பலா பட்டறை: என்னமோ எழுதுகிறேன்...

என்னமோ எழுதுகிறேன்...

பார்வை இன்றி
ஒலி கேட்க முடியாதவனுக்கு

கடவுளும், வேதங்களும்
ஸ்பரிசத்தை தீட்டாக்கும்போது

உங்கள் மொழியும் என் மொழியும்
என்னத்தை கிழித்துவிடும்?

கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு

உருவமில்லாத மனமோ
நிறங்களைச் சூடிக்கொள்கிறது..


--


வாடா பேராண்டி

வாஞ்சையுடன் கன்னம் தடவும்
கண்தெரியாமல் போன என் பாட்டி

கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

--

ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..

எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்

உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..


.

37 comments: