பலா பட்டறை: தொடர்கதை
Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

சவாலே சமாளி (தொடர் கதை / பதிவு) (முடிவு-2)

நண்பர் ஜெய்லானி அழகான ஒரு விருது கொடுத்திருக்கிறார். மிக்க நன்றி ஜெய்லானி :-)

முகிலன் தொடரை முடித்து விட்டார். ஒன்றும் பாதகமில்லை. மூன்று வெவ்வேறு கிளைக்கதைகள்தான். ஒரு கொலையில் மட்டுமே அவை ஒன்று சேரும். எனவே என் பங்கை படித்து முடித்து விடுங்கள். ::-))

---

ப்படி ஒன்றும் விகாரமான ஒன்றைக் கேட்டுவிட்டதாய் அவனுக்கு தோன்றவில்லை. தான் சாதாரணமாய் நினைத்து நல்லதிற்காய் கேட்ட ஒன்று அடுத்தவர்க்கு எப்படி மனதைக் காயப்படுத்தும் ஒன்றாய் மாறிவிடுகிறது என்பது எப்போதும் ஒரு ஆச்சர்யமாகவே இருந்தது. அம்மாவிடமும் இப்படி அவஸ்தைப்பட்டிருக்கிறான். எதுக்குமா இப்படி புலம்பற உன்னையும் என்னையும் பாத்துக்கற மாதிரி ஒரு பொண்ண நானே கூட்டியாரேன் என்றவனைப் பார்த்து அம்மா ஆடிய ஒரு புலம்பல் நாடகம் தொலைக்காட்சி சீரியலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடுத்த வீட்டு பெண்களை எல்லாம் அவன் வீட்டு ஹாலிற்கு வரச்செய்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில விஷயங்களை ஏன் செய்தியாக மூளைக்குள் ஏற்றாது மனதில் ஏற்றி அவஸ்தைப்படுகிறார்கள்? என்று ஷானுக்கு வருத்தம் வரும். அன்றைக்கு ஸ்வாதியும் அப்படித்தான்.

”ஸ்வா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”

”சொல்லு ஷான்”

தாத்தாவ ஏன் ஒரு ஹோம்ல சேர்க்கக்கூடாது?  குடித்த காபியை அப்படியே டேபிளில் வைத்தவள் கண்களும் உதடுகளும் புருவமும் சுறுக்கி, எப்படி நீ அப்படிச் சொல்லலாம் என்று ஆரம்பித்தவள் நாளைக்கு உனக்கும் இப்படி ஆச்சுன்னா எங்கனா ஆஸ்ரமத்துல கொண்டு போய் நான் விட்டுடட்டுமா? இல்ல எனக்கு இப்படி ஆச்சுன்னா நீ என்ன எங்கனா விட்டுட்டு வேற எவளோடவாவது சல்லாபம் ஆரம்பிச்சுடுவியா? நீயும் நானும் சாப்பாடுதான் சாப்பிடறோம் சஞ்சீவி மூலிகை இல்ல. இந்த நிலம என்னிக்கு வேணாலும் உனக்கும் எனக்கும் வரும், உனக்கு எப்படி இப்படி எல்லாம் கேட்க மனசு வருது சண்முகம்.

புரிந்துவிட்டது சண்முகம் என்று அழைத்ததிலேயே அவள் தள்ளி நின்று விட்டாள். இல்ல ஸ்வா நீ தப்பா புரிஞ்சிகிட்ட, தாத்தாவுக்கு இந்தமாதிரி நிலைமைல அதிகமா மெடிகல் கேர் தேவைப்படும். அதுக்கான ஹோம்கள் இருக்கு என்னோட ஹோட்டல்ல சாப்பிட வற்ற ரெகுலர் கஸ்டமர் ஒருத்தர் அந்த மாதிரி ஒரு ஹோம்ல ட்ரஸ்டியா இருக்கார், செலவே இல்லாமக் கூட கவனிச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார் அத மனசுல வெச்சித்தான் சொன்னேன்.

ம்ஹூம் அவள் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கண்கள் வேறு கலங்கி இருந்தது. அடடா இன்றைக்கு ஹாஸ்பிடல் போய்விட்டு வந்திருப்பாளே அதைக் கேட்க மறந்தேனே? காதலியா? மனைவியா? அம்மாவா? பிள்ளைகளா? யாராய் இருந்தால் என்ன சில நேரங்களும் சூழ்நிலைகளும் உலகமகா எதிரியாவும் வேண்டத்தகாத மனிதராகவும் எதிர் எதிரே நிற்க வைக்கும். எது பேசினாலும் தவறாய் போகும். ஷான் அது புரிந்து அமைதியாய் இருந்தான். இவளே சமாதானமாகட்டும் விட்டுப் பிடிப்போம் என்று முடிவு செய்தான்.

க்கே எனக்கு டைம் ஆச்சு சொல்லிவிட்டு கிளம்பினாள் ஸ்வாதி. சீயூ, பை, பார்க்கலாம் என்ற சந்திப்பு தொடரும் வார்த்தைகள் எதுவுமில்லாது விருட்டென கிளம்பினாள், வாசல் கடந்து மறைந்தாள்.

வள் மறைந்ததும் ஷான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். டேபிளில் வைத்திருந்த ஐஸ்வாட்டர் டம்ளர் தண்ணீர் கோடுகளால் டேபிளில் ஒரு கோலம் போட்டிருந்தது. டம்ளரிலிருந்த நீர் அத்தனையும் குடித்தான். நேரம் பார்த்தான். வேலைக்குச் செல்ல கிளம்பினான்.


---


”என்ன சண்முகம் அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்ட. ”

”ஒண்ணுமில்லண்ணே சும்மாதான். ”

”அந்த கேஸ் என்னாச்சுப்பா?”

”இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டுப் போயிட்டாருண்ணே. தேவைப்பட்டா கூப்பிடறோம்னு சொல்லிட்டார். ”

”சரி உக்காரு லைன முடிச்சிட்டு வந்துடறேன்.” சுப்ரமணி அண்ணன் டிபன் தட்டையும் காபி நிரம்பிய டபராக்களையும் எடுத்துக்கொண்டு லாவகமாய் யார் மீதும் இடிக்காமல் சப்ளைக்குச் சென்றார்.

சர்வர் வேலை என்பது ஒன்றும் சுலபமானதும் கேவலமானதுமல்ல. 7 வரிசை டேபிள்களில் ஐந்தில் நான்கு நபர்களும் இரண்டில் ஆறு நபர்களும் எப்பொழுதுமே நிரம்பி உட்காரும் லைனில் யோசித்துப்பாருங்கள் அனைவரின் தேவைகளையும் சரியாய் பூர்த்தி செய்யவேண்டும். சரியாய் பில் தர வேண்டும். 12 மணி நேரம் நடந்தே குதிகாலிலிருந்து மேலாக ஒரு வலி பரவும் நிரந்தரமாய்.

சிரித்தபடியே இருக்க வேண்டும், சீருடை அழுக்காகக்கூடாது. தட்டைவிட தோசை அளவு பெரியதாக இருக்கும். டேபிளில் படக்கூடாது. சிலர் தோசையை மடிப்பதை விரும்ப மாட்டார்கள். சிலருக்கு சுடுநீர்தான் வேண்டும், பூரிக்கு எத்துனை வகை மசாலா வைத்தாலும் கெட்டிச்சட்டினி இருக்கா? என்று கேட்பார்கள். இப்போதெல்லாம் காபிக்கே நிறைய கேள்விகள் நல்லா ஸ்ட்ராங்கா, கொஞ்சம் லைட்டா, மீடியமா, கொஞ்சம் சக்கரை கம்மியா, வித்தவுட் சுகர், மினி காப்பி என்று லைனில் வரும் முப்பத்தி ரெண்டு வகை மனிதர்களின் பசியை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டிய வேலை. அதை விட முக்கியம் என்ன கொடுத்தோம் என்று சரியாய் பில் கொடுப்பது.


இடையறாத பாத்திரங்களின் சத்தங்களிலும், சொய்ய்ய் என்ற தோசை வார்க்கும் சத்தங்களின் இடையேயும் சண்முகம் ஸ்வாதியையே நினைத்துக் கொண்டிருந்தான்.    

கி கி கி கீ கீ கிகிகி எஸ் எம் எஸ் வந்திருப்பதாய் மோர்ஸ் கோட் சப்தம் சொல்லியது.

மெஸேஜை திறந்தான். அட! ஸ்வாதி நம்பர்.

Sorry my Love!

மூன்றே வார்த்தை எல்லா பிரச்சனைகளுக்கும் அப்பொழுதைக்கு முடிவுரை எழுதி இருந்தது.
  


.

சவாலே சமாளி (தொடர் கதை / பதிவு)


பரபரப்பு செய்தி!

பிதற்றல்கள் முகிலன் ஒன்பதே மாதத்தில் 500 பதிவினை (இடுகைகளை) எழுதிமுடித்ததற்காய் வாழ்த்து சொல்லி இந்த கதையின் முதல் பாகத்தை உருவான விதத்தை படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும்.*


-----


"ந்த காலத்துல மாஹாத்மா 'வெள்ளையனே வெளியேறுன்னு' ஒரு வார்த்த சொன்னதுக்காக வெள்ளக்காரன்கிட்ட மண்டையில அடிவாங்கி காது கேக்காம போனமாதிரியே கண்ணும் தெரியாம போயிருக்கலாம்."

ன் உசிர்மட்டும் போகக்கூடாதாக்கும். ஸ்வாதி நினைத்துக்கொண்டாள். சப்தம் போட்டுக்கேட்டாலும் ஒன்றும் பிரயொஜனமில்லை. தாத்தாவுக்கு காது கேட்காது. இவரைப்போல தியாகிகள் மட்டுமென்று இல்லை, எல்லா பெரிசுகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் குழந்தைகள் போலவே. சொன்னதையே சொல்லிக்கொண்டு. காதில் வாங்காது ஸ்வாதி மெதுவாய் தாத்தாவை திரும்பப் படுக்க வைத்து முதுகை பரிசோதித்தாள். வெள்ளை நிறத்தில் படுத்துக்கொண்டே இருப்பதின் காரணமாய் ஒருவித வீச்சத்துடன் மூன்று புண்கள் பெரிய பள்ளங்களைப் போல ஆழமாய் இருந்தது. கட்டிலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த அவரின் பழைய இளமைக்கால படம் அதனையொட்டியவாறே நேர் கீழே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. தாத்தாவின் புண்களுக்கு மருந்திடும்போதெல்லாம் அவள் தன் முகத்தையும் தாத்தாவின் புகைப் படத்தையும் பார்ப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. 

ரு வேளை தானும் இப்படித்தான் பேரன், பேத்திகளெடுத்து முதுகில் சீழ் வந்து, வீச்சமடித்து அவஸ்த்தைப்படுவேனோ. இப்போது போடும் ஸ்னோவும், பவுடரும், எடுப்பான உடல்வாகும், இடுப்புவரை அடர்த்தியாய் கைவலிக்கப்பின்னும் தலைமுடியும், திருத்தமான முகமும், வெடிப்புக்கீறல்களில்லா பாதங்களும், இன்னும் ஷானுக்காக மறைத்து வைத்திருக்கும் என் அழகெல்லாம் இப்படித்தானாகுமோ? 

நினைத்தவுடனே அனிச்சையாய் தலையாட்டிக்கொண்டாள். சேச்சே.. ஆரோக்கியமாய் இருக்கும்போதே போய்ச்சேர்ந்துவிடவேண்டும். என்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம். மூத்திரம் போக அடுத்தவர் துணை வேண்டாமல் மிருகங்களே மடியும்போது எனக்கென்ன பிறர் அவஸ்தையில் ஒரு வாழ்வு நீட்டிப்பு?      

"ஹாத்மாவ சுட்டப்பவே என் மூச்சும் நிற்காமப் போச்சே.." முருகேசன் தாத்தாவின் தினப்புலம்பல் ஆரம்பமாகிவிட்டது. இப்போதெல்லாம் ஸ்வாதி தனியாய் தவிக்க விட்டு தாத்தா போய் போய்விடுவாறோ என்ற கவலையை மறந்திருந்தாள். யாரை வெளியேற்ற மண்டையில் அடிவாங்கி இன்னும் புலம்பிக்கொண்டிருக்கிறாரோ அதே வெள்ளைக்காரனின் 'கால் சென்டர்’ கம்பெனியில் நல்ல சம்பளத்தில் தான் வேலை செய்து தாத்தாவைக் காப்பாற்றுவதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நினைக்கும்போது ஸ்வாதிக்கு மெல்லிய சிரிப்பு வரும். உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என்றெல்லாம் சொன்னாலும் நவீன அடிமைத்தனம் மீண்டும் உணவு ருசியாய், ஆடைகளாய், மின்சாதனங்களாய், மருந்துகளாய், குளிர்பானங்களாய் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆக்டபஸ் சூழ்ச்சியை தாத்தாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.

மெதுவாய் தாத்தாவின் முதுகில் மருந்துகள் தடவி, நிற்க வைத்து, விரிப்புகள் மாற்றி படுக்க வைத்தாள். மணி பார்த்தாள் 8.05 கிளம்ப வேண்டியதுதான். ரோஸி இன்னும் காணுமே. சம்பளத்திற்கு வரும் தாதி என்றாலாவது கடிந்துகொள்ளலாம். இவள் சேவை செய்பவள் இன்றைக்கும் தாமதமானால் ஷான் முகம் தூக்குவான். ஷான் அவன் பெயரை மெல்ல உச்சரித்தாள் சண்முகம் என்ற பெயருள்ள பணியிலுள்ள சக நண்பருக்கு அவள் கால் சென்டர் சூட்டிய நாமகரணம் அது. அட நல்லாருக்கே என்று சண்முகம் என்ற தன் மேல் மிகப் பிரியமாய் இருக்கும் காதலனுக்கும் அதே பெயர் வைத்துவிட்டாள் ஸ்வாதி. 

“சாரி அக்கா” ரோஸியின் குரலில் கவனம் கலைந்து, எல்லாம் மறந்து, ”பரவாயில்ல ரோஸி தாத்தாவுக்கு..என்று ஸ்வாதி ஆரம்பிக்கும்போதே அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அக்கா நீங்க வேலைக்கு கிளம்புங்க.” என்றாள் ரோஸி.

ஸ் பிடித்து தனது அலுவலகத்திலிருந்து ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கினாள் டாக்டரைப் பார்த்துவிட்டு ஷானை பார்க்க வேண்டும். மெதுவாய் ஏதோ யோசனையுடன் நடக்கத்துவங்கினாள்.    

---

”ஏம்பா இந்த சர்வர் வேலைய விட்டா வேற வேலை கிடைக்காதா? ”அம்மா வழக்கமான கேள்வியை ஆரம்பித்தாள். எல்லா தாய்மாருக்கும் இருக்கும் அதே மகன் கனவுகள் அவளுக்கும் இருந்தது. ஒரு மருமகள் கிடைத்தால் சீரியலில் வருவதுபோல அவளைச் சீண்டும் தின பொழுதுகளின் தீனிகளுக்காய் அலைந்து கொண்டிருந்தாள். ஒரே மகனின் ஹோட்டல் வேலை வெளியில் கவுரவமாய் சொல்ல முடியாத அளவுக்கு அவள் தாயாரித்த அவளின் சமூக அளவுகோல் தடுத்துக்கொண்டிருந்தது.

”ஏம்மா சர்வர் வேலைன்னா அப்படி என்ன கொறைச்சல். சாப்பாடும் போட்டு, டிப்ஸோட, கை நிறைய சம்பளமும் கிடைக்குது. கொஞ்ச நாள்ல தொழில் கத்துகிட்டேன்னா நானும் ஒரு ஹோட்டல் வெச்சி முதளாளி ஆகிடுவேன் பாரு.”

”அதுக்கில்லடா யார் சர்வருக்கெல்லாம் பொண்ணு குடுப்பாங்க?” சண்முகம் என்ற ஷான் அவன் அம்மாவை மெதுவாய் திரும்பிப் பார்த்தான். அந்த கவலை உனக்கு வேண்டாம்மா நானே பார்த்துப்பேன் என்று சொல்ல வந்தவன் வெறுமனே சிரித்துவிட்டு ”நான் கிளம்பரேம்மா வேலைக்கு நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு பஸ் பிடிக்க நடந்தான். இன்றைக்கு ஸ்வாதி என்ன ட்ரெஸ் போட்டிருப்பாள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஒரு சிரிப்பைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப்போவதாக இருக்கிறான். அதைக்கேட்டு அவள் என்ன நினைப்பாளோ என்ற என்ற அச்சமும் அவன் மனத்தில் எழுந்தது. அவன் பஸ் வரும்வரையில் இதே சிந்தனை ஈக்கள் அவன் கவனத்தை மொய்த்துக்கொண்டிருந்தது.

---

ஸ்வாதி டாக்டருகைய கிளினிக் அடைந்தபோது லேசாக தூரல் ஆரம்பித்திருந்தது. எப்போதுமே குடை கொண்டுவர ஸ்வாதி விருப்பப்படுவதில்லை. மழையோ வெயிலோ இரண்டிலும் முழுதாய் நனையப்பிடிக்கும். 15 நிமிடங்கள் ஆயிற்று அவள் டாக்டரை சந்திக்க. 

டாக்டர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார் ”சாரி ஸ்வாதி, உங்களுக்கு கர்ப்ப பையில சில பிரச்சனைகள் இருக்கு. ஹார்மொன் ப்ராப்ளத்துனாலன்னு இருந்தா மருந்துங்க கொடுத்து சரி பண்ணிடலாம். ஆனா..” 

டாக்டர் சொன்னதைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா, பிரமிப்பதா என்ற எந்த உணர்ச்சியைக் காட்டுவதெனெத்தெரியாது ஸ்வாதி அமர்ந்திருந்தாள். பெரும்பாலான நேரங்கள் இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. அதிகமாய் டிவி அல்லது சினிமா பார்ப்பவர்களால் சட்டென உணர்ச்சிகளை முகங்களில் கொண்டுவர முடிகிறது. நான் ஏன் சராசரி பெண்களைப்போல இல்லை.

”வேற வழியே இல்லையா டாக்டர்.” டாக்டர் ஸ்வாதியின் கையைப் பற்றி ”சின்ன வயசுல அதுவும் கல்யாணமாகாத பெண்ணுக்கு இது கொஞ்சம் கஷ்டமானதுதான், ஆனா உன்னைப் புரிஞ்சவர் ஒருத்தர் உனக்குக் கிடைக்கும்போது, இது ஒரு பெரிய விஷயமா இருக்காதும்மா.” மெதுவாய் பேசினார். அவளுக்கு ஏனோ தன் அம்மாவின் நினைவு வந்தது. 

ன்னாரெனத்தெரியும்போது தொடுதல்கள் பல அர்த்தங்களைத் தருகின்றன. வேறேதேனும் சந்தர்பத்தில் யாரேனும் இவ்வாறு கை தொட்டு பேசி இருந்தால் அந்நிகழ்வு சாதாரணமான ஒன்றாய் இருந்திருக்ககூடும். ஆனால் இப்போது அந்த தொடுதல் அவளுக்கு மிகத் தேவையானதும் ஆறுதலமாயுமிருந்தது.

தாய்மையே அனுபவித்தறியாத ஸ்வாதிக்கு தாயாக முடியாத நிலையை நினைத்து தன் மனசு அலட்டிக்கொள்ளாததை வியப்பாகவே பார்த்தாள். இறக்கப்போகும் தாத்தாவைப் பார்த்து வாழ்வின் நிலையாமை பழகிவிட்டதா என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டாள். சரி இதை ஷான் எப்படி ஏற்றுக்கொள்வானோ என்ற கேள்வி மட்டுமே அவளிடம் இருந்தது. உடல் பசி முடிந்ததும் வாரிசு பசி என்ற ஒன்று வருமே? என்னதான் உருகி உருகி காதலித்தாலும் இல்ல எங்கம்மா சொல்றாங்க என்று ஆரம்பிப்பானோ என்ற உறுத்தல் உள்ளே கிளை விடத்தொடங்கி இருந்தது.

”ஸ்வாதி” திடுக்கிட்டுத்திரும்பினால் ஷான் நின்றுகொண்டிருந்தான். வலது கையின் நான்கு விரல்களை காட்டிக்கொண்டிருந்தவனை என்ன என்று இரு புருவங்கள் நெறித்து ஸ்வாதி சைகையில் கேட்டாள். ”நாலு முறை உன்னக் கூப்பிட்டும் அப்படி என்ன இளவரசி யோசனை?” 

”ஓ காட், சாரி ஷான் கவனிக்கல. காஃபி?” என்று கேட்டவளுக்கு ”ரைட்டோ” என்றவன் உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். எப்படிச் சொல்வது?

---

வளுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் அவன். இது மூன்றாவது நாள் அவள் இந்த பஸ்ஸ்டாப்புக்கு வருவதை நிறுத்தி. காரணம்? மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம். அதை நினைத்தால் அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.

“ஹாய் ஸ்வாதி”

“ஷான், எத்தன தடவ உன்கிட்ட சொல்றது. என்னை ஸ்வானு கூப்புடுனு?”

“எங்கப்பாம்மா எனக்கு அழகா சண்முகம்னு பேரு வச்சிருக்காங்க. நீ என்னடான்னா அத ஷான்னு ஸ்டைலா கூப்புடுற. இந்த கால் செண்டர்ல வேலைக்குச் சேந்ததுல இருந்து உன் போக்கே சரியில்ல”

“அமெரிக்கன்ஸ் எல்லாம் அப்பிடித்தான் ஷான். பேரைச் சுருக்கிக் கூப்புடுவாங்க. நாமும் அப்பிடிக் கூப்புடலாமே?” 

“அது இருக்கட்டும். நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும் ஸ்வாதி.. சாரி ஸ்வா”

“கேளு ஷான்” என்று இவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். இவன் அதைக் கேட்டிருந்திருக்கக்கூடாது. கேட்டு விட்டான்.

ப்போது மூன்று நாட்களாக இவனைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாள். செல்லில் கூப்பிட்டாலும் எடுப்பதேயில்லை. 

தூரத்தில் கடலை விற்கும் வண்டி மணியடித்துக் கொண்டே போனது. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட்டுகளோடு இன்று ஆடப் போகும் போட்டிக்கு ஸ்ட்ராட்டஜி டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர். காய்கறி வாங்கிக் கொண்டு செல்லும் மாமிகள் சலசலவென பேசிக்கொண்டே செனறனர். இவை எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ஸ்வா ஸ்வா ஸ்வா. அவன் சுவாசம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருந்தாள்.

ட்டென நினைவுக்கு வந்தவனாகக் கலைந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தான். ட்யூட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

வன் வேலை செய்யும் இடம் வந்ததும் ஒரு நொடி நின்று நிமிர்ந்து பார்த்தான். “ஹோட்டல் சரவணபவன்” என்ற பலகையைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.



01.திகில் தொடரும்...!
02.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.
03.மூன்று பேரில் சிறப்பாக எழுதியவரைத் தேர்ந்தெடுப்பவர்களில் 3 பேருக்கு பாரீஸ்/பர்மா பஜார் இன்ப சுற்றுலா பரிசு.* 



*condition apply:)


.

வெளிசம்..(முற்றும்.)

முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்..


இத்தோட முடிஞ்சுது...:))


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




"என்னம்மா பண்ணிகிட்டு இருக்க"


"ம்ம் ஒரு யோசனை, என்னோட டீன் ஏஜ் பத்தி"


"ஹைய், சொல்லும்மா, நீ ரொம்ப ஃப்ரெண்ட்லிதான். ஆனா இது நீ சொல்லாதது"


"ம்ஹும் அவ்வ்ளோ சுவாரஸ்யமா அம்மாவோட டீன் ஏஜ் கேக்க.."


"பின்ன நானும் டீன்’ல நீங்க என்னல்லாம் பண்ணினீங்கன்னு சொன்னா ஒரு ஜாலி"


"நீ டீனா? கழுத 19 முடியப்போகுது"


"ஒஹ்ஹ் மா!.. ஸ்டில்ல், நான் டீன். ஸோ ப்ளீஸ்.."


"ஓகே. நானும் சில விஷயங்கள் சொல்லனும்னுதான் நினச்சேன்,"


"ஏம்மா சஸ்பென்ஸா பேசற, யாரையாவது லவ் பண்ணினீங்களா? சொல்லு சொல்லு.."


"ஆமா.. உங்கப்பாவ.."


"ச்ச.. போர்மா நீ.., அப்பாவ லவ் பண்ணாம வேற யாரையாவது லவ் பண்ணினீங்களா? நோ.. லைய், ப்ளீஸ் சொல்லுங்க"


”இல்ல கண்ணு அப்பாவ மட்டும்தான்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்னிக்கு நீ எப்போவும் சொல்வியே, இன்னிக்கு கூட கேட்டியே, அந்த பெரிய பூ போட்ட நீல சாரி.. அதைத்தான் நான் முதல் முதலா கட்டிக்கிட்டு உங்கப்பாவ பார்க்க போனேன், அப்போ அவர் இருந்தது தாம்பரம், நான் இருந்தது காளிகாம்பாள் கோவில் கிட்ட, பீச்லேர்ந்து ரயில் பிடிச்சு என்ன என்னமோ கனவுகளோட நான் பார்க்க போய்க்கிட்டிருந்தேன். அன்னிக்கு நல்ல கூட்டம் வேற, எப்படி என் காதல சொல்றதுன்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டம் உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருந்தது, சுற்றுப்புறம் மறந்த சூழல், ஏதோ நினைவில் நான் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டேன், ஆனா அந்த கூட்டத்துல சில பேர் என்ன தொட்டு சில்மிஷம் பண்ணி, அருவெறுக்க வெச்சிட்டாங்க.”   


"ஓஹ் மை காட், நீங்க என்ன பண்ணினீங்கம்மா"


"என்ன பண்ன முடியும்? ஒண்ணும் பண்ணல, அவங்க என்னோட யோசனையையும், கூட்டத்தையும் பயன்படுத்தி உடளவுலயும் மனசளவுலையும் நோகடிச்சிட்டாங்க. தாம்பரத்துக்கு முன்னாடி அவங்க இறங்கிட்டு, வண்டி தாம்பரம் நின்னதும், நான் மவுனமா ஒரு பென்ச்ல உட்கார்ந்தேன், என்ன என்னமோ யோசனைகள், ஆம்பளைங்க மேல அப்படி ஒரு வெறுப்பு, எல்லாரையும் வெறுத்தேன், இப்பகூட வார்த்தைகள் வரலை, அப்பதான் அப்பா என் கிட்ட வந்தார், ஹலோ சொன்னார், எதாவது சாப்பிடலாமான்னு கேட்டார், அவ்வளவு நேரம் அவரை விரும்பி என்னன்னெமோ யோசிச்ச எல்லாமே அந்த சம்பவத்துல காணாம போய், சாரி எனக்கு காதல் எல்லாம் வேண்டாம், ஆம்பிளைங்க மேல எனக்கு ஒரு நம்பிக்கையுமில்லை, உங்களையும் ஒரு ஓநாயாத்தான் பார்க்கிறேன். மன்னிக்கனும்னு சொல்லி அடுத்த ட்ரெயின்ல பீச்சுக்கு போக உக்காந்துட்டேன்.."


"அப்பா என்ன சொன்னார்? கோவிக்கலையாம்மா உங்கமேல"


"அப்பா என்ன நடந்துதுன்னு கேட்டார் நானும் சொன்னேன், கூடவே என்ன சமாதான படுத்தவேண்டாம் என் அபிப்ராயம் இனி மாறாது ப்ளீஸ் விட்டுட்டு போய்டுங்க அப்ப்டீன்னுட்டேன்.."


"இவ்ளோ லவ்லியா இருக்கற நீங்களா அப்படி சொன்னீங்க? ஐ டோண்ட் பிலீவ் திஸ் மம்.. அப்பா பாவம். "


"ஆமாம்மா அவர் பாவம்தான் இல்லைன்னா...


இல்லைன்னா..?? என்னம்மா சொல்லவற்றீங்க..??


” உன்ன தத்தெடுத்து வளர்க்கும்போது என்ன பார்த்து என்னோட தன்னம்பிக்கை பார்த்து, ஒரு நல்ல நட்பா உன்னை வளர்க்க என்னை அவர் தேடி விஷயம் சொல்ல வந்தது தெரியாம, நான் அவர காயப்படுத்தி இருக்க மாட்டேன்.."


"வாட் தத்தெடுத்தீங்களா?? என்னையா? என்ன சொல்றீங்க??"


"சாரி குட்டி உங்கப்பா உன்னை ஒரு ஆஸ்ரமத்திலேர்ந்து தத்தெடுத்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு யோகி, கல்யாணம், குடும்ப வாழ்க்கை இதெல்லாம் விட மனித அன்புக்காக ஏங்கிய ஒரு ஜீவன். அவரை நான் காயப்படுத்தினது, அவருக்கு கேன்ஸர் வந்து சாகறதுக்கு முதல் நாள் எப்படியோ என்னை வரவெச்சி உன்னை என்கிட்ட தரும்போதுதான் தெரிந்தது.  
நான் உன்னை பார்க்கும்போது உனக்கு 3 வயசு, 
ஐய்யய்யோ தப்பு பண்ணிட்டேனே, சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஐ லவ் யூ சொல்லிடலாம்னு மறு நாள் அவர பார்க்க போனப்ப சடலமாத்தான் பார்க்க முடிந்தது. "


"ஐ கான்ட் பிலீவ் திஸ், "


"இல்லம்மா இது உன் வயசுக்கு நான் சொல்லனும், அது சட்டமோ, தார்மீகமோ எனக்கு தெரியாது ஆனா எப்படியும் இது உனக்கு தெரிய வேண்டியது, நான் சொல்லிடனும், இல்லைன்னாலும் எப்படியாவது தெரிய வரும் அதுக்கு நானே சொல்லிடலாமில்லையா? இப்ப உங்க காலம் வேற விதமானது. நிச்சயம் நீ என்னை மாதிரி முட்டாளில்லை, பரி பூரண சுதந்திரம் உனக்கு தந்திருக்கேன், குட்டி, இது ஒரு ஸ்டேட்மெண்ட்தான், இத கேட்டுட்டு விட்டுடு நான் உன் அம்மா, அந்த படத்துல இருக்கறது உன் அப்பா, வெரி சிம்பிள், எப்படி உன்கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்னு இருந்தேன், ஃபைன் எப்படியோ சொல்லிட்டேன். சொல்லு நீ என் செல்லம்தானே? அம்மா மேல, கோவம் இல்லையே,,ஹேய் போன் அடிக்கிது பார், பேசு அப்பறம் இத பத்தி பேசலாம், ரிலாக்ஸ் டியர்.. நான் காபி போடறேன்..உனக்கும் எனக்கும்..ஓக்கே"



""ஹலோ"

"ஹேய் நாந்தான் என்னாச்சு இன்னிக்கு என் பர்த்டே, எதோ உங்கம்மாவோட லக்கி சாரி கட்டிக்கிட்டு, லவ்யூ சொல்ல வர்ரேன்னு சொன்னியே வெய்ட்டிங் ஸ்வீட்டி,, கம் ஃபாஸ்ட், எல்லாரும் வைய்ட்டிங்.."

"சாரிடா இது ஒத்து வராது, ஜஸ்ட் ஃபெர்கெட் இட்"

"வாட்??"

"யா ஐம் நாட் லவ்விங் எனிஒன்.. எனிமோர்.. பை.      "
     
"யார்மா ??"

"நத்திங் மம்மி.. "

"ஹேய் யாரது.. நத்திங்..? பாய் ஃப்ரெண்ட்டா? அம்மாகிட்ட சொல்ல மாட்டியா?"

"ஆமாம்மா..பாய் ஃப்ரெண்ட்தான் லவ் யூன்னு சொன்னான், இன்னிக்கு சொல்றேன்னேன்,”

"என்னங்க இங்க பாருங்க உங்க பொண்ணு லவ் பண்ணப்போறாளாம்’

’வாட்? லவ்வா/ நம்ம குட்டியா ஈஸ் இட்.."

"ஐய்யோ அப்பா!.., அம்மா... "

"சொல்றேன்னுதான் சொன்னேன். இன்னும் சொல்லல. ஆனா சொல்லப்போவதுமில்லை? "

"வொய்? என்னாச்சி? "

"இல்லப்பா இன்னும் என்னை குழந்தையாவே வெச்சிருக்கீங்க, நீங்க ஃப்ரெண்ட்லிதான், ஆனா வெளி உலகம் வேற, சில விஷயங்கள் சாதாரணமா பலருக்கு தெரியறது. மத்தவங்களுக்கு அப்படி இல்லை, இதோ இந்த புக்ல இருக்கற இந்த கதையும் அப்படித்தான். நான் என்னப்பத்தி புரிஞ்சிக்கணும்னு ஏதோ உள்ள சொல்லுது இத படிச்சதுக்கப்புறம், சாரி இது உங்களுக்கு சாதாரண கதையா இருக்கலாம் எனக்கு அப்படி சொல்ல தெரியல.."

"இன்னும் முழுசா கூட படிக்கலையேடி, முக்கா புத்தகம் படிச்சி அப்படியென்ன வேதம் கிடச்சிது? என்னங்க இவ இப்படி பேசறா?"

"இல்லம்மா நாம் முழுசா படிச்சா அது கதையாகிடும் சில விஷயங்கள் நாமா உணர்ந்துகிடறது நல்லது. நானே உணர்ந்துகொள்கிறேன்."

"சரிம்மா இட்ஸ் யுவர் சாய்ஸ், ஐ அம் ப்ரொவ்ட், ஓகே. அப்பா இருக்கேன். பட் உனக்கு சங்கடம் ஏதும் வந்தா அப்பாவ தயங்காம கூப்பிடு, எதுவா இருந்தாலும் நான் உன் ஃப்ரெண்ட்."

"தாங்ஸ்ப்பா..."

”ஸ்வா தமிழ் கதையெல்லாம் படிப்பீங்களா?? மண்டை காய வைக்குது என்ன கதைங்க இது?”


”ஹலோ நான் யாரையாவது லவ் பண்றீங்களான்னு கேட்டேன்.. அதுக்குள்ள என் ஹேண்ட்பேகை துருவியாச்சா??”


உண்மையை சொல்வதா? வண்டு குடையத்தொடங்கி இருந்தது. ரத்தம் வந்து என்னை கண்டு பிடித்த்..


”பல்லவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ”


”பல்லவி ம்ஹ்ர்ர்ம்ம் ஓ யா பல்லவி என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே? வொய்?”


”சண்முகவடிவேல் தயவு செய்து என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். பல்லவியும் நீங்களும் காதலித்தது உண்மைதானே? ”


”ஹேய் என்னதிது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்,, இத்தனைக்கும் எல்லார் முன்னாடியும் சொன்ன விஷயம் அது. யெஸ் நாங்கள் காதலித்தோம். ஸோ வாட்? நீங்க யாரு எஃப்.பி.ஐ? சி.பி.ஐ? இண்டர்போல்..”


ஸ்வா சிரித்தாள் கொஞ்சம் சப்தமாய்


பொதுவாய் இந்த மாதிரி ஹோட்டல்கள் வித்தியாசமானவை நிறைய காசு கொடுத்து சுதந்திரமில்லாத அடிமை இடம், ஒரு ஸ்பூன் எடுப்பதிலிருந்து, நாப்கின் உபயோகிப்பது வரை, பேசும் சப்தங்களின் அளவுகள், உடை நேர்த்தி முதல் எல்லாமே இயல்பான ஒரு சுதந்திரத்தை தடுக்கும். அவள் சிரித்தது நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்தது. நான் சங்கடமாய் உணர்ந்தேன். அவளையே பார்த்தேன்.


”யெஸ் ஸ்வா காதலித்ததும் காதலித்துக்கொண்டிருப்பதும்”


”ஸ்டில் யு லவ் பல்லவி?”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும்  அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.
 அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல, நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..”


”ஷான்.”.


”இல்லைங்க சண்முகவடிவேல்..” திரும்பவும் சிரித்தாள்...


”வாட் எவர்..”


”இப்ப நான் சொல்றேன் ஐ லவ் யூ”


“வேண்டாம் குத்தி கிழிக்காதீங்க, போதும் நான் பல்லவியையே கல்யாணம் பண்ணிக்கிறேன்”


“பட் ஐ லவ் யூ”மீண்டும் சிரித்தாள் எனக்கு கையில் கிடைப்பதை வைத்து அவளை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடலாம் என்று தோன்றியது.


ஆனால் விதி வலிது, வாய் வேறு விதமாய் சொல்லியது


” நான் உன்னை முதலில் பார்த்தவுடனே மனசுக்குள் சொல்லிட்டேன் ஸ்வா”


ஹும்ம் இப்படித்தான் என் சிக்கல்கள் ஆரம்பித்தன.. என்ன பல்லவியா ??அவளிடமும் இவளை பற்றி சொல்ல வேண்டும்,


அன்று பெசென்ட் நகர் பீச்சில் பல்லவியும் இப்படித்தான் ஆரம்பித்தாள்


”ஷான் நீங்க காயுவ (காயத்ரி) லவ் பண்ணினீங்களா??? ”


”ஆமாம். ஒரு கருத்து வேறுபாடு, நான் கொஞ்சம் ஓப்பன் டைப், அவள் அப்படி அல்ல. எப்படி நான் புரிய வைத்தாலும் அவள் புரிந்துகொள்ள மறுக்கிறாள், ஆனா நான் அவள மனசுலேர்ந்து காதலிக்கிறேன் அது மட்டும் உண்மை.


”அடப்பாவி இப்ப எனக்கு நூல் விடறியே அது எதுல சேர்த்தி?”


”தெரியல,” நான் இன்னேரம் அவள கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகி இருக்கலாம், ஆனா உன்ன மாதிரி சில பேர பார்த்தா உள்ள எதுவோ காதலிக்க சொல்லுது.. ப்ச்..ஐ டொண்ட் நோ..


”ஐ லவ் யூ ஷான்..”


நம்புங்க பாஸ் உண்மைய சொன்னா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கிது.  
  




பின்குறிப்பு: கதை இப்படித்தான் போகும் என்று புரிஞ்சிடிச்சிங்க என்று சொல்பவர்களுக்கு ( நான் உட்பட ) இந்த கதை சமர்ப்பணம்..:)))) கதைக்கு உதவிய திரு.பிரபாகர், திரு.முகிலனுக்கு நன்றி.:)     


வெளிசம்..


.






லை அல்வாவை சுடச்சுட ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டால் வழுக்கிக்கொண்டு போகுமே அப்படி ஒரு குரலில், 


”ஹாய் ஐ ஆம் ஸ்வா..” 

வள் கை நீட்டியபோது சத்தியமாய் எனக்கு தெரியாது, அவள்தான் என்னுடைய வருங்கால காதலிகளில் ஒருவள் என்று!. அப்போ மொத்தம் எத்தனை என்கிறீர்களா? மொத்தம் இரண்டு பேர்தான், ஆனால் படிப்பு முடித்து திருநெல்வேலியிலிருந்து ரயிலேறி சென்னை மாநகர் வந்து எக்மோரை பிரமிப்பாய் பார்த்த நாளெல்லாம் நானே எரேசர் (ரப்பர் என்று சொல்லக்கூடாது என்று தினேஷ் முதல்முறை அமெரிக்கா போனபோது சொல்லிக்கொடுத்தான்) வைத்து மனதிலிருந்து அழித்து மாதங்களாயிற்று. 

.சி.ஆர் சாலையில் இருக்கும் ரகசிய டிஸ்கொதேக்கள் முதல், நியூயார்க்கின் அழுக்கான, ஆங்கிலம் தெரியாது, முதுகு வளைத்து பறிமாறும் சைனா டவுன் வரைக்கும் எனக்குத்தெரியும். உபயம் - நான் கற்ற கணிணி மொழி, அது தந்த வேலை, அந்த வேலை நிமித்தம் நான் பயணித்த நாடுகள், சந்தித்த மனிதர்கள், ஏகப்பட்ட பெண் நண்பிகள் இரண்டே இரண்டு காதலிகள். 

”ஓ ஹாய் .. ஐ ம் ஷான்,”

ண்முகவடிவேலன் என்று சொன்னால் எந்த பெண் திரும்பிப்பார்ப்பாள்? அதுவும் நான் சாஃப்ட்வேர் எஞ்சினியர், கூட வேலை செய்வதெல்லாம் தேவதைகள், ஒரு சீனப்பெண்ணை வேறு நெட்டில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். 'வோ அய் நி' என்று மாண்டரின் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ன் பெயரைக் கேட்டதும் முகத்தின் இரு புருவங்களையும் சுருக்கி உதட்டோரம் சிரித்தவள். 

”ஒரு காபி சாப்பிடலாமா?” 

ப்போதும் கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது திடீரென தண்ணீரிலிருந்து ஒரு மீன் உங்கள்மீது தூண்டில்போட்டால்...?! அவள் கேட்டதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். என்ன இவள் என்னையே போட்டு வாங்குகிறாளா? இரை சுலபமா, ஷன்முகவடி...ச்சே..ஷான் மச்சம்டா உனக்கு..

”ஓ யெஸ், கான்டீன் போலாமா? இல்லை.” 

“ ஹவ் அபொட் தாஜ் ?”  

சிரித்துக்கொண்டே உள்ளே பல் கடித்தேன், இல்லை இவள் ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறாள், பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை, பெயர் மட்டும் சொல்லி காபி சாப்பிட தாஜ் போகலாம் என்றால் என்னமோ உதைக்கிறது! ஒரு வேளை பல்லவி இவளிடம் ஏதாவது சொல்லி இருப்பாளா என்னைப்பற்றி.


 ல்லவி?? காஷ்.. அவளை பிறகு யோசிக்கலாம். 

“பயப்படாதீங்க நான் வேணா ’பே’ பண்ணிடறேன்” 

மீண்டும் சிரித்தாள். இவள் தூண்டில் இல்லை. என்னைச் சாய்த்த நங்கூரம். அது புரிய வெகு நாளாயிற்று. ஆனால் அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. 

”ஹேய் நான் ஜஸ்ட் ஒரு ப்ரோஜக்ட் கால் பத்தி நினெச்சேன், ஃபைன்.. நோ ப்ரோப்ளம்.. அப்சல்யூட்லி” வார்த்தைகள் மாற்றி நான் வழிவது எனக்கே தெரிந்தது. 


ஷான் கவனம்’ ஒற்றைக்கால் கொக்காய் நிற்கச்சொல்லி உள்ளுக்குள் ஆதாம் பல்லி கத்திக்கொண்டிருந்தது.

“லெட்ஸ் கோ”

ன் முன்னே (டொக்)(டொக்)ந்(டொக்)தா(டொக்)ள். ஹை ஹீல்ஸ், ஜீன்ஸ், ச்சிக் டாப்ஸ், பெர்ஃபெக்ட் வளைவுகள், தலைமுடி..வாவ் இவ்வளவு நீளமான முடி அடர்த்தியாய் கருப்பாய், சீராய் நான் பார்த்ததே இல்லை.


 உங்களுக்கு பிடித்த பிட்ஸ்ஸா நீங்கள் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டால்.. ச்சே.. சரியான சாப்பாட்டு ராமனாகிவிட்டேன், ஒரு அழகான பூங்கொத்து விலாசம் தவறி உங்களுக்கு டெலிவரி ஆனால், அய்யோ எப்படி சொல்வது அவளை அதற்குள் லிஃப்ட் உள்ளே நுழைந்து ‘பேஸ்மென்ட்தானே’ என்றபடி (-1) பட்டனை அழுத்தினாள்.


ப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

(தொடரும்)



குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில். கதை பெயர் காரணம். கதை சாதாவா இருந்தாலும் பெயர் கொஞ்சம் நவீனமா இருக்கட்டுமேன்னுதான்...:-)).

--------------
நண்பர்களே..

திரு.ஆரூரன் விசுவநாதன் தனது கொங்கன் பக்கத்தில் பதிவிட்டுள்ள கீழுள்ள இடுகையை படித்து, கண் குறைபாடுள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்/பயன் பெறவும். மிக்க நன்றி.:)

எங்கே செல்லும்...பாகம்-2












எங்கே செல்லும்....



எங்கே செல்லும்....
முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.
இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..




முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..



RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார். 
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் 
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.



(பாகம் - 2)


”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

 2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

நான் திரும்பவும் நிஜமா என்று ஆரம்பித்தேன்...
”ஏய் இப்பதானே சொன்னேன், திரும்பவும் அதயே கேக்காதப்பா.”  மெதுவாய் இடது கையால் என் தலை கோதி இன்னும் நெருக்கம் காட்டினாள்.

எனக்கு பேரவஸ்த்தையாய் இருந்தது. நிறைய பூக்கள் மலர்ந்த மரத்தின் அடியில் திடீரென நம் மீது பூக்கள் மழையாய் பொழியும்போது ஏதோ ஒரு சந்தோஷம் உணர்வோமே, அட அதை விடுங்கள் பூக்களில்லாத மழையில் நனைந்திருந்த ஒரு மரத்தினடியில் காற்றின் வேகத்திற்கு மரம் சிலிர்த்து நீர்த்துளிகளால் சட்டென்று ஒரு  குளுமையுடன் சிலிர்ப்பு தருமே கிட்டத்தட்ட சாதாரணத்திற்கும், பைத்தியத்திற்கும் இடையிலான ஒரு நிலை.

தம்பிடிக்காசுக்கு பிரயோஜனமில்லாத வறிய இளமைக்காலம் என்னுடையது. என்ன எதிர்பார்த்து இந்த பேரழகி என்னிடம் இழைகிறாள்? ஐயோ யாராவது இப்ப போய் இதை நினைப்பார்களா? நிஜமாவே நீ லூசுதாண்டா மனசு அவளை பாரேன், பார்ரா என்று மைக் வைத்து உள்ளே அலறிக்கொண்டிருந்தது.

”என்ன யோசிக்கற நான் நல்லவளான்னுதானே? பொண்ணுங்களா வந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லக்கூடாதா, ம்..?”

அந்த மாநகராட்சி பூங்காவில் நிறைய பேர் எங்களை பார்த்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அணிந்திருந்த சட்டையின் முதலிரண்டு பித்தான்களை அழுத்திக்கொண்டு இன்னும் எனது வலது கை விரல்களை தாமரை மொட்டாகவே வைத்திருந்தாள்.

”ஏய் என்னாச்சு, யாரையும் பார்க்காத, த பார் நானே கவலபடல, நீ ஏன் பொண்ணுங்க மாதிரி சுத்தி சுத்தி பார்த்துகிட்டிருக்கற.”

 வரிசையான, கறைகளில்லாத வெண்மை நிற பற்கள் தெரிய ஸ்வா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் நான் மெதுவாய் என் கைகளை அவளிடமிருந்து விடுவித்துகொண்டேன். கையில் கர்ச்சீப் இல்லை வியர்த்த முகத்தை கைகளால் துடைத்த போது அவளின் வாசம் என் உள்ளங்கைகளின் மூலம் என் முகத்தில் பரவியது.

”என்ன பவ்டர் யூஸ் பண்ற ஸ்வா?”
“ நத்திங் ஸ்பெஷல் இங்க கிடைக்கிறதுதான்.” அவள் பெயர் சொன்னாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நானும் யூஸ் பண்னி இருக்கிறேன் ஆனால் இந்த வாசம்.

எனக்கு எல்லாமே புதுசாக இருந்தது, அவளுக்கு எதிலும் பயமில்லை, என் பயங்களை அந்த உள்ளுதட்டு மோன சிரிப்பில் ஊடே குருகுருப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சேர்ந்தார்போல நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது எனக்கு, அவளோ தடி தடியாய் ஆங்கில கதை புத்தகங்கள் படிப்பவள்.

”சரி இப்ப என்ன எனக்கு உன்ன நிஜமா பிடிச்சிருக்கான்னு தெரியனும் அவ்ளதானே?” இப்பொழுது நான் சிரித்தேன், ஆமாம் என்று தலை ஆட்டினேன்.

”சிம்பிள்டா அடிக்கடி உன்ன பஸ் ஸ்டாப்ல பார்த்திருக்கேன், உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸூப்பரா டாவடிக்க நீ மட்டும் தலை கூட நிமிர்த்தாம அமைதியா நின்னுகிட்டிருப்ப.”

” அப்ப நீயும் பஸ்ல டைய்லி என்ன பார்ப்பியா?”

“ ம்ஹும்.. சில சமயம்தான், எங்க அப்பாகூட மோஸ்ட்லி கார்ல போய்டுவேன், ஆனா அப்பவும் உன்ன பார்த்திருக்கேன்.”

“ அது மட்டும்தானா? ”

“ஹேய்..இது என்ன காதல் பிஹெச்டியா? ஹாங்..”மீண்டும் சிரிப்பு.

 ” அது மட்டும்னு இல்ல நான் போல்டான பொண்ணுதான், என் வீட்டு பாக் ஸைட்ல என்ன டாவடிக்கிற பக்கத்து வீட்டு பையன கலாட்டா பன்றதுக்காக, பொறுமையா ஒரு தம் அடிச்சிருக்கேன். என்ன பஸ்ல இடிச்சவன்கிட்ட இன்னும் பக்கத்துல வந்து இடிங்க உங்க அம்மாவ இடிக்கறமாதிரியே இருக்கும்னு சொல்லிருக்கேன்.”

நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். திரும்பவும் சிரித்தாள், இந்தமுறை மொத்த பார்க்கும் எங்களை பார்த்ததுபோலவே இருந்தது எனக்கு.

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

 என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

 எனக்கு உள்ளே குத்தியது. அப்போதுதான் கவனித்தேன் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வருவதை. ஸ்வா என் கையை பிடித்து ”உட்கார் எழுந்திருக்காத” என்றாள்,

”டேய் நீ இங்க இருக்கியா?”

ஒரு கான்ஸ்டபிள் கொத்தாய் என் சட்டையை பிடித்து பளார் என்று அடித்தார், கீழே விழும்போதே தலை சுற்றியது, சுதாரிப்பதற்குள் நங் கென்று எதோ தலையில் பட்டது..ப்ளாக் அவுட் டோட்டல் நிசப்த்தம்

“சொல்லு ஏன் ஸூப்பர் மார்கெட்ல குழந்தைய தூக்கிட்டு போன?”

மெல்ல சுற்று முற்றும் பார்த்தேன், எப்போது இங்கே வந்தேன், இவர் என்ன கேட்கிறார்? உடலெல்லாம் வலித்தது, இன்ஸ்பெக்டர் டேபிளில் இந்தியா அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது தினசரியில் பெரிய போட்டோவுடன் படபடத்துக்கொண்டிருந்தது இந்த படம் எங்கயோ பார்த்தோமே..

”டேய் உன்னதான் கேக்கறேன்.. ”

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்
தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்
றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்
இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

பெரும் குரலெடுத்து யார் பாடுவது? அட எப்போது மேசையில் ஏறினேன், எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்,, நானா..னா நானா பாடுகிறேன்...அப்படியே எகிறி குதித்து வாசலை நோக்கி ஓடினேன்..

”ய்யேய் அவன பிடிங்கப்பா...”

யாரோ துரத்திக்கொண்டு வரும் சத்தம் கேட்டது, என்னை தாண்டி சென்ற காரில் ஒரு ஆள் என்னை பார்த்து ”அவந்தான் வண்டிய திருப்பு பிடி..”

 நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தேன். வெளிச்சம் கண்ணை கூசியது . ஆமா நான் ஏன் ஓடிக்கிட்டிருக்கேன், எங்க போயிடிருக்கேன்.. திடீரென்று வளைவில் திரும்பிய பஸ்சில் ரன்னிங்கில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தேன்...

”ஹலோ.”.பஸ்ஸில் யாரோ கூப்பிட்டார்கள்.
      

(தொடரும்)


அடுத்தது யாருங்க.. பதிவு போட்டுட்டு லின்க் முகிலனுக்கு அனுப்பிடுங்க அப்படியே எனக்கும். ( தினத்தந்திலதான் கன்னி தீவு வரனும்னு சட்டம் இல்லீங்களே:) )