந்திருக்கிறது. நம்மூரிலும் இந்தத் தரத்தில் ஒரு படம் வராதா என்று நினைத்ததுண்டு. படத்தின் முழு டோனும் அப்படி ஒரு ஆங்கிலப்படத்தை ஒத்த ஒரு உணர்வைத் தந்தது. நாங்கள் படம் பார்த்த அரங்கு சாதாரண ஏசி இல்லாத சுமார் டிடிஎச் அதிலேயே சவுண்ட் க்வாலிட்டி அசத்துகிறது. கமலின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமும் தெரிகிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானை காட்டும் காட்சிகளில் கேமரா செய்யும் ஜாலம் அசத்தல். முதல் சண்டைக் காட்சியும் அதை மீண்டும் ரிபீட் செய்யும் காட்சியும், பல கேமரா கோணங்களும் டெக்னிக்கலாக தமிழ்/இந்திய சினிமாவை கமல் இன்னும் பல படிகள் மேலே கொண்டுபோக ஆசைப்பட்டிருக்கிறார். இந்தக் களம் அவருக்கு காலை வாரி இருக்கலாம். ஆனாலும் பல படங்கள் இந்த உழைப்போடு வெளி வரும்போது இந்திய கேளிக்கை சினிமா பல புதிய உயரங்களை அடையும், இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தில் இதெல்லாமே தேவைதான்.       

ஆத்திக பகுத்தறிவுவாதியான கமல் படங்களில் பல குறியீடுகள் இருக்கும், வசனங்களிலும் அது மிக நுணுக்கமாக வெளிப்படும் இந்தப் படத்திலும் கதைப்போக்கிற்கு ஏற்ப அதைச் செய்திருக்கிறார். படத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் குறியீடுகள்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டபிறகு எதற்காக இந்தப் படம் எதிர்க்கப்பட்டது என்பதை எதிர்த்தவர்கள் விளக்குவார்கள். அப்பொழுது எனக்கும் உங்களுக்கும் சில வெளிச்சங்கள் பிறக்கும். மிக முக்கியமாக நான் அதைப் பற்றிக் கருத்துரைக்க விருப்பமில்லாததன் காரணங்களில், இணைய ஆராச்சிகளின் மெய் சிலிர்ப்பு வாசிப்பனுபவம்தான். தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள். எனவே உண்மையான எதிர்ப்பை மதிப்போம், அரசியல் / சுயலாப காரணங்களை எதிர்ப்போம். 

--

சரி, கிட்டத்தட்ட கமல் ரேஞ்சுக்கு தெளிவாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் பரிகாரமாக 

நண்பர் ஜோதிஜியின் டாலர் நகரம் என்ற புத்தகவெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இங்கே பகிற்கிறேன். அறிமுகம் தேவைப்படாத இணைய ஜாம்பவான் நண்பர் ஜோதிஜியின் புத்தக வெளியீடு விழா திருப்பூரில் நாளை நடக்க இருக்கிறது, அன்போடு உங்கள் ஆதரவை கோருகிறேன்.

விவரங்களுக்கு :  http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html
                                     http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_26.html   


நன்றி! :)


36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013நுழைவாயில்


36வது, சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013


36வது புத்தகக் கண்காட்சி இந்தமுறை ஒய் எம் சி ஏ மைதானம் நந்தனத்தில் நேற்று துவங்கியது. வழக்கம் போலவே முதல் நாள் முதல் ஷோ காணவேண்டியும், இந்தமுறை புதிய இடத்தில் நடப்பதாலும் ஆவலோடு நேற்று மதியம் 3 மணி அளவில் உள்ளே சென்றேன். மவுண்ட்ரோடிலிருந்து உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய மைதானங்களுடன் நம்மை வரவேற்கும் இந்தப் புதிய இடத்தில் குறுகிய சாலை கொண்ட நுழை வாயில் இருப்பதால் வண்டி ஓட்டுவதில் மிகப்பொறுமைசாலிகளான நம் மக்களால் நந்தனத்தில் மிகப் பெரிய ட்ராபிக் ஜாம் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

அரங்கின் ஒரு தோற்றம்


பல மைதானங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த இடம் பார்க்கிங் வசதிக்கு பொருத்தமானதாக இருந்தாலும், கண்காட்சியை அடைய பல மீட்டர் தூரம் நடக்கவேண்டி இருக்கும், பகலில் கை காட்டிய இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இரவில் வண்டியை எங்கே விட்டோம் என்று தலை சொறியவேண்டும் என்பதால் ஏதேனும் ஒரு அடையாளம் பார்த்து வண்டி விடுவதும், செல்லும் பாதையை நினைவில் வைப்பதும் அவசியம்.


உள்பகுதி கூரை அமைப்பு 

வழக்கம் போலவே சர்க்கஸ் கூடாரம், ஆனால் இம்முறை பெரிய கூடாரம். அதிக ஸ்டால்கள். விழா மேடையின் எதிரே உள்ள வாயில் அருகில் ஸ்டால் கிடைத்த நவீன வேளாண்மை போன்ற ஸ்டால்கள் கொஞ்சம் பாக்கியவான்கள், காற்று கொஞ்சம் வீசி புழுக்கத்தைக் குறைக்கும்  ஒரே இடம் இதுதான். மற்ற இடங்களில் கூட்டமில்லாத நேற்றே மூச்சு முட்டுகிறது. இது போன்ற கூரை அமைப்பில், உயரமான இடத்தில் சுற்றிலும் இடைவெளி விட்டு அமைப்பது ஒன்றே குளுமைக்கும், காற்றோட்டத்திற்குமான ஒரே வழி.

ஸ்டால்களில் 70 சதவீதம் நேற்று அந்த நேரத்தில் புத்தகங்களை அடுக்கிவிட்டுத் தயாராகவே இருந்தார்கள் என்பது ஆச்சரியம். மற்றவர்கள் கடைசி நேர பரபரப்பில் இருந்தார்கள். கார்பெட் வசதிகள் தடுக்கி விழாத அளவிற்கு ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.


இம்முறையும் முதலிலேயே மீனாட்சி புத்தக நிலையம் கண்ணில்பட உள்ளே சென்றேன், இம்முறையும் அவர்களுடைய மலிவுப் பதிப்பில் வெளியான சுஜாதாவின் பல புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைத்தது. 

பல ஸ்டால்களின் உள் அளவு சிறியதாகவே இருக்கிறது. கூட்டமான நேரங்களில் விண்டோ ஷாப்பிங் அல்ல ஸ்டால் ஷாப்பிங் செய்வதுகூடக் கடினம் என்றே நினைக்கிறேன். இரண்டு ஸ்டால்களை ஒன்றாக எடுத்த இடங்களில் புத்தகங்களை ஓரளவு பார்வை இட முடிந்தது. 

கழிப்பறை வசதி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை, ஒய் எம் சி ஏ சர்வ ஜாக்கிரதையாக அவர்களுடைய டாய்லெட்களை பூட்டி வைத்திருக்கிறார்கள், பூட்டி வைத்த டாய்லட்களைச் சுற்றி என்ன கதி ஆகப்போகிறதோ?
குடிக்கத் தண்ணீர் காசு கொடுத்து வாங்குங்க

சாப்பிட வாங்க என்ற பெயரில் கேண்டீன், விலை எல்லாம் வழக்கம் போலத்தான், சரி பரவாயில்லை பசிக்கிறதே என்று ஒரு மசாலா தோசை வாங்கி சாப்பிட்டு 10 நிமிடங்கள் கை கழுவும் இடம் எங்கே என்று தெரியாமல் அல்லாடி, கடைசியில் வலது பக்கம் கை காட்டப்பட்டு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் கை கழுவினேன். வழக்கம் போலவே குடிக்கத் தண்ணீர் கிடையாது, வேண்டுமென்றால் பாட்டில் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டியதுதான். அல்லது விக்கித்துப் போகவேண்டியதுதான்.

லிச்சி தி க்ரேட்

எல்லா டென்ஷனையும் ஆசுவாசப்படு்த்தியது விலை ஏறாத லிச்சி ஜூஸ் மட்டுமே. நானும் ராஜகோபாலும், கஸ்டமர் கூட பெரிய டீல் பேசிக்கிட்டு இருக்கேன் சார், டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று போனில் உண்மை பேசிய மேவியும் ஆளுக்கு ஒரு கோப்பை அடித்தோம்.

இன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தபோதே, இராமசாமி கண்ணன், அண்ணன் புதுகை அப்துல்லா, அன்பு மணிஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், தமிழ்மணம் நம்பர் 1 மோகன்குமார், லக்கி, அதிஷா என்று பல பிரபலங்கள் வந்திருந்தனர், திரு,பாஸ்கர் சக்தியிடம் ஞானபாநு ஸ்டால் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். கிங்விஷ்வா லயன் காமிக்ஸ் ஸ்டாலில் வெகு பிஸியாக இருந்தார்.
நவீன வேளாண் விவசாயி அண்ணன் அப்துல்லா


ஆமாங்க, இதுதான் உங்களை வரவேற்கிறது (வெளங்கிறும்)

மேடை அரங்கு
சாகித்ய அகாடமி என்று தயை கூர்ந்து ஆங்கிலத்தில் சரியாகப் படிக்கவும்


சன் டிவியிலிருந்து, சத்யம் வரை கவரேஜ்கள் ஆரம்பித்திருந்தது, வழக்கம் போல் கால்கள் வலிக்க, பத்து நாளும் இங்கிட்டுத்தானே சுத்தப்போகிறோம் என்று ..

பாதையில்லா பயணம் - பிரமிள் (வம்சி)
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி (வம்சி)
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி (வம்சி)
ரப்பர் - ஜெயமோகன் (கவிதா)
நவீன வேளாண்மை (விவசாய இதழ்)
இவர்கள் - நகுலன் (காவ்யா)
வாக்குமூலம் - நகுலன் (காவ்யா)
நாய்கள் - நகுலன் (காவ்யா)
கண்ணாடியாகும் கண்கள் - (காவ்யா)
சமவெளி - வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது :)
ஸ்ரீசக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)
தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை - வண்ணநிலவன் (நற்றிணை)
ஈராறுகால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன் (சொல் புதிது)

புத்தகங்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

குறிப்பு: கையில் ஐபோன்5 இல்லாததால், டைனோஜிக்காக, ஆண்ட்ராய்ட் போனிலேயே பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்திருக்கிறேன். 

நன்றி! :)))