பலா பட்டறை: 2011

மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.


.


ஹைய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே? என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதாயின் வெட்டென மற’ என்பதெல்லாம் ஒருவேளை கொடுக்காப்புளிக்குவேண்டுமானால் சரியாக வரும். அந்நிய மொழிகள் செவி தட்டும் ரயில் பயணங்களில், இரண்டடி கேப்பில் எதிரில் அழகான பெண்கள் இருந்தால் எந்த ஜாடையில் குழந்தை பிறக்கும் என்பது வரைக்கும் மனசு ப்ராயாணிக்கிறது. 

’க்றீச்சென்று..’ ரயில் நின்ற ஸ்டேஷன் இந்த ரயிலுக்கானதல்ல என்பது மக்களின் பரபரப்பிலிருந்து தெரிந்தது. 

உமா கண்களாலேயே என்ன? என்று கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினேன். மெதுவாக காதில் மாட்டி இருந்த ஹெட்போனை எடுத்தாள். அழகான வளையம் ஒன்று அருந்தவம் புரிந்து அவள் காதில் கம்மலாகி இருந்தது. ஒற்றை ஆள்காட்டி விரலில் பின்னப்படாத தலைமுடியை காதோரம் தள்ளிவிட்டாள். எனக்கு சுட்டுப்போட்டாலும் வராதென்றாலும் ஏனோ இவளை ஒரு கவிதையில் வர்ணித்து எழுதவேண்டும் போலிருந்தது. 

சரியாக என் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி புளிச் என்று பான்பராக்கை ரயில் பெட்டிக்கும் ப்ளாட்பார்மிற்கும் இடையில் துப்பியவன் என் கையை சட்டென்று நான் எடுத்ததைப் பார்த்து ’க்யா ஹுவா?’ என்றான். முழங்கைக்கு அருகே இருந்த ப்ளாஸ்த்திரியைப் பார்த்து அவன் கேட்டான் என்று நினைத்துக்கொண்டே ஏதோ நினைவில் ‘ஒன்னுமில்லை, சின்ன உவாதான் என்றேன்’

’க்ளுக்’ என்று சிரித்தாள் உமா. ’பாகல்’ என்று தலையில் அடித்துக்கொண்டு பான்பராக் நகர்ந்ததும்தான் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்தது. அவள் சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. 

’சான்ஸே இல்லை’ என்றாள் உமா. என்னுடைய ஹிந்திதானே என்று நான் கன்ஃபர்ம் செய்துகொள்ளவில்லை. ஒரு பெண்ணை சிரிக்கவைப்பது சுலபமில்லை. அதுவும் யாரென்றே அறியாத ஒரு ரயில் ஸ்னேகத்தில், அதுவும் ஒரு அழகான பெண்ணை...

’இஃப் யூ டோண்ட் மைண்ட்’ என்று அவள் காலை எடுத்து என் பக்கத்தில் நீட்டிக்கொண்டாள். மிக அழகான பவழமல்லி போன்ற பாதங்களும் மெல்லிய சிகப்பு நிற நகப்பூச்சுகளுமாய். மெட்டி இல்லாத விரல்கள் தலைதீபாவளி யாருக்கு என்று கேட்டுவிடலாமா என்று தோன்றியது? ஹும்ம் கேட்டு? சொல்லுவதற்கில்லை இவள் புருஷன் கண்டிப்பாக வழுக்கைத் தலையனாகத்தானிருக்கவேண்டும். ச்சே இதென்ன இப்பொழுதெல்லாம் தாலியே ஒரு பெரிய விஷயமில்லை நான் ஏன் மெட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,

பச்சை மிளகாயை வதக்கியோ எண்ணெயில் பொறித்தோ உப்பு போட்டு சைடாக கொடுத்து சமோசா விற்றுக்கொண்டு வந்தவனை நிறுத்தி ஆளுக்கு இரண்டு சமோசா வாங்கிக்கொண்டோம். ஏதோ ப்ரச்சனை ரயில் இன்னும் அரை மணியோ ஒரு மணி நேரமோ தாமதமாகக் கிளம்பும் என்று சமோசா விற்பவர் மூலம் தெரியவந்தது. 

சின்னச் சின்னக் கடிகளாக சமோசாவை தின்ன ஆரம்பித்தாள். 

டது பக்கக் கீழுதட்டில் ஓட்டி இருந்த சிறிய துகளை தட்டிவிட சைகையாக என் உதட்டில் வைத்துக் காட்டினேன். புரியாமல் என்னைப் பார்த்தாள் என்ன என்றாள் தலையை ஆட்டி, நான் கை நீட்டி மெதுவாகப் பட்டும் படாமல் அந்தத் துகளைத் தட்டிவிட்டேன். ’ஏய் இவ்ளோதானா?’ என்று அதட்டிவிட்டு ’ஒரு சிகரெட் இருக்காடா, தம் அடிக்கலாம்’ என்று கேட்டாள் ஸ்வா..

அழகான பிங்க் நிற தாவணியில் மங்களகரமாக ஒரு பிகர் தம் அடிப்பதைப் பார்த்தால் எந்த ஆண்மகனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். ஸ்வாவுக்கும் தெரியும். ஆனால் இதையெல்லாம் சொல்லி இவளிடம் ஆர்க்யூ பண்ணமுடியாது.

’வேண்டாம் எனக்குத் தலை வலிக்குது நோ ஸ்மோக்கிங் ப்ளீஸ்’ என்றேன். 

’பயந்துட்டியா’ என்று சிரித்தாள். 

’இல்ல சீரியஸாவே மைக்ரேன் வர்ற மாதிரி இருக்கு ஸ்வா.’ 

’தென் ஓக்கே’ என்று மீண்டும் சமோசாவில் ஆழ்ந்துவிட்டவளைப் பார்த்தேன். எனக்கென்று வாய்த்த இவளைப் போல வேறு யாருக்காவது கேர்ள்ப்ரெண்ட் இருப்பார்களா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். காதலுக்கென்று ஒரு பார்முலா இருக்கிறது. பொய் அதில் ப்ரதானம். ஊடல் அதை முன்னெடுக்கும் ஒரு ஊர்தி. இவளுக்கு எல்லாமே தடாலடி. முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு வந்து மிஸ்டர் சந்திரமெளலி கணக்காக என் அப்பாவை ஃப்ரெண்ட் ஆக்கிக்கொண்டு சென்ற ராட்சசி. அசால்ட்டாக ப்ரென்ச்கிஸ் அறிமுகப் படுத்தி ’ஹாப்பி பர்த் டேடா’ என்று ஹார்ட் அட்டாக்கிற்கு சமீபம் என்னை கொண்டு சென்றவள். ’லட்சுமிகரமா இருக்காடா, லவ் பண்றியா? படிப்பு முடிஞ்சி வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கோ.’ என்று அம்மா நம்பும் அளவுக்கு அப்புராணியாக வந்தவள். இவள் தம் அடிப்பதை என் அப்பா பார்த்தால் ’ரொம்ப வேண்டாம்மா உடம்புக்குக் கெடுதல்’ என்று சொல்லக்கூடும் ஆனால் அம்மா? 

’ப்ரம்மம் ஒக்கட்டே’ என்று கொலுவிற்கு வந்து பாடிய ஸ்வா ஏறக்குறைய மருமகளாகவே ஆகிப்போனாள். எனக்குத்தான் உதறலெடுத்தது. பிரியும் வரை உதறல் நிற்கவில்லை. பிரிந்த கணம் முதல் பார்க்கும் பெண்ணிடமெல்லாம் அவள் நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

என்னுடைய கோழைத்தனத்தின் மை கொண்டு எழுதப்பட்ட கடந்த கால வரலாற்றில் ஸ்வா ஒரு தவிர்க்க முடியாத அத்யாயம். அந்தக் கோழைத்தனம் ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்க்கும்போது மீண்டும் வெளியே வரும் நான் கோழை இல்லை என்று நிரூபிக்க எத்தனிக்கும். வித்தைகள் காட்டும். வசீகரிக்க ப்ரயத்தனப்படும். இன்றைக்கு இதோ எதிரில் இந்தப் பெண் உமா.

லையை சிலுப்பிக்கொண்டேன்.

’என்ன ஆச்சு? காரமா இருக்கா? தண்ணிவேணுமா?’ 

வேண்டாம் என்று தலையை ஆட்டினேன்.

;சாரி, கேக்க மறந்துட்டேன். ஆமா, உங்க பேரென்ன?’என்று கேட்டாள் உமா. 


...........


..தொடரும்...


:))))

பாகம் ஒன்று  - விதூஷ்!

.

ஏழாம் அறிவு!

போதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர்ந்து  சீனாவின் ஒரு எல்லையோர கிராமத்தை அடைகிறார். அங்கே செல்லும்போது அவர் மட்டும்தான் சிகப்பு உடை அணிந்திருக்கிறார். மற்ற மக்கள் சாதாரண கலரிலேயே உடை அணிந்திருக்கிறார்கள் (குறியீடாக இருக்கலாம்) 

அந்த கிராம மக்களை எப்படி போதி தர்மர் கவர்கிறார். ஷாலின் டெம்பிள் எப்படி இவரை கடவுளாக வணங்குகிறது. காஞ்சீபுரம் இட்லி தெரிந்த தமிழர்களுக்கு போதிதர்மாவை ஏன் தெரியவில்லை? சரி, 1600 வருடங்களுக்கு முன்பாக அவர் இங்கிருந்து கொண்டு சென்ற குங்பு கலை சீனாவில் பேமஸ் ஆன அளவிற்கு ஏன் இங்கே ஆகாமல், இட்லியும், பட்டுப்புடவையும் அதை அமுக்கிவிட்டது? விடை தேடத்துவங்குகிறார்கள் தமிழ் உணர்வு, தமிழன், மஞ்சள், வேப்பிலை பேட்டண்ட் இத்யாதி இத்யாதி..

வெறுமனே போதிதர்மர் தமிழர், அதனால் மக்களே, நாமதான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கண்டுபிடித்தோம், வாங்க பழகலாம் என்று படம் எடுத்தால் மக்கள் பார்ப்பார்களோ? என்னமோ? என்று போதி தர்மாவின் டிஎன்ஏ, சூர்யாவின் 6பேக், பாம்பே சர்க்கஸ், ஸ்ருதிஹாசன், தமிழை குரங்கு என்று திட்டும் ப்ரொபசரை கெட்ட வார்த்தையில் திட்டும் ஸ்ருதி (செம அப்ளாஸ் பாஸ்) புக்கெட் தீவு சாங், குத்து சாங், குங்பூ பைட், கிராபிக்ஸ், பறக்கும் கார்கள் என்று உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குக் கொடுத்த நோட்டீஸ் போல இறங்கி வந்து அடி அடி என்று அடித்திருக்கிறார்கள். 

பொதுவாக ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ரஷ்யாவை சகட்டுமேனிக்கு கிரிமினலாக்கி ஹீரோ அவர்களை அழிப்பது போல படங்கள் பார்த்திருக்கிறோம். அது கொரியா மற்றும் வியட்நாமாகக்கூட பரிணாம வளர்ச்சிகள் அவ்வப்போது அடைந்திருக்கிறது. நமது தமிழ் படங்களில் கேப்டன் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி என்று காட்டப்படும் திடகாத்திரவில்லனை பக்கம் பக்கமாக வசனம் பேசி தலைக்குமேலே காலை எத்தி உதைத்து தாய் நாட்டைக் காப்பாற்றி இருக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வில்லன் சீனா. எனவே குங்பூ மற்றும் சிட்டி ரொபோவிற்கு கொஞ்சம் கம்மியாக வித்தைகள் தெரிந்த சீன வில்லன். நோக்கிக்கோ என்று நோக்கு வர்மத்திலேயே நோக்கி நோக்கி நொங்கெடுக்கிறார்.

அப்புறம் ஸ்ருதி ஹாசன். நல்ல வரவு. சொந்தக்குரலில் பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பா அளவிற்கு இல்லாமல் கொஞ்சம் பாலீஷ் போட்டுப் பேசி இருக்கிறார். ஒரு அழகான அழுகைக் காட்சியும் அவருக்கு இருக்கிறது. பாடல்கள் என்று நாம் நினைக்கும் போதே ஆலம்பனா நான் உங்கள் அடிமை என்றவாரே உடனே வஞ்சனை இல்லாமல் வருகிறது. சூர்யா கமல் சார் பெண் என்று பட்டும் படாமல் ஜோடி போட்டு டூயட் பாடி இருக்கிறார்.

இன்னும் பல விஷயங்களை நீங்கள் தியேட்டரில் சென்று காணலாம்.

அவ்ளொதான் பாஸ் இந்தப் படம் பற்றிய பகிர்தல். மிச்ச மீதியெல்லாம் மற்ற சினிமா விமர்சன ஜாம்பவான்கள் எழுதுவார்கள். என்னதான் எழுதப்போறாங்கன்னு நானும் படிக்க ஆவலோடு இருக்கிறேன். :)


முடிவாக : 

அப்புறம் ஸ்டிவன் ஸெகல் என்று ஒரு குடுமி வைத்த ஹாலிவுட் நடிகர் இருக்கிறார் வெறும் கைகள் கொண்டு அவர்போடும் சண்டை அவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக தேவையான இடங்களில் மட்டும் நிச்சயம் இடம்பெறும் அது எனக்குப் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல். அதற்காகவாவது அவர் போதி தர்மருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.


சூர்யா போதி தர்மர் வேடத்திற்கு கச்சிதமாக உழைத்திருக்கிறார். படமாக்கிய விதம் மிக அருமை. சிறிது தாமதமாகச் சென்றாலும் இந்தக் காட்சிகளை நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம்.

இந்தப் படத்திற்கான ஒரு பேட்டியில் படம் பார்த்துட்டு வர்றவங்களுக்கு படம் மனசில நிக்கனும் என்று சூர்யா சொல்லி இருந்தார். ஆமாம் எனக்கு போதி தர்மரைப்பற்றி அறிந்துகொள்ள ஷாலின் டெம்பிளும், 36சேம்பரும் தராத ஒரு ஆவலை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காகவாவது ஏழாம் அறிவுக்கு நன்றி!

.

மங்காத்தா.. (சவால் சிறுகதை) - 2
முதலில் அந்த இரண்டு துண்டு சீட்டு செய்திகளையும் பார்த்தபோது எனக்கு கோவம் வந்தது. விஷ்ணு என் கையில் மாட்டினால் அவனை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று நினைத்தபோதே போன் அடித்தது. அவன்தான். குரலில் எதுவும் வித்தியாசம் காண்பிக்காது அலோ என்றேன்..

கோகுல் சார் நான் விஷ்ணு

சொல்லுய்யா மாகாவிஷ்ணு என் கிட்டயே டபுள் கேமா?

என்ன சார் எனி ப்ராப்ளம்? தெளிவாத்தானே எழுதி அனுப்பி இருக்கேன். கையெழுத்துப் புரியாமப் போயிடக்கூடாதுன்னு ப்ரிண்டே எடுத்து அனுப்பி இருக்கேனே?

நல்லா காட்றியேப்பா பிலிமு. தவறானக் குறியீட்டக் குடுத்திருக்கேன்னு ஒரு சீட்டு இருக்கே அவ்ளோ கேனையனா நானு?

சார் நல்லாப் படிங்க அது எஸ்.பி கோகுல் நீங்க எம் ஆர் கோகுல் ஆனா உங்க உண்மையான பேரு இதுல சம்பந்தப்படக்கூடாதுன்னுதானே எல்லாருக்கும் கோகுல்னு பேரு வெச்சி மூவ் பண்றோம். ஏன் கன்ப்யூஸ் ஆகறீங்க?

ஓஹோ அப்படியா? சரி வில்லங்கம் வரக்கூடாதுன்னு நீங்க சொல்றதெல்லாம் ஓக்கே, எஸ்பி கோகுலுக்கு தவறான மெஸ்ஸேஜ் கொடுக்கற மாதிரி எனக்கும் நாளைக்கு தரமாட்டீங்கன்னு என்னய்யா நிச்சயம்?  அப்புறம் அத என்கிட்ட அனுப்பவேண்டிய அவசியம் என்ன?

ஹா ஹா சார் எஸ்பி கோகுல் ஒரு கறுப்பு ஆடு சரியான தகவல் கொடுத்தா எல்லாருமே மாட்டிப்போம். எந்த ஆதாரமும் சிக்கக்கூடாதுன்னு ஒரு சாதாரண கிரிமினல் அஃபென்ஸ்லயே அவர மூவ் பண்ணுவோம். இந்த ட்ரான்பரன்ஸி எல்லாருக்கும் தெரியனும் அதுதான் ப்ரொபஷனல் எதிக்ஸ். இல்லைன்னா நாளைக்கு பேப்பர்ல நியூஸ் படிச்சி நீங்க பயப்படக்கூடாதுல்ல.

ஷேர் ட்ரேடிங்லாம் பண்ணி சின்ன வயசிலயே கோடிகள அள்றீங்க இதெல்லாம் தெரியாதா என்ன? சைலண்டா அதெல்லாம் சரியாகும் நீங்க டீலிங்க மட்டும் பாருங்க ஓக்கே.

எனக்கு ஏசியிலும் லேசாக வியர்த்தது. சரி இது புலிவால், த்ரில் இல்லாமல் என்ன வாழ்க்கை. கோடிகளில் காசு. ஓக்கே விஷ்ணு டன். 3சி. 

டன். கோகுல் சார். வெயிட் ஃபார் தி ரிசல்ட்ஸ்.

சீட்டை மறுபடி எடுத்துப்பார்த்தேன்..

S W H2 6F

டிவியை ஆன் செய்தேன். சரியாக 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறவேண்டிய பாட்டிங் பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் முதல் பால் Sixer, இரண்டாம் பால் Wicket, மூன்றாம் பால் Hit Wicket, நான்காவது பால் 2Runs ஐந்தாவது பால் Sixer, ஆறாவது பால் Four.

ச்சே ரெண்டு ரன்ல போச்சி சார். தலையில் கைவைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டே வந்த அஸிஸ்டென்ண்டைப் பார்த்து வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டேன்.

சரி விடுங்க அடுத்த மேட்ச்ல ஜெயிச்சிடலாம்.

வரும் ஆறுகோடியில் விஷ்ணுவிற்கு 1 கோடி கொடுக்கவேண்டும். 


-@- 

கைப்புள்ள.. (சுமாரான சவால் சிறுகதை)


மெதுவாக ஆழ இழுத்துப் பற்றவைத்த சிகரெட்டின் புகை உள்ளே நுழைந்து ஒரு தள்ளாட்ட மெஸ்ஸேஜை மூளைக்கு அனுப்பியது. ஒரு மாதத்திற்கும் மேலாக சிகரெட் பிடிக்காமல் இருந்தது காரணமா?
.
ச்சே.., இதுவல்ல முக்கியம். மீண்டும் நேற்று இரவெல்லாம் படித்ததை நினைவுக்குக் கொண்டுவந்தேன். ம்ஹும்ம் ஒரு இழவும் கோர்வையாக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. பேசாமல் விவசாயமே பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அவனவன் அமெரிக்கா சம்பளத்தையெல்லாம் விட்டுவிட்டு ஆடும் மாடும் வளர்க்க ப்ரோஜெக்ட்டோடு அலைகிறார்களாம். அய்யோ பாழாய்ப்போன நான் படித்ததெல்லாம் தவிர மற்றதெல்லாம் மண்டைக்குள் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறது?
.
கடைசி இழுப்பை சூடாக உதடு வேக அடித்துவிட்டு, எக்ஸாம் ஹாலில் முதலாவதாக நுழைந்தேன். காலியாக இருந்த ஹாலின் ஜன்னலோரத்தில் வெவ்வேறு நிறங்களில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த காகிதப்பூக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது என் டெஸ்கின் அடியிலிருந்து மொபைல் போன் சத்தம் கேட்டது.
.
என்ன இது? யாருடையது இது? இங்கே எப்படி வந்தது? ஒரு எழவும் புரியாமல், போனை ஆன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்த வேளையில் ..
திடீரென்று 4 பேர் உள்ளே நுழைந்து தாங்க் காட்.. என்றவாறே
”பாஸ் இது எங்க போன் தான். காலைல ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது மறந்து விட்டுட்டுப் போயிட்டோம்.” என்று சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.
.
படம் பேர் என்ன நண்பா?
.
”கைப்புள்ள..”
.
ஹும்ம் பேசாமல் விஸ்காமே எடுத்திருக்கலாமோ? என்று மீண்டும் மனசு விவசாயத்திலிருந்து சினிமாவிற்குத் தாவியது. சம்பாத்தியம் தாண்டி ஏதோ ஒரு அடையாளம் வேண்டியே நான் எனக்குள் அலைகழிகிறேன் என்று என் மேலேயே வெறுப்புவந்தது. மீண்டும் காகிதப் பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். வெறும் நிறத்தை மட்டும் கொண்டு வாசமுமில்லாமல் இருக்கும் இந்தச் செடி ஏன் முட்களைக் கொண்டு தன்னைக் காத்துக்கொள்கிறது என்று கேள்வி எழுந்தது.
.
ஒவ்வொருவராக எக்ஸாம் ஹால் நிரம்பத்துவங்கிய நேரம்..
.
எக்ஸ்கியூஸ்மி இன்னைக்கு என்ன எக்ஸாம்? என்று அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து என் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்த பெண்ணைக் கேட்டேன்.

ஒரு ஏலியனைப் பார்ப்பது போல என்னை அவள் பார்த்தாள். இந்த மாதிரி படிக்கிற பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி செட்டிலாயிடலாமா? என் மனது அடுத்த கிளை தாவத் துவங்கியது!
-@-

மலையாளக் கரையோரம்..


கபேயில் பிரம்மாண்ட பதிவர் சந்திப்பு முடிந்து நான், மணிஜி, அகநாழிகை வாசு, செல்வம் காரில் பொள்ளாச்சி நோக்கிக் கிளம்பினோம். வழியெல்லாம் வாசு மற்றும் மணிஜியின் போன் ஒலித்துக்கொண்டே இருந்தது எப்ப வருவீங்க எப்ப வருவீங்க கேட்டுக்கொண்டிருந்த அந்த மகானுபாவன் நம்ம கும்க்கியார். 

ழ கபேயில் 


ரவு சுமார் 1.30 அளவில் பிக் அப் செய்து பொள்ளாச்சி சேரும்போது காலை 8.30. ரூம் எடுத்து காலை உணவை ஒரு பிரபல பஸ்ஸர் வீட்டில் (மிக அழகான வீடு:) உண்டுவிட்டு (மெனு-சந்தகை + அரிசி பருப்புச் சோறு + சப்பாத்தி + மோர் + பறித்து சில நாட்களே ஆன பேரீச்சம் பழங்கள்) வால்பாறை செல்வதற்கான 
ப்ளானில் இறங்கினோம். பல வருடங்களுக்கு முன்பு சென்ற/கண்ட பொள்ளாச்சி வேறு. இப்பொழுது ஊரே பளபளப்பு கூடி மிக அழகாக இருந்தது. 

நாலடியார்கள்


மங்கி ஃபால்ஸ்

மிக அழகழகான வீடுகள். நாங்கள் சென்றபோது க்ளைமெட்டும் மிக அருமையாக இருந்தது. நன்றி கூறி விடைபெற்று வால்பாறை செல்லும் வழியில் குரங்குஅருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டு கும்க்கியார் வளைத்து, வளைத்து வண்டி ஓட்ட ஒரு கட்டத்தில் சாலையே தெரியாத அளவிற்கு பனியும் மேகமூட்டமும் அப்பிக்கொண்டிருந்தது.
வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவு


கொண்டை ஊசி வளைவுகளில் குன்ஸாக ஓட்டிக்கொண்டே வால்பாறை வந்தபோது மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. மூன்றாம் மாடியில் அறை எடுத்து குளிரை கம்பளியில் தடுத்து தூங்கி எழுந்தால் லேசான சாரலுடன் வாங்க பழகலாம் என்று வால்பாறை அழைத்தது. 

வால்பாறையில் ஒரு டீ எஸ்டேட்


வால்பாறை டு அதிரம்பள்ளி வழியில்

திரம்பள்ளி நீர்விழ்ச்சிக்கு வால்பாறை வழியாக செல்லும் இடமெல்லாம் தமிழக எல்லை வரை தேயிலைத் தோட்டம். அடுக்கடுக்காக பச்சை நிறம் மட்டும் கொண்டு வரைந்த ஒரு மாடர்ன் ஓவியம் போல ஒவ்வொரு மலைச் சரிவிற்கும், ஒவ்வொருவிதமான வடிவம் கொண்டு பார்க்கும்போதே மனது 
லேசாகியது. வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியாத ஒரு குதூகலம் எல்லோர் மனதிலும். சரியாக தமிழ்நாடு எல்லை முடிந்து கேரள செக்போஸ்ட் ஆரம்பிக்கும்போது, வண்டியையும் வண்டி ஓட்டுபவரையும் முழு சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 

”ட்ரிங்ஸ் அடிச்சிட்டுண்டோ”
          ”இல்ல சார்”
         ”ஹாங் அடிச்சா தா அங்க நோக்கு தவுசண்ட் ருப்பீஸ் ஃபைனானு”
(செக்போஸ்ட் அருகிலேயே கன கச்சிதமாக போலீஸ் ஸ்டேஷன்.
தெய்வத்திண்ட சொந்தம் நாட்டில் வேறு தீர்த்தங்களுக்கு அனுமதி இல்லையாம். )
தெய்வத்திண்ட நாட்டில், ஒரு காட்டில் கஜாக்கா தோஸ்த்ஸ்


பிக்சர் இன் பிக்சர்

பார்டர் தாண்டியதும் அது வேறு உலகமாகிவிட்டது. தேயிலைத் தோட்டம் என்பது காட்டை அழித்து மனிதன் உருவாக்கிய பணப்பயிர். இங்கே காட்டைக் காடாகவே வைத்திருக்கிறார்கள். யாரோ ஒருவரின் ஒரு கோப்பைத் தேனீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது ஓங்கி உளகளக்கும் மரங்களிலும், பூச்சிகள், பறவைகளின் ஒலிகளிலும், சாலையில் சிதைந்து கிடந்த யானைகளின் சாணங்களிலும் தெரிந்தது. ஊருக்குள் வந்து துவம்சம் செய்யும் அவற்றின் மேல் கோபம் கொள்ளுதல் ஆறாம் அறிவின் உச்சகட்ட வக்கிரம் என்பது புரிந்தது. 

எப்படி இந்த மரத்த விட்டு வெச்சிருக்கானுவ?

ழி நெடுக அடர்ந்த காடு, கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்களுக்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. 

செல்லும் வழி நெடுக பரவலாக மழை. கும்க்கி எங்கேனும் யானை தெரிகிறதா என்று இரண்டு பக்கமும் பார்த்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். . 

”யானைங்க கூட்டமா வந்தா என்னங்க பண்றது?”
”வாலப் பிடிச்சி கடிச்சா அதுங்க பயந்து ஓடிப் போயிடுமாம்”

சிகரெட் சித்தர் - அட்டேன்ஷன்!


சீட்டுக்குலுக்கிப் போட்டதில் செல்வம் பெயர் வந்தது. அவரும் தயாராகவே இருந்தார்.     

னால் யானைகள்.? ம்ஹும்ம்! கனத்த மனதுடன் அதன் சாணங்களை மிதித்து ஆதி மனித எச்சத்திற்குத் தீனி போட்டுவிட்டுக் கிளம்பினோம். 

சாலக்குடிக்கு 30 கிலோ மீட்டருக்கும் முன்னால் வருவது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அதற்கும் முன்னால் நாங்கள் வந்த அந்த அடர் காட்டுவழிப்பாதை முடியும் இடம் வாழச்சல். வளைந்து நெளிந்து செல்லும் அகலமான ஆறு, கரையோரம் ஒரு சேட்டனுடைய ஹோட்டல், கேபிள்ஜி சைசில் அரிசிச்சோறு, அதே ஆற்றில் தூண்டிலில் உனவுக்காகச் சிக்கி உணவான மீன் வறுவல். ஹோவென்ற மழை. மதிய உணவை மாலையில் முடித்து அழகான அந்த ஆற்றங்கரையில் காலார நடந்து, காரெடுத்து நாங்கள் சென்ற இடம் அதிரப்பள்ளி.

நிறைய வீடுகளை ரிசார்ட்டுகளாக மாற்றி வைத்துள்ளார்கள். நாங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரவு நெடுநேரம் இலக்கியப் பணி ஆற்றிவிட்டு. காலையில் அருவிக்குச் சென்றோம். 

தரனனா.... திரனனா.... திரனா!

வாழ்வில் மறக்கமுடியாத சில மணித்துளிகளில் இந்த அருவியைக் கண்டவாறே உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். ஆறு அமைதியாக வந்து அந்தப் பள்ளத்தாக்கில் ஆக்ரோஷமாக விழுந்து வெண்பஞ்சு துகள்களாக நீர்த்திவலைகளை மேல் நோக்கித் தள்ளும் அமைதிக்கும் ரெளத்திரத்திற்குமான அந்த விளிம்பில், எதுவுமே யோசிக்க முடியாத ஒரு ஏகாந்தம் மனதில் ஏறும். குளிக்கவோ கூப்பாடுபோடவோ மனம் நாடவில்லை. அங்கே வந்த பெரும்பாலானவர்கள் அருவியின் பிரம்மாண்டத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக நிற்பதைப் பார்த்தேன். 

நீயெல்லாம் மசிறுக்குக்கூடச் சமானமில்லை என்று இயற்கை அழுத்தம் திருத்தமாக மனிதனைப் பார்த்துச் சொல்லுவதைப்போல எனக்குத் தோன்றியது. இதுவரை இந்த அருவியைக் காணாதவர்கள் ஒருமுறையாவது இங்கே சென்றுவரவேண்டும் என்பது என் வேண்டுகோள். வால்பாறை வழியே சென்றுவருவது இன்னும் அற்புதமாக இருக்கும்.

நன்றி! :-)

சில விவரங்கள்::

டேக் இட் ஈஸி!


.


டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் எப்போதுமே போவதில்லை. அவர் என்னையோ நான் அவரையோ பரஸ்பரம் தொந்தரவு செய்வதில்லை என்ற ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் கையெழுத்தாகமலே எங்களுக்குள்ளாக அமலில் இருக்கிறது. எல்லாவற்றையும் கேள்வி கேட்டுவிட்டு பதிலில்லாத தர்க்கச் சுழலில் மாட்டி புழுங்கித் தவிப்பதைவிட 'கடவுள் இருக்கான் கொமாரு' என்பவரையும், 'சப்பான்ல கடவுள் சுனாமி வந்தப்ப ஏன் சும்மிங்கப் போடல?' என்பவரையும் ஆமாமாம் நீங்க சொல்றது சரிதான். என்ற மகாவாக்கியத்தோடேயே கடந்து செல்வதால் வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை செய்ய முடிந்திருக்கிறது.

சொல்லால் மடக்கி சொறிவதற்கு ஏற்கனவே சொறிந்த இல்லாததையும், பொல்லாததையும் பற்றி நிறைய படித்திருக்கவேண்டும், ஒரு சமோசாவுக்கு ப்ரயோஜனமில்லாத அந்த வியாக்கியானப் படிப்புக்கெல்லாம் எனக்கெங்கே நேரமிருக்கிறது? செய்யும் வேலையையும் சென்றுவரும் வழியையுமே சரியாக இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

முதுகு வலி என்றோ, மூச்சுவிட சிரமமாக இருக்கிறதென்றோ மருத்துவரிடம் போனால், நீங்க உட்காரும் விதம் தப்பு சரியா நேரா உட்காரப் பழகனும், ஆஸனங்கள் எதுனாச்சும் செய்யுங்க, மூச்சு விடறதுல கோளாறு இருந்தாக்கூட பிரச்சனை வரும். ப்ராணாயாமான்னு ஒன்னு இருக்கு சரியா மூச்சு எப்படி விடனம்னு ஒரு ப்ராக்டிஸ்தான். வாக்கிங் போங்க, மென்னு சாப்பிடுங்க, கண்டிப்பா ரெண்டு வேளை பல் வெளக்கனும், இது இதெல்லாம் சாப்பிடக்கூடாது, இதெல்லாம் சாப்பிடனும்... எனக்கு அயர்ச்சியாக இருந்தது. 

லக உயிரினங்களிலேயே எல்லாம் தெரிந்த உயிரினத்துக்கு மூச்சு விடுவதற்கும், நேராக உட்கார்வதற்கும் பயிற்சி தேவையானதாக இருக்கிறது. இந்த ஆறாவது அறிவை ரிஜெக்ட் செய்த அல்லது ஆறாவது அறிவு ரிஜெக்ட் செய்த மற்ற உயிரினங்களெல்லாம் நிம்மதியாக இருக்கிறது. சாப்பாடு, கலவி, உறக்கம், சவம். கூடுகட்டி முட்டையிட்டு/குட்டிபோட்டு சொந்தமாய் சாப்பிடும் வரை பொறுப்பு, பின் துறப்பு. அவைகள் சீராக மூச்சு விடுகின்றன உப்புள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதில்லை. ஆய் போனால் கூட அலம்புவதில்லை. ஆடிமாசமோ அதிரடித் தள்ளுபடியோ முக்கியமாய் நிர்வாணம் பற்றி கவலையேதுமில்லை.  

பிள்ளைகள் ரெண்டும் பள்ளியிலிருந்து வரும் சமயம். என்ன கற்றுக்கொண்டு வருவார்கள் என்று தெரியாது. என்ன இன்னும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரியாது. கற்றுக்கொள்ளவேண்டியவை எல்லாமே ஒரு நிகழ்வின் முடிவில் துவங்குவதாகவே இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நடந்துமுடிந்ததிலிருந்தே கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. 

டுத்தவர் அனுபவத்திலிருந்து ஏதும் கற்றுக்கொள்ள இயலாது என்பது பல சந்தர்ப்பங்கள் எனக்கு உணர்த்திய சவால். அரையடி உயர பஞ்சு மெத்தையிலிருந்து கீழே விழுந்தவருக்கு கை எலும்பொடிந்து கதறியதும், மூன்றாவது மாடியிலிருந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கிழே விழுந்த பையன் அம்மா என்று வீறிட்டு ஒரு காயமுமில்லாமல், பின் பக்கம் தட்டி வீட்டில் நுழைந்ததும் கண்டு எலும்புடைவதின் அளவுகோலில் இருந்த நம்பிக்கைகள் சுத்தமாய் விட்டுப்போயிற்று. 

ள்ளியைவிட வெளிஉலகம் பிள்ளைகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுக்கொடுக்கப் போகிறதோ என்ற பயமே என்னுள் இருந்தது. வெறும் எண்களைக்கொண்டு அறிவைக் கணக்கிடும் மதிப்பெண்கள் மேல் என் தந்தைக்கில்லாத நம்பிக்கையையே எனக்கும் இருந்தது. 

அணில். இ இலை. ஊ ஊஞ்சல். இதெல்லாமே வீட்டிலேயே இருக்கிறது. இதைப் பாடமாகப் படிக்கத்தான் செலவு செய்து பள்ளிக்குச் செல்கிறார்கள். இஞ்சினியரிங் படித்து விட்டு மெயின்டனன்ஸில் இருந்த அந்த அதிகாரி என் தோற்றத்தை வைத்துக்கேட்டார் ”நீங்க எந்தக் காலேஜில் பிஈ முடிச்சீங்க?” நான் கரஸ்பாண்டென்சில் பிகாம் முக்கால்வாசி படித்து எக்ஸ்பீரியன்ஸை வைத்து கையில் கழி இல்லாமல் கயிற்றிலாடிக்கொண்டிருப்பதை எப்படிச் சொல்வது? ஆமாம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக வரும் எந்தக் காலேஜ் எந்த பேட்ச் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்குமே என்ற நினைப்பில் பேச்சை வேறு பக்கம் திருப்ப எத்தனித்தபோதே, ”வொய் திஸ் ஃப்யூல் ஃபில்டர் ஈஸ் ஸோ பிக்” என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கினேன். அடப்பாவி அது ஏர் பில்டர்டா என்று சொன்னால் அவன் ஈகோ தமாஷ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும் என்றெனக்குப் பட்டது. படம் காட்டியே படிப்பு நடத்தி இருப்பார்களோ அல்லது இவன் அந்த நேரத்தில் படம் பார்க்கச் சென்றானோ தெரியவில்லை? ”ஐ திங் திஸ் ஈஸ் டீசல் பில்டர் யூ சீ தி ஹோஸ் ஃப்ரம் தி ஃபியூல் டாங்க் ஈஸ் கமிங் ஹியர். ஐ திங்க் தட் ஈஸ் ஏர் ஃபில்டர். டிஃப்ரெண்ட் இன்ஜின்ஸ் டிஃப்ரெண்ட் டிஸைன்.” திங்க் பண்ணி அவனுக்கான பதிலை நான் கொடுத்ததில் அவன் காயப்படவில்லை. ”யா யா” என்றான். கருத்துச் சொறிதலை இங்கே காண்பித்து ஈகோவைக் கிளறி விவாதத்தில் வெற்றிபெற்றால் வீட்டில் உப்புமா கூடக் கிண்டமுடியாது என்பது பசியும், பணமும், பிஸினஸ் எதிக்ஸும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். கல்லூரி முடித்து வருபவர்களுக்கு வங்கி டெப்பாஸிட் சலான் கூட ஃபில் பண்னத் தெரிவதில்லை. கிங்ஸில் விக்ஸ் தடவி அடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்ற தேவ ரகசியங்கள் அவர்களை அதைவிட எளிதாக வந்தடைந்து விடுகிறது. 

நிறைய முடிகள் நரைத்து வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. டை அடிப்பதா? வேண்டாமா? அடுத்த கேள்வி உள்ளே தயாராகிவிட்டது. பையன் வளர்ந்து சம்பாதிக்கும் நாட்களை கணக்குப் போட்டால் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது பிழைப்புக்காக ஓடவேண்டும். அதன்பிறகும் அவன் சம்பாதித்து நான் காலாட்டிக்கொண்டு டிவி பார்க்க முடியுமா அல்லது ஏன் என் உயிர எடுக்கற? என்று உதாசீனப் படுத்துவானா?  தெரியாது. கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். எவ்ளோ செலவு செஞ்சி படிக்கவெச்சேன். என்ற டயலாக்கெல்லாம் எனக்கே பிடிக்காதபோது என் பிள்ளைகளுக்கு முன்னால் அதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நானா பெக்கச் சொன்னேன் என்ற பதில் வருமே என்ற கவலையாகவும் இருக்கலாம். 

றிவியல் முன்னேற்றங்களெல்லாம் வாயைப் பிளக்கவைக்கிறதோ இல்லையோ வயிற்றைக் கலக்குகிறது. மருத்துவம் முன்னேறி எண்பது தொண்ணூறு வயசெல்லாம் வாழ வைத்துவிடுமோ என்ற கவலை வேறு அவ்வப்பொழுது அப்பிக்கொள்கிறது. உடலைப்போன்றே ஆசைக்கும் வயசானால் தேவலை. ஆனால் அது மட்டும் பெஞ்சமின் பட்டனைப்போல வயதாக ஆக இளமையாகத் துள்ளித் தள்ளுகிறது. ”போயிடும் ராத்திரி தாங்காதுன்னு டாக்டர் சொல்லி 10 வருஷமாச்சி இன்னும் மாமா ஜம்னுதான் இருக்கார். இப்பல்லாம் டாக்டரக் கூப்பிட்டா வர்றதே இல்லை. சிக்ஸ் அவர்ஸ் பார்த்துட்டுச் சொல்லும்மான்னு சொல்லிட்டார்” என்ற டயலாக்கெல்லாம் அசரீரியாக ஒலிக்கிறது. ”தூங்கினார். எழுந்துக்கல” என்ற பதங்களில் மிகப் பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது, 

”ஒரிஜினல் ரோஸ்வுட்தானா?” கேட்ட அப்பாவைப் பார்த்தேன். நான்காம் பிறை நிலாவைப்போல அந்த ஈஸி சேரில் நான் கால் நீட்டி உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா நெடுமுடி வேணுவை அடிக்கும்போது உட்கார்ந்திருந்த சேர் என்று சொன்னால் உங்களுக்கு உடனே புரியும். ”ஆமாப்பா. பழசு விக்கிற கடைதான் அது. இப்பல்லாம் யாரும் இதுமாதிரி செய்யறதில்லை.” நடுவில் ஒயர் பின்னப்பட்டு இரு பக்கமும் கைப் பிடியும் அதே அளவுக்கு கால் வைக்க நீட்ட முடிந்ததுமான அந்த ஈஸி சேர் என்னுடைய நீண்டகால கனவுகளில் ஒன்று. சட்டென்று ஏதோ தோன்றியது ”நீங்க உட்காருங்கப்பா” என்றேன். என் அப்பா உட்காருவதற்குள் சட்டென்று என் ரெண்டாவது பிள்ளை ஓடிவந்து உட்கார்ந்துவிட்டான். எனக்கு கோவம் தலைக்கேறியது. 

“டேய் தாத்தாவுக்கு இடம் கொடுடா நீ சோபால உக்காரு”. 

”போப்பா மாட்டேன் இந்த சேர்லதான் உக்காருவேன்.” நான் அப்பாவைப் பார்த்தேன் 

”விடுடா உன்னைமாதிரிதான் உன் புள்ளையும்”

”என்னப்பா சொல்ற?”

”குழந்தைங்கன்னா அப்படித்தாண்டா நீயும் கொழந்தையா இருக்கும்போது இதே அடம்தான். அவன் உக்கார்ந்துக்கட்டும் விடு. ”

தொண்ணூறோ நுறோ சாய்ந்தால் கனா வரும் இந்த சேரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நம்பிக்கை துளிர்விட்டது.      


.

ஒரு பரதேசியின் பயணம் - 3 - வெள்ளியங்கிரி


.


ஒரு பரதேசியின் பயணம் - 3 - வெள்ளியங்கிரி!!

1990களில் சில வருடங்கள் கோவையில் வாசம் செய்திருக்கிறேன். வெள்ளியங்கிரி போன்ற ஒரு இடம் இருப்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஜெய் வெள்ளியங்கிரி என்று கவுண்டர் ஏதோ ஒரு படத்தில் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு வரும் போதுதான் அந்த பெயரையே கேள்விப் பட்டிருக்கிறேன். அத்தோடு சரி. ஸ்வாமி ஓம்கார் தென் கயிலாயப் பயணம் என்று இடுகை போட்டதும் சென்று வரலாம் என்று எண்ணம் தோன்றியது. ஏற்கனவே பர்வத மலை ஏறிய கர்வம். எவ்வளவோ ஏறிட்டோம் இது ஏற மாட்டோமா? 

பிரபல பதிவர் நண்பர்களிடம் யார் வருகிறார்கள் என்று பேசியபோது இரு முக்கிய தலைகள் வருவதாக சொன்னார்கள் அதில் ஒரு நண்பர் டிக்கெட்டை தட்காலில் புக் செய்துவிட்டு பயணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக சில காரணங்களால் தன்னால் வர இயலவில்லை என்று சொல்லி டிக்கெட்டை எங்களிடம் சேர்பித்தார் அவர் ஏன் வர இயலாமல் போனது? என்பது எனக்கு பயணத்தின் முடிவில் தெரிந்தது. :))

கோவை சென்று இறங்கிய உடனே லேசான சாரலுடன் காலை இதமாக வரவேற்றது. ஸ்வாமிஜியின் புண்ணியத்தில் குளியலும், காபியும், காலை உணவும் முடித்து, ப்ரணவ பீடம் சென்று வெள்ளியங்கிரியைப் பற்றிய சிறிய அறிமுகம் முடிந்து, ப்ரணவ பீடம் சார்பில் ஒரு பை அளிக்கப் பட்டது. அதில் உலர் பழங்கள், நெல்லிக்கனி, ஆரஞ்சு மிட்டாய்கள், சப்பாத்திகள், புளிப்பு சுவையுடைய சில திண்பண்டங்கள், பொரி கடலை, என்று மலை ஏறும்போது பசியாற உதவும் உணவுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மற்றவர்களுடன் பயணம் ஆரம்பித்தோம்.  

கோவையி்லிருந்து ஈஷா செல்லும் வழியில் சட்டென்று ஒரு இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரம். வெள்ளியங்கிரி கோவில் நீண்ட விசாலமான பிரகாரம், வித்தியாசமான வடிவில் நவக்கிரக சன்னதி, வழக்கமான மலைப்பாதை ஆரம்பத்தில் காணப்படும் ஒரு வளைவு, செங்குத்தாக ஆரம்பிக்கும் சீரான படிக்கட்டுகள் சட்டெனத் தெரியும் பச்சைப் பசுமை மலை உச்சி ப்ஃபூ இந்த மலைக்கா இம்புட்டு பில்டப்பு? போலாம் ரைட்..

ஆரம்பம்

முதல் படி

ஆயிரத்துச் சொச்சம் படிகள் கொண்ட முதல் மலை ஏற ஏற முதலில் வரும் ஒரு இளைப்பாறும் இடம் சிவதீர்த்தம் என்று எழுதப்பட்ட ஒரு சிறிய பாலம் இயற்கையான சுவைமிகுந்த நீர் ஊற்று.  சிறிது சிரமப் பரிகாரம் செய்து மீண்டும் ஏற ஆரம்பிக்கலாமென்றால் மழை கிளம்பு காத்துவரட்டும் என்று அடிக்க ஆரம்பித்தது. பில்டிங்கும் பேஸ்மெண்ட்டும் வீக்காகி வெடிக்கும் நிலையில் முதல் மலை உச்சியில் வருகிறது ஒரு பிள்ளையார் கோவில். எதிரே ஒரு தென்னம் ஓலை வேயப்பட்ட கடை (காற்றோ, களிறோ) சிதறி சின்னாபின்னமாகி இருந்தது. 

ஏற்றி விடப்பா!


குளிர் மழை மேலும் குளிர் மேலும் மழை, சீரான படிக்கட்டுகள் மறைந்து, சதுரமாக வெட்டப்பட்ட பாறைக்கற்களால் அமைக்கப் பட்ட படிகள் போன்ற அமைப்பு ஏன் ஸ்வாமிஜி செப்பல் இல்ல ஷூ போட்டு ஏறக்கூடாது? இது சிவபெருமானின் இருப்பிடம் என்று பதில் சொன்னால் இமயத்திலிருக்கும் கயிலயத்தில் ஷூ போட்டுக்கொண்டே ஏறி தரிசனம் செய்கிறார்களே? என்ற கேள்வி அடுத்ததாக வரும் என்று ஞானதிருஷ்டியில் அவர் அறிந்திருக்கக்கூடும். இம்மாதிரியான மூலிகைகள் நிறைந்த இயற்கை மலைப்பாதையில் பாதங்கள் நேரடியாகப் பட நடப்பதும், உடலில் அந்தப் பகுதியின் காற்று நேரடியாகப் படுவதும் மிக நல்லது என்று சொன்னார். செருப்பில்லாமல் நடக்கமுடியாது என்ற மேட்டுக்குடி மன நிலையை உதறி ஷார்ட்ஸ் பனியனுடன் எளிமையாக(?) ஏற ஆரம்பித்தேன். ஒரு கம்பு எடுத்துக்குங்க என்ற சொல்லைத் தட்டாது அங்கே இருந்த ஒரு மூங்கில் கம்பெடுத்து ஊன்றி ஏற ஆரம்பித்தேன்.

படிப்பாறையில் எறும்புச் சித்தர்!


 மூன்றாவது மலைப் பாதை ஒழுங்கற்று வேர்கள், கற்கள், வழுக்கும் சேறு நிறைந்த பாதையாக மாற ஆரம்பித்தது. ஓரிடத்தில் பாறைகளிலேயே படிகள் செதுக்கி ஒரு வெட்டவெளியும் வந்தது. இப்பொழுது குளிரும் காற்றும் மழையும் கூட்டணிசேர பள்ளத்தாக்கில் கோவை வெயில் வெளிச்சத்தில் பளிச்சினு ஒரு மாற்றமாய் வெப்பத்திற்கு ஏங்க வைத்தது. 

காடு!
ம்முடியல!


மூன்றாவது உச்சியிலும் ஒரு சிதிலமடைந்த குடிசை உட்கார முடியாத அளவுக்கு மழை, ஈரம் அருகில் ஒரு பெரிய பாறை வழக்கம் போல ஒரு நீர் ஊற்று. இம்முறை ஸ்வாமி ஓம்கார் ஒருவர் மட்டுமே உள் நுழையும் அளவுக்குள்ள ஒரு குகையைக் காண்பித்து நான் முதலில் சென்று குரல் கொடுத்ததும் ஒவ்வொருவராக வாருங்கள் என்றார். ஒரு பெரிய பாறை அடியில் இரு வழியாக உள் நுழைய முடியும் அந்த குகையின் அடிவாரம் என்பது சுமார் இருபது அடி ஆழத்தில் இருந்தது. கால்களை முதலில் உள்ளே நுழைத்து மெதுவாக இறங்கினால் உள்ளே வளைந்து சென்று முடியும் இடத்தில் ஒரு சுயம்புலிங்கம் எதிரே நந்தி. லிங்கத்தின் வலதுபுறத்தில் அம்மன், லிங்கத்தின் தலையில் இயற்கையாகவே பாறைக் கசிவிலிருந்து வழிந்துகொண்டே இருக்கும் நீர். லிங்கத்தில் இடதும் வலதும் இரண்டு பாதைகள் ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவிற்கு உள்ளே சென்றுகொண்டே இருக்கிறது எங்கே செல்லும் இந்தப் பாதைகள் யாம் அறியோம் பராபரமே! சக்தி இல்லையேச் சிவமில்லை!


இந்த வர்ணணைகள் நீங்கள் எங்கோ கண்டது போல ஒரு தோற்றமளித்தால் ஆம், சூப்பர் ஸ்டார் பாபாஜி குகையில் சென்றதை விஜய் டிவியில் பார்த்திருப்பீர்களே கிட்டத்தட்ட அதனைப்போன்றே ஒரு இடம். வெளியில் இருக்கும் குளிர் உள்ளே இல்லை. டார்ச் லைட் இல்லையென்றால் வெளிச்சமில்லை உள்ளிருக்கும் அந்தப் பாதைகளிலிருந்து எதுவேண்டுமானாலும் வரலாம். திடீரென்று மழை நீர் உள்ளே புகலாம் ஆனாலும் அதி அற்புதமாக அதிகம் பேரால் அறியப்படாத இடமாக மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவது போன்று கால்வழியே உள் சென்று தலை வழியே வெளிவரும் அந்தக் குகை ஒரு மறுபிறப்பினை ஒத்த தரிசனம் என்றார் ஸ்வாமி. எல்லா வகையிலும் அது உண்மைதான். 

வெறும் காற்றடைத்த பையடா!

முழுவதுமான வழுக்குப் பாதை இனி ப்ரயாணம் எவ்வாறு இருக்கும் என்பதை கட்டியம் கூறுவது போல் நான்காவது மலையில் நாலு கால்களில் நடக்க ஆரம்பித்திருந்தோம். குளிரும் மழையும் அதிகம் இருந்ததால் உடலில் நீர் இழப்பு இல்லை. மாறாக விரல்கள் பாதங்கள் மரக்க ஆரம்பித்தது. திடீரென்று பாதங்களின் விரல்கள் எதிர் திசையில் தானாகவே இழுத்துக்கொண்டது. முதல் மலையில் வெடிக்கக் காத்திருந்த விலா எலும்புகள் இப்பொழுது அமைதியாகி இருந்தன. ஒரு வெட்டவெளி கண்ணில் பட்டது வலதுபக்கம் இருந்த ஒரு பெரிய சரிவில் அடர்ந்த மரங்களையுடை காடு. 

ஸ்வாமி ஓம்கார்

மலைப் பாதை!


நான்கு முடிந்து ஐந்தாவது மலையின் ஆரம்பத்தில் எங்களை வருக வருக என்று வரவேற்றனர் அரசியல்வாதிகள். யெஸ் ஜம்ப்பி ஜம்ப்பி ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள். மழை, ஒதுங்க இடமில்லை, பாறையில் சாய்ந்தாலோ ஓரிடத்திலேயே நின்றாலோ குருதி உறிஞ்ச ஒட்டும் அட்டைகள், ஓம் நமச்சிவாய ஆரம்பம் ஆறாவது மலை. 

முதல் மலையில் முதலில் வரும் இடம்!


ஏற்ற இறக்கங்களுடன் சமதளப்பாதைகள், அதள பாதாளம் அற்புதமான இயற்கைக் காட்சிகள், ஆளையே தூக்கும் அசுரக்காற்று வெளிச்சம் குறைய ஆரம்பித்து மழை வலுக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஏழாவது மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே இருக்கும் ஒரு சுனையில்தான் குளித்துக் குளிர்பெற்று குளிர் நீங்கி ஏழாம் மலை ஏறி ஈசனைக் காணவேண்டும். ஆனால் இயற்கை எங்களுக்கு வேறு கட்டளை இட்டது. ஏழாவது மலை அடைய முடியாத அளவுக்கு மழையும் காற்றும் மேகமுமாய் ஆக்ரோஷமாக இருந்தது. சுமார் 24 நபர்கள் அடங்கிய எங்கள் குழுவில் சில வயதானவர்களும் இருந்தார்கள். ஏழாம் மலை ஏறி தங்குவதாக இருந்த எங்கள் திட்டத்தில் இப்பொழுது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வந்தது. ஸ்வாமிஜி இருக்கும் நிலையை விளக்கிச் சொல்லி ப்ராக்டிகலாக நாம் இப்பொழுதே திரும்பிவிடலாம் என்று சொன்னதை அனைவரும் ஏற்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் ஏழாம் மலை எட்டிப் பார்த்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். 

அந்தப் பாதாள குகை அருகில்!


இரண்டே மணி நேரத்தில் அசுரப் பாய்ச்சலில் எங்கும் நிற்காமல் ஐந்து மலை இறங்கி மீண்டும் பிள்ளையார் கோவில் வந்து கால் நீட்டிப் படுத்தபோது குண்டலினி மற்றும் உடலில் ஓடும் சக்கரங்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே அதெல்லாம் இதுவாக இருக்குமோ என்று சிட்டி ரோபோ போல பார்ட் பார்ட்டாக உடலின் பாகங்கள் உணர ஆரம்பித்தபோது உடல் நடுங்கத் தொடங்கியது. 

அரோகரா அதோ பிள்ளையார் கோவில் ஓம் நமச்சிவாய என்ற குரல் வந்த திசையில் சில இளைஞர்கள் மலை ஏறி வருவதைக் கண்டு அவர்களை கோவிலிலேயே ஓய்வெடுத்து காலையில் மழை இல்லையென்றால் மலை ஏறுமாறும் இல்லையென்றால் இறங்கிவிடுமாறும் சொல்லி வானிலை மோசமாக இருப்பதும், தங்க இடமில்லாமல் இருக்கும் நிலையையும் புரியவைத்தோம் சரிங்ணா என்று சொல்லி அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மீண்டும் குளிர ஆரம்பித்தது.. ஒரு மணி நேர ஓய்விற்குப் பிறகு இறங்கிவிடலாம் என்று காலை எடுத்தபோது தெரிந்தது ஓய்வெடுத்தது எவ்வளவு தவறு என்பது. 200 அடிகள் இறங்கிய உடன் உடல் மீண்டும் ஒத்துழைத்தது. ஒரு வழியாக 12 மணி அளவில் மலை அடிவாரம் அடைந்து கால் நீட்டிப் படுத்தோம். உறங்குவதும் விழிப்பதுமாக ஒரு மன நிலை. மழை பெய்துகொண்டே இருந்தது.

 சிறிய குழுக்களாக மக்கள் மலை ஏற வந்துகொண்டே இருந்தார்கள். மனதிலேயே கோவில்கட்டி ஈசனை வழிபட்ட ஒரு நாயனாருக்கு மனம் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஆரம்பித்திருந்தது. தூணிலும் துரும்பிலும் உன்னிலும் என்னிலும் இருக்கும் இறைவன் என்ற வசனங்கள் மனதினுள்ளே சாகா வரம் பெற ஆரம்பித்திருந்தது. 

இது ஜஸ்ட் லைக் தட் ட்ரெக்கிங் அல்ல, ஏன் விரதம் இருக்கவேண்டும்? ஏன் வெறும் காலில் ஒரு மண்டலம் நடக்கவேண்டும்? ஏன் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும்? ஏன் இந்தக் கடவுளின் பெயரில் இத்தனைக் கட்டுப்பாடுகள்? இதெல்லாம் காரணம் புரிய ஆரம்பித்தது. இயற்கையென்றால் இயற்கை இறைவனென்றால் இறைவன். இரண்டும் எப்பொழுதும் காண்பதுபோல இங்கே காணக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மெனெக்கெட்டால் மேன்மையானது கிடைக்கும். வெள்ளியங்கிரிப் பயணம் அதை உணர்த்தியது. இன்று போய் நாளை வா என்பது போல அது மீண்டும் ஒரு முறை பூரணமாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்கவே முழுமை அடையாத ஒரு பயணத்தை எனக்கு வழங்கி இருக்கிறதாகவே நான் உணர்கிறேன். சரியான முன்னேற்பாடுகளுடன் அடுத்தமுறை ஒரு முழுமையான பயணம் முடித்து சிறப்பான மன உணர்வுகளை பகிர விருப்பம். எல்லாம் அவன் செயல்.

நன்றி மறப்பது நன்றன்று:-

டிக்கெட் எடுத்துக் கொடுத்த ஏற்கனவே ஏழு மலை ஏறி இறங்கி இருந்த அந்தப் புண்ணியவான் + பிரபலப் பதிவருக்கு சூட்சும சக்தி ஏதேனும் சேதி சொல்லி இருந்திருக்கக்கூடும், அதனாலேயே அவர் பயணம் கடைசி நேரம் தடைப் பட்டிருக்கிறது:))

கோவையில் காவி சட்டை வேட்டியில் கையில் கம்புகொண்டு ஒரு சாமியார் சாப்பாட்டுக்கு ஓட்டல் தேடியதை நீங்கள் கண்டிருந்தால் அது சாட்சாத் நானேதான். உடனிருந்தவர் பதிவர் எறும்பு ராஜகோபால். நான் இஸ்துகினு இஸ்துகினு கம்புகொண்டு நடப்பதை ஏளனத்துடன் பார்த்து அடுத்து சதுரகிரி போறோம்தானே? என்றார்! 

மாலை பதிவர்(?) சகோதரி விஜி அவர்கள் வீட்டிற்கு சென்று அருமையான காபி குடித்தோம்,  காங்கிரஸ் இணைய தளபதி சஞ்செய் வந்தார், சகோதரி சக்தி மற்றும் தாரிணிப் ப்ரியாவுடன் செல்லில் அழைத்துப் பேசி ஒரு மினி மாநாடு முடிந்து சுவையான இரவு உணவு முடித்து விடைபெற்று வீடு வந்தோம். 

எங்கிருந்தோ பெயர்த்தெடுத்து இந்தத் தமிழகத்தில் வெள்ளியங்கிரியை வைத்தது யார்? இதைப் படித்து வெள்ளியங்கிரி ஏறக்கூடாது என்று முடிவெடுத்தால் நீங்கள் தமிழகத்திலிருக்கும் ஒரு மிக மிக முக்கியமான ப்ரயாணத்தை இழக்கிறீர்கள். ஏறலாம் என்று முடிவெடுத்தால் அதி அற்புதமான ஒரு தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும் இயற்கையோ, ஈசனோ, சுற்றுச்சூழலோ, ஆரோக்கியப் ப்ரயாணமோ, ட்ரெக்கிங்கோ ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கும் உரிமை உங்களுக்கிருக்கிறது.                   


ஒன்றுமில்லாததில் 
ஒன்றுமில்லாததிருந்திருக்கவேண்டும்
அந்த ஒன்றுமில்லாததிலும்
ஒன்றுமில்லாததிருந்ததா என்பது
என்றுமில்லாதது மட்டுமே
அறியும்!


தென்னாடுடைய சிவனே போற்றி!

.

பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


.


பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்!!


ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு நேற்று போட்டிருந்தார். உடனே வீறுகொண்டு எழுந்த ராஜகோபால் தன் நண்பருடன் நேற்று மாலையே செல்லத் தீர்மானித்ததை மயில் ராவணனும் சாறு சங்கரும் மோப்பம் பிடித்து என்னையும் அழைக்க ஐவர் கூட்டணியாக மாலை 4 மணிக்கு தீர்மானித்து இரவு 7.20க்கு கோயம்பேட்டிலிருந்து போளூர் செல்லும் நேரடி பஸ் ஏறினோம்.

பூந்தமல்லி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழி போளூர் சென்றடைந்தபோது இரவு மணி 12.00 பர்வத மலைக்கு காலை 4மணிக்குத்தான் முதல் பஸ் என்று கேட்டு அறிந்துகொண்டோம். அங்கே தங்க உத்தேசமில்லாமல், ஒரு ஆட்டோ பிடித்து இரவு சுமார் 1.20க்கு அடிவாரத்திலிருந்து நிலா வெளிச்சத்தில் நாங்கள் ஐந்துபேர் மட்டும் மெதுவாய் ஏற ஆரம்பித்தோம்.

 கூடவே வழிகாட்டுவதுபோல ஒரு வெள்ளை நாய். முதலில் 2கிலோ மீட்ட்டர் வரும் சாலைப் பயணம் முடிந்து, சிமெண்ட் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உடலின் வலிமையை சோதிக்க ஆரம்பித்தது.

இதயத்துடிப்பு வெளியில் கேட்க ஆரம்பித்து வாயில் மூச்சு பலமாக விட ஆரம்பித்த நேரத்தில் சோடாவேண்டுமா என்ற குரல் வந்த திசையில் ஒரு படுதா கட்டிய சிறு கடையில் கோலி சோடாவில் எலுமிச்சையும், உப்பும் சேர்த்து கல்ப்பாக அடித்துவிட்டு சட்டை நனைய நாங்கள் நடக்கத்துவங்கினோம்.

ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கற்காளாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. பெரிய பெட்ரோமாக்ஸ் லைட்போல அருகில் நிலா! அதன் வெளிச்சத்தில் தூரத்தே தெரிந்தது பர்வத மலைக் குன்று ஒரு நந்தி முழங்கால் மடித்து அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி!

ஆங்காங்கே சற்று இளைப்பாறி சோடா குடித்து மூச்சுவாங்க முக்கால்வாசி ஏறியதும், காற்றும், குளிறும் ஒரு சேர சாமரம் வீசியது. அத்துனை தூரம் நடந்துவந்த களைப்பு அந்த சூழலுக்கே சரியாகப் போயிற்று. அற்புதமான அந்த இடத்தை விட்டு நடக்கத்துவங்கி கடைசி நிலையான கடப்பாறை பாதை வந்தடைந்தோம்.

இரண்டு வழிகள்:: ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று செங்குத்தான பிடிவிட்டால் கயிலாயம் டிக்கெட் வழங்கும் கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்து மெல்ல ஏறி மலை உச்சியை அடைந்தோம். ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? அதிகாலை ஐந்து மணி அளவில் மெல்ல சிவப்பாக சூரியன் உதிக்கப்போகிற அந்த நேரத்தில் எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.

அங்கே உள்ள சிவன் கோவிலையும் பார்த்துவிட்டு நல்ல வெளிச்சத்தில் கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா இரவு ஏறிவந்தோம்!!??? கண் மூடித் திறப்பதற்குள் சூரிய உதயத்தை பர்வத மலை உச்சியிலும், அஸ்தமனத்தை என் வீட்டின் மாடியிலும் கண்டது கனவா? என்பது போல் இருக்கிறது :))

வெறுமனே மலை ஏற/இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை உங்களை வரவேற்கிறது!.

மலை அடிவாரத்தில் எறும்பு, நான், மயில் பின்னால் தெரிவதுதான் பர்வத மலை

சிமெண்ட் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடம்

அந்த நால்வர்!

முதலில் வரும் சிமெண்ட் பாதை

பின்னர் வரும் கற் பாதை

காட்டினூடே செல்லும் பாதை

கடைசியாக ஏற வேண்டிய படிக்கட்டுப் பாதை
இறங்கும் வழியில்

முதலில் இறங்கவேண்டிய மலைப்பாதை

சூலம்!

ஓம் நமச் சிவாய :))

இன்றைய சூரிய உதயம் மலை மேலிருந்து

உதயத்திற்கு முன்பான ட்ரைய்லர்!

வெண் பஞ்சு மேகங்கள்

விளிம்பு நிலை மோட்ச தியானம் :))

கோவிலின் பின்னே ராஜகோபாலும் மயிலும்..


கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் மக்களே! மறக்க முடியாத ஒரு அனுபவம்! 

மிக்க நன்றி!

:))

வெய்யக் கால பயணங்களில்..!

                                                               மெரீனா ஒரு மாலை

           வீட்டுத் தோட்டத்தில் அரளி இலை கபளீகரம் செய்யும் கேட்டர்பில்லர்

பெசன்ட் நகர் பீச் அறுபடை முருகன் கோவில் பின்புறம்
                                 வெட்டப்பட்ட மரம் - வண்டலூர் உயிரியல் பூங்கா
  பூக்குமா பூக்காதா என்று பல மாதம் காக்க வைத்த லில்லி - வீட்டுத் தோட்டம்

வண்டலூர் சுற்றுலா சித்திரைத் திரு நாள் அன்று மயில்ராவணன், சாறு சங்கருடன்


                                                              கலர் புலி

                                                               வெள்ளைப் புலி
                                                                 சாறு சங்கர்
                                                                    மயில்

மண்டை காயும் வெயில் அடித்தாலும், உள்ளே மரங்களூடே நடந்ததில் சுகமாகத்தான் இருந்தது. முதலைகள் மற்றும் நீர் யானைகள் மேலெல்லாம் தண்ணீர் பாட்டில்களை மக்கள் வீசி எறிந்திருந்தார்கள் :(((

தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல மிருகங்கள் இந்த வெப்பத்தையே சமாளிக்க இயலாது சோர்ந்து போயிருந்தது.

இன்னும் சிறப்பாக எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம், சிறப்பான உயிரியல் சுற்றுலா இடமாக மாற்றலாம். மாற்றம் வருமென்று நம்புவோம். ஹும்ம்!.