பலா பட்டறை: சிவோஹம்..

சிவோஹம்..

மேலே போர்த்திய காவித்துணி படபடத்துக்கொண்டு இருந்தது. 

காசி. 

கங்கையின் படித்துறை. 

பிணங்கள் எரியாத ஓரிடத்தில் அமைதியாய் நீரின் ஆக்ரோஷத்தைப் பார்த்தபடியே அமர்ந்துகொண்டிருந்தேன். நன்கு வளர்ந்த என் தாடியும், கேசமும் எதிர்க்கமுடியாது காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நீரின் வேகத்தில் சுழல்களையும் அலைகளையும் கிளப்பியவாறு செல்லும் கங்கையை பார்த்துக்கொண்டே இருந்தேன். தூரத்தில் ஒரு பெரிய மீன் மூழ்கி எழுந்து விளையாடிக்கொண்டிருந்தது. குளிர் பழகிவிட்டிருந்த உடல். நடுங்கா விரல்களால் மெல்ல என்னுடைய பையைப் பிரித்தேன். ஐந்து ஐந்தாகக் கட்டப்பட்ட சுள்ளிகள் கிட்டத்தட்ட ஆறு அங்குல நீளம். ஏதோ ஒரு யாகத்திற்கு போயிருக்கவேண்டிய சமித்துகள் அவை. ஒவ்வொரு கட்டையும் எடுத்து ஒன்றோடு ஒன்றாக இணைத்து கட்டினேன். வயிற்றில் வைத்துப் பார்த்தேன். சரியாகப் பத்து கட்டுகள். ஒவ்வொன்றிலும் ஒரு சங்கேதக் குறியீடு இருந்தது. அது ஒவ்வொன்றும் ஒரு வாக்குறுதியின் வேறு வடிவம். 

கணக்கிட நான் யார்? என்ற கேள்வியில் மெதுவாய் சுள்ளிக்கட்டுகளை உள்ளே வைத்தேன். இடுப்புத் துணி களைந்து, மேல்துணி மட்டும் உடுத்தி கங்கையில் இறங்கினேன். உடலுள்ளே உஷ்ணமும் வெளியே மரக்கும் குளிருமாய் தலை நனைத்து மூழ்கி, மூழ்கி எழுந்தேன். குளிர் நீங்கி ஒரு ஏகாந்த வெப்பம் உடல் முழுவதும் பரவி இருந்தது. ஏதோ ஒன்று அருகில் மிதந்து சென்று கொண்டிருந்தது. நீரின் வேகம் நீயும் வாயேன் என்றழைப்பதுபோல் இழுக்கத்துவங்கிய நேரம், நீரை விட்டு மெல்ல எழுந்தேன். பையை எடுத்துக்கொண்டு துணியைப் போர்த்திக்கொண்டு மெல்ல காசியின் குறுகிய தெருக்களில் நடக்கத்துவங்கினேன். 

நாட்டின் பல இடங்களிலிருந்து வந்தவர்களால் பலவிதமான மொழிகள் பேசப்பட்டு இறைச்சலாய் இருந்த இடத்தினை விட்டு வேகமாய் நகர்ந்துவிடவேண்டி நடையைத் துரிதப்படுத்தினேன். போகவேண்டிய இடத்திற்கான வழி தெளிவாய் என்னால் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தது. உள்வாங்கப்பட்டிருந்தது. இறக்கும்தருவாயிலும் என்னால் எழுத்து பிசகாமல் சொல்ல இயலும். ஏனெனில் சூரியனின் முதல் ஒளி விழும் நேரம் நான் அங்கிருக்கவேண்டும். நாள் கணக்கு முக்கியமல்ல ஆனால் நேரம் முக்கியம். மீண்டும் சமித்துகள் எனப்படும் அந்தக் குச்சிகளை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். நடையைத் துரிதமாக்கினேன். வெகுதூரப் பிரயாணத்திற்கு மனம் மெல்லத்தயாராகியது.

”நில்லுங்கள்” என்ற குரல் வந்த திசையை நோக்கினேன். 

”ஆனந்த பவனத்திலிருந்தா வருகிறீர்கள்?” 

”இல்லை. வாரனாசி” என்றேன். 

சிரித்தவாறே ”நானும் அதைத்தான் கேட்டேன்.” என்றவரை உற்றுப் பார்த்தேன். நான் தமிழென்பது இவருக்கெப்படித்தெரியும் என்ற ஆச்சர்யத்தை அவர் கவனித்திருக்கக்கூடும். 

”உங்கள் நிறமும் உடல்வாகும் நீங்கள் தமிழ் பேசுபவர் என்பதாக எனக்குப் பட்டது” என்றார். நான் வெறுமனே தலையாட்டிவிட்டு விடைபெறும் தோரனையில் நடக்க முற்படும்போது, 

”என்ன அவ்வளவு அவசரம்? ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? பார்த்தால் பசியுடன் இருப்பவரைப் போல் தோன்றுகிறது.” 

நான் பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து ஓடும் கங்கையை வெறித்துப் பார்த்தேன். 

”அஹ்ஹஹ் அது நீர். ஒரே பூதம். நானும் நீயும் பஞ்ச பூதம். சலனத்துடன் மூன்று பூதங்களும், சலனமில்லா இரண்டு பூதங்களுமாய் எங்கே கட்டற்று காட்டாறைப் போல செல்வது? தடைகள் வரும். தடுப்போர் வருவர். கேள்விகள் வரும். நாவே நெருப்பின் அங்கம். ஜ்வாலையைப் போலவே அதன் தோற்றம். வெறும் நீராய் காட்டாறாய் அடங்கமாட்டாமல், கட்டுப்பாடுகளற்று ஆர்பரித்து எங்கே செல்லமுடியும்? கடலுக்குத்தானே? ”

மீண்டும் அவர் சிரித்தார்.

புரியாத குழப்பத்திலும் நான் கங்கையைப் போலே இருந்திருந்தால் ஒரு தடையுமின்றி என் வழியில் சென்றிருக்கலாமே என்ற என் உள் மன எண்ணம் இவருக்கெப்படித் தெரிந்தது என்ற வியப்பினாலும் மெல்ல அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.

”வா. சற்று ஓய்வெடுப்போம். உணவு எடுத்துக்கொண்டு பிறகு பேசலாம். ”

அவர் பையிலிருந்து உணவெடுப்பார் என்று பார்த்தால் சில இலைகளை எடுத்தார். ”ம் சாப்பிடுங்கள், எல்லாம் மூலிகைகள். பசி எடுக்காது. களைப்பு தெரியாது. குளிர் தெரியாது.”

ஏதும் சொல்லாது அவர் தந்ததை உண்டேன். அவர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு ”வாருங்கள் போகலாம்” என்று எழுந்தார். என்னுடைய தயக்கத்தைப் பார்த்து ”எனக்குத் தெரியும் நானும் அங்கேதான் செல்கிறேன். முதல் சூரிய ஒளி தரிசனம்தானே இலக்கு?” நான் ஆச்சரியத்துடன் பார்த்த பார்வையில் அவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. 

”அது ஒன்றும் ரகசியமில்லையப்பா. அதுவே பிரதானம். பலமுறைகண்டாலும் திகட்டாத பேரானந்தம். வா போகலாம்.”

பல நாட்கள் ஒன்றும் பேசாமலேயே நடந்தோம். பெருங்குரலெடுத்து அவர் பாடும்போது மட்டும் என்னை அறியாமல் கண்ணீர் பெருகும். மற்றபடிக்கு பெரும் சலனங்கள் ஏதுமின்றி அவரைப் பின் தொடர்ந்தேன்.

பொழுதுபுலரப்போகும் ஒரு நாளின் நடைப் பயணத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஒரு குறிப்பிட்ட திசையில் அவரின் கண்கள் நிலைத்தது. என்னைப் பார்த்தார். ”தரிசனத்திற்குத் தாயாராகு” என்றார். என் உடல் நடுங்கத்துவங்கியது. 

அவர் என் அருகில் வந்தார். 

“கேட்கவே மறந்தேன். உன் பெயர் என்ன?” என்றார். 

“காசியிலேயே விட்டுவிட்டேன் எனவே பெயரேதும் இல்லை” என்றேன். விசித்திரமாக என்னைப் பார்த்தவர் சட்டென்று நினைவுவந்தவராக ”இதோ முதல் ஒளி விழும் நேரம், கவனத்துடன் நில், பிசகினால் ஒன்றும் மிஞ்சாது. ம்ம் நேரே பார்” என்றார். சூரியனின் பொன்னாலான ஒளியில் அது தகதகத்தது. என்ன இதுதானா? ஹர ஹர மஹாதேவ என்று அவரின் குரலில் கைலாயதரிசனம் வெண் பனி போர்த்திய மலையில் தங்கம் வேய்த்ததுபோல அதன் ஒளிச் சிதறலில் நெஞ்சு பீறிட்டுக்கொண்டு ஒரு கேவல் வந்தது. 

“அது அப்படித்தான் முதல் முறை பார்க்கும்போது மூச்சடைக்கும். வேறெதுவும் நினைக்காதே. தலைக்குமேல் கைகள் கூப்பி சிவனைத் தொழு” என்றார். சற்று நேரத்தில் நிலைக்கு வந்தேன். ”சரி உன் பெயரைத்தான் காசியில் விட்டாய் உன் தந்தையார் பெயரையாவது சொல்?” 

”மூன்றாம் இராசேந்திர ”


”இராசேந்திர என்னப்பா சொல்கிறாய்.”


”சோழம் சோழம் சோழம்” என்றேன். மெதுவாய் விளிம்பில் கை கூப்பியபடியே பள்ளத்தாக்கில் சரிந்தேன். 


சிவோஹம்!


.

14 comments:

க ரா said...

ஆ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

butterfly Surya said...

ஆ ஹா.....

ப்ரியமுடன் வசந்த் said...

மூன்றாவது ஸ்டாப் சேலம் சேலம் சேலம் என்றேன் மெதுவாய் விசிலெடுத்து ஊதினேன்...

போங்கய்யா....

Chitra said...

இராமசாமி கண்ணண் said...

ஆ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

butterfly Surya said...

ஆ ஹா.....

.....
ஓ ....ஓஹோ.....

மரா said...

நீங்களும் எறும்பும் சமீபத்தில் ‘காசி’ போய் வந்ததா ‘பழய தலைமுறை’ இதழ்ல படிச்சேன். நல்லதொரு பயணக் கட்டுரை.
‘நான் கடவுள்’ பார்த்து எம்புட்டு நாளாச்சு! பயபுள்ள எப்ப எழுவுது பாருங்க :)

நேசமித்ரன் said...

:)

good one

எல் கே said...

நல்ல நடை ஷங்கர்... பலவித கட்டுகளை கொண்ட நாம் , எல்லாவற்றையும் களைந்து செல்வது கடினம்தான்

சாந்தி மாரியப்பன் said...

அஹம் ப்ரம்மாஸ்மி :-)))))))))))

vasu balaji said...

சிவோஹம்ல் மொத்தக் கட்டும் தெறிச்சி அந்தரத்தில் மிதக்கும் உணர்வு. சூப்பர்ப் ஷங்கர்.

நிகழ்காலத்தில்... said...

நானே அங்கே இருந்தது போல் உணர்ந்தேன்..

நன்றி வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

ம்ம்... நல்லாருக்கு ஷங்கர்..

மணிஜி said...

கலம்பகம்...ரீமா..கறுப்பு ஜாக்கெட்

'பரிவை' சே.குமார் said...

Super...

Paleo God said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி! :))