பலா பட்டறை: மரணஜீவிதம்..

மரணஜீவிதம்..அம்மா என்னோட ஹேர்க்ளிப் எங்க? இதோடு மூன்றாவது முறையாய் கத்திவிட்டாள் ஸ்வாதி. அவனுக்கு அவள் குரல் மாடியில் தெளிவாய் கேட்டது. குரல் கேட்க்கும்போதே மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது.

காதல் உள்ளே நுழையும் முன்பு வரை ஒரு ஆச்சரியம் நுழைந்த பின்னோ அது மரண அவஸ்த்தை. இதுவரையிலும் நட்பாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனி என்ன ஆகுமோ எனத்தெரியாது. ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே முடிவு செய்திருந்தான். இன்றைக்காவது அவளிடம் சொல்லவேண்டியதுதான்.

தனியாய் ஒரே பிள்ளையாய் அதுவும் சகோதர சகோதரி பொறுப்புகளும் தொல்லைகளுமில்லாத ஆண் மகனாய் பிறப்பவனுக்கு அழகாய் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அன்பு பொழிகிறது. நட்பாக ஆரம்பித்து காதலாய் அது மாறுமா என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யங்கள் சுகமான மரண அவஸ்த்தை,

மரண அவஸ்த்தை. ஆச்சர்யமாய் இருந்தது அவன் யோசிப்பு. மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன். அவனே கேட்டுக்கொண்டான். ஒஹ் புரிந்துவிட்டது. இந்த வாழ்வு. யெஸ் இந்த வாழ்வு இந்த பிறப்பின் பூரணம் மரணம். அதை நோக்கியே இந்த உயிர் வளர்கிறது, சிரிக்கிறது, அழுகிறது, அகங்காரம் கொள்கிறது, அன்பு கொள்கிறது, அழிவு செய்கிறது, ஆக்கம் செய்கிறது, அடுத்த மரணத்தினை தயாரிக்க கூடல் கொள்கிறது, மரணத்தை குழந்தையாய் பெற்று கொஞ்சுகிறது, தாலாட்டி சீராட்டி, மரணமில்லா பெருவாழ்வு போதனைகள் புகுத்தி மகனே உன் சமர்த்து என்று இந்த உயிர் கோளில் மேய விடுகிறது. உயிருடன் இருக்கிறதா என்று தினமும் மரணத்தின் வளர்ச்சியை கவனமாய் பாதுகாக்கிறது.      

மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தலையை உதறிக்கொண்டான். ஏன் இறப்பு இங்கே அழுகையாய்ப் போனது? மீண்டும் உள்ளே கேள்வி எழுந்தது. ஒரு தொடர்பு விட்டுப்போவதாலா? இறப்பதற்காகவே உயிர் என்பது வாழ்கிறது என்பதை மறந்து இறப்பை வெல்லவே உயிர் வாழ்கிறேன் என்பது போதையாய் மரத்துப்போனதா? அதிகபட்ச ஆசையென்பது இதுதானா? தொடர் உயிர் வாழ்தலில் சாதிக்கப்போவதென்ன? அல்லது வெறும் அதிக பட்ச 100 வருட் உயிர் வாழ்தலுக்கே மனமும் தயாராகிவிட்டதா? அதன்பிறகும் என்ன செய்வதெனத்தெரியாமலே இறப்பு பிறக்கிறதா?

ஒரு காதலிக்கும் பெண்ணின் குரல் கேட்டால் மரணம் பற்றிய சிந்தனைகள் யாருக்கேனும் வருமா? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வேளை எல்லாருக்குமே இப்படி ஒரு எண்ணம் வருமா? மறைத்து வெளியில் சொல்லாது தன் வேலை தன் காதல் தன் சம்பாத்தியம், கிரிக்கெட் என்று சுலபமாய் தாண்டுகிறார்களோ? அல்லது என் யோசனையே தவறா?  

அம்மா டைம் ஆச்சு வர்ரேன். ஸ்வாதி தெரு இறங்கும் குரல் கேட்டது.

நேரே அவள் பின்னாலே சென்றான். அவள் ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். அப்போதுதான் கிளம்பி விட்டிருந்த பஸ்ஸில் அனைவரும் ஏறிச்சென்று விட்டிருந்தனர். காலியாய் இருந்த அந்த பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்தவாரே மெதுவாய் செல்போனை எடுத்தாள் ஸ்வாதி. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவள் திடீரென ஒரே படத்தை வெறித்துப் பார்த்தாள் அது அவனுடைய படம். எப்போது இதை எடுத்தாள். என்னை ஏன் கவனிக்கவில்லை, ’கிறீச்’சென்ற சப்த்தத்துடன் ஒரு பஸ் வந்து நின்றது. சட்டென கவனம் கலைந்து இருக்கையிலிருந்து எழுந்த ஸ்வா அவனுள்ளே புகுந்து நேரே எழுந்து பஸ்ஸில் ஏறினாள். தன்னுள் அவள் புகுந்து போனதை அதிசயித்தவாறே அவன் மெதுவாய் திரும்பினான். புகை கக்கிக்கொண்டு பஸ் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தது. அவன் காத்திருந்தான்.

--

”இங்கதான் இருக்கீங்களா?” ஸ்வாதி கேட்டபடியே பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்தாள். அவன் திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான்.

”ஹலோ ஷான் உங்களத்தான், என்ன அப்படிப் பார்க்கறீங்க?”

“ ஹாய் ஸ்வா..”

”உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.. ” என்றாள் ஸ்வாதி.

அவன் சிரித்தான். ”நானும்தான்” என்றான்.

---

அன்றைக்கு மொத்தம் மூன்று குண்டுகள் ஹோட்டல், மார்கெட் மற்றும் பஸ்ஸில் 68 பேரை பலிவாங்கி இருந்தது.


.

41 comments: