.
மீடியம்
எள்ளுப்பாட்டி எழுந்துவந்தாள்..
”என்னடா பேராண்டி சவுக்கியமா?” என்றாள்..
”சவுக்கியம் பாட்டி” என்றேன்.
“குழந்தைகள் எல்லாம் சவுக்கியமா?” என்றாள்.
“குழந்தைகளா, குழந்தை ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு” என்றேன்..
”என்னடா கருமாந்திரம் இது? பத்து குழந்தைகள் பெத்துக்கக்கூடாதா? ஒரே குழந்தைய பெத்துக்கிட்டு இதுக்குப்பேரு குடும்பமாடா? ”
”சரி விடு பாட்டி. வீட்டுக்குள்ள வா”
”இருடா கொல்லைல போய் கால் கழுவிட்டு போகலாம்..”
”கொல்லையா? இது அடுக்கு வீடு பாட்டி. ஆறாவது மாடில வீடு.”
”அப்ப மலஜலம் கழிக்கறதுக்கு ஆறுமாடி ஏறி இறங்கனுமாடா?”
”இல்ல பாட்டி வீட்லயே அட்டாச்டா பாத்ரூமும், டாய்லெட்டும் இருக்கு..”
”அட கிரகம் பிடிச்சவனே வீட்டுக்குள்ளயே வெளிக்குப் போகனுமா? ஏண்டா புத்திகித்தி கெட்டுப்போச்சா? நாறாது? வியாதி வராது? ”
”அய்யோ நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் பாட்டி? அதெல்லாம் பைப் வழியா காவாய்ல விட்டுடுவோம்”
”சரி வா ஆத்துக்குப் போய் குளிச்சிட்டு துவைச்சிட்டு தண்ணி எடுத்துக்கிட்டு வரலாம்..”
”அதெல்லாம் வேணாம் பாட்டி இங்க ஆத்துல தண்ணி இருக்காது, அப்படியே இருந்தா அது கழிவு நீர் ஓடும் ஜீவனில்லாத நதியா இருக்கும்.”
”ஓ நீங்க வீட்டுக்குள்ள கழிக்கறத, ஆத்துக்கு அனுப்பறீங்களா? நாசமாப் போச்சு, அப்ப குடிக்கற தண்ணி?
”
”அது பைப்ல வரும். இதோ இந்த மெசின்ல போய் சுத்தப் படுத்தி அப்புறம் குடிக்கவேண்டியதுதான். துவைக்க இந்த மெசின்ல போட்டா போதும் துவைச்சி காய வெச்சிக்கொடுத்துடும்.”
”அப்ப சாப்பாடு..”
”இதோ இந்த ஐஸ் பெட்டில இருக்கு, அத இந்த பெட்டில வெச்சா சூடாக்கி சாப்ட்டுடலாம். எல்லாம் கரண்ட்டு”
”அப்ப அது போனா விறகா?”
”அதெல்லாம் எதுக்குப் பாட்டி, இதோ கேஸ் இப்படி திருகினா எரியும். சமைச்சிக்கிலாம்.”
”தலை சுத்துதுடா பேராண்டி, நாங்கல்லாம் எப்படி வாழ்ந்தோம். இப்படி சீரழிஞ்சு கெடக்கறீங்களே? ”
”சரி அப்ப வீட்ல என்னதான் பண்றீங்க? ”
”இதோ இந்தப் பெட்டில சீரியல் பார்ப்போம் பாட்டி..”
”சீரியல்னா? ”
”அதான் குடும்ப கதைங்க..”
”ஓஹ் அடுத்தவீட்டு வம்ப திண்ணைல உக்காந்து நாங்க பேசின பேச்சு மாதிரி இப்ப இந்தப் பெட்டில வந்துடுதா?”
”ஆமாம் பாட்டி. ”
”சரி எங்க உம் பொண்டாட்டி.”
”வேலைக்குப் போயிருக்கா பாட்டி.”
”என்னடா இது. பொம்பள வேலைக்குப் போறதா? அதுவும் தனியாவா?”
”இல்ல பாட்டி அவங்க ஆபீஸ்ல வேன் வரும் கூட வேலை செய்றவங்க எல்லாரும் அதுலயே போய் வந்துடுவாங்க. ”
”இருட்டிடுச்சே, இன்னுமா வரல.”
”இல்ல பாட்டி இப்பத்தான் போயிருக்கா. காலைலதான் வருவா?”
”என்னது ராத்திரி வேலைக்குப் போறாளா? அதும் ஆம்பளைங்க கூடவா? நீ புத்தி தெளிஞ்சிதான் பேசறியா?”
”இதுல என்ன தப்பு பாட்டி. உங்க காலம் வேற ”
”என்னடா எழவு எங்க காலம் வேற? நாங்க வாழ்ந்ததுக்கும் இப்ப நீங்க வாழறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா? ”
”சரி வா பாட்டி ஒரு நட கோவிலுக்குப் போய் வரலாம்.”
”எனக்கு தல சுத்துதுடா? இப்ப என்னால நடக்க முடியாது.”
”அட நடக்க வேண்டாம் பாட்டி. வண்டிலயே போய் வந்துடலாம்.”
”எவ்ளோ தூரம்ப்பா?”
”நடக்கற தூரம்தான்”
”காசி ராமேஸ்வரத்துக்கே நடந்துதானே போய் வந்துண்டிருந்தோம். இப்ப நடக்கறதூரத்துக்கே வண்டியா?சரி உன் புள்ள எங்க?”
”புள்ள இல்ல பாட்டி பெண் குழந்த”
”அடப்பாவி பெத்தது ஒண்ணு அதும் பெண்ணா? என்ன வயசாகறது எங்க போயிருக்கா?”
”அதுல என்ன பாட்டி? 10 வயசாகுது. படு சுட்டி. குட் டச் பேட் டச் க்ளாஸுக்கு போயிருக்கா?”
”அப்படின்னா ?”
”அதாவது பெண் குழந்தைகிட்ட யாராவது தப்பா தொட்டு வம்பு பண்ணாம இருக்க, எங்க தொட்டா தப்பு, சரின்னு சொல்லிக்கொடுக்கற க்ளாஸ். அப்பதானே தனியா வெளில போகும்போது பாதுகாப்பா இருக்க முடியும்.”
”ஹும்ம் தலையெழுத்து! அந்தக் காலத்துல நாங்க வேத்து ஆம்பளைங்க முகத்தக்கூடப் பாக்க மாட்டோம்.. போகட்டும் வயசு பத்தாயிடுச்சே? நல்லது அப்ப சீக்கிரம் கல்யாணத்தப் பண்ணவேண்டியதுதானே?”
”பாட்டி? என்ன பேச்சு இது 10 வயசு கொழந்தைக்கு கல்யாணமா?”
”என்னடா அதிர்ச்சியாகற? எனக்கெல்லாம் 8 வயசுலயே நடந்து போச்சு இதுவே ரெண்டு வருஷம் தாமசம் தெரியுமில்ல.”
”போகட்டும் எங்க உங்கம்மா, அப்பா?”
”ரெண்டுபேரும் ஊர்ல இருக்காங்க? ”
”ஏண்டா நீ இங்க வெச்சிக்க வேண்டியதுதானே? அதான் வீடு பெரிசா இருக்கே?”
”என் பொண்டாட்டிக்கு தனிக்குடித்தனம்தான் பிடிக்கும் பாட்டி.”
”ஓஹோ அப்ப கூட்டுக் குடும்பத்தையும் சாகடிச்சாச்சா? சரி அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் நம்ம ஜாதி ஜனங்கதானே?”
”பாட்டி என்ன இது ஜாதி எல்லாம் இப்ப ஒரு விஷயமே இல்ல, அதெல்லாம் அந்தக்காலம். இங்க எல்லாரும் சமமாத்தான் இருக்கோம்.”
”என்ன எழவுடா இது? பெத்த அம்மா அப்பாவ ஊர்ல குடிவெச்சிட்டு வேத்து மனுஷங்க கூட தனித்தனியா கதவு வெச்சிக்கிட்டு கூட்டுக்குடித்தனமா? நாசமாப் போச்சு..”
”ஆமா அப்பவே கேக்கணும்னு நெனெச்சேன் இதென்ன உடுப்பு? வேட்டி கட்டறதில்லையா?”
”பேண்ட் டீசர்ட் பாட்டி.. இதான் இப்ப எல்லாரும் போடறோம்.”
”என்னடா நீ தாட்டியா இருக்க கொடில மெல்லீசா தொங்குது. ”
”அது பொண்டாட்டியோடது பாட்டி ..”
”என்னது அவ பொடவை கட்டறதில்லையா? அவளும் உன்னமாதிரியே உடம்ப பிடிக்கறமாதிரியா ட்ரெஸ் போட்டுண்டு ராத்திரில ஆம்பளைங்க கூட வேலைக்குப் போறாளா? விளங்குமாடா?”
”அய்யோ கலி முத்திப்போச்சுடா கலி முத்திப்போச்சு. ஸ்ஸ் முடியலையே ஆண்டவா. இதென்னடா தண்ணி கலங்கி இருக்கு எனக்கு ஒரே தாகம் கொஞ்சம் குடிக்கட்டுமா? ”
”அய்யோ பாட்டி அது விஸ்கி அது வேண்டாம் நான் உனக்கு மினரல் வாட்டர் தரேன்.”
”விஸ்கியா அப்படின்னா.. ம்ஹ்ஹ் அய்யோ இதென்னடா சாராயம் மாதிரி இருக்கு?”
”அது வந்து சாராயம் இல்ல பாட்டி விஸ்கி சோசியல் ட்ரிங்க். அதாவது சளி பிடிக்கும்போது குடிக்கறதுக்காக..”
”அய்யோ அய்யோ அய்யோ ஆமா அதென்னடா எழவு சத்தம். ”
”மூணாவது அப்பார்ட்மெண்ட்ல ஒரு ஆளு இறந்துட்டார் பாட்டி.”.
”ரொம்ப வயசானவனோ?”
”இல்ல பாட்டி சின்ன வயசுதான். மூணு மாசம் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு.”
”பாவம் அவம் பொண்டாட்டி உடங்கட்ட ஏறுவாதானே ?”
”என்ன பேச்சு இது பாட்டி? அவங்க அடுத்த கல்யாணம் பண்ணிப்பாங்க. ”
”போச்சு போச்சு எல்லாம் போச்சு எப்படியெல்லாம் கட்டிக்காத்த கலாச்சாரம் நாசமாப் போச்சு..”
”அப்படியெல்லாம் இல்ல பாட்டி நாங்களும் கலாச்சாரத்தக் கட்டிக் காக்கறோம்.”
”அப்படி என்னடா காக்கறீங்க?”
”லிவிங் டு கெதர்னு ஒரு வியாதி பாட்டி.”
”அதென்ன வியாதி?”
”அதாவது ஆணும் பெண்ணும் கல்யாணமே செஞ்சிக்காம ஒரே வீட்ல ஒண்ணா சேர்ந்து வாழறது. அது தப்புன்னு ஒரு பெரிய போரட்டம்”
நல்லகாலம் ஆம்பளையும், ஆம்பளையும், பொம்பளையும், பொம்பளையுமா கல்யாணம் பண்ணிக்கறாங்கன்னு சொல்லாம இருந்தியே”
”அதெல்லாம் எப்பவோ சகஜமா இருக்கு பாட்டி. ”
”அட நாசமாப் போனவனே, ஓஹோ இப்ப புரியிது அதாவது என்னால முடியாதது உன்னால முடிஞ்சிதப் பார்த்த கோபம் எனக்கு வந்தமாதிரி, உன்னால முடியாதத, வேறொருத்தன் செய்யிறப்ப உனக்கு கோவம் வருதா? இப்ப புரியிதா ஏன் பொண்ணுக்கு 10 வயசில கல்யாணம் பண்ணச்சொல்றேன்னு? அப்படிப் பண்ணிவெச்சா ஏண்டா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழப்போறாங்க? இதுக்குப் பேரு குடும்பமாடா? கலாச்சாரமாடா? எப்படி இருந்த குடும்ப வழிமுறை நம்மளோடது சோரம் போயிட்டியேடா பேராண்டி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல நீங்க அழிச்ச கலாச்சாரத்த இப்பவாவது மீட்டிடுங்க”
"ஏய் கிழவி கலாச்சாரம்னா என்னான்னு தெரியுமா? என்று ஒரே போடாக அருகிலிருந்த கம்பியால் வாயில் அடித்தேன். "
”என்னையாடா அடிக்கிற நாசமாப் போறவனே!, நீயும் கொள்ளுத்தாத்தாவா வருவடா? அலைவடா? அன்னிக்குத்தெரியும்டா என் கலாச்சார வேதனை”
கதவருகே நின்று பார்த்துக்கொண்டிருந்த மனைவி "ஹனி இப்ப நான் செஞ்சது சரிதானே இதுக்குத்தான் இந்த கெழங்கட்டைகளை எல்லாம் ஹோம்லயோ ஆஸ்ரமத்லயோ சேர்த்துடனும். ப்ளடி ஹெல். செத்துப்போயும் வம்பு பண்ணுதுங்க" என்றாள்.
”சரி விடும்மா. மீடியம் மூலமா வந்த வினை”
கையைப் பிடித்துக்கொண்டிருந்த பெண் குழந்தை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. என்னிடம் ஓடி வந்து ”ப்ளீஸ் டாடி அவர் கல்சர் பத்தி ஒரு எஸ்ஸே எழுதி தாங்க டாடி நாளைக்கு க்ளாஸ்க்கு எடுத்துக்கிட்டுப் போகணும்.”
”அதுக்கென்னம்மா” என்று கூகிளில் தேடத்துவங்கினேன்...!
.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
முத்திப்போச்சுடா ..... முத்திப்போச்சு
கலியைச் சொன்னேன் ://
இப்ப என்ன சொல்லவர்றீங்க.. :)))
@தினேஷ் - அது என்னைக்கு நமக்கு புரிஞ்சிருக்கு :)
உடன்கட்டை, 8 வயசு கல்யாணம்னு ரொம்பபபபபப பழைய கால பாட்டியோட பேசியிருக்கீங்க :)
எள்ளுப்பாட்டி எத்தனை பேர தூக்கத்தை விட்டு எழுப்புனுச்சு?
வெண்ணையின்னா வெண்ணை இது ஊத்துக்குளி வெண்ணையிது டோய்.....:))).யப்பா. ஷங்கர். :)))))))))))))
ரொம்ப நல்ல இருக்கு
Kali muththippochuuuuuuuuuuuu... athaney...
ப்ளட் கல்ச்சர் -னு தலைப்பு வெச்சிருக்கீக
ரத்த கலாச்சாரம் ?
கலக ஆச்சாரம் ...
என்னவோ போங்க கிரகச்சாரம் :)))
வெண்ணையின்னா வெண்ணை இது ஊத்துக்குளி வெண்ணையிது டோய்.....:))).யப்பா. ஷங்கர். :)))))))))))))
நானும் அய்யா ஏதோ சீரியஸ்யா டாகால்டி வேளை காட்டுறாருன்னு பார்த்தா நீங்க சொன்னத நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கேன்.
தல ஏதோ வை ரஸ் ன்னு இந்த தளம் உள்ளே நுழைய படாய் பட வேண்டி இருக்கு
வெண்ணை மிக அருமை!
ஏங்க என்னய மாதிரி சின்னப்பசங்க புரிஞ்சுக்கிற மாதிரி எதுவும் எழுத கூடாதா :)
நல்ல வெண்ணை
முடிவா என்ன சொல்ல வர்றீங்கன்னு கேக்கத் தோணினாலும்...
நல்லா இருக்கு..
ஷங்கர்...எல்லாம் சேர்த்துப்போட்டுக் குழப்பி ஒரே வெண்ணைதான்.ஆனா பாருங்க மறக்காம எல்லா விஷயங்களையும் சேர்த்திருக்கீங்க !
கலவை வெண்ணை ... ஆனால் முடிவு நச் :)
நலமா ஷங்கர்ஜி. பேசி ரொம்ப நாளாச்சு.
@விதூஷ் : :))
@ முகிலன் : நானாங்க அத்தாரிட்டி? :))
@ சங்கர்: அது! :))
@ பின்னோக்கி: ஆமாங்க மண்ட காஞ்சிபோச்சு :))
@ கும்மி: தூங்கினாத்தானே? நடிச்சா? ;))
@ வானம்பாடிகள் : மணம், குணம், நிரந்தரம். :))
@ சமுத்ரா: வாங்க. நன்றிங்க.:)
@ சே.குமார்: அதேதான் குமார் :))
@ நேசமித்ரன்: சரித்திரம் தல! :))
@ ஜோதிஜி: இது உள் பனியன் :))
@ ஜோதிஜி: அப்படியா தல? :( (எனக்கு ஒன்னும் தெரியல ஒருவேளை நாம நினெச்சது வைரஸால நடக்கப்போகுதா? :)
@ எஸ்.கே: நன்றிங்க :))
@ இராமசாமி கண்ணன்: ரிட்டன் டிக்கெட் போட்டீங்கன்னா டெமோவே காமிக்கறேன்! :))
@ கீதப்ப்ரியன்: நன்றிங்க! :)
@கலகலப்ரியா: :)) நன்றிங்க!
@ ஹேமா: குழப்பவே இல்லைங்க. (தெளிவா) :))
@ LK : அது ஆரம்பம்! :))
@ செ.சரவணக்குமார்: நலமே சகோதரா? நன்றி! :))
முடிவாக, எது அதிகம் கொண்டாடப்படுகிறதோ அது ஒரு நாள் காலின் கீழே போட்டு மிதிக்கப்படும். மீண்டும் வேறொன்று கொண்டாடப்படும். அதுவும் ஒரு நாள் மிதிக்கப்படும். நம்முடைய வாழ் நாளில் நாம் உயர்வு என்று கருதுபவை பிறிதொரு நாளில் துரும்பாக எட்டி உதைக்கப்படலாம். அல்லது அருமையாக மேம்படுத்தப்படலாம். எதுவும் இங்கே நிலையில்லை. ஆறறிவு என்பது சிந்திப்பதற்கான ஒன்றாகவே இருந்தாலும். நாம் ஒழுங்காக சிந்தித்திருந்தால் மனித இனம் போரிட்டிருக்காது, அனாதை என்ற இனம் உருவாகி இருக்காது, பட்டினிச்சாவுகள் பெருகி இருக்காது, சடங்குகளை பிடித்துக்கொண்டு அத்ன் உட்பொருளை மறந்துவிட்டு கூக்குரலிட்டே மடிந்து போகிறோம். தன்னுடைய வாழ்வை சிறப்பாக, அடுத்தவனை நோகடிக்காது, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காது, வாழத்தெரிந்தவருக்கு, மதிக்கத்தெரிந்தவருக்கு எதுவுமே பெரிதில்லை.
காலத்தின் கட்டாயமே கலாச்சாரத்தை நிர்ணயிக்கிறது. :)))
Post a Comment