பலா பட்டறை: 07/01/2011 - 08/01/2011

டேக் இட் ஈஸி!


.


டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் எப்போதுமே போவதில்லை. அவர் என்னையோ நான் அவரையோ பரஸ்பரம் தொந்தரவு செய்வதில்லை என்ற ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் கையெழுத்தாகமலே எங்களுக்குள்ளாக அமலில் இருக்கிறது. எல்லாவற்றையும் கேள்வி கேட்டுவிட்டு பதிலில்லாத தர்க்கச் சுழலில் மாட்டி புழுங்கித் தவிப்பதைவிட 'கடவுள் இருக்கான் கொமாரு' என்பவரையும், 'சப்பான்ல கடவுள் சுனாமி வந்தப்ப ஏன் சும்மிங்கப் போடல?' என்பவரையும் ஆமாமாம் நீங்க சொல்றது சரிதான். என்ற மகாவாக்கியத்தோடேயே கடந்து செல்வதால் வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை செய்ய முடிந்திருக்கிறது.

சொல்லால் மடக்கி சொறிவதற்கு ஏற்கனவே சொறிந்த இல்லாததையும், பொல்லாததையும் பற்றி நிறைய படித்திருக்கவேண்டும், ஒரு சமோசாவுக்கு ப்ரயோஜனமில்லாத அந்த வியாக்கியானப் படிப்புக்கெல்லாம் எனக்கெங்கே நேரமிருக்கிறது? செய்யும் வேலையையும் சென்றுவரும் வழியையுமே சரியாக இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

முதுகு வலி என்றோ, மூச்சுவிட சிரமமாக இருக்கிறதென்றோ மருத்துவரிடம் போனால், நீங்க உட்காரும் விதம் தப்பு சரியா நேரா உட்காரப் பழகனும், ஆஸனங்கள் எதுனாச்சும் செய்யுங்க, மூச்சு விடறதுல கோளாறு இருந்தாக்கூட பிரச்சனை வரும். ப்ராணாயாமான்னு ஒன்னு இருக்கு சரியா மூச்சு எப்படி விடனம்னு ஒரு ப்ராக்டிஸ்தான். வாக்கிங் போங்க, மென்னு சாப்பிடுங்க, கண்டிப்பா ரெண்டு வேளை பல் வெளக்கனும், இது இதெல்லாம் சாப்பிடக்கூடாது, இதெல்லாம் சாப்பிடனும்... எனக்கு அயர்ச்சியாக இருந்தது. 

லக உயிரினங்களிலேயே எல்லாம் தெரிந்த உயிரினத்துக்கு மூச்சு விடுவதற்கும், நேராக உட்கார்வதற்கும் பயிற்சி தேவையானதாக இருக்கிறது. இந்த ஆறாவது அறிவை ரிஜெக்ட் செய்த அல்லது ஆறாவது அறிவு ரிஜெக்ட் செய்த மற்ற உயிரினங்களெல்லாம் நிம்மதியாக இருக்கிறது. சாப்பாடு, கலவி, உறக்கம், சவம். கூடுகட்டி முட்டையிட்டு/குட்டிபோட்டு சொந்தமாய் சாப்பிடும் வரை பொறுப்பு, பின் துறப்பு. அவைகள் சீராக மூச்சு விடுகின்றன உப்புள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதில்லை. ஆய் போனால் கூட அலம்புவதில்லை. ஆடிமாசமோ அதிரடித் தள்ளுபடியோ முக்கியமாய் நிர்வாணம் பற்றி கவலையேதுமில்லை.  

பிள்ளைகள் ரெண்டும் பள்ளியிலிருந்து வரும் சமயம். என்ன கற்றுக்கொண்டு வருவார்கள் என்று தெரியாது. என்ன இன்னும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரியாது. கற்றுக்கொள்ளவேண்டியவை எல்லாமே ஒரு நிகழ்வின் முடிவில் துவங்குவதாகவே இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நடந்துமுடிந்ததிலிருந்தே கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. 

டுத்தவர் அனுபவத்திலிருந்து ஏதும் கற்றுக்கொள்ள இயலாது என்பது பல சந்தர்ப்பங்கள் எனக்கு உணர்த்திய சவால். அரையடி உயர பஞ்சு மெத்தையிலிருந்து கீழே விழுந்தவருக்கு கை எலும்பொடிந்து கதறியதும், மூன்றாவது மாடியிலிருந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கிழே விழுந்த பையன் அம்மா என்று வீறிட்டு ஒரு காயமுமில்லாமல், பின் பக்கம் தட்டி வீட்டில் நுழைந்ததும் கண்டு எலும்புடைவதின் அளவுகோலில் இருந்த நம்பிக்கைகள் சுத்தமாய் விட்டுப்போயிற்று. 

ள்ளியைவிட வெளிஉலகம் பிள்ளைகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுக்கொடுக்கப் போகிறதோ என்ற பயமே என்னுள் இருந்தது. வெறும் எண்களைக்கொண்டு அறிவைக் கணக்கிடும் மதிப்பெண்கள் மேல் என் தந்தைக்கில்லாத நம்பிக்கையையே எனக்கும் இருந்தது. 

அணில். இ இலை. ஊ ஊஞ்சல். இதெல்லாமே வீட்டிலேயே இருக்கிறது. இதைப் பாடமாகப் படிக்கத்தான் செலவு செய்து பள்ளிக்குச் செல்கிறார்கள். இஞ்சினியரிங் படித்து விட்டு மெயின்டனன்ஸில் இருந்த அந்த அதிகாரி என் தோற்றத்தை வைத்துக்கேட்டார் ”நீங்க எந்தக் காலேஜில் பிஈ முடிச்சீங்க?” நான் கரஸ்பாண்டென்சில் பிகாம் முக்கால்வாசி படித்து எக்ஸ்பீரியன்ஸை வைத்து கையில் கழி இல்லாமல் கயிற்றிலாடிக்கொண்டிருப்பதை எப்படிச் சொல்வது? ஆமாம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக வரும் எந்தக் காலேஜ் எந்த பேட்ச் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்குமே என்ற நினைப்பில் பேச்சை வேறு பக்கம் திருப்ப எத்தனித்தபோதே, ”வொய் திஸ் ஃப்யூல் ஃபில்டர் ஈஸ் ஸோ பிக்” என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கினேன். அடப்பாவி அது ஏர் பில்டர்டா என்று சொன்னால் அவன் ஈகோ தமாஷ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும் என்றெனக்குப் பட்டது. படம் காட்டியே படிப்பு நடத்தி இருப்பார்களோ அல்லது இவன் அந்த நேரத்தில் படம் பார்க்கச் சென்றானோ தெரியவில்லை? ”ஐ திங் திஸ் ஈஸ் டீசல் பில்டர் யூ சீ தி ஹோஸ் ஃப்ரம் தி ஃபியூல் டாங்க் ஈஸ் கமிங் ஹியர். ஐ திங்க் தட் ஈஸ் ஏர் ஃபில்டர். டிஃப்ரெண்ட் இன்ஜின்ஸ் டிஃப்ரெண்ட் டிஸைன்.” திங்க் பண்ணி அவனுக்கான பதிலை நான் கொடுத்ததில் அவன் காயப்படவில்லை. ”யா யா” என்றான். கருத்துச் சொறிதலை இங்கே காண்பித்து ஈகோவைக் கிளறி விவாதத்தில் வெற்றிபெற்றால் வீட்டில் உப்புமா கூடக் கிண்டமுடியாது என்பது பசியும், பணமும், பிஸினஸ் எதிக்ஸும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். கல்லூரி முடித்து வருபவர்களுக்கு வங்கி டெப்பாஸிட் சலான் கூட ஃபில் பண்னத் தெரிவதில்லை. கிங்ஸில் விக்ஸ் தடவி அடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்ற தேவ ரகசியங்கள் அவர்களை அதைவிட எளிதாக வந்தடைந்து விடுகிறது. 

நிறைய முடிகள் நரைத்து வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. டை அடிப்பதா? வேண்டாமா? அடுத்த கேள்வி உள்ளே தயாராகிவிட்டது. பையன் வளர்ந்து சம்பாதிக்கும் நாட்களை கணக்குப் போட்டால் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது பிழைப்புக்காக ஓடவேண்டும். அதன்பிறகும் அவன் சம்பாதித்து நான் காலாட்டிக்கொண்டு டிவி பார்க்க முடியுமா அல்லது ஏன் என் உயிர எடுக்கற? என்று உதாசீனப் படுத்துவானா?  தெரியாது. கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். எவ்ளோ செலவு செஞ்சி படிக்கவெச்சேன். என்ற டயலாக்கெல்லாம் எனக்கே பிடிக்காதபோது என் பிள்ளைகளுக்கு முன்னால் அதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நானா பெக்கச் சொன்னேன் என்ற பதில் வருமே என்ற கவலையாகவும் இருக்கலாம். 

றிவியல் முன்னேற்றங்களெல்லாம் வாயைப் பிளக்கவைக்கிறதோ இல்லையோ வயிற்றைக் கலக்குகிறது. மருத்துவம் முன்னேறி எண்பது தொண்ணூறு வயசெல்லாம் வாழ வைத்துவிடுமோ என்ற கவலை வேறு அவ்வப்பொழுது அப்பிக்கொள்கிறது. உடலைப்போன்றே ஆசைக்கும் வயசானால் தேவலை. ஆனால் அது மட்டும் பெஞ்சமின் பட்டனைப்போல வயதாக ஆக இளமையாகத் துள்ளித் தள்ளுகிறது. ”போயிடும் ராத்திரி தாங்காதுன்னு டாக்டர் சொல்லி 10 வருஷமாச்சி இன்னும் மாமா ஜம்னுதான் இருக்கார். இப்பல்லாம் டாக்டரக் கூப்பிட்டா வர்றதே இல்லை. சிக்ஸ் அவர்ஸ் பார்த்துட்டுச் சொல்லும்மான்னு சொல்லிட்டார்” என்ற டயலாக்கெல்லாம் அசரீரியாக ஒலிக்கிறது. ”தூங்கினார். எழுந்துக்கல” என்ற பதங்களில் மிகப் பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது, 

”ஒரிஜினல் ரோஸ்வுட்தானா?” கேட்ட அப்பாவைப் பார்த்தேன். நான்காம் பிறை நிலாவைப்போல அந்த ஈஸி சேரில் நான் கால் நீட்டி உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா நெடுமுடி வேணுவை அடிக்கும்போது உட்கார்ந்திருந்த சேர் என்று சொன்னால் உங்களுக்கு உடனே புரியும். ”ஆமாப்பா. பழசு விக்கிற கடைதான் அது. இப்பல்லாம் யாரும் இதுமாதிரி செய்யறதில்லை.” நடுவில் ஒயர் பின்னப்பட்டு இரு பக்கமும் கைப் பிடியும் அதே அளவுக்கு கால் வைக்க நீட்ட முடிந்ததுமான அந்த ஈஸி சேர் என்னுடைய நீண்டகால கனவுகளில் ஒன்று. சட்டென்று ஏதோ தோன்றியது ”நீங்க உட்காருங்கப்பா” என்றேன். என் அப்பா உட்காருவதற்குள் சட்டென்று என் ரெண்டாவது பிள்ளை ஓடிவந்து உட்கார்ந்துவிட்டான். எனக்கு கோவம் தலைக்கேறியது. 

“டேய் தாத்தாவுக்கு இடம் கொடுடா நீ சோபால உக்காரு”. 

”போப்பா மாட்டேன் இந்த சேர்லதான் உக்காருவேன்.” நான் அப்பாவைப் பார்த்தேன் 

”விடுடா உன்னைமாதிரிதான் உன் புள்ளையும்”

”என்னப்பா சொல்ற?”

”குழந்தைங்கன்னா அப்படித்தாண்டா நீயும் கொழந்தையா இருக்கும்போது இதே அடம்தான். அவன் உக்கார்ந்துக்கட்டும் விடு. ”

தொண்ணூறோ நுறோ சாய்ந்தால் கனா வரும் இந்த சேரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நம்பிக்கை துளிர்விட்டது.      


.