பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காசி.

ஒரு பரதேசியின் பயணம் - 7. மஹா கும்பமேளா 2013 & காசி.

 திருச்சிற்றம்பலம்.சற்றொப்ப ஒரு வருடம் நிறைவடையப் போகிற நாளில் மஹா கும்பமேளாவுக்காக சென்று வந்ததை எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. இதுவும் முழுமையாக இருக்குமா என்று தெரியாது. இது போன்ற பயணங்கள் பற்றி உணர்ச்சி மேலிட, ஆன்மிக உன்னதமாக பலர் எழுதி இருக்கிறார்கள், என்னுடையது ஒரு பயணப் பகிர்வாகத்தான் இருக்கும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஓரிடத்திற்குச் சென்று வந்ததுமே அதைப்பற்றி எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இந்த கும்பமேளா, காசி பயணம் முடிந்து வந்ததும் உள்ளே தோன்றவில்லை. ஏனென்று தெரியவில்லை. சரி என்று உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து அப்படியே விட்டுவிட்டேன். இன்றைக்கு ஃபேஸ்புக்கில் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் சமீபத்தில் காசி பயணம் சென்று வந்து உடன் அழைத்துச் சென்றவர்களிடம் ஏன் ஒருவரும் பயணம் பற்றி எழுதவில்லை என்று கேட்டிருந்ததைப் படித்ததும், உள்ளே சரி, எழுதிடுப்பா என்று ஒரு குரல் சொல்ல, இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தக் கும்பமேளா பயணத்திற்கும் ஸ்வாமி ஓம்கார் அவர்கள் ஒரு மிக முக்கிய காரணம் என்பதும் இங்கே கூடுதல் தகவல்.

நானும். நண்பர் அகநாழிகை.பொன்.வாசுதேவனும் சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து அலகாபாத்திற்கு கும்பமேளாவில் கலந்துகொள்ள ரயிலில் சென்று இறங்கியபோது நள்ளிரவாகிவிட்டிருந்தது, ரயில் நிலையமெங்கும் மக்கள் கூட்டமாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள், ரயிலிலிருந்து இறங்கிய அளவிற்கு மீண்டும் ரயில் உள்ளே மக்கள் ஏறிக்கொண்டிருந்தனர். மிகப்பெரிய அளவிலான ஒரு காளைமாடு சாவகாசமாக ரயில் நிலையத்தினுள் வந்துகொண்டிருந்தது அவ்வளவு ஜனமும் அதற்கு ஒதுங்கி வழிவிட்டார்கள். நல்ல குளிர் கூடவே ஓரளவு உடல் நனையும் மழை. எங்கே தங்கப்போகிறோம் என்று தெரியாது. நல்ல பசி, மொழி தெரியாது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ரயில் நிலையத்தின் எதிரே உள்ள கடையில் முதலில் சாப்பிட்டுவிடுவோம், பிறகு கடை மூடிவிட்டால் எதுவும் கிடைக்காது எனவே ’அகம் பசியாஸ்மி’ என்று சாப்பிட உட்கார்ந்தோம்.


எதிரே உள்ள ரயில் நிலையத்தில்தான் சில நாட்களுக்கு முன்பாக ப்ளாட்பாரம் மாற்றி ரயில் வந்ததால் முண்டியடித்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருந்தனர். ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி கும்பமேளாவிற்கு வந்தாயிற்று, இனி, இது முடித்து காசி வேறு செல்லவேண்டும், கங்கையில் குளிக்க வேண்டும் அந்த நதி நல்ல நாளிலேயே பிணங்கள் மிதக்குமாம், இப்பொழுது கும்பமேளா நேரம் வேறு இப்பொழுது வந்தது பிழையா? பிணக்குவியலினூடேதான் கங்கையில் குளித்துப் பாவம் கரைக்கப் போகிறேனா? உண்மையில் எதற்குத்தான் இங்கே வந்தேன்? கும்பமேளாவும், காசியும் எனக்கு என்ன தரப் போகிறது? சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தோம். ’சங்கம்’ என்று சொல்லப்படும் இடத்திற்குத்தான் அனைத்து வண்டிகளும் மக்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல், ஒவ்வொரு குரு, ஏகப்பட்ட பாவங்கள், ஒரே நோக்கம் திரிவேணி சங்கமம். அங்கே குளிப்பது, பாவத்தைத் தொலைப்பது. அந்த இரவிலும் எங்களுக்கு ஒரு ஷேர் ஆட்டோ கிடைத்தது. ஸ்வாமி ஓம்காரின் அலைபேசியை அழைத்துப் பார்த்தோம் கிடைக்கவில்லை. மற்றொரு இடம் ப்ளான் 'பி' நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். அந்தப்பெயர் சொன்னாலே மிகப் பிரபலம் வண்டிக்காரர்களே கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்ததால், கெத்தாகப் போய் ஆட்டோவாலாவிடம் சொன்னோம், அவர் மேலும் கீழும் பார்த்து 'மாலும் நஹி' 'சங்கம்' சங்கம் என்றார். தெரியாத சாலையில், தெரியாத இடத்தில் பெருவாரியான மக்கள் செல்லும் இடமே மிகப்பெரும்பாலும் நம்முடைய பாதையாக இருக்கும் என்றதனடிப்படையில், வருத்தப்படாத வாலிபர்களாக சங்கத்திற்குச் செல்வோம் என்று முடிவெடுத்தோம்.
நல்ல பனி விழுந்து புகை மூட்டம்போல மெர்க்குரி விளக்கு ஒளி உமிழ்ந்த ஒரு மிகப்பெரிய இடம் எங்களின் வலப்பக்கம் தடுப்புகளுக்கு உள்ளே தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. வரிசையாக டெண்டுகள், இதுதான் சங்கம் என்றார்கள். அதாவது கங்கை நதி தனது அகலத்தைக் குறைத்துக்கொண்ட கரையின் இருபக்கமும் கூடாரங்கள் அடித்து மின் விளக்குகள் பொருத்தி, அதிலேயே சாலைகள் அமைத்து, கங்கையைக் கடக்க மிதவைப் பாலங்கள் அமைத்து, அதைப் பல செக்டார்களாகப் பிரித்து, அதற்கு ஆல்பாந்யூமரிக்கல் அடிப்படையில் அடையாளம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான காவலர்கள், ராணுவ வீரர்கள் துணையுடன் காவல் காத்து அங்கே பல லட்சம் மக்களையும், சாதுக்களையும் தங்க வைத்து கும்பமேளாவிற்கு அவர்களின் பூஜைகளையும், நேர்த்திக் கடன்களையும் தீர்க்க ஒரு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடத்திற்குப் பெயர்தான் 'சங்கம்'.இந்த ஆளரவமற்ற இரவு நேரத்தில், பல்லாயிரக்கணக்கான டெண்டுகளில் எங்கே ஸ்வாமி ஓம்காரைத் தேடுவது? நள்ளிரவு தாண்டிய 2 மணிக்கு எங்கள் முன் இருக்கும் ஒரே வழி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்தான், அந்த சத்திரத்தின் விலாசத்தைச் சொன்னால் ஆட்டோக்காரர் முதற்கொண்டு, அந்நேரத்திலும் காவல் காத்த போலீஸ் வரை யாருக்கும் தெரியவில்லை, அநேகமாக அவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும். கனத்த பைகளுடன் ஒருமாதிரி நாங்கள் சொன்ன இடத்தில் ஆட்டோ ஓட்டுனர் எங்களை இறக்கிவிட்டபிறகு சுற்றித் திரிந்தோம். பல அலைச்சலுக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகை எழுதப்பட்ட அந்தச் சத்திரம் எங்களுக்குப் புலப்பட்டது. பலமுறை கதவு தட்டி இனி கதவு திறக்காது, இந்தக் குளிரில், மழையில் ஒதுங்க இடமில்லாமல் தூக்கத்தைத் தொலைத்து, சபிக்கப்பட்ட இரவாகப்போகிறது என்று துவண்ட நேரத்தில் சத்திர மேலாளர் கதவைத் திறந்தார். ஏற்கனவே அவரிடம் தொலை பேசி இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் அவர் தங்கி இருந்த அறையிலேயே எங்களையும் படுத்து உறங்கச் சொன்னார். நன்றி கூறிப் படுத்ததுதான் தெரியும். காலை 6 மணிக்கு முழிப்பு வரும் வரையில் கனவு கூட வராத ஆழ்ந்த உறக்கம்.

காலையில் ஸ்வாமி ஓம்கார் அவர்களைத் தொடர்புகொள்ள முடிந்ததால், அவர் வழிகாட்டுதல் படி அவர் சங்கத்தில் தங்கி இருந்த செக்டாருக்கு நடந்து செல்ல ஆரம்பித்தோம். இரவில் ஆளரவமற்று அமைதியாக இருந்த ஊர் அதனளவிற்கு பல்லாயிரம் மடங்கு மக்களை எங்கே பதுக்கி வைத்திருந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. 

எங்கெங்கு நோக்கினும் மக்கள். சாரி, சாரியாக, சாரியிலும் ,வேட்டியிலும் ,பைஜாமாவிலும் ,பேண்ட் சர்ட்டிலும், அதுகூட இல்லாமலும் சங்கத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். கங்கையைக் காண ஆவலுடன் கங்கையின் கரையிலேயே நடந்துகொண்டிருந்தோம், நாங்கள் நடந்துகொண்டிருந்ததே கங்கை ஓடும் பாதைதான், இது கரையல்ல என்று அப்பொழுது தெரியாது. வெள்ள காலத்தில் நாங்கள் நடந்துகொண்டிருந்த இடத்தில் ஆக்ரோஷமாக இந்த நதி பொங்கிப் பாயும் என்று பின்னர் அறிந்துகொண்டோம். நாங்கள் செல்ல வேண்டிய செக்டர் 12ற்கான மிதவைப் பாலத்தில் முதன் முறையாக கங்கையைக் கடக்கிறோம். அடேங்கப்பா, நதியின் அகண்ட அந்தப் பிரம்மாண்டம் கண்களில் நிறைகிறது. சலனமில்லாமல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்கிறது. பளிங்கு போல நீர், கிட்டத்தட்ட முப்பது நாட்களாக கும்பமேளா நடந்துகொண்டிருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் குளித்து முடித்துச் சென்ற இடம், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் குளிக்கப்போகிறார்கள், கரையின் இரண்டு பக்கமும் கூடாரம் அமைத்து தங்கி இருக்கிறார்கள். காலைக்கடன் முதல், துணி அலசி, சாப்பாட்டுப் பாத்திரங்கள் கழுவுவது வரை அங்கே கோடிக்கணக்கான முறை நடக்கிறது. ஆனாலும் நீர் பளிங்கு போல சுத்தமாக இருக்கிறது. கரைகளில் நீத்தார் கடனுக்காக அவர்கள் விட்ட சாமந்திப் பூக்கள் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. எல்லாவற்றையும் இந்தப் பிரம்மாண்ட மகாநதி தன்னுள்ளே விழுங்கி தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்வதாகவே பட்டது. மனிதன் தன்னை அசுத்தப்படுத்துவது நதிக்குப் புதியதா என்ன? 


மீண்டும் ஒரு தேடுதல் படலம் ஆரம்பமகியது, ஓம்கார் அவர்களின் குடிலைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். தற்காலிகமாகப் போடப்பட்டிருந்தாலும், சாலைகள், குடில்கள் எல்லாம் ஒரே போல இருந்ததாலும் அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டு ஒரே இடத்தை வித விதமாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்ததும் ஒரு காரணம். எங்கெங்கு காணினும் முகங்கள், முகங்கள், சலிக்காமல் எதிரே வந்துகொண்டே இருந்த மக்கள் வெள்ளம். இரவில் இருந்த குளிர் இப்பொது இல்லை, நல்ல சுட்டெரிக்கும் வெயில், இதென்ன இங்கே பருவ நிலை இப்படி இருக்கிறது? என்று நினைத்துக்கொண்டே ஒருவழியாக ஓம்கார் அவர்களின் குடிலின் அருகாமையில் வந்ததும் அலைபேசினோம், அவரே வந்து எங்களை அழைத்துச் சென்றார். அழகான தற்காலிக டெண்ட் அடித்து, அருமையான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சிஷ்யர்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆகா, கும்பமேளாவிற்கு வந்துவிட்டோம், ஜனத்திரளையும் பார்த்தாயிற்று, இனி திரிவேணி சங்கமத்தில் குளித்துவிட்டால் சாதனை முடிந்தது என்ற இறுமாப்பில் ஸ்வாமிஜியிடம் "என்னா ஜனம் சாமி, எவ்ளோ பெரிய நதி? கும்பமேளா ஆஸம், பட் வெதர்தான் நேத்து நைட்டுக்கு இப்ப தலைகீழா இருக்கு என்று சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டே, நாங்க இங்க வந்து ஒரு மாசம் ஆகுது, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி தட்பவெப்பம் மாறுது என்றார். ஒரு வாரத்திற்கு முன் பெரு மழைபெய்து தற்பொழுது டெண்ட் இருக்கும் இடத்தில் பாதி அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கால்வாசி மக்கள் உயிர்பயத்தில் கிளம்பி விட்டார்கள் என்றும் தற்பொழுது நாங்கள் காண்பது 25 சதவீத மக்கள்தான் என்றபொழுது நடு மண்டையில் நச்சென்று குட்டியதுபோல இருந்தது. ஆக, சாவகசமாக எல்லா வசதிகளோடு இருக்கும் நிலையில்தான் எங்களுக்கு இங்கே வரும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. சரி குளித்துவிட்டு வாருங்கள், சாப்பிடுவோம் என்று ஸ்வாமிஜி அவரின் மாணவர்கள் இருவரோடு எங்களை அனுப்பி வைத்தார். 
பல தலைமுறைகளாக இங்கேயே வசிப்பதைப் போலவே மக்கள் சாவகாசமாக டெண்டுகளில் வசிக்கத் துவங்கி இருந்த பல சிறிய டெம்பரவரி தெருக்களின் வழியாக திரிவேணி எனப்படும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு நானும், வாசுவும் குளிக்கச் சென்றோம்.(தொடரும்..)

0 comments: