பலா பட்டறை: ஈசல்..

ஈசல்..

இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தேன். பார்வை விதவிதமான கோடுகளால் நட்சத்திரங்களை வைத்துக் கோலம் போட முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. யார் யாரெல்லாம் இதைக் கண்டிருப்பார்கள்? எத்துனை கோடி வருடங்களாய் இவை சிமிட்டிக் கொண்டிருக்கின்றன? எவ்வளவு வருடங்களாயிற்று நட்சத்திரங்களைப் பார்த்து? தேடிச் சோறு நிதம் தின்று பல பாழாய்ப் போன கதைகளை யாரோ டிவியில் பேசிக்கொண்டிருக்க , வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு மின்சாரம் தொலைந்த இரவென்பது எவ்வளவு பாக்கியம். இந்த உலகில் நானும் ஒரு அங்கம் என்பதை உணர வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்றாய் எனக்குத் தோன்றியது. 

இதற்கு முன்பாக இதேமாதிரியான ஒரு ஏகாந்த சூழலை வால்பாறையிலுள்ள கரடி பங்களாவில் அனுபவித்திருக்கிறேன்.  மின்சாரமும் தகவல் தொடர்புமற்ற ஒரு ஏகாந்த மரங்கள் சூழ்ந்த இயற்கை வீடு அது. கும்மிருட்டில் மிருகங்கள், பூச்சிகளின் சப்தங்களில் கற்பிக்கப் பட்டவைகளும், கற்பிதங்களும் கரைந்து, சில்வண்டின் ரீங்காரத்திலேயே கரைவது உணர முடியும். மனிதக் குரல்களும் அதைச்சார்ந்த ஒலிகளுமாய் சூழப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு செயற்கை நரகம் என்பது விளக்கப்படும் கலவையான ரீங்காரத்தில் பிரபஞ்சத்தின் அங்கமென உணரும் தருணம். வெளிச்சமின்மையும், இருளில் கேட்க்கும் சப்தங்களும் பயமென்று உணர்த்தப் பட்டது ஏனெனப் புரியவில்லை. பேய்களும், பூதங்களும் இன்னபிறவும் மனித இனம் சார்ந்தே பெரும்பாலும் முன்னிருத்தப் படுவது சிரிப்பைத் தந்தது. சமையலறையில் ஒரு கோழியின் ஆவி சுத்திக்கொண்டிருக்கிறது என்று பயமுறுத்துவார் யாருமில்லை. கிணற்றில் குழந்தையுடன் தாயும், ஆலமரத்தில் இளம் பெண்ணின் ஆவியும், வெள்ளைப் புடவையும் மல்லிகையுமாய் எல்லாம் மனிதம் சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் தற்கொலைகளும் விபத்தும் நடந்த தண்டவாளங்களில், இரயிலில் எந்த பயமுமில்லாமல் எல்லோரும் உறங்கியபடியே செல்கிறார்கள். 

மீண்டும் நட்சத்திரக் கோலங்களை ஆரம்பிக்கிறேன். ஒழுங்கான புள்ளிகள் என்ற விஷயம் சிதறிக்கிடக்கும் விண்மீன்களை சேர்க்க முடியாமல் திணறுகிறது. பேரண்டத்தின் விளிம்பு என்பது இல்லை என்பதை , எல்லையில்லா ஒன்றை சிந்திக்க முடியவில்லை. ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இரண்டு புள்ளிகள் தேவைப்படுகிறது. எந்த அளவுகோலுமின்றி காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அல்லது நகருவதாய் எனக்கு சொல்லப் பட்டிருக்கிறது. 

ஏதோ ஒரு ஒளி பிரகாசமாய் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது., இதென்ன? ஏதேனும் பிரபஞ்ச சக்தி நம்மை நோக்கி வருகிறதா? 

”என்னங்க இங்கயா இருக்கீங்க இருட்ல பனில என்ன பண்றீங்க? சீக்கிறம் கீழ வாங்க பாட்டிக்கு முடியல..”

இது வழக்கமானதுதான். பாட்டி எப்பொழுதுமே இப்படித்தான். தன்னை யாருமே கவனிக்கவில்லை என்றால் ஏதாவது செய்தே தன்மேல் மொத்த கவனத்தையும் வாங்கிக்கொள்வாள். நான் மெதுவாய் படிகளில் இறங்கி பாட்டி இருக்கும் அறைக்கு வந்தேன். ”காசித்தண்ணி தரலாமாடா?” என்ற அம்மாவைப் பார்த்து சிரித்தேன். ஐந்து சிறிய காசித் தண்ணீர் சொம்புகள் சாமி அறையில் ஏற்கனவே காலியாய் கிடக்கிறது. 

அருகில் சென்று பார்த்த போது பாட்டியின் நெஞ்சு குழியின் அசைவு மட்டுமே தெரிந்தது. என்ன இது மரணத்தின் பிறப்பா? இவளின் தொடர்பு முடியப்போகிறதா? மெதுவாய் அவளின் கைகளைப் பற்றினேன். பஞ்சுபோல வெளிறிக்கிடந்த அந்த உள்ளங்கைகள் மெதுவாய் திருப்பி வருடிக்கொடுக்கும்போது நரம்புகள் புடைத்த மேடுகளில் ஏதோ ஒரு துடிப்பு உணரமுடிந்தது. நட்சத்திரங்களை வைத்து நிறைய கதைகள் சொன்ன பாட்டிக்கு இப்பொழுது கண் பார்வை முற்றிலும் போயிருந்தது. தான் முன்னர்கண்ட நட்சத்திரங்களை வைத்து அவள் ஏதேனும் கோடுகள் போட்டுக்கொண்டிருக்கலாம். 

சட்டென்று பாட்டியின் கை தளர்வாய் விழுந்தது. ஒரு முழு சுற்று வாழ்க்கை என் மனதில் வந்துபோனது. இனி என்ன? எல்லோரும் வருவார்கள். மார்பிலடித்து அழுவார்கள். மாலைகள் விழும். குளிப்பாட்டி, தூக்குவதற்கான அலங்காரங்கள் செய்து, மின்சாரத்தில் சாம்பலாக்கி, ஒரு டப்பாவில் அடைத்து , கடலில் கரைத்து, மந்திரங்கள் சொல்லி,. எல்லோரும் சாப்பிட்டு, அவளின் கதைகள் சொல்லி, வீடுகழுவி நினைக்கும்போதே எனக்கு அயற்சியாக இருந்தது. 

பெரியம்மா, சித்தி, பாட்டியின் தம்பி என்று எல்லாரும் வரத்தொடங்கி இருந்தார்கள். அழுவதற்குத் தயாராகும் பிரயத்தனங்கள் தெரிந்தது. மூச்சு நிற்க வேண்டியதுதான் பாக்கி. 

எப்பொழுதும் தன் அருகே வைத்திருக்கும் பையில் தடவித் தடவியே சரியான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பாட்டி அன்றைக்கு முழுதாய் 10 தூக்க மாத்திரைகளை விழுங்கியிருப்பதாகப் பட்டது எனக்கு. அந்த மாத்திரைகளை நான் நேற்றுதான் வாங்கித் தந்திருந்தேன். கிழிந்த அந்த மாத்திரைக் கவரைக் கண்டதும் எனக்குத் தூக்கிவாறிப் போட்டது. இதென்ன 89 வயதில் தற்கொலையா? பாட்டியின் அருகே எல்லாரும் விசும்பல்களோடு அவள் மேல் பாசம் பொழிந்துகொண்டிருந்தார்கள். இதை நான் யாரிடம் சொல்வது? எனக்குப் பாட்டியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. பீயும், மூத்திரமுமாய் படுத்த படுக்கையிலிருந்து 15 வருடங்களாய் அள்ளிக்கொட்டிய என் அம்மாவைப் பரிதாபமாய்ப் பார்த்தேன். தற்கொலைதான் விருப்பமென்றால் எப்பொழுதோ செய்திருக்கலாமே? இவ்வளவு நாள் எல்லாரையும் ஏன் படுத்தவேண்டும். 

மெதுவாய் மேலேறி இறங்கிய நெஞ்சுக்குழி சுத்தமாய் அடங்கி இருந்தது. வாய் பிளந்து, கண்ணோரம் ஈரக்கசிவுடன் இருந்த பாட்டியின் கண்களை மெதுவாய் மூடினேன். நான் பிடித்திருந்த இடது கையை எடுத்து அவளின் மார்மேல் வைத்துவிட்டு, வலது கையைத் தூக்கும்போது கவனித்தேன் உள்ளங்கை மூடி இருந்தது. ஒவ்வொரு விரல்களாய் பிரிக்கும்பொழுது உள்ளே அந்த பத்து மாத்திரைகளும் நட்சத்திரங்களைப் போல வெளீரென்று கும்பலாய் பத்திரமாய் இருந்தது.     


.

22 comments: