பலா பட்டறை: 01/01/2010 - 02/01/2010

நூற்றுக்கு பூஜ்யம்..

படம் நன்றி: வித்யாஜி.


100 வது பதிவில் வாழ்த்தி பின்னூட்டமிட்டு, மின் அஞ்சல் மற்றும் தொலைபேசியிலும் வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். :))நேற்று திரு.பாஸ்கர் சக்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். வழக்கம் போல பதிவர் சந்திப்பாக முடிந்தது:) கேபிள்ஜி, தண்டோராஜி, அடலேறு, பெஸ்கி, யுவகிருஷ்ணா, அதிஷா மற்றும் எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்.

குறுகிய கால அவகாசத்தில் இட மாற்றம் செய்திருப்பினும், நிகழ்ச்சிக்கு நிறைய மக்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன், வசீகரமான ஒரு குரல், நடை. திரு.ஞாநி அவர்களும் பாஸ்கர் சக்தியை பற்றி பேசினார். சமீபகாலங்களாக அவர் கூட்டங்களில் வலியுறுத்திவரும் ஹாலிஸ்டிக் அப்ரோச் எனப்படும் முழுமையான ஒரு பார்வை, ஞானம், அறிவு, செயல் இப்போதுள்ள சமூகத்திற்கு வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொன்னார்.

முன்னேற்ற கடிவாளங்கள் நம்மை சிறை படுத்தியதின் விளைவுதான் அந்த முழுமையான பார்வையை குருடாக்கியது என்று நினைக்கிறேன். இனி ஒரு மாதத்திற்கு மின்சாரம் கிடையாது. பெட்ரோல், டீசல் கிடையாது என்ற ஒரு அறிவிப்பு காலை செய்திகளில் வந்தால் அடுத்து என்ன என்ற ப்ளான் ‘பி’யாரிடமும் இல்லை.

மருந்துகளும், மின்சாரமும் நமக்கான தின வாழ்க்கையின் எஜமானர்களாக ஆகிவிட்டது. இதை சார்ந்தே எல்லா இயக்கமும், தனி மனித தனித்துவமும் வெளிப்பாடும் நடை போடுகிறது. அறிவியல் முதலில் ஒன்றை புகுத்துகிறது, நம்மை பழக்க வைக்கிறது, அடிமையானதும் அதற்கு விலை வைக்கிறது, பின் தொடர்ந்து நம்மை ஏதாவது ஒரு கண்டுபிடிப்பின் பெயர் கொண்ட ஸ்ட்ரா போட்டு உறிந்துகொண்டிருக்கிறது.

ஆயிரத்தெட்டு உரிமைகள் பேசினாலும், ஏதோ ஒன்றை சார்ந்திருப்பது என்பதை தவிற்க இயலாத வாழ்வு சூழலில் நாம் இருப்பதை மறுக்க இயலாது. அறிவியலை என்னதான் புகழ்ந்தாலும் அது நம்மை, மனித இனத்தை ஒரு காட்சிப்பொருள் ஆக்கி ஸூவில் வைத்துதான் பார்க்கிறது.

 அறிவியலை குறை சொல்லவில்லை. ஆனால் அது சாஸ்வதமான எதையும் தரவில்லை. எல்லாமே இதுவரை Trial & Error. ஆனால் Errorகளுக்கான பதில்கள் எப்போதும் தயாராய் இருப்பது அறிவியலின் புத்திசாலித்தனம். யூசர் மேனுவல் வழங்கும் அதன் விற்பனைகளில் நாம் வெறும் வாடிக்கையாளராய் இல்லாது அடிமையாய் ஆனதுதான் நம்மை புத்திசாலி முட்டாள்களாக வைத்துள்ளது. எல்லாவற்றையும் கேள்விகள் கேட்ட விஞ்ஞானம் பதில் சொல்லும் அளவுக்கு புத்திசாலியா? தெரியவில்லை.

நூற்று சொச்ச ஆண்டுகளில் நாம் இயற்கையை விட்டு வெகு வேகமாக ஓடி வந்த தூரம் என்பது வளர்ச்சியா? நம்முடன் ஓடி வராத மற்ற உயிரினங்களுக்கு நாம் அறியாமலும் அறிந்தும் அளித்த அநீதிகள்தான் நமது முன்னேற்றமா?
முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் நம்மை சார்ந்ததாகவே இருப்பதின் சுயநலம் மிகவும் அபத்தமாக இந்த குறுகிய காலத்திலேயே எதிர் விளைவுகளின் மூலம் நாம் அனுபவித்துக்கொண்டு இருப்பதுதான் நாமது ஆறறிவு தேர்வுக்கு கிடைத்த மதிப்பெண். அது..

நூற்றுக்கு பூஜ்யம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை.  

மிக விரைவான பரமபத ஆட்டம் முதல் சுற்று முடிந்து, ஏணிகளில் ஏறி, பாம்புகளில் இறங்கி இரண்டாவது ஆரம்பம்,  தாய கட்டைகள் வீசுகிறேன்..

எனக்கான சோழி எடுத்து வைக்க, ஏணிகளுடனும், பாம்புகளுடனுமான எனது பயணம்..

தாயம் ஒண்ணு....
பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))

மாயவலை..100ஆவது பதிவு..

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.- கவிதை - திரு.TKB காந்தி
புத்தகமாய் தொகுப்பு : கூர்தலறம். வெளியீடு: அக நாழிகை.

இது நூல் விமர்சனமல்ல. ஆனால் மிக அழகான கவிதைகள், இந்த தொகுப்பில் நான் வாசித்தேன். அய்யனார்கம்மா, கருவேலநிழல், நீர்க்கோல வாழ்வை நச்சி இனிதான் படிக்கவேண்டும்.


13-11-2009

அன்றுதான் முதல் பதிவு. இது 100 ஆவது பதிவு. பெரியதாய் எழுதி எதுவும் கிழித்துவிடவில்லை என்றாலும். யார் மனதையும் கிழிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நிச்சயம் உங்களின் தொடர் பின்னூட்டங்களும், ஓட்டுகளும், அறிமுகங்களும், ஏதும் சொல்லாமல் வெறுமனே என் பக்கம் பார்த்து எண்களில் முகம் காட்டும் நண்பர்களும், எனக்குள் கிட்டத்தட்ட இறந்துவிட்டிருந்த எழுத்து தமிழை மீட்டிவிட்டது.

தின வாழ்வைப்போலவே, பதிவுலகமும் இருக்கிறது. எழுத்துக்களிலேயே முகம் தெரிகிறது. குறள்கள் சற்று வேறுமாதிரி மாற்றிக்கொள்ள தேவையாய் இருக்கிறது. தீயினாலும், நாவினாலும் சுட்டது ஆறிவிடுமோ என்னமோ, பதிவு இன்னும் பயங்கரம் ஆறவே ஆறாது என்று புரிகிறது.

 இங்கும் நட்புகளை காண்கிறேன், நிஜ வாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத நட்புகள் இந்த மாய வலை தருகிறது. அப்படி எனக்கு கிடைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நன்றி என்பதை தவிற வேறெதுவும் சொல்ல தெரியவில்லை. கவிதை, கதை, தொடர்கதை, அனுபவம், படங்கள் என எல்லாம் பகிர இங்குதான் முடிந்தது. எண்ணங்களை வெளிப்படுத்தத்தான் மிகுந்த பிரயாசை பட்டிருக்கிறோம். எனக்கே எனக்கென்று, நான் எழுதிய ஆனால் எல்லாருக்குமான ஒரு திறந்த புத்தகமாய் என் பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி.

100 என்பது ஒரு குறியீடுதான் விழும்போது எவ்வளவு அடிபடும் என்பதை எண்ணிக்கொண்டே ஒரு இளைப்பாரலாக இதுவரை ஏறிய படிகளில் உட்கார்ந்து பார்க்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை.

என் பக்கத்தில், எழுத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது என்னுடையாதாகட்டும்.

நிறைகள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்.


மீண்டும். மிக்க நன்றி.

ஷங்கர்...
”அடையாளங்கள்
 ஏதுமின்றியே வாழ நினைத்தேன்
 அடையாளமில்லாதவன் என்ற
 அடையாளம் என்னைப்பார்த்து
 சிரிக்கிறது..”
.


கூச்சல்களுக்கிடையே...

ஆயிரம்கோடி விவாதங்கள்
புத்தகங்கள்
கருத்துகள்
இன்னும் எதையோ தேடி
எதையோ கற்றுக்கொண்டு
எதையோ கண்டுபிடித்து
கூவி கூவி மார்தட்டி

எந்த மொழி சிறப்பு?
என்னுடையதா?
உன்னுடையதா?
என்ற கூச்சல்களில்
எனெக்கென்னமோ
'ம்மே'
என்ற ஒரே சப்தத்தில்
எல்லாவற்றையும் அடக்கிவிட்ட
ஆடும் குட்டியும்
அதிசயமாய்தான் தெரிகிறது


யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த எனது கவிதை..
எனது நீதி கிடைக்குமா என்ற இடுகையை தொடர்ந்து தமிழ் உதயம் பதிவரும் அவருக்கான அனுபவத்தை எழுதி உள்ளார். எல்லோரும் பகிர்ந்தால் சர்வ சாதரணமாய் அராஜகம் செய்ய பயப்படுவார்கள் என்பது என் கருத்து.  தமிழ் உதயம் நண்பருக்கு என் நன்றி.

சில படங்கள்...


என்னுடைய எனக்கு நீதி கிடைக்குமா..?? பதிவை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. ஒரு பிரச்சனையை பகிர்ந்து கொள்வதின் மூலம் மற்றவர்களும், அந்த நிலை வரும்போது இது போன்றவைகள் நினைவிற்கு வந்து, சுதாரித்து தப்பிப்பார்கள் என்றதை ஒட்டியே அதை பதிவிட்டேன்.
நிச்சயம் வெற்றியோ, தோல்வியோ உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்,

உங்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் (அது 1 பைசா சமாச்சாரமாக இருந்தாலும்) என்ன நடந்தது? என்ன செய்தீர்கள்? என்ன கிடைத்தது? என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படும்.

நேற்று குடியரசு தினம்.


பள்ளி குழந்தைகள் செய்து காண்பித்த ஒரு சக்கரம், பறவை பார்வையில்..
 நாங்களும் ரவுடிங்கதான்.. திருக்குறள் போட்டியில் நேற்று பெற்ற பரிசுகளுடன் புள்ளைங்க (படிக்க வைக்கறோம் சாமி)
மாணவர்களின் ஒரு கலை நிகழ்ச்சி இந்த (சக்தி ) வேடம் மிக அற்புதமாய். இருந்தது.

நேற்று முழு நாளும் பிள்ளைகளின் பள்ளியில், குடியரசு தின கொண்டாட்டங்களில் கழிந்து விட்டது. நிகழ்ச்சி மிக அருமை.

ஒரே வருத்தம், எல்லோரும் ஆங்கிலத்தில் பேசியது :( ஆகஸ்ட்-15, ஜனவரி-26 மட்டும் அந்த அந்த மாநில மொழியில் பேசினால் என்ன..??

ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?என் ஸ்கோர்.... 98 நாட் அவுட்...................>><<----------------------::))

அறிவிப்பு::-


 பல பதிவர்கள் எழுதும் ஒரே பரபரப்பு கதை எங்கே செல்லும் - பாகம் -6 படித்துவிட்டீர்களா?? 7- ம் பாகம் தயாராகிவிட்டது தயாராய் இருங்கள்..:))

எனக்கு நீதி கிடைக்குமா???
2009 ஜனவரி 2-ம் நாள் இருந்த இருசக்கர வண்டி கொஞ்சம் ஊடல் பண்ணியதால் மாற்றி விடலாம் என்று பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் அந்த பிரபல ஷோரூமுக்கு போய் டிவியில் மின்னல் வேகத்தில் போகும் வண்டியை புறம் தள்ளி, ஸ்பெசல் மசாலா ’கண்டுபிடிப்பு 135’ ஐ தேர்வு செய்தேன்.

கொடுத்த வண்டி போக மீத தொகைக்கு, ஸ்பெசல் மசாலா பெயரிலேயே வழங்கப்படும் ஃபைனான்ஸ்சை தேர்ந்தெடுத்தேன், கேட்ட ஆவணங்களை கொடுத்து, ஈசிஎஸ் சில் பணம் ஒரு வருடத்திற்கு மாதா மாதம் எடுக்க கையெழுத்திட்டு அதற்கான காசோலையும், புகைபடமும் தந்து,. உடனடி டெலிவரி எடுத்து, பாடிகாட் தலைவரிடம் அட்டெண்டன்ஸ் போட்டு, ஓட்ட ஆரம்பித்தேன். வழக்கம்போல தின வாழ்வு நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.

 பிப்ரவரிக்கு மேல்தான் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். மார்ச், ஏப்ரல் வரை பணம் எடுக்கவில்லை திரும்பவும் ஷோரூமில் கேட்டதற்கு சில சமயம் அப்படி தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மே மாதத்தில் முதல் ஏழரை ஆரம்பம்..

“ஹலோ மிஸ்டர்.சங்கர்”

“சொல்லுங்க”

“ஸ்பெசல் சாதா தோசை 135 வாங்கினீங்களே, பணம் கட்டலியே”

“இல்லைங்களே, என் கணக்குல உங்களுக்கான பணம் அப்படியே தான்
இருக்கு” காதில் போட்டுக்கொள்ளாத அந்த கடமை தவறாத வாடிக்கை சேவை குயில்..

“இல்லைங்க ஈசிஎஸ் பவுன்ஸ் ஆகுது, ப்ராப்ளம் உங்க பேங்லதான், கொஞ்சம் செக் பண்ணுங்க” எனக்கு கோவம் வந்தது.

“ஏம்மா ஈசிஎஸ்-னா ’ஸிஸ்டம் பேஸ்டு’தான, 10-ம் தேதி, பாங்க்காரன் கல்லாவ தொறந்த உடனே காசு கம்ப்யூட்டரே எடுத்திடும், உங்க ஸைடுல தவறு இருக்கும் பாருங்க.”

“இல்லைங்க எங்களுக்கு, பவுன்ஸ் ஆகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு மொதல்ல பாங்க்ல செக் பண்னுங்க”

எனக்கு புரியவில்லை, சரி எங்கயோ தவறு, இப்பவே சரி பண்ணிடலாம்னு, என்னுடைய வங்கிக்கு போய் கேட்டா, ”

அப்படி ஒரு ஈசிஎஸ் ரிக்வெஸ்ட்டும் உங்க கணக்குக்கு வரலையே, அக்கவுண்ட்ல வேண்டிய பணமும் இருக்கு, நாங்க ஏன் சார் ரிட்டர்ன் அனுப்ப போறோம், வேணும்னா, மவுண்ட் ரோட்ல எங்க ஈசிஎஸ்-இன்சார்ஜ் இருக்காங்க போய் பாருங்க”    

சரி என்று அங்கேயும் போனேன், அங்கிருந்த பெண்மணி தெளிவாய் சொல்லிவிட்டார்,

“இல்லைங்க, எதுவும் வரல, அவங்க பேப்பர மிஸ் பண்ணி இருப்பாங்க, ஸ்பெசல் மசாலா கம்பெனிலயே கேட்டுபாருங்க”

இதெல்லாம் நடப்பதற்குள், பல போன் அழைப்புகள், ஒருவர் காலம் காலையில் வீட்டிற்கே வந்து ..

“சார், டியூ கட்டலையே கேஷா தற்றீங்களா?”

 அமைதியாய் நல்ல வார்த்தைகள் தேர்ந்தெடுத்து, நிலைமையை அவருக்கு சொல்லி, இனி இது போல வீட்டிற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

என் பெயரிலும், வங்கி பெயரிலும் தவறில்லை, இனி மசாலாதான் பதில் சொல்லவேண்டும் என்று ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களின் தலைமை அலுவலகத்தில் போய் சம்பத்தப்பட்ட நபரை பார்த்து நடந்ததை சொன்னேன். அவரும் பொட்டியில் தட்டி உங்க லோன் அக்கவுண்டே அப்டேட் ஆகலியே என்று தேடி எடுத்து,

”சரிங்க சார், ஒண்ணும் ப்ராப்ளமில்லை , இதுவரைக்கும் உண்டானத பணமா இப்ப கட்டிடுங்க, மிச்சம் அடுத்த மாசத்திலிருந்து, ஈசிஎஸ் ல போய்டும்” எனக்கு பிசிறு தட்டியது, எப்படி நம்புவது...

”நீங்க இத ஒரு லெட்டரா கொடுத்துடுங்க, அப்பறம், நான் கேஷ் தரமாட்டேன், பணம் கணக்குல அப்படியேதான் இருக்கு ஈ சி எஸ்-ல மொத்தமா கூட எடுத்துக்கங்க, நோ ப்ராப்ளம்”

“இல்ல சார் லெட்டர் கொடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது, மெய்ன் சரக்கு மாஸ்டர் வந்ததும், கால் பண்றேன், லெட்டர் வந்து வாங்கிக்கங்க”

 எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒவ்வொரு மாதத்திற்கும் பெனால்டியோடு நிறைய வரிகள் அடித்து என் பெயர் போட்டு தந்தார்கள்.

திரும்பவும், போன் கால்கள் தொடர்ந்தது, அதே பல்லவி, ஏன் சார் டியூ கட்டல, வீட்டுக்கு வந்து பணமா வாங்கிக்கலாமா..இன்ன பிற..ஒவ்வொருமுறையும் பொறுமையாய் நடந்த விஷயங்களை சொன்னேன்.. ம்ஹும் ஒரு மாற்றமுமில்லை, ஜூன், ஜூலை, பணம் அப்படியே இருந்தது. மீண்டும் ஒருமுறை தலைமை அலுவலகம் சென்று, கொஞ்சம் அழுத்தமாக பேசியவுடன்,

“சார் எதுக்கும் நீங்க ஒரு ஃப்ரெஷ் ஈசிஎஸ்-மாண்டேட் ஃபார்ம் வாங்கி தந்துவிடுங்களேன் ஒங்க பாங்க்லேர்ந்து, நான் பார்த்துக்கரேன்.”

”எனக்கு அது பிரச்சனை இல்லைங்க. ஒரு லெட்டர் குடுத்துடுங்க, இது வரைக்கும் நடந்த தாமதத்திற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்லன்னு, ஏன்னா நீங்க இப்ப இருப்பீங்க, நான் லோன் முடிஞ்சு, என் ஓ சி வாங்க வரும்போது வேற யாராவது இருப்பாங்க, பெனால்டி, அதுக்கு வட்டின்னு ஆரம்பிச்சா பிரச்சனை, அதனாலதான் லெட்டர் கேக்கறேன்”

 திரும்பவும் அவர் ”இல்லைங்க எனக்கு அதிகாரம் இல்லை”

’அப்ப ஃபார்ம் கொடுங்க இன்னைக்கே இத ரெடி பண்ணிட்றேன், ஆனா எப்ப லெட்டர் தறீங்களோ அப்பதான் கொடுப்பேன், அதுவரைக்கும் எனக்கு யாரும் லூசுத்தனமா டியூ கேட்டு போன் பண்ணக்கூடாது”.

சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆகஸ்ட் மாதம் எனக்கு வேறு ஒருவர் போன் செய்தார்,

”தவறு நடந்துவிட்டது, நான் கடிதம் தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்,

”ஒன்றும் பிரச்சனை இல்லை, ஈசிஎஸ் பார்ம் ரெடியாக் உள்ளது, பணமும் வங்கி கணக்கில் அப்படியே உள்ளது எப்போதுவேண்டுமானாலும் பணம் மொத்தமாய் எடுத்துக்கொள்ளுங்கள், அனால் கடிதம் முக்கியம்”

 பூனாவில் உள்ள அவர்களின் அலுவலகத்திலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது, கடிதம் தருவதாயும் கூடவே வாக்குறுதியும். அப்பாடி யாரோ செய்த தவறு, இப்போதாவது முடிகிறதே என்று நான் அவர் கூப்பிட்ட ஒரு நாளிள் சென்றேன். நான் வண்டி எடுத்தபோது கொடுத்த அனைத்து படிவங்களும், காசோலைகளும் தொலைந்து விட்டதாக (எட்டு மாதங்கள் கழித்து-என்ன ஒரு கண்டுபிடிப்பு!) தெரிவிக்கப்பட்டிருந்தது. சரி என்று நான் கடிதம் வாங்கி, புதிய ஈசிஎஸ்-படிவம், ஒரு காசோலையும் தந்துவிட்டு, காத்திருந்தேன். சரியாக செப்டம்பர் 10ம் தேதி பணம் எடுக்கப்பட்டிருந்தது, மொத்தமாக, ஆனால் ஒரு தவணை குறைவாக, சரி இடைப்பட்ட காலத்தில் விட்டிருப்பார்கள், அடுத்த மாதத்தில் எடுத்துவிடுவார்கள் என்று எண்ணி, விட்டுவிட்டேன். செப்டம்பர், 28ம் நாள் வழக்கம் போல பணி நிமித்தம் சில இடங்களுக்கு சென்று விட்டு, ஒரு முக்கிய வாடிக்கையாளரின் வீட்டில் காம்பவுண்டிற்கு உள்ளே, வண்டியை நிறுத்தி, பூட்டிவிட்டு, ஹெல்மெட்டை வண்டி மேல் வைத்துவிட்டு உள்ளே போய் 10 நிமிடத்தில் வெளியில் வந்து பார்த்தால் வண்டியை காணோம்.

அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று, புகார் செய்யும்போது, பணியிலிருந்த காவலர்,

“வண்டி ஃபைனான்ஸா”

“ஆமாம் சார், ஆனால் பணம் எல்லாம் ஒழுங்கா..”

“சார் எதுக்கும் நீங்க அவங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டுடுங்க, இந்த மாதிரி காரியம் எல்லாம், அவங்க தான் செய்வாங்க” சரி என்று எனக்கு கடிதம் தந்தவரை கூப்பிட்டேன், அவரோ மறுத்தார்,,

“எதுக்கும், ரெக்கவரி டிபார்ட்மெண்ட் நம்பர் தரேன், நீங்களே கேட்டுடுங்க” சரி என்று அழைத்தால், “வண்டி நம்பர் சொல்லுங்க, ஆமா வண்டி ச்சீஸ் பண்ணிருக்கோம், வந்து பணம் கட்டி எடுத்துக்கங்க”

”ஹலோ நான் எல்லா பணமும் கட்டியும் எப்படி எடுப்பீங்க, நான் கம்ப்ளெய்ண்ட் பண்னப்போறேன், உங்க மேல கேஸ் போடுறேன், என்ன நினைச்சிட்டுக்கீங்க உங்க மனசுல”

அவர் நக்கலாக ”நீங்க என்ன வேணா பண்ணிக்குங்க, வந்து, பணம் கட்டின ரசீது, காட்டினா வண்டி கிடைக்கும்” தொடர்பு துண்டித்தேன். பசி, கோவம், ஆத்திரம், கடிதம் கொடுத்து வாக்கு தந்தவனை அழைத்து கேட்டால், மழுப்பினான்,

போலீஸ்காரர், ”நீங்க புகார் கொடுங்க, தாயோளி அவனுங்கள இங்க வரவெச்சு ஒரு வழி பண்ணிடறேன்” அதற்குள் கூட இருந்த, உதவியாளன், அந்த ஏரியாவின் பெரிய மனிதரிடம் அழைத்து சென்றார். அவரோ..

“சார், கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால்லாம் ஒன்னும் ஆவாது, நீங்க மொதல்ல ஸ்பெஷல் மசாலா அபீஸுக்கு போங்க, வண்டிய பார்த்துடுங்க, அவங்க கிட்ட பேசுங்க, சுமூகமா முடிஞ்சிருச்சினா விட்டிருங்க” எனக்கு சரி என்று பட்டது. முதலில் வண்டி அவர்களிடம் இருப்பதை உறுதி செய்ய கிளம்பி போனேன்.

அங்கு சென்று ”சார் என் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க”

“அங்க போய், மொதல்ல ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வாங்க” வந்தேன்.

“என்ன சார் ஒரு டியூ கட்டல போல, அதான் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க” அதற்கு முன் வரியில் ஏன் மொத்தமாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது, என்ன இதுவரை நடந்தது எதுவும் அக்கரை இல்லை,

”நீங்க பணம் கட்டிட்டு வண்டி எடுத்துக்குங்க” எனக்கு கோவம் வந்தாலும் மொதல்ல நடந்ததுக்கு ஒரு ரெக்கார்ட் வேண்டுமென்று புத்தி சொல்லியது.

சார், நான் இது தெரியாம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டேன், உங்காளுங்க, என் வண்டிய எடுத்த வீடு வேற ஒரு எம் எல் ஏ வோடது, இப்ப எஃப் ஐ ஆர், கான்ஸல் பண்னனும்னா, வண்டி உங்ககிட்டதான் இருக்குன்னு ஒரு லெட்டர் கேக்கறாங்க அதான்.

“அப்படியா, இந்தாங்க, பொஸஷன் லெட்டெர்” அந்த உன்னதமான ஸ்பெஷல் தோசை கம்பெனியின் கலெக்‌ஷன் அதிகாரி வண்டியை ’தூக்கிவிட்டது’ தாங்கள்தான் என்று, கையெழுத்து போட்டு தந்தார். மெதுவாய் நான் வண்டி வாங்கியதிலிருந்து நடந்த விஷயங்கள், தவறு அவர்கள் மீதுதான் என்று அவர்களின் பூனா அலுவலகமே ஒத்துக்கொண்ட லெட்டர் போன்றவைகளை காண்பித்து மொத்த அலுவலகமும் என்னை பார்க்கும் வ்கையில் சவுண்ட் விட்டதும். கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி என்னை அழைத்து, அப்போதுதான் விவரங்கள் கேட்டார், சொன்னதும்,

 “ஸோ சாரி சார், உங்கள் வண்டி இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வீடு வந்து சேரும்”

 என்னால் முடியவில்லை, அலைச்சலும் கோபமும், பசியுமாய் ஒருவழி ஆகி இருந்தேன். சரி இதோடு விட்டது சனி என்று வீடு வருவதற்குள், அப்படியே, என் தந்தையிடம் சொல்லிவிட்டு ”ஸ்பெஷல் மசாலா 135” ஐ, வீட்டு வாசலில் விட்டு விட்டு ’எஸ்’ ஆகி இருந்தார்கள் இரண்டு பேர்,. வண்டியை சோதனை இட்டால், லாக் உடைக்கப்பட்டிருந்தது, ஹெல்மெட் சேதம், ஒரு சொட்டு கூட பெட்ரோல் இல்லை (பாதி டாங்க் நிரப்பி வைத்திருன்தேன்) உடனே மீண்டும் ஸ்பெஷல் மசாலா கம்பெனிக்கு போன்,

“ஓ அப்படீங்களா, நீங்க ஷோரூம்ல ரிப்பேர் பண்ணிடுங்க, பேய்மெண்ட் நாங்க பாத்துக்கறோம்” அடுத்த நான்கு நாட்க்கள் ஆயுத பூஜை லீவு, ஐந்தாம் நாள், கொடுத்து, லாக் செட் கிடைகாமல் வண்டி கையில் வர 10 நாள் ஆகி விட்டது. செலவு 800 சொச்சம்.

”சார் பணம் நீங்களே கட்டி விடுங்கள், பில்லை அபீஸில் கொடுத்துவிடுங்கள்” இது லெட்டெர் கொடுத்த புத்திசாலி. சரி என்று மீண்டும் ஸ்பெஷல் சாதா ஆபீஸ், பில்லை கொடுத்தால் கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி ”சார் தீபாவளி முடிஞ்சதும், க்ளியர் பண்ணிடுறேன்,” ஒழியட்டும் என்று வந்துவிட்டேன். அனால் மனது ஆறவில்லை, அது எப்படி ஒரு தவறும் செய்யாமல் எனக்கு இந்த தண்டனை, மெதுவாய் கூகுள் ஆண்டவரிடம் விவரங்கள் சேகரித்தால் நிறைய பேர், தோசை சுட்டிருப்பது தெரிந்தது, கூடவே நுகர்வோர் உரிமைகள் பற்றியும் தேடியபோது, அடையாரில் ஒரு குழு நுகர்வோருக்காய் இயங்கி வருவது அறிந்து, அவர்களுக்கு மொத்த கதையையும் மின் அஞ்சல் செய்தேன்.

அதற்குள் நவம்பர், டிசம்பர் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று வங்கி கணக்கு சொல்லியது. மீண்டும் ஒரு தோசை நோக்கி பயணம், முதலிலேயே ஸ்டேட்மெண்ட் வாங்கி விட்டேன். அது அப்படியே தான் இருந்தது வட்டி மற்றும் அதற்கான குட்டியுடன், இப்போது உபரியாக வண்டி சீஸ் பண்னியதற்கு அபராதம் ஒரு 3000/- ரூபாய் கணக்கில் ஏற்றப்பட்டிருந்தது. சுருட்டி கையில் வைத்துக்கொண்டு, அதிகாரமில்லாத பார்ட்டியிடம் சென்று,

“2 மாதங்களாக என் கணக்கிலிருந்து பணம் எடுக்கபடவில்லை, திரும்பவும் வண்டி தூக்க ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன், வழக்கம் போல மண்டை சொறிந்து, கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரியிடம் அழைத்து சென்றார்,

“இல்லங்க, பெனால்டி எதுவும் போடமாட்டாங்க, நான் அப்பவே இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துட்டேன்” நான் மெதுவாய் ஸ்டேட்மெண்ட் நீட்டி

”நீங்க சொல்றது பழைய கதை, இப்போது சீஸ் பண்ணிய வகையில் ரூபாய்.3000/- சேர்ந்திருக்கிறது, உங்க ஸிஸ்டம் எல்லாம், வண்டிய தூக்கறதும், பெனால்டி போடறதும், காசு புடுங்கறதுமாகவே இருக்கே, கஸ்டமர் கிட்ட ஒரு வார்த்த கூட என்ன ஏதுன்னு கேக்கமாட்டீங்களா? பிரச்சனை தீக்கறதுக்கான வழியே யாரும் பேசாம, காசு ஒண்ணே குறியா இருக்கீங்களே, இதுதான் உங்க கம்பனி லட்சணமா? ”

“இல்ல சார், நான் என்னன்னு பாக்கறேன், பெனால்டி எதுவும் வராது”

 நான் வெறுத்து போய் எழுந்து வந்துவிட்டேன். அடையார் நுகர்வோர் குழுவிலிருந்து எனக்கு போன் வந்தது, முதலில் அவர்களுக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் அனுப்ப சொன்னார்கள், கொஞ்சம் அவகாசம் கொடுத்து பதில் கேட்க்கலாம் என்று, ஆயிற்று திரும்பவும் “சார் டியூ கட்டலயே” என்ற போன் கால் வந்த போது, மொத்த ஸ்பெஷல் மசாலா தோசை மாஸ்டர் எண்களையும் கொடுத்து அவர்களிடமே கேளுங்கள் என்று வைத்துவிட்டேன். 2 மாதங்களாகியும் பதில் வராததால் நஷ்ட ஈடு கேட்டு ஏன் உங்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது என்று இப்போது நுகர்வோர் சங்கத்திடமிருந்தே ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். ம்ஹூம். அதிசயமாக இந்த மாதம் ஒரு தவணை மட்டும் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற விஷயங்கள் கிணற்றில் போட்ட கல்தான்.

ஒழுங்காய் பணம் செலுத்திய எனக்கு நேர்ந்த கதி இதுதான், நானும் விடுவதாயில்லை, நுகர்வோர் நீதிமன்றம் எனக்கு என்ன நீதி வழங்கபோகிறது என்று பார்க்கபோகிறேன். இப்படி ஒரு மொள்ளமாரித்தனம் செய்தும் ஒரு கவலையுமின்றி செயல்படும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரிந்துகொள்ள ஆசை. எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணாது போவதுதான் இவர்களின் பலமென்றால், எனக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

(உங்களின் கருத்து எனக்கு உதவுமென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.          

நிஜமாகவே இவ்வளவு பெரிய பதிவை பொறுமையுடன் படித்ததிற்கு நன்றி.  


குடியரசு தின வாழ்த்துக்கள்.

எஸ் எம் எஸ்... (SMS) FLASH NEWS..
வலையில் மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த தளம் பார்க்கக் கிடைத்தது. 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை, திருக்குறள் முதல், ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள் என பல வகையான புத்தகங்களை தரவிறக்கம் செய்து மொபைலில் படித்துக்கொள்ளும் வகையில் வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். நீங்கள் எழுத்தாளராக இருந்தாலும் இங்கே வாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவிப்பும் இருக்கிறது. ஒரு விசிட் அடிக்கவும்.

http://www.fublish.com/beta/browse/

---------------------------------------------------------


இப்போது மூன்று பாகங்களில் வெளிவந்து வெற்றி நடை (!!) போட்டுக்கொண்டிருக்கும் ‘எங்கே போகும்’ தொடர்கதை மொத்தமாய் படிக்கவென்றே ஒரு பக்கம் ‘பதிவர் களஞ்சியம்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளேன். தொடர விரும்புவர்கள், மொத்தமாய் படிக்க விரும்புவர்கள் அங்கே சென்று படிக்கலாம். பின்னூட்டங்கள், ஓட்டுகள் அவரவர் தளங்களில் தவறாது போட்டுவிடுங்கள். இது ஒரு வசதிக்காக மட்டுமே. அனைவரும் உறுப்பினரானால் சந்திப்புகள் மற்றும் தகவல் பலகையாகவும், நமக்கு நாமே திட்டம் போல பயன் படுத்த ஆவல். :)) அனைத்து நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகளும், அதில் குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் தகவல் மொத்தமாய் அனுப்ப ஏதுவாய் இருக்கும்.


தளம்,             http://padhivarkalanjiyam.blogspot.com/

மின் அஞ்சல் sandhippu@gmail.com

மிக்க நன்றி.

எங்கே செல்லும்...பாகம்-2
எங்கே செல்லும்....எங்கே செல்லும்....
முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.
இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..
முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார். 
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் 
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.(பாகம் - 2)


”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

 2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

நான் திரும்பவும் நிஜமா என்று ஆரம்பித்தேன்...
”ஏய் இப்பதானே சொன்னேன், திரும்பவும் அதயே கேக்காதப்பா.”  மெதுவாய் இடது கையால் என் தலை கோதி இன்னும் நெருக்கம் காட்டினாள்.

எனக்கு பேரவஸ்த்தையாய் இருந்தது. நிறைய பூக்கள் மலர்ந்த மரத்தின் அடியில் திடீரென நம் மீது பூக்கள் மழையாய் பொழியும்போது ஏதோ ஒரு சந்தோஷம் உணர்வோமே, அட அதை விடுங்கள் பூக்களில்லாத மழையில் நனைந்திருந்த ஒரு மரத்தினடியில் காற்றின் வேகத்திற்கு மரம் சிலிர்த்து நீர்த்துளிகளால் சட்டென்று ஒரு  குளுமையுடன் சிலிர்ப்பு தருமே கிட்டத்தட்ட சாதாரணத்திற்கும், பைத்தியத்திற்கும் இடையிலான ஒரு நிலை.

தம்பிடிக்காசுக்கு பிரயோஜனமில்லாத வறிய இளமைக்காலம் என்னுடையது. என்ன எதிர்பார்த்து இந்த பேரழகி என்னிடம் இழைகிறாள்? ஐயோ யாராவது இப்ப போய் இதை நினைப்பார்களா? நிஜமாவே நீ லூசுதாண்டா மனசு அவளை பாரேன், பார்ரா என்று மைக் வைத்து உள்ளே அலறிக்கொண்டிருந்தது.

”என்ன யோசிக்கற நான் நல்லவளான்னுதானே? பொண்ணுங்களா வந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லக்கூடாதா, ம்..?”

அந்த மாநகராட்சி பூங்காவில் நிறைய பேர் எங்களை பார்த்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அணிந்திருந்த சட்டையின் முதலிரண்டு பித்தான்களை அழுத்திக்கொண்டு இன்னும் எனது வலது கை விரல்களை தாமரை மொட்டாகவே வைத்திருந்தாள்.

”ஏய் என்னாச்சு, யாரையும் பார்க்காத, த பார் நானே கவலபடல, நீ ஏன் பொண்ணுங்க மாதிரி சுத்தி சுத்தி பார்த்துகிட்டிருக்கற.”

 வரிசையான, கறைகளில்லாத வெண்மை நிற பற்கள் தெரிய ஸ்வா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் நான் மெதுவாய் என் கைகளை அவளிடமிருந்து விடுவித்துகொண்டேன். கையில் கர்ச்சீப் இல்லை வியர்த்த முகத்தை கைகளால் துடைத்த போது அவளின் வாசம் என் உள்ளங்கைகளின் மூலம் என் முகத்தில் பரவியது.

”என்ன பவ்டர் யூஸ் பண்ற ஸ்வா?”
“ நத்திங் ஸ்பெஷல் இங்க கிடைக்கிறதுதான்.” அவள் பெயர் சொன்னாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நானும் யூஸ் பண்னி இருக்கிறேன் ஆனால் இந்த வாசம்.

எனக்கு எல்லாமே புதுசாக இருந்தது, அவளுக்கு எதிலும் பயமில்லை, என் பயங்களை அந்த உள்ளுதட்டு மோன சிரிப்பில் ஊடே குருகுருப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சேர்ந்தார்போல நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது எனக்கு, அவளோ தடி தடியாய் ஆங்கில கதை புத்தகங்கள் படிப்பவள்.

”சரி இப்ப என்ன எனக்கு உன்ன நிஜமா பிடிச்சிருக்கான்னு தெரியனும் அவ்ளதானே?” இப்பொழுது நான் சிரித்தேன், ஆமாம் என்று தலை ஆட்டினேன்.

”சிம்பிள்டா அடிக்கடி உன்ன பஸ் ஸ்டாப்ல பார்த்திருக்கேன், உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸூப்பரா டாவடிக்க நீ மட்டும் தலை கூட நிமிர்த்தாம அமைதியா நின்னுகிட்டிருப்ப.”

” அப்ப நீயும் பஸ்ல டைய்லி என்ன பார்ப்பியா?”

“ ம்ஹும்.. சில சமயம்தான், எங்க அப்பாகூட மோஸ்ட்லி கார்ல போய்டுவேன், ஆனா அப்பவும் உன்ன பார்த்திருக்கேன்.”

“ அது மட்டும்தானா? ”

“ஹேய்..இது என்ன காதல் பிஹெச்டியா? ஹாங்..”மீண்டும் சிரிப்பு.

 ” அது மட்டும்னு இல்ல நான் போல்டான பொண்ணுதான், என் வீட்டு பாக் ஸைட்ல என்ன டாவடிக்கிற பக்கத்து வீட்டு பையன கலாட்டா பன்றதுக்காக, பொறுமையா ஒரு தம் அடிச்சிருக்கேன். என்ன பஸ்ல இடிச்சவன்கிட்ட இன்னும் பக்கத்துல வந்து இடிங்க உங்க அம்மாவ இடிக்கறமாதிரியே இருக்கும்னு சொல்லிருக்கேன்.”

நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். திரும்பவும் சிரித்தாள், இந்தமுறை மொத்த பார்க்கும் எங்களை பார்த்ததுபோலவே இருந்தது எனக்கு.

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

 என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

 எனக்கு உள்ளே குத்தியது. அப்போதுதான் கவனித்தேன் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வருவதை. ஸ்வா என் கையை பிடித்து ”உட்கார் எழுந்திருக்காத” என்றாள்,

”டேய் நீ இங்க இருக்கியா?”

ஒரு கான்ஸ்டபிள் கொத்தாய் என் சட்டையை பிடித்து பளார் என்று அடித்தார், கீழே விழும்போதே தலை சுற்றியது, சுதாரிப்பதற்குள் நங் கென்று எதோ தலையில் பட்டது..ப்ளாக் அவுட் டோட்டல் நிசப்த்தம்

“சொல்லு ஏன் ஸூப்பர் மார்கெட்ல குழந்தைய தூக்கிட்டு போன?”

மெல்ல சுற்று முற்றும் பார்த்தேன், எப்போது இங்கே வந்தேன், இவர் என்ன கேட்கிறார்? உடலெல்லாம் வலித்தது, இன்ஸ்பெக்டர் டேபிளில் இந்தியா அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது தினசரியில் பெரிய போட்டோவுடன் படபடத்துக்கொண்டிருந்தது இந்த படம் எங்கயோ பார்த்தோமே..

”டேய் உன்னதான் கேக்கறேன்.. ”

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்
தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்
றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்
இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

பெரும் குரலெடுத்து யார் பாடுவது? அட எப்போது மேசையில் ஏறினேன், எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்,, நானா..னா நானா பாடுகிறேன்...அப்படியே எகிறி குதித்து வாசலை நோக்கி ஓடினேன்..

”ய்யேய் அவன பிடிங்கப்பா...”

யாரோ துரத்திக்கொண்டு வரும் சத்தம் கேட்டது, என்னை தாண்டி சென்ற காரில் ஒரு ஆள் என்னை பார்த்து ”அவந்தான் வண்டிய திருப்பு பிடி..”

 நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தேன். வெளிச்சம் கண்ணை கூசியது . ஆமா நான் ஏன் ஓடிக்கிட்டிருக்கேன், எங்க போயிடிருக்கேன்.. திடீரென்று வளைவில் திரும்பிய பஸ்சில் ரன்னிங்கில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தேன்...

”ஹலோ.”.பஸ்ஸில் யாரோ கூப்பிட்டார்கள்.
      

(தொடரும்)


அடுத்தது யாருங்க.. பதிவு போட்டுட்டு லின்க் முகிலனுக்கு அனுப்பிடுங்க அப்படியே எனக்கும். ( தினத்தந்திலதான் கன்னி தீவு வரனும்னு சட்டம் இல்லீங்களே:) ) சின்ன சின்ன கவிதைகள் ..தேவதைகள் வெள்ளை இறக்கைகளுடன் வருமென்று
ஏதோ ஒரு நாரை கூட்டத்தை பார்த்து
எவனோ சொல்லியதாய்

பேரூந்துக்காக காத்திருந்தமாலை நேரத்தில்
எங்கிருந்தோ வந்த நங்கைகள் கூட்டம்

பொய்யென்று நிரூபித்து
ஏறெடுத்தும் பார்க்காத சாபம்தந்து
என்னை முட்டாளாக்கியது.

அதில்லாமல்
வெளியில் செல்ல முடியவில்லை
எப்போதும் அணிந்திருப்பதில் கவனமாயிருக்கிறேன்
கோவிலிலும், அடிக்கடி பார்த்துக்கொள்கிறேன்
வீட்டிற்குள் மட்டும் அனுமதியில்லை
வீட்டின் தரையே அதுதானா இல்லை
தரையைத்தான் அதுவாய் அணிந்துகொண்டு செல்கிறேனா??
கண்கள் மட்டும் சுதந்திரமாய்
சலசலக்கும் நீரோடையை
அனுபவித்துக்கொண்டிருந்தது


நீ மட்டும் குளிரும் என்று
கூப்பாடு போடாமலிருந்திருந்தால்
நானாவது குளித்திருப்பேன் என்றது
கோவித்த என் பாதங்கள்..
கத கதப்பை அனுபவித்துக்கொண்டிருந்தன
இரு உள்ளங்கைகளும்..


----------------------

சாலையோரம் தொடர்பதிவு படித்து, பின்னூட்டமிட்டு, தொடர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள் . :) 

.

சாலையோரம் - தொடர் இடுகை
ஸ்பென்சர் தாண்டி இடதுபுறம் திரும்பி பொறுமையாய் வந்துகொண்டிருந்தபோது எத்திராஜ் கல்லூரிக்கு முன்னால் சிக்னல் சிவப்பிலிருந்து அப்போதுதான் பச்சைக்கு மாறி கூவம் ஆற்றின் பாலத்தினை கடந்து எத்திராஜ் கல்லூரி நெருங்கும்போது, கல்லூரி வாயில் தாண்டி கூட்டமாய் இருந்தது. என்னவென்று நானும் எட்டிப்பார்க்க ஒரு இளம் பெண், மஞ்சள் நிற சுடிதார் போட்டு, மல்லாந்து கிடந்தார் அருகில் ஸ்கூட்டி (இங்கயுமா?!) ”ஆட்டோகாரன் இடுச்சிட்டு போய்ட்டாம்ப்பா, த இப்பதான் சிக்னல் வுட்டு பொறுமையாதான் வந்துனு இரிந்திச்சி இந்தம்மா”, நான் பார்க்கும்போதே சுட சுட ரத்தம் பின் மண்டை வழியே சாலையில் பரவியது, அழகான இளம் பெண், சுற்றிலும் ஆண்கள், தொட்டு தூக்க தயக்கம்.

பார்த்தேன் நீல நிற புடைவயில் கையில் ஃப்ளாஸ்க்குடன் ஒரு அம்மா நின்றிருந்தார், அருகிலிருக்கும் ஐ ஓ பி வங்கியில் கடை நிலை ஊழியர், ”அம்மா நீங்க ஒரு கை பிடிங்க ஆஸ்பிடல் கொண்டு போயிடலாம்”,

ப்போது அந்த பெண்ணிற்கு வலிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது. கையில் சாவி கொத்து தரவேண்டுமா?, உடைகளை தளர்த்த வேண்டுமா? கைப்பை திறக்கலாமா?, குடிக்க தண்ணீர் தரலாமா? இவர் வண்டி யார் பார்த்துக்கொள்வார்கள்? தாமதிக்க முடியாது, ”அம்மா நீங்கதான் லேடிஸ் கொஞ்சம் ஹெல்ப் பன்ணுங்க, பக்கத்துலதான் அப்பல்லோ, ஃபிட்ஸ் வந்திடிச்சி, மண்டை உடஞ்சி ரத்தம் வருது தாமதிக்கிறது ஆபத்து”, உடனே அந்த அம்மா, அந்த பெண்ணின் தோள் பிடித்து, நாங்களும் ஒரு உதவி செய்ய, ஒரு ஆட்டோவில் ஏற்றி அப்பல்லோ கொண்டு போய், அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம், உதவி செய்த அந்த அம்மா தன் புடைவையெல்லாம் ரத்ததுடன், பரவாயில்லைங்க என்றபடி அதே ஆட்டோவில் சென்றுவிட்டார். கைப்பையில் பன்னாட்டு வங்கியின் ஐடி கார்டில் அவரின் பெயர், மற்றும் படம், வங்கி பெயர் மட்டும் இருந்தது, பையில் தேடி அவரின் கணவரை தொடர்பு கொண்டு விவரம் சொல்லி வரச்செய்தோம்.

ருவருக்குமே 23 வயதுக்கு மேல் இல்லை, கணவர் சாஃப்ட்வேர்,மனைவி வங்கி, ஒரு ஹெல்மெட் போட்டிருந்தால் ‘ நாயிண்ட மோனே ’ என்று தாய் மொழியில் திட்டி, தூசி தட்டி வீடு போய் சேர்ந்திருக்க வேண்டிய பெண்,  மண்டை உடைந்ததற்கு, அறுவை சிகிச்சை செய்து அழகான தலை முடி மழித்து, பல மாதங்கள் அவஸ்தை அனுபவித்தார்.

டித்த மிருகம் காணாமல் போய்விட்டது. இந்த பெண் ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு பாதுகாப்பு தலைகவசம் அணியவில்லை அவ்வளவுதான்.

தே ஒரு இரவு நேரமாகவோ, மழை காலமாகவோ, தனிமையான சாலையாகவோ இருப்பின்...??

----------------------

ப்பிரிக்க ஊடூ வில் வருவதுபோல சாலையில் ஒரு வட்டம் வரைந்து, நடுவில் ஒரு மனித கை கால்கள் வரைந்து வைத்திருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏதோ ஒரு குடும்பத்தின் தலைவிரி அழுகை காட்சி நினைவிற்கு வரும்.

“ இன்னிக்கு உனக்கு பிடிச்ச சாப்பாடு சீக்கிரம் வந்துடுப்பா, ”

“ரெடியா இரு சினிமாக்கு போய்ட்டு ஹோட்டலில் சாப்ட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம்,”

“ அப்பா ஒரு வருஷம்தான் காம்பஸ்ல செலக்ட் ஆயிட்டேன், நீ இதுவரை கஷ்ட்டப்பட்டது போதும்,”

“ என்னங்க சொந்த வீடு வாங்கிடலாங்க, லோன் ஓகே ஆயிடும், ஆபீஸ்ல சொல்லிருக்காங்க”

“குட்டி அப்பா சாயந்திரம் கண்டிப்பா ஐஸ் கிரீம் வாங்கிட்டுவரேன்”


த்தனை எத்தனையோ வாக்குறுதிகள் கடைசியாய் போகுமென்று யாருக்கு தெரியும்?, காதல், பாசம், நம்பிக்கைகள் அந்த வட்டத்துக்குள்ளேயே, சூழ்ய சூன்யமாய், அந்த மஞ்சள் வட்டத்தின் மேலே வண்டி ஓட்டுவது கூட எனக்கு பயமாய் இருக்கும். யாருடைய சொந்தமோ, யாருடைய நினைவிடமோ?

......

ஸ்டாலின் என் பள்ளி தோழன், என் உயிர் நண்பன், என் முதல் காதலுக்காய் என்னுடன் நெற்குன்றம் திரைஅரங்கில், அரங்கேற்றம் படம் பார்க்க வந்தவன், பள்ளியில் ஒன்றாய் திருக்குறள் சொல்லி இருக்கிறோம். அவன் அப்பா ஒரு சிறந்த ஓவியர், அண்ணனும், அழகான குடும்பம். பள்ளி முடித்து ஆளுக்கொரு திசையில் பிரிந்தோம்,

ன்றைக்கு தென்னக ரயில்வேயில் வேலை செய்துகொண்டிருக்க வேண்டியவன், கோயம்பேடு ரவுண்டானாவில் லாரியில் அடிபட்டு சொல்லாமல் கொள்ளாமல் காற்றில் கரைந்தான். ஒரு நல்ல நட்பு இழந்தேன், முதல் காதலும், முதல் நட்பும் ஒரு சேர இழந்த என் வாழ்க்கை தராசில் நடு முள் மட்டும் குத்திக்கொண்டே இருக்கிறது. :( அந்த இடங்களை சாதா’ரண’மாக என்னால் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.

.........

சாலை பயணங்களில் பல விபத்துகளை பார்த்தாயிற்று, வண்டியில் விழுந்த விழுப்புண்கள் அங்க அடையாளத்துக்காய் ஏராளமாக இருக்கிறது. அதில் என் தவறுக்கானவை மிக குறைவு. சொல்லிக்கொண்டே போவதில் மனது வலிக்கும்.

துவும் நிச்சயமில்லை ஓடும் ரயிலில், கழிவரையில் பிரசவித்து அதிலுள்ள ஓட்டை வழியே கீழே விழுந்த குழந்தை சிறு கீறலும் இல்லாமல் சிரித்து பிழைத்திருக்கிறது. மல்லாக்க விழுந்ததில் வெறும் பின் மண்டை திறந்து சிரித்தபடியே இறந்துபோய் ”அய்யோ அவன எழுப்புங்க தூங்கரான் சாவல” என்று மாரில் அடித்த தாயையும் பார்த்தாயிற்று.

விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.

திரே போகும் வண்டி திடீரென நிற்காது என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே நாம் வண்டி ஓட்டுவதின் சாமர்த்தியம் அன்றி வேறெதுவும் இல்லை. நமக்கு பின்னாடியும் அதே நம்பிக்கையில் பலர் வருகின்றனர். வாழ்க்கை சக்கரமும் அதே நம்பிக்கையில்தான் சுழன்றுகொண்டே இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. சந்தர்ப்ப சூழ் நிலையால் நிகழ்பவைகளை மட்டுமே விபத்து என்று சொல்லலாம். மற்றவைகள் மிக கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவை.

பகிர அழைத்த சகோதரி வித்யா அவர்களுக்கு நன்றி. நிரம்ப பாரங்களை என் பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன். இதுவும் அதில் ஒன்று.


வித்யா அவர்களின் பதிவு::

சாலையோரம் - தொடர் இடுகை

எனக்கும் யாரையாவது அழைக்க விருப்பம்தான்... படித்து பின்னூட்டமிடும் நண்பர்களோ, படித்துவிட்டு மட்டும் போகும் நண்பர்களோ, தயவு செய்து இது பற்றி பதிவிடுங்கள், நாமோ நமை சார்ந்தவர்களோ தினம் தினம் சந்திப்பதுதான் இது, யாருடைய பதிவையாவது படித்து தவறு செய்யும் ஒருவர் திருந்தினாலும் மகிழ்ச்சியே.
.

ஒரு கவிதை, சில படங்கள்..தினமும் நடக்கும்
சாலையிலென் காலை
நடையில் ஒரு நாள்

ஒரு இழவு விழுந்த
சோகத்திலிருந்த
கூவத்தின் ஓரத்தில் தகரத்தாலான
வசிப்பிடத்தில்

எப்போதும் போலவே
கடந்து சென்றிருப்பேன்

என்ன வுட்டிட்டு பூட்டியே ராஜா
ஆப்பரேஷன் பண்ணின என்
வயிறு பத்திகினு எரியிதே

என்ற ஓலத்தில்

ஒரே பிள்ளை
சுமந்த கருப்பை இழந்த தாயின்
சோகம் என் மனதை அவளோடு
மாரடிக்கவைத்துவிட்டது...

ஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2

ஸ்வாமி ஓம்கார் சென்னை விஜயத்தை அவரது வலைபக்கத்தில் அறிவித்து, விருப்பமிருந்தால் கழக கண்மணிகள் மெரினா கடற்கரையில், மஹாத்மா சிலைக்கு பின் புறம் மாலை வந்து சந்திக்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.

ஸ்வாமி ஓம்காரின் எல்லா பதிவுகளையும் நான் படித்ததில்லை படித்த சில பதிவுகளும், அதற்கான பின்னூட்டங்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் அவரை ஒரு சக பதிவராகவே என் மனது என்ணிக்கொண்டது. பொதுவாகவே எனக்கு கூட்டிய கூட்டங்கள் அலர்ஜி ஆன்மீகமோ, அரசியலோ! மேலும் End User Satisfaction is Important. என்பதில் எனக்கு மிக ஆழ்ந்த நம்பிக்கை உண்டு, சாமானிய மக்களுக்காக, அவர்களால் எளிதில் அனுக முடியாத எதுவும் எனக்கு அக்கறையே இல்லை (எந்த சப்ஜெக்டாக இருந்தாலும்).

இவர் பக்கங்கள் பார்க்க நேர்ந்தபோது இவர் தனக்கென எந்த ஒளிவட்டமும் வைத்துக்கொள்ளாது தான் கற்றதை, உணர்ந்ததை வெளியிடுகிறார், பதிவு செய்கிறார், அதையே நீங்களும் உணருங்கள் என்று கட்டாயப்படுத்தவதில்லை,

வாழ்க்கை எனும் பாதைகள் ஒளிந்த காட்டில் உள் நுழையும் போது தன்னால் முடிந்த வரை சுற்றிபார்த்து வந்த இந்த மனிதர், கானகத்தின் வாயிலில் நின்று கொண்டு உள்ளே தேனும் இருக்கிறது, விஷமும் இருக்கிறது பார்த்து ஜாக்கிரதையாக போங்கள், நான் குடித்த தேன் இனிப்பு உங்களுக்கும் அது கிடைக்கும் தேடுங்கள், குடித்து இனிப்பு அனுபவியுங்கள், இரண்டு பேரின் இனிப்பின் சுவையை நமக்கு தெரிந்த மொழிகளில் பேசலாம் என்றுதான் கூறுகிறார். நாம் போன பாதை எது என்று ஆர்வத்துடன் கேட்கிறார்,

“அத நான் எங்கங்க பார்தேன், நீங்க சொன்ன ரூட்லயே போய்ட்டு வந்துட்டேன் ஸூப்பரா இருந்திச்சு நீங்க சொன்னாமாதிரியே..” என்பதை இவர் ரசிக்க காணோம்.

 கிட்டத்தட்ட ஆயிரத்தில் ஒருவன் பட விமர்சனம் மாதிரிதான் ஒரே படம் ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு கருத்து, பிடிச்சிதா பிடிக்கலையா முக்கியமில்லை, படம் பார்த்தீங்களா? அது கேள்வி? என் விமர்சனம்தான் பெஸ்ட் அதயே நீயும் சொல்லு என்று சொன்னால் கோவம் வருகிறதல்லவா?? படமே பார்கலயா ரொம்ப சந்தோஷம். முடிந்தது விஷயம்.

எதையோ தேடி படத்துக்கு போகிறோம் அது கிடைப்பின் ஆஹா ஓஹோ இல்லையா பூட்டகேஸு ன்னு விமர்சனம் பண்ணிட்டு அடுத்த படம், படமே பார்க்கலயா - ”என்னது ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆயிடிச்சா?” அப்படின்னு போய்ட்டே இருக்கிறோம்.

சரி அது என்ன ”சத் சங்கம்”, சென்னையில் பதிவர் சந்திப்புன்னா, செயர்குழு பொதுகுழு கூடி முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டு, அதிகார்வபூர்வமா அறிவிக்கனும், ஸோ இது கிட்டத்தட்ட அதுபோல ஆனா இல்ல:) அதனாலதான் அந்த பேரு. ( அதாவது ரவுண்டுகட்டி ரவுண்டு இல்லாம பேசறது:) )

ப்ளாக்கர்ஸ்/பதிவர்கள் முக்கியமான நோக்கம் என்ன? எதற்காக பதிவு எழுதறீங்க? என்னவிதமான கவனிப்புகள் சமூகத்தில் கிடைக்கிறது? என்பது போல சில விஷயங்கள் கேட்டார், எனக்கு தெரிந்த இரண்டு விஷயம் எங்கோ வெளிநாடுகளில் குடும்பம், சொந்தபந்தங்களை விட்டு, சொந்த மொழி பேச முடியாது தவிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வடிகால், நிறைய நட்புகள் கிடைத்துள்ளன (போட்ட சட்ட பேண்ட்டோட தேசாந்திரியா சுத்தலாம்-ஒரு வேளை சாப்பாடு, தங்க இடம் நிச்சயம்:), ஏதேனும் உதவியா தைரியமாய் தூனிலும் துரும்பிலும் ஒரு பதிவர் இருப்பார் - அப்படித்தானே நண்பர்களே??:-) ) மேலும் என் குழந்தைகளுக்கு என் முகத்தை (அது வேற வாய்..இது..) காட்டவும் இது பயன்படும் என்று நான் ஒரு பிட்டை போட்டேன்.

திரு. அப்துல்லா மொத்த பதிவர்களின் சார்பாக பதிவர்களை பற்றி லைட்டாக/டைட்டாக (எல்லோரும் அமோதித்த) ஒரு கருத்து சொன்னார்.:))


கேபிள் ஜி தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் மற்றும் ஹோட்டல்கள் பற்றி குறி சொன்னது (அது பலித்து பலர் தன் தாயின் நினைவாக போனில் அழுதது) போன்றவைகளை பகிர்ந்துகொண்டார்.

எறும்பு ராஜகோபால் ஸ்வாமியை பார்த்த உடனேயே உள் சக்கரங்கள் சுழல ஆரம்பித்து மோன நிலையை எட்டி விட்டதால் அவர் பேசிய தேவ பாஷை எனக்கு புரியவில்லை அவரே அவர் பக்கத்தில் அதை விவரிப்பார்.:)

பால சாமி ஜெட்லி சங்கர் (என்னோட சேர்த்து மொத்தம் மூணு சங்கர்) அமைதியாக ஜோதியில் ஐக்கியமாகி வழக்கம்போல மொபைலில் படமெடுத்துதள்ளிக்கொண்டிருந்தார்.

துளசி தளம் - துளசிகோபால் மேடம் ஆர்வத்துடன் வந்திருந்து, கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார் கூடவே காமெராவில் படங்களும். அவரின் ஆர்வமும் வேகமும்.. மேடம் உங்களுக்கு ஒரு சலாம்.::))

திரு.முனுசாமி என்ற வாசகரும் (சென்னை துரைமுகத்தில் பணிபுரிபவர் - இரண்டு பெண்குழந்தைகளுக்கு திருமணம், பேர பிள்ளைகள் எடுத்து ஒரு தேடலில் ஸ்வாமியை பார்க்க வந்திருந்தார். அருகில் அமர்ந்துகொண்டு நிறைய கேள்விகள் கேட்டும், கவனித்தும்.

மேலும் இரண்டு வாசகர்கள் திரு.உமாசங்கர், திரு. ரங்கன்- கேள்விகள், அனுபவங்கள், கவனிப்பு.

முதலில் மஹாத்மா சிலை பின்புறமுள்ள படிக்கட்டில் ஆரம்பித்தோம், சாதா ஆத்மாக்கள் உட்காரக்கூடாது என்று ஒரு செக்யூரிட்டி சொன்னதால், குடியரசு தினத்துக்காக அருகிலிருந்த புல் வெளியில் பலகைகள் போட்டு ஆணி அடித்துகொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டே நடந்தபோது, வேறு ஒரு செக்யூரிட்டி புல்லுல நடக்கக்கூடாது தெரியுமா? ன்னு, முறைச்சார், நான் அங்கே புல்லில் பலகை தட்டியவர்களை காண்பித்து நாங்களும் பொட்டி தட்டரவங்கதான் என்றதும் பேசாமல் போய்விட்டார். (கையில் தடி இருந்தது தண்டல்கார் போல).

இதெல்லாம் வேலைக்காவாது என்று முடிவெடுத்து கடைசியாக கடற்கரை மணலில் ரவுண்டு கட்டி மீட்டிங் ஆரம்பித்து 2 மணி நேரம் இனிதே கழிந்தது. மற்ற விஷயங்கள் சக பதிவர்கள் இடுகைகளில் காண்க.

தினம் தினம் திருமந்திரம் என்று ஸ்வாமி ஓம்காரின் புத்தகம் வாங்கி வந்தேன். எளிய யாராலும் அணுகக்கூடிய தான் கற்ற வித்தையில் தெளிவு கொண்ட ஒரு நல்ல மனிதர்/நண்பராகவே நான் ஸ்வாமி ஓம்கார் அவர்களை கண்டேன். நீங்களும் அவர் தளத்தில் சுற்றலாம் கேள்விகள் கேட்க்கலாம், இனம் மதம் என்ற வட்டங்கள் இல்லை.

சத்தியமா சக பதிவர்தாங்க. :))

ஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..

ஸ்வாமி ஓம்கார் சென்னை வந்திருந்தார் நேற்று மாலை ஒரு பதிவர்கள் சத்சங்கம் நடந்தது நானும் பிரபல பதிவர்களும் கடற்கரை மணலில் உட்கார்ந்து சுமார் 2 மணி நேரம் ஸ்வாமி ஓம்காருடன் அளவளாவிக்கொண்டிருந்தோம். 3 பதிவுலக வாசகர்கள் (!?) வந்திருந்தது மிகவும் ஆச்சரியத்தை குடுத்தது. மேலதிக விவரங்கள் எறும்பு ராஜகோபால், கேபிள் சங்கர், ஜெட்லிசங்கர் வெளியிடுவார்கள். (பட்ங்கள் போட்டிருக்கலாமே, வேஸ்ட் நீங்க என்று என்னை கடிந்து கொண்ட நண்பர்களுக்காக வெறும் பட்ங்கள் மட்டும்..:))பகுதி - இரண்டு..

Eagle's Wing (1979-2010) - திரை விமர்சனம்
Eagle's Wing (1979)

1980 களில் வெளிவந்து திரையிட்ட பல தியேட்டர்களில் இண்டீரியர் டெகரேஷன் எல்லாம் செய்தார்கள், இத்தனைக்கும் அப்போது டிக்கெட் அதிகமில்லை ஜெண்டில்மேன் வெறும் டூ ருப்பீஸ் ஒன்லி. திருட்டு விசிடி ப்ரச்சனை வேறு ரூபத்தில் இருந்தது. திரை போட்டு வாங்கசார் என்று சொல்லி, டெக் போட்டு ஜாக்கி சான் படம், ஷாலின் டெம்பிள் படம் எல்லாம் காட்டுவார்கள். தியேட்டரில் அல்ல சின்ன சின்ன கடைகளில்.

வேலூரில் VKR (aka) தினகரன் என்ற ஒரு தியேட்டர் இருக்கும், வெறும் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். இலவசமாய் மூட்டை பூச்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகலாம்.

5மென் ஆர்மி முதல் ஜேம்ஸ்பாண்டு படங்கள், ஜங்கிள்புக் என்று எல்லா படங்களும் 7ஆவது படிப்பதற்குள் பார்த்து மகிழ்ந்தது அங்கேதான்.

ஈகில்ஸ் விங் அப்படித்தான் உற்சாகத்தோடு பார்க்கப்போய், ஹாலி பாலி லெவலுக்கு இருந்ததால் அனேகமாக எல்லா சீட்களும் உடைக்கப்பட்டு, புதிதாய் உள்கட்டமைப்பு வேலைகள் செய்யப்பட்டது.

அப்படி உடைக்கற அளவுக்கு என்ன என்று கேட்க்காதீர்கள்:( ஒரு குதிரை, தொப்பி போட்ட ஒரு ஹீரோ, நடக்கறாங்க, நடக்கறாங்க படம் முழுதும்...ங்கொய்யால யாரடா ஏமாத்தறீங்கன்னு மக்கள் ஒரு பேயாட்டம் ஆடினது, நினைவில் இருக்கு. கொடுத்த காசுக்கு பரபரப்பாய் தியேட்டர் உடைத்ததை பார்த்து வீடு வந்து சேர்ந்தோம்.

அதற்கு பிறகு நிறைய படங்கள் பார்த்தாலும் இலவசமாய் கிடைக்காது போன மூட்டைபூச்சிகளால் மனசும், உடலில் வேறு சில இடங்களும் எதையோ இழந்ததுபோல இருந்ததென்னமோ உண்மை.

மேலதிக விவரங்கள் மற்றும் பட லின்க்..யார் ஹீரோ (ரொம்ப முக்கியம்) ஹாலிபாலி யை தொடர்புகொள்ளவும். முடிந்தால் நடித்த குதிரையின் தற்போதைய இருப்பிடமும் அறிவிப்பார்.


டிஸ்கி::1

எனக்கு தெரிந்து இந்த படத்துக்கு யாரும் தமிழில் விமரிசனம் எழுதி இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்... நானும் ஒரு பட விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்று - எறும்பு ராஜகோபால் திரை விமர்சனம் பார்த்து வந்த கொல வெறியில் எழுதப்பட்டது இது.

டிஸ்கி::2

ஜனாதிபதி ஆக்கிய என்னை பிரதமர் ஆக்காமல் கவர்னர் முதல்வர் ரேஞ்சுக்கு மட்டம் தட்டியதுமல்லாமல், என் ஏரியா உள்ள வராதே என்று மிரட்டிய ஹாலிபாலிக்கு சமர்ப்பணம்.::))

சின்ன சின்ன கவிதைகள் ..ட்டிடத்தின் மாடிகளில்
குடும்பம் நடத்தினாலும்
சுவற்றின் விரிசல்களில்
விழுந்த
பறவைகளின் எச்சத்திலும்
வளர தயாராய்
விருட்சத்தின் விதைகள்..


ண் மூடிய
நித்திரைகளில்
முழிக்காமல்
போய் விடுவேனோ
என்ற பயத்தில்
கனவுகள் மட்டுமே எனை
காப்பாற்றுகின்றன...

ழியெங்கும்
ஒற்றை கொலுசுகளை 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
அட ஒரு தோடுகூட கிடைக்கவில்லை 
பணமில்லாதவனின்
வாழ்க்கையில் பசியும்
பிணியும் தேடாமலேயே
கிடைக்கிறது எப்போதும்... 
வெறும் பாத்திரங்களோடு
வயிறு நிரம்ப காத்திருக்கிறது
என் வீட்டு ஜீவன்கள்

.

பாலிசி...பாகம்-2.
பாலிசி - பாகம் ஒன்று (படிக்காதவர்களுக்கு)

நிறைய விஷயங்கள் போன பதிவில் சொல்ல முடியவில்லை, அதுவே மிகவும் பெரிய பதிவாக போய்விட்டது.:( சரி சில முக்கிய விஷயங்கள் இப்போது பார்க்கலாம்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். காப்பீடு என்பது வேறு, முதலீடு என்பது வேறு, என்ன சார் எப்படி கணக்கு போட்டாலும் 7% க்கு மேல ரிட்டர்ன்ஸ் இல்லயே என்பவர்களுக்கு இது சரிப்படாது. சிறிய அண்மைக்கால ஒப்பீடு பாருங்கள். 2008 ம் ஆண்டு வங்கி நிரந்தர வைப்புகளுக்கு அளித்த அதிகபட்ச வட்டி கிட்டத்தட்ட 11% க்கும் மேல் ஆனால் இப்போது? ஒரே வருடத்தில் 4 லிருந்து 5 சதவிகிதம் குறைத்துவிட்டார்கள். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக ஒரு வட்டிவிகிதத்தில் பணம் போட வங்கிகளில் இயலாது. ஏன் குறைந்தகாலம்? - நம்மை போலவே எதிர்காலத்தில் பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலை, ரிசர் வங்கி கட்டுப்பாடுகள் இன்னும் பல வங்கிகளுக்கு உள்ளது. ஆனால் இங்கு நிலை வேறு, இன்றைக்கே ஒரு தொகையை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து, அடுத்த மாதம் முதல் கடைசி காலம் வரை பென்சன் பெறும் திட்டங்கள் இருக்கின்றன. பென்சன் வாங்குபவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார்? தெரியாது ஆனாலும் பணம் கண்டிப்பாய் கிடைக்கும், தனக்குப்பின் அந்த பணம் மனைவிக்கு போக வேண்டுமா?, வேண்டாமா? ஒவ்வோரு வருடமும் 3% பென்சன் தொகை கூடிக்கொண்டே போகவேண்டுமா? போடும் தொகை ஒரே மாதிரி இருந்தாலும் எப்படி அது நம்மிடம் திரும்ப வரவேண்டும் என்பதில் நிறைய ஆப்ஷன்ஸ் உள்ளது.

சரி, என்னுடைய உபரியான பணம் எல்லாம் போட்டு நிறைய தொகைக்கு காப்பீடு செய்யலாமா? தேவை இல்லை. முதலில் குடும்பத்திற்கான பாதுகாப்புக்கு ஒரு தொகை நிர்ணயம் செய்யுங்கள். அந்த மதிப்புக்கு காப்பீடு எடுங்கள், முக்கியமாய் வெளியில் சுத்தும் உங்களுக்கு, பிறகு மனைவிக்கு. அவங்க ஹவுஸ் வொய்ஃப் தானே சார் எதுக்கு என்று நினைக்காதீர்கள் நிச்சயம் அவர்களுக்கும் தேவை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலிசிகள் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு எடுத்துவிடுங்கள். ஏன்? பெற்றோர் இல்லை என்றால் குழந்தைக்கு யாரைய்யா பிரீமியம் செலுத்துவார்கள்? அப்படியே குழந்தைக்கு எடுக்கும்போது PWB (Premium Waiver Benifit) என்பதை சேறுங்கள். ஒரு வேளை தந்தை தவறினால் ப்ரிமியம் செலுத்தும் பொறுப்பை இன்சுரன்ஸ் நிறுவனமே எடுத்துக்கொள்ளும், குழந்தை மேஜர் ஆன பின் பணம் கைக்கு
வந்து சேரும். எல்லா ப்ளான்களிலும் இது இல்லை எனினும் சொற்ப அளவிலேயே செலவாகும் இந்த வசதியை அது இருப்பின் பெற்றுக்கொள்வது மிக முக்கியம்.

அதே போல இன்சூரன்ஸ் செய்த அளவை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அளவிற்கு விபத்தால் இறப்பின் பணம் தரும் திட்டங்கள், அதிகம் வெளியில் சுற்றும் நபர்களுக்கு நல்லது. இப்போது மாத சீட்டு போல ஒரு திட்டம் வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஒரே அளவு பிரீமியம் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு சிறிது சிறிதாய் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏதோ சூழ்நிலை பணம் கட்ட முடியவில்லையா, கவலை வேண்டாம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணம் செலுத்தாவிட்டாலும் பாலிசி காலாவதி ஆகாது, இறந்தாலும் பணம் கிடைக்கும் (செலுத்த வேண்டிய பிரிமியத்தை கழித்துகொண்டு :)

நிறைய ஆராய்சிகள் நடத்துகிறார்கள் நன்பர்களே, போன காலங்களில் ஏன் நிறைய பாலிசிகள் செயலிழந்தன, திடீர் பணமுடை யாருக்கு வேண்டுமானாலும் வரும். போக சாமானியர்களுக்கும் பாலிசி தருகிறோம் அவர்கள் நிலை கொஞ்சம் கடினம். .அப்படியா சரி ஒரு இரண்டு
வருடங்கள் டைம் கொடுப்போம், பணம் கட்டாவிட்டாலும் காப்பீடு உறுதி செய்வோம். 50 க்கும் மேற்பட்ட திட்டங்கள், ஒவ்வொன்றும் ஒரு விதம், எல்லாமே 100 கோடி மக்களில் யாருக்கும் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டவை.

30 வயதில் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்கிறார், நல்லபடியாய் பணம் கட்டி வாழ்ந்து, போனஸுடன் முதிர்வு தொகையும் பெற்று விடுகிறார், சரி பிறகு? மீண்டும் ஒரு பாலிசி எடுக்க நிறைய பிரிமியம் கொடுக்க வேண்டும் 60 வயதோடு வாழ்க்கை முடிந்துவிடுமா என்ன? அப்படியா சரி, முதிர்வில் முழு தொகை தந்துவிடுங்கள் வேறு எந்த பிரிமியமும் அவர் கட்ட வேண்டாம், 100 வயதிற்குள் எப்போது இறந்தாலும் காப்பீடு செய்த தொகையை நாமினிக்கு தந்து விடுங்கள், இறக்கவில்லையா 100வது வயதில் அவர் பெயருக்கே காசோலை அனுப்பி விடுங்கள். இதுதான் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்பதின் அர்த்தம்.

எப்படி முடிகிறது? NOTHING IS FREE. உங்களிடம் வசூலிக்கும் பணத்திலேயே இது நிச்சயிக்கப்படுகிறது, உங்களை விட எதிர்காலம் பற்றி ஒரு குழு கவலை கொள்கிறது, இவனுங்க இப்படியெல்லாம் சொன்னா சரிபடமாட்டானுங்க, 60 வயசுக்கப்புறம் நீ போய்ட்டாகூட உன் குடும்பத்துக்கு உன்னால நன்மை கிடைக்க வேண்டாமான்னு கேட்டா தெனாவட்டா பதில் சொல்வான், ரெண்டு ஐஸ் கிரீம் கொடு, ஒண்ணு அவன திங்க சொல்லு, இன்னொண்னு அவன் புள்ளைங்க தின்னட்டும் என்பது ஒரு சின்ன விளம்பரம் மூலம் சுட்டி காட்டப்பட்டது.

எத்துனை பேர் காப்பீடு விண்ணப்பத்தை முழுவதும் படித்து பார்த்திருப்பீர்கள்? அது உங்களுக்கும், காப்பீடு நிறுவனத்திற்குமான ஒரு காண்ட்ராக்ட். ஒரு ஒப்பந்தம். சரியான தகவல்கள் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. தவறான தகவல்கள் சிக்கல் தரக்கூடும். மனித தவறுகள் எங்கேயும் நடக்கலாம் பிறரை குறை சொல்லி பயனில்லை.

மிக முக்கியம் நீங்கள் எடுத்த காப்பீடின் தகவல்களை உங்கள் குடும்பத்தில் அனைவரிடமும் சொல்லி வையுங்கள். ULIP போன்ற வகை என்றால் அதிலும் GROWTH ஆப்ஷன் செலக்ட் செய்திருந்தீர்கள் என்றால், உங்கள் முதலீடு பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தது

மூனு வருஷம் 10000 கட்டினா போதும் சார் அப்பால 30 லட்ச ரூவா கிடைக்கும் என்பதெல்லாம் சும்மா டகால்ட்டி, கிடைக்கும்.., குறைந்தது 15 அல்லது 20 வருடங்கள் நீங்கள் முதலீட்டை தொடர்ந்தால்!.

ஒன் ஆர் டூ இயர்ஸ்ல டபுள் ஆகுறமாதிரி எதுனா திட்டம் இருக்கா?? ஃபாஸ்ட் புட் கலாசாரத்தில் கேட்க்கப்படும் கேள்வி இது. நீங்கள் விதை விதைத்து மரம் வளர்த்து கனி கொடுக்க கொஞ்சம் காலம் ஆகும் உடனே நடக்க இது மந்திர வித்தை அல்ல. அப்படி யாராகிலும் தரேன் என்று சொன்னால் பனகல் பார்க்கில் இப்போதே ஒரு இடம் போட்டுவிடுங்கள். இன்சூரன்ஸ் என்பது வாழும் காலம் முழுமைக்குமானது, 10 வருடம், 15 வருடம், 50000, ஒரு லட்சம் என்று நானும் பாலிசி எடுத்தேன் என்று சொல்லாதீர்கள், உங்கள் உயிருக்கும், வாழ்வுக்கும் நிச்சயம் ஒரு விலை உண்டு. அது எவ்வளவு என்று தீர்மானியுங்கள்.

சொல்றது ஈசி. எப்படி சார் பணம் கட்டறது, யோசியுங்கள், உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது மனைவி வலியுடன் அலறுகிறார், குவா குவா ஒன்றுக்கு பதில் மூன்று குழந்தைகள், நீங்கள் எதிர்பார்த்ததோ ஒன்று, மீதமுள்ள இரண்டு முழந்தைகளை கொன்று விடலாமா?? முறைக்க வேண்டாம், பாலிசிகளும் குழந்தை போல நினைத்தால் நிச்சயம் தொடரமுடியும். அந்த குழந்தையாவது உங்களை காப்பாற்ற 20 வருடங்களுக்கு மேல் ஆகும், பாலிசி குழந்தை நீங்கள் பெற்றெடுத்த அந்த நிமிடத்திலிருந்து உங்களை காக்கிறது.

அடுத்தது, மெடிக்ளைம்,

நிறைய இடங்களில் பணிபுரியும் இடத்திலேயே மெடிக்ளைம் வசதி இருந்தாலும் தனியே ஒன்று வைத்துக்கொள்வது நல்லது, நிறுவனம் மாறும்போது நம்மை காப்பாற்றும். கட்டிய பணம் திரும்ப வராது 50000 ம் முதல் மருத்துவ செலவுக்கான காப்பீடு கிடைக்கிறது. குறைந்த பட்சம் எவ்வளவு தேவைப்படும் என்பது உங்கள் தீர்மானத்தை பொறுத்தது. மேலும் வயதாக வயதாக நீங்கள் கேட்கும் காப்பீட்டின் அளவு மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது (வேறென்ன பெரிசு எப்ப வேணா செலவு வைக்கும் ரிஸ்க்கு), ஒரு முறை எடுத்து தொடர்வதில் இந்த சிக்கல்கள் இல்லை முதலில் எடுக்கும்போதே எவ்வளவு என்பதை தீர்மானியுங்கள். ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும் இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் வியாதியோ, விபத்தோ வந்து மருத்துவமனை செலவு வந்தால் ஒரு க்ளைமும் கிடைக்காது. முன் கூட்டியே புதுப்பித்துவிடுவது நல்லது. கேஷ்லெஸ் என்ற வசதியுடன் உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனை, காப்பீடு நிறுவனத்தின் லிஸ்டில் உள்ளதா என்பதை பார்த்து வைத்துக்கொள்வது நல்லது.

சாதாரண நோய்களுக்கு, ஏற்கனவே உள்ளவியாதிகளுக்கு (லிஸ்ட் இருக்கும்-பாருங்கள்) குறிப்பிட்ட வருடங்களுக்கு காப்பீடு (க்ளைம்) தர மாட்டார்கள். அப்ளை செய்யும்போதே சரியான நோய் குறித்த தகவல்கள் தருவது உத்தமம். தனி தனியா வேறு வேறு கம்பெனிகளில் மெடிக்ளைம் எடுப்பதும் தேவைஇல்லாதது. அப்புறம் எதுக்குதான் மெடிக்ளைம் என்றால்.. திடீரென்று வரும் நோய்களால் 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு மருத்துவமனையில் நீங்கள் அட்மிட் செய்யப்பட்டால், முறையான தகவல் காப்பீடு நிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும்பட்சத்தில் மருத்துவ செலவு காப்பீடு நிறுவனம் அளித்துவிடும், கவனம் அந்த உபாதை ஏற்கனவே இருந்தால் காசு தர மாட்டார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படின் காப்பீடு அளவுக்கு க்ளெய்ம் கிடைக்கும். முக்கியமாய் குழந்தைகள் இருப்பவர்கள் குடும்பத்தோடு மருத்துவ காப்பீடு செய்துகொள்வது நல்லது, அதெல்லாம் வேஸ்ட் என்று நினைப்பவர்கள், அட்மிட் ஆகி வந்தவர்களிடம் எவ்வளவு செலவு ஆச்சு? என்று கேட்டு கொள்வது நலம்.

 தயவுசெய்து எந்த காப்பீடும் இணையதளத்திலோ, போன் பேசும் முகம் தெரியாத டெலிபோன் குயில்களிடமோ எடுக்காதீர்கள். நன்றாக ஆராய்ந்து, ஒப்பீடு செய்து முடிவெடுங்கள், காப்பீடு உங்களை காக்கும். இன்னும் நிறைய இருக்கிறது எல்லாம் சொல்ல முடியாது. தேவையானவைகள் சொல்லியுள்ளேன். அவ்வளவே.


கடைசியாய் ஒரு வார்த்தை,

நண்பர்களே,

நான் ஒரு முகவர், நீங்கள் என்னை போல ஒருவரை சந்தித்திருக்கலாம், அல்லது இனி சந்திக்கலாம் அவரால் ”நீங்க செத்தா..” என்று ஆரம்பிக்க முடியாது ஆனால் இந்த கேள்வியில்தான் எல்லாமே ஆரம்பிக்கிறது, கொஞ்சம் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து யோசியுங்கள், நயா பைசா பிரயோஜனமில்லாத நிகழ்ச்சிகளுக்கு மணி கணக்கில் செலவிடுகிறோம். நம் வாழ்வுக்கு சில மணிகள் செலவிடலாம், குடும்பத்துடன் கலந்து பேசி தீர்மானியுங்கள், சரியாக திட்டமிடுங்கள், சேமியுங்கள், இப்போதல்ல வயதானாலும் வாழ்வை அனுபவிக்க வேண்டும். ஒரு முகவரால் சொல்ல முடியாத ஆனால் பொதிந்துள்ள கருத்தை நான் இங்கு பதிவு செய்ய விரும்பினேன். காப்பீட்டின் மறைபொருள் இதுதான். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். புரியாதவர்களை, அலட்சியப்படுத்துபவர்களை கண்டியுங்கள், வளமான வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கட்டும். சிறப்பான திட்டங்கள் ஏதேனும் வரும்போது தகவல்கள் சேர்த்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். மீண்டும் என் இரு பெரிய பதிவுகளையும் பொறுமையாய் படித்து பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

பாலிசி...

என்னை சார்ந்து இருப்பவர்களுக்கான, என் குடும்பத்திற்கான பாதுகாப்பாக ஒரு ஆயுள் காப்பீடும் எடுத்துவிடலாம் கூடவே மருத்துவ காப்பீடும் என்று நான் முடிவு செய்து, பல விதமான அலசல்களுக்கு பிறகு ஒரு நாள் காசோலைகளுடன் நான் கிளம்பி போய் சேர்ந்தது அண்ணாநகரில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனத்தின் கிளை ஒன்றில், கிளையின் துணை மேலாளரை சந்தித்தேன்

”யெஸ் சார், ஐ ஆம்”.. என்று அவர் பெயர் சொல்லி பலவிதமான திட்டங்கள், பயன்கள் என்று ஆரம்பித்ததும்.. நான் சொன்னேன் சார் எனக்கு இப்பொதைக்கு 15 லட்ச ரூபாய்க்கு எடுக்கவேண்டும் அதுவும் டேர்ம் பாலிசி போதும், அதற்கான வழிமுறைகள் சொன்னால், காசோலை தந்துவிட்டு வேலை முடிக்கலாம். புதை பொருள் அராய்ச்சி நான் முடித்து வந்திருப்பது அவருக்கு புரிந்தது, உடனே தேவையான படிவங்கள் எடுத்து வந்து கையெழுத்து வாங்கும்போது, நான் கேட்டேன்..
“அவ்வளவுதானா?, எப்போது முதல் எனக்கு காப்பீடு உறுதி செய்யப்படும்?”
“ சார் பேப்பர்ஸ் மும்பைக்கு போகவேண்டும், மேக்சிமம் 10 நாட்கள்,”

சரி என்று காசோலை தந்து வேறு வேலை பார்க்க கிளம்பினேன். மூன்றாவது நாள் சரியாக தொகை என் கணக்கிலிருந்து எடுக்கப்படிருந்தது, நான் பாலிசி டாக்குமெண்ட்டுக்காக காத்திருந்தேன். ஒரு மாதம் கழித்தும் எந்த பதிலும் வராமல் நான் திரும்ப அண்ணா நகர் அலுவலகத்தில் துணை பார்டியை தேட அவர் சிங்கப்பூர் டூர் போயிருப்பதும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்ற பதில் கிடைத்தது. என் விவரங்களை சொல்லி என் பாலிசிக்கான தற்போதைய நிலை குறித்து கேட்க

”சாரி சார், அவர் ட்ராவ பூட்டிட்டு போய்ட்டாரு, வேற எங்கயும் உங்க டாக்குமென்ட் இல்ல, அவர் வந்தாதான் தெரியும்”
”என்ன சார் இது நான் என்ன பைக், இல்ல க்ரெடிட் கார்டா அப்ளை பண்ணியிருக்கேன், ஒரு லைஃப் பாலிசி அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி, காசு கூட அப்பவே என் கணக்குலேர்ந்து எடுத்தாச்சு, இன்னும் டாக்குமெண்ட் வரல, என் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் யாருக்கும் தெரியல, இத்தனைக்கும் நான் பார்த்தது அஸிஸ்டெண்ட் மேனேஜர். இதுதான் உங்க சர்வீசா? ஒரு வாரத்துல எனக்கு பதில் சொல்லுங்க, முடியலையா, பணத்த திருப்பி குடுங்க, வேற கம்பெனில பாலிசி வாங்கிக்கிறேன்.” ம்ஹூம் ஒரு தகவலும் இல்லை பத்தாவது நாள் நான் அந்த அஸிஸ்டெண்ட் மேனேஜருக்கு போன் செய்தேன். ஒன்றுமே தெரியாதது போல பேசிய அவர், 3 நாட்களில் எல்லாம் முடிந்துவிடும் என்றார். 4 ம் நாள் நான் அவர்களுடைய தலைமை அலுவலகத்துக்கு மெயில் அனுப்பினேன், எனக்கு அவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்ய இயலாது என்பது தெரிவிக்கப்பட்டது, நாக்கை பிடுங்கி நாண்டுகிட்டு சாவது போல சில கேள்விகள் கேட்டதும், சென்னை கிரீம்ஸ் ரோடிலுள்ள அவர்களுடைய அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தனர், கவனக்குறைவு, வாடிக்கையாளரிடம் சரியான தகவல் சொல்லாதது, ஒரு மாதத்திற்கும் மேலாக என் பணத்தை முடக்கி வைத்தது போன்றவறிற்க்காக வருத்தப்பட்ட ஒரு உயர் அதிகாரி, ஒரு வாரத்தில் காசோலை திரும்ப வரும் என்று உறுதி அளித்தார், காசோலையும் வந்தது கூடவே ஆதங்கமும், வன்மமும்.

நிறைய தகவல்கள் தேடினேன், புத்தகங்கள், இணையம் இன்ன பிற, சரியான தகவல் பெற இயலாது முடிவெடுத்தேன் எல் ஐ சி யில் 10 நாட்கள் வகுப்புக்கு போய், தேர்வெழுதி முகவரானேன். எப்போதும் எல்லாவிடத்திலும் கேட்கப்படும் பட்டும் படாமல் குத்திக்காட்டப்படும், அதே கேள்வி முழு நேர தொழிலாய் செய்பவர்கள் மூலம் என்னிடமும் கேட்கப்பட்டது..

”ஏன் சார் நீங்கதான் ஒரு தொழில் பண்றீங்க, காசு வருது, எங்களுக்கு இதுதான் எல்லாமே, நீங்களும் போட்டிக்கு வந்தா நாங்க என்ன பண்றது? முழு நேரமும் எடுத்து பண்றவங்கதான் இதுக்கு லாயக்கு தெரியுமா, இது ஹாபி கிடையாது..”
நான் பொறுமையாக பதில் சொன்னேன்.. இத்தனை வருடத்தில் யாரும் என்னை வந்து பாலிசி எடுப்பதின் மகத்துவம், அத்தியாவசியம் எதுவும் சொல்லவில்லை ஒரு முகவர் கூட என்னை சந்தித்ததில்லை, இது ஒரு வகையில் சமூக சேவைதான் எனக்கு. அதுவும் எனக்காக நான் இதை பற்றி அறிந்துகொள்ள இங்கே வந்து, இதன் முக்கியத்துவம் புரிந்ததால் முகவரானேன். மற்றபடி என் தொழிலில் நான் சம்பாதிப்பதே எனக்கு போதுமானது.

என்னுடைய வளர்ச்சி அதிகாரி ஒரு அற்புதமான மனிதர், நிறைய கற்றுக்கொள்ள வகுப்புகள் ஏற்பாடு செய்வார், பெரிய பெரிய கார்பொரேட் மனிதர்கள் மார்க்கெட்டிங், காப்பீடின் அவசியம், அதற்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் இன்ன பிறவற்றை பற்றி வகுப்புகள் எடுப்பார்கள். அப்படியான வகுப்புகளில் நான் கற்றது நிறைய. போன வாரத்தில் ஒரு வகுப்பில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் உங்களுடன் பகிர விருப்பம்::

'ATTEND THE LAST NEED FIRST'


பயிற்சி முகாமில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட வாசகம் மேலே உள்ளது. ’கடைசி தேவைகளை முதலில் கவனியுங்கள்’ சரியாக மொழி பெயர்த்துள்ளேனா தெரியாது. ஜல்லிக்கட்டு காளை போல நம் தின பொருளாதாரம் வித்தை காட்டுகிறது. மென் பொருள் வல்லுனர். கை நிறைய சம்பளம், கேட்ட பணம் உடனே கிடைக்கும், இனி அவர்களே உலகம் என்று போன வருட உலக பொருளாதார சுனாமிக்கு முன்புவரை நம்பி கல்லா கட்டிக்கொண்டிருந்த துறைகள் நிறைய. 25 லட்சத்திற்கு ஃப்ளாட்டா அற்பமாய் பார்த்த காலங்களில் முதல் மரியாதை 50 லகரத்ததிற்கு மேல் கடனில் வீடு வாங்க வந்த மனிதர்களுக்கு மட்டுமே. எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்த காலம் அது. ஒரு சிறிய வட்டம் அது, ஆனால் எல்லா கவனிப்பும் அவர்களுக்கானதாய் இருந்தது. குப்பை மேடெல்லாம் கோபுரங்களாக்கி, வைர வைடூரியமாய் ஜொலிக்க வைத்து வியாபாரிகள் சந்தையில் அவர்களுக்கான கடை விரித்திருந்தார்கள். சாதாரணமாக கலர்ப்ளஸில் பாதி கழிவில் சிறப்பு விற்பனையில் நான் பார்த்த ஒரு சாதாரண சட்டை விலை ரூ.4500/- எனக்கு சிரிப்புதான் வந்தது. பாம்பின் கால் பாம்பறியும் நானும் தொழில் செய்பவன் தான். ஆனாலும் விலைகளின் போக்கு எனக்கு பயத்தை தந்தது. நடுத்தர குடும்பங்கள் சென்னையில் வீடு வாங்கும் நினைப்பை குழி தோண்டி புதைத்து விடுங்கள், இந்த இடம் உங்களுக்கானதல்ல, சப்தமாய் சொல்லப்பட்டது. இத்துனை நாள் இந்த வியாபாரிகளை வாழ வைத்த நடுத்தர மக்கள் அம்போ என்று விடப்பட்டு, பேராசைக்கான திட்டங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உயரே போகும் எதுவும் கீழே வந்துதானே ஆகவேண்டும், அமெரிக்காவில் ஆட்டம் கண்டதும் விஷயம் தெரிந்து ஆடாமல் வாழ்க்கை நடத்திய மனிதர்கள் கலங்கவில்லை, மற்றவர்கள் கதை, சொல்லி மாளாது, ஒரு தொலைக்காட்சியில் ஒரு நபர் ஒரே நாளில் தான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டது சொல்லி அழுது கொண்டிருந்தார் அப்போது சொல்லப்பட்ட ஒரு அறிவுறை மனதில் நின்றது.

“வேலை போய்விட்டது க்ரெடிட் கார்ட் முதல் மற்ற எல்லா கடனையும் எப்படி அடைப்பேன் என்று இப்போது அழும் நீங்கள் அளவுக்கும் தகுதிக்கும் மீறி வருங்கால சம்பாதியத்தை இப்படி செலவு செய்திருக்கிறீர்களே, எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்? பதில் சொல்ல எதுவும் இல்லை அவரிடம்.

குறைந்தது 2 வருடங்கள் வேலை இல்லாவிட்டாலும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சேமிப்பு வைத்திருப்பவரால் மட்டுமே எந்த சூழ் நிலையையும் தாக்கு பிடிக்க முடியும். ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும் தேவையான அளவுக்கு குடும்பத்தில் எல்லோருக்கும் எடுத்திருக்க வேண்டும். நல்ல வேலையில் இருந்தாலும் உங்களின் கடைசி காலத்திற்காக இப்போதே நீங்கள் தயாராக வேண்டும்.

ஆம் சம்பாதிக்கும்போதே ஓய்வு காலத்திற்காய் முன்னேற்பாடுகள் செய்வது, குறைந்த பட்சம் குடும்பத்தில் மரியாதையாவது நமக்கு கிடைக்க வழி செய்யும். (மரு)மகனிடமோ, (மரு)மகளிடமோ ஒரு வாய் காபிக்காக கை ஏந்த வேண்டிய நிலை வராது, எவரும் எப்படியும் மாறலாம், நம்மை சார்ந்திருப்பவர்களை காப்பதோடு நம் கடைமை முடிவடைவதில்லை, நம்மையும் காத்துக்கொள்ள ஒரு திட்டமிடல் அவசியம் வேண்டும். ஆமாம் ’பெண்னும் - சன்னும்’ கொடுகாததை ’பென்சன்’ நமக்கு தரும். வேண்டியது அதற்கான திட்டமிடல் மட்டுமே.

கடைசி காலத்திற்கான சேமிப்பு அறிவியல் சார்ந்தும் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படலாம், கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கை முறை மேம்படும் 'LIVING LONG IS ALSO A RISK'. ஓரு காப்பீட்டு முகவர் தன் வாடிக்கையாளரிடம் சொல்ல முடியாதது இதுதான். ஒரு குடும்பத்தலைவரின் திடீர் இழப்புக்கு பிறகு அந்த குடும்பத்தின் கதி??

நம் யாராலாவது ஒரு லிஸ்ட் தயார் பண்ண முடியுமா? நம்மின் இறப்புக்கு பிறகு நம் குடும்பத்தை இன்னார் இன்னார் காப்பாற்றுவார், நம் குழந்தைகளுக்கான செலவுகள் இவரால் செய்யப்படும், இவர் என்னுடைய கடன்களை அடைத்துவிடுவார். அந்திம காலத்திற்கான செலவுகள் வரை பட்டியலிட முடியுமா? சுய பரிசோதனைகள் செய்தால் உண்மை சுடும். அவர் அவர் இருப்பு அவரவர்க்கு முக்கியம். இப்போது நாம் வாழ்வதும் அதுபோலத்தான். இல்லாவிடின் அனாதை ஆஸ்ரமங்களும், குழந்தை இல்லாதவர்களுக்கான சிகிச்சைகளும் தொடர்கதையாக இருக்குமா? போகட்டும் இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ செலவுகள்? கல்வி செலவுகள்? தின வாழ்க்கைக்கான செலவுகள்? சரி இப்போதுக்கான மருத்துவ செலவுகள் திடீரென எதிர்பாராமல் ஏதாவது சுகமில்லை என்றால் எங்கு போய் நிற்பது? அல்லது எதிர்காலத்திற்கான சேமிப்பை உடைப்பதா? சிகிச்சைக்கு பிறகு? சிகிச்சை காலத்தில் வேலை போனால்? முடிவில்லாத கேள்விகள் தவறான நம் வாழ்க்கை கணத்தின் பரிட்சைக்காக தயாராய் இருக்கிறது.

ஐயா உங்களுக்கு இவ்வளவு ரூபாய் சம்பளம். இத்தனை வருடம் வேலை மிச்சமிருக்கிறது, உங்களுக்கான கடன் இவ்வளவு, உங்கள் குழந்தைகள் எதிர்காலத்திற்க்காக இவ்வளவு பணம் தேவைப்படும், ஏதேனும் மருத்துவ செலவுகள் வந்தால் அதற்கும் பணம் தேவை. இவ்வளவும் நீங்கள் திடீரென்று இறந்துவிட்டால் யார் பொறுப்பேர்ப்பார்கள்? அப்படி ஒரு இழப்பு ஏற்படின் யார் தயவும் இல்லாது உங்கள் குடும்பம் கரை சேர நீங்கள் குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு உங்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு முகவரின் கேள்வி வாடிக்கையாளரை பார்த்து இதுதான். அப்படியே சொன்னால் பருப்பு வேகாது. உண்மை யாருக்கும் பிடிக்காது. அலட்சியமும், தவறான புரிதல்களும், இவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தை ஒரு சாதாரணமான டார்கெட் விஷயமாக, வரி சேமிப்பிற்கான குறுக்கு வழியாக, மிக மிக முக்கியமாய் அற்ப செலவாக பார்கப்படுவது வேதனை.

ஒவ்வொரு பாலிசிகளும் வருங்கால தனிமனித நிகழ்வுகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில் வகுக்கப்பட்டதுதான். முக்கியமாய் 11 லட்சம் கோடி சொத்து வைத்துள்ள LIC அரசாங்கத்திற்கு பதில் சொல்ல கடமை பட்ட ஒரு நிறுவனம். 98 சதவிகிதத்திற்கும் மேல் இழப்புகளுக்கான தொகைகள் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 50 ஆண்டுகால வரலாறு அதற்கு இருக்கிறது. அலுவலகங்கள் சாதா தோசையாக இருக்கலாம், அனால் உள் செயல்பாடுகள் உலக தரதிற்கு சவால் விடுபவை. வாடிக்கையாளரின் தவறான தகவல்கள், முகவரின் தவறுகள் போன்றவை சரி செய்துகொள்ளக்கூடியதுதான். சாதா தோசை ஆபீஸ்கள் மூலம் இந்த முறை இவ்வளவு பொருளாதார சுனாமியிலும் பல கோடி ரூபாய் லாபமீட்டியிருக்கிறது. ஸ்பெஷல் சாதா தோசை கம்பெனிகள் பல கோடிகள் மைனஸ் ஓட்டு வாங்கி செலவுகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது. இந்திய பங்கு சந்தையில் அதிக முதலீடுகள் LIC மூலமே செய்யப்படுகிறது. தட தடவென்று சென்செக்ஸ் விழுகிறதா கை கொடுத்து காப்பாற்றுவது LIC தான். தேன் தடவி மார்கெட் செய்ய முடியாது, ப்ரபலங்களை வைத்து சீன் காட்ட முடியாது, மக்கள் பணம் சூறையாடமுடியாது பல கட்டுப்பாடுகள். ஆழ்ந்து செல்ல செல்ல காப்பீடு திட்ட வரை முறைகள் நிறைய மூளை உள்ள மனிதர்களால் எல்லா காரண காரியங்களுடன் வகுக்கப்படுகிறது. ரிசப்ஷனில் போனில் பேசியோ, குரல் மட்டும் கேட்கும் குரளி வித்தைகள் இங்கே இல்லை, நேரே சென்று கிளையின் மேலாளரிடம் கேள்வி கேட்க்கலாம்,

மீண்டும் உணர்ச்சிகளுக்கு வேலை வைக்காமல் மேலே உள்ள 'ATTEND THE LAST NEED FIRST' திரும்ப படியுங்கள். வரும் காலம் வேறானது. இதுவரை அலட்சியம் காட்டியிருந்தால் உடனே ஆவன செய்யுங்கள், வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பற்கள் பாதுகாப்பு, தேவையான அளவு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு, போன்றவை செலவுகளல்ல சேமிப்பு.

"வர காசு இந்த மாசத்துக்கே பத்தல இதுல பென்சன பத்தி பேச வந்துட்டான்" என்று யாராகிலும் கேட்டால்..

"வேலை செஞ்சு காசு சம்பாதிக்கிற, இப்பயே முடியலயே .. தம்பிடிக்கு வழியில்லாத அப்ப என்ன பண்ணுவீங்க???"

பதிலும் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள்....

  01.Hunt for a Job. 02. Depend on Children. 03. Live in Deprivation.

நம் வாழ்க்கை, நம் கையில்..

ஒழுங்கான சிக்கல்கள்..


‘க்ளிங்’,,
”சார்”
”சொல்லுங்க”
”யுரேகா ஃபொர்ப்ஸ் லேர்ந்து வரோம்”
நான் மாடியில் நின்றிருந்தேன், இரண்டு இளைஞர்கள் டை கட்டிக்கொண்டு கையில் பெரிய பையுடன், ”சார்..ஜஸ்ட் பத்து நிமிஷம் ஒரு டெமோ பாருங்க பிடிச்சிருந்தா வாங்கிக்குங்க.” நிறைய நாட்களாகவே வாக்குவம் கிளீனர் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
”சரி மேல வாங்க”
பையை திறந்து ப்ளக் சொறுகி, உய்ய்ய் என்ற சப்தத்துடன் ஒட்டடைகள் உறிஞ்சியும், தரையிலுள்ள தூசுகள் விழுங்கப்பட்டும் வித்தை காமிக்கப்பட்டது, போதாத குறைக்கு உறியப்படும் காற்று வெளியேறும் ஒரு சிறிய குழாய் வழியில் ஒரு ப்ளாஸ்டிக் பந்தினை அந்தரத்தில் ஆட விட்டு அவர்கள் வேடிக்கை காட்ட, என் குழந்தைகளும் அதற்கு சினேகமாகிவிட்டன, நான் டை கட்டிய இளைஞர்களை பார்த்தேன் டார்கெட் முடித்த சந்தோஷம் தெரிந்தது. சரி என்று முடிவெடுத்து வாங்கிய பின்புதான் தெரிந்தது, அதனால் எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று.

ஒரு சுப யோக ஞாயிற்று கிழமை முதன் முதலாய் உபயோகிக்க துவங்கினேன், உபயோகம் சரிதான் (மவனே முடியல) என் முதுகு கிழிந்து விட்டது. தூசு தும்புகளுடன் ஒட்டடை அடிக்கும் வீட்டிலுள்ளவற்களுக்கு சுகாதாரமாய் இருக்குமே, இப்போ நல்லா சுத்தமாகிவிட்டதே என்ற சந்தோஷம் அடுத்த ஞாயிறுக்கிழமை காணாமல் போய், நம் எறும்பு ராஜகோபால் மிரட்டுவது போல அண்டத்திலுள்ளதே பிண்டத்தில் என்று மீண்டும் வீடு முழுவதும் தூசும் ஒட்டடையும், திரும்பவும் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கும்போது பிள்ளைகள் இரண்டும் பக்கத்தில் வந்தது, ”ஏம்ப்பா அதுல ஒட்டடை அடிக்க போறியா??”

”ம்ம்ம் ஏன் கண்ணு அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண போறீங்களா??”

”இல்லப்பா நீ அத போட்ட உடனே நாங்க அதுல பால் வெச்சி காத்துல பறக்க விட்டு விளையாடுவோம்.” என்னுடைய அப்பா என்னையே பார்த்துகொண்டிருந்தார். அந்த வாக்குவம் கிளீனர் வரும் வரை ஒட்டடை முதல், எல்லாவிதமான சின்ன சின்ன வேலைகளும் அப்பாதான் வீட்டில் ஒரே மகன் என்ற பாசத்தில் எங்கம்மா எனக்கு அதிக பட்ச வேலை கொடுத்தது சுயமாய் நான் பல் விளக்குவது மட்டுமே. தாய் பாசத்தின் முழு மொத்த சோம்பேறியாக இன்றும் நானிருப்பதற்கு என் தாயே போற்றி!. இன்றைக்கும் தன் கையால் சோறு பிசைந்து, தட்டில் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிட தறும்போது என் மனைவி காதில் புகை வரும். என்னமோ அப்படி பழகி விட்டது.

”ஏண்டா குழந்தைங்க பால் பறக்க விட்டு விளையாடறதுக்கா 12000 ரூவா கொடுத்து இத வாங்கின?”
“இல்லப்பா நீங்க ஒட்டடை அடிக்கும்போது தூசி எல்லாம் விழுந்து, ஏற்கனவே வீஸிங் இருக்கு அதான்..”
“சரிடா ஒனக்கு இருக்கறது வாரத்துல ஒரு நாள் அதுலயும் இத தூக்கிட்டு பாதி நாள் போயிடிச்சின்னா ரெஸ்ட் வேணாமா?? 40 ரூவாய்க்கு ஒட்டட குச்சி வாங்கி அடிக்கற வேலைக்கு போய் இத வாங்கி இப்படி அவஸ்த்த படனுமா??” நான் மீண்டும் நான் வாங்கியதை நியாயப்படுத்துக்கொண்டே இருந்தேன். சரி போ என்று அப்பாவும் விட்டுவிட்டார்.

அன்புதான் என்றாலும் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு, என்னை என் போக்கில் விட்டவர் என் தந்தை, டீன் ஏஜ் குறும்புகளில் ஒரு முறை வயிறு முட்ட குடித்துவிட்டு வீட்டு வாசலில் கால் தடுமாறி நின்றபோது கடிந்து கொள்ளாமல் பாய் விரித்து, படுக்கச்சொல்லி ம்று நாள் மாலை கண் விழித்ததும், காபி போட்டு கொடுத்த என் அப்பா சொன்ன வார்த்தை ”குடிக்கிறது தப்பில்ல ஆனா இது உன் வயசுக்கு ரொம்ப அதிகம், வேனும்னா வீட்டுல வாங்கி வெச்சிக்கோ டைய்லி கொஞ்சம் குடி உடம்புக்கும் நல்லது,”

எனக்கு பிறகு குடிக்க ஆரம்பித்து விட முடியாமல் ”அது இல்லாம முடியல மச்சி” என்று சொல்லும் என் நண்பர்களுக்கு நான் அதிலிருந்து மிக சாதாரணமாய் வெளிவந்தது ஆச்சரியம். ஆனால் எனக்கு என் தந்தை கொடுத்த சுதந்திரம் என்னை காப்பாற்றியது, கூட இருந்த நண்பர்களின் வீட்டில் மண்டகப்படி நடக்க, நான் எது செய்தாலும் என்னை காயப்படுத்தாத என் தந்தையின் சுதந்திரம் என்னை பயமுறுத்தியது, ”வேணாம்டா” என்று நான் சொல்லி வெளியே வந்துவிட்டேன். எந்த பழக்க வழக்கத்திற்கும் அடிமையாகாமல் அந்த சுதந்திரம் என்னை காத்தது. களவும் கற்று மற என்று கற்றேன் மறந்தேன்.

ஆனால் காலம் நம்மை அப்படியே விடுவதில்லை அது நமக்கு பல வேடங்கள் தரும். மகன் குடும்ப தலைவராக மாறும் சூழ்நிலை பெற்ற தந்தையிடமே பேச முடியாத சில சங்கடங்களை ஏற்படுத்தும்.

”வயசாயிடிச்சுப்பா பாங்க் கணக்கு க்ளோஸ் பண்ணிடலாம், கை எல்லாம் நடுங்குது திடீர்னு, நேர்ல வாங்கன்னு சொன்னா டக் குன்னு கிளம்ப முடியாது, ரேசன் கார்டு, கேஸ் கனெக்‌ஷன் எல்லாம் கூட உன் பேருக்கு மாத்தனும்.”

”ஆங் ஆங் அதுக்கெல்லால் ஒன்னும் இப்ப அவசரமில்லப்பா பாத்துக்கலாம்..”

அலட்சியம் காட்டுவது போல பதில் சொன்னாலும் என் அப்பாவை நேர் கொண்டு பார்க்க முடியாத நடை முறை சிக்கல் அது. இரு குழந்தைகளுக்கு தந்தையான பின்பும் நான் என் அம்மா என்னை குழந்தையாகவே வைத்திருக்கிறார்,. என் தந்தை குடும்ப தலைவனாக்க காய் நகர்த்துகிறார். என் தந்தையும், நானும், என்குழந்தைகளும் ஒன்றாய் கை கோர்த்து நடக்கையில் வாழ்வின் தளர்ச்சியும், உறுதியும், மென்மையும் ஒரு சேர உணர்கிரேன். கடந்து வந்தவரின் தூரமும், கடக்கின்ற என் பயணங்களும், ஆரம்பித்திருக்கிற என் குழந்தைகளும் எறும்பு வரிசையாய் வாழ்வு நகர்ந்து கொண்டே இருப்பதை, வழி தேய்ந்து கொண்டே இருப்பதை, கண்டும் ஒன்றும் செய்ய இயலாத நிதர்சனத்தை புறம் தள்ளி, மகாபாரதத்தில் தருமனிடம் அசரீரி கேட்ட நகைப்புக்குறிய கேள்விக்கான பதிலாய் நம்பிக்கையுடன் நகர்ந்துகொண்டே இருக்கிறேன்.

என்ன செய்ய அடுத்த நொடிகள் நம்மால் நிச்சயமாக்கப்படுவதில்லை கடந்து போன நொடிகளில்தான் நம்மை நாம் பொறுத்திப்பார்த்துக்கொண்டு கர்வப்படவோ, வெட்க்கப்படவோ முடிகிறது. இது இதை இப்படி செய்ய வேண்டும் என்ற முன்கூட்டிய தீர்மானங்கள் நிறைவேற்ற மிகுந்த பிரயாசை, அயற்சி ஏற்படுகிறது. எதிர்கொள்வதை அதனதன் போக்கில் நல்லதா? சரி,.. இல்லையா? சரி... சுலபமாய் இடதுமில்லாது வலதுமில்லாது,  ஒரு அழகான படமெடுத்தும் எந்த வித உணர்ச்சியும் காட்டாத, கூப்பாது போடாத ஒரு கேமராவைப்போல் அமைதியாய் இருக்க முடியவில்லை.

ஞானி தவம் செய்கிறான் வந்த வாழ்வறுத்து, காமம் அறுத்து, பந்தமறுத்து, பிணைப்புகளில்லாத முற்றுப்புள்ளி வைக்க. வாழ்வின் இரை தேடலில் வெறுத்து, அறுத்துபோனவனுக்கு இறை ஒன்றே குறி. மோட்சத்தின் மையங்களில் மையல்.

ஒரு வேளை நம்மை போல் வாழ்க்கை தவம் செய்து வரம் பெறுவது அவனுக்கு பயமாய் இருந்திருக்கலாம், கடினமாய் இருந்திருக்கலாம், ஓயாது பேசி, தந்திரங்கள் பல செய்து, சொந்த பந்தம் சூழ, சூழ்ச்சிகளூடே பிண்டத்தில் அண்டத்தில் முடிவில்லாத வெளிகளில் முடிவினை தேடுவது முடியாத காரியம் என்று நடுங்கி, தனிமை தேடி ஓடியிருக்கலாம்.

நமக்கு இதுவே வாழ்வு, பேராசையோ போராட்டமோ, அன்போ துரோகமோ, நமக்கான தவங்கள் இவைதாம், சாதாரணமான கேள்விகளிள், நடைமுறை செயல்களில் வாழ்வின் முடிவுகள் எப்போதும் ஞாயபகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கப்படுகிறது.  பயந்த ஞானிகளை போலவே, சாமியும் இங்கே வருவதில்லை, இந்த பூமியில் நேர்த்தியில்லாத நேர்த்தியை படைத்த அவனுக்கும் நம் நேர்த்தியான சிக்கல்கள் பயத்தை தந்திருக்கக்கூடும், இறப்புக்கப்பால் இருக்கும் ஒரு உலகத்தில் யார் கண்டது ஒரு வேளை நாம் நம்பும் கடவுள் நம்மை சாமியாக்கி கோவில் கட்டி தொழுதுகோண்டிருக்கலாம். எப்போதைய்யா வருவீர்கள் எமை காக்க என்று பாசுரங்கள் பாடிக்கொண்டிருக்கலாம். அக்கரைக்கு இக்கரை பச்சைதானே.  
.

முறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....


முறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....அமிலங்கள் ஊற்றி வளர்க்கப்பட்ட
காதல் செடி விருட்ஷமாய்
விஷப்பூக்களை சொரிய துவங்கியிருந்த நேரம்..

மலர்களின் மணங்களில் மனமிழந்து..
காதல் கோடாலிகளுடன்
வரிசையாய் வந்த கிளிகள் ஐந்து
ஒன்றாய் அல்ல ஒவ்வொன்றாய்..

அமிலம் வளர்த்த மரமல்லவா
வாடை வீசியதும் ஒவ்வொன்றாய்
பறந்தது, இது ஒன்றும் புதிதல்ல என
கிளைகளில் வடுக்கள்
கொண்ட விருட்ஷம் வெறும்
வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..

விட்டுப்போன நான்கிற்கு தூதுபோகவா
என்று அமிலம் மீறி
ஒற்றையாய் வந்து கேட்ட ஒரு கிளியின்
அன்பு சொறிந்த அந்த நொடியில்
அமிலங்கள் அமுதமாய் மாறி
விருட்ஷத்தின்
இருப்பு புரிந்து என் கூட்டில்
துணையாக எப்போதும் இரு என்னோடே
என்று வெயில் தின்று
நிழல் தந்து தானே தனக்கொரு போதிமரமாய்
இரு விழுதுகளுடன் வேர்பிடிக்க
வடுக்களோடு நிற்கிறது அமைதியாக...

______________________________________________________________________________________________
டிஸ்கி (இது போன பதிவுக்கு :) )

நானெடுத்த புகைப்படங்களுக்கு இவ்வளவு வரவேற்பா?? ::)) மிக்க நன்றி நண்பர்களே ::))

காமெரா :  Sony DSC H9  Digital Camera. சத்தியமா நாந்தாங்க எடுத்தேன் அட டிஜிட்டல் காமெரால யார் வேணாலும் இத விட நல்லா எடுக்கலாம் என்ன கொஞ்சம் அடிப்படை ஆங்கிள் தெரிஞ்சி இருக்க வேண்டும் அவ்வளவுதான் ::)) சின்ன வயசுல இருந்து எனக்கு காமெரா பைத்தியம். தஞ்சை பெரிய கோயில் உள்ளே எப்போது போனாலும் அந்த பிரம்மாண்டம் தொண்டை அடைக்கும். ஆயிரம் வருட சரித்திரம் கண் முன்னே வரும் எனக்கே எனக்கு என்று படமெடுத்து வைத்துக்கொள்ளும் ஆசை சில நாட்களுக்கு முன்பு கிடைத்தது. காலை நேரம் 8 மணி சுமாருக்கு ஒரு சிறப்பான வெயில் வெளிச்சத்தில் நீல வான அழகில் எனக்கு படமெடுக்க கிடைத்தது. பொங்கல் வாழ்த்தாக நான் போட்டிருந்த படமும் அப்போது எடுத்ததுதான். நேரக்குறைவு காரணமாக என்னால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் கைகளால் பிடித்துக்கொண்டு எடுத்த படங்கள் அதனால் துல்லியம் பிசகி இருக்கலாம்.

அந்த கிளியும், தேன் சிட்டும், எங்கள் வீட்டின் எதிரில் உள்ள கொய்யா, தென்னை மரங்களில் எடுத்தது பல முறை நான் முயன்று, சப்த்தம் கேட்டதும் பறந்துபோய் கடைசியாய்  எனக்கு கிடைத்த படங்கள் அவை. வீட்டினருகில் வந்து உட்காரும் ஒரு சிறிய பறவையை எடுக்க ததிங்கினத்தோம் போடும்போதுதான் அனிமல் பிளானெட், நேஷனல் ஜியாகரபிக்கில் டாகுமெண்டரி எடுப்பவர்களின் சிரமமும், காதலும்  புரிந்தது. புகைப்பட விரும்பிகளுக்கு டிஜிட்டல் காமரா ஒரு வரம் உடனே ரிசல்ட் தெரிந்துவிடும். நான் இப்போதும் அதிசயிப்பது கருப்பு வெள்ளை துல்லியங்களைத்தான்.

அந்த பூக்கள் மற்றும் குரோட்டன் இலைகள் க்ளோசப் பெங்களூருவில் எடுத்தது, பூக்கோலமும் அங்கேதான். கோபுர சிலைகள் கும்பகோணத்தில் எடுத்தது. மிக அருகில் படமெடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும், இதுவரை அதிகமாக மெனக்கெடவில்லை, டிஜிட்டல் எடிட்டிங் எல்லாம் சுத்தமா தெரியாதுங்க :) ஒரு டிஜிட்டல் SLR வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது பார்க்கலாம்.::) மேலும் நான் எடுத்த படங்கள் அவ்வப்போது போடுகிறேன். ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றி.          

(இதுக்கு பேரு டிஸ்கியா?  
சாரிங்க நன்றி நவிலல் ...:)
நிஜ டிஸ்கி 1: மேலே உள்ள படம் நான் எடுக்கலைங்க, அப்புறம் அந்த ( ஹீரோ ) நான் அவரில்லைங்க (ஹும் !)  
நிஜ டிஸ்கி 2:. முறிந்த காதல் நிறைவு (இதுக்கு இவ்வளவு கைதட்டா..:))