பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.

ஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.
முதல் பாகம் - இங்கே

ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்? ஏனென்றால் அப்பொழுதுதான் ஏறிவந்த களைப்பு அறவே நீங்குகிறது. பளிச்சென்று பல்ப் போட்டாற் போல உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுகிறது. முக்கியமாக வரவிருக்கும் குளிர் நம்மைத் தாக்காமல் இருக்க உடலைத் தயார் படுத்துகிறது.

இனி ஏழாம் மலை பற்றி, ஆறாவது மலை உச்சிதான் ஏழாம் மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு இறக்கமான இடம். சுனையிலிருந்து சிறிது தூரம் ஏறிய உடனே ஒரு நமக்குக் காணக்கிடைப்பது ஒரு பெருவெளி, நீண்ட மண் பாதை, எப்பொழுதும் ஈரமாக இருக்கும் இடம், சட்டென்று வானிலை மாறுவதை உணரமுடிகிறது. காற்று முன்னைக்காட்டிலும் வேகமாக வீசுகிறது. சுற்றுமுற்றும் வெண்பனி மேகங்களால் மூடப்பட்டு என்ன இருக்கிறது என்பதே தெரியாத நிலை. தீடீரென்று வெயிலடிக்கும்போது பள்ளத்தாக்கோ, அடர்ந்த காடோ, மலைகளோ தெரியவரும், ஒரு போட்டோ எடுக்கலாம் என்று செல்போனை வெளியே எடுப்பதற்குள் வெளிச்சம் மறைந்து புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும்.

ஏழாம் மலை பனி மூட்டம்


தான்தோன்றிப் பிள்ளையார்

ஏழாம் மலை ஏறுகிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய பூரிப்பை உள்ளே பொங்கச்செய்தது. கடந்து வந்த மலைகளைக் காட்டிலும் இங்கே நடப்பது சவாலாக இருந்தது. பாதை, மழை இல்லாததால் வழுக்கவில்லை, என்றாலும் ப்ராணவாயு குறைவு என்பதை உணரமுடிந்தது. மெதுவாகவே நடக்க ஆரம்பித்தோம். முதலிலேயே வெட்டவெளியில் வருவது தான்தோன்றிப் பிள்ளையார் சிலை.

அவரைச் சுற்றிவிட்டு முன்னேறிச் செல்லச் செல்ல காற்றும், பனியும் அதிகமாகியது, சர்வசாதாரணமாக தூக்கி அடிக்கக்கூடிய வலிமை அங்கே காற்றுக்கு இருந்தது. மோசமான வானிலையில் சர்வநிச்சயமாக மனிதர்களால் இங்கே நடக்க இயலாது என்பது புரிந்தது, சரியான அளவில் எங்கள் உடல் தாங்கக்கூடிய அளவிலே அங்கே வானிலை அமைந்தது என்பது எங்களுக்கு ஒரு கொடுப்பினைதான். ஸ்வாமிஜியும் மற்றவர்களும் எங்களுக்கு முன்பாகவே சென்றுவிட்டிருந்தனர், அகநாழிகை வாசுதேவன் மட்டும் இருவேறாக பாதை பிரியும் இடத்தில் நாங்கள் வழிதவறாமல் இருக்க எங்களுக்காக காத்திருந்தார்.

ஈசனைக் காணும் முன்பாக முதலில் வரும் பிள்ளையார் தரிசனம்


இன்னும் சற்றுதூரம்தான், அற்புதமான தரிசனம் கிடைக்கப்போகிறது, ஆனால் அந்த இடம் எங்கே என்று எங்களுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது, இதோ இந்தப் பாறையின் பின்புறம்தான் என்று எங்களுடன் வந்தவர் சொன்னார். வளைந்து ஏறிய ஒரு பாதையில் தடுப்புக் கட்டைகள் தெரிந்தன. பல சூலங்கள் குத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய பாறைகளை யாரோ அடுக்கி வைத்ததுபோல, மிகப் பிரம்மாண்டமாக பெரிய பாறைகளின் நடுவில் முதலில் ஒரு பிள்ளையார் சிலை வருகிறது. அவரை தரிசித்து வலதுபக்கம் படிகள் இறங்கினால் அந்தப் பிரம்மாண்டமான பாறை அடியில் இயற்கையாகவே இருக்கும் குகையில் மிக அழகாக நமக்கு காட்சி அளிப்பது சுயம்புவாய் தோன்றிய பஞ்ச லிங்கங்கள்.

அதோ அந்த வலதுபக்கமிருக்கும் கூரையின் அடியில்தான் இருக்கிறான் ஈசன்.


முதலில் இருக்கும் பெரிய லிங்கமும் அதற்குப் பின்னால் இருக்கும் மற்ற நான்கு லிங்கங்களும் சேர்ந்து அந்தச் சிறிய குகைதான் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அற்புத இடம். இதுதானா? இதற்குத்தானா இவ்வளவு சிரமம் என்றெல்லாம் எந்தக் கேள்வியும் எழவில்லை. உடலில் எந்தக் களைப்பும் தெரியவில்லை, மனதெங்கும் உற்சாகம், சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன், எங்கும் பள்ளத்தாக்கு, வீசி அடிக்கும் பனிக்காற்று, திடீரென்று அடிக்கும் வெயில், இயற்கையின் பிரம்மாண்டம், எல்லாவற்றையும் உதறிவிட்டு கிடைப்பதை உண்டு இங்கேயே தங்கிவிடலாம் என்ற வெறி மனதில் வழிந்தோடியது.

தென் கயிலாயம், வெள்ளியங்கிரி - ஈசன் சன்னதி


மிக அழகான பூசை


நாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்னரே வந்திருந்த ஸ்வாமிஜி லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் ஆரம்பித்திருந்தார், அழகான மலர் மாலை, சந்தனம் பூக்கள், வில்வ அர்ச்சனைகளுடன் பஞ்சலிங்க தரிசனம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரையும் லிங்கத்தின் முன் அமர்ந்து தனித்தனியாக ப்ராத்தனைகளுடன், வில்வ அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டச்சொன்னார். அனைவரும் முடித்தபின்னர், அங்கேயே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு தியானமும், பாடல்களும் பாடினோம். யாருமில்லாத அந்த இடத்தில் காற்றின் ஓசையில் எங்கள் சேர்ந்திசைத்த குரல் அற்புதமாக இருந்தது.

பூசை செய்த வீடியோ


ஆழ மூச்சை உள்ளிழுத்து கண் மூடி ஏதும் நினைக்காது வெறுமனே அமர்ந்திருந்தேன். என்னத்தை வேண்டுவது? என் யோக்கியதைக்கு மேலேயே வாழ்வு கிடைக்கப்பெற்றவன் நான். இது போன்ற பிராயணங்களே எனக்கு எப்படி அமைகிறது என்ற கேள்விக்கே விடை தேடிக் கிடைக்காமல் விட்டுவிட்டவன் நான். குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.

உள்ளே இருக்கும் இந்த லிங்கங்கள்தான் இங்கே புனிதமா? வேறொன்றும் இல்லையா? இதற்குத்தான் இத்தனை பாடா? என்று கேட்டால், இல்லை இந்த லிங்கங்கள் ஒரு எல்லை. போதும், உனக்கென்று விதித்தது உனக்குக் கிடைக்கும், இந்த முயற்சியில் உனது எல்லை இது என்று காட்டவே இப்படி அமைந்திருக்கலாம். ஒரு வாழ்க்கைப் பாதையின் ஏற்ற இறக்கத்தைத்தான் இந்தப் பயணம் கன கச்சிதமாக உணர்த்துகிறது. இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இங்கே வந்து இயற்கையின் மாசுபடாத அற்புதத்தை தரிசிக்கலாம். உள்ளுக்குள் ஏதோ ஒரு கதவு உங்களுக்குத் திறக்கும். நல்ல பாதைக்கு நிச்சயம் திசை திருப்பும். அதற்கு இயற்கை என்றோ, ட்ரெக்கிங் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ, ஈசன் என்றோ பெயர் வைக்கலாம், பெயரில் என்ன இருக்கிறது???

பஞ்ச லிங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்தப் புகைப்படம் இங்கே


’எறும்பு’ ராஜகோபால், வைரவன், ’அகநாழிகை’ வாசுதேவன் வெள்ளியங்கிரி ஈசன் வாசலில்


தரிசனம் முடிந்து வலப்புறமாகச் சுற்றி இறங்கினோம். ஏழாம் மலை அடிவாரத்தில் சிதிலமடைந்த ஓலைக் கடையில் எல்லோரும் காத்திருங்கள் நாம் அடுத்து கண்ணன் குகைக்குச் செல்லப்போகிறோம் என்று ஸ்வாமிஜி சொன்னார். மெதுவாக நடந்து சென்று எடுத்துவந்திருந்ததை உண்ணத்துவங்கினோம். குகையை ஸ்வாமிஜி சென்று பார்த்துவிட்டு அழைப்பதாக தகவல் வந்தது.

குகைக்குச் செல்லும் பாதை இல்லாப் பாதை

ஏழாம் மலை ஆரம்பிக்கும் இடத்தில் ஏறும்போது இடப்புறமாக ஒரு மிகப்பெரிய சரிவு வருகிறது காட்டுச் செடிகள் வளர்ந்து பாதைகள் ஏதுமில்லாத இடத்தில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிச் செல்ல நாங்கள் அனைவரும் நடக்க ஆரம்பித்தோம், தூரத்தே ஒரு பாறை அருகில் ஸ்வாமிஜி ஒரு ஆரஞ்சுப் புள்ளியாகத் தெரிந்தார். அந்த இடத்தை அடைந்தவுடன்தான் தெரிந்தது அது குகைக்கான நுழைவாயில் அல்ல. அது இரண்டாகப் பிளவு பட்டிருந்த ஒரு பாறைப் பகுதி, சுமந்து வந்திருந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு பாறைகளைக் கவனமாகத் தாண்டி வந்த வழி போல பாதி தூரம் ஏறிச்சென்றால் மிகப்பெரிய குகையின் நுழைவாயில் தெரிகிறது.

குகைக்குச் செல்லும் வழியில் பைகளை வைத்த இடம்

குகையின் உள்ளே டீ தயாராகிறது

விஷயம் தெரியாதவர்களால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு ஆபத்தான இடத்தில் இயற்கையாகவே மறைந்து இருக்கிறது. உள்ளே அட்டைப் பூச்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நுழைந்தவுடன் மிகப்பெரிய குகை, அதனுள்ளே புகுந்து வலப்பக்கம் சென்றால் அடுத்தடுத்து அறைகள் போல குகைகள் இருக்கின்றன. அட்டைகள் மட்டும் இல்லையென்றால் நிம்மதியாகத் தங்கி ஓய்வெடுக்கத் தகுந்த இடம். இந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்களால் ஏற்கனவே அங்கே அடுப்பு மூட்டி விறகெறித்து சமைத்த தடங்களும், சாம்பலும் காணக்கிடைத்தது, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடர் எங்களுக்காக சுள்ளிகள் சேகரித்து அற்புதமான சுக்குக் கருப்பட்டி டீ தயாரித்துத் தந்தார், அனைவரும் குடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மலை இறங்க ஆரம்பித்தோம். மூன்றாவது மலை உச்சியில் இருக்கும் பிரம்ம குகை அருகில் எங்களை ஒன்று கூடச் சொன்னார் ஸ்வாமிஜி.


மீண்டும் ஆறாவது மலை சுனையைப் பார்த்துக்கொண்டே இரவில் எடுக்க முடியாத இடங்களைப் பகலில் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டே இறங்கினேன், பாதங்களும், குதிகாலும் போதும் ஓய்வெடு என்று கதறியும் பொருட்படுத்தாமல் மூன்றாம் மலை நோக்கி நடக்கத் துவங்கினேன். இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, சென்ற முறை அனுபவத்தில் முதல் மலையில் இறங்கும்போது ஓய்வெடுத்ததால் அடுத்த அடி எடுத்துவைக்க அவஸ்தைப்பட்டது எனக்கும் ராஜகோபாலுக்கும் நன்றாக நினைவிலிருந்தது, என்ன ஆனாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓய்வெடுப்பதில்லை என்ற முடிவில் நாங்கள் இருந்தோம். போதாததுக்கு 10 மணி ரயில் பிடிக்க அப்படி சென்றால்தான் 7 மணிக்குள் வெளிச்சம் இருக்கும்போதே அடிவாரம் அடைய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. என்னைவிட ராஜகோபால் பாத வலியில் மிகவும் சிரமப்பட்டாலும் தாங்கிக்கொண்டு என்னைவிட முன்னால் அவரால் நடக்க முடிந்தது. அவருக்கும் முன்னால் அகநாழிகை வாசு அசால்ட்டாக நடந்துகொண்டிருந்தார், நிச்சயம் இவர் மலை ஏற சிரமப்படுவார் என்று நான் நினைத்த வாசு மிகச் சுலபமாக மலை ஏறி இறங்கியது இந்தப் பயணத்தில் மனோதிடமும், ஆர்வமும் எந்த எல்லைக்கும் ஒருவரை பயணிக்க வைக்கும் என்று எனக்கு உணர்த்தியது. அவர் மட்டுமல்லாது அறுபது வயதைக் கடந்த கனத்த சரீரமுள்ள திரு,அருணாச்சலம் என்பவர் சென்ற ஆண்டும் எங்களுடன் வந்திருந்து ஏழாம் மலை ஏறாமல் திரும்ப வந்து, இம்முறை ஸ்வாமி தரிசனம் செய்தார். அவரது மனோதிடம் வியக்க வைத்தது. பல 30 வயதுற்குள்ளான இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டதையும் பார்க்கும்போது, உடல் வலிமையும் வயதும் ஒரு பொருட்டே அல்ல என்பது உறுதியாகப் புரிந்தது. பயண ஆரம்பத்திலேயே ஓம்கார் தெளிவாக எல்லோருக்கும் விளக்கிவிட்டார், எப்பொழுது மலை ஏறமுடியாது என்று தோன்றுகிறதோ அப்பொழுதே நீங்கள் நிறுத்திவிடலாம், ஏழாம் மலை என்பதை விட இந்த மலை சிறிதேனும் ஏறுவதே முக்கியம் எக்காரணம் கொண்டும் அதில் ரிஸ்க் எடுத்து அடுத்தவர் பயணத்திற்கு இடையூராக இருக்கலாகாது என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆச்சரியமாக கலந்துகொண்ட அனைவரும் ஒரு குறையுமின்றி ஏறி இறங்கினோம்.

பிரம்ம குகை நுழைவாயில், அந்தப் பாறைகளுக்கு சுமார் 20 அடிக்குக் கீழே சுயம்பு லிங்கம்


மூன்றாம் மலையில் அனைவரும் பாதாளகுகையில் இருக்கும் மற்றுமொரு சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யக் காத்திருந்தனர். இதைப்பற்றி சென்ற பயணத்திலேயே எழுதி இருக்கிறேன். நானும் ராஜகோபாலும் ஏற்கனவே பார்த்த குகை என்பதாலும், ஏறி இறங்குமளவிற்கு பாதத்தில் வலு இல்லாததாலும் வெளியிலிருந்தே தரிசித்து சிறிது ஓய்வெடுத்து அங்கிருந்த சுனை நீரை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு இறங்க ஆரம்பித்தோம்.

இரவு 7.20 அடிவாரம் வந்தபோது ஸ்வாமிஜி கைதட்டி வரவேற்றார். அதாவது நாங்கள் இறங்க ஆரம்பித்திருந்தபோது அவர் குகை உள்ளே அமர்ந்து மற்றவர்களுக்கு அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வைத்து, அதன் பின்னர் வெளியே வந்து எங்களுக்கும் முன்பாக அடிவாரம் சென்றிருந்தார், ஸ்வாமிஜி 10மணிக்கு ரயில் பிடிக்க முடியுமா என்றேன், காசியில் இப்படித்தான் என்னுடன் வந்தவர் கேட்டார் உங்களுக்காக விமானம் காத்திருக்கும் கவலையின்றி தரிசனம் செய்யுங்கள் என்றேன், அவர் விமானம் இரண்டுமணி நேரம் தாமதமாகக் கிளம்பியது பிரச்சனையின்றி பயணப்பட்டார் , இத்தனை மலை ஏறி தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும்? கவலை வேண்டாம் என்றார். நான் ஏதும் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.

கையிலிருந்த கழியையும், பையையும் கழட்டி வைத்துவிட்டு மல்லாந்து படுத்தேன். ஒன்றை வெற்றிகொள்ள முயற்சி மட்டும் முக்கியம் என்பது புரிந்தது. முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது. உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம் என்று தோன்றியது. காலை நான்கு மணிக்குக் கிளம்பி சில ஆரஞ்சு மிட்டாய்களும், ஒரு எனர்ஜி ட்ரிங்கும், சில உலர் திராட்சைகளும், இரண்டு சப்பாத்திகளும், ஒரு சுக்குக் கருப்பட்டி உணவோடு 12 மலைகள் ஏறி இறங்கி இருக்கிறேன். மனதிலிருந்து விலகி உடல் தனியே ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.

8மணி சுமாருக்கு இன்னும் சிலர் இறங்கவேண்டிய நிலையில் ரயில் பிடிக்கவேண்டிய அன்பர்களுக்காக, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம். அகநாழிகை வாசுவின் நண்பரான திரு.வைரவன் சிங்கப்பூரிலிருந்து இந்தப் பிரயாணத்திற்காகவே வந்திருந்தார், எங்களுக்கான உலர்பழங்கள் முதல் பல உணவுகளுக்கு அவர்தான் ஸ்பான்ஸர். யோகா கற்று பயிற்சியும் செய்துவரும் அவராலும் உடல் வலிதாண்டி மிகப்பெரிய ஒரு தரிசனம் கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார், திருமதி.வைரவன் நானும் ராஜகோபாலும் 10மணி ரயில் பிடிக்கும் அவசரத்தில் இருப்பதை அறிந்துகொண்டு இரவு உணவு வாங்கி வைத்து அவர்கள் காரிலேயே உடனே ரயில் நிலையம் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். ப்ரணவபீடம் செண்டர் வந்த உடனே நாங்கள் ஸ்வாமிஜியிடம் விடைபெற்று ரயில் நிலையம் சென்றோம். ரயில் கிளம்ப 50 நிமிடங்களுக்கு முன்பாகவே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். ரயிலில் ஏறிப் படுத்ததும் ராஜகோபால் டிக்கெட்டை என்கையில் தந்துவிட்டு உறங்கிவிட்டார், ஏசி கோச்சில் தந்த கம்பளியை இழுத்துப் போர்த்தி நான் தூங்க ஆரம்பித்தபோது, சார் என்ற குரல் கேட்டது, இது ஆர் ஏ சி உங்களுக்கும் எனக்கும் சீட்தான் பர்த் கிடையாது சாரி, என்ற சக பயணியைப் பார்த்தேன், அவருக்கு இடம் தந்து உட்கார்ந்துகொண்டேன்.

உட்கார்ந்துகொண்டே சென்னை செல்வதை நினைத்துப்பார்க்கவே கெதக்கென்று இருந்தது, ராஜகோபால் நல்ல தூக்கத்திலிருந்தார், அவருக்கும் சீட்தான் பர்த் இல்லை, அவர் தூங்குவதைப்பார்த்த அந்த இருக்கைக்குரியவரும் எங்கள் இருக்கையிலேயே அமர்ந்துகொண்டார், டிடிஇ வந்ததும் சார் பர்த் கிடைக்குமா? என்று கேட்டேன், அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, மன்னிக்கனும் சார், வெள்ளியங்கிரி ஏறி இறங்கி நேரா வண்டி புடிச்சிட்டோம் சீட்டில் உட்கார்ந்து சென்னைவரை செல்லமுடியுமான்னு தெரியல என்றேன், என்னையும் தூங்கும் ராஜகோபாலையும் பார்த்தவர், திருப்பூர் வரை வெயிட் பண்ணுங்க என்று சென்றுவிட்டார், சரியாக திருப்பூரில் இந்த சைடு பர்த்தே போதுமா வேற தரட்டுமா என்றவரிடம், இதுவே போதும் என்றேன், மற்ற இருவருக்கும் அந்த பர்த்தை தந்துவிட்டு இதிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்று டிக்கெட்டில் எழுதித் தந்துவிட்டு சென்றார், நன்றி சொல்லி படுத்தேன், ஸ்வாமிஜி சொன்ன இத்தனை மலை தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் :)) எல்லாம் அவன் செயல் என்று கனவுகள் ஏதுமற்று சென்னைவரை ஆழ்ந்து உறங்கிப்போனேன்.


சில விஷயங்கள்::

அனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது? என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் குகைகளுக்கு விஷயம் தெரிந்தவர்கள் உடனிருக்கும்போது தவிர மற்றவர்கள் தயவு செய்து செல்ல முயற்சிக்கவேண்டாம், மிகவும் ஆபத்தை விளைவிப்பதோடு, ஏதேனும் பிரச்சனை என்றால் நீங்கள் அங்கே இருப்பதே யாருக்கும் தெரியாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

நிகழ்காலத்தில் சிவா பலமுறை வெள்ளியங்கிரி சென்று வந்திருக்கிறார். எங்கள் கூடவே பிரயாணித்து எந்தக் களைப்புமின்றி சுலபமாக ஏறி இறங்கினார். மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.

இதுவரை வெள்ளியங்கிரி செல்லாதவர்கள் முதல்முறை செல்லவேண்டுமென்றால், அதற்கான ஆயத்தங்கள் மிக முக்கியம், குறைந்தபட்சம் 48 நாட்களாவது செருப்பில்லாமல் மண் தரையில் முடிந்த தூரம் வரை நடப்பது, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, படிகள் ஏறி இறங்குவது போன்றவை பிரயாணத்தை சுலபமாக்கும் என்பது என் எண்ணம். காலநேரமும் மிக முக்கியம். அனைவரும் சென்றுவரும் நாட்களில் ஏறி இறங்கும்போது ஏதேனும் ப்ரச்சனைகள் என்றாலும் உதவி கிடைக்கும். நிச்சயம் ஏற்கனவே ஏறிப் பரிச்சியம் உள்ளவரோடுமட்டுமே முதல் பிரயாணத்தை துவங்குங்கள் அற்புதமான அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஏழு மலை ஏற முடியாவிட்டாலும் பாதகமில்லை, எவ்வளவு உடல் தாங்குகிறதோ அவ்வளவு ஏறி இறங்குங்கள்.


தன்யனானேன் ஸ்வாமிஜி :))


ப்ரணவபீடம் சார்பில் ஸ்வாமி ஓம்கார் மூலம் நாங்கள் சென்று வந்த இந்தப் பிரயாணத்திற்கென்று எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனக்கு இப்படி ஒரு அற்புத தரிசனத்திற்கு இரு முறை வாய்ப்பளித்த ப்ரணவபீடத்திற்கும், அன்பின் வழி ஆன்மீகம் ஊட்டும் ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும், ப்ரயாணத்திற்காக பல விஷயங்கள் ஸ்பான்ஸர் செய்த நல்ல ஆன்மீக உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ப்ரணவபீடம் குறித்த மேலதிக தகவல்களுக்கு வலைத்தள முகவரி:


எனது கற்றுக்குட்டி எழுத்துவழி இந்த இடுகை மூலம் என்னுடன் வெள்ளியங்கிரி பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்கவேண்டிய ப்ராத்தனையோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.


எவர் எவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்?

- பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல்தென்னாடுடைய சிவனே போற்றி!


நன்றி, வணக்கம். :)))))


21 comments:

muthukumaran said...

//இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. ///

உண்மை உண்மை..

மதார் said...

நான் கால் கொண்டு நடக்கலை மற்றபடி உங்களோடு மழை ஏறி இறங்கின மாதிரி இருக்கு .

ஸ்வாமி ஓம்கார் said...

ஷம்போ மஹாதேவா...!
ஷம்போ மஹாதேவா...!
ஷம்போ மஹாதேவா...!

கொக்கரக்கோ..!!! said...

அப்பாடி............ நானும் உங்களோடு வெள்ளியங்கிரி ஏறி இறங்கிட்டேன்.....

பொன். வாசுதேவன் said...

நிறைவான பகிர்வு ஷங்கர். உடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சியும் அன்பும்...
பர்வத மலைக்கு தயாராகுங்கள்.

CS. Mohan Kumar said...

மிக விரைவாய் உங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து விட்டீர்கள்

வீடுதிரும்பல் என்கிற ப்ளாக் காரர் பத்து நாள் டூர் போயிட்டு மாசக்கணக்கா அந்த பயண கட்டுரை எழுதுறார் :)

நிகழ்காலத்தில்... said...

கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை விட நன்கொடைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அடியேனே சாமியிடம் நன்கொடை கொடுக்க விருப்பம் தெரிவித்தபோதும் அன்போடு மறுத்துவிட்டார். இந்த யாத்திரை நிகழ்வை செலவு நிச்சயம் 25000 மேல் இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் நடத்தும் பயிற்சிகள் கட்டணம் சற்று அதிகமோ என சில சமயங்களில் நான் நினைத்தது உண்டு.ஆனால் அது தவறு :) அந்தப் பணத்தின் மீதியை இன்று 36 பேர் இணையற்ற மனநிறைவை அடைய வைக்க பயன்படுத்தி இருக்கிறார். தன் பாக்கெட்டில் போடவில்லை என்பது தெரிந்தாலும்கூட உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமைந்தது:)

மற்ற சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் பிரணவபீடத்தால் பெற்றுகொள்ளப்படும் என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ளுங்கள் !!

நிகழ்காலத்தில்... said...

சங்கர்ஜி-ன் இந்த மினிதொடர் எந்த நிகழ்வையும் விடாது குறிப்பிட்டு இருக்கிறார்.

சங்கருடனான எனது உணர்வுகள் நீண்ட நாள் பழகிய நண்பர் என்ற அளவில் மிக இயல்பாக இருந்தது. காரணம் இந்த இடுகையை படித்தபோது விளங்கிவிட்டது.


\\நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது

முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது.
உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம்

அனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது? என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது\\

தத்துவங்களை படிப்பதற்கு என வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டு இருக்கும் தன்மை இருவருக்கும் பொதுவாக அமைந்ததுதான் மனநெருக்கத்திற்கு காரணம்.

கோவி.கண்ணன் said...

நிகழ்வுகளும் வருணனைகளும் சிறப்பாக இருக்கிறது.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

திவாண்ணா said...

குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.//

ஆஹா! வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவத்தை புடிச்சுட்டீங்க!

//வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் //

அடுத்து பர்த் வேணாம்ன்னு வேண்டிக்குங்க!

// இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, //

எப்பவுமே அப்படித்தான். கால்கள் சோர்ந்து போயிருக்கும் என்பது ஒன்று. ஏறுவது தம் கட்டி ஏறிவிடலாம். முடியவில்லைன்னா ஒண்ணும் பெரிசா ஆகாது. ஆனா இறங்கும்போது அது இழுத்துகிட்டு போகும். கால்களை ஊன்றி தடை செய்யாட்டா அவ்ளோதான்!

//மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.//
ஹஹஹாஹாஹ்ஹா!

அருமையான பகிர்வுக்கு நன்றி சங்கர்!

துபாய் ராஜா said...

அருமையான பயணம்.அழகான பகிர்வு. பரம்பொருள் அருளோடு பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

இன்று தான் இந்த இரண்டாம் பகுதியை முழுக்க வாசித்தேன். இலவசமாகவே இத்தனை அற்புதமான பயணமா? அருமை

பயணம் எத்தகையது என உங்கள் இரு பதிவை வாசிக்கும் போது முழுதாய் உணர முடிகிறது

எனக்கும் செல்ல ஆசை தான். அலுவலகம் + வீடு இரண்டிலும் அனுமதி கிடைப்பது தான் கஷ்டம் :((

க.பாலாசி said...

அற்புதம்.. பயணமும், தொகுத்தமையும்..

தட்டி முட்டி சதுரகிரி போயிட்டு வந்திட்டேன்.. வெள்ளியங்கிரி முயற்சி செய்யோணும்..

வவ்வால் said...

ஷங்கர்,


நல்ல பயண அனுபவ பகிர்வு. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கையில்லாவிட்டாலும், உங்களின் முயற்சிக்காகவே முழுசா படிச்சேன்.
யாருமில்லாத இடத்தில் தான் எல்லாம்ம் எளிமையாக இருக்கும்,வழிப்பாடுகள் எல்லாம் நீங்களே லிங்கம் முன் நின்று செய்வதும் சாத்தியம், அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா? செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு?

நீங்க நான் கடவுள் அகோரி ரேஞ்சில தத்துவமா சொல்லுறிங்க :-))

Ravichandran Somu said...

உணர்ச்சிபூர்வமான பதிவு. அருமை!!! வாழ்த்துகள் ஷங்கர்ஜி !!!

நிகழ்காலத்தில்... said...

\\அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா? செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு?\\

ஊரில் உள்ள கோவில்கள் எல்லாம் மந்திரங்கள், பூசைகள் மூலம் தொடர்ந்து சக்தி ஊட்டப்படுபவை.,இவற்றின் ஆற்றல் புனிதம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை

சுயம்புவாக அமைந்த கோவில்களுக்கு இவை கட்டாயமில்லை. ஆகவே ஆற்றலும் குறைவுறாது. புனிதமும் கெடாது

sathishsangkavi.blogspot.com said...

பயணமும், தொகுப்பும் அருமை...

உடன் வந்த உணர்வு...

கோவையில் 10 வருடமாக இருக்கிறேன் இன்னும் சென்றதில்லை உங்கள் கட்டுரையை படித்த உடன் நிச்சயம் போக வேண்டும் என்ற எண்ணம்....

சுரேகா.. said...

ஆஹா..அருமை!

நீங்களும் போயிருந்தீங்கன்னே தெரியாம போச்சே தலைவரே!

வாழ்த்துக்கள்!

இதைப்படிச்சாலே நல்லா இருக்கு!

துளசி கோபால் said...

அடடா.......... பயணம் முழுசும் கூடவே வந்ததைப்போல் உணர்ந்தேன்.

ஆணாக இருப்பதில் பல வசதிகள் உண்டுன்னு பொருமத்தான் செய்தேன் என்பது உண்மை.

Nondavan said...

அருமையான பயணக்கட்டுரை. நானும் பயணித்தது போன்ற உணர்வு... மிக அருமை ஷங்கர்...

Nondavan said...

என் சொந்த ஊர் கோவை தான். நான் முன்பு ஒரு காலத்தில் (10 ஆண்டு முன்பு) ஏற முற்பட்டு பாதியில் திரும்பியுள்ளேன்... உங்க டிப்ஸும் சூப்பர்... ஆயுத்தம் நிச்சயம் தேவை என்பது என் கருத்தும் கூட