பலா பட்டறை: இரண்டாம் பாவம்....

இரண்டாம் பாவம்....அமைதியாய் உலகத்தையும், பரந்த வெளியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாயிரம் சிந்தனைகள் மனதினுள்ளே புயலாக அடித்துக் கொண்டிருந்தது.  அடுத்தது என்ன செய்யப்போகிறேன்? எப்படி வாழ்வு நகர்த்தப்போகிறேன்? நானும், வெறுமையும் நேருக்கு நேர் உட்கார்ந்திருந்தபோது. கற்றுக்கொடுக்கப்பட்டவை எல்லாமே குப்பையாகிப்போனது.

என்னால் எதுவும் செய்யமுடியாத முடிவின் ஆரம்ப ஆட்டம் தொடங்கியதை விருப்பு வெறுப்பின்றி வெறுமனே எதிர்கொள்ள முடியாத அளவுக்கு சக்தியற்றுப்போயிருந்தேன். அன்பினால் என்னை அரவணைத்தவர்கள் அதிகமில்லை என்றாலும், தாயில்லாமல் தாயாகவும் இருந்த தந்தையை நினைக்க நினைக்க துக்கம் பொங்கியது.

"நல்லா படி. நல்லா வருவ. துரோகமும் குரோதமும் வேண்டாம். "

"சரிப்பா."

"நீ எதுவேண்டுமானாலும் ஆகிக்கொள் அதில் மனிதனாய் இருக்க முடியுமா என்பது மட்டுமே உன் சரி பார்த்தலாய் இருக்கட்டும். "

பாதிரியாய் இறை தொண்டில் என்னை பார்க்க அவர் ஆசைப்பட்டாலும், துரித கதியில் மனிதர்களைக் கொல்லும் ராணுவத்தில் நான் சேர்ந்தது நாங்கள் இருவருமே எதிர்பார்க்காதது. அபரிமிதமான படிப்பும், மூளை உபயோகமும் என்னை அங்கே இணைத்துவிட்டது. ஒருவேளை இப்போது நான் இருக்கும் இந்த நிலைமைக்கும் என்னுடைய பாவச் செயலே காரணமோ?

மீண்டும் கண்கள் பிரபஞ்சத்தில் நிலை குத்தியது. அப்பா உலகைக் சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டார். நான் ராணுவத்தில் பல பரிசோதனைகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தேன். உடல் தசைகளின் வலிமையை அணு அணுவாய் பரிசோதிக்கும் ஒரு செயற்கை நீர் தொட்டியின் ஆழத்தில் பிராணவாயு குழாயில் ஏற்பட்ட பிரச்சனையின்போது பதட்டத்தில் மெதுவாய் மேலே வரவேண்டிய வழிமுறையை கைவிட்டு அவசர அவசரமாக வெளிவந்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில், மெல்லக் கண் விழிக்கும் போது காதலாய் அருகிலிருந்த ஜெனீபருக்கு நான் பரிசளிக்க வேண்டிய மோதிரத்தை இதோடு நூறாவது முறையாகப் பார்த்துவிட்டேன்.

நாடகம் முடியப்போகிறது. எப்போது என்பதே கேள்வி. அடுத்தது என்ன என்பதை யார் அறிவார்? இதோ இந்த உலகத்தில் மறுபடி எங்கேனும் நான் பிறக்கக்கூடும். மனிதனாகவோ மற்ற எதுவாகவோ. அல்லது இல்லாமலும் போகலாம். இருப்பதைக்கண்டுபிடித்து பெயர்கள்வைத்த அறிவியல், என் முடிவை தோல்வி என்று ஒப்புக்கொள்ளாமல் சோதனையில்  தவறென்று வாதிக்கும். தன்னை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளும் இந்த உலகத்தின் நானும் என்னை இந்த நிலையில் வைத்து காட்சிப்பொருளாக்கி இருக்கும் விஞ்ஞானமும் வாயெல்லாம் மிட்டாய் பிசுபிசுப்பில் கையில் பலூன் கொண்டு ராட்டினம் பார்க்கும் குழந்தையே அன்றி வேறல்ல என்ற எண்ணம் தோன்றியவுடன் என்னுடைய கடைசி சிரிப்பு முகத்தில் வந்து போனது.      

ஜன்னலிலிருந்து பார்வையை கணினிப் பக்கம் திருப்பினேன். நீலமாய் இருக்கும் பூமிப்பந்தினை மொத்தமாய்க் கடல் முழுங்கி விட்டிருந்தது. எவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத ஒரு கோரத் தாண்டவம். இவ்வளவு நாள் இந்த நீர் இந்த உலகில் எங்கு இருந்தது? யாரிடம் நான் போய் கேட்பேன்? விடை தெரியாத கேள்வியை மனதில் சுமந்தபடியே என்னை சுமந்து கொண்டு இந்த பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது இந்த வின்வெளி ஓடம்.

இவை எதுவும் அறியாது உறங்கும் கேப்ஸ்யூலிலிருந்து "ஹாய் ஷான்" மிதந்தபடியே வந்த ஜெனியை பிடித்தபடியே அந்தரத்தில் மண்டியிட்டு, கணினியை மறைத்து  மோதிரம் காட்டி...                    "வில் யூ மேரி மீ" என்றேன்.கையை விரித்தவள் கையில் ஒரு ஆப்பிள் iPod இருந்தது..

50 comments: