பலா பட்டறை: 01/01/2013 - 02/01/2013

விஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு விமர்சனம்)


விஸ்வரூபம்.
கமலின் இந்தப் படத்தை காளஹஸ்தியில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. படத்தைப் பற்றிய அரசியலுக்குள் போக விரும்பவில்லை, ஏனெனில் பாகம் இரண்டு வர இருப்பதாக படத்தின் இறுதியில் காட்டப்படுவதால் (வந்தால்) அதையும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக இப்படத்தின் அரசியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என்பது என் நிலைப்பாடு. 

ஆம். நீங்கள் பலரின் விமர்சனத்தைப் படித்ததுபோல படம் உலகத் தரத்தில்தான் ஒரு தமிழ் கலைஞனால் எடுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்கொண்ட களம் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா. ஆங்கிலத்தில் பல படங்கள் இந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், அர்னால்ட் டைப் ஹீரோயிசம், டெக்னிகல் மிரட்டல்களுடன் வந்திருக்கிறது. நம்மூரிலும் இந்தத் தரத்தில் ஒரு படம் வராதா என்று நினைத்ததுண்டு. படத்தின் முழு டோனும் அப்படி ஒரு ஆங்கிலப்படத்தை ஒத்த ஒரு உணர்வைத் தந்தது. நாங்கள் படம் பார்த்த அரங்கு சாதாரண ஏசி இல்லாத சுமார் டிடிஎச் அதிலேயே சவுண்ட் க்வாலிட்டி அசத்துகிறது. கமலின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமும் தெரிகிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானை காட்டும் காட்சிகளில் கேமரா செய்யும் ஜாலம் அசத்தல். முதல் சண்டைக் காட்சியும் அதை மீண்டும் ரிபீட் செய்யும் காட்சியும், பல கேமரா கோணங்களும் டெக்னிக்கலாக தமிழ்/இந்திய சினிமாவை கமல் இன்னும் பல படிகள் மேலே கொண்டுபோக ஆசைப்பட்டிருக்கிறார். இந்தக் களம் அவருக்கு காலை வாரி இருக்கலாம். ஆனாலும் பல படங்கள் இந்த உழைப்போடு வெளி வரும்போது இந்திய கேளிக்கை சினிமா பல புதிய உயரங்களை அடையும், இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தில் இதெல்லாமே தேவைதான்.       

ஆத்திக பகுத்தறிவுவாதியான கமல் படங்களில் பல குறியீடுகள் இருக்கும், வசனங்களிலும் அது மிக நுணுக்கமாக வெளிப்படும் இந்தப் படத்திலும் கதைப்போக்கிற்கு ஏற்ப அதைச் செய்திருக்கிறார். படத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் குறியீடுகள்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டபிறகு எதற்காக இந்தப் படம் எதிர்க்கப்பட்டது என்பதை எதிர்த்தவர்கள் விளக்குவார்கள். அப்பொழுது எனக்கும் உங்களுக்கும் சில வெளிச்சங்கள் பிறக்கும். மிக முக்கியமாக நான் அதைப் பற்றிக் கருத்துரைக்க விருப்பமில்லாததன் காரணங்களில், இணைய ஆராச்சிகளின் மெய் சிலிர்ப்பு வாசிப்பனுபவம்தான். தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள். எனவே உண்மையான எதிர்ப்பை மதிப்போம், அரசியல் / சுயலாப காரணங்களை எதிர்ப்போம். 

--

சரி, கிட்டத்தட்ட கமல் ரேஞ்சுக்கு தெளிவாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டேன் பரிகாரமாக 

நண்பர் ஜோதிஜியின் டாலர் நகரம் என்ற புத்தகவெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பை இங்கே பகிற்கிறேன். அறிமுகம் தேவைப்படாத இணைய ஜாம்பவான் நண்பர் ஜோதிஜியின் புத்தக வெளியீடு விழா திருப்பூரில் நாளை நடக்க இருக்கிறது, அன்போடு உங்கள் ஆதரவை கோருகிறேன்.

விவரங்களுக்கு :  http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html
                                     http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_26.html   


நன்றி! :)


36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013நுழைவாயில்


36வது, சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013


36வது புத்தகக் கண்காட்சி இந்தமுறை ஒய் எம் சி ஏ மைதானம் நந்தனத்தில் நேற்று துவங்கியது. வழக்கம் போலவே முதல் நாள் முதல் ஷோ காணவேண்டியும், இந்தமுறை புதிய இடத்தில் நடப்பதாலும் ஆவலோடு நேற்று மதியம் 3 மணி அளவில் உள்ளே சென்றேன். மவுண்ட்ரோடிலிருந்து உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய மைதானங்களுடன் நம்மை வரவேற்கும் இந்தப் புதிய இடத்தில் குறுகிய சாலை கொண்ட நுழை வாயில் இருப்பதால் வண்டி ஓட்டுவதில் மிகப்பொறுமைசாலிகளான நம் மக்களால் நந்தனத்தில் மிகப் பெரிய ட்ராபிக் ஜாம் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

அரங்கின் ஒரு தோற்றம்


பல மைதானங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த இடம் பார்க்கிங் வசதிக்கு பொருத்தமானதாக இருந்தாலும், கண்காட்சியை அடைய பல மீட்டர் தூரம் நடக்கவேண்டி இருக்கும், பகலில் கை காட்டிய இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இரவில் வண்டியை எங்கே விட்டோம் என்று தலை சொறியவேண்டும் என்பதால் ஏதேனும் ஒரு அடையாளம் பார்த்து வண்டி விடுவதும், செல்லும் பாதையை நினைவில் வைப்பதும் அவசியம்.


உள்பகுதி கூரை அமைப்பு 

வழக்கம் போலவே சர்க்கஸ் கூடாரம், ஆனால் இம்முறை பெரிய கூடாரம். அதிக ஸ்டால்கள். விழா மேடையின் எதிரே உள்ள வாயில் அருகில் ஸ்டால் கிடைத்த நவீன வேளாண்மை போன்ற ஸ்டால்கள் கொஞ்சம் பாக்கியவான்கள், காற்று கொஞ்சம் வீசி புழுக்கத்தைக் குறைக்கும்  ஒரே இடம் இதுதான். மற்ற இடங்களில் கூட்டமில்லாத நேற்றே மூச்சு முட்டுகிறது. இது போன்ற கூரை அமைப்பில், உயரமான இடத்தில் சுற்றிலும் இடைவெளி விட்டு அமைப்பது ஒன்றே குளுமைக்கும், காற்றோட்டத்திற்குமான ஒரே வழி.

ஸ்டால்களில் 70 சதவீதம் நேற்று அந்த நேரத்தில் புத்தகங்களை அடுக்கிவிட்டுத் தயாராகவே இருந்தார்கள் என்பது ஆச்சரியம். மற்றவர்கள் கடைசி நேர பரபரப்பில் இருந்தார்கள். கார்பெட் வசதிகள் தடுக்கி விழாத அளவிற்கு ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.


இம்முறையும் முதலிலேயே மீனாட்சி புத்தக நிலையம் கண்ணில்பட உள்ளே சென்றேன், இம்முறையும் அவர்களுடைய மலிவுப் பதிப்பில் வெளியான சுஜாதாவின் பல புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைத்தது. 

பல ஸ்டால்களின் உள் அளவு சிறியதாகவே இருக்கிறது. கூட்டமான நேரங்களில் விண்டோ ஷாப்பிங் அல்ல ஸ்டால் ஷாப்பிங் செய்வதுகூடக் கடினம் என்றே நினைக்கிறேன். இரண்டு ஸ்டால்களை ஒன்றாக எடுத்த இடங்களில் புத்தகங்களை ஓரளவு பார்வை இட முடிந்தது. 

கழிப்பறை வசதி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை, ஒய் எம் சி ஏ சர்வ ஜாக்கிரதையாக அவர்களுடைய டாய்லெட்களை பூட்டி வைத்திருக்கிறார்கள், பூட்டி வைத்த டாய்லட்களைச் சுற்றி என்ன கதி ஆகப்போகிறதோ?
குடிக்கத் தண்ணீர் காசு கொடுத்து வாங்குங்க

சாப்பிட வாங்க என்ற பெயரில் கேண்டீன், விலை எல்லாம் வழக்கம் போலத்தான், சரி பரவாயில்லை பசிக்கிறதே என்று ஒரு மசாலா தோசை வாங்கி சாப்பிட்டு 10 நிமிடங்கள் கை கழுவும் இடம் எங்கே என்று தெரியாமல் அல்லாடி, கடைசியில் வலது பக்கம் கை காட்டப்பட்டு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் கை கழுவினேன். வழக்கம் போலவே குடிக்கத் தண்ணீர் கிடையாது, வேண்டுமென்றால் பாட்டில் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டியதுதான். அல்லது விக்கித்துப் போகவேண்டியதுதான்.

லிச்சி தி க்ரேட்

எல்லா டென்ஷனையும் ஆசுவாசப்படு்த்தியது விலை ஏறாத லிச்சி ஜூஸ் மட்டுமே. நானும் ராஜகோபாலும், கஸ்டமர் கூட பெரிய டீல் பேசிக்கிட்டு இருக்கேன் சார், டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று போனில் உண்மை பேசிய மேவியும் ஆளுக்கு ஒரு கோப்பை அடித்தோம்.

இன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தபோதே, இராமசாமி கண்ணன், அண்ணன் புதுகை அப்துல்லா, அன்பு மணிஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், தமிழ்மணம் நம்பர் 1 மோகன்குமார், லக்கி, அதிஷா என்று பல பிரபலங்கள் வந்திருந்தனர், திரு,பாஸ்கர் சக்தியிடம் ஞானபாநு ஸ்டால் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். கிங்விஷ்வா லயன் காமிக்ஸ் ஸ்டாலில் வெகு பிஸியாக இருந்தார்.
நவீன வேளாண் விவசாயி அண்ணன் அப்துல்லா


ஆமாங்க, இதுதான் உங்களை வரவேற்கிறது (வெளங்கிறும்)

மேடை அரங்கு
சாகித்ய அகாடமி என்று தயை கூர்ந்து ஆங்கிலத்தில் சரியாகப் படிக்கவும்


சன் டிவியிலிருந்து, சத்யம் வரை கவரேஜ்கள் ஆரம்பித்திருந்தது, வழக்கம் போல் கால்கள் வலிக்க, பத்து நாளும் இங்கிட்டுத்தானே சுத்தப்போகிறோம் என்று ..

பாதையில்லா பயணம் - பிரமிள் (வம்சி)
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி (வம்சி)
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி (வம்சி)
ரப்பர் - ஜெயமோகன் (கவிதா)
நவீன வேளாண்மை (விவசாய இதழ்)
இவர்கள் - நகுலன் (காவ்யா)
வாக்குமூலம் - நகுலன் (காவ்யா)
நாய்கள் - நகுலன் (காவ்யா)
கண்ணாடியாகும் கண்கள் - (காவ்யா)
சமவெளி - வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது :)
ஸ்ரீசக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)
தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை - வண்ணநிலவன் (நற்றிணை)
ஈராறுகால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன் (சொல் புதிது)

புத்தகங்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

குறிப்பு: கையில் ஐபோன்5 இல்லாததால், டைனோஜிக்காக, ஆண்ட்ராய்ட் போனிலேயே பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்திருக்கிறேன். 

நன்றி! :)))