பலா பட்டறை: புனைவு
Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

டேக் இட் ஈஸி!


.


டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் எப்போதுமே போவதில்லை. அவர் என்னையோ நான் அவரையோ பரஸ்பரம் தொந்தரவு செய்வதில்லை என்ற ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் கையெழுத்தாகமலே எங்களுக்குள்ளாக அமலில் இருக்கிறது. எல்லாவற்றையும் கேள்வி கேட்டுவிட்டு பதிலில்லாத தர்க்கச் சுழலில் மாட்டி புழுங்கித் தவிப்பதைவிட 'கடவுள் இருக்கான் கொமாரு' என்பவரையும், 'சப்பான்ல கடவுள் சுனாமி வந்தப்ப ஏன் சும்மிங்கப் போடல?' என்பவரையும் ஆமாமாம் நீங்க சொல்றது சரிதான். என்ற மகாவாக்கியத்தோடேயே கடந்து செல்வதால் வாங்கும் சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை செய்ய முடிந்திருக்கிறது.

சொல்லால் மடக்கி சொறிவதற்கு ஏற்கனவே சொறிந்த இல்லாததையும், பொல்லாததையும் பற்றி நிறைய படித்திருக்கவேண்டும், ஒரு சமோசாவுக்கு ப்ரயோஜனமில்லாத அந்த வியாக்கியானப் படிப்புக்கெல்லாம் எனக்கெங்கே நேரமிருக்கிறது? செய்யும் வேலையையும் சென்றுவரும் வழியையுமே சரியாக இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

முதுகு வலி என்றோ, மூச்சுவிட சிரமமாக இருக்கிறதென்றோ மருத்துவரிடம் போனால், நீங்க உட்காரும் விதம் தப்பு சரியா நேரா உட்காரப் பழகனும், ஆஸனங்கள் எதுனாச்சும் செய்யுங்க, மூச்சு விடறதுல கோளாறு இருந்தாக்கூட பிரச்சனை வரும். ப்ராணாயாமான்னு ஒன்னு இருக்கு சரியா மூச்சு எப்படி விடனம்னு ஒரு ப்ராக்டிஸ்தான். வாக்கிங் போங்க, மென்னு சாப்பிடுங்க, கண்டிப்பா ரெண்டு வேளை பல் வெளக்கனும், இது இதெல்லாம் சாப்பிடக்கூடாது, இதெல்லாம் சாப்பிடனும்... எனக்கு அயர்ச்சியாக இருந்தது. 

லக உயிரினங்களிலேயே எல்லாம் தெரிந்த உயிரினத்துக்கு மூச்சு விடுவதற்கும், நேராக உட்கார்வதற்கும் பயிற்சி தேவையானதாக இருக்கிறது. இந்த ஆறாவது அறிவை ரிஜெக்ட் செய்த அல்லது ஆறாவது அறிவு ரிஜெக்ட் செய்த மற்ற உயிரினங்களெல்லாம் நிம்மதியாக இருக்கிறது. சாப்பாடு, கலவி, உறக்கம், சவம். கூடுகட்டி முட்டையிட்டு/குட்டிபோட்டு சொந்தமாய் சாப்பிடும் வரை பொறுப்பு, பின் துறப்பு. அவைகள் சீராக மூச்சு விடுகின்றன உப்புள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதில்லை. ஆய் போனால் கூட அலம்புவதில்லை. ஆடிமாசமோ அதிரடித் தள்ளுபடியோ முக்கியமாய் நிர்வாணம் பற்றி கவலையேதுமில்லை.  

பிள்ளைகள் ரெண்டும் பள்ளியிலிருந்து வரும் சமயம். என்ன கற்றுக்கொண்டு வருவார்கள் என்று தெரியாது. என்ன இன்னும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரியாது. கற்றுக்கொள்ளவேண்டியவை எல்லாமே ஒரு நிகழ்வின் முடிவில் துவங்குவதாகவே இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நடந்துமுடிந்ததிலிருந்தே கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. 

டுத்தவர் அனுபவத்திலிருந்து ஏதும் கற்றுக்கொள்ள இயலாது என்பது பல சந்தர்ப்பங்கள் எனக்கு உணர்த்திய சவால். அரையடி உயர பஞ்சு மெத்தையிலிருந்து கீழே விழுந்தவருக்கு கை எலும்பொடிந்து கதறியதும், மூன்றாவது மாடியிலிருந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கிழே விழுந்த பையன் அம்மா என்று வீறிட்டு ஒரு காயமுமில்லாமல், பின் பக்கம் தட்டி வீட்டில் நுழைந்ததும் கண்டு எலும்புடைவதின் அளவுகோலில் இருந்த நம்பிக்கைகள் சுத்தமாய் விட்டுப்போயிற்று. 

ள்ளியைவிட வெளிஉலகம் பிள்ளைகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுக்கொடுக்கப் போகிறதோ என்ற பயமே என்னுள் இருந்தது. வெறும் எண்களைக்கொண்டு அறிவைக் கணக்கிடும் மதிப்பெண்கள் மேல் என் தந்தைக்கில்லாத நம்பிக்கையையே எனக்கும் இருந்தது. 

அணில். இ இலை. ஊ ஊஞ்சல். இதெல்லாமே வீட்டிலேயே இருக்கிறது. இதைப் பாடமாகப் படிக்கத்தான் செலவு செய்து பள்ளிக்குச் செல்கிறார்கள். இஞ்சினியரிங் படித்து விட்டு மெயின்டனன்ஸில் இருந்த அந்த அதிகாரி என் தோற்றத்தை வைத்துக்கேட்டார் ”நீங்க எந்தக் காலேஜில் பிஈ முடிச்சீங்க?” நான் கரஸ்பாண்டென்சில் பிகாம் முக்கால்வாசி படித்து எக்ஸ்பீரியன்ஸை வைத்து கையில் கழி இல்லாமல் கயிற்றிலாடிக்கொண்டிருப்பதை எப்படிச் சொல்வது? ஆமாம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக வரும் எந்தக் காலேஜ் எந்த பேட்ச் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்குமே என்ற நினைப்பில் பேச்சை வேறு பக்கம் திருப்ப எத்தனித்தபோதே, ”வொய் திஸ் ஃப்யூல் ஃபில்டர் ஈஸ் ஸோ பிக்” என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கினேன். அடப்பாவி அது ஏர் பில்டர்டா என்று சொன்னால் அவன் ஈகோ தமாஷ் மாத்திரை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும் என்றெனக்குப் பட்டது. படம் காட்டியே படிப்பு நடத்தி இருப்பார்களோ அல்லது இவன் அந்த நேரத்தில் படம் பார்க்கச் சென்றானோ தெரியவில்லை? ”ஐ திங் திஸ் ஈஸ் டீசல் பில்டர் யூ சீ தி ஹோஸ் ஃப்ரம் தி ஃபியூல் டாங்க் ஈஸ் கமிங் ஹியர். ஐ திங்க் தட் ஈஸ் ஏர் ஃபில்டர். டிஃப்ரெண்ட் இன்ஜின்ஸ் டிஃப்ரெண்ட் டிஸைன்.” திங்க் பண்ணி அவனுக்கான பதிலை நான் கொடுத்ததில் அவன் காயப்படவில்லை. ”யா யா” என்றான். கருத்துச் சொறிதலை இங்கே காண்பித்து ஈகோவைக் கிளறி விவாதத்தில் வெற்றிபெற்றால் வீட்டில் உப்புமா கூடக் கிண்டமுடியாது என்பது பசியும், பணமும், பிஸினஸ் எதிக்ஸும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். கல்லூரி முடித்து வருபவர்களுக்கு வங்கி டெப்பாஸிட் சலான் கூட ஃபில் பண்னத் தெரிவதில்லை. கிங்ஸில் விக்ஸ் தடவி அடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்ற தேவ ரகசியங்கள் அவர்களை அதைவிட எளிதாக வந்தடைந்து விடுகிறது. 

நிறைய முடிகள் நரைத்து வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. டை அடிப்பதா? வேண்டாமா? அடுத்த கேள்வி உள்ளே தயாராகிவிட்டது. பையன் வளர்ந்து சம்பாதிக்கும் நாட்களை கணக்குப் போட்டால் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது பிழைப்புக்காக ஓடவேண்டும். அதன்பிறகும் அவன் சம்பாதித்து நான் காலாட்டிக்கொண்டு டிவி பார்க்க முடியுமா அல்லது ஏன் என் உயிர எடுக்கற? என்று உதாசீனப் படுத்துவானா?  தெரியாது. கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். எவ்ளோ செலவு செஞ்சி படிக்கவெச்சேன். என்ற டயலாக்கெல்லாம் எனக்கே பிடிக்காதபோது என் பிள்ளைகளுக்கு முன்னால் அதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நானா பெக்கச் சொன்னேன் என்ற பதில் வருமே என்ற கவலையாகவும் இருக்கலாம். 

றிவியல் முன்னேற்றங்களெல்லாம் வாயைப் பிளக்கவைக்கிறதோ இல்லையோ வயிற்றைக் கலக்குகிறது. மருத்துவம் முன்னேறி எண்பது தொண்ணூறு வயசெல்லாம் வாழ வைத்துவிடுமோ என்ற கவலை வேறு அவ்வப்பொழுது அப்பிக்கொள்கிறது. உடலைப்போன்றே ஆசைக்கும் வயசானால் தேவலை. ஆனால் அது மட்டும் பெஞ்சமின் பட்டனைப்போல வயதாக ஆக இளமையாகத் துள்ளித் தள்ளுகிறது. ”போயிடும் ராத்திரி தாங்காதுன்னு டாக்டர் சொல்லி 10 வருஷமாச்சி இன்னும் மாமா ஜம்னுதான் இருக்கார். இப்பல்லாம் டாக்டரக் கூப்பிட்டா வர்றதே இல்லை. சிக்ஸ் அவர்ஸ் பார்த்துட்டுச் சொல்லும்மான்னு சொல்லிட்டார்” என்ற டயலாக்கெல்லாம் அசரீரியாக ஒலிக்கிறது. ”தூங்கினார். எழுந்துக்கல” என்ற பதங்களில் மிகப் பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது, 

”ஒரிஜினல் ரோஸ்வுட்தானா?” கேட்ட அப்பாவைப் பார்த்தேன். நான்காம் பிறை நிலாவைப்போல அந்த ஈஸி சேரில் நான் கால் நீட்டி உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா நெடுமுடி வேணுவை அடிக்கும்போது உட்கார்ந்திருந்த சேர் என்று சொன்னால் உங்களுக்கு உடனே புரியும். ”ஆமாப்பா. பழசு விக்கிற கடைதான் அது. இப்பல்லாம் யாரும் இதுமாதிரி செய்யறதில்லை.” நடுவில் ஒயர் பின்னப்பட்டு இரு பக்கமும் கைப் பிடியும் அதே அளவுக்கு கால் வைக்க நீட்ட முடிந்ததுமான அந்த ஈஸி சேர் என்னுடைய நீண்டகால கனவுகளில் ஒன்று. சட்டென்று ஏதோ தோன்றியது ”நீங்க உட்காருங்கப்பா” என்றேன். என் அப்பா உட்காருவதற்குள் சட்டென்று என் ரெண்டாவது பிள்ளை ஓடிவந்து உட்கார்ந்துவிட்டான். எனக்கு கோவம் தலைக்கேறியது. 

“டேய் தாத்தாவுக்கு இடம் கொடுடா நீ சோபால உக்காரு”. 

”போப்பா மாட்டேன் இந்த சேர்லதான் உக்காருவேன்.” நான் அப்பாவைப் பார்த்தேன் 

”விடுடா உன்னைமாதிரிதான் உன் புள்ளையும்”

”என்னப்பா சொல்ற?”

”குழந்தைங்கன்னா அப்படித்தாண்டா நீயும் கொழந்தையா இருக்கும்போது இதே அடம்தான். அவன் உக்கார்ந்துக்கட்டும் விடு. ”

தொண்ணூறோ நுறோ சாய்ந்தால் கனா வரும் இந்த சேரை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நம்பிக்கை துளிர்விட்டது.      


.

ஒளியும் ஒலியும்!


.



ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கியபிறகுதான் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரமுடிந்தது. தண்டவாளங்களைக் கடப்பதற்காகப் போட்டிருந்த மேம்பாலத்தின் அடியில் கடப்பாக் கல்லாலான நீள இருக்கை இருந்தது. ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரருகில் நானும் அமர்ந்தேன். இடது பக்கத்தில் ரயிலின் கால அட்டவணை ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்தார்கள். வெறும் எண்களாலான அதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் கடுப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று. பூஜ்ஜியம் ஒன்றுலிருந்து இருபத்து நான்குவரை நடுவில் எழுதி இரு பக்கமும் ஆல்பா நீயூமரிக்கலில் எழுதப் பட்டிருந்த அந்த பட்டியலை என்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? 

நான் மீண்டும் ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். எதிர் ப்ளாட்பாரத்தில் அழகாக கிளை விரித்துப் பரவிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த பயணிகள் மிகச் சிறியவர்களாக காணப் பட்டார்கள். மரத்தின் பிரம்மாண்டம் மனதில் எதையெதையோ எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னினும் சிறிய மனிதனால் தான் எப்பொழுதுவேண்டுமானாலும் கூறுகளாக்கப் படுவோமென்று அந்த மரத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா? அதனாலேயே அமைதியாய் நிழல் தந்து நிற்கிறதா? அல்லது அழிவென்பது மாயை அது வேறொன்று பிறப்பதற்கான ஒரு சலனம் என்று உணர்ந்திருக்குமா? நான் மரத்திற்கு மேலேயும் பார்த்தேன். இவ்வளவு நீலமாக, மேகங்களற்ற வானம் தொடர்ச்சியாக இப்பொழுது காணக்கிடைக்கிறது. சென்னையில் இது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிசயம். இன்றைக்கு வெயில் அதிகம்தான் இல்லையென்றால் இப்படியெல்லாம் நான் யோசிக்க வாய்ப்பில்லை.

உடல் பெருத்த பார்வையற்ற ஒரு வயதான பெண்மணி தனக்கு வழி காட்டும் ஒரு குச்சி கொண்டு ஒரே ரீதியில் எழுப்பிய சத்தத்தால் நான் அவரைப் பார்க்கத் தொடங்கினேன். இவருக்கு ஆலமரமோ, அதன் உணர்வுகளோ, நீல வானமோ, மேகங்களோ ஒரு பொருட்டே அல்ல. சப்தங்களாலும், தொடுகைகாளாலும் ஆன உலகு. அவர் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையைத் தாண்டிச் சென்று நின்றுவிட்டார். களைப்பான ஒரு உஸ்ஸ்ஸென்ற வெயிலின் மீதான சாபம் அவர் வாயிலிருந்து வந்தது. மீண்டும் அவர் வந்தவழி திரும்பினார் இரண்டு அடிகள் எடுத்து வைத்து நாங்கள் அமர்ந்திருந்த அந்த இருக்கையை தன் குச்சியால் தொட்டார். அருகிலிருந்த பெரியவர் ”யாருமில்ல உக்காரும்மா” என்றார். ”தாண்டிப் போயிட்டேன்” என்றபோது எனக்குப் புரிந்தது அவர் இந்த இருக்கையை நோக்கித்தான் உட்காருவதற்காக வந்திருக்கிறார். இந்த இடம்தான் ரயிலின் கடைசி பெட்டி நிற்கும் இடம் இங்கிருந்துதான் அவர் முதல் பெட்டிவரை தன் யாசகத்தைத் தொடரவேண்டும். 

ரயில் பெட்டியிலும் இவர்கள் பிரயாணம் செய்யும்போதும் தடுமாறுவதே இல்லை. சரியாக வாசல் எது? எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எங்கே திரும்பவேண்டும், எது 10 ரூவாய்த்தாள்? எது 5 ரூபாய் நாணயம் என்பது முதல் பொருட்கள் விற்கும் பார்வையற்றவர்கள் கையில் கொண்டுவரும் 20 வகை ஐட்டங்களின் கேட்பதை சரியாக எடுத்துக்கொடுப்பதும் சுலபமாகவே நடக்கிறது. 

“வெயில் கொஞ்சம் தாழ்ந்திருச்சி போல இருக்கே” என்றபொழுது மீண்டும் மேலே பார்த்தேன் இப்பொழுது வானம் மூட்டத்தோடு இருந்தது. சற்று முன்புவரை நீலமாக தெளிவாக இருந்த வானம் இப்பொழுது மூட்டமாக இருக்கிறது. தெளிவாக இருந்ததைப் பற்றி இப்பொழுதுதானே சிலாகித்தேன்? வெறும் உணர்சிகளால் தன்னைச் சுற்றி நிகழ்வதை தொடர்ச்சியாக கவனிக்கும் அந்தப் பெண்மணியைப் பார்த்து எனக்கு வெட்கம் வந்தது.

பார்வை இருந்தும் குருடராய்? எங்கோ எதற்காகவே படித்த இந்த வாக்கியம் எனக்கு நினைவுக்கு வந்தது. பார்வையுள்ளவன் பயன்படுத்தாத காட்சிப் பொருட்கள் அவனைச் சுற்றி நிறைய இருக்கிறது. வெறும் சாட்சியாக, செய்தியாக, எச்சரிக்கைகளாக, கிளர்ச்சியாக வெறுமே பார்த்துக் கடப்பவைகளில் பார்க்கவேண்டியவைகளும் கடந்து போவதே பார்வைக் குருட்டு. பார்வை இருந்தும் பார்க்கத் தவறிய, சோம்பலுற்ற தருணங்கள் ஒரு நாளில்தான் எத்தனை கடக்கின்றன? நான் மீண்டும் அந்த ரயில் அட்டவணையைப் பார்த்தேன். 

”அடுத்த வண்டி அரக்கோணமா?” அந்தப் பெரியவர் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு நான் அந்த ரயில் கால அட்டவணையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு காரணமாயிருந்திருக்கலாம். நான் ”தெரியலைங்க” என்று சொல்வதற்குள் அந்த பார்வையற்ற பெண்மணி ”அடுத்தது மெட்ராஸ் திருவள்ளூர் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடும்” என்றார். 

”எல்லாமே மெட்ராஸ்லேர்ந்து வரதுதானேம்மா?”

”இல்லைங்க சார். பீச்லேர்ந்தும் வரும், அம்பத்தூர்லேர்ந்தும் வரும். எங்கேர்ந்து கிளம்பி எங்கே போகுதுன்னு சேர்த்து டைம் டேபிள்ள எழுதி இருக்கறத வெச்சி சொல்றதும் அப்படியே வந்திடுது. ”

சொல்லிவிட்டு அந்த பெண்மணி கடக்கும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் தான் கையில் வைத்திருந்த அந்த எவர் சில்வர் தம்ளரில் ஒரே ஒரு காயனைப் போட்டுக் குலுக்கிக் கொண்டிருந்தார்.  கடந்து போனவர்களில் சிலர் மட்டும் அந்தப் பெண்மணியின் தம்ளரில் சில்லறைகளைப் போட்டுவிட்டு சென்றார்கள்.

கண்ணிருந்தும் குருடராய், எல்லா அறிவிப்புகளும், விளம்பரங்களும், எச்சரிக்கைப் பலகைகளும், விதிகளும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடுமோ என்னமோ?. 

சம நிலையிலிருந்து வழுக்கி சுய நலமாய் தன் வசதிக்கு இந்த உலகை மாற்றும் மனிதனிடமிருந்து இயற்கை லாவகமாய் தப்பித்துக்கொண்டிருப்பதைப் போல பார்வையுள்ளவர்களால் பார்வையுள்ளவர்களுக்காக கட்டி எழுப்பப்பட்ட வசதிகளை பார்வையில்லாத இந்தப் பெண்மணி எள்ளுவதைப் போல எனக்குத் தெரிந்தது.

நான் மீண்டும் அந்த அட்டவணையை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தேன். 

.

அஞ்சாதே!

.

எட்டிப்பார்த்தபோது வெறும் புகை மூட்டமாகத்தான் இருந்தது. 

கையிலிருந்த ஒரு கேரட்டை சுவைத்துக்கொண்டிருந்தபோது சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டேன், துப்பியபோது சக்கையாய் விழுந்த கேரட்டிலும் உதட்டில் வழிந்த எச்சிலிலும் ரத்தம். எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் கேரட்டைக் கடித்து வாய் நிறைய அடக்கிக்கொண்டேன். உடலில் காயத்தால் ஏற்படும் வலியைக் காட்டிலும் நாக்கில் ஏற்பட்ட வலி வித்தியாசமாய் இருந்தது. 

மீண்டும் எட்டிப்பார்த்தேன். அதே வெண் பஞ்சு போர்த்திய சூசைட் பாயிண்ட். அதென்ன சூசைட் பாயிண்ட்? சூசைட் என்றால் என்ன? மரணிப்பதா? இல்லை இல்லை. மரணத்தை நிர்ணயம் செய்வது. பிறப்பிலில்லாத சுதந்திரம். உயிரோடிருப்பதிலிருந்து உண்மையான சுய விடுதலை. 

இயற்கையான மரணம் என்பது யாரோ கழுத்தைப் பிடித்து தள்ளுவதைப்போல எப்படி உயிரின் முதல் காற்று சுவாசிக்க வெளியே கால் பிடித்து இழுத்தார்களோ, அதே போல் யாரோ ’போதும் வாழ்ந்தது போய்த் தொலை’ என்று தள்ளுவதைப்போல. ஆனால் இந்த தற்கொலை, அதென்ன தற்கொலை ?எவன் வைத்தான் இந்தப் பெயர்? சுயவிடுதலை என்றால் நன்றாக இருந்திருக்குமோ? 

எங்கே இருந்தது சுயம்? ஆணும் பெண்ணும் சேர்த்து பிரதியாக்கிய ஒரு பிண்டம், கூடலின் சாட்சி, தான் மலடி இல்லை என்றும் ஆண்மகன் என்றும் நிரூபித்த இருவரின் வம்ச சாப்பா. போகட்டும் நானே என்னை மாய்த்துக்கொள்வதிலாவது சுயமானது இருக்கட்டும்.

காரட்டின் கடைசி துண்டையும் வாயில் போட்டுக்கொண்டேன். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டேன். எதற்கும் நன்றாக வெயில் வந்தவுடன் மேகமூட்டமில்லாதபோது ஒரு முறை பார்த்துவிட்டு குதித்துவிடலாமா? என்று தோன்றியது. போதும் வாழ்ந்தது. அடுத்த நொடி என்று எதுவும் என் கையிலில்லாதபோது என்னவென்று வாழ்வது? எதற்காக வாழ்வது? போதும் விட்டு விடுதலையாகிவிடலாம். 

தற்கொலை கோழையாம். விழாத வீரர்கள் சொல்லிவிட்டார்கள். எட்டிப்பார்க்கத் திராணியற்ற எலிக்கூட்டம். எனக்கு சிரிப்பு வந்தது. அதுதான் மறு பிறப்பொன்று இருக்கிறதே பிறகென்ன? இதிலென்ன கோழைத்தனமிருக்கிறது? என் உயிர் என் கையால் போவதென்பது எவ்வளவு சுகமானது. எல்லா வேலைகளையும் சரியாக முடித்து,. எல்லாக் கடன்களையும் அடைத்து. எனக்கென இருக்கும் பொறுப்புகள் முடித்து இதோ இங்கே முடிக்கலாமென்று வந்திருக்கிறேன். இதிலென்ன கோழைத்தனம் இருக்கிறது.  இன்னும் வாழ்வோமென்று சேர்த்துச் சேர்த்து திடீரென எவரோ அனுபவிக்கச் சாவதல்லவா கோழைத்தனம். 

திடீரென்று வந்தோம் குதித்தோமென்று இருப்பவர்களை கோழையெனச்சொல்கிறார்களோ?ஹும்ம் பைத்தியங்கள். இயற்கையாய் இறப்பவனும் இன்ன தேதிக்கு இறப்பேனென்றா சொல்லிவிட்டு இறக்கிறான். கூடலின்போதே கூடவந்த உயிரணுக்களை சாகடித்துத்தானே கருப்பையில் நுழைந்தேன். இதன் பிறகென்ன புண்ணியமும்? பாவமும்? கோழையும் வீரமும்.

வாடாத மலரென்று கொத்துக் கொத்தாய் சில பூக்கள் கொஞ்சம் தள்ளி விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமே இருந்த அந்த சூசைட் பாயிண்ட்டில் ஒருவர் ஒரு பெண் குழந்தையோடு வந்தார். அந்தக் குழந்தையின் கைகளில் அழகான மலர் கொத்து.

”மிலி த்ரோ த ஃப்ளவர்ஸ்”

மிலி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை சொன்ன தன் தந்தையைப் பார்த்தது. சிறிய மையிடப்பட்ட அழகிய கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் கன்னத்தில் கோடு வழித்து புஸு புஸுவென்ற ஸ்கர்ட்டில் விழுந்து வட்டமாய் பரவியது. பூக்களைத் தூக்கி எறிந்தது அப்பாவின் பக்கம் திரும்பி அவரின் கால்களுக்குள் புதைந்து அழுதது. 

நான் அந்தத் தந்தையைப் பார்க்கவில்லை. சிரித்துவிடுவேனோ என்று உள்ளுணர்வு சொல்லியது. அந்தக்குழந்தைக்காகவாவது நான் சிரிக்காமலிருக்கவேண்டும். இவராவது முற்றுமறிந்த முட்டாள். இந்தக் குழந்தை இனிமேல்தான் கற்றறிந்து முட்டாளாகவேண்டும். நானதைத் தடுப்பானேன் என்று மீண்டும் வெண்பஞ்சு மேகங்கள் பக்கம் திரும்பிக்கொண்டேன். 

தடுப்புக்கம்பி சில்லென்று இருந்தது பிடித்தவாறே கீழே பார்க்கத்துவங்கினேன். எந்தப் பக்கம் குதிக்க வாகாயிருக்கும் மனது கணக்குப் போடத்துவங்கியது. அது மிகச் சிறிய இடமென்றாலும் தடுப்புக் கம்பி தாண்டி இரண்டு இரண்டரை அடிகள் மேடாயிருந்தது. ஒரு மரம் அடியிலிருந்து கிளை பரப்பி மேலே வந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை வெறும் பனிப்போர்வைதான். மேல் கம்பியிலிருந்து ஒரே எம்பு எம்பி விடவேண்டியதுதான். 

மிலியும் அவள் அப்பாவும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். ச்சே இதுதான் இந்த வாழ்வின் பிரச்சனை எங்கே பார்த்தாலும் மனிதர்கள் தனிமை என்பதே இல்லாத சபிக்கப்பட்ட ஓர் உலகம். சூசைட்பாயிண்ட் என்று போர்ட் வைத்த புத்திசாலிகள் இங்கே கூட்டத்தைக்கூட்டி பூ விற்கிறார்கள், காரெட் விற்கிறார்கள், கூட்டமும் வந்து வேடிக்கைப் பார்க்கிறது. அடுத்தவன் சாவது உயிரோடிருப்பவர்களுக்கு வேடிக்கையாகிப்போன கேவலம். 

இந்த இடம் தனிமையிலல்லவா நிறைந்திருக்கவேண்டும். தன்னிஷ்டமாய் தைர்யமாய் உயிர் துறக்க முடிவெடுப்பவர்கள் வருமிடத்திற்கு தனிமையும் அமைதியும் எவ்வளவு முக்கியம்?  

”மிலி கோ கெட் சம் மோர் ஃப்ளவர்ஸ்..”

மிலி அவள் அப்பாவின் கையிலிருந்து ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு சில அடி தூரங்கள் தாண்டி பூ விற்றுக்கொண்டிருப்பவர்களை நோக்கி நடந்து சென்றாள். மீண்டும் இங்கே பூக்களை எறியப்போகிறார்கள். யார் இறந்தது? இந்தக் குழந்தையின் அம்மாவா? அல்லது வேறு யாராவதா? இன்று என்ன நினைவு நாளா? உயிரோடிருக்கும்போது என்றைக்காவது அந்தப்பெண்ணிற்கு பூக்கள் கொடுத்திருப்பார்களா? அல்லது இறந்து போனவருக்கு பூக்கள் பிரியமா?இங்கே எறிந்தால் மட்டும் இந்தப் பூக்கள் அவரை அடையுமா? இந்தப்பூக்களை ஏன் வீணாக்குகிறார்கள்? அது சரி இல்லையென்றால் மட்டும் இந்தப் பூக்களென்ன ஜீவித்தா இருக்கப்போகிறது. அட! ஆமாம். சில வருடங்களுக்கு இவை அப்படியே இருக்குமென்றல்லவா சொல்லி விற்கிறார்கள்.

நானும் மிலியைப் பின் தொடர்ந்து சென்றேன் வேறு கடையில் அழகான நிறங்களாய் தேர்ந்தெடுத்து ஒரு கொத்து பூக்கள் வாங்கினேன். சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். பூ விற்றவன் என்னைப் பார்த்து சிரித்தான். 

“என்ன சார் சூசைட் பண்ணிக்கப்போறீங்களா?” எனக்கு திடுக்கென்றது. 

“எப்படி? ஐ மீன் ஏன் கேக்கறீங்க? ”

”எத்தினிப்பேரப் பார்த்திருப்போம். எல்லாம் ஒரு கெஸ்தான். ”

நான் மீண்டும் சூசைட் பாயிண்டைப்பார்த்தேன். மிலியின் அப்பாவும் மிலியும் மீண்டும் பூக்களை விசிறி எறிந்துவிட்டு மெல்ல திரும்பிக்கொண்டிருந்தனர். 

இல்லீங்க. சூட்டிங். லொக்கேஷன் பாக்க வந்தேன் அப்படியே வசனம் டெவலப் பண்ணலாம்னுதான். ஆனா கரெக்ட்டா மொகத்தப் படிக்கிறீங்க.” சிரித்துவிட்டு காசைக்கொடுத்துவிட்டு லாட்ஜை நோக்கி நடந்தேன். இது இந்த இடம் தற்கொலைக்கு லாயக்கே இல்லாத இடமென்று எனக்குத்தோன்றியது. ஒருவன் இறக்கப்போவதை கெஸ் செய்யுமளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இடம் நான் விடுதலையாக ஏற்ற இடமல்ல. 

ஒரு சிகரெட் பற்றவைக்க நின்றபோது எதிரில் போன கூட்டத்தில் ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டு போனான்

”மதிகெட்டான் சோலைன்னு ஒன்னு இருக்குங்க தொப்பிதூக்கு பள்ளத்துக்கு போற வழில பார்க்கலாம். அடர்ந்த காடு உள்ளார போனா அவ்ளோதான். போனவங்க யாரும் திரும்பி வந்ததே இல்லை. அவ்ளோ டேஞ்சர்...”

ஸ்ஸ்ஸ்ஸ் சிகரெட்டின் முதல் புகையை ஆழ உள்ளிழுத்தேன். 

மீண்டும் வேறொருவன் குரல் கேட்டது ”அவ்ளோ டேஞ்சரா உங்களுக்கெப்படிங்க தெரியும் ?”

”போர்டே வெச்சிருக்கான் சார் கவர்ன்மெண்ட்டு. இதோ இதுமாதிரியே”

நின்று திரும்பி சூசைட் பாயிண்ட் என்று எழுதப்பட்ட பெயின்ட் உதிர்ந்துபோன அந்தப் பலகையை நான் வெறுப்பாய் பார்த்தேன். இதென்ன அறிவிப்பா? அழைப்பா? 

எங்கோ அந்தப் பாடல் கேட்டது

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

த்தூ.. சிகெரெட்டைக் கீழே போட்டு மிதித்துவிட்டு, நடக்கத்துவங்கினேன்.



.

வெண்ணை (0.14 Blood Culture)

.


மீடியம்

எள்ளுப்பாட்டி எழுந்துவந்தாள்..

”என்னடா பேராண்டி சவுக்கியமா?” என்றாள்..

”சவுக்கியம் பாட்டி” என்றேன்.

“குழந்தைகள் எல்லாம் சவுக்கியமா?” என்றாள்.

“குழந்தைகளா, குழந்தை ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு” என்றேன்..

”என்னடா கருமாந்திரம் இது? பத்து குழந்தைகள் பெத்துக்கக்கூடாதா? ஒரே குழந்தைய பெத்துக்கிட்டு இதுக்குப்பேரு குடும்பமாடா? ”

”சரி விடு பாட்டி. வீட்டுக்குள்ள வா”

”இருடா கொல்லைல போய் கால் கழுவிட்டு போகலாம்..”

”கொல்லையா? இது அடுக்கு வீடு பாட்டி. ஆறாவது மாடில வீடு.”

”அப்ப மலஜலம் கழிக்கறதுக்கு ஆறுமாடி ஏறி இறங்கனுமாடா?”

”இல்ல பாட்டி வீட்லயே அட்டாச்டா பாத்ரூமும், டாய்லெட்டும் இருக்கு..”

”அட கிரகம் பிடிச்சவனே வீட்டுக்குள்ளயே வெளிக்குப் போகனுமா? ஏண்டா புத்திகித்தி கெட்டுப்போச்சா? நாறாது? வியாதி வராது? ”

”அய்யோ நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் பாட்டி? அதெல்லாம் பைப் வழியா காவாய்ல விட்டுடுவோம்”

”சரி வா ஆத்துக்குப் போய் குளிச்சிட்டு துவைச்சிட்டு தண்ணி எடுத்துக்கிட்டு வரலாம்..”

”அதெல்லாம் வேணாம் பாட்டி இங்க ஆத்துல தண்ணி இருக்காது, அப்படியே இருந்தா அது கழிவு நீர் ஓடும் ஜீவனில்லாத நதியா இருக்கும்.”

”ஓ நீங்க வீட்டுக்குள்ள கழிக்கறத, ஆத்துக்கு அனுப்பறீங்களா? நாசமாப் போச்சு, அப்ப குடிக்கற தண்ணி?

 ”அது பைப்ல வரும். இதோ இந்த மெசின்ல போய் சுத்தப் படுத்தி அப்புறம் குடிக்கவேண்டியதுதான். துவைக்க இந்த மெசின்ல போட்டா போதும் துவைச்சி காய வெச்சிக்கொடுத்துடும்.”

”அப்ப சாப்பாடு..”

”இதோ இந்த ஐஸ் பெட்டில இருக்கு, அத இந்த பெட்டில வெச்சா சூடாக்கி சாப்ட்டுடலாம். எல்லாம் கரண்ட்டு”

”அப்ப அது போனா விறகா?”

”அதெல்லாம் எதுக்குப் பாட்டி, இதோ கேஸ் இப்படி திருகினா எரியும். சமைச்சிக்கிலாம்.”

”தலை சுத்துதுடா பேராண்டி, நாங்கல்லாம் எப்படி வாழ்ந்தோம். இப்படி சீரழிஞ்சு கெடக்கறீங்களே? ”

”சரி அப்ப வீட்ல என்னதான் பண்றீங்க? ”

”இதோ இந்தப் பெட்டில சீரியல் பார்ப்போம் பாட்டி..”

”சீரியல்னா? ”

”அதான் குடும்ப கதைங்க..”

”ஓஹ் அடுத்தவீட்டு வம்ப திண்ணைல உக்காந்து நாங்க பேசின பேச்சு மாதிரி இப்ப இந்தப் பெட்டில வந்துடுதா?”

”ஆமாம் பாட்டி. ”

”சரி எங்க உம் பொண்டாட்டி.”

”வேலைக்குப் போயிருக்கா பாட்டி.”

”என்னடா இது. பொம்பள வேலைக்குப் போறதா? அதுவும் தனியாவா?”

”இல்ல பாட்டி அவங்க ஆபீஸ்ல வேன் வரும் கூட வேலை செய்றவங்க எல்லாரும் அதுலயே போய் வந்துடுவாங்க. ”

”இருட்டிடுச்சே, இன்னுமா வரல.”

”இல்ல பாட்டி இப்பத்தான் போயிருக்கா. காலைலதான் வருவா?”

”என்னது ராத்திரி வேலைக்குப் போறாளா? அதும் ஆம்பளைங்க கூடவா? நீ புத்தி தெளிஞ்சிதான் பேசறியா?”

”இதுல என்ன தப்பு பாட்டி. உங்க காலம் வேற ”

”என்னடா எழவு எங்க காலம் வேற? நாங்க வாழ்ந்ததுக்கும் இப்ப நீங்க வாழறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா? ”

”சரி வா பாட்டி ஒரு நட கோவிலுக்குப் போய் வரலாம்.”

”எனக்கு தல சுத்துதுடா? இப்ப என்னால நடக்க முடியாது.”

”அட நடக்க வேண்டாம் பாட்டி. வண்டிலயே போய் வந்துடலாம்.”

”எவ்ளோ தூரம்ப்பா?”

”நடக்கற தூரம்தான்”

”காசி ராமேஸ்வரத்துக்கே நடந்துதானே போய் வந்துண்டிருந்தோம். இப்ப நடக்கறதூரத்துக்கே வண்டியா?சரி உன் புள்ள எங்க?”

”புள்ள இல்ல பாட்டி பெண் குழந்த”

”அடப்பாவி பெத்தது ஒண்ணு அதும் பெண்ணா? என்ன வயசாகறது எங்க போயிருக்கா?”

”அதுல என்ன பாட்டி? 10 வயசாகுது. படு சுட்டி. குட் டச் பேட் டச் க்ளாஸுக்கு போயிருக்கா?”

”அப்படின்னா ?”

”அதாவது பெண் குழந்தைகிட்ட யாராவது தப்பா தொட்டு வம்பு பண்ணாம இருக்க, எங்க தொட்டா தப்பு, சரின்னு சொல்லிக்கொடுக்கற க்ளாஸ். அப்பதானே தனியா வெளில போகும்போது பாதுகாப்பா இருக்க முடியும்.”

”ஹும்ம் தலையெழுத்து! அந்தக் காலத்துல நாங்க வேத்து ஆம்பளைங்க முகத்தக்கூடப் பாக்க மாட்டோம்.. போகட்டும் வயசு பத்தாயிடுச்சே? நல்லது அப்ப சீக்கிரம் கல்யாணத்தப் பண்ணவேண்டியதுதானே?”

”பாட்டி? என்ன பேச்சு இது 10 வயசு கொழந்தைக்கு கல்யாணமா?”

”என்னடா அதிர்ச்சியாகற? எனக்கெல்லாம் 8 வயசுலயே நடந்து போச்சு இதுவே ரெண்டு வருஷம் தாமசம் தெரியுமில்ல.”

”போகட்டும் எங்க உங்கம்மா, அப்பா?”

”ரெண்டுபேரும் ஊர்ல இருக்காங்க? ”

”ஏண்டா நீ இங்க வெச்சிக்க வேண்டியதுதானே? அதான் வீடு பெரிசா இருக்கே?”

”என் பொண்டாட்டிக்கு தனிக்குடித்தனம்தான் பிடிக்கும் பாட்டி.”

”ஓஹோ அப்ப கூட்டுக் குடும்பத்தையும் சாகடிச்சாச்சா? சரி அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் நம்ம ஜாதி ஜனங்கதானே?”

”பாட்டி என்ன இது ஜாதி எல்லாம் இப்ப ஒரு விஷயமே இல்ல, அதெல்லாம் அந்தக்காலம். இங்க எல்லாரும் சமமாத்தான் இருக்கோம்.”

”என்ன எழவுடா இது? பெத்த அம்மா அப்பாவ ஊர்ல குடிவெச்சிட்டு வேத்து மனுஷங்க கூட தனித்தனியா கதவு வெச்சிக்கிட்டு கூட்டுக்குடித்தனமா? நாசமாப் போச்சு..”

”ஆமா அப்பவே கேக்கணும்னு நெனெச்சேன் இதென்ன உடுப்பு? வேட்டி கட்டறதில்லையா?”

”பேண்ட் டீசர்ட் பாட்டி.. இதான் இப்ப எல்லாரும் போடறோம்.”

”என்னடா நீ தாட்டியா இருக்க கொடில மெல்லீசா தொங்குது. ”

”அது பொண்டாட்டியோடது பாட்டி ..”

”என்னது அவ பொடவை கட்டறதில்லையா? அவளும் உன்னமாதிரியே உடம்ப பிடிக்கறமாதிரியா ட்ரெஸ் போட்டுண்டு ராத்திரில ஆம்பளைங்க கூட வேலைக்குப் போறாளா? விளங்குமாடா?”

”அய்யோ கலி முத்திப்போச்சுடா கலி முத்திப்போச்சு. ஸ்ஸ் முடியலையே ஆண்டவா. இதென்னடா தண்ணி கலங்கி இருக்கு எனக்கு ஒரே தாகம் கொஞ்சம் குடிக்கட்டுமா? ”

”அய்யோ பாட்டி அது விஸ்கி அது வேண்டாம் நான் உனக்கு மினரல் வாட்டர் தரேன்.”

”விஸ்கியா அப்படின்னா.. ம்ஹ்ஹ் அய்யோ இதென்னடா சாராயம் மாதிரி இருக்கு?”

”அது வந்து சாராயம் இல்ல பாட்டி விஸ்கி சோசியல் ட்ரிங்க். அதாவது சளி பிடிக்கும்போது குடிக்கறதுக்காக..”

”அய்யோ அய்யோ அய்யோ ஆமா அதென்னடா எழவு சத்தம். ”

”மூணாவது அப்பார்ட்மெண்ட்ல ஒரு ஆளு இறந்துட்டார் பாட்டி.”.

”ரொம்ப வயசானவனோ?”

”இல்ல பாட்டி சின்ன வயசுதான். மூணு மாசம் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு.”

”பாவம் அவம் பொண்டாட்டி உடங்கட்ட ஏறுவாதானே ?”

”என்ன பேச்சு இது பாட்டி? அவங்க அடுத்த கல்யாணம் பண்ணிப்பாங்க. ”

”போச்சு போச்சு எல்லாம் போச்சு எப்படியெல்லாம் கட்டிக்காத்த கலாச்சாரம் நாசமாப் போச்சு..”

”அப்படியெல்லாம் இல்ல பாட்டி நாங்களும் கலாச்சாரத்தக் கட்டிக் காக்கறோம்.”

”அப்படி என்னடா காக்கறீங்க?”

”லிவிங் டு கெதர்னு ஒரு வியாதி பாட்டி.”

”அதென்ன வியாதி?”

”அதாவது ஆணும் பெண்ணும் கல்யாணமே செஞ்சிக்காம ஒரே வீட்ல ஒண்ணா சேர்ந்து வாழறது. அது தப்புன்னு ஒரு பெரிய போரட்டம்”

நல்லகாலம் ஆம்பளையும், ஆம்பளையும், பொம்பளையும், பொம்பளையுமா கல்யாணம் பண்ணிக்கறாங்கன்னு சொல்லாம இருந்தியே”

”அதெல்லாம் எப்பவோ சகஜமா இருக்கு பாட்டி. ”

”அட நாசமாப் போனவனே, ஓஹோ இப்ப புரியிது அதாவது என்னால முடியாதது உன்னால முடிஞ்சிதப் பார்த்த கோபம் எனக்கு வந்தமாதிரி, உன்னால முடியாதத, வேறொருத்தன் செய்யிறப்ப உனக்கு கோவம் வருதா? இப்ப புரியிதா ஏன் பொண்ணுக்கு 10 வயசில கல்யாணம் பண்ணச்சொல்றேன்னு? அப்படிப் பண்ணிவெச்சா ஏண்டா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழப்போறாங்க? இதுக்குப் பேரு குடும்பமாடா? கலாச்சாரமாடா? எப்படி இருந்த குடும்ப வழிமுறை நம்மளோடது சோரம் போயிட்டியேடா பேராண்டி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல நீங்க அழிச்ச கலாச்சாரத்த இப்பவாவது மீட்டிடுங்க”

"ஏய் கிழவி கலாச்சாரம்னா என்னான்னு தெரியுமா? என்று ஒரே போடாக அருகிலிருந்த கம்பியால் வாயில் அடித்தேன். "

”என்னையாடா அடிக்கிற நாசமாப் போறவனே!, நீயும் கொள்ளுத்தாத்தாவா வருவடா? அலைவடா? அன்னிக்குத்தெரியும்டா என் கலாச்சார வேதனை”

கதவருகே நின்று பார்த்துக்கொண்டிருந்த மனைவி "ஹனி இப்ப நான் செஞ்சது சரிதானே இதுக்குத்தான் இந்த கெழங்கட்டைகளை எல்லாம் ஹோம்லயோ ஆஸ்ரமத்லயோ சேர்த்துடனும். ப்ளடி ஹெல். செத்துப்போயும் வம்பு பண்ணுதுங்க" என்றாள்.

”சரி விடும்மா. மீடியம் மூலமா வந்த வினை”

கையைப் பிடித்துக்கொண்டிருந்த பெண் குழந்தை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. என்னிடம் ஓடி வந்து ”ப்ளீஸ் டாடி அவர் கல்சர் பத்தி ஒரு எஸ்ஸே எழுதி தாங்க டாடி நாளைக்கு க்ளாஸ்க்கு எடுத்துக்கிட்டுப் போகணும்.”

”அதுக்கென்னம்மா” என்று கூகிளில் தேடத்துவங்கினேன்...!



.

சிவோஹம்..

மேலே போர்த்திய காவித்துணி படபடத்துக்கொண்டு இருந்தது. 

காசி. 

கங்கையின் படித்துறை. 

பிணங்கள் எரியாத ஓரிடத்தில் அமைதியாய் நீரின் ஆக்ரோஷத்தைப் பார்த்தபடியே அமர்ந்துகொண்டிருந்தேன். நன்கு வளர்ந்த என் தாடியும், கேசமும் எதிர்க்கமுடியாது காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நீரின் வேகத்தில் சுழல்களையும் அலைகளையும் கிளப்பியவாறு செல்லும் கங்கையை பார்த்துக்கொண்டே இருந்தேன். தூரத்தில் ஒரு பெரிய மீன் மூழ்கி எழுந்து விளையாடிக்கொண்டிருந்தது. குளிர் பழகிவிட்டிருந்த உடல். நடுங்கா விரல்களால் மெல்ல என்னுடைய பையைப் பிரித்தேன். ஐந்து ஐந்தாகக் கட்டப்பட்ட சுள்ளிகள் கிட்டத்தட்ட ஆறு அங்குல நீளம். ஏதோ ஒரு யாகத்திற்கு போயிருக்கவேண்டிய சமித்துகள் அவை. ஒவ்வொரு கட்டையும் எடுத்து ஒன்றோடு ஒன்றாக இணைத்து கட்டினேன். வயிற்றில் வைத்துப் பார்த்தேன். சரியாகப் பத்து கட்டுகள். ஒவ்வொன்றிலும் ஒரு சங்கேதக் குறியீடு இருந்தது. அது ஒவ்வொன்றும் ஒரு வாக்குறுதியின் வேறு வடிவம். 

கணக்கிட நான் யார்? என்ற கேள்வியில் மெதுவாய் சுள்ளிக்கட்டுகளை உள்ளே வைத்தேன். இடுப்புத் துணி களைந்து, மேல்துணி மட்டும் உடுத்தி கங்கையில் இறங்கினேன். உடலுள்ளே உஷ்ணமும் வெளியே மரக்கும் குளிருமாய் தலை நனைத்து மூழ்கி, மூழ்கி எழுந்தேன். குளிர் நீங்கி ஒரு ஏகாந்த வெப்பம் உடல் முழுவதும் பரவி இருந்தது. ஏதோ ஒன்று அருகில் மிதந்து சென்று கொண்டிருந்தது. நீரின் வேகம் நீயும் வாயேன் என்றழைப்பதுபோல் இழுக்கத்துவங்கிய நேரம், நீரை விட்டு மெல்ல எழுந்தேன். பையை எடுத்துக்கொண்டு துணியைப் போர்த்திக்கொண்டு மெல்ல காசியின் குறுகிய தெருக்களில் நடக்கத்துவங்கினேன். 

நாட்டின் பல இடங்களிலிருந்து வந்தவர்களால் பலவிதமான மொழிகள் பேசப்பட்டு இறைச்சலாய் இருந்த இடத்தினை விட்டு வேகமாய் நகர்ந்துவிடவேண்டி நடையைத் துரிதப்படுத்தினேன். போகவேண்டிய இடத்திற்கான வழி தெளிவாய் என்னால் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தது. உள்வாங்கப்பட்டிருந்தது. இறக்கும்தருவாயிலும் என்னால் எழுத்து பிசகாமல் சொல்ல இயலும். ஏனெனில் சூரியனின் முதல் ஒளி விழும் நேரம் நான் அங்கிருக்கவேண்டும். நாள் கணக்கு முக்கியமல்ல ஆனால் நேரம் முக்கியம். மீண்டும் சமித்துகள் எனப்படும் அந்தக் குச்சிகளை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். நடையைத் துரிதமாக்கினேன். வெகுதூரப் பிரயாணத்திற்கு மனம் மெல்லத்தயாராகியது.

”நில்லுங்கள்” என்ற குரல் வந்த திசையை நோக்கினேன். 

”ஆனந்த பவனத்திலிருந்தா வருகிறீர்கள்?” 

”இல்லை. வாரனாசி” என்றேன். 

சிரித்தவாறே ”நானும் அதைத்தான் கேட்டேன்.” என்றவரை உற்றுப் பார்த்தேன். நான் தமிழென்பது இவருக்கெப்படித்தெரியும் என்ற ஆச்சர்யத்தை அவர் கவனித்திருக்கக்கூடும். 

”உங்கள் நிறமும் உடல்வாகும் நீங்கள் தமிழ் பேசுபவர் என்பதாக எனக்குப் பட்டது” என்றார். நான் வெறுமனே தலையாட்டிவிட்டு விடைபெறும் தோரனையில் நடக்க முற்படும்போது, 

”என்ன அவ்வளவு அவசரம்? ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? பார்த்தால் பசியுடன் இருப்பவரைப் போல் தோன்றுகிறது.” 

நான் பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து ஓடும் கங்கையை வெறித்துப் பார்த்தேன். 

”அஹ்ஹஹ் அது நீர். ஒரே பூதம். நானும் நீயும் பஞ்ச பூதம். சலனத்துடன் மூன்று பூதங்களும், சலனமில்லா இரண்டு பூதங்களுமாய் எங்கே கட்டற்று காட்டாறைப் போல செல்வது? தடைகள் வரும். தடுப்போர் வருவர். கேள்விகள் வரும். நாவே நெருப்பின் அங்கம். ஜ்வாலையைப் போலவே அதன் தோற்றம். வெறும் நீராய் காட்டாறாய் அடங்கமாட்டாமல், கட்டுப்பாடுகளற்று ஆர்பரித்து எங்கே செல்லமுடியும்? கடலுக்குத்தானே? ”

மீண்டும் அவர் சிரித்தார்.

புரியாத குழப்பத்திலும் நான் கங்கையைப் போலே இருந்திருந்தால் ஒரு தடையுமின்றி என் வழியில் சென்றிருக்கலாமே என்ற என் உள் மன எண்ணம் இவருக்கெப்படித் தெரிந்தது என்ற வியப்பினாலும் மெல்ல அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.

”வா. சற்று ஓய்வெடுப்போம். உணவு எடுத்துக்கொண்டு பிறகு பேசலாம். ”

அவர் பையிலிருந்து உணவெடுப்பார் என்று பார்த்தால் சில இலைகளை எடுத்தார். ”ம் சாப்பிடுங்கள், எல்லாம் மூலிகைகள். பசி எடுக்காது. களைப்பு தெரியாது. குளிர் தெரியாது.”

ஏதும் சொல்லாது அவர் தந்ததை உண்டேன். அவர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேர ஓய்விற்குப் பிறகு ”வாருங்கள் போகலாம்” என்று எழுந்தார். என்னுடைய தயக்கத்தைப் பார்த்து ”எனக்குத் தெரியும் நானும் அங்கேதான் செல்கிறேன். முதல் சூரிய ஒளி தரிசனம்தானே இலக்கு?” நான் ஆச்சரியத்துடன் பார்த்த பார்வையில் அவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. 

”அது ஒன்றும் ரகசியமில்லையப்பா. அதுவே பிரதானம். பலமுறைகண்டாலும் திகட்டாத பேரானந்தம். வா போகலாம்.”

பல நாட்கள் ஒன்றும் பேசாமலேயே நடந்தோம். பெருங்குரலெடுத்து அவர் பாடும்போது மட்டும் என்னை அறியாமல் கண்ணீர் பெருகும். மற்றபடிக்கு பெரும் சலனங்கள் ஏதுமின்றி அவரைப் பின் தொடர்ந்தேன்.

பொழுதுபுலரப்போகும் ஒரு நாளின் நடைப் பயணத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று ஒரு குறிப்பிட்ட திசையில் அவரின் கண்கள் நிலைத்தது. என்னைப் பார்த்தார். ”தரிசனத்திற்குத் தாயாராகு” என்றார். என் உடல் நடுங்கத்துவங்கியது. 

அவர் என் அருகில் வந்தார். 

“கேட்கவே மறந்தேன். உன் பெயர் என்ன?” என்றார். 

“காசியிலேயே விட்டுவிட்டேன் எனவே பெயரேதும் இல்லை” என்றேன். விசித்திரமாக என்னைப் பார்த்தவர் சட்டென்று நினைவுவந்தவராக ”இதோ முதல் ஒளி விழும் நேரம், கவனத்துடன் நில், பிசகினால் ஒன்றும் மிஞ்சாது. ம்ம் நேரே பார்” என்றார். சூரியனின் பொன்னாலான ஒளியில் அது தகதகத்தது. என்ன இதுதானா? ஹர ஹர மஹாதேவ என்று அவரின் குரலில் கைலாயதரிசனம் வெண் பனி போர்த்திய மலையில் தங்கம் வேய்த்ததுபோல அதன் ஒளிச் சிதறலில் நெஞ்சு பீறிட்டுக்கொண்டு ஒரு கேவல் வந்தது. 

“அது அப்படித்தான் முதல் முறை பார்க்கும்போது மூச்சடைக்கும். வேறெதுவும் நினைக்காதே. தலைக்குமேல் கைகள் கூப்பி சிவனைத் தொழு” என்றார். சற்று நேரத்தில் நிலைக்கு வந்தேன். ”சரி உன் பெயரைத்தான் காசியில் விட்டாய் உன் தந்தையார் பெயரையாவது சொல்?” 

”மூன்றாம் இராசேந்திர ”


”இராசேந்திர என்னப்பா சொல்கிறாய்.”


”சோழம் சோழம் சோழம்” என்றேன். மெதுவாய் விளிம்பில் கை கூப்பியபடியே பள்ளத்தாக்கில் சரிந்தேன். 


சிவோஹம்!


.

வெண்ணை 0.11 (லாஜிக் மீறும் கதைகள் - கடப்பாறை நீச்சல்!)



போன முறையே சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கில்ல. சரி தலைப்ப ஒருக்க நல்லா படிச்சிட்டு உள்ளார போலாம்..!

முகிலனும் நானும் நயாகரா ஃபால்ஸ்க்கு சனிக்கிழமையானா எண்ணை தேச்சி குளிக்கப் போவோம். ரெண்டுபேருக்குமே நீச்சல் தெரியாது. முகிலனுக்கும் அருவி மேலேர்ந்து டைவ் அடிக்கனும்னு ஆசை. எனக்கு அருவி பக்கத்துல போகனும்னாலே அலர்ஜி.

ஒருக்கா ஜான்ஸி அக்காகிட்ட வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேன். ஜான்ஸி அக்கா தெரியுமில்ல நம்ம விஜயசாந்தி கீரோயின் இருக்காங்களே அவங்க மாதிரி நெம்ப தெகிரியமான பார்ட்டி. அக்கா அருவில டைவ் அடிக்கறதுல கில்லாடி.

”என்னா சங்கரு நீச்சல் போட்டி வெச்சிக்கலாமா? இக்கரையிலேர்ந்து அக்கரை?”

அப்படின்னு கேட்டப்பதான் வெனையே ஆரம்பிச்சிது. ஒரு பெண்ணிடம் தோற்கக்கூடாதென்ற ஆண்டாண்டுகாலமாய் இருந்த ஆணவ அணுக்கள் வீராப்பாய் போட்டிக்கு சரி என்றது. முகிலன் என் கையை பிடித்து இழுத்தபோது கூட நான் என் முடிவில் தீர்மானமாய் இருந்தேன்.

”சரி என்ன ஸ்டைல்?” ஜான்ஸி அக்கா கேட்டபோதுதான் எனக்கு மண்டைக்குள் வெயில் அடித்தது..

”கடப்பாறை நீச்சல்” என்று சொல்லி காசித் துண்டால் முகம் துடைத்து புருவம் உயர்த்திப் பார்த்தபோது ஜான்ஸி அக்கா முகம் நான் எதிர் பார்த்த படியே குழம்பிப்போயிருந்தது.

”அதென்னா கடப்பாறை நீச்சல் இங்லீஷ் பேர தமிழ்ல சொல்றியா என்ன?”

”இல்லையே” என்றேன்.

”சரிக்கா வர்ற ஞாயித்துக்கிழம வெச்சிக்கலாம் போட்டிய.” என்று சொல்லிவிட்டு முகிலனுடன் புல்லட்டில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டேன்,

”க்ளக்” என்று முகிலன் சிரித்தபோது முகிலனுக்கும் புரிந்துவிட்டதாய் எனக்குப் பட்டது.

 ”சரி உனக்குள்ளயே வெச்சிக்கோ. ஞாயித்துக்கிழம நாம சாரி நாந்தான் கெலிக்கறேன் என்ன? ஆமா இப்ப எங்க முகிலு போறோம்.”

”மெட்ரோக்கு.! விசா வற்றாப்ல” என்று முகிலன் சொன்னபோதுதான் எனக்கு விசாவின் நினைவே வந்தது, ஆஹா இனி ஞாயிறு களை கட்டிடும்.

”அட மறந்தே போச்சு! ஆமா விசாவ எங்க தங்க வெக்கறது. தோட்டவீட்லயா?”

”இல்ல, விசாவுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது, அதனால நம்ம கூடவே தங்கிடட்டும்.” எனக்கும் அது சரியென்றே பட்டது. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு பக்கத்தில்தான் லேடீஸ் காலேஜும், ஹாஸ்டலும் இருந்தது. பெண்களைப் பார்த்தால்தான் எழுத்தாளருக்கும் கதை எழுத வரும் என்று தோன்றியது. என்னது யார் எழுத்தாளரா விசாவை நாங்க அப்படித்தான் அழைக்க ஆரம்பித்தோம், அது தனிக் கதை, அதை பிறகு பார்க்கலாம்.

--

”டாமிட்..”.

நான் விசாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகிலன் கோக் வாங்க சென்றிருந்ததால். வரவேற்க நான் முதலில் செல்ல வேண்டி இருந்தது.

 ”விசாகூல்டவுன் இப்ப என்னாச்சு?”

”என்ன சங்கர் நீங்களே இப்படிக் கேட்கலாமா?” கையில் வைத்திருந்த போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரில் அங்காடித்தெரு என்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் 555 புகைந்து கொண்டிருந்தது. ஆழ இழுத்த விசாவை நான் வெறித்தேன். ’கேபிள்’ என்று பனியனில் எழுதி இருந்த ஒரு மெக்ஸிகோகாரி விசாவைப் பார்த்து சிரித்தபடி சென்றாள்..

”இந்தப் பெண்ணா?” என்றேன்.

இல்லை என்று உள்ளே பழம் விற்றுக் கொண்டிருந்த வடக்கூர் பெண்ணைக் காட்டி ”அவ சாரிய ஒருத்தன் பூட்ஸ் காலால மெதிச்சிட்டான். அவன் கால எடுக்கற வரைக்கும் அவ ஒண்ணுமே சொல்லாம நின்னுக்கிட்டிருந்தா **** ஒரு குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூடவா காமிக்ககூடாது.”

திரும்பவும் கூல்டவுன் என்றால் அந்த நட்சத்திர வார்த்தை எனக்கும் வருமென்று தோன்றியது. நான் முகிலனுக்காக காத்திருந்தேன்.

--

”ஆமா யார்கூட போட்டி ஞாயித்துக்கெழம?” என்று விசா கேட்பதற்கும் வாழை பழத்தோல் எங்கள் மீது விழுவதற்கும் சரியாக இருந்தது. புல்லட்டின் மேற்கூரையை மூடாமல் வண்டியோட்டிக்கொண்டிருந்த முகிலனைப் பார்த்தேன். சரியாக தோல் விசாவின் மடியில் விழுந்திருந்தது. அந்த நட்சத்திர வார்த்தை வருமென்று எதிர்பார்த்த எனக்கு புன்னகை தெரிந்தது ஆச்சர்யமாக இருந்தது.

“ என்னதான் சூப்பர் டைவர்ன்னாலும் பழம் உரிச்சிக்கிட்டே இப்படி வண்டியோட்டக்கூடாதுங்கோவ்..” என்று முகிலன் எதிர்காற்றையும் மீறி பக்கத்து வண்டியைப் பார்த்து சொல்லியபோதுதான் கவனித்தேன். அட ஜான்ஸி அக்கா! புல்லட்டின் முள் சரியாக 150 மைல் காண்பித்தது.

 எங்க போறீங்க? என்ற என் சைகைக்கு டி ஓ என்ற சைகை பதிலாகக் கிடைத்தது. அடுத்த பழத்தை உரித்தபடியே அக்கா பறக்க ஆரம்பித்துவிட்டார். டிஓ டொரோண்டோவா? என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நான் விசாவைப் பார்த்தேன். சீரியஸாக குமுதத்தில் த்ரிஷாவின் படத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்தது விசாவின் விரல்கள். எழுத்தாளனின் பிரசவ வேதனையை நான் பார்க்க இயலாது வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

--

ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நயாகரா கேட்டில் நின்று கொண்டிருந்தோம். நான், ஜான்ஸி அக்கா, விசா, முகிலன் வாட்ச்மேன் உள்ளே விட மாட்டேனென்று அக்காவை திட்டிக்கொண்டிருந்தார்.

 ”ப்ளடி மேல் சாவனிஸ்ட்” என்று விசா பல்லைக் கடிக்க ஆரம்பிக்க எனக்கு வில்லங்கமாய் ஏதேனும் நடக்குமோ என்று பல்லி உள்ளே கத்த சுருதி சேர்த்துக்கொண்டிருந்தது. எப்பொழுதும்போல முகிலன் ஐபோன் எடுத்து படமெடுக்க ஆயத்தமானபோது..

அக்கா என்னிடம் திரும்பி ”இன்னிக்கு இது வேலைக்காவாது போல சங்கரு. சரி போகட்டும் போட்டிய ரத்து பண்ணிடலாம். ஆனா அதென்ன கடப்பாறை நீச்சல்? எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடேன்.”

”சாரிக்கா அத வெச்சித்தான் நான் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கப்போறேன்” என்றேன். அக்கா புன்னகைத்தபடியே சரி பொழைச்சிப்போ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு லேட்டஸ்ட் ஃபெர்ராரியில் ஏறி 7 நொடிக்குள் புழுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு காணாமல் போனார்.

”நீயெல்லாம் ஆணாதிக்கவாதிய்யா..” என்ற விசாவை நான் புருவம் சுறுக்கிப் பார்த்தேன். இப்பொழுதும் வீடியோ ரொம்ப முக்கியமா முகிலன்? என்று மனதில் கேட்டுக்கொண்டே. ”நான் என்ன பண்ணினேன் விசா?” என்றேன். ”ஏன் அந்த கடப்பாறை நீச்சலை ஜான்ஸி அக்காவுக்குச் சொல்லி அவங்க ஒலிம்பிக்ல மெடல் வாங்கக்கூடாதா?” என்று கேட்டு முடித்த விசாவிடம், புல்லட்டின் டிக்கியில் வைத்திருந்த கடப்பாரையை எடுத்துக் காட்டி

”நல்லா கவனமா பார்த்துக்க விசா, இதுதான் கடப்பாறை நீச்சல்” என்றபடியே கடப்பாரையை தெளிந்த அந்த ஆற்று நீரில் போட்டேன். அது ’சொய்ங்’ என்று அடியில் போய் படுத்துக் கொண்டது.

”என்னாது இது” என்று அதிர்ந்த விசாவிடம் ”இந்த கடப்பாறைக்குத் தெரிந்த நீச்சல்தான் எனக்கும் தெரியும்” என்றேன்.

முகிலன் அப்பொழுதும் ஐ போனில் வீடியோ எடுத்தபடியே. என்னைப் பார்த்து அவ்ளோதானா கண்டினியூ உண்டா?? என்று கேட்டது

”****** ” என்ற விசாவின் சத்ததில் பிசிறாகவே காதில் விழுந்தது.


--

குறிப்பு: இது காலஹாரி இலக்கிய(!)  முறையில் எழுதப்பட்ட புனைவு. நானும் முகிலனும் டியூஷன் படிக்க செஷெல்ஸ் போனபோது நினைவு படுத்தி எழுதினோம். முதலில் வாசிக்கக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும். போகப் போகப் பழகிடும்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதுதான் முடிவென்று சுலபமாய் ஊகிக்கமுடியும். ஆனால் நடுவில் வரும் திருப்பங்கள் நிச்சயமாய் எழுதும் என்னால் கூட ஊகிக்க முடியாது. நீங்களும் முயற்சி செய்யுங்கள். காலஹாரி கதைகள் எழுத முகிலனையும் விசாவையும் மேடைக்கு அழைக்கிறேன்.

நன்றி! :))



.

மரணஜீவிதம்..



அம்மா என்னோட ஹேர்க்ளிப் எங்க? இதோடு மூன்றாவது முறையாய் கத்திவிட்டாள் ஸ்வாதி. அவனுக்கு அவள் குரல் மாடியில் தெளிவாய் கேட்டது. குரல் கேட்க்கும்போதே மனசு பூராவும் ஜயண்ட் வீலின் மேலிருந்து கீழே வரும்போது அடிவயிற்றில் வரும் ஜிலீரென்ற உணர்ச்சிகளால் பீடித்திருந்தது.

காதல் உள்ளே நுழையும் முன்பு வரை ஒரு ஆச்சரியம் நுழைந்த பின்னோ அது மரண அவஸ்த்தை. இதுவரையிலும் நட்பாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனி என்ன ஆகுமோ எனத்தெரியாது. ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே முடிவு செய்திருந்தான். இன்றைக்காவது அவளிடம் சொல்லவேண்டியதுதான்.

தனியாய் ஒரே பிள்ளையாய் அதுவும் சகோதர சகோதரி பொறுப்புகளும் தொல்லைகளுமில்லாத ஆண் மகனாய் பிறப்பவனுக்கு அழகாய் பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அன்பு பொழிகிறது. நட்பாக ஆரம்பித்து காதலாய் அது மாறுமா என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யங்கள் சுகமான மரண அவஸ்த்தை,

மரண அவஸ்த்தை. ஆச்சர்யமாய் இருந்தது அவன் யோசிப்பு. மரணம் என்பது அவஸ்த்தை என்றால் மரணிக்கும் தருவாயில் வரும் உடல் வேதனைகளா? மன வேதனைகளா? பின் எப்படி சந்தோஷத்தை மரண அவஸ்த்தை என்று எண்ணிக்கொள்கிறேன். அவனே கேட்டுக்கொண்டான். ஒஹ் புரிந்துவிட்டது. இந்த வாழ்வு. யெஸ் இந்த வாழ்வு இந்த பிறப்பின் பூரணம் மரணம். அதை நோக்கியே இந்த உயிர் வளர்கிறது, சிரிக்கிறது, அழுகிறது, அகங்காரம் கொள்கிறது, அன்பு கொள்கிறது, அழிவு செய்கிறது, ஆக்கம் செய்கிறது, அடுத்த மரணத்தினை தயாரிக்க கூடல் கொள்கிறது, மரணத்தை குழந்தையாய் பெற்று கொஞ்சுகிறது, தாலாட்டி சீராட்டி, மரணமில்லா பெருவாழ்வு போதனைகள் புகுத்தி மகனே உன் சமர்த்து என்று இந்த உயிர் கோளில் மேய விடுகிறது. உயிருடன் இருக்கிறதா என்று தினமும் மரணத்தின் வளர்ச்சியை கவனமாய் பாதுகாக்கிறது.      

மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தலையை உதறிக்கொண்டான். ஏன் இறப்பு இங்கே அழுகையாய்ப் போனது? மீண்டும் உள்ளே கேள்வி எழுந்தது. ஒரு தொடர்பு விட்டுப்போவதாலா? இறப்பதற்காகவே உயிர் என்பது வாழ்கிறது என்பதை மறந்து இறப்பை வெல்லவே உயிர் வாழ்கிறேன் என்பது போதையாய் மரத்துப்போனதா? அதிகபட்ச ஆசையென்பது இதுதானா? தொடர் உயிர் வாழ்தலில் சாதிக்கப்போவதென்ன? அல்லது வெறும் அதிக பட்ச 100 வருட் உயிர் வாழ்தலுக்கே மனமும் தயாராகிவிட்டதா? அதன்பிறகும் என்ன செய்வதெனத்தெரியாமலே இறப்பு பிறக்கிறதா?

ஒரு காதலிக்கும் பெண்ணின் குரல் கேட்டால் மரணம் பற்றிய சிந்தனைகள் யாருக்கேனும் வருமா? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வேளை எல்லாருக்குமே இப்படி ஒரு எண்ணம் வருமா? மறைத்து வெளியில் சொல்லாது தன் வேலை தன் காதல் தன் சம்பாத்தியம், கிரிக்கெட் என்று சுலபமாய் தாண்டுகிறார்களோ? அல்லது என் யோசனையே தவறா?  

அம்மா டைம் ஆச்சு வர்ரேன். ஸ்வாதி தெரு இறங்கும் குரல் கேட்டது.

நேரே அவள் பின்னாலே சென்றான். அவள் ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பை அடைந்தாள். அப்போதுதான் கிளம்பி விட்டிருந்த பஸ்ஸில் அனைவரும் ஏறிச்சென்று விட்டிருந்தனர். காலியாய் இருந்த அந்த பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்தவாரே மெதுவாய் செல்போனை எடுத்தாள் ஸ்வாதி. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவள் திடீரென ஒரே படத்தை வெறித்துப் பார்த்தாள் அது அவனுடைய படம். எப்போது இதை எடுத்தாள். என்னை ஏன் கவனிக்கவில்லை, ’கிறீச்’சென்ற சப்த்தத்துடன் ஒரு பஸ் வந்து நின்றது. சட்டென கவனம் கலைந்து இருக்கையிலிருந்து எழுந்த ஸ்வா அவனுள்ளே புகுந்து நேரே எழுந்து பஸ்ஸில் ஏறினாள். தன்னுள் அவள் புகுந்து போனதை அதிசயித்தவாறே அவன் மெதுவாய் திரும்பினான். புகை கக்கிக்கொண்டு பஸ் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தது. அவன் காத்திருந்தான்.

--

”இங்கதான் இருக்கீங்களா?” ஸ்வாதி கேட்டபடியே பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்தாள். அவன் திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான்.

”ஹலோ ஷான் உங்களத்தான், என்ன அப்படிப் பார்க்கறீங்க?”

“ ஹாய் ஸ்வா..”

”உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.. ” என்றாள் ஸ்வாதி.

அவன் சிரித்தான். ”நானும்தான்” என்றான்.

---

அன்றைக்கு மொத்தம் மூன்று குண்டுகள் ஹோட்டல், மார்கெட் மற்றும் பஸ்ஸில் 68 பேரை பலிவாங்கி இருந்தது.


.

பறவை மனசு..



”எத்தினி வருஷம்ணே ஆச்சு நீங்க வந்து? ”

”அது ஆச்சு தம்பி பத்து வருஷம், அட நாள் கண்ணக்கெல்லாம் ஆரு பாக்கறா? எழுந்தோமா வேல செஞ்சோமா, கிடைக்குற கேப்புல பயலுங்ககூட விளாண்டோமான்னு பொழுது போகுது. மொதல்ல உனக்கும் அப்படித்தான் இருக்கும், போகப் போக பழகிடும். ”

”நான் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லண்ணே.”

”அட நான் மட்டும் என்னப்பா? வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா? பொலம்பறத நிறுத்து. அது மனசுல சீக்கு புடிச்சுடும். எது கிடைச்சிதோ அத அனுபவி. அங்கிட்டும் இங்கிட்டும் வித்தியாசம் ஒன்னுமில்ல. படிச்சவன் நீயி, உனக்கு நாஞ் சொல்லித்தரவேண்டியதா இருக்கு பாரு.”

”எந்த ஊர்ணே நீங்க?”

” பேச்ச வெச்சி கண்டுபிடிக்க முடியலல்ல?, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற? பீடி குடிக்கிறியா? ”

”பழக்கமில்லண்ணே”

”நல்லதுதான். மருவாதைக்கு சொல்றதா இருந்தா வேணாந்தம்பி, எனக்கு அப்படியெல்லாம் வயசு வித்தியாசம் பாக்கத்தெரியாது. என்னப்பொறுத்தவரைக்கும், படிச்சவன சார்னு சொல்லுவேன் அவ்வளவுதான்”

”பத்து வருஷமா இருக்கீங்களே, எப்படின்ணே முடிஞ்சிது.?”

“எல்லாம் ஒண்ணுதான் தம்பி. இடையில ஒரே முறை போயிருக்கேன். வீட்டுல யாருமே சேர்த்துக்கல, சர்தாம் போங்கடான்னுட்டு ஒரு ஓட்டல்ல ரூம் எடுத்தேன். அட அப்பத்தான் எதோ மனசுக்குத் தெரிஞ்சிது. சட்டுனு வெளில வந்து ப்ளாட் பாரத்துல படுத்தேன். இடுப்புத்துணி நவுந்தது தெரியாம நிம்மதியா தூங்னினேன்னா பாத்துக்க.”

”புரியலண்ணே”

” அட இங்க நாலு செவுத்துக்குள்ள இருக்கறோம் ஜெயிலுங்கறான். வெளில அந்த நாலு செவுத்தையும் பார்டர்ன்னுட்டு நாடுங்கறான். மொதல்ல எனக்கும்தான் புரியல மார்ல அடிச்சிக்கிடு அழுவேன். ஆனா அந்த ஓட்டல்ல கதவெல்லாம் தாப்பாப் போட்டு ரூமுக்குள்ள இருக்கும்போதும் செல்லுல அடச்சி வெச்சிருக்கறாமாதிரியே இருந்துதுப்பா. ”

”நீயே சொல்லு விடுதலைன்னா என்ன? உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம்? நல்லா ரோசனை பண்ணு, வெளில உன்ன ஏமாத்த பெருங் கும்பலே இருக்கு. ஆனா இங்க நீ ஏமாத்துவியான்னுதான் பார்த்துகிட்டே இருக்கான். இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான். கடசி முச்சூடும் இங்கயே என் காலம் கழிஞ்சா சந்தோஷந்தான். அட எனக்கு விடுதலையே வேணாந்தம்பி“

நான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.

.