பலா பட்டறை: பறவை மனசு..

பறவை மனசு..”எத்தினி வருஷம்ணே ஆச்சு நீங்க வந்து? ”

”அது ஆச்சு தம்பி பத்து வருஷம், அட நாள் கண்ணக்கெல்லாம் ஆரு பாக்கறா? எழுந்தோமா வேல செஞ்சோமா, கிடைக்குற கேப்புல பயலுங்ககூட விளாண்டோமான்னு பொழுது போகுது. மொதல்ல உனக்கும் அப்படித்தான் இருக்கும், போகப் போக பழகிடும். ”

”நான் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லண்ணே.”

”அட நான் மட்டும் என்னப்பா? வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா? பொலம்பறத நிறுத்து. அது மனசுல சீக்கு புடிச்சுடும். எது கிடைச்சிதோ அத அனுபவி. அங்கிட்டும் இங்கிட்டும் வித்தியாசம் ஒன்னுமில்ல. படிச்சவன் நீயி, உனக்கு நாஞ் சொல்லித்தரவேண்டியதா இருக்கு பாரு.”

”எந்த ஊர்ணே நீங்க?”

” பேச்ச வெச்சி கண்டுபிடிக்க முடியலல்ல?, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற? பீடி குடிக்கிறியா? ”

”பழக்கமில்லண்ணே”

”நல்லதுதான். மருவாதைக்கு சொல்றதா இருந்தா வேணாந்தம்பி, எனக்கு அப்படியெல்லாம் வயசு வித்தியாசம் பாக்கத்தெரியாது. என்னப்பொறுத்தவரைக்கும், படிச்சவன சார்னு சொல்லுவேன் அவ்வளவுதான்”

”பத்து வருஷமா இருக்கீங்களே, எப்படின்ணே முடிஞ்சிது.?”

“எல்லாம் ஒண்ணுதான் தம்பி. இடையில ஒரே முறை போயிருக்கேன். வீட்டுல யாருமே சேர்த்துக்கல, சர்தாம் போங்கடான்னுட்டு ஒரு ஓட்டல்ல ரூம் எடுத்தேன். அட அப்பத்தான் எதோ மனசுக்குத் தெரிஞ்சிது. சட்டுனு வெளில வந்து ப்ளாட் பாரத்துல படுத்தேன். இடுப்புத்துணி நவுந்தது தெரியாம நிம்மதியா தூங்னினேன்னா பாத்துக்க.”

”புரியலண்ணே”

” அட இங்க நாலு செவுத்துக்குள்ள இருக்கறோம் ஜெயிலுங்கறான். வெளில அந்த நாலு செவுத்தையும் பார்டர்ன்னுட்டு நாடுங்கறான். மொதல்ல எனக்கும்தான் புரியல மார்ல அடிச்சிக்கிடு அழுவேன். ஆனா அந்த ஓட்டல்ல கதவெல்லாம் தாப்பாப் போட்டு ரூமுக்குள்ள இருக்கும்போதும் செல்லுல அடச்சி வெச்சிருக்கறாமாதிரியே இருந்துதுப்பா. ”

”நீயே சொல்லு விடுதலைன்னா என்ன? உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம்? நல்லா ரோசனை பண்ணு, வெளில உன்ன ஏமாத்த பெருங் கும்பலே இருக்கு. ஆனா இங்க நீ ஏமாத்துவியான்னுதான் பார்த்துகிட்டே இருக்கான். இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான். கடசி முச்சூடும் இங்கயே என் காலம் கழிஞ்சா சந்தோஷந்தான். அட எனக்கு விடுதலையே வேணாந்தம்பி“

நான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.

.

39 comments: